முன்பே காணாதது ஏனடா(டி) – 34

காலை நேரம் அலுவலகம் கிளம்பிய குமரன் வாயிலில் நின்று மைத்ரியின் வரவுக்காக காத்திருந்தான்.

சரி அவள் கிளம்பி வரும் வரை பைக்கை சுத்தம் செய்யலாம் என எண்ணி துணி எடுத்து வந்து துடைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவர்களின் வீட்டின் முன் பைக் ஒன்று கிரீச்சிட்டு நின்றது.

யார் என்று குமரன் நிமிர்ந்து பார்க்க சிவா தான் புன்னகையோடு பைக்கில் இருந்து கீழே இறங்கினான்.

‘இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான்’ என மனதில் எண்ணியவன் “ஹாய்” என கூறி பொய்யாக சிரிக்க சிவாவும் “ஹாய்” என கூறி வீட்டின் உள் நுழைந்தான்.

‘உள்ள எங்க போறான்?’ என்ற யோசனையோடு இவனும் வீட்டின் உள் சென்றான்.

அங்கே அவனுக்கு வரவேற்பு உபசரணைகள் நடந்து கொண்டிருந்தது. இவனும் உள்ளே சென்று அமர்ந்தான்.

மைத்ரி தயாராகி வெளியே வந்தவள் சிவாவை நோக்கி “சிவா நான் ரெடி போகலாமா… “

குமரன் அதிர்ந்து அவளை நோக்க அவளோ வெகு சாதாரணமாக “குமரன் இன்னைக்கு நான் சிவாகூட போயிடுறேன். இன்னைக்கு ஆபிஸ்க்கு போக வேண்டியது இல்ல. வேற ஏரியாக்கு போகனும் புது ஆர்ட்டிக்கல் சில புட்டேஜ் கலெக்ட் பண்ணனும். உங்க ஆபிஸ்கு ஆப்போசிட் சைட் அதான் நான் சிவாவ வர சொன்னேன்” என்றாள்.

குமரனுக்கு ஆத்திரமாக வந்தது. அவளுக்கு திரும்பி பதில் ஏதும் கூறாமல் வெளியே சென்று பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.

மற்ற யாரும் அவன் முகமாற்றத்தை கவனிக்கவில்லை. அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

சிவாவும் மைத்ரியும் அனைவரிடம் இருந்து விடைபெற்று சென்றனர்.

……

அன்னபுறம்…

கூடத்தில் ஹரிஷ் உடன் விளையாடி கொண்டிருந்தாள் நர்மதா.

வயலுக்கு சென்றிருந்த செழியன் காலை உணவிற்காக வீட்டிற்கு வந்தான். அவன் உள்ளே நுழையும் நேரம் சுதாகரனும் வர இருவரும் சிரித்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

“அண்ணி சாப்பாடு” என சமையல் அறை நோக்கி கத்தினான் செழியன்.

மஞ்சுளா அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வந்து வைக்க பணிக்கு புறப்பட்டு கொண்டிருந்த கதிர் அறையில் இருந்து மஞ்சுளாவை அழைத்தான்.

“நர்மதா…  வந்து சாப்பாடு பறிமாரு நான் இப்போ வந்துடுறேன்” என அவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

ஹரிஷின் முன் தன் கையில் இருந்த பொம்மைகளை வைத்தவள் எழுந்து சென்று செழியனுக்கு உணவு பறிமாரினாள்.

அவள் பறிமாரிய தட்டை சுதாகரன் புறம் நகர்த்திய செழியன் தனக்கான உணவை தானே வைத்துக் கொண்டான்.

செழியனின் செயலில் நர்மதாவின் முகம் சுருங்கிவிட்டது. திருமணம் நடந்த நாளுக்கு பிறகு தனக்கு உடல்நிலை சரியில்லாத நேரம் அனைத்து பணிவிடைகளும் செய்து எப்பொழுதும் எதையேனும் பேசியபடி இருந்த கணவனின் தற்போதைய அமைதி அவளை வாட்டியது.

தான் பறிமாரிய உணவைகூட உண்ணாமாட்டாரா என எண்ணியவளின் தொண்டையில் எச்சில் ஏறி இறங்கி அழுகைக்கு தயார் ஆனது.

தோழனின் செயலை கவனித்த சுதாகரன் கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ பூசல் போல என எண்ணி நிலமையை சகஜம் ஆக்கும் பொருட்டு “தங்கச்சி இன்னைக்கு எங்க வீட்டுக்கு வாரியாமா. மொழி உன்ன பாக்கனும்னு சொன்னாள்.

வீட்டுக்கு பின்னாடி ஏதோ தோட்டம் வைக்க போறேனு சொன்னாள். எவ்வளவு நாள் வீட்டுக்குள்ளையே அடஞ்சுகிடப்பா உனக்கும் ஒரு மாறுதல்லா இருக்கும்.”

“ஆ… சரி… வரேன் அண்ணா…” 

அன்றைக்கு மஞ்சுளாவுடன் பேசிய பிறகு வீட்டில் உள்ள அனைவரிடமும் நன்றாக பழகினாள் நர்மதா. இப்பொழுது மஞ்சுளாவும் மொழியும் அவளின் நெருங்கிய தோழி ஆகிவிட்டனர்.

“சரிமா அப்போ போய் ரெடி ஆகிவா நான் சாப்பிட்டு உன்ன கூட்டிப்போறேன்.”

“சரி அண்ணா…  நீங்க சாப்பிடுங்க நான் போய் துணி மாத்திட்டு வரேன்.”

“சரிமா” என சுதாகரன் கூற அறைக்கு செல்ல இருந்தவள் கதிரின் வருகையால் அங்கேயே நின்றாள்.

“நீ போய் கிளம்பு நர்மதா” என அங்கே வந்த மஞ்சு கணவனுக்கு உணவு பறிமாரினாள்.

அறைக்கு வந்த நர்மதா இலகுவான சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வர செழியனும் சுதாகரனும் உணவை முடித்து இருந்தனர்.

மூவரும் புறப்படும் நேரம் ஹரிஷ் தானும் வருவதாக அடம்பிடித்து சுதாகரனின் கால்களை கட்டிக் கொண்டான்.

“சரி வாடா மருமகனே” என அவனை தூக்கிக் கொண்டு முன்னே சென்ற சுதாகரன் செழியன் புறம் திரும்பி “டேய் தங்கச்சிய கூட்டிட்டு முன்னாடி போ. நான் என் மருமகன கூட்டிட்டு கடைக்கு போயிட்டு வரேன். உன் தங்கச்சி துணி துவைக்க சோப்பு தீந்துபோச்சு வாங்கிட்டு வர சொன்னாள். இப்பதான் நியாபகம் வருது. நான் வாங்கிட்டு வரேன்” என சென்றுவிட்டான்.

செழியன் சென்று தன் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய நர்மதா பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

செழியனின் வாகனம் அன்னபுறத்தின் சாலையில் குழுங்கியபடி செல்ல எங்கே தான் அவன் மீது மோதிவிடுவோமோ என்று பயந்த நர்மதா பைக்கின் கம்பியை இறுக பற்றிக் கொண்டாள்.

ஏற்கனவே தன் மீது கோபத்தில் இருப்பவன் தான் தொட்டால் இன்னும் கோபம் அதிகரிக்கும் என பயந்து அமைதியாக அமர்ந்து வந்தாள்.

செழியனோ “பயத்துல கூட என்ன தொட உனக்கு புடிக்கலைல அம்மு. நான் உம்மனசுல ஒரு பிரண்ட் இடத்தை கூட பிடிக்கலையா. எப்படி பிரண்ட்டா என்ன பார்ப்பா உன்னை பொறுத்தவரைக்கும் உன் காதலை சேரவிடாம தடுத்த வில்லன் தான நான். உனக்கு எப்பவும் என்ன பிடிக்காதே. எனக்கு சொந்தமானத நான் யாருக்கும் விட்டுகொடுத்ததே இல்ல.  சுதாவோட யாரும் குளோஸ்ஸா பழகுனா கூட என்னால தாங்க முடியாது. ஆனால் உம்மனசுல வேற ஒருத்தன் இருக்கானு நினைக்கும் போதே செத்துரலாம்னு தோணுது அம்மு” எண்ணினான்.

இருவரது எண்ணங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சுதாகரனின் வீடு வந்துவிட நர்மதா இறங்கி கொண்டாள்.

அவள் இறங்கிய நொடி வேகமாக  பைக்கை விரைந்து செலுத்தி அவ்விடம்விட்டு சென்றுவிட்டான்.

நர்மதாவின் மனது மீண்டும் காயப்பட்டது.

தொடரும்…