🌊 அலை 28 🌊

சிட்டுக்குருவியாய் படபடக்கும்

என் இதயம் உன் அருகாமையில்!

பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும்

எனக்குள் உன் ஒற்றை ஸ்பரிசத்தில்!

லவ்டேல்

நதியூர்க்காரர்கள் பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டிருந்தனர். சங்கவியும் யாழினியும் எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டனர். ஆனால் சங்கரபாண்டியன் கேட்பதாய் இல்லை.

“ஊருல போட்டது போட்டபடி கிடக்கும்மா… நிச்சயம் முடிஞ்சும் பொண்ணை இங்கயே வச்சிருக்கிறது சரியில்ல… விடிஞ்சா கிளம்புற டிரெயின்ல போனா சரியா இருக்கும்… எனக்கு உடம்புக்கு அசதி எல்லாம் இல்ல… கொஞ்சம் போல சுக்கு மல்லி மிளகு தட்டிப் போட்டு குடிணி போடுத்தா…. அதைக் குடிச்சா எப்பேர்ப்பட்ட அலுப்பும் சரியாயிடும்”

ரத்தினவேல் பாண்டியனும் இவ்வாறு சொல்லிவிட அதற்கு மறுபேச்சே இல்லை! விசாலாட்சியும் லோகநாயகியும் தங்கள் உடமைகளை எடுத்து வைத்தனர். அழகம்மை பிரபாவதியிடமும் லீலாவதியிடமும் பேசிக் கொண்டிருக்க ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் கணேஷ், விக்னேஷுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அழகம்மை அவர்களிடம் “மதுரா எங்கத்தா ஆளையே காணும்?” என்று கேட்க

“அவ மாடில ரெஸ்ட் எடுத்துட்டிருக்கா ஆச்சி… என்ன விசயம்? மதுரா கிட்ட மட்டும் தான் சொல்லுவிங்களோ?” என்று அவரை வம்பிழுக்கிழுத்தாள் ஸ்ரீரஞ்சனி.

“அட வாயாடி! நம்ம மண்டபத்துல இருந்து திரும்பி வந்ததும் திருஷ்டி கழிச்சதுக்கு அப்புறம் மேல போனவ… இன்னும் அங்க தான் இருக்காளானு கேட்டேன்டி… சரி விடு! நீயும் ஸ்ரீதர் தம்பியும் அப்பிடி என்ன பேசிட்டிருந்திய? ரெண்டு பேரு மூஞ்சியும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரில்லா இருந்துச்சு”

விசாரணையாய் நோக்கிய அழகம்மையின் கண்களைத் தவிர்க்க முயன்றபடி எப்படியோ அவரைச் சமாளித்து வைத்தாள் ஸ்ரீரஞ்சனி. கூடவே “இந்த டி.சி.பி என்னை இரிட்டேட் பண்ணுனதுல அக்கம்பக்கம் யாரும் இருக்காங்களானு கூட கவனிக்கல… சை! இனிமே அந்தாளு இங்க வந்தாலும் அவரைக் கண்டுக்காத மாதிரியே போயிடணும்” என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டாள்.

ஆனால் ரேவதியும் அவளது அன்னையும் இருவரையும் பார்த்துவிட்டு அவர்களின் ஜாதக விவரங்களை நவீனக்கால அன்னையராய் புலனத்தில் (அதான்பா வாட்சப்) பரிமாறிக் கொண்டதெல்லாம் அவள் அறிந்திருக்கவில்லை.

அதே நேரம் அவளுக்கும் அழகம்மைக்கும் நடந்த விவாதத்தின் கருப்பொருளோ பால்கனியில் நின்றபடி நகம் கடித்துக் கொண்டிருந்தாள்.

அவளது சிந்தனை எல்லாம் நேர்முகத்தேர்வுக்குச் சென்று தேர்வானால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் தான்! திருமணத்துக்கு முழுதாய் ஒரு வருடம் இருக்க, தான் ஏன் வேலைக்குச் செல்லக் கூடாது என்று யோசித்தவளிடம் நாளையே இரயில் ஏற வேண்டும் என்று ரத்தினவேல் பாண்டியன் சொன்னதும் அவளுக்குச் சொத்தென்று ஆனது.

இனி தானும் சராசரி குடும்பத்தலைவி அவதாரம் எடுக்கத் தயாராக வேண்டும் போல உள்ளதே என்று யோசித்தவளுக்கு இயற்கை கூட தன்னை கேலி செய்வதாக தோணியது.

ஏனெனில் அவள் இவ்வாறு எண்ணமிடும் போது இரவு வானில் மின்னிய நட்சத்திரங்கள் கண் சிமிட்ட சற்று சத்தமாகவே

“உங்களுக்கும் என்னைப் பாத்தா கிண்டலா தெரியுதுல்ல? இருங்க! நதியூர்ல இருந்து இங்க ஓடிவந்த மாதிரி இங்க இருந்து வேற எங்கயாச்சும் ஓடிப் போறேன்” என்று கத்திவிட்டு நிற்கும் போதே மொபைல் செல்லமாய் சிணுங்க தொடுதிரையைப் பார்க்காமலேயே அழைத்தவன் யாரென கண்டறிந்தவள் எரிச்சல் குறையாது போனை காதில் வைத்தாள்.

“என்னடா வேணும் உனக்கு?” என்று எடுத்ததும் எகிற ஆரம்பித்தாள் அவள்.

அதை எதிர்பார்த்ததாலோ என்னவோ அழைத்தவனுக்குக் கோபமே வரவில்லை.

“இப்பிடி நீ கேக்குறப்போ என்னென்னவோ வேணும்னு சொல்ல ஆசையா தான் இருக்கு… ஆனா இப்போ நிலமை சரியில்ல… சோ இப்போதைக்கு எனக்கு வேண்டிய ஒரே ஒரு விசயம் உன் கூட கொஞ்சநேரம் மனசு விட்டு பேசணும்… அவ்ளோ தான்”

“வாட் அ ஜோக்? உனக்கு மனசுலாம் இருக்கா மது? அச்சச்சோ! இது நாள் வரைக்கும் இந்த விசயம் தெரியாம இருந்துட்டேனே!”

“வாணி! நீ கோவமா இருக்கேனு தெரியுது! ஆனா…”

“என்னடா ஆனா ஆவன்னானு இழுக்கிற? நீ நினைச்சது நடந்துடுச்சுல்ல… அப்புறம் நான் எப்பிடி இருந்தா உனக்கு என்ன? உனக்கு அதைப் பத்தி என்ன கவலை? போய் என்கேஜ்மெண்ட் முடிஞ்சிடுச்சு, இந்தப் பட்டிக்காட்டு வெள்ளந்தி ஆளுங்களை வாய்ஜாலத்தால ஏமாத்தி அவங்க வீட்டுப்பொண்ணை கட்டிக்கப் போறேனு பார்ட்டி வச்சு கொண்டாடு… எனக்கு எதுக்கு கால் பண்ணுற?”

மறுமுனையில் மதுசூதனன் அவள் பேச பேச மெதுமெதுவாய் பொறுமையிழக்க தொடங்கினான். ஆனால் வைஷாலி அவனிடம் மதுரவாணியைப் பற்றி சொன்ன வார்த்தைகள் தான் அவனது கோபத்துக்குக் கரையிட்டுத் தடுத்துக் கொண்டிருந்தன.

சின்னப்பெண்! திடீரென நிச்சயம், திருமணம் என்றதும் பதறுகிறாள் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டபடி

“லுக்! முதல்ல என்ன ஏதுனு தெரியாம உன் இஷ்டத்துக்கு வார்த்தையை விடாத வாணி! நீ வேலைக்குப் போக ஆசைப்படுறனு வைஷூ சொன்னா! அதை பத்தி பேசத் தான் கால் பண்ணுனேன்” என்றான் வருவித்துக் கொண்ட பொறுமையுடன்.

மதுரவாணிக்கோ அவனது வார்த்தைகள் எல்லாம் வீண் ஜம்பமெனவே தோணியது அப்போதும்!

“ஆசை இருந்தா மட்டும் போதுமா? ஆசைப்படுறதுக்கும் ஒரு தகுதி வேணுமே! எனக்குத் தான் அந்த தகுதி இல்லயே! என்னோட ஆசை கனவுக்குலாம் சமாதி கட்டிட்டு அதுக்கு மேல தானே இந்த நிச்சயதார்த்தமே நடந்துச்சு… இது எல்லாத்துக்கும் நீ மட்டும் தான் காரணம்”

மதுசூதனனின் பொறுமை தூர பறந்தது.

“ஏய் நான் என்னடி பண்ணுனேன்? நீ உன் இஷ்டத்துக்கு யாரைப் பத்தியும் கவலை இல்லாம நாடோடி மாதிரி ஊர் சுத்துறது பாக்குறதுக்கு நல்லாவா இருக்கு? அதான் உன் ஃபேமிலிய இங்க வரவைச்சேன்… இதுல என்ன தப்பு இருக்கு?”

“நீ அதை மட்டும் செஞ்சிருந்தா நான் உன்னை ஏன் ப்ளேம் பண்ணப் போறேன்? நீ அவங்களை வரவைச்சது எனக்காகனு எல்லாரும் நினைக்கிற மாதிரியே நானும் நினைச்சிட்டு ஐயோ மது எவ்ளோ நல்லவன்னு சிலிர்த்துப் போய் சில்லறைய சிதற விடணுமா? நீ ஒன்னும் என்னை என்னோட ஃபேமிலியோட சேர்த்து வைக்கணும்னு நினைச்சு அவங்கள இங்க வரவைக்கல… நீ உன்னோட சுயநலத்துக்காக தான் அவங்கள வரவச்சிருக்க… அதுவும் என்ன சொல்லி வர வச்ச? நீயும் நானும் லவ் பண்ணுறோம்னு… உன்னோட ஒன்சைட் ஃபீலிங்ஸுக்காக நீ என்னோட இயலாமைய யூஸ் பண்ணிக்கிட்ட மது! அவ்ளோ தான்!

மத்தவங்களுக்கு உன்னைப் பத்தி தெரியல… ஆனா எனக்குத் தெரியும்! நீ பண்ணுன எல்லாமே உன்னோட சுயநலத்துக்காக தான்… மத்தபடி உன்னை மாதிரி ஒரு சுயநலவாதிக்கு என்னோட ஆசைய பத்தி என்ன கவலை இருக்க போகுது?”

அவள் விசயம் தெரியாது பேசினாலும் இம்முறை மதுசூதனனால் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

“ஏய்! சுயநலவாதினு என்னைச் சொல்லுறதுக்கு முன்னாடி உன்னோட ரூம் கண்ணாடில உன்னைப் பாத்து நீயே சொல்லிக்கோடி! உன்னோட லைப்ல நீ இஷ்டப்படி வாழணும்கிறதுக்காக உன் அப்பா அம்மாவ பரிதவிக்க விட்டுட்டு வந்தவ தானே நீ! உனக்கு குடும்பத்தோட அருமையோ அவங்களோட பாசமோ முக்கியமா படல! உன்னோட சுதந்திரம் தான் முக்கியமா தெரிஞ்சுது… அப்பிடிப் பாத்தா என்னை விட பெரிய சுயநலவாதி நீ தான்!”

“சரி! நான் அப்பிடியே இருந்துட்டுப் போறேன்… நான் இப்பிடி தான்னு என்னால வெளிப்படையா சொல்லிக்க முடியும்… உன்னை மாதிரி ஃபேமிலி மேல அக்கறையுள்ள மாதிரி நான் ஒன்னும் நடிக்கலையே! வெல்! இதுக்கு மேலயும் உன் குரலைக் கேக்க எனக்கு இஷ்டமில்ல… ஐ ஹேட் யூ மது!”

அவன் பதில் பேசும் முன்னரே இணைப்பைத் துண்டித்தவள் போனைப் பால்கனியில் கிடந்த இருக்கையில் வீசினாள். அதன் பின்னரும் இரவுணவுக்கான நேரம் வரும் வரை கூண்டில் அடைபட்ட சிங்கம் போல கோபத்துடன் தனது அறைக்குள் உலாத்தியவள் யாழினி இரவுணவுக்கு அழைத்ததும் முகத்தைச் சீராக்கிக் கொண்டு கீழே சென்றாள்.

சங்கவி, யாழினி, ஸ்ரீரஞ்சனி, ராகினியுடன் அவள் உண்ணும் கடைசி இரவுணவு! இப்படி எண்ணும் போதே தலையில் ஓங்கி குட்டிக் கொண்டாள் அவள்!

அமைதியாகச் சாப்பிட்டவளின் கவனம் குழந்தைகளின் பேச்சாலோ, பெரியவர்களின் சிரிப்பாலோ, தோழிகளின் குறும்பாலோ அவர்கள் புறம் திரும்பவே இல்லை. இன்னும் அவளின் சிந்தை முழுவதும் மதுசூதனனின் பேச்சே ஆக்கிரமித்திருந்தது.

அதே எண்ணத்துடன் சாப்பிட்டு முடித்தவள் கை கழுவி விட்டுத் தனக்கு அசதியாக இருக்கிறது என்று கூறிவிட்டுத் தனது அறையை நோக்கிச் செல்ல காலெடுத்து வைத்த தருணம் சரவணனின் போனில் அழைப்பு வந்தது.

அழைத்தவர் மைதிலி என்பதால் பணிவுடன் ஓரிரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தந்தையிடம் போனை நீட்டினான் அவன்.

மறுமுனையில் மைதிலி என்ன சொன்னாரோ தெரியவில்லை. பேசி முடித்து சில நொடிகளுக்கு ரத்தினவேல் பாண்டியனின் முகத்தில் யோசனைக்கோடுகள்!

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராய் “தம்பி நம்ம எல்லாரும் நாளைக்கு ஊருக்குக் கிளம்புறோம்… மதுரா மட்டும் இங்கயே இருந்துக்கட்டும்” என்று சொல்லவும் மதுரவாணிக்குத் தன் காதுகளை நம்பவே முடியவில்லை.

“தங்கச்சி என்ன சொல்லுதுன்னா மருமகப்பொண்ணு அவங்க கண்பார்வைல இருந்தா தான் அவங்களோட பழக்க வழக்கம், சடங்கு சம்பிரதாயத்த சொல்லிக் குடுக்க முடியுமாம்! அதுவும் சரி தானே! நம்ம ஊருக்குப் போனா பொழுதன்னைக்கும் அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டுச் சுத்துறதும், ஆச்சி கூட வம்பளக்குறதுமா நேரத்தைப் போக்குவா.. அதுக்கு பதிலா இங்க இருந்தா மைதிலி தங்கச்சி அடிக்கடி வந்து பாத்துக்கும்… வைஷாலி வேற மதுராக்கு எதோ வேலைக்கு ஏற்பாடு பண்ணிருக்காளாம்! எனக்கு என்னவோ சின்னவ இங்கயே இருக்கட்டும்னு தோணுது… என்ன மாப்பிள்ளை சொல்லுறீரு?”

சங்கரபாண்டியனும் “அவங்க படிச்சவங்க… அவங்க சொன்னா சரியா தான் இருக்கும் மாப்பிள்ளை! நீரும் நானும் என்னத்த கண்டோம்? நம்ம பிள்ளையும் கொஞ்சநாள் அவங்க கூட பழகுனா தான் அவங்க வீட்டு ஆளுகளுக்கு உள்ள நீக்குப்போக்குலாம் இவளுக்கும் வரும்” என்று சொல்லிவிட விசாலாட்சியும் லோகநாயகியும் அழகம்மையும் கூட இம்முடிவுக்கு ஒத்துக்கொண்டனர்.

மதுரவாணிக்கு இவ்வளவு நேரம் இருந்த அலைக்கழிப்பு மனநிலை மாறி ஒரு வழியாக நிம்மதி பிறந்தது. எவனால் அவளது மனம் கொந்தளிக்க ஆரம்பித்ததோ அவனது அன்னையே அதை அமைதி படுத்திவிட்டார்.

இனி அவள் வேலைக்குப் போகத் தடையில்லை! கூடவே குடும்பத்தைப் பரிதவிக்க வைத்திருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியும் இல்லை! அவளிடம் முழுதாய் ஒரு வருடம் இருக்கிறது! அவளுக்கே அவளுக்காய் அந்த ஒரு வருடத்தைச் செலவிட அவளால் இயலும்!

நினைக்கும் போதே ஜிவ்வென்று வானில் பறக்கத் தொடங்கியது அவளது மனம்! மனதின் மகிழ்ச்சியை முகம் பிரதிபலிக்க அவளது பெற்றோருக்கு மகளின் மகிழ்ச்சியில் ஜொலிக்கும் முகம் நிம்மதியை அளித்தது.

மதுரவாணி வேகமாக தனது மொபைலில் வைஷாலியின் எண்ணுக்கு அழைத்தவள் மைதிலியிடம் நன்றி கூறிட அவரோ “அட என் அறிவுக்கொழுந்து மருமகளே! இதுக்கு ஏன் எனக்கு நன்றி சொல்லுற? சொல்லணும்னா உன் வருங்கால புருசனுக்குச் சொல்லு!” என்று கேலி செய்ய மதுரவாணிக்குக் குழப்பம்!

வைஷாலி அன்னையிடம் இருந்து போனை வாங்கியவள் “அம்மா எப்போவுமே இப்பிடி தான்… அண்ணா கிட்ட இன்னைக்கு உன்னோட வேலையப் பத்தி சொன்னேன்… அதான் அவன் அம்மா மூலமா மாமா கிட்ட அந்த விசயத்தைச் சொல்லிட்டான்… பெரியவங்க இருக்கிறப்போ அவனே பேசுனா நல்லா இருக்காதாம்” என்று சொன்னவள் இன்னும் சில விவரங்களைச் சொல்லிவிட்டு நேர்முகத்தேர்வுக்குத் தயாராகும் படி கூறிவிட்டுப் போனை வைத்தாள்.

இப்போது கொஞ்சம் தயக்கமாக உணர்ந்தாள் அவள். மதுசூதனனிடம் தான் தேவையின்றி கத்திவிட்டோமோ என்று ஒரு வினாடிக்கும் குறைவான பொழுதில் யோசித்தாள். பின்னர் அவன் பேசியதற்குத் தான் பேசியது சரி தான் என தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அதன் பின்னர் சற்று நேரம் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தவளை சங்கவி அதட்டி உருட்டி உறங்க செல்லுமாறு மிரட்டவும் அனைவரும் அவரவர் அறைக்குள் அடைக்கலமாயினர். அடுத்தச் சில நொடிகளில் நித்திராதேவியிடம் சரணடைந்தனர்.

மறுநாள் விடியலில் அனைவரும் பரபரப்பாக தயாராயினர். சங்கவியின் காரில் அனைவரும் கோயம்புத்தூர் சென்றடைந்தனர். முந்தையநாளில் முன்பதிவு செய்துவிட்டதால் எவ்விதச் சிரமமும் இல்லாது போய்விட்டது.

இரயில் வரும் வரை காத்திருந்த நேரத்தில் ரத்தினவேல் பாண்டியன் மகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.

“நீ தைரியமான பொண்ணுனு அப்பாக்கு தெரியும்ல… ஆனா வேலைக்குப் போற இடத்துல எந்தப் பிரச்சனை வந்தாலும் தைரியமா சமாளிக்கணும்! ரத்தினவேல் பாண்டியன் மவ! சிங்கம் மாதிரி இருக்கணும்” என்று சொல்லவே மதுரவாணி தந்தையின் மீசையை முறுக்கிவிட்டவள்

“இத நீங்க சொல்லணுமாப்பா? யாரும் என் கிட்ட வாலாட்டுனா ஒட்ட நறுக்கி அனுப்பிருவேன்” என்று சொல்ல மகளைக் கர்வத்துடன் தோளோடு அணைத்துக் கொண்டார்.

அப்போது தான் சங்கவி “மது சார் வர்றாரு” என்று சொல்லவே அங்கே திரும்பிப் பார்க்க மதுசூதனனும் அவனுடன் ஸ்ரீதரும் வந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தோடு நின்றிருந்த ஸ்ரீரஞ்சனியைக் கண்டதும் ஸ்ரீதர் கடுப்புற்று “சரியான இடியட்… சொல்லுற பேச்சைக் கேக்க கூடாதுனு சபதம் எடுத்துருக்கா போல” என்று முணுமுணுக்க அவனருகில் வந்து கொண்டிருந்த மதுசூதனனின் காதில் அவ்வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் விழுந்தது.

“என்னாச்சு டி.சி.பி சார்? உங்களையும் ஒரு பொண்ணு புலம்ப வச்சிட்டா போல?” என்று கேலியாக கேட்டான் அவன்.

ஸ்ரீதரோ “உங்களையும்னா என்ன அர்த்தம்? அப்போ உங்களை யாரோ பயங்கரமா புலம்ப வச்சு வேடிக்கை பாக்குறாங்க போலயே” என்று பதிலுக்குக் கேலி செய்ய

“அட நீங்க வேற! புலம்புறதுக்கு காசா பணமா? ஆனா அவ என்னைய எப்போவும் கொந்தளிக்க வச்சு வேடிக்கை பாக்குறாய்யா… நேத்து நைட் ஒரே ஒரு போன் கால்ல என்னை டார்ச்சர் பண்ணிட்டா… இப்போவே இப்பிடி! இவ மிசஸ் மதுசூதனன் ஆனா என் நிலமை ரொம்ப கஷ்டம் போல” என்று சலித்துப் போன குரலில் சொல்லவும்

“ரிலாக்ஸ் மது! ஃப்ளூராய்டால கேன்சர் வரும்னு தெரியும்… ஆனாலும் அது கலந்திருக்கிற டூத்பேஸ்டை வச்சுத் தான் டெய்லியும் பிரஷ் பண்ணுறோம்… அதே போல தான் பொண்ணுங்க நம்மள டார்ச்சர் பண்ண படைக்கப்பட்ட ஜீவன்கள்னு தெரிஞ்சும் அவங்களையே லைப் பார்ட்னரா ஏத்துக்க வேண்டிய கட்டாயம் நமக்கு” என்றான் ஸ்ரீதர்.

இதைச் சொல்லும் போது அவன் கிட்டத்தட்ட ஸ்ரீரஞ்சனியை நெருங்கிவிடவே அவனது வார்த்தைகளைக் கேட்டுக் கடுப்புற்றவள்

“ஏன் அவ்ளோ கஷ்டப்படுறிங்க டி.சி.பி சார்? இப்போ தான் சட்டம் மாறிடுச்சே… வேணும்னா உங்களுக்கு ஏத்த டார்ச்சர் பண்ணாத ஆம்பளையா பாத்து மேரேஜ் பண்ணிக்கோங்க” என்று சொல்லிவிட்டு உதட்டைச் சுழிக்கவும் ஸ்ரீதரோடு சேர்ந்து மதுசூதனனும் திருதிருவென விழித்தபடி அசடு வழிய இவ்வளவு நேரம் அசூயையாக உணர்ந்த மதுரவாணி கூட நகைக்க ஆரம்பித்துவிட்டாள்.

மதுசூதனன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் கவனியாதது போலவே மாமனாரிடம் சென்று அக்கறையுடன் பேச ஆரம்பித்தான்.

ஸ்ரீதரும் அழகம்மையுடன் சிரித்துச் சிரித்து ஏதோ பேச அவரோ “உங்க அம்மா உங்களுக்குப் பொண்ணு பாத்துட்டானு கேள்விப்பட்டேனே ராசா! நீயும் எங்க வீட்டு சின்னக்குட்டி மாதிரி யாரையும் காதலிக்க ஆரம்பிச்சிட்டியா என்ன?” என்று கேலியாய் வினவ

“ஐயோ ஆச்சி! நான் பாக்க தான் விறைப்பா இருக்கேனே தவிர எனக்கு அந்தளவுக்கு விவரம் பத்தாது… இப்போதைக்கு நான் என் வேலையைத் தான் லவ் பண்ணுறேன்” என்று சொல்ல அழகம்மை கமுக்கமாய் நகைத்தார்.

இவ்வாறு உரையாடலில் நேரம் கழிய இரயிலும் வந்துவிட மதுரவாணியின் குடும்பத்தினர் அனைவரிடமும் விடை பெற்று இரயில் ஏறினர்.

புகைவண்டி மறையும் வரை நின்று டாட்டா காட்டிய மதுரவாணியை அழைத்துக் கொண்டு அவளது சகோதரிகள் கிளம்பினர்.

இரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் போது மதுசூதனனுக்கு முதன் முதலில் இதே இடத்தில் மதுரவாணியைச் சந்தித்த தருணம் நினைவுக்கு வரவே அதில் இலயித்தவனாய் வந்தவன் சங்கவியிடம் தான் மதுரவாணியிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டுமென கேட்க அவள் மறுப்பின்றி சம்மதம் தெரிவித்தாள்.

கூடவே “நீங்களே மதுவ வீட்டுல டிராப் பண்ணிடுங்க சார்!” என்று சொல்லிவிட மதுரவாணி தமக்கையிடம் மறுப்பைச் சொல்ல எத்தனித்தவள் பின்னர் நேற்றைய மாலை நேரம் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.

அதே நேரம் ஸ்ரீதர் எவரும் அறியாவண்ணம் ஸ்ரீரஞ்சனியிடம் “நான் சொல்லியும் கேக்காம இங்க வந்துட்டல்ல… இட்ஸ் ஓகே! பட் இனிமேயாச்சும் அடிக்கடி இங்க வராத… ஒவ்வொரு தடவையும் உன் பின்னாடியே என்னால அலைஞ்சிட்டிருக்க முடியாது” என்று அழுத்தமானக் குரலில் கட்டளையிட அவன் தனக்காக தான் இங்கே வந்தானா என்று ஆச்சரியத்துடன் அவள் வாயைப் பிளக்க அவனோ வழக்கமாக அவள் கேலி செய்யும் கூலர்சை எடுத்துக் கண்ணில் மாட்டிக் கொண்டவன் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

அவன் செல்வதைப் பார்த்தபடியே “இந்த டி.சி.பி ஏன் காரணமில்லாம தானும் பயந்து நம்மளையும் பயம் காட்டுறாரு? இந்தாளைப் பாத்தாலே நம்ம மைண்ட் கரப்ட் ஆயிடுது… இவன் கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணணும்” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டவளாய் சங்கவியின் காரில் ஏறினாள்.

அதே நேரம் மதுரவாணி எதுவும் பேசாது அமைதியாய் மதுசூதனனின் காரில் ஏறிக்கொண்டாள். சகோதரிகள் காரில் செல்வதைப் பார்த்துவிட்டு அமர்ந்தவள் கார் வேகமெடுக்கவும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல நடித்தவள் அவனது விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்தாள்.

இது நாள் வரை அவளிடமில்லாத பழக்கம் அது! இருந்தாலும் நேற்றைய பேச்சு கொஞ்சம் அதிகப்படி என்பதால் அவனிடம் பேசவோ அவனை நேருக்கு நேராய் கண் கொண்டு காணவோ அவளுக்குத் தயக்கமாய் இருந்தது.

அவனுக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை போல! காரின் மியூசிக் ப்ளேயரில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை ஓடவிட்டவன் அதன் ராகத்துக்குச் சீட்டியடித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான். மதுரவாணி தான் அக்கணம் தர்மச்சங்கடமாய் உணர்ந்தாள்.

மதுசூதனன் அவளது குழப்பம் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இனி தங்களுக்குள் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவேண்டுமென்ற உத்வேகத்துடன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

அலை வீசும்🌊🌊🌊