முன்பே காணாதது ஏனடா(டி) – 28

வேகமாக பொழிந்த மழை தன் மீது விழாமல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்தாள் மைத்ரி.

தலை மேல் குடை இருக்கவும் குடை பிடித்த கையை பார்த்தாள். பிறகு தன் பின்புறம் திரும்பி பார்க்க குமரனை கண்டாள்.

ஏற்கனவே மழையின் காரணமாக நடுங்கி கொண்டிருந்தவள் அவனது அருகாமையில் மேலும் நடுங்கினாள்.

குமரன், “அது…..  இப்போதான் உடம்பு சரியாகிருக்கு. இப்போ மழையில நனைஞ்சால் மறுபடியும் உடம்பு சரி இல்லாம போயிடும் அதான். “

தனக்குள் படர்ந்த செம்மையை மறைத்த படி சரி என்பதாக தலை அசைத்தாள்.

குமரன், “பரவா இல்லங்க துணி நல்ல நனஞ்சுடுச்சு இதுக்கு மேல எடுத்தாலும் வேஸ்ட் வாங்க போலாம்” என்று அழைக்க பரிதபமாக அத்துணிகளை பார்த்துக் கொண்டே அவனுடன் சென்றாள்.

லேசாக நனைந்திருந்த மைத்ரியின் தலையை துவட்டினார் சுந்தரி.

பின் அனைவரும் உணவருந்த அமர்ந்தனர். குமரன் மட்டும் தந்தை இருந்த அறைக்குள் நுழையவும் மற்றவர்களும் உண்ணாமல் அவனுக்காக காத்திருக்க தொடங்கினர்.

தந்தையின் அருகில் வந்த குமரன் அவரின் தலையை ஆதுரமாக தடவ அந்த தீண்டலில் கண் விழித்தார் மாரி.

“என்னப்பா… “

“அப்பா உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்” என்றவன் தாரா இன்று தன்னிடம் உரைத்தவற்றை கூறினான்.

அதனை கேட்ட தந்தை அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. “உன்னோட திறமைக்கு கிடச்ச பரிசு குமரா. நீ ஒன்னும் இத இலவசமா வாங்க போறது இல்லையே கடனா தான வாங்குற திருப்பி கொடுத்துக்கலாம்.”

இதையே தான் தாராவும் சொன்னாள்.  ஆனால் அப்பொழுது தோன்றாத திருப்தி உணர்வு தந்தை வாய்மொழியில் கிடைத்தது.

அவரது கழுத்தில் முகம் புதைத்து இரண்டொரு நொடிகள் இருந்தவன் பின் அவரது நெற்றியில் முத்தம் ஒன்றை இட்டுவிட்டு வெளியே சென்றான்.

வட்டமாக அமர்ந்து இருந்த கூட்டத்தில் தானும் அமர்ந்தான் குமரன்.

சுந்தரி  பரிமாற மற்றவர்கள் உண்ண ஆயத்தமானார்.

குமரன் “எல்லாரும் கவனிங்க”

அனைவரும் அவனை கவனிக்க

“அது… இனிமே தாரா புரடக்ஷன் என்னோட பொறுப்பு”

கார்த்தி “இதுக்கு முன்னயும் உன்னோட பொறுப்பு தான அண்ணா. தாரா அக்கா வெறும் மேற்பார்வை மட்டும் தான பார்ப்பாங்க இதுல புதுசா என்ன இருக்கு.”

“அப்படி இல்ல இனிமே தாரா புரடக்ஷன்ஸ்க்கு லீகல் ஓனர் நான் தான்.”

அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்க்க “ஆமா…  தாரா கம்பெனிய எம்பேருல எழுதிவச்சுட்டு அவளோட புருசன் கூட மாமியார் வீட்டுக்கு போறதா சொன்னா.”

சுந்தரி, “எல்லாம் சரி கண்ணா ஆனா அது எப்படி சும்மா வாங்குறது”

“எனக்கு புரியுதுமா நாம சும்மா வாங்க போறது இல்ல. நமக்கு கிடைக்கிற லாபத்துல கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு உண்டான பணத்தை கொடுத்துரலாம்.”

“நல்லதுபா இரு நான் போய் சக்கரை எடுத்துட்டு வரேன்.  நல்ல சேதி சொல்லி இருக்க… ” என்று அவர் உள்ளே செல்லவும் குமரனுக்கு மற்றவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

குமரனும் புன்னகை முகமாக அதனை பெற்றுக் கொண்டான்.

தம்பி தங்கையை தொடர்ந்து வாழ்த்து தெரிவிப்பதற்காக மைத்ரி கை நீட்டினாள்.

ஒரு நிமிடம் தயங்கியவன் மறுநிமிடம் சிறு புன்னகையுடன் அவளுக்கு கை கொடுத்தான்.

கொடுக்கும் பொழுது அவன் எப்படி உணர்ந்தான் என்று எல்லாம் மைத்ரிக்கு விளங்கவில்லை.  ஆனால் அந்நிமிடம் அவள் இப்பூமியில் இல்லை என்பது மட்டும் உண்மை.

அவன் கை தீண்டிய பரவசத்தில் வானில் எகிறி குதித்து பறந்து கொண்டிருந்தாள்.

சுந்தரி வந்ததும் அவளுக்கு தெரியவில்லை. அவளது வாயில் சக்கரை திணித்ததும் உணரவில்லை.

வாயை பிளந்து குமரன் திசை பார்த்துக் கொண்டிருந்தவளின் வாயில் இருந்த சக்கரை பாகாக கரைந்து உதட்டோரம் வடிய அதை துடைத்துவிட்டாள் சுஜி.

சுஜி, “ரொம்ப வலியுது அண்ணி..”

ஈ… ஈ…  என அவளை பார்த்து சிரித்தவள் தட்டை பார்த்து உண்ண ஆரம்பித்தாள்.

……

இரவு சடங்கிற்காக தயார் ஆகி கொண்டிருந்தனர் நர்மதாவும் அருள்மொழியும்.

சுற்றி இருந்த பெண்களின் கேலி பேச்சில் மொழியின் கன்னம் வெட்கத்தில் சிவந்தது என்றால் நர்மதாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

ஆனால் அதை உணராமல் சுற்றி இருந்த பெண்கள் அதை வெட்க சிவப்பாக எடுத்துக் கொண்டு மேலும் சீண்டினர்.

இறுதியில் அவர்களது சீண்டல் முற்றுப் பெறும் விதமாக புதுபெண்களை அவர்களுக்கான அறைக்குள் விட்டுச் சென்றனர்.

இரு ஜோடிக்குமான சடங்கு பெரிய வீட்டிலே ஏற்பாடாகி இருந்தது.

மொழி அறைக்குள் நுழைந்து நாலாபுறமும் பார்வையை சுழற்றினாள். அவளது மணாளன் சுதர்சன் எங்கும் இல்லை.

அவள் முன்புறமே பார்த்தால் எப்படி இருப்பான்? அவன் தான் அவளது பின்புறம் கதவில் சாய்ந்து அவளின் அசைவுகளை ரசித்துக் கொண்டிருக்கிறானே.

இறுதியில் “டேய்… சுதா…” என்று கத்த கோபம் கொண்டவன் அவளை பின்னோடு தூக்க  கையில் இருந்த பால் சொம்பு உருண்டு கீழே விழுந்து பால் கொட்டி வீணாகியது.

தன்னை பின்புறமாக அணைத்து இருந்த கணவனை கடினப்பட்டு விலக்கியவள் அவனை முறைத்து பார்க்க

“ஏய் என்னடி முறைக்குற! நான் தான் இப்போ முறைக்கனும்…”

“எருமை எருமை அங்க பாரு பால் எல்லாம் கொட்டிருச்சு. வெளியே எல்லாரும் அதுல பாதி உனக்கு குடுத்திட்டு மீதிய நான் குடிக்கனும்னு சொல்லி அனுப்புனாங்க இப்படி கொட்டித் தொலச்சுட்டையே”

‘அடப்பாவிங்களா இன்னுமா இதே டைலாக்க சொல்லி அனுப்புறீங்க சே…’  என மனதின் உள் நொந்து கொண்டவன் முரண்டு பிடித்தவளை இழுத்து சென்று கட்டிலில் இருத்தினான்.

“என் அறிவு பொண்டாட்டி இந்த மாதிரி சடங்கு எல்லாம் எதுக்கு பண்ண சொல்றாங்க. புதுசா கல்யாணம் ஆனவங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கனும் வாழ்க்கை சரிபாதியா பகிர்ந்துக்கனும் அதுக்காக தானா.

நம்ம இரண்டு பேரும் இனிமேவா பேசி புரிஞ்சுக்க போறோம்.”

“அதான் எனக்கு தெரியுமே…”

“அப்புறம் ஏன்டி புரியாத மாதிரியே முகத்த வச்சு இருந்த”

“உன்ன வெறுப்பேத்த தான்”

“அடியேய் இன்னிக்கு என்ன நாளு இன்னிக்கு போய் இப்படி விளையாட்டு தனமா இருக்கியே”

“விளையாட்டு தனம் இல்ல சுதா எனக்கு தெரியாம உன்னோட ரகசியம் எதுவும் இல்ல.  அதுபோல உனக்கு தெரியாம எங்கிட்டையும் எந்த ரகசியமும் இல்ல. அந்த தைரியம் தான்”

“ம்…  ரகசியம் இல்லையா அது எல்லாம் நிறைய இருக்கு. இன்னிக்கே அது எல்லாம் உனக்கு புரிஞ்சுரும்” என அவன் இருபொருள் பட பேச அவனை முறைத்து பார்த்தாள் மொழி.

“ஏய்…  இரண்டு பேருக்கும் இருக்குற இந்த நிமிச  ஃபீலிங்ஸ சொன்னேன்.  தப்பா எடுத்துக்காத”

“நான் தப்பா தான் எடுத்துக்கிட்டேன்” என்றவள் அவனை சாய்த்து நெஞ்சில் படுத்துக் கொண்டாள்.

செழியன் நர்மதாவிற்காக காத்திருந்தான்.  கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் அழகு பதுமையென நர்மதா.

தொடரும்…