ரக்ஷ்ணா என்னும் நாட்குறிப்பு

‘நீ மட்டும் இல்லேன்னா, இந்நேரம் நான் இயந்திரமாவோ இல்லை பைத்தியமாவோ தான் இருந்திருப்பேன் ரக்ஷ்ணா!  உனக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது. என் ஆசை, கோபம்,  தாபம், ஏக்கம்  எல்லாத்தையும் உன்கிட்ட, என் மன ஆறுதலுக்காக சொல்லிவச்சேன். ஆனால் நீ, அதை மனுசங்க போல காத்தோடு காத்த விடாம, உனக்குள்ள பதித்து, அதைச் சரியான நேரத்துல எடுத்துக் கூறி, என் வாழ்க்கையே மீட்டுக்கு கொடுத்திருக்க ரக்ஷ்ணா! எப்பயும் நீ என் தோழி தான் அதுல மாற்றமே இல்லை … ஐ லவ் யூ ரக்ஷ்ணா….’ எனும் போதே, அவள் கழுத்தை மெல்ல அணைத்தது ஒரு வலியக் கரம்…
அவள்  தோளில் ,
தன் தாடையைப் பதித்தவன், அவளது தோழி ரக்ஷ்ணாவைப் பார்க்கும் போதே அவன் கண்களில் கொஞ்சம் பொறாமைத் தென்பட்டதோ உண்மை.
 

” கொஞ்சம் உன்னை தனியா விடக் கூடாதே! உடனே உன் தோழி கூட வந்து உக்காந்துருவ…” என்றான் அவள் கன்னத்தோடு தன் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டு..

அவன் தரும் இன்ப அவஸ்தைகளை, அனுபவித்துக் கொண்டே அவனோடு ஒன்றியவள், ” நான் தனியா இருக்கும் போது, அந்தத் தனிமையைப் போக்கின தோழியை, கொஞ்சமாவது நினைக்கணும் இல்லையா, அதான் நீங்க இல்லாத நேரத்துல, என் தோழிக்கு நன்றி சொல்றேன். இவ மட்டும் இல்லேன்னா, இந்நேரம் நான் எதிர்ப்பார்த்த வாழ்க்கை  எனக்கு கிடச்சுருக்காதுங்க, முக்கியமா உங்க பாசம், காதல் எதுவுமே எனக்கு கிடைக்காமலே போயிருக்கும்ங்க… அதுக்கு தான் நான் என் தோழிக்கு நன்றிக் கடனா, கொஞ்ச நேரம் செலவழிக்கிறேன்…  ” என்றதும் அவன் முகம் குற்றவுணர்வை நாடியது.

“சாரி பிரியா,  பெத்தவங்க விருப்பதுக்காக உன்னை கல்யாணம் செஞ்சு… நீ காட்டுன அன்பு, காதல் எதையும் புரிஞ்சுகாம, ஒரு இயந்திரமா வாழ்ந்து, உன்னையும் அப்படியே இருக்க வச்சுட்டேன்.. எனக்காக எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, இந்த ஜடத்தையும் மனுசனா மாத்திருக்க.. எதுக்குமே உதவாத நிலத்தையும் பட்டா போட்டு, அதுலயும் அன்பு,  காதல் இருக்குன்னு சொல்லி, இப்படி என்னை விளைச்சல் நிலமா மாதிட்ட டி என் மாயக்காரி.. அப்றம் உன் தோழி ரக்ஷ்ணாவுக்கும் நானும் நன்றிக் கடன் பட்டுருக்கேன்…

தக்க நேரத்துல, உன் காதலை எனக்கு புரிய வச்சது… இல்லேன்னா இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும்… உன்னை நான் இழந்து இருப்பேன்… என் சின்ரெல்லாவ தொலைச்சுருப்பேன். உனக்கு என் நன்றிகள் ரக்ஷ்ணா” என்றான் அவள் கைகளில் தவழ்ந்த ரக்ஷ்ணா என்ற நாட்குறிப்பைப் பார்த்து… பின் அவனே, ” போதும் உன் ரக்ஷ்ணா கிட்ட நன்றி சொன்னது… இப்போ நாம காதல் செய்யும் நேரம் என்று” அவள் நெஞ்சோடு அணைத்திருந்த ரக்ஷ்ணாவை அவளிடம் இருந்து பிரித்து மேசையில் வைத்து அவளைத் தூக்கி கொண்டு மஞ்சத்தில் சேர்த்து கூடலைத் தொடங்கினான்.

அந்தச் செயற்கை விசிறி சூழல, வளி வந்து ரக்ஷ்ணாவைத் தீண்ட, மெல்ல தன்
தேகத்தை திறந்தாள்…

அதில்….

பிரியா, திருமணம் நாளில் இருந்து, அவனுடன் இணைந்த நாட்கள் வரை அனைத்தையும் பகிர்ந்திருக்கிறாள்..
பெற்றோரின் விருப்பத்துக்காக, பிரியாவை மணம் செய்தான் கிஷோர். ஆனால் அவனுக்கோ துளியும் நாட்டமில்லை திருமண வாழக்கையில்…

அவளிடம் அளவாகத் தான் பேசுவான்… அவளாக, வந்து பேசினாலும் அதிகம் பேசமாட்டான்.. அவன் எண்ணம் எல்லாம் வாழ்க்கையில் தன் தொழிலில் சாதிக்க வேண்டும்.. தன் லட்சியத்தை அடையவேண்டும்  என்பதே அவனது எண்ணம், வெறி. அவ்வாறு அவனும் இயந்திரமாக இருந்து தான் மனைவியையும் இயந்திரமாக்கினான்.

அவளும்  தனிமையுடன் நட்புகரம் கோர்த்து நாட்கள் முழுதும் சஞ்சாரித்தாள்.. துணைக்கு ரக்ஷ்ணா என்னும் நாட்குறிப்பைத் தன் தோழியாக ஏற்றவள்… அவனோடு எப்படி இருக்க வேண்டும் அவன் தன்னோடு எப்படி வாழ வேண்டும் கோபம், தாபம்,ஏக்கம் ஆசை, காதல் அனைத்தையும்  அதில் பகிர்ந்தாள்.

தனிமையின் பிடி அவளை நெறிக்க உடலும் மனமும் சோர்ந்து வியாதி வந்து மயங்கிச் சரிந்தாள்..  சங்க இலக்கியங்கியங்களில் தலைவனை பிரிந்த தலைவிக்கு வரும்  பசலை  நோயும் அவளை வாட்டிட , அவளின்  நிலையைக் கண்டு மனம் மாறியவன், ரக்ஷ்ணாவின் உதவியோடு பிரியாவின் காதலை உணர்ந்தான். பின் பிரியாவின் காதலை அடைந்து, அதில் வெற்றியும் கண்டு, தன் வாழ்வில் சிறந்த ஆண்மகனென்று பெயரையும் வாங்கிச் சாதனைப் படைத்து விட்டான்.

இயந்திரமாக வாழ்ந்த நாட்கள் மாறி, இல்லற வாழ்க்கையில் இணைந்து இன்பம் கண்டனர் அத்தம்பதியினர் இருவரும்..