வஞ்சிக்கொடியின் வசீகரனே – 17

அத்தியாயம் – 17

ஒரு வாரம் கடந்திருந்தது.

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு ஒன்றாகப் போவதும், வருவதுமாக இருந்தார்கள்.

அவர்களின் சீண்டலும், கோபமும், கிண்டல், கேலிகளும் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டிருந்தன.

தொடர வைத்துக் கொண்டிருந்தான் ராகவ்.

அவனின் சீண்டலில் சிலிர்த்தெழும் மனைவியை அவ்வப்போது முத்தமிட்டு சுண்டெலியாய் சுருளவும் வைத்துக் கொண்டிருந்தான்.

அதில் பூர்ணாவும் விருப்பத்துடன் உடன் பட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும் முத்தத்திற்கு மேல் அவர்களின் உறவு நிலையைத் தொடர விடாமல் தடை செய்து கொண்டும் இருந்தாள்.

ராகவ்வும் முடிந்த வரை அவளுக்கு விட்டுக் கொடுத்து தான் போய்க் கொண்டிருந்தான்.

விலகுபவளை விரட்டி சென்று உறவு நிலையை வளர்க்க அவனுக்கும் விருப்பமில்லை என்பதால் ஒட்டிக் கொண்டாலும் கட்டிக் கொள்ளாமல் அவர்களின் உறவுநிலை தொடர்ந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. ராகவ் தன்னுடைய வேலை முடிய நேரமாகும் என்று சொல்லியிருந்ததால் பூர்ணா மாலையே வீடு செல்வதாகச் சொல்லிவிட்டு முதலில் வந்து விட்டாள்.

அதனால் இரவு எட்டு மணியளவில் வேலை முடிந்து வந்த ராகவ் தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்தான்.

விளக்கு கூடப் போடாமல் வீடு இருட்டாக இருக்கவும் ‘என்னாச்சு இன்னுமா சம்மூ வீட்டுக்கு வரல? வந்திருப்பாள்னு நினைச்சேனே… ஒருவேளை அவங்க அம்மா வீட்டுக்கு எதுவும் போய்ட்டாளா? போறதா சொல்லவும் இல்லையே?’ என்று நினைத்துக்கொண்டே விளக்கை எரிய விட்டான்.

விளக்கின் ஒளியில் வீடு இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்தான்.

மனைவியின் செருப்பு அங்கேயும், இங்கேயுமாகச் சிதறடிக்கப்பட்டிருந்தது. அவளின் தோள்பை சோஃபாவிலும், கீழேயுமாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

அவளின் துப்பட்டா படுக்கை அறையின் வாயிலில் கிடந்தது.

படுக்கையறை கதவு லேசாகத் திறந்திருந்தாலும் உள்ளே இருட்டு மையம் கொண்டிருந்தது.

‘என்னாச்சு இவளுக்கு?’ என்று பதறியவன் “சம்மூ…” என்று அழைத்துக் கொண்டே படுக்கையறையை நோக்கி ஓடினான்.

முதலில் இருட்டை விரட்ட விளக்கை போட்டுவிட்டு மனைவியைத் தேடினான்.

அவனை அதிகம் தேட விடாமல் படுக்கையில் சுருண்டு கிடந்தாள் சம்பூர்ணா.

வேலையை விட்டு வந்து வீட்டிற்குள் நுழைந்த சம்பூர்ணா குளியலறைக்குச் சென்று உடையை மாற்றி விட்டு இரவு உணவை பற்றிக் கூட நினைக்காமல் படுக்கையில் போய்ச் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் வந்து இரண்டு மணி நேரம் கழித்துத் தான் ராகவ் வந்தான்.

அவள் சுருண்டு கிடந்த நிலையைப் பார்த்து வேகமாகப் படுக்கைக்கு அருகில் சென்று மனைவியை அழைத்துப் பார்த்தான்.

“சம்மூ என்னாச்சு? ஏன் இப்படிப் படுத்துருக்க?” என்று கேட்டுக்கொண்டே படுக்கையில் அமர்ந்து அவளின் நெற்றியை தொட்டுப் பார்த்தான்.

நெற்றி ஜில்லென்று இருந்தது. கழுத்துக்கிடையில், கை என்று அவளின் உடலில் ஆங்காங்கே தொட்டுப்பார்த்து உடலில் சூடு இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டவன், அந்தப் பக்கமாகத் திரும்பி படுத்திருந்தவளை தன் பக்கமாகத் திருப்பினான்.

கண்ணை இறுக மூடி படுத்திருந்தாள். ‘தூங்குகிறாளா என்ன?’ என்று நினைத்தவன் அவளை எழுப்ப யோசித்தான். ஆனால் அவள் பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்த நிலை மனதில் பதட்டத்தை உருவாக்கியிருக்க மெல்ல அவளின் கன்னத்தில் தட்டி “சம்மூ…” என்றழைத்து எழுப்பினான்.

அவள் சிறிது கூட அசையாமல் இருக்கவும், என்னமோ ஏதோ என்று அவனுக்குப் பதட்டம் அதிகரித்தது.

“என்னடா… என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டுக் கொண்டே இரண்டு கன்னத்திலும் மாறி மாறி லேசாகத் தட்டிக் கொண்டிருந்தான்.

அதற்கும் அவள் முழிக்காமல் போக, ‘மயங்கிக் கிடக்கிறாளா?’ என்ற சந்தேகம் உண்டானது.

அதில் இன்னும் பதட்டமானவன் வேகமாகத் தண்ணீரை எடுத்து வந்து அவளின் முகத்தில் தெளித்தான்.

தண்ணீரையைத் தெளித்ததும் முகத்தைச் சுளித்தவாறு இமைகளை லேசாகப் பிரித்தாள் சம்பூர்ணா.

மனைவியின் திறந்த விழிகளைக் கண்டதும் தான் பயத்தில் அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருந்த ராகவ்வின் இதயத்துடிப்பு சீரானது.

ஒரு துண்டால் அவளின் முகத்தில் இருந்த ஈரத்தை துடைத்து விட்டவன் “என்னாச்சு சம்மூ என்ன செய்து? ஏன் இப்படிக் கிடக்க?” என்று கேட்டான்.

கணவனின் பதட்டத்தைக் கண்டு மெல்ல எழுந்து அமர்ந்த பூர்ணா “எனக்கு ஒன்னுமில்லை…” என்று தீனமான குரலில் சொன்னாள்.

“ஒன்னும் இல்லையா? மயக்கமா இப்படிச் சுருண்டு போய்ப் படுத்து கிடக்க? ஒன்னும் இல்லன்னு சாதாரணமா சொல்ற?” என்று கோபத்துடன் கேட்டான்.

“என்ன சொல்றீங்க மயங்கி கிடந்தேனா?” என்று தான் இருந்த நிலையைக் கூட உணராமல் கேட்டாள்.

“ஆமா… மயங்கிதான் கிடந்த… இப்ப ஏன் மயக்கம் வந்தது? எழுந்திரு, முதலில் ஹாஸ்பிட்டல் போய் என்னனு பார்த்துட்டு வரலாம்…” என்று அவளின் கையைப் பிடித்து எழுப்பினான்.

“அச்சோ! எனக்கு ஒன்னுமில்லை… விடுங்க…” என்று அவனின் கையைத் தட்டி விட்டாள்.

“என்னைக் கோபப்படுத்தாதே பூர்ணா. என் மேல் இருக்கும் உன்னோட கோவத்தை எல்லாம் தூக்கி உடைப்பில் போடு. இப்ப எழுந்திரு ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்று கோபத்துடன் கடுமையாகச் சொன்னான்.

எப்போதும் விளையாட்டும், சீண்டலுமாக இருப்பவனிடம் இருந்து இவ்வளவு கோபத்தை எதிர்பார்க்காதவள் கணவனைத் திகைத்துப் பார்த்தாள்.

“எனக்கு நிஜமாகவே ஒன்னுமில்லை. சொன்னா கேளுங்க…” என்று அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.

“அதை டாக்டர் சொல்லட்டும். எழுந்திரு…” என்று அதட்டலாக அழைத்தான்.

அதற்கு ஏதோ பதில் சொல்ல வந்த பூர்ணா திடீரென முகத்தை ஒரு மாதிரியாகச் சுளித்து விட்டு வேகமாக வாயை மூடிக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து குளியலறை நோக்கி ஓடினாள்.

உள்ளே சென்றவள் ஓங்கரித்துக் கொண்டு வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். அவளின் பின்னால் ஓடிய ராகவ் அவளின் தலையைப் பிடித்து விட்டான்.

வாந்தி எடுத்து முடித்ததும் அவளுக்குக் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

வாயைக்கூடத் துடைக்கும் தெம்பின்றி, அருகில் நின்றிருந்த கணவனின் தோளிலேயே சாய்ந்தாள்.

அவள் சோர்ந்து தன்மேல் சாயவும் “ஹேய் குட்டி என்னடி செய்து?” என்று கேட்டுக் கொண்டே பதறியவன் அவளின் வாயை தானே துடைத்து விட்டு தூக்கிச் சென்று படுக்கையில் விட்டான்.

படுக்கையில் விட்டதும் மயக்க நிலையிலேயே கணவனின் கைபிடித்துத் தனக்குள் வைத்துக் கொண்டாள்.

அதில் அவனும் படுக்கையில் அமர வேண்டியது இருக்க, மனைவியின் தலை பக்கமாக அமர்ந்தான்.

அவன் அமர்ந்ததும் இன்னும் வசதியாக உணர்ந்தவள், கணவனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

“அடியேய்! நீ வாந்தி எடுத்ததையும், மயக்கமா இருக்குறதையும் பார்த்து நான் பதறிப் போய் இருக்கேன். நீ சொகுசா மடியில் படுத்து தூங்க போற? என்னனு சொல்லு சம்மூ… எனக்குப் பதறுது…” என்று அவளின் தோளைப்பிடித்து உலுக்கிய ராகவ்வின் குரல் கலக்கத்துடன் ஒலிக்க, குரலைக் கேட்டு அரை மயக்க நிலையில் இருந்த சம்பூர்ணா பட்டெனத் தன் விழிகளைத் திறந்தாள்.

குரல் மட்டும் இல்லாது அவனின் கண்களும் கலங்கி இருப்பது போல் பளபளத்துக் கொண்டிருந்தன.

அதை ஆச்சரியத்துடன் கண்டவள் ஏதோ முணுமுணுப்பது போல் தோன்ற அவள் என்ன சொல்கின்றாள் என்று புரியாமல் தன் காதை அவளின் வாயின் அருகே கொண்டு சென்றான்.

“நான் மயக்கமா இருக்கேன்னு தெரியுதுல? ஒரு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வாய்யா. அப்புறம் பாரு உன் கூட நான் தெம்பா சண்டை போடுவேன்…” என்று முணுமுணுப்பாகச் சொன்ன மனைவியை முறைக்கவா? அடிக்கவா? என்பது போல் பார்த்து வைத்தான் ராகவ்.

“அரை மயக்கத்தில் இருந்தாலும் அதிகாரத்திற்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி பொண்டாட்டி…” என்று சொல்லிவிட்டு அவளின் தலையைத் தலையணையின் மீது வைத்தவன் எழுந்து சென்று பழச்சாறு தயாரித்து எடுத்து வந்தான்.

அதை வாங்கிக் குடிக்கக் கூடப் பெலனில்லாமல் அவள் படுத்துக் கிடக்க, தானே அவளைப் படுக்கையில் இருந்து தூக்கி தன் மேல் சாய்த்துக் கொண்டு பழச்சாற்றை மெள்ள பருக வைத்தான்.

உதட்டை சுற்றி இருந்த ஈரத்தை துடைத்து விட்டு அவளின் தலையைக் கோதிக்கொடுத்தான்.

கணவனின் கவனிப்பில் சொக்கிய பூர்ணா அவனின் தோளிலேயே வாகாகச் சாய்ந்து கொண்டாள்.

“ஏய்…! என்ன தூங்க போறியா? இப்பவாவது என்னன்னு சொல்லு சம்மூ‌…” என்று கேட்டான்.

அவனின் தோளிலிருந்து நிமிர்ந்தவள் “சொல்ல சங்கடமாக இருக்குனு சமாளிக்கப் பார்த்தா விட மாட்டிங்கிறீங்களே…” என்று சோர்வாக அலுத்துக் கொண்டவள், “எனக்கு மாசாமாசம் இப்படித்தான் இருக்கும்‌…” என்று மெல்லிய குரலில் முனங்கினாள்.

“என்ன சொல்ற மாசாமாசமா?” குழப்பத்துடன் கேட்டான்.

“ம்ம்…” என்று முனங்கியவள், “என்னால முடியல, படுக்கிறேன்…” என்று பலவீனமான குரலில் சொல்லிவிட்டுப் படுக்கையில் சாய்ந்தாள்.

“சம்மூ என்ன பண்ற? முடியலைனா ஹாஸ்பிட்டல் போகணும். இப்படிப் படுத்தா என்ன அர்த்தம்? அதுவும் மாசா மாசம் இப்படியிருக்கும்னு சொல்ற. அதை என்ன ஏதுன்னு டாக்டர் கிட்ட கேட்கணும். கிளம்பு…” என்று அதட்டலாகச் சொன்னவன் படுக்கையில் சாய்ந்தவளை, மீண்டும் நிமிர்த்தி அமர வைத்தான்.

“ப்ச்ச்… அதெல்லாம் நிறைய முறை டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தாச்சு. வெறும் அனீமிக் ப்ராப்ளம் தான். இன்னும் இரண்டு நாளில் சரியா போய்டும்…” படுக்க விட மாட்டேங்கிறானே என்ற கடுப்புடன் சொன்னவள் “என்னைத் தூங்க விடுங்க ப்ளீஸ்…” என்று மீண்டும் படுக்கப் போனாள்.

“என்ன சொல்ற சம்மூ? இன்னும் இரண்டு நாளா? அதெல்லாம் முடியாது. இப்போ நாம ஹாஸ்பிட்டல் போகணும். இன்னும் இரண்டு நாள் நீ இப்படிக் கஷ்டப்படுவதைப் பார்த்துட்டு என்னால பேசாம இருக்க முடியாது…”

“அய்யோ! எனக்கு என்ன ப்ராப்ளம்னு நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியுதா இல்லையா? மூணு நாளைக்கு இப்படித்தான் இருக்கும்னு சொன்னா விடுங்களேன்…” என்று சலிப்பாகச் சொன்னாள்.

“உனக்கு என்ன பிராப்ளம்னு எனக்கு நல்லாவே புரியுது. பீரியட்ஸ் தானே?”

அவள் சொல்லத் தயங்கிய விஷயத்தை அவன் சர்வ சாதாரணமாகக் கேட்டான்.

“பீரியட்ஸ்னா வயிறு வலிக்கும், டயர்டா இருக்கும்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். உனக்கு என்ன பிரகன்ஸி சிம்டம்ஸ் மாதிரி வாந்தி, மயக்கம்னு வருது. அதைச் சர்வ சாதாரணமா சரியாகிடும்னு சொல்லி இப்படிச் சுருண்டு போய்க் கிடக்க…” என்றான்.

கணவன் சொன்னதைக் கேட்டு அவனைக் கண்ணைச் சுருக்கி பார்த்தவள் “உங்களுக்கு எப்படி லேடிஸ் பிரச்சனையான இந்தச் சிம்டம்ஸ் எல்லாம் தெரியுது?” என்று மாதிரியான குரலில் கேட்டவளை இப்போது அவன் தான் ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தான்.

“நீ எந்தக் காலத்தில் இருக்க? இப்ப எல்லாம் கையடக்கத்தில் உலகத்தில் உள்ள அத்தனை விஷயத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதைத் தெரிஞ்சுக்க முடியாதா என்ன?” என்று கேட்டான்.

“அதைத்தான் நானும் கேட்கிறேன். உலகத்தில் தெரிஞ்சுக்க எத்தனையோ விஷயம் இருக்கும் போது குறிப்பா இதை மட்டும் எப்படித் தெரிஞ்சு வச்சிருக்கீங்க?”

“ஏன்னா நான் மனுஷனா இருக்க ஆசைப்பட்டேன். அதனால் தெரிஞ்சுக்கிட்டேன்.‌..” என்று சொல்லி தோளை குலுக்கினான்.

‘நீ என்ன சொல்ல வருகிறாய்?’ என்பதுபோல் புரியாமல் அவள் பார்க்க, “நல்ல மனுசனா இருக்கணும்னா அதுக்கு முதலில் தனக்கு இணையாக வரப்போற பொண்ணோட உடல், மனக்கஷ்டம் என்ன மாதிரி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருக்கணும். என் கூட வாழ போற பொண்ணுக்கு இயற்கையாய் என்னென்ன பிரச்சனை இருக்கும்னு கூட நான் தெரிந்து வைச்சுக்கலைனா அவளை எப்படி நான் நல்லா பார்த்துக்க முடியும்? இது மனைவிக்கு மட்டுமல்ல கூடப்பிறந்த அக்கா, தங்கச்சியை, அம்மாவையும் நல்லா பார்த்துக்கத் தெரிஞ்சு வச்சுக்கிறதில் தப்பே இல்ல. அதனால தான் நானும் தெரிஞ்சு வச்சுக்கிட்டேன். நம்ம வீட்டுப் பெண்களோட கஷ்டம் தெரிஞ்சதுனா அடுத்த வீட்டு பெண்களையும் கஷ்டப்படுத்த தோணாது பாரு…” என்றவனைப் பிரமிப்பாகப் பார்த்தாள் சம்பூர்ணா.

“என்ன அப்படிப் பார்க்கிற?” புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“உங்களை விளையாட்டு பிள்ளைன்னு நினைச்சேன். இப்படி விவரமான பிள்ளையா எதிர்பார்க்கலை…” வியப்புடனே சொன்னாள்.

“விளையாட்டு பிள்ளையா இருக்கலாம். மன விகாரமான பிள்ளையாத்தான் இருக்கக் கூடாது… அது சரி! என்ன பேசியே நேரத்தை ஓட்டலாம்னு பார்த்தியா? கிளம்பு போகலாம். டிரஸ் மாத்து…” என்றான்.

“அச்சோ! சொன்னா கேட்க மாட்டீங்களா? என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் அங்கே கபோர்ட்ல என் ட்ரஸ் பக்கத்தில் இருக்கு பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இன்னைக்கு முதல் நாள். அதான் இப்படி மயக்கம், வாந்தி வருது. நாளைக்கு வராது. ஆனா டயர்ட் மட்டும் இருக்கும். இப்போ பசிக்குது. அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க. என்னால் சமைக்க முடியாது. சாப்டலைனா எனக்கு இன்னும் மயக்கம் வரும்…” என்று சோர்வுடன் சொல்லிவிட்டு மீண்டும் அவன் எழுப்பாதவாறு கண்ணை இறுக மூடி படுத்துக் கொண்டாள்.

அவள் அவ்வளவு சொன்ன பிறகு அதை மீற முடியாமல், முதலில் ஒரு உணவகத்திற்கு அழைத்துத் தேவையான உணவு வகைகளைச் சொல்லிவிட்டு, அடுத்து அவள் சொன்ன மருத்துவக் கோப்பை எடுத்து வந்து பார்த்தான்.

அவள் சொன்னது போல் சத்து குறைபாடு என்று தான் மருத்துவ முடிவு வந்திருந்தது. என்ன மருந்துக்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதில் விட்டமின் மாத்திரை எழுதப்பட்டிருந்தது.

கூடவே பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்லப்பட்டிருந்தன.

அதைப் பார்த்துவிட்டு வைத்தவன் வீட்டில் இன்னும் எவ்வளவு பழங்கள் இருக்கிறது என்று பார்த்தான். தேவைக்கு இருந்தது.

உடையை மாற்றி விட்டு மீண்டும் அவளின் அருகில் அமர்ந்தவன், இதமாக அவளின் தலையைக் கோதி கொடுத்தான்.

அவன் அருகில் அமர்ந்ததும் மெல்ல இமைகளைப் பிரித்துப் பார்த்தவள், “நான் உங்க மடியில் படுத்துக்கட்டுமா?” என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் தானே அவளின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தவன், மீண்டும் தலையை வருட ஆரம்பிக்க, அந்தச் சுகத்தில் மெள்ள உறக்கத்தின் பிடிக்கு சென்றாள்.

அவன் வம்பு பேசாமல் தன்னிடம் இதமாக நடந்து கொண்டதில் பூர்ணா மனம் உறக்கத்திலும் கூட இதமான பரவசத்தில் இருந்தது.

அதன் பிறகும் அவளுக்குத் தேவையானதை அமைதியாகவே செய்தான்.

உணவு வந்ததும் உண்ண வைத்து, அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு அவளின் அருகில் வந்து படுத்தவன், அவளின் முக வாட்டத்தைப் பார்த்து தானும் வாடினான்.

நள்ளிரவில் அவள் உறக்கம் வராமல் அனத்த ஆரம்பிக்க, அதில் பட்டென விழித்தவன், “என்ன சம்மூ?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“கால் ரொம்ப வலிக்குது. உறங்க முடியலை…” என்று கலங்கிய குரலில் சொன்னாள்.

“ஓ…!” என்று எழுந்தவன் அவளின் காலை பிடித்து விட ஆரம்பிக்க, “அச்சோ! என்ன செய்றீங்க?” என்று பதறி காலை இழுத்துக் கொண்டாள்.

“நான் பிடிச்சு விடுறேன், தூங்கு…” என்று அவன் அமைதியாகச் சொல்ல, “இல்ல வேண்டாம்…” என்று தடுத்தாள்.

“ரொம்பப் பண்ணாதடி. பேசாம படு! மெட்டி போடும் போது அத்தனை ஜனங்க முன்னாடி உன் காலை பிடிச்சுட்டு, உனக்கு ஒரு வலி வரப்ப இது கூடச் செய்யலைனா தான் நான் மனுஷனே இல்லை…” என்று அழுத்தமாகச் சொன்னவன், “மனைவியோட காலை பிடிக்கலைனா அவன் நல்ல கணவனே இல்லைனு ஒரு அறிக்கை விட்டு செல்பியோட ஒரு புரட்சி ட்ரண்டை மூஞ்சி புக்குல கிளப்பி விடலாம்னு நினைச்ச என் ஐடியாவை மாத்தப் பார்க்காதே…” என்று சொல்லி கண் சிமிட்டிய படியே “எங்கே என் போன்…” என்று தேட ஆரம்பித்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த பூர்ணா, “என்னது செல்பி போட போறீங்களா?” என்று அரண்டு போய்க் கேட்டவள், “விடுங்க என் காலை…” என்று விடுவிக்கப் பார்த்தாள்.

“அதெல்லாம் விட முடியாது. புதுசு புதுசா மூஞ்சி புக்குல ட்ரண்ட் வருது. நான் ‘மனைவியின் காலை அமுக்கி விடுபவனே நல்ல கணவன்’னு ட்ரண்ட் ஆரம்பிச்சு விட்டேன்னு வை. அம்புட்டு பேரும் அவங்கவங்க மனைவியின் காலை பிடிக்கிற மாதிரி போட்டோ எடுத்து போடுவாங்க. நல்ல என்டர்டைன்மெண்ட்டா இருக்கும்…” தீவிரமாகச் சொன்னவனின் கண்ணோரங்கள் சுருங்கி அவனின் குறும்பு தனத்தைக் காட்டி கொடுக்க, ‘கணவன் தன்னிடம் விளையாடுகிறான்’ என்று கண்டு கொண்டாள் பூர்ணா.

“போதும் விளையாட்டு… பேசாம படுங்க!” என்று சிரித்த படியே சொன்னாள்.

“நோ… நோ… இதையெல்லாம் நைட்டோடு நைட் ஆரம்பிச்சு விட்டு படுத்தோம்னு வை… காலையில் தூங்கி எழுந்து பார்க்கும் போது மூஞ்சி புக்ல எந்தப் பக்கம் திரும்பினாலும் நாம ஆரம்பிச்ச ட்ரண்ட் தான் சுத்தும். விதவிதமா மனைவி காலை பிடிக்கற போட்டோ பார்க்கலாம். இதெல்லாம் எவ்வளவு பெரிய என்டர்டைன்மென்ட் தெரியுமா? அதை ஏன் நான் விடணும்?” என்று சொன்னவன் முகத்திலும் தான் சொன்னது நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

“புதுசா தான் இருக்கும்…” என்று சொல்லி தானும் அந்நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்து சிரித்தாள்.

மனைவியின் சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்தான் ராகவ்.

வேலை விட்டு வந்ததில் இருந்து மனைவியின் சோர்வை கண்டு அவனின் மனமும் சோர்ந்து போயிருந்தது.

அவளின் சிரிப்பில் தானும் மலர்ந்தவன், “நீ படு! நான் கொஞ்ச நேரம் அமுக்கி விட்டா நல்லா தூங்கிருவ. நிம்மதியா தூங்கு…” என்றான் மென்மையாக.

அவன் மென்மையாகச் சொன்னாலும் காலை விட மாட்டான் என்ற உறுதி தெரிய பேசாமல் படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் காலை இதமாகப் பிடித்து விட்டவன், மனைவி உறக்கத்தின் பிடிக்கு சென்றதை கண்டு அவளின் அருகில் படுத்துக் கொண்டான்.

அவன் படுத்ததும் அரை உறக்கத்தில் இருந்தவள் அவனின் மீது கையைத் தானே முதல் முறையாகப் போட்டு அணைத்துக் கொண்டவள், கணவனின் காதருகில் சென்று “நீங்க நல்லவரா? கெட்டவரா?” என்று அந்தத் தூக்கத்திலும் கேட்ட மனைவியின் கேள்வியில் சிரித்தவன் “ஐயாம் ஆல்வேஸ் கெட்டவன்டா குட்டி…” என்று எப்போதும் போல் வார்த்தை மாறாமல் சொன்னவன், திரும்பி அவளின் நெற்றியில் முத்தமிட்டு “தூங்கு…” என்று இதமாகத் தட்டி கொடுக்க ஆரம்பித்தான்.