முன்பே காணாதது ஏனடா(டி) – 20

தோழியின் மூலம் மாரியின் உடல்நிலையை அறிந்து கொண்ட மைத்ரி தன்னுடைய சேவிங்ஸ் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுக்குமாறு பணிந்தாள்.

சுமியும் இந்த மூன்று நாட்களில் அவர்களுடன் இருந்து அவர்களை பற்றி அறிந்து கொண்டமையால் மைத்ரியின் முடிவுக்கு கட்டுபட்டு அந்த பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

பணம் கைக்கு வர மேலும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.  குமரனால் அவ்வளவு பணத்தை புரட்ட முடியவில்லை.  வாழ்க்கையில் முதன் முறையாக தான் ஏழ்மையாக பிறந்ததை எண்ணி கவலை அடைந்தான்.

சிறு வயதில் இருந்தே எதற்கும் பெரிதாக ஆசை கொள்ளாதவன் இன்று தந்தை உடல் நிலை குணமடைய பேராசை கொண்டான். தந்தை இப்பொழுதே எழுந்து நடமாட எண்ணினான். தனது கையால் ஆகாத தனத்தை எண்ணி வேதனை உற்றான். 

சிறுது சிறிதாக கடன் கேட்கலாம் என்றால் எவரும் கடன் தர முன் வரவில்லை. கடன் கொடுப்பதாக ஒப்பு கொண்டாலும் அதிக வட்டி கேட்டனர்.  அதற்கும் தயார் என கூறினால் ஏதாவது ஆஸ்தி அடமானமாக கொண்டு வாங்கி கொள் என்றனர். ஒன்று மட்டும் புரிந்தது தனக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லாமல் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று.

கலைப்புடன் மருத்துவமனை நுழைய தங்கை சுஜி வந்து அண்ணனை கட்டிக் கொண்டு தந்தை ஆப்ரேஷனுக்கு பணம் செலுத்தியாச்சு என்றாள்.

பல மடங்கு சந்தோஷம் அடைந்தான். அதேநேரம் பணம் எப்படி கிடைத்தது என சந்தேகம் எழுந்தது.

“பணம் ஏது சுஜி… “

“மைத்ரி அக்கா கொடுத்தாங்க… “

“மைத்.. ரி..”  என அவன் யோசிக்க அவள் விலக்கி சொல்லவும் மனதில் அவளுக்கு நன்றி உரைத்தான். அவனுக்கு அவளது பெயர் கூட சரியாக நினைவில் நிற்க மறுத்தது.

“நான் போய் அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு வரேன். “

“சரி அண்ணா நான் வீட்டுக்கு போய் அம்மாக்கு உதவி பண்றேன். சாப்பாடு எடுக்க போயிருக்காங்க… “

“சரி.. போ…. ” என்று அவளை அனுப்பி வைத்தவன் மைத்ரி இருந்த அறைக்குள் நுழைந்தான்.

நடை பயிற்சி முடிந்து தற்பொழுது தான் உறக்கத்திற்கு சென்றிருந்தாள் மைத்ரி. அவளின் அருகே அமர்ந்து கைகளை இருகையால் பற்றிக் கொண்டவன் அதன் மேல் தன் தலையை வைத்தான்.

கண்ணீர் சுரந்து அவளது கைகளை நனைத்தது.

“உங்க உதவிய என்னோட வாழ்நாள் முடியும் வரை நான் மறக்க மாட்டேங்க. உங்களுக்கு நான் எப்படி நன்றிகடன் செழுத்த போறேனு தெரியல” என்று கூறி அவளது முகம் பார்த்தான்.

சொல்ல போனால் இப்பொழுது தான் அவளது முகத்தை கூர்ந்து கவனித்தான். இந்த முகம் பரிட்சயமானது போல் தோன்றுகிறதே என எண்ணியது அவனது மூளை.

அதனை புறம் தள்ளியவன் நிமிர்ந்து பார்த்தான் கார்த்தி நின்று கொண்டிருந்தான். ஆரம்பத்தில் இருந்தே அங்கே தான் இருக்கிறான் அவன். குமரன் தான் கவனிக்கவில்லை.

கேள்வியாய் நோக்கிய தமயனிடம் அவளது தோழி வெளியே சென்று உள்ளதாகவும் தான் கவனித்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.

சரி என்பதாக தலை அசைத்தவன் தந்தையின் அறைக்கு செல்கிறேன் என்று கூறி எழுந்து நடந்தான் வாசல் வரை சென்றவன் திரும்பி மைத்ரியை பார்க்க நிர்மலமான முகத்துடன் உறங்கி கொண்டிருந்தாள். அவனது கண்களுக்கு அவள் ஒரு தேவதையாக தெரிந்தாள்.

தேவதை தானே அவன் வாழ்வில் அனைத்து சந்தோஷத்தையும் வழங்க இருக்கும் தேவதை.

உடன் பிறந்தவனின் செயல்களை கவனித்து கொண்டிருந்தான் கார்த்தி அவனால் தமையனை தவறாக எண்ண முடியவில்லை. தமயனின் குணம் அறிந்தவன் ஆயிற்றே.

……

தன் அறையில் உள்ள கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள் நர்மதா.

அதிகாலை தான் ஊர் திரும்பி இருந்தனர். ஏற்கனவே பள்ளி கல்லூரிக்கு விடுமுறை எடுத்து விட்டதால் கவிதாவும் துளசியும் படிப்பை கவனிக்க சென்று விட்டனர்.

தாயும் தந்தையும் அவளது கல்யாண வேலைக்கு உண்டான பணிகளை செய்ய துவங்கிவிட்டனர். ஆம் திருமணம் தான் அன்னபுறம் சென்று இருந்த நாள் அன்று அனைவரும் சேர்ந்து செழியனுக்கும் நர்மதாவிற்கும் திருமணம் பேசி முடித்தனர்.

அவளால் எதுவும் எதிர்த்து பேச முடியா சூழ்நிலை. குமரனின் நினைப்பு மனதை போட்டு வாட்டியது. காதல் விவகாரத்தை எடுத்துரைக்கலாம் என்றால் இன்னும் அந்த காதலுக்கு உரியவனிடமே அதனை தெரிவிக்கவில்லை.

அழுவதற்கு கூட அவளுக்கு வாய்ப்பு அமையவில்லை எந்நேரமும் ஆட்கள் உடன் இருந்தனர். மொழியும் மஞ்சும் அவளுக்கு நெருக்கமாக முயன்றனர். ஆனால் நர்மதா யாரிடமும் ஒட்டாமல் இருந்தாள்.

எந்த கேள்விகளுக்கும் சரியாக பதிலும் அளிக்கவில்லை. அதில் மற்ற இருவருக்கும் அவள் மேல் அதிருப்தி ஏற்பட்டது. அதே சமயம் மஞ்சுவும் மொழியும் நெருங்கிய தோழி ஆகிவிட்டனர்.

உண்மையை கூற வேண்டும் என்றால் எங்கே வாய் திறந்தால் அழுது விடுவோமோ என்ற பயம் நர்மதாவுக்கு.

அழுது கரைந்த நர்மதா குமரனை சந்திக்க செல்லலாம் என முடிவு எடுத்து கிளம்பி வெளியேறினாள்.

வாசலை தாண்ட இருந்தவள் தாய் தந்தையரிடம் உரைக்க அவர்களது அறைக்கு சென்றாள். அப்படியே சென்றிருக்கலாம் எங்கே…  அவர்களது வளர்ப்பு அவளை அப்படி செய்ய விடவில்லை.

மா.. பா…  என்று அறை வாயிலில் இருந்து அழைத்தாள்.

“உள்ள வாடா” என்று அழைத்தார் அப்பா ராஜராம்.

“பா…  ஆபிஸ் வரை போய் வந்துடுறேன்.”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். இன்னைக்கு பத்திரிக்கை அடிக்க குடுக்கலாம்னு இருக்கோம் டிசைன் பார்க்கனும் சீக்கிரம் போய் கிளம்பு” என்றார் அவர்.

“அப்பா…  போனதும் வந்துடுறேன்…. “

“ஏய்…  என்னடி எதுக்கு இப்போ எதிர்த்து பேசிட்டு இருக்க…  போ…. போய் கிளம்பு” என்றார் தாய் கண்மணி.

எதுவும் கூற முடியாமல் அறைக்கு வந்தவள் கதவை சாற்றி விட்டு கை பையை தூக்கி பெட்டில் எறிந்தாள்.

தரையில் எறியலாம் என்று தான் நினைத்தாள். தரையில் எறிந்த பின் உள்ளிருக்கும் மொபைல் உடைந்து விட்டால் அதற்கும் வேறு திட்டு வாங்க வேண்டும் எனபதால் அதனை கைவிட்டு விட்டாள்.

……

மாரிக்கு ஆப்ரேஷன் இன்னும் அரைமணி நேரத்தில் நடக்க இருக்கிறது. அனைவரும் அவரது அறையில் தான் இருந்தனர் மைத்ரியை தவிர.

கார்த்தி, “என்ன…ப்பா … ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… “

“என்னனு தெரியல கார்த்தி மனசு கிடந்து அடுச்சுக்குது….  பயமா இருக்கு…”

“என்னங்க நீங்க தைரியமா இருக்காம புள்ளைங்கள பாருங்க எவ்வளவு பயப்படுறாங்கனு…. ” என்றார் சுந்தரி

“குமரா…  இங்க வாப்பா…” என அருகில் அழைத்தார் மாரி.

அவன் அருகில் வரவும் பெட்டில் அமர்ந்து இருந்த சுந்தரி எழுந்து கொள்ள குமரன் அவ்விடத்தில் அமர்ந்தான்.

“குமரா…  அப்பா சொன்ன கேப்பியா… “

“என்ன…  ப்பா.. “

“மைத்ரிய கல்யாணம் பண்ணிக்கிறியா…”

“அப்பா….” என்று கத்தியவன் எழுந்து நின்று விட்டான்.

தொடரும்…