39 – மின்னல் பூவே

அத்தியாயம் – 39

“ச்சே… போன் கூடப் போக மாட்டேங்குது அத்தை…” என்று எரிச்சலுடன் சொன்னான் முகில்வண்ணன்.

“பதட்டப்படாதீங்க மாப்பிள்ளை. எவ்வளவு நேரம் ஆனாலும் உத்ரா கவனமா வந்துவிடுவாள்…” என்று மருமகனை அமைதிபடுத்த முயன்று கொண்டிருந்தார் அஜந்தா.

“மணி ஒன்பதரை ஆச்சு அத்தை. ஆறு மணிக்கு எல்லாம் கிளம்புவதாகப் போன் போட்டாள்னு சொன்னீங்க. அப்போ கிளம்பி இருந்தால் ஒரு மணி நேரத்திலேயே இங்கே வந்திருக்கணுமே அத்தை?”

“டிராபிக்கா இருக்கலாம் மாப்பிள்ளை. இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற. இன்னைக்கு டிராபிக் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியுமே?”

“அப்படியே இருந்தாலும் எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்திருக்க முடியுமே? அதுவும் டூவீலர்ல கிளம்புவதாகத்தானே சொன்னாள். டூவீலரில் இவ்வளவு நேரம் ஆகாது அத்தை…” என்றான்.

அவன் சொல்ல சொல்ல அவருக்கும் பதட்டம் வந்தது. ஆனால் தானும் பதறினால் அவனின் நிதானமும் தப்பும் என்று நினைத்தவர் அமைதியாக இருக்க முயன்றார்.

“நான் எதுக்கும் புவனாவிடம் விசாரித்துப் பார்க்கிறேன்…” என்றவன் உடனே புவனாவிற்கு அழைத்தான்.

“ஹலோ புவனா…”

“ஹாய் முகில், சொல்லுங்க…”

“புவனா வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?”

“இப்ப வீட்டில் தான் இருக்கேன். என்ன முகில்? என்ன விஷயம்?”

“உத்ரா எத்தனை மணிக்கு வீட்டுக்கு கிளம்பினாள்னு தெரியுமா?”

“முகில், என்னாச்சு? ஏன் அப்படிக் கேக்குறீங்க? வீட்டுக்கா? நீங்க பெங்களூரில் தானே இருக்கீங்க? ஆன்ட்டி இன்னும் அவள் வீட்டுக்கு வரலைன்னு சொன்னாங்களா என்ன? அவள் ஆறு, ஆறரைக்கு எல்லாம் கிளம்பிட்டாளே…” என்ற புவனாவிடம் பதட்டம் தெரிந்தது.

“நான் சென்னை வந்துட்டேன் புவனா. அவள் இன்னும் வீட்டுக்கு வரலை…” என்று முகில் சொன்னதும் அவளின் பதட்டம் அதிகரித்தது.

“என்ன முகில் சொல்றீங்க? அவள் இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கணுமே? ஒருவேளை கார் ட்ராபிக்கில் மாட்டியிருக்குமோ?” என்றாள்.

“காரா? என்ன கார் புவனா? அவள் ஸ்கூட்டியில் தானே கிளம்பினாள்?” என்று கேட்டான்.

“இல்ல முகில். அவள் ஸ்கூட்டி பஞ்சர்னு காலையில் ஆபீஸுக்கு ஆட்டோவில் தான் வந்தாள். ஈவ்னிங் நம்ம ஆபிஸ் கேப்பில் கார் புக் செய்து கிளம்பினாள். இன்னொரு ஸ்டாப்பும் வழியில் தான் அவங்க வீடுன்னு அவங்களும் அவள் கூடக் கிளம்பினாங்க…” என்று விவரம் தெரிவித்தாள்.

“யார் அந்த ஸ்டாப்?”

“வெங்கடேஷ் டீம்ல இருக்கும் சரிதா தான்…”

“அவங்க போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா புவனா?”

“இருக்கு முகில். சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க…” என்ற புவனா சரிதாவின் தொலைபேசி எண்ணை எடுத்துக் கொடுக்க, முகில் குறித்துக் கொண்டான்.

“உத்ரா போன்னுக்குக் காண்டாக்ட் செய்து பார்த்தீங்களா முகில்?”

“அவள் போன் நாட் ரீச்சபிள் புவனா. சரி, நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்…” என்று அவளின் அழைப்பைத் துண்டித்தவன், உடனே சரிதா எண்ணிற்கு அழைத்தான்.

ஆனால் சரிதாவின் அலைபேசியும் ஊமையாகியுள்ளது என்ற தகவல் மட்டுமே அவனுக்குக் கிடைக்க அவனின் பதட்டம் அதிகமாகியது.

இருவரின் எண்ணுமே ஒன்று போல் வேலை செய்யாமல் போனது அவனின் மனதை நெருடியது.

அஜந்தாவிடம் விவரம் சொன்னவன், உடனே அலுவலகத்திற்கு என இருக்கும் கேப் ஆபிஸிற்குத் தொடர்பு கொண்டான்.

அவர்களின் வண்டி எங்கெங்கே சென்றுள்ளது என்ற தகவல் அவர்களுக்குத் தெரியும் என்பதால் அவர்களிடம் தங்கள் ஏரியாவின் பெயர் சொல்லி விசாரித்தவன், அந்த வண்டியின் டிரைவர் யார்? இப்போது அந்த வண்டி எங்கே உள்ளது என்று விசாரித்தான்.

அவர்களும் எதற்கு? என்ன? என்ற கேள்விகளைக் கேட்டறிந்து அவனுக்குத் தகவல் தெரிவித்தனர்.

“எங்களுக்கும் ட்ரைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை சார். கொஞ்சம் டைம் கொடுங்க. விசாரித்துவிட்டுச் சொல்கிறோம்…” என்றனர்.

நடப்பது எதுவும் சரியில்லாதது போல முகிலுக்குத் தோன்றியது.

ஒரே வண்டியில் சென்ற மூன்று பேரின் அலைபேசி எண்ணும் எப்படி ஒன்று போலச் செயல்படாமல் போகும்? என்று தோன்றியது.

இது தற்செயலாக நடந்ததா? இல்லை சூழ்ச்சியா? இல்லை விபத்து எதுவுமா? என்று அவனின் மனம் கன்னாபின்னா என்று நாலாப்பக்கமும் எண்ணங்களைச் சிதறவிட்டது.

எண்ணங்கள் ஏற்படுத்திய நிதானமின்மை அவனைத் தளர செய்ய, தடுமாற்றத்துடன் சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான்.

அவனின் உள்ளத்துடன், உடலும் ஆட்டம் கண்டது போல ஆடியது.

அவனின் கைகள் எல்லாம் லேசாக நடுங்க ஆரம்பித்தன.

‘உத்ரா, உதிமா, உனக்கு ஒன்னுமில்லை தானே? ஏன் போனை எடுக்க மாட்டேங்கிற? போன் போடு. ஒரு வார்த்தை நான் நல்லா இருக்கேன்னு சொல்லு. போதும்…’ என்று உள்ளுக்குள் பதட்டத்துடன் மனைவியிடம் உரையாடினான்.

பதட்டம், பதட்டம் மட்டுமே அவனை அந்த நேரம் ஆட்கொண்டது.

“மாப்பிள்ளை… மாப்பிள்ளை… அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. பதறாம இருங்க. திரும்பப் போன் போட்டு பாருங்க. கண்டிப்பா பேசுவாள்…” என்று அவனின் தளர்வை கண்டு அஜந்தா அவனை நிதானத்திற்குக் கொண்டு வர முயன்றார்.

“அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது தானே அத்தை?” என்று குரலில் வலியும், கண்களில் கலக்கமுமாகக் கேட்டான் முகில்வண்ணன்.

“அவளுக்கு என்ன ஆகியிருக்கப் போகுது? ஒன்னும் ஆகியிருக்காது. நீங்க அவளுக்குப் போன் போடுங்க. இப்ப அவளே உங்ககிட்ட பேசுவாள் பாருங்க…” என்றார்.

அவன் நம்பிக்கையுடன் மீண்டும் அவளுக்கு அழைக்க முயன்ற நொடி, அவனின் அலைபேசியே அழைத்தது.

டிராவல்ஸ் கம்பெனியில் இருந்து அழைத்துக் கொண்டிருக்க, விரைந்து அழைப்பை ஏற்றுப் பேசினான்.

“ஹலோ, வண்டி பற்றித் தகவல் கிடைச்சுதுங்களா?” என்று அவன் வேகமாகக் கேட்க,

“தரமணி ஏரியாவில் வண்டியோட காண்டாக்ட் கட் ஆகியிருக்கு சார். ஆக்ஸிடெண்ட்டாக இருக்கலாம்னு சந்தேகப்படுறோம். எங்க ஆளுங்க மூலமா ட்ரேஸ் பண்ண ஏற்பாடு செய்திருக்கோம். இன்னும் விசாரித்து விட்டு மேலும் உங்களுக்கு அப்டேட் கொடுக்கிறோம்…” என்று அவர்கள் சொல்ல,

ஆக்ஸிடெண்ட் என்ற அவர்களின் வார்த்தையில் அவனின் சப்தநாடியும் ஆடிப் போனது.

அவனின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

‘இல்லை, இருக்காது. இருக்காது’ என்று கேட்ட தகவலை மனம் நம்ப மறுத்தது.

இடிந்து போய் முகம் வெளுக்க இருந்தவனைப் பார்த்துப் பதறிப் போனார் அஜந்தா.

“என்னாச்சு மாப்பிள்ளை? என்ன சொன்னாங்க?” என்று கேட்டவருக்குப் பதில் கூடச் சொல்ல முடியாமல் உணர்வற்று அவரைப் பார்த்தான் முகில்வண்ணன்.

“மாப்பிள்ளை…” என்று அவர் சப்தமாக அழைக்க,

“ஆக்ஸி… ஆக்ஸிடெண்டா இருக்கும்னு சொல்றாங்க அத்தை…” என்றான்.

அதில் அஜந்தாவும் ஆடிப்போனார்.

சில நொடிகள் இடிந்து போய் இருவரும் பேச சக்தியற்று அப்படியே அமர்ந்திருந்தனர்.

பின் படபடவென்று எழுந்த முகில் “எங்கயாவது என் உத்ரா பத்திரமா இருப்பாள்னு என் மனசு சொல்லுது அத்தை. நான் போய் அந்த ஏரியாவில் ரோடு ரோடாகக் கூடத் தேடி பத்திரமா கூப்பிட்டு வர்றேன்…” என்றவன் அவரின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் கிளம்பி விட்டான்.

அவனுக்குச் சுற்ற வண்டி தேவையாக இருந்தது.

அஜந்தாவும் ஸ்கூட்டியில் தான் வேலைக்குச் செல்வார் என்பதால் அவரின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

‘என் உத்ரா எனக்கு நல்லபடியா கிடைச்சுடுவா. அவளுக்கு ஒன்னும் ஆகாது. அவள் எனக்கு வேணும். உத்ராவுக்கு ஒன்னும் ஆகாது…’ என்று உள்ளுக்குள் உருப்போட்டுக் கொண்டே வண்டியை அதிவேகமாகச் செலுத்தினான்.

அவர்கள் ஏரியாவிற்கு வரும் பாதையில் வண்டியை விட்டான்.

அந்தச் சாலை முழுவதும் ட்ராபிக் அதிகமாக இருந்தது.

அதில் ஏதாவது ஒரு வண்டியில் தன் உத்ரா இருப்பாளோ என்ற எண்ணத்துடன் அவனைக் கடந்து சென்ற ஒவ்வொரு வாகனத்தையும் கண்கொத்தி பாம்பாக நோட்டம் விட்டுக் கொண்டே சென்றான்.

மெயின் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே ஒரு பாதை பிரிந்து உள்ளே சென்றது.

அதிலும் அவர்கள் ஏரியாவிற்கு வர பாதை உண்டு என்பது ஞாபகம் வர, ‘ட்ராபிக்கினால் ஏன் ட்ரைவர் அந்தப் பாதையில் வந்திருக்கக் கூடாது’ என்று நினைத்தவன் உடனே அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினான்.

உள்ளே செல்ல செல்ல ஒரு சாலையில் விளக்குகளற்று கும்மிருட்டு ஆட்கொண்டிருந்தது.

வண்டிகளின் போக்குவரத்தும் அத்திப்பூத்தார் போல இருந்தது.

அதிக ட்ராபிக் ஆனால் அந்தப் பாதையில் முன்பு அவனுக்கு வந்து பழக்கம் என்பதால் அந்தச் சாலையில் வண்டியை விட்டான்.

சென்று கொண்டிருக்கும் போது சாலையோர மரத்தடியில் ஒரு கேப் விளக்குகள் அனைத்தும் அணைந்து அநாதையாக நின்று கொண்டிருந்ததைக் கண்டவன் இதயம் எகிறிக் குதித்தது.

வேகமாக அந்தக் காரின் அருகில் வண்டியை நிறுத்தியவன் தன் கைபேசியின் விளக்கு உதவியுடன் காரை ஆராய்ந்தான்.

அவர்கள் அலுவலத்திற்குப் பயன்படும் கேப் தான் என்று சற்று நேரத்தில் உறுதியாகியது.

வண்டியை வேக வேகமாகச் சுற்றி வந்து பார்த்தான்.

“உத்ரா… உதிமா… எங்கே இருக்கடா?” என்று பதட்டத்துடன் ஜன்னல் வழியாகத் தேடினான்.

காருக்குள் யாரும் இருப்பது போல் தெரியவில்லை.

“எங்கேமா போன?” என்று கதறலாகத் தேடியவன், அப்போது தான் அந்த மரத்திற்குப் பின் பக்கம் ஒரு சிறிய பாதை போவதைக் கண்டான்.

வேகமாக அந்தப் பாதையில் ஓடினான்.

உள்ளே புதர் போல் ஓர் இடம் இருந்தது.

ஒரு புதரின் மறைவில் “ஐயோ! அம்மா!” என்ற அலறல் கேட்க, அங்கே ஓடினான்.

அங்கே அவனின் மனைவி உத்ரா ஒருவனை உயிர்நாடியிலேயே ஓங்கி மிதித்துக் கொண்டிருந்தாள்.

அவன் ‘ஐயோ!’ என்று அலற, அப்போது அவளுக்குப் பின்னால் இன்னும் ஒருவன் உத்ராவை தாக்க வந்தான்.

அவனைக் கண்ட முகில் “உத்ரா… என்று கத்திக் கொண்டே சென்று அவனைத் தாக்கினான்.

“முகில்…?” என்று ஆச்சரியமாக அழைத்த உத்ரா, “நீங்க எப்படி இங்கே?” என்று கேட்டுக் கொண்டே தன் பிடியில் இருந்தவனின் கையைப் பின்னால் மடக்கி தன் துப்பட்டாவால் இறுக கட்டினாள்.

அதற்குள் உத்ராவை அடிக்க வந்தவனை நெய்யப் புடைத்திருந்தான் முகில்வண்ணன்.

“அவன் கையையும் கட்டுங்க முகில்…” என்ற உத்ரா, துப்பட்டாவின் இன்னொரு முனையை அவனிடம் நீட்டினாள்.

முகிலும் கட்டி முடிக்க, “சரிதா…” என்று அழைத்துக் கொண்டே இன்னொரு புதரின் பின்னால் ஓடிப் பார்த்தாள்.

சரிதா தலையில் ரத்தம் வழிய வலியில் முனங்கிய படி அமர்ந்திருந்தாள். அவளின் தலையில் சரிதாவின் துப்பட்டாவை வைத்து கட்டுப் போட்டு அவளைக் கை தாங்கலாக அழைத்து வந்தாள்.

அவளை அமர வைத்து விட்டு “உங்க போன் தாங்க முகில்…” என்றாள்.

என்ன எதற்கு என்று கேட்காமல் உடனே எடுத்துக் கொடுத்தான்.

“ஹலோ, போலீஸ் ஸ்டேஷன்?” என்ற உத்ரா சில விவரங்களைச் சொல்ல, முகிலுக்கும் என்ன நடந்தது என்று ஓரளவு விவரம் புரிந்தது.

காவலர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு, “ஆம்புலன்ஸுக்கும் போலீஸே தகவல் சொல்வதாகச் சொல்லிட்டாங்க சரிதா. இப்ப ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என்று சரிதாவிடம் ஆறுதலாகச் சொன்னவள்,

“நீங்க எப்படி முகில் இங்கே?” என்று கணவனிடம் விசாரித்தாள்.

“நாம அப்புறம் பேசுவோம் உத்ரா…” என்று முடித்துக் கொண்டான் முகில்வண்ணன்.

சற்று நேரத்தில் அங்கே காவலர்கள் வர, பின்னால் ஆம்புலன்ஸும் வந்தது.

சரிதாவை அதில் ஏற்றி அனுப்பினர்.

உத்ரா பிடித்து வைத்திருந்த இருவரையும், கைது செய்தனர்.

“நீங்க ஸ்டேஷன் வந்து ஒரு கம்ளைன்ட் எழுதி கொடுத்திடுங்க மேடம்…” என்றனர்.

“நான் என் ஹஸ்பென்ட் கூடப் பின்னால் வர்றேன் சார்…” என்று உத்ரா சொல்ல அவர்கள் கிளம்பினார்கள்.

“போகலாமா முகில்? நல்லவேளை நீங்க நல்ல நேரத்தில் வந்தீங்க. நாளைக்குத் தானே நீங்க வருவதாகச் சொன்னீங்க முகில். இன்னைக்கே எப்படி?” என்று ஆச்சரியமாக அவனிடம் கேட்டபடி அவனுடன் நடந்தாள்.

“உனக்குச் சர்ப்ரைஸ் கொடுக்க இன்னைக்கே வந்தேன்…” என்று சொன்னவன் குரல் இறுகியிருந்தது.

“ஓ!” என்றவளுக்கு அவனின் இறுக்கம் புரிந்தது.

கேள்வியுடன் அவன் முகம் பார்க்க முயன்றாள். கைபேசியின் ஒளியில் அவனின் முகமாற்றம் ஒன்றும் தெரியவில்லை.

தான் சண்டை போட்டாலே இவனுக்குப் பிடிக்காதே. அதனால் தான் கோபமோ என்று நினைத்தாள்.

தான் காரணம் சொன்னால் புரிந்து கொள்வான் என்று நினைத்தவள் வண்டியை அவன் காவல்நிலையம் நோக்கி செலுத்த ஆரம்பித்ததும் விவரம் சொல்ல ஆரம்பித்தாள்.

“என்னோட ஸ்கூட்டி இன்னைக்குப் பஞ்சர்னு ஆட்டோவில் தான் ஆபிஸ் போனேன் முகில். ஈவ்னிங் கிளம்பும் முன்னாடி அம்மாக்கு போன் போட்டு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.

சரிதாவும் நானும் உங்க கூட வர்றேன்னு சொல்லவும், நாங்க இரண்டு பேரும் கேப்ல வந்தோம். முதலில் ட்ரைவர் மட்டும் தான் வந்தான்.

மெயின் ரோட்டில் ரொம்ப டிராபிக்கா இருக்கவும், இந்த ரோட்டில் டிராபிக் இருக்காது மேடம். அதனால் இந்த ரோட்டில் போறேன்னு சொல்லிட்டு தான் இந்த ரோட்டில் வண்டியை விட்டான்.

நானும் சில முறை இந்த ரோட்டில் வந்திருக்கேன். அதனால் எனக்கு அது ஒன்னும் வித்தியாசமா தெரியலை.

ஆனா ரோட்டில் இருட்டு ஆரம்பிக்கவும், வழியில் ஒருத்தன் கையைக் காட்டி நிறுத்தினான்.

வண்டியை நிறுத்தாம போங்கன்னு நான் சொன்னதைக் காதிலேயே வாங்காமல் ட்ரைவர் நிறுத்திட்டான்.

வண்டியில் ஏறியவன் அடுத்த நிமிஷம் எங்க இரண்டு பேரையும் வண்டியில் முன்னால் மறைத்து வைத்திருந்த கட்டையை வச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டான்.

அதில் சரிதா தலையில் அடிப்பட்டதும் அடுத்து என்னைத் தாக்க வந்தான். நான் சுதாரித்து விலகிட்டேன். ஆனா அவன் விடாமல் தாக்கியதில் எனக்குத் தோளில் பலமா அடிப்பட்டுருச்சு…” என்று உத்ரா சொல்ல, முகில் வண்டியை சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

அவனின் மனம் புரிந்தவள் மென்மையாகச் சிரித்து, “இப்ப வலி கூட இல்லை முகில். வண்டியை எடுங்க…” என்றாள்.

அவன் மீண்டும் வண்டியை எடுக்க, “அடி பலமா விழவும் அந்த நேரம் தடுமாறிட்டேன். அதைப் பயன்படுத்தி இரண்டு பேரும் சேர்ந்து என்னையும், சரிதாவையும் அந்தப் புதர்க்குள்ள இழுத்துட்டுப் போயிட்டானுங்க.

எங்க இரண்டு பேர் போனையும் வேற கல்லில் தூக்கிப் போட்டு உடைச்சுட்டானுங்க.

அதில் நான் திமிரவும் என்னைத் திரும்பத் தலையில் தாக்க வந்தாங்க. ஆனா அதுக்குள்ள நான் சுதாரிச்சு என் கராத்தே அடியைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

அவனுங்க இரண்டு பேர், நான் ஒருத்தி. இருட்டு வேற. கொஞ்சம் கஷ்டப்பட்டு இரண்டு பேரையும் சமாளிச்சுட்டு இருந்தேன். அந்த நேரம் சரியா நீங்களும் வந்துட்டீங்க…” என்றாள் உத்ரா.

அவள் சொன்னதை எல்லாம் கேட்ட பிறகும் முகிலின் முக இறுக்கம் தளரவே இல்லை.

காவல்நிலையமும் வர, உள்ளே சென்று புகார் எழுதிக் கொடுத்து விட்டு வீடு திரும்பினர்.

வீடு வந்து அஜந்தாவிடம் விவரம் சொல்லி, அவரும் கேட்டு பதறி அவரைத் தேற்றி என்று நேரம் சென்றது. புவனாவும் அந்த நேரம் அழைக்க, உத்ரா பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவித்தனர்.

முகலின் பெற்றோரிடம் காலையில் விவரம் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டனர்.

பின் இரவு உணவை முடித்துவிட்டு அஜந்தா படுக்கச் சென்றதும் உத்ராவின் அறைக்குள் இருவரும் வந்தனர்.

இவ்வளவு நேரமும் முகிலின் முகம் இறுகித்தான் இருந்தது.

தான் அவ்வளவு விளக்கம் சொல்லியும் இன்னும் தான் சண்டை போட்டதற்காக விறைத்துக் கொண்டிருக்கிறானா என்ன?

அவனுங்களை அடிக்காமல் நான் கை கட்டி வேடிக்கை பார்த்திருக்க வேண்டும் என்று நினைத்தானா என்ன? என்று தோன்ற உத்ராவின் முகமும் இறுகிப் போனது.

அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டவள், முகிலின் புறம் நிதானமாகத் திரும்பினாள்.

“என் கூட வாழ ஆரம்பித்த பிறகும் என்னை நீங்க இன்னும் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளவில்லையா முகில்?” என்று கேட்டவளை அடிக்கப் போவது போல் வேகமாக அவளின் அருகில் வந்தான் முகில்வண்ணன்.