மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 30

தயா…, “பா..  பொம்ம.. பொம்ம.. “

“இருடா தங்கம்” என்றவன் பெட்டுக்கு கீழ் இருந்த புலி பொம்மையை கையில் எடுத்து மகனிடம் கொடுத்தான் யுக்தயன்.

புலி பொம்மையை பார்த்ததும் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டான்.

யுக்தயன் இரவு மகன் உறங்கும் வரை உடன் இருப்பவன் அவன் உறங்கியதும் சென்றுவிடுவான்.  பின் மீண்டும் காலை அவன் கண் விழிக்கும் முன் வந்துவிடுவான்.

இடையில் மதியம் அல்லது மாலை பொழுதில் நேரம் இருந்தால் வந்து பார்த்து விட்டு செல்வான்.  இல்லையேல் அவனை தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விடுவான்.

அப்படி கூட்டிச் சென்ற போது அவன் அறையில் மாட்டப்பட்டிருந்த புகைபடங்களில் ஒன்றில் இருந்த புலியை பார்த்து தனக்கு அது வேண்டும் என கேட்க இன்று புலி பொம்மையை வாங்கி வந்துவிட்டான்.

இருவரும் பெட்டின் மேல் ஏறி குதித்து புலி பொம்மையுடன் விளையாட அவர்களின் சத்தம் வெளியே வரை கேட்க நிலாவிற்கு கடும் கோபம் எழுந்தது.

பின்பு கோபம் வராமல் எப்படி இருக்கும். இருவரும் சேர்ந்து விளையாடுகிறேன் என்ற பெயரில் பெட்டை நாஸ்தி  செய்துவிடுவார்களே..

அவ்வளவு பெரிய பெட்டை அவள் தானே சுத்தம் செய்ய வேண்டும்.

நிலா, “தயா பெட்ல ஏறாதனு எத்தனை தடவ சொல்றது இரு வரேன்”. இரண்டு தயாவிற்கும் சேர்த்து தான் கூறினாள்.

“ப்பா..  வா ஓதலாம்…”  என்று தயா ஓட யுகியும் அவன் பின்னே ஓடிவிட்டான்.
…….
தயாளன் உறங்கியதும் யுகி அவன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.

வழக்கம் போல் அறையில் உள்ள அவன் மனையாளின் புகைபடத்திடம் பேசியவன்  உறக்கத்தின் காரணமாக படுக்கையில் சென்று விழுந்தான்.

மகன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் தோன்ற மனையாளை நினைத்து ஒரு சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். அந்த சிரிப்புக் கூட அவன் கண்களை எட்டவில்லை. அவன் கண்ணில் வலி இருந்து கொண்டே இருந்தது.

“லவ் யூ யாழு…” என்று கூறியவன் அப்படியே கண் அயர்ந்தான்.

இங்கு நிலாவோ மகன் கணவனிடம் மாட்டி விட்டதை நினைத்து வெட்க புன்னகை புரிந்து மகனை அணைத்துக் கொண்டே உறங்கி போனாள்.
………………..

நிமிர்ந்த நடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் மிடுக்காக ஆபிஸின் உள் நுழைந்த யுக்தயனை வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் ஜனனி.

அவன் தன்னை கடக்கும் போது தான் சுய நினைவுக்கு வந்தவள் அவசரமாக “குட் மார்னிங் சார்” என்றாள்.

சிறு சிரிப்புடனும் சின்ன தலை அசைப்போடும் “குட் மார்னிங்” என அவளுக்கு பதில் வணக்கம் செலுத்தியவன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான். யுக்தயன் அப்படி தான் தனது ஊழியர்களை அலச்சியப் படுத்த மாட்டான்.  அதே சமயம் வேலையை தவிர அநாவசியமாக பேச
மாட்டான்.

பின் அடுத்த அடுத்த வேலைகளை பார்க்க அவன் ரெகுலர் செயல்பாடுகள் படி அவனது அன்றைய நாள் தொடங்கியது.

யுக்தயனுக்கு திருமணம் ஆனதும் அவனுக்கு ஒரு மகன் இருப்பதும் அவன் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் யாருக்கும் இன்றளவும் தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ளும் நாளும் நெருங்கியது.
…………

தயாளன் வாசலில் அமர்ந்து தன் புலி பொம்மையுடன் விளையாண்டு கொண்டிருந்தான்.

வெளியே எங்கோ சென்றிருந்த சுரேஷ் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்தார்.

வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தவரோ தனது மொபைல் ஓசையில் நடையை நிறுத்தினார்.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவர் எதிர் இருந்தவரிடம் கண்டபடி கத்த ஆரம்பித்தார். ஏதோ பணி விடயம் போல. நமக்கு எதற்கு அது.

பேசி முடித்தவர் அதே டென்சனோடு உள்ளே நுழைய வாசலில் அமர்ந்திருந்த தயாளனை கவனியாது செருப்பை கலட்டும் வேகத்தில் அவன் புலி பொம்மையின் மீது செருப்புக் காலால் மிதித்து விட புலி பொம்மை அழுக்காகிவிட்டது. அதை பார்த்த தயாவோ உதட்டை பிதுக்கி அழுக ஆரம்பித்துவிட்டான்.

அவன் அழுகை சத்தத்தில் திரும்பி கீழே பார்த்தவரோ தயாளை நோக்கி சென்று “என்னாச்சு என் தங்கத்துக்கு எதுக்கு அழுவுறாங்க”

தயா, “போ.. போ.. எம் பொம்ம.. நீதா… போ..  பேசமாத்தே…  போ…” என்று பொம்மையை கைகாட்டி விம்மி விம்மி அழுதான். அவன் கைகாட்டிய திசை நோக்கிய சுரேஷ் தான் செய்த தவறை புரிந்து கொண்டார். “ஐயோ தெரியாம மிதிச்சுட்டேனே…” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்.

தயாவின் அழுகுறல் கேட்டு வெளியே ஓடி வந்தனர் நிலாவும் கனகாவும்.

அழுகும் மகனை ஓடி வந்து தூக்கிய நிலா
“என்னாச்சு தயா குட்டிக்கு”

தயா குட்டியோ நிலாவின் கழுத்தில் முகம் புதைத்து அழுதான்.

கனகாவும் சமாதானம் செய்ய ம்ஹீம்…  கேட்கவில்லை.

சுரேஷும்  பேரனை சமாதானம் செய்ய முற்பட அவனோ அவர் கைகளை தட்டி விட்டு “போ…  எம்… பொம்மை…”  என்று அழுதான்.

நிலா தந்தையை கேள்வியாய் பார்க்க அவர் நடந்ததை தெளிவாக கூற ஒரு சிரிப்புடன் மகனை  தூக்கிக் கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.

இன்னும் தயா குட்டி சினுங்கி கொண்டே இருக்க “என் செல்லம் இல்ல அழாதடா… தாத்தா தெரியாம பண்ணிட்டாரு.”

தாய் கூறியதில் நிமிர்ந்து தன் தாத்தாவை பார்த்த குட்டியோ “தெதியாம பண்ணியா…” என்று கேட்க

முகத்தை பாவமாக வைத்து இருந்தவரோ “ஆமாடா…  தாத்தா தெரியாம பண்ணீட்டேன் சாரிடா செல்லம்”

“சதி… தூத்து…”  என்று கூறிவிட்டு தாயின் மடியில் இருந்து தாத்தாவின் மடிக்கு தாவினான்.

கனகா, “என்னடா தங்கம் உடனே சமாதானம் ஆகிடிங்க” என்று கேட்க

“ஏன்டி…” என்பது போல் பார்த்தார் அவரை சுரேஷ். இந்த கொஞ்ச நேரத்திற்கே பேரனின் விலகல் அவர் மனதை காயப்படுத்தியது.  தற்போது தான் சற்று ஆசுவாசம் ஆனார்.  அதற்குள் தன் மனையாள் ஏற்றிவிட்டு மறுபடியும் பேரனின் பாராமுகத்தை காண முடியாது அல்லவா..

தயா, “அது….. தாத்தா தெதியாமா பண்ணுச்சா..  அப்தம்…  சாதி கேத்துச்சு..  அதா..  சாதி கேத்தா பேதனுமா…”

கனகா, “யாரு சொன்னா கண்ணா”

“அப்பா…”  என்று கூறி சிரித்தான். அவனுக்கு அதன் அர்த்தம் எல்லாம் புரியவில்லை.  ஆனால் சாரி கேட்டால் பேச வேண்டும் என்ற தந்தையின் வார்த்தை மனதில் பதிந்து போக அதை தற்போது செயல் படுத்தினான்.

பின் தாத்தாவின் மடியில் இருந்து இறங்கி ஓடினான். தயாவின் பதிலில் அமைதியாக இருந்த சுரேஷின் காதுக்கு கேட்கும் படியாக “ம்….  குழந்தைக்கு தெரிஞ்சது கூட இப்போலா..  பெரியவங்களுக்கு புரியிறது இல்ல…” என்று புலம்பி விட்டு சென்றார் கனகா.

அவர் கூறியதை ஒருமுறை தன்னிடமே கேட்டுக் கொண்டார். ‘உனக்கு புரியலையாடா…’ என்று. 

‘தயா கொஞ்ச நேரம் உங்கிட்ட பேசாததையே உன்னால தாங்க முடியல.  ஆனா உன்னோட வரட்டு பிடிவாதத்தால அங்க ஒருத்தன் மனைவியோட பாசத்தையும் தாயோட பாசத்தையும் இழந்துட்டு நிக்குறான்.  அவன் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பான்.’ என்று தன்னிடமே கேட்டுக் கொண்டார்.

ஆம் வரட்டு பிடிவாதம் தான். யுகி குழந்தையையும் நிலாவையும் பார்த்துக் கொள்வதை கண்ணார கண்டவரோ…  “நான் யாழ நிஜமாவே லவ் பண்றேன் மாமா…”  என்ற யுகியின் வார்த்தையே காதில் எதிரொலித்தது. 

சற்று நேரத்திற்கு தன் கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார்.  அன்று நடந்த பிரச்சனையில் முகம் மூடி அமர்ந்திருந்த யாழை கண்ட யுக்தயன் அவளுக்கு என்ன ஆனதோ என்று அறிய அவளை நோக்கி செல்ல இருந்தவன் தன்னை தடுக்கும் மாமனாரின் கையை விலக்க முற்பட எதிர்பாராத விதமாக அவன் கை அவரின் முகத்தில் அறைந்துவிட்டது.

அதை இப்பொழுது நினைத்து பார்த்தவரோ ‘தவறு செய்து விட்டோமோ’ என்று வருந்தினார்.  இவ்வாறாக அவர் யோசனையில் இருக்க “மா…..” என்ற பேரனின் குறலில் திரும்பி பார்த்தார்.

“மா..  கதுவி குடு” என்று தன் தாயிடம் புலி பொம்மையை நீட்டினான் தயாளன்.  அவளும் அதனை வாங்கிச் சென்று கழுவி காய வைத்தாள்.

சுரேஷ் அப்படியே யோசனையிலேயே அமர்ந்துவிட்டார்.

தொடரும்….