🌊 அலை 14 🌊

உன் கரம் கோர்த்தால்

நிம்மதி அடையும் மனம்

உன் விழி பார்த்தால்

பூரிப்பில் விரியும் இதழ்

உன் கண்ணசைவுக்குத்

தவமிருக்கும் இதயம்

இது தான் காதலா?

அன்றைய தினம் ஊட்டிக்குத் திரும்பிய பிறகு கூட ஸ்ரீரஞ்சனியின் முகம் தெளியவில்லை. மதுரவாணி மற்றவர் அறியாவண்ணம் அவளைச் சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் ராகினி கூடவே ஒட்டிக் கொண்டிருந்ததால் எதுவும் பேசமுடியவில்லை அவளால்.

அன்றைய தினம் இரவுணவுக்குப் பின்னர் மதுரவாணியின் அறையில் இருக்கும் பால்கனியின் நின்று சுற்றிலும் இருளில் வரிவடியாய் தெரியும் தேயிலைத்தோட்டங்களையும் மூன்று திக்கிலும் அரணாய் நிற்கும் மலைச் சிகரங்களையும் வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ராகினி குழந்தைகளுடன் உறங்கிவிட ஸ்ரீரஞ்சனிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மதுரவாணி அங்கே வந்தவள் குளிரில் ஏன் நிற்கிறாள் என்ற யோசனையுடன் அவளது தோளைத் தொடவும் திடுக்கிட்டுத் திரும்பினாள் அவள்.

திரும்பியவளின் முகம் இன்னும் கலக்கத்துடன் இருக்கவே “என்னடி ஆச்சு இப்போ? எவனோ ஒருத்தன் பைத்தியக்காரத்தனமா கத்துனதுக்கு நீ ஏன் இவ்ளோ ஃபீல் பண்ணுற?” என்று சற்று கோபமாகவே கேட்க

“என்னால தானே மது சார் உன்னையும் தப்பா நினைக்கிறாரு மது… ஏற்கெனவே இருக்கிற பிரச்சனை போதாதுனு நான் வேற இப்பிடி பொய் சொல்லிட்டேனே! இப்போ என்னடி பண்ணுறது? நான் வேணும்னா மது சார் கிட்ட சாரி கேக்கவா?” என்று பரிதாபமாய் கேட்டவளின் கண்ணிலிருந்து கண்ணீர் எப்போது விழலாம் என்று காத்திருக்க மதுரவாணி அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்தவள்

“எதுக்கு சாரி கேக்கணும்? நீயா போய் அந்த வளந்து கெட்டவனும் நானும் லவ் பண்ணுறோம்னு ஸ்ரீதர் கிட்ட சொல்லலயே! அவரா நினைச்சுக்கிட்டா அதுக்கு நம்மளா பொறுப்பு?” என்று தோழியைச் சமாதானம் செய்தாள்.

“ஆனா மது சார் உன்னைத் தப்பா நினைக்கிறாரே மது”

“அவன் ஒரு மூனாவது மனுசன்… அவன் தப்பா நினைச்சா எனக்கென்னடி? லிசன் ரஞ்சி, மூனாவது மனுசங்களோட எண்ணங்களுக்கு ஒரு அளவுக்குத் தான் மரியாதை குடுக்க முடியும்… எப்போவும் அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிச்சா நம்மளால நிம்மதியா வாழவே முடியாதுடி… எனக்கு எந்த மதுவை பத்தியும் கவலை இல்ல… அவன் என்னைத் தப்பா நினைச்சாலும் அதைப் பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்ல… அதை நினைச்சு இனிமே கண் கலங்குறதா இருந்தா இனிமே நீ என் கூட பேசாத”

“அது இல்லடி… அவரு…”

“ஸ்டாப் இட் ரஞ்சி! இன்னமும் நீ அவனைப் பத்தியே பேசுனேனா நான் கிளம்புறேன்டி”

மதுரவாணி முறுக்கிக் கொள்ள ஸ்ரீரஞ்சனி அவசரமாக தலையாட்டி மறுத்தவள் “இல்லடி! இனிமே நான் பேசல… ஆனா அந்த போலீஸ் ஆபிசர் கேட்டா என்ன பண்ணுறது?” என்று விழிக்க

“அவரைப் பொறுத்தவரைக்கும் நான் அந்த மதுவோட லவ்வராவே இருந்துட்டுப் போறேன்… இன்னும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ, விக்கி கூப்பிட்டாலும் இல்லனாலும் நான் சென்னைக்குக் கிளம்பிப் போயிடுவேன்டி… இதுக்கு மேல நான் இங்க இருந்தா அக்காவுக்குத் தான் பிரச்சனை… அது வரைக்கும் ஸ்ரீதரைச் சமாளிச்சுக்கலாம்” என்றாள் மதுரவாணி நம்பிக்கையுடன்.

ஸ்ரீரஞ்சனியின் முகமும் இயல்புக்குத் திரும்பிவிட இருவரும் பால்கனி கதவைச் சாத்திவிட்டு உறங்கச் சென்றனர்.

மறுநாள் விடியலின் போது எப்போதும் அனைவருக்கும் முன்னரே எழுந்துவிடும் சங்கவி அன்றைய தினம் படுக்கையில் சுருண்டு கிடக்கவும் மூன்று பெண்களுக்கும் அதிர்ச்சி.

ராகினி அவளிடம் என்னவாயிற்று என கேட்க அவளோ மாதாந்திர உபாதை என்று சொல்லவும் ஸ்ரீரஞ்சனி அவளை எழ வேண்டாமென உரைத்தவள் தானே சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

ராகினி மற்ற வேலைகளைக் கவனித்துக்கொள்ள மதுரவாணி ஆரத்யாவைப் பள்ளிக்குத் தயார் செய்தாள்.

மூவருமாய் சேர்ந்து அனைத்தையும் முடித்துவிட்டு ராகினியுடன் ஆரத்யாவையும் கிளப்பி சாய்சரணுடன் பள்ளி வேனில் அனுப்பி வைத்தப் பின்னர் யாழினி வந்து சேர்ந்தாள். அவளிடம் விசயத்தைச் சொல்லவும்

“இன்னைக்கு ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் இருக்குதேடி! நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனா தான் வேலை நடக்கும்… இப்போ என்ன பண்ணுறது? இவளை இப்பிடியே விட்டுட்டுப் போக முடியாது” என்றாள் கவலையுடன்.

மதுரவாணி சற்று யோசித்தவள் “அப்போ ஒன்னு பண்ணலாம்… ப்ரீ வெட்டிங் போட்டோசூட் நடக்கிற இடத்துக்கு நான் போறேன்… சாந்தி அக்காவும் ரெஜினாக்காவும் தானே டெகரேட் பண்ணுவாங்க? நான் அவங்களுக்குக் கூடமாட ஹெல்ப் பண்ணுறேன்… எதுவும் டவுட்னா வீடியோ கால்ல வர்றேன்… நீங்க கிளியர் பண்ணிடுங்க… ரஞ்சியும் ஷர்மிக்காவும் ஷாப்பை பாத்துப்பாங்க… நீங்க இங்கேயே இருந்து கவிக்காவை பாத்துக்கோங்க” என்று சொல்லவும் அனைவருக்கும் அதுவே சரியென பட்டது.

ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியும் கிளம்பும்போது சங்கவி “ரெண்டு பேரும் சமாளிச்சிப்பிங்களாடா? இன்னைக்குப் பாத்தா இந்த துயரம் வரணும்?” என்று சொல்லும் போதே வலியில் முகத்தைச் சுளித்தாள்.

“அக்கா நாங்க என்ன இமயமலைய கட்டி இழுக்கவா போறோம்? வீ கேன் மேனேஜ்… நீ ரெஸ்ட் எடுக்கா” என்று சொன்னவள் ஸ்ரீரஞ்சனியுடன் காரில் கிளம்பிவிட்டாள்.

அவளை பொக்கேஷாப்பில் இறக்கிவிட்டவள் அவளிடம் “நீ அந்த ஹோல்சேலர் கிட்ட ஃப்ளவர் எல்லாம் டைமுக்கு வந்துடணும்னு ஒரு ஆர்டர் போடு… இப்போ மணி எட்டு… பத்து மணிக்கு தான் போட்டோசூட் ஆரம்பிப்பாங்கனு அக்கா சொன்னா… இன்னும் அரை மணி நேரத்துல பூ வந்துட்டா எல்லா ஆரம்பிக்க சரியா இருக்கும்” என்று சொல்ல ஸ்ரீரஞ்சனி சரியென தலையாட்ட மதுரவாணி காரைக் கிளப்பிக் கொண்டு ஸ்ரீவத்சனின் பங்களாவை நோக்கிச் செலுத்தினாள்.

கூகுள் மேப் துணையுடன் பாதை கண்டுபிடித்து வண்டி ஓட்டியவள் பங்களாவின் நுழைவு வாயிலுக்குள் காருடன் நுழையும் போதே பூக்களைக் கொண்டு வரும் வண்டியும் நுழைந்தது.

பங்களா காவலாளியிடம் கார் நிறுத்துமிடத்தைக் கேட்டு அங்கே பார்க் செய்தவள் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடக்கவிருக்கும் இடமான பங்களாவைச் சுற்றி உள்ள புல்வெளியுடன் கூடிய தோட்டத்தை நோக்கி நடைபோட்டாள்.

அங்கே ஏற்கெனவே மற்ற ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன.

மணமகனும் மணமகளும் நடந்து வரும் வழியில் வெள்ளை நிற கார்பெட் ஒன்று விரிக்கபட்டிருந்தது. பக்கவாட்டில் நிறுத்தபட்டிருந்த தற்காலிகத் தூண்களில் ஆர்கிட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சாந்தியும் ரெஜினாவும் ஏற்கெனவே வந்துவிட்டதால் முதல் வேலையாய் அந்த தூண்களை அழகு படுத்தியிருந்தனர்.

அடுத்து ஒரு மரக்கிளை போன்ற வளைய அமைப்பில் இருக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னணியில் இளஞ்சிவப்பும் க்ரீம் வண்ணமும் கலந்த கூடாரம் ஒன்று அழகாய் அமைக்கப்பட்டிருக்க அந்தக் கூடாரமும், மரத்தினாலான வளைய அமைப்பும் மட்டும் பூ அலங்காரத்துக்குக் காத்திருந்தன.

அவள் அந்த இடத்துக்குச் சென்றதும் அவள் பார்வையில் முதலில் பட்டவனே மதுசூதனன் தான்.

வழக்கம் போல முக்கால் கை டீசர்ட்டுடன் பணியாளர்களிடம் கூடாரத்தைக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தவன் எதேச்சையாக திரும்ப அங்கே நின்றிருந்த மதுரவாணி அவன் கண்ணில் பட்டுவிட்டாள்.

இவள் இங்கே என்ன செய்கிறாள் என்ற யோசனையுடன் அவளை நோக்கி வந்தவனிடம் பேசும் எண்ணம் அவளுக்குக் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் வேறு வழியில்லையே!

எனவே அருகில் வந்தவன் பேச்சை ஆரம்பிக்கும் முன்னரே “அக்காவுக்கு உடம்புக்கு முடியல… சோ அவங்களுக்குப் பதிலா நான் வந்திருக்கேன்” என்றவள் அதற்கு மேல் அவனிடம் பேச விருப்பமற்று வேடிக்கை பார்க்க

“ஓ! குட்! பட் இது சின்னப்பிள்ளைங்க விளையாட்டு இல்ல மிஸ் மதுரவாணி! சோ உங்களோட இர்ரெஸ்பான்சிபிளிட்டி, ஆட்டிட்டியூடை ஒதுக்கி வச்சிட்டு வேலைய பாருங்க” என்று அமர்த்தலாக கட்டளையிட அலட்சியமாய் உதட்டை வளைத்துவிட்டு அகன்றாள் அவள்.

ரெஜினாவும் சாந்தியும் வேலையைச் செய்து கொண்டிருக்க அவர்களுக்குச் சந்தேகம் வந்த சமயத்தில் வீடியோ காலில் யாழினியை அழைத்து அவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க உதவினாள் அவள்.

அந்நேரம் பார்த்து வட்ட வடிவ கூடாரத்தின் நடுவில் உயரமாய் தொங்கவிடப்பட்டிருந்த டெய்சியும் ஆர்க்கிட்டும் கலந்து செய்யப்பட்டிருந்த மலர்க்கொத்து கீழே விழுந்தது.

ரெஜினாவும் சாந்தியும் வேலையாய் இருக்க மதுரவாணி கூடாரம் அமைத்தவர்களிடம் தானே அதைச் சரி செய்துவிடுவதாகச் சொன்னவள் அவர்களிடம் உயரமான ஸ்டூல் ஒன்றை கேட்க அவர்களும் எடுத்து வந்து போட்டனர்.

அதன் பக்கவாட்டில் இருக்கும் இரும்புக்கம்பியில் கால் வைத்து ஏறும் போதே அவள் அணிந்திருந்த ஸ்னிக்கர்ஸ் சறுக்கவும் ஒருவாறு சமாளித்து ஏறினாள்.

ஸ்டூலின் மீதேறி கூடாரத்தின் நடுவில் அந்த மலர்க்கொத்தைத் தொங்கவிட வைத்திருந்த கொக்கியில் அதைச் சரியாக மாட்டியவள் மீண்டும் இறங்கும் தருவாயில் ஸ்னிக்கர்ஸ் வழுக்கி சமனிலை இழந்த நேரம் ஆதரவாய் நீண்டது ஒரு கரம்.

அந்தக் கரத்தைப் பற்றிக் கொண்டவள் திரும்பிப் பார்க்க அக்கரத்துக்குச் சொந்தக்காரனாய் நின்று கொண்டிருந்தான் மதுசூதனன்.

அவனைக் கண்டதும் நேற்றைய வார்த்தைகளின் நினைவில் கையை உதறப் போனவளை முறைத்தவன் தாடை இறுக “ஒழுங்கா கையைப் பிடிச்சு இறங்கு… இல்லனா நானே தூக்கிக் கீழ இறக்கிவிட்டுருவேன்” என்று சொல்ல பதிலுக்குச் சீறப் போனவள் அனைவரும் தங்களைக் கவனிப்பதைக் கண்டதும் அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

மெதுவாக இரும்புக்கம்பியில் காலை வைத்து இறங்கியவள் அவனிடமிருந்து கையை வெடுக்கென இழுத்துக் கொண்டாள்.

மதுசூதனன் எரிச்சலுடன் திரும்பியவன் அவனுக்குச் சில அடிகள் இடைவெளியில் மணமகள் யுவஸ்ரீயுடன் நின்று தன்னையும் மதுரவாணியையும் கோபம் கொப்புளிக்கும் விழிகளால் அவர்களை வெறித்துக் கொண்டிருந்த தனுஜாவைக் கண்டதும் ஏளனமாய் உதட்டை வளைத்தான்.

அவனைக் கடந்து செல்ல முயன்ற மதுரவாணியின் கரத்தை இறுக பற்றியவன் புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டு

“இவ்ளோ அவசரமா எங்க போற டார்லிங்? கொஞ்சம் வெயிட் பண்ணு! ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் முடிஞ்சதும் நம்ம பிளான் பண்ணுன ப்ளேசுக்கு நானே உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லவும் மதுரவாணி அவனது செய்கையில் பற்களை நறநறவென கடித்தவள்

“இப்போ என் கையை விடலனு வையேன், நானும் உன்னை ஒரு ப்ளேசுக்கு அனுப்பி வச்சிடுவேன்”

“அஹான்! எங்க டார்லிங்?”

“வேற எங்க? ஹாஸ்பிட்டலுக்குத் தான்… இன்னொரு வாட்டி என்னை டார்லிங்னு சொல்லிப் பாரு… அப்போ தெரியும்”

மதுசூதனன் அவளுடன் பேச்சு கொடுத்தபடியே தங்களை ஆத்திரத்துடன் நோக்கும் தனுஜாவைப் பார்க்க அதை மதுரவாணி கவனித்துவிட்டாள்.

காதல் முறிந்தாலும் தனுஜாவால் இன்னுமே மதுசூதனனை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து வைத்துப் பார்க்க முடியாது போகவே அவளது வதனம் கோபத்தில் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.

அதே நேரம் மதுரவாணியோ முன்னாள் காதலியை வெறுப்பேற்ற மதுசூதனன் தன்னைக் கருவியாகப் பயன்படுத்துகிறான் என எண்ணியவளாய் அவனது கரத்தை உதறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அதன் பின்னர் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் இனிதே ஆரம்பித்தது.

யுவஸ்ரீயும் அவளது வருங்கால கணவனும் ஜோடியாகப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அடுத்து தோழர் தோழிகள் சூழ ஒரு புகைப்படம். அதில் மணப்பெண்ணின் தோழிகள் அவளைப் போலவே வெண்ணிற முழுநீள கவுனில் ஜொலிக்க தனுஜாவும் பேரழியாக மின்னினாள்.

அவளது கவனம் மதுசூதனன் தன்னைப் பார்க்கிறானா என்பதில் இருக்க அவனோ அப்படி ஒருத்தி அங்கே இருப்பதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

உடனே அவளது விழிவீச்சு மதுரவாணியை நோக்கி இருக்க அவளோ இவளுக்கு வேறு வேலை இல்லை என்பது போல ரெஜினாவிடமும் சாந்தியிடமும் பேச ஆரம்பித்தாள்.

போட்டோ சூட் முடியவும் தனுஜா யுவஸ்ரீயிடம் சொல்லிவிட்டு மதுரவாணியை நோக்கி வந்தவள் அவள் கிளம்ப ஆயத்தமாவதைப் பார்த்தபடியே இகழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தாள்.

“எப்போடா மது கூட ஒட்டிக்க சான்ஸ் கிடைக்கும்னு அலையுற போல?”

அவளின் கேள்வியில் வெட்டுவதைப் போல முறைத்த மதுரவாணி சூரியனைப் பார்த்து எதுவோ குரைக்கிறது என்ற ரீதியில் நடந்து கொள்ள தனுஜாவுக்கு எரிச்சலும் கோபமும் அதிகரித்தது.

“அடுத்தவங்களுக்குச் சொந்தமானவங்கள அபகரிக்கிற பொண்ணுங்களுக்குக் காலங்காலமா ஒரு பேரு இருக்கு… அது என்னனு தெரியுமா?”

மதுரவாணி அன்றைய தினம் அணிந்து வந்திருந்த ப்ளெய்ட் ஷேர்ட்டின் முழூநீளக்கையை முழங்கை அளவுக்கு மடித்துவிட்டவள் தனுஜாவை அலட்சியமாய் ஏறிட்டபடியே

“அது எனக்குத் தெரியாது… ஆனா தனக்குச் சொந்தமானதை அடுத்தவங்க கிட்ட இழக்குறவங்களை ஏமாளினு சொல்லுவாங்க… அது மட்டும் தெரியும்… ஐ மீன் லூசர்” என்று நக்கலாய் சொல்லிவிட்டு புருவத்தை ஏற்றியிறக்கினாள்.

அந்தப் பாவனையில் கொந்தளித்த தனுஜா “ஏய்! நீ என்னோட மதுவை மயக்கி என் கிட்ட இருந்து பிரிச்சிட்டு என்னை லூசர்னு சொல்லுறியா?” என்று கத்தவும்

“எக்ஸ்யூஸ் மீ! அவனை மயக்கி என் கைக்குள்ள போட்டுக்க அவன் விஸ்வாமித்திரரும் இல்ல, நான் மேனகையும் இல்ல… இதுக்கு மேல இங்க நின்னு பைத்தியக்காரத்தனமா உளறுனா நான் சும்மா இருக்க மாட்டேன்… என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று எச்சரித்தவளை நோக்கி தனுஜா முன்னேற அந்நேரம் அவளது முதுகுக்குப் பின்னே “நீ இன்னும் கிளம்பலையா வாணி?” என்றபடி வந்த மதுசூதனனின் குரல் கேட்டது.

இரு பெண்களும் அவனது குரலில் துணுக்குற்றுத் திரும்ப வந்தவனின் பார்வை தனுஜாவைக் கண்டுகொள்ளாது மதுரவாணியின் மீது அழுத்தமாய் படிந்தது.

“இன்னும் இங்க நின்னு ஏன் டைம் வேஸ்ட் பண்ணுற? கம் வித் மீ” என்று உரிமையாய் சொன்னபடி அவளது கரத்துடன் தனது கரத்தைக் கோர்த்துக் கொண்டவன் தனுஜாவிடம் சிரித்த முகமாய் ஒரு டாட்டாவை காட்டிவிட்டு மதுரவாணியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

வெகுதூரம் வந்ததும் அவனது கையை உதறியவள் “இப்பிடிலாம் நடந்துக்க உனக்கு அசிங்கமா இல்ல? நேத்து என்னவோ சொன்னியே! சுயநலவாதி, பொய் சொல்லுறவங்கனு… இப்போ நீ என்ன பண்ணுற? உன்னோட எக்ஸ் லவ்வர் கிட்ட நீ சீன் போடுறதுக்கு என்னை யூஸ் பண்ணுனதுக்குப் பேரு என்ன தெரியுமா?” என்று வெடிக்க

 “தெரியாது… ஆனா இந்தப் பிரச்சனை எல்லாத்துக்கும் நீ தான் பேசிக் ரீசன்… நீ ஒருத்தி இல்லனா இந்நேரம் தனுவும் நானும்…” என்றவனின் பேச்சில் இடைமறித்தவள்

“வேற எதாவது காரணத்துக்காகச் சண்டை போட்டு பிரிஞ்சிருப்பிங்க” என்றாள் அலட்சியமாக.

பின்னர் முடிவாக “லுக்! நேத்து எனக்குப் பாத்த மாப்பிள்ளை உன்னை என்னோட லவ்வர்னு சொன்னது ஆக்சிடெண்டலா தான்… அதுக்கும் ரஞ்சிக்கும் சம்பந்தமே இல்ல… இன்ஃபேக்ட் எனக்குமே உன்னை மாதிரி ஒரு முசுடு முனுசாமிய என்னோட லவ்வர்னு சொல்லிக்க ஒன்னும் அவ்ளோ ஆசை இல்ல… சோ நேத்து நடந்ததுக்கு சாரி! அதை மனசுல வச்சுக்கிட்டு இனிமே என் கிட்ட இன்னைக்கு பிஹேவ் பண்ணுன மாதிரி உரிமை எடுத்தேனு வையேன், சொன்ன மாதிரியே கையை காலை உடைச்சு ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சிடுவேன்” என்று சொல்லிவிட்டு வேண்டுமென்றே அவனைத் தோளால் இடித்துவிட்டு அங்கிருந்து சென்றாள் அவள்.

அவள் என்னவோ வலிக்கட்டுமென நினைத்துப் பலமாக இடித்துவிட்டுச் செல்ல மதுசூதனனுக்கு எப்போதும் போல அவனது நினைவில் அடிக்கடி வந்தாடும் இரயில் நிலையப் பெண்ணின் தெளிவற்ற வதனம் வந்து போனது.

அதே நேரம் பிளாசம் பொக்கே ஷாப்பின் முன்னே ஸ்ரீதருடன் வாதம் செய்து கொண்டிருந்தாள் ஸ்ரீரஞ்சனி.

அவன் மதுரவாணி இங்கே இருக்கும் விசயத்தை ரத்தினவேல் பாண்டியன் குடும்பத்துக்குத் தெரிவித்தே ஆகவேண்டுமென அவன் வாதிட அவளோ அவ்வாறு செய்தால் அவளது தோழி யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்தும் சென்றுவிடுவாள் என எவ்வளவோ சொல்லிப் புரியவைக்க முயன்றாள்.

ஆனால் அவன் கேட்பதாக இல்லையெனவும் ஒருவேளை இவனுக்கு மதுரவாணியின் மீது விருப்பம் எதுவும் இருக்குமோ என்ற ஐயத்துடன் பொரிந்து கொட்ட ஆரம்பித்தாள்.

“என் ஃப்ரெண்ட் அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டானு டிசிபி இவ்ளோ சூடா பேசுறிங்க? அவளுக்குக் கல்யாணத்துல இஷ்டமில்ல… அதை சொன்னாலும் வீட்டுல யாரும் புரிஞ்சிக்கல… அதான் ஓடி வந்துட்டா.. இது என்ன கொலைபாதகமா சார்? போலீஸ்காரங்கனாலே மனசாட்சியைக் கழட்டி வச்சிட்டுத் தான் காக்கிச்சட்டையைப் போடுவிங்க போல… சை”

எரிச்சலுடன் மொழிந்து விட்டு தன்னெதிரே உணர்ச்சிகளற்ற முகத்துடன் நின்று கொண்டிருந்தவனைப் பார்க்க விரும்பாதவளாய் சற்று தொலைவில் சுற்றுலாப்பயணிகளின் தலையில் போலி யூகலிப்டஸ் தைலத்தைக் கட்டிக் கொண்டிருந்த வியாபாரியைப் பார்த்தபடி நின்று கொண்டாள் ஸ்ரீரஞ்சனி.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவனைக் குற்றம் சாட்டியதை விட அவனது காக்கி உடுப்பைக் குற்றம் சாட்டியது தான் கோபத்தை வரவழைத்தது.

“உங்க ஃப்ரெண்ட் ஓடி வந்ததை பத்தி எனக்கு கவலை இல்ல… ஆனா நீங்கள்லாம் கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிளிட்டி இல்லாம அந்தப் பொண்ணு பத்தின இன்பர்மேசனை அவ குடும்பத்துக்குச் சொல்லாம மறைச்சி கேம் விளையாடுறிங்களே அதான் தப்பு… ரத்தினவேல் சார், சரவணன், கார்த்திக்கேயன் மூனு பேரும் அவளைத் தேடி ஓய்ஞ்சு போயிட்டாங்க… அங்க அவ குடும்பம் அவளைக் காணாம பதறிப்போய் இருக்காங்க… அவ என்னமோ டூர் வந்த மாதிரி மொத்த ஊட்டியையும் ஜாலியா வலம் வர்றா… அண்ணன் ஒரு போலீஸ்காரன்னு கூட மறந்துட்டா போல… அண்ட் ஒன் மோர் திங்! பேசுறப்போ வார்த்தையை அளந்து பேசுங்க” என்று கடினக்குரலில் எச்சரித்தான் ஸ்ரீதர்.

அதைக் கேட்டு போலியாய் ஆச்சரியம் காட்டிய ஸ்ரீரஞ்சனி “அளந்து பேசணுமா சார்? இனிமே நான் ஸ்கேலோ இஞ்ச் டேப்போ வச்சிக்கிறேன்… தேங்க்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்” என்று கேலியாய்ச் சொல்லிவிட்டு உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.

கூடவே “இந்த ஆளுக்கு மட்டும் திங்கள் கிழமை ஆபிஸ் லீவோ? அங்க போகாம இங்க வந்து என் உயிரை வாங்குறான்… கடவுளே! மது வர்றதுக்கு முன்னாடி இவன் இங்க இருந்து போயிடணும்” என்று வேண்டிக்கொள்ள

ஸ்ரீதர் இறுகிய முகத்துடன் நின்றவன் “எனக்கு அப்புறமா தேங்க்ஸ் சொல்லுங்க! முதல்ல உங்க ஃப்ரெண்டுக்கு புத்தி சொல்லி ஊருக்கு அனுப்புற வழியைப் பாருங்க… அவங்க ஃபேமிலி மதுரா மேல உயிரையே வச்சிருக்காங்க… கண்டிப்பா அவளோட காதலுக்கு ஓகே சொல்லிடுவாங்க.. அதை விட்டுட்டு சின்னப்பிள்ளைத்தனமா அந்தப் பொண்ணு கூட சேர்ந்துகிட்டு பொறுப்பில்லாம நடந்துகிட்டா நானே சரவணனுக்குப் போன் பண்ணி விசயத்தைச் சொல்ல வேண்டியதா இருக்கும்” என்று எச்சரித்துவிட்டு கூலிங் கிளாசை கண்ணில் மாட்டிக் கொண்டு கிளம்பிவிட

“ஊட்டி குளிருக்கு எதுக்குயா கூலிங் கிளாஸ்?” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடியே அன்றைய தினம் வெயில் சற்று அதிகம் என்பதைக் கூட மறந்து அவனைத் திட்டித் தீர்த்தாள் ஸ்ரீரஞ்சனி.

அலை வீசும்🌊🌊🌊