❣️அத்தியாயம் 22❣️

“என்னோட ஃப்ரெண்ட்சும் ஆதியும் என்னை ரொம்ப அவுட்டேட் ஆனவனு சொல்லுவாங்க… பிகாஸ் நான் அவங்களவுக்கு ட்ரெண்டியா இல்லையாம்… நான் அவங்களவுக்குச் சோஷியல் மீடியால ஆக்டிவ்ல இல்ல… ஏன்னா எனக்கான உறவுகள் என்னைச் சுத்தி இருக்குறப்ப யாரோ கண்ணுக்குத் தெரியாத ஒருத்தரோட லைக்கோ, கமெண்டோ எனக்கு எப்பிடி முக்கியமா தெரியும்? அவங்களை மாதிரி லேட்டஸ்ட் ராக் ஸ்டார்சோட மியூசிக் எனக்குப் பிடிக்கலனு குறை சொல்லுறாங்க… ஆனா மியூசிக்கோட நோக்கமே மனசை அமைதியா வச்சுக்கணுங்கிறது தானே… ஆனா இந்த சோ கால்ட் ராக் ஸ்டாரோட மியூசிக்கை கேட்டா தலையோட சேர்ந்து என் மனசும் வலிக்குது… அவங்க என்ஜாய் பண்ணுற ஐ.பி.எல்ல ஆரம்பிச்சு பிக்பாஸ் வரைக்கும் எல்லாமே என்னைப் பொறுத்தவரைக்கும் ஸ்க்ரிப்டட் தான்… சோ நான் எனக்கான அவுட்டேட்டான உலகத்துலயே நிம்மதியா இருந்துக்குறேன்பா”

                                   -கிளிசரின் பாட்டிலின் பொன்மொழிகள்…

போட்கிளப் சாலை, என்.வி.எஸ் பங்களா…

தனது ப்ரைவேட் ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு புஜத்திலும் கழுத்திலும் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்தபடி மொபைலை பார்த்துக்கொண்டு நடந்தான் சாணக்கியன்.

கடந்த சில நாட்களாக யூனிடெக் நிறுவனத்தையும் யூ.சி.டெக் நிறுவனத்தையும் ஒன்றாக இணைக்கும் வேலைக்கான ஆயத்தங்கள் நடந்தேறிக் கொண்டிருந்தன. அதில் பிசியாக இருந்தவனுக்கு அன்று தான் ஓய்வு வாய்த்தது.

அவனுக்குச் சமூக வலைதளங்களில் உலாவுவதில் பெரிதாகப் பிடித்தமில்லை என்றாலும் ஆதித்யா வர்ஷா சம்பவத்திற்கு பிறகு யூடியூபில் ஆதித்யாவின் சேனலை மட்டும் இடைவிடாது ஃபாலோ செய்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.

என்னை எதிர்த்துவிட்டு அப்படி என்ன வாழ்ந்து கிழிக்கிறீர்கள் என பார்க்கிறேன் என்ற வன்மம் தான் அதற்கு காரணம். ஆதித்யாவும் வர்ஷாவுடன் அவ்வபோது வ்ளாக் போட்டு சாணக்கியனின் வயிற்றில் எரியும் தீக்கு எரிபொருள் விலையேற்றத்தைக் கூட கருத்தில் கொள்ளாது தாராளமாக பெட்ரோலை ஊற்றினான்.

அதற்கு சாணக்கியன் ஆற்றும் எதிர்வினையின் முடிவு பெரும்பாலும் அருகிலுருப்பவர்களைத் திட்டுவதிலோ, அல்லது ஆதித்யா வர்ஷாவின் குடும்பத்தினரைத் தொந்தரவு செய்வதிலோ போய் முடியும்.

அதன் விளைவு தான் இப்போது விக்னேஷின் மருத்துவத்தொழில் கேள்விக்குறியானதும், யோகாவின் கிறிஸ்டல் அகாடெமி மீது விழுந்த பழியும்.

யூனிகார்ன் குழுமத்தில் என்றைக்கு யூனிடெக் மற்றும் யூ.சி.டெக் இணைப்பு குறித்து பேச ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து போர்ட் ஆஃப் டைரக்டர்களிடமிருந்து அதிருப்தி அலை வீச ஆரம்பித்திருந்தது. அதுவே சாணக்கியனுக்கும் வினயனுக்கும் பெரிய தலைவலி.

ஆனால் அதற்கிடையேயும் வர்ஷாவையும் ஆதித்யாவையும் நிம்மதியாக வாழவிடக்கூடாதென்ற வெறி சாணக்கியனுக்கு.

இதோ ஆர்வமாக யூடியூபை திறந்து ஆதித்யாவின் சேனலில் சமீபத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவை ஓட விட்டதும் அந்த வெறி பன்மடங்காகியது.

அதில் ஆதித்யா வர்ஷாவோடு எடுத்த காதலர் தின வ்ளாக் ஓடத் துவங்கியது. அதில் ஆதித்யாவின் குரல் மட்டுமே கேட்டது. முன் கூட்டியே தீர்மானிக்காமல் போட்ட வ்ளாக் போல.

அவன் “ஐ லவ் யூ” என்க அதற்கு வர்ஷாவும் பதிலளிப்பதைக் கண்டதும் கோபத்தில் முகம் ஜிவுஜிவுவென சிவக்க ஆரம்பித்தது.

“நோ” என்று அலறியபடி மொபைலைத் தரையில் விசிறியடித்தான் அவன்.

வந்தவர்கள் மொபைல் தரையில் கிடப்பதையும் ரௌத்காரத்துடன் சாணக்கியன் நிற்பதையும் பார்த்து திகைத்தனர்.

“என்னாச்சு சாணு? ஏன்டா கத்துன?” என்றபடி நெருங்கிய வினயனிடம்

“அவங்க ரெண்டு பேரும் ஜாலியா வேலண்டைன்ஸ் டே கொண்டாடுறாங்கப்பா… என்னை ஏமாத்திட்டுப் போனவ அவன் கூட இவ்ளோ க்ளோஸா நிக்குறா… இவ்ளோ க்ளோசா” என்றவன் தந்தையைத் தன்னருகே இழுத்து வீடியோவில் வர்ஷாவும் ஆதித்யாவும் நெருங்கி நின்ற கோலத்தை டெமான்ஸ்ட்ரேட் செய்யவும் வினயனே ஒரு நொடி பயந்து போனார்.

இவன் பைத்தியக்காரன் ஆகிவிட்டானா என திகைத்தவர் “இனாஃப் சாணு… உன் பைத்தியக்காரத்தனத்த மூட்டை கட்டி வை… நம்ம கண்ணு முன்னாடி ஒரு இமாலயப்பிரச்சனை நிக்குது… கம்பெனி மெர்ஜரை செஞ்சு முடிக்கிறது நமக்குச் சவாலா இருக்குடா… அதை பத்தி யோசி… அதை விட்டுட்டு ஒன்னுக்கும் பிரயோஜனமில்லாத ஆதியையும் அவன் பொண்டாட்டியையும் பத்தி யோசிச்சே பைத்தியம் ஆகிடாத” என்றார் கடுமையாக.

சாணக்கியனோ வெறி வந்தவனைப் போல அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.

“நீ பேசாதய்யா… அவளைக் காதலிச்சு ஏமாந்த எனக்குத் தான் அதோட வலி தெரியும்… விட மாட்டேன்… அந்த ஃபேமிலில ஒருத்தரை கூட நிம்மதியா இருக்கவிட மாட்டேன்… ஆதிய ஏதாவது பண்ணணும்… அவனுக்கு வலிக்கணும்… இன்னைக்கு நான் அனுபவிக்குற வேதனைய அவனுக்குக் குடுக்கணும்.. உன் போனை குடு” என்று பிதற்றியவாறு மொபைலுக்காக தந்தையிடம் கை நீட்ட அவரோ மைந்தனின் புது அவதாரத்தில் உறைந்து போய் நின்றிருந்தார்.

“போனை குடு” சாணக்கியன் கத்தியதில் அதிர்ந்த மைதிலி கணவரின் மொபைலை அவனிடம் நீட்டினார்.

கூடவே கணவரைக் கையோடு இழுத்துச் செல்லத் தொடங்கினார்.

“அவன் கோவத்துல இருக்கான்… நீங்க வேற கம்பெனிய பத்தி இப்பவா பேசணும்?” என சாணக்கியனுக்குப் பரிந்து பேசி வினயனின் அதிருப்தி பார்வையை வாங்கி கட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

செல்பவரின் காதில் சாணக்கியன் அவனது உதவியாளருக்குக் கட்டளையிடுவது தெளிவாக விழுந்தது.

“இந்தத் தடவை உயிர் போற வலிய அவனுக்குக் குடுக்கணும்… நிஜமா ஒரு உயிரே போனாலும் ரொம்ப நல்லது… இனிமே பழிவாங்குறதுல அகிம்சைய ஃபாலோ பண்ண எனக்கு இஷ்டமில்ல”

யாருடைய உயிரை எடுக்கத் திட்டமிடுகிறான் என்று யோசித்த வினயனின் மனமோ போர்ட் ஆப் டைரக்டர்களை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற பரிதவிப்பில் ஆழ்ந்தது.

********

வால்ட் கஃபே…

எல்லா ஹெர்மனின் அலுவலக அறையில் அவர் முன்னே அமர்ந்திருந்தனர் ஆதித்யாவும் வர்ஷாவும்.

காதலர் தினத்தன்று இரவில் நடந்தேறிய சம்பவத்தில் தனது பக்க நியாயத்தை விளக்கிக் கொண்டிருந்தான் ஆதித்யா.

தன்னால் வர்ஷாவுக்குப் பிடித்த வேலையை அவள் இழந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கம் அவனுக்கு.

வர்ஷாவுக்கோ தனக்காக அவ்வளது தூரம் வாதாடும் ஆதித்யாவை அன்றைய தினம் கடுமையாகத் திட்டிவிட்டோமே என்ற வருத்தம். கூடவே ஆதித்யாவின் பேச்சிலிருக்கும் நியாயத்தை எல்லா ஹெர்மன் புரிந்து கொள்வாரோ மாட்டாரோ என்ற பரிதவிப்பு.

“உங்க ஹஸ்பெண்ட் வர்ஷா கிட்ட மோசமா பிஹேவ் பண்ணுறதை நிறுத்தவேல்ல… அவ வார்ன் பண்ணியும் அவர் கண்டினியுவா அவளை ஹராஸ் பண்ணிருக்கார்… பொதுவா ஒர்க் ப்ளேஸ் ஹராஸ்மெண்ட் சுப்பீரியர்சால நடக்கும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்… பட் உங்க ஹஸ்பெண்டுக்கு இங்க எந்த வேலையும் இல்லாதப்ப உங்க ஸ்டாஃபை அவர் ஹராஸ் பண்ணிருக்கார்… இதை பத்தி இவங்க யாரும் உங்க கிட்ட சொல்லாததுக்குக் காரணம் ஆல்ரெடி உங்களுக்கும் அவருக்கும் நடக்குற டிவோர்ஸ் கேஸ் அண்ட் உங்க பொண்ணோட கஸ்டடிக்கான கேஸ்… அதோட இதை சொல்லிட்டா கஸ்டமர்ஸ் முன்னாடி மிஸ்டர் விக்டர் மோசமா நடந்து அது கஃபேயோட குட்நேமை ஸ்பாயில் பண்ணிடுமோங்கிற பயமும் அவங்களை பேச விடாம பண்ணிடுச்சு…

ஆனா நான் ஒன்னும் உங்க ஸ்டாஃப் இல்லையே… என் ஒய்பை ஒருத்தன் ஹராஸ் பண்ணுனா அவனை பொறுமையா வார்ன் பண்ணுற அளவுக்கு நான் நல்லவன் இல்ல மேம்… நான் என்னோட பிஹேவியருக்காக மன்னிப்பு கேக்குறதுக்கு இங்க வரலை… வர்ஷாக்கு இந்த கஃபேல ஒர்க் பண்ணுறதுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… அவ இந்த வேலைய உயிரா நினைக்குறா… இந்தப் பிரச்சனையால அவளோட வேலைக்குப் பாதிப்பு வந்துடுமோனு யோசிச்சு தான் நான் இங்க வந்தேன்… உங்களுக்கு என் மேல கோவம் இருந்துச்சுனா தாராளமா என் மேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்துக்கோங்க… பட் வர்ஷாவை வேலைய விட்டு அனுப்பிடாதிங்க”

எல்லா அவன் கூறுவதை பொறுமையாக கேட்டு முடித்தவர் “வர்ஷா மாதிரி டெடிகேட்டட் எம்ப்ளாயியை ஒரு யூஸ்லெஸ் ஃபெல்லோக்காக நான் ஏன் இழக்கப்போறேன்? நீங்க விக்டர் மேல கேஸ் குடுக்குறதுக்கு முன்னாடி நான் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்துட்டேன்… என்னோட கபேக்கு வந்து என் எம்ப்ளாயி கிட்ட மோசமா நடந்துக்கிட்டதுக்காக அவர் இப்ப போலீஸ் ஸ்டேசன்ல தான் இருக்கார்… சோ வர்ஷா இங்க வேலைய கண்டினியூ பண்ணுறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல ஆதித்யா… இத்தனை நாள் என் பொண்ணைப் பார்க்க வர்றான்னு நினைச்சுட்டு அமைதியா இருந்துட்டேன்… ஆனா இப்பிடிப்பட்ட ஒழுக்கம் கெட்ட அப்பா என் பொண்ணை பார்க்காம இருக்குறதே பெட்டர்னு இப்ப புரியுது… இனிமே விக்டரால இங்க வர முடியாது… சோ நீங்க தாராளமா வர்ஷாவ என்னை நம்பி இங்க தொடர்ந்து வேலைக்கு அனுப்பலாம்” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டதும் வர்ஷாவுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. வழக்கம் போல வேலையைச் செய்யுமாறு அவர் கூற அவளும் ஆதித்யாவும் அலுவலக அறையை விட்டு வெளியேறினர்.

வெளியே வந்ததும் “ஆதி என் செல்லமே” என்று கொஞ்சியபடி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள் “தேங்க்யூ சோ மச்டா” என்கவும்

“யூ ஆர் வெல்கம் ஜி.பி… வேலைய ஒழுங்கா செஞ்சு என் மானத்தை காப்பாத்து… உனக்காக தொண்டை தண்ணி வத்த பேசிருக்கேன்ல” என்று அமர்த்தலாக கூறியபடி கிளம்பினான் ஆதித்யா.

செல்பவனையே பார்த்தபடி புன்சிரிப்புடன் நின்றிருந்த வர்ஷா சமையலறையை நோக்கி சென்றாள்.

அதே நேரம் கஃபேக்கு வெளியே நிறுத்தியிருந்த காரைக் கிளப்பி பல்கலைகழகத்தை நோக்கிச் செலுத்தினான் ஆதித்யா.

சீட்டியடித்தபடியே காரின் ஸ்டீரியரிங் வீலை வளைத்துக் கொண்டிருந்தவன் மொபைலில் அழைப்பு வரவும் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான்.

“ஆதி”

பழக்கப்பட்ட குரல் காதில் ஒலிக்கவும் முகம் மலர்ந்தவன் “சொல்லுடா மாறன்… ஹவ் ஆர் யூ? உன் வேலையில பிசியானதும் நீ என்னை மறந்துட்டல்ல?” என்று போலிக்கோபத்துடன் வினவ

“டேய் விடுடா… உன்னோட சேனல்ல வீடியோ பார்த்ததும் தான் உன் மேரேஜ் பத்தி எனக்குத் தெரியும்… நீ மேரேஜ் பண்ணுனது உன் ஃப்ரெண்ட் வர்ஷாவை தானே?” என்று கேட்டான் அவனது நண்பன் மணிமாறன்.

இருவரும் பள்ளி காலத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். பள்ளி படிப்பு முடித்ததும் மணிமாறன் பட்டயக்கணக்காளருக்குப் படிக்க ஆரம்பிக்க ஆதித்யாவோ ஜெர்மனிக்கு இளங்கலை பொருளாதாரம் படிக்க வந்துவிட்டான்.

இருப்பினும் இருவரும் தொடர்பில் இருந்தனர். மணிமாறன் படிப்பில் படு கெட்டி என்பதால் வெகு சீக்கிரத்தில் பட்டயக்கணக்கு ஃபைனல் படிப்பை முடித்துவிட்டு தென்னிந்தியாவின் பிரபல தணிக்கை நிறுவனமான ‘டெக்கான் வாக்கர்ஸ்’சில் பணியிலமர்ந்துவிட்டான்.

 “என் மேரேஜ் பத்தி விசாரிக்க இப்ப தான் டைம் கிடைச்சுதா?” என ஆதித்யா கேட்க

“சாரிடா… இப்ப நான் கால் பண்ணுனது கூட உன் மேரேஜ் பத்தி விசாரிக்குறதுக்காக இல்ல… என்னால என் வேலைய நிம்மதியா செய்ய முடியல… ஒவ்வொரு நாளும் பயத்தோடவே கழியுது… சூசைட் பண்ணிடலாமானு கூட தோணுதுடா ஆதி” என்றான் அவன் நைந்து போன குரலில்.

ஆதித்யா அதிர்ச்சியில் காரை ப்ரேக்கிட்டு ஓரங்கட்டியவன் “இடியட் மாதிரி பேசாத மாறன்… பிடிச்ச வேலைய செய்யுறதுக்குக் குடுத்து வச்சிருக்கணும்… நீ ரொம்ப லக்கிடா… வேலையில உள்ள பிரச்சனைக்காக நீ ஏன் சூசைட் பண்ணணும்? லிசன்! நான் கிளாஸ் அட்டெண்ட் பண்ணுனதுக்கு அப்புறம் உன் கிட்ட தெளிவா பேசுறேன்… பட் அது வரைக்கும் லூசுத்தனமா எதையும் செய்யாம எனக்காக கொஞ்சம் பொறுமையா இருடா… ப்ளீஸ்” என்றான் கடுமையும் கெஞ்சலும் கலந்த குரலில்.

மணிமாறனும் அதற்கு சம்மதிக்க காரை மீண்டும் கிளப்பியவனின் மனமோ நண்பனுக்கு தற்கொலை செய்யுமளவுக்கு என்ன பிரச்சனை வந்திருக்கக்கூடும் என்ற சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தது.

அதே நேரம் வர்ஷா தனது வேலையில் பரபரப்பாக ஆழ்ந்திருந்த நேரத்தில் அவளது மொபைலும் இசைத்தது. முதலில் அசட்டையாக விட்டவள் தொடர்ந்து அழைப்பு வரவும் சகபணியாளர்களிடம் ஓவனை கவனிக்கும்படி கூறிவிட்டு மொபைலுடன் நகர்ந்தாள் அவள்.

தொடுதிரையைக் கவனித்தவள் அழைத்தவள் ஷிவானி என்றதும் உற்சாகமாக “ஹாய் அண்ணி” என்று அழைப்பை ஏற்க மறுமுனையோ அவளது உற்சாகத்தை விரும்பவில்லை போல.

“ரொம்ப சந்தோசமா இருக்கல்ல, ஆனா நாங்க யாருமே இங்க சந்தோசமா இல்ல… யோகா அத்தை உன்னால டெய்லி போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்கும் அலையுறாங்க… மாமா என்கொயரி கமிசனுக்கும் கோர்ட்டுக்கும் நடையா நடக்குறார்… இன்னைக்கு வருண் சித்தப்பாவுக்கு நடந்ததுக்கும் நீயும் ஆதியும் தான் காரணம்… உங்களோட சுயநலத்தால அவர் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கார்டி”

அழுகையோடு கோபத்தைக் கலந்து வர்ஷாவைத் திட்டினாள் ஷிவானி.

“அ…அ..அண்ணி மாமாக்கு என்னாச்சு?” நடுங்கிய குரலில் கேட்டாள் வர்ஷா.

“தெரிஞ்சு என்ன பண்ணப்போற? இதெல்லாம் மணமேடையில அவனை அசிங்கப்படுத்திட்டுப் போறதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும்… ஆனா நீயும் ஆதியும் உங்களைத் தவிர வேற யாரை பத்தியும் யோசிக்காம கிளம்பி போனிங்கல்ல… அன்னைக்கு ஆரம்பிச்சுது ஏழரை சனியன்… அந்த சாணக்கியன் நம்ம வீட்டுப் பெரியவங்க ஒவ்வொருத்தரையா குறி வச்சு தாக்குறான்… ஒரேயடியா கொன்னுட்டா கூட பரவாயில்ல… அவன் அணு அணுவா சித்திரவதை செய்யுறான்டி… ஆனா நீயும் ஆதியும் அங்க வேலண்டைன்ஸ் டே செலிப்ரேட் பண்ணிட்டு உங்க லைஃபை என்ஜாய் பண்ணுறிங்கல்ல, நல்லா இருங்க ரெண்டு பேரும்… உங்களுக்கும் அவனுக்கும் இடையில நடக்குற போராட்டத்துல நாங்க தானே பலியாடு… சந்தோசமா இருங்க”

கோபாவேசத்தோடு பேசிவிட்டு அழைப்பை ஷிவானி துண்டிக்கவும் வர்ஷாவுக்கு அதிர்ச்சியில் புலன்கள் அனைத்தும் வேலைநிறுத்தம் செய்ய ஆரம்பிக்க பார்வை மங்க மெதுவாய் மயங்கி சரிய ஆரம்பித்தாள் அவள்.