38 – மின்னல் பூவே

அத்தியாயம் – 38

சமையலறையில் காய்களை நறுக்கி முடித்துவிட்டுச் சமைக்க ஆரம்பித்த மனைவியைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் முகில்வண்ணன்.

அவனின் கைகள் அவளின் இடையே தழுவ, முகமோ அவளின் பின்னங்கழுத்தில் குறுகுறுப்பு மூடியது.

“ம்ம்… வேலை இருக்கு முகில்…” என்று அவனின் பிடியில் நெளிந்தாள் உத்ரா.

“நீ அந்த வேலையைப் பார். நான் இந்த வேலையைப் பார்க்கிறேன்…” என்றவன் அவளின் இடையை இறுக்கிப் பிடிக்க, அவனின் கையை மேலும் நகர விடாமல் பிடித்தவள், அவனின் புறம் திரும்பினாள்.

“நேரமாகுது முகில். அண்ணி வரும் முன்னாடி சமையலை முடிச்சால் தான் அவங்க வந்ததும் சாப்பிட சொல்ல சரியா இருக்கும். போங்க, போய்க் குளிச்சுட்டு வாங்க…” அவள் திரும்பவும் இன்னும் வசதியாக அவளை அணைத்துக் கொண்ட கணவனைத் தன்னிடமிருந்து பிரித்து விலக்க முயன்றாள்.

“அக்கா வர இன்னும் நேரம் இருக்கு உதிமா…” என்றவன் அவளை விட்டு நகர மாட்டேன் என்பது போல் இன்னும் ஒட்டிக்கொண்டான்.

அவனின் சில்மிஷமும், அவளின் மிஞ்சலுமாக நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

முகில்வண்ணனிற்கும், உத்ராவிற்கும் வாழ்க்கை வண்ணமயமாகச் சென்று கொண்டிருந்தது.

அவர்களுக்குள் இருந்த பிணக்கு எல்லாம் ஏதோ முன் ஜென்மத்தில் நடந்தது போல இருக்க, இப்போது அவர்களுக்குள் இருந்தது காதலும், அன்னியோன்யமும் மட்டுமே!

அவளைத்தான் ஒரு காலத்தில் வெறுத்தான் என்பதையே மறக்க வைப்பது போல இப்போது தன் காதலை மட்டுமே முழுக்க முழுக்க மனைவியின் மீது காட்டினான்.

உத்ரா திருப்தியும், நிம்மதியும், காதலுமாகக் கணவனின் காதலில் கட்டுண்டு போனாள்.

அன்று ஒரு நாள் அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டியவள் தான். அவன் மாற ஆரம்பித்த பிறகு மறந்தும் கூட அதைப்பற்றிப் பேசவில்லை அவள்.

முடிந்து போனதையே சொல்லி சொல்லிக் குத்திக் காட்டும் குணம் இல்லாதவள் என்பதால் இருவருக்கும் இடையே அனைத்தும் சுமூகமாகப் போனது.

அவளின் அந்தக் குணநலனில் கவரப்பட்டவன் இன்னும் இன்னும் மனைவியின் மீது அன்பை பொழிந்தான்.

இன்று அவர்களின் வீட்டிற்கு இலக்கியா குடும்பத்துடன் வருவதாக இருக்க, அவர்களுக்கான காலை உணவை தயாரிக்க ஆரம்பித்த உத்ராவை இப்போது சமைக்க விடாமல் சில்மிஷம் செய்து கொண்டிருந்தான் முகில்வண்ணன்.

கணவனின் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்க விருப்பம் இருந்தாலும், காலை உணவிற்கே இலக்கியா குடும்பத்தினரை வரச் சொல்லியிருந்ததால் அவளின் எண்ணம் எல்லாம் வேலையை முடிப்பதில் தான் இருந்தது.

“மாமாவும், அத்தையும் கூட வர்றாங்க முகில். மாமாக்கு நேரத்துக்குச் சாப்பாடு கொடுக்கணும். இப்போ நல்லப்பிள்ளையா போய் ரெடியாகிட்டு வாங்க. அதுக்குள்ள நான் சமைச்சு முடிச்சுடுவேன்…” என்றாள்.

“ம்ம்ம், போறேன். ஆனா, அதுக்கு முன்னாடி கிஸ் பண்ணு…” என்று அவன் தன் அதரங்களைச் சுட்டிக்காட்டிச் சொல்ல, அவளோ மெல்ல சிரித்துக் கொண்டே, அவனின் கன்னத்தில் கைவைத்து முகத்தைத் திருப்பி, இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.

“இப்போ போங்க…” என்று அவனின் முதுகில் கைவைத்து தள்ள,

“நான் கேட்டது இங்கே…” என்று ஊடலுடன் முறைத்துக் கொண்டே உதடுகளைக் குவித்துக் காட்டினான்.

“ம்கூம்…” என்று அவனை விட முறைத்தவள், “அங்கே கொடுத்தால் உங்களைக் கண்ட்ரோல் பண்ண முடியாது. இடத்தைக் காலி பண்ணுங்க…” என்று விரட்டினாள்.

அதற்கு மேல் என்ன கேட்டாலும் அவளிடம் கிடைக்காது என்று அறிந்தவன், “என்னை ரொம்ப மிரட்டுற நீ…” என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

சிரித்துக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள் உத்ரா.

குளித்துத் தயாராகி வந்த முகில் “இப்போ நீ போய் ரெடியாகு உதிமா. மீதி வேலையை நான் பார்க்கிறேன்…” என்றான்.

தினமும் அவளுடன் சமையல் வேலையில் உதவி செய்து அவனும் இப்போது ஓரளவு சமைக்கக் கற்றுக் கொண்டிருந்தான்.

“வேலை முடிந்தது முகில். சாம்பார் மட்டும் இன்னும் பைவ் மினிட்ஸ் இருக்கணும். அப்புறம் அதைப் பாத்திரத்தில் மாத்தி டைனிங் டேபிளில் வச்சுடுங்க. நான் போய் ரெடியாகிட்டு வர்றேன்…” என்று அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றாள்.

அவள் தயாராகி வந்த போது முகில் அனைத்தையும் டைனிங் டேபிளில் அழகாக அடுக்கி வைத்து தட்டுகளையும் தயாராக எடுத்து துடைத்து வைத்திருந்தான்.

அவனைப் பூரிப்புடன் பார்த்த உத்ரா, “சமத்து ஆகிட்டீங்க முகில்…” என்று பாராட்டுதலாகக் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“ஹேய்… உதிமா, பாராட்டு எல்லாம் இங்கே தான் கொடுக்கணும்…” என்றவன் அவளைத் தன் கைவளைவிற்குள் இழுத்து அவளின் இதழை நோக்கி குனிந்தான்.

அந்த நேரம் சரியாக வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

“ச்சே…” என்று அவன் சலித்துக் கொள்ள,

“ஹாஹா… போய்க் கதவைத் திறங்க முகில்…” என்று சிரித்தபடி அவனை விட்டு விலகி நின்றாள்.

“நீயே போ…” என்று அவன் விறைத்துக் கொள்ள, அவனின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் அவளுக்கு இன்னும் தான் சிரிப்பு வந்தது.

சிரித்தபடி கதவைத் திறந்த உத்ரா, அடுத்த நொடி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.

மலர்ந்த முகத்துடன் மகளைக் கண்ட பூரிப்புடன் வாசலில் நின்றிருந்தார் வீரபத்ரன்.

“அப்பா….” என்று ஆச்சரியமாகக் கூவியவள், “வாங்கப்பா… வாங்க… முகில் அப்பா வந்திருக்கார் முகில்…” என்று உற்சாகத்தில் கூவினாள் உத்ரா.

“வர்றேன்… வர்றேன்…” என்றபடியே உள்ளே வந்த தந்தையின் கையை இறுக பற்றிக் கொண்டவள், “இன்னைக்கு வரப் போறதாகச் சொல்லவே இல்லையே பா…” என்று விசாரித்தாள்.

“எங்க உத்ரா பொண்ணுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்கத்தான்…” என்றார்.

“வாங்க மாமா…” என்று முகிலும் மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.

உத்ரா தந்தையின் கையை விடாமல் பேசிக் கொண்டே இருக்க, “முதலில் உன் மாமியார் வீட்டுக்காரங்களைக் கவனி உத்ராமா. அப்புறமா அப்பாக்கிட்ட செல்லம் கொஞ்சலாம்…” என்று பின்னால் மகளைக் கடிந்த படியே வந்தார் அஜந்தா.

“ஆமா, எங்கே அவங்களைக் காணோம்? அவங்க தானே வருவோம்னு சொல்லியிருந்தாங்க. நீங்க கூட இன்னைக்குக் கூப்பிட்டதுக்கு வரலைன்னு சொன்னீங்களே மா?” என்று கேட்டாள்.

“அப்பாவும், நானும் தான் பிளான் போட்டுச் சர்ப்பிரைஸ் கொடுக்க இருந்தோமே. அதான் அப்படிச் சொன்னேன். நீ அப்பா கூடப் பேசட்டும்னு இன்னும் பார்க்கிங்ல உன் மாமியார், மாமனார் எல்லாம் வெயிட் பண்றாங்க…” என்றார்.

“முகில் போய்க் கூட்டிட்டு வாங்க…” என்று உத்ரா சொல்ல,

“நாங்களே வந்துட்டோம் உத்ரா…” என்றபடி வந்தாள் இலக்கியா. அவளின் பின் கார்த்திக் மகளுடன் வர, பின்னால் வளர்மதியும், ரகுநாதனும் நின்றிருந்தனர்.

“வாங்க… வாங்க…” என்று அனைவரையும் வரவேற்று உபசரித்தாள் உத்ரா.

இலக்கியாவின் மகள் வீட்டிற்குள் நுழைந்ததும் உத்ராவிடம் தாவியவள் அதன் பின் அவளிடமே ஒட்டிக் கொண்டு திரிந்தாள்.

அனைவரும் நலம் விசாரித்து விட்டு காலை உணவை உண்ண ஆரம்பித்தனர்.

அப்போதும் பரிமாறிக் கொண்டிருந்த உத்ராவின் இடுப்பில் அபிரூபா தொத்திக் கொண்டிருந்தாள்.

“தன்னோட மாமா வொய்ப் யாருன்னு என் பொண்ணுக்கு உன்னை முதல் முதலில் பார்த்த போதே தெரிந்து போயிடுச்சு போல உத்ரா.

அதான் உன்கிட்ட அப்பவே அவ்வளவு அட்டாச்சா இருந்திருக்காள். எங்களுக்குத்தான் அது தெரிய லேட் ஆகிடுச்சு…” என்று இலக்கியா சொல்ல, அவர்கள் வீட்டு பெரியவர்களும் அதை ஆமோதித்தனர்.

‘எனக்கு அது புரிய அதை விட லேட் ஆகிடுச்சு…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட முகில் மனைவியைக் காதல் பார்வை பார்த்தான்.

அவனின் எண்ணம் புரிந்தது போல் கணவனைப் பார்த்து சிரித்தாள் உத்ரா.

முகில், உத்ராவின் அன்னியோன்யத்தை உணர்ந்த மற்றவர்களுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

தம்பிக்குத் தான் சரியான துணையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று திருப்தி அடைந்தாள் இலக்கியா.

பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதாகட்டும், அனைவரிடம் அன்பு காட்டுவதாகட்டும் உத்ரா எதிலும் குறை வைக்கவில்லை.

அதிலும் வீரபத்ரன், அஜந்தா இப்போது நிறைவாக உணர்ந்தனர்.

மகள் விரும்பியவனையே கரம் பிடித்தது ஒரு திருப்தி என்றால், மகளை வேண்டாம் என்று மறுத்த மருமகன் இப்போது, “உதிமா… உதிமா…” என்று நிமிடத்திற்கு ஒரு முறை அழைத்துக் கண்களால் கூட அவளை விடாமல் தொடர்ந்து வருவது அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்தது.

மகளின் முகத்தில் கண்ட அவளின் நிறைவான வாழ்க்கை வெளிப்படுத்திய உணர்வுகள், இனி அவளைப் பற்றித் தாங்கள் கவலையே படத் தேவையில்லை என்று எடுத்துரைப்பதாக இருந்தது.

“மாமாவும், அத்தையும் எப்படி அன்னைக்கு உடனே நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னாங்க உதிமா?” என்று தாங்கள் இணைந்து வாழ ஆரம்பித்த பிறகு ஒரு நாள் விசாரித்தான் முகில்வண்ணன்.

“மகளுக்குப் பிடிச்சவன் மருமகனா வரும் போது எப்படி வேண்டாம்னு சொல்லுவாங்க முகில்?” என்று கேட்டாள்.

“என்ன சொல்ற உதிமா? அப்போ அவங்களுக்கு நீ என்னைக் காதலிச்சது தெரியுமா?” என்று வியப்பாகக் கேட்டான்.

“அவங்ககிட்ட என் மனதில் நீங்க இருக்கீங்கன்னு சொன்ன பிறகு தான் உங்ககிட்ட நான் என் காதலை சொன்னேன் முகில். அதுக்குப் பிறகு நடந்தது எல்லாமே அவங்களுக்கும் தெரியும்…” என்று உத்ரா சொல்ல,

“ஓ!” என்று முகில் அசந்து அமர்ந்து விட்டான்.

“என் ஆசையை நிறைவேற்ற அப்பா உங்கள் வீட்டில் வந்து பேசி நிச்சயத்த திருமணமா கூடப் பேசி முடிக்கலாம்னு நினைச்சார். ஆனா உங்களுக்குப் பிடிக்காம எதுவும் நடக்க வேண்டாம்னு நான் தான் தடுத்துட்டேன்.

நம்ம கல்யாணத்தனைக்கு மாமா பொண்ணு கேட்கவும் அப்பாவுக்கு அவ்வளவு சந்தோசம். எனக்கு உங்களைப் பிடிக்கும் என்ற ஒரே காரணத்துக்காக உடனே கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னாங்க…” என்றாள் உத்ரா.

கேட்ட முகிலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

‘என் மகளை முன்பு வேண்டாம் என்று சொன்னவன் தானே நீ’ என்று அவர்கள் எந்த ஆதங்கத்தையும் திருமணத்திற்குப் பிறகு அவனிடம் காட்டிக் கொள்ளவே இல்லை.

மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று விழுந்து விழுந்து கவனித்தனர்.

ஏற்கனவே மாமியார், மாமனார் மீது மரியாதையுடன் இருப்பவன், இப்போது இன்னும் மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தான்.

அன்றைய நாள் முழுவதும் இருவீட்டு சொந்தங்களும் அங்கேயே தங்கினர். மறுநாள் குடும்பத்துடன் ஊர் சுற்றி விட்டுத் தங்கள் வீடு நோக்கி பயணமாகினர்.

நாட்கள் அதன் வேகத்தில் செல்ல வீரபத்ரனும் ராணுவத்திற்குத் திரும்பியிருந்தார்.

முகில் தனக்குக் கொடுத்த முதல் பிராஜெக்ட்டை நல்லபடியாக முடித்து இப்போது வேறொரு பிராஜெக்ட் செய்து கொண்டிருந்தான்.

அன்று அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடிந்து வெளியே வந்த முகில்வண்ணன் அங்கே அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தான்.

அவனின் முகத்தில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த உத்ரா, “என்ன முகில்?” என்று அருகில் வந்து விசாரித்தாள்.

“வீட்டில் போய்ப் பேசலாம் உதிமா…” என்றான்.

அன்று இரவு வீட்டிற்குச் சென்றதும் சோஃபாவில் மனைவியை அமர வைத்து அவளின் மடியில் தலைவைத்துப் படுத்துவிட்டான் முகில்வண்ணன்.

“என்னாச்சு முகில்? உங்க முகம் ஏன் சோர்வா இருக்கு? தலை எதுவும் வலிக்கிதா?” என்று அவனின் தலையைக் கோதிக் கொண்டே விசாரித்தாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல் அவளின் வயிற்றில் இன்னும் முகத்தை அழுத்தமாகப் புதைத்துக் கொண்டான்.

“குட்டிப்பாப்பா இப்போ ஏன் கொஞ்சுது?” என்று அவனின் செய்கையில் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“குட்டிப்பாப்பாவை ஊருக்குப் போகச் சொல்லிட்டாங்க…” என்று அவளின் வயிற்றில் முகத்தைப் புதைத்தபடி முனங்கினான்.

அதில் குறுகுறுப்பாக உணர்ந்தவள் கூச்சத்துடன் அவனின் முகத்தை நிமிர்த்தினாள்.

“இப்ப சொல்லுங்க. என்ன விஷயம் முகில்?”

அவளின் முகம் பார்த்துப் படுத்தவன், “இப்ப வந்திருக்கிற பிராஜெக்ட் பற்றி ஒரு ட்ரைனிங் கொடுக்கப் போறாங்க உதிமா. ட்ரைனிங் பெங்களூரில் நடக்குது. அதுக்கு நான் போகணும்…” என்று அவன் சோகமாகச் சொல்ல,

“அவ்வளவு தானா? இதுக்கு எதுக்குச் சோகம்? ட்ரைனிங் தானே போயிட்டு வாங்க…” என்று உத்ரா சந்தோஷமாகச் சொன்னாள்.

அவளின் சந்தோஷத்தை கண்டவன் சட்டென்று எழுந்து அறைக்குள் சென்றான்.

அவனின் கோபம் புரிந்தவள் சிரித்துக் கொண்டே பின்னால் சென்றாள்.

உள்ளே கண்ணாடியின் முன் நின்று கோபத்துடன் சட்டை பட்டனை கழற்றிக் கொண்டிருந்தவன் பின்னால் நின்று முன்னால் கைவிட்டு அணைத்து அவனின் முதுகில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் உத்ரா.

அதன் பிறகும் முகிலின் கோபம் இருக்குமா என்ன?

ஆனாலும் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டிருந்தான்.

“இப்ப குட்டிப்பாப்பாவுக்கு எதுக்குக் கோபம்?” என்று உத்ரா கேட்க,

“நான் வர ஒரு வாரம் ஆகும். என்னை விட்டு பிரிந்து இருக்கணும்னு உனக்கு வருத்தமாகவே இல்லையா? சந்தோஷமா போயிட்டு வாங்கன்னு சொல்ற?” என்று கேட்டான்.

“வேலை விஷயம்னா போய்த்தானே ஆகணும் முகில்? அதுக்கு எதுக்கு வருத்தப்படணும் சொல்லுங்க?” என்று கேட்டாள்.

“ஆனா உன்னைப் பிரிந்து இருக்க எனக்கு வருத்தமா இருக்கே…” என்றவன் அவளை முன்னால் இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவனின் அணைப்பில் அடங்கிக் கொண்ட உத்ராவிற்கு மனம் நிறைந்து போனது.

தன்னைப் பார்த்தாலே வெறுப்பை உமிழ்ந்தவன், இன்று வேலை விஷயமாகக் கூடப் பிரிந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று சொல்பவனை இறுக்கமாக அணைத்து அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“எப்ப பார்த்தாலும் இங்கயே கிஸ் பண்ற. நானா தான் இங்கே கிஸ் பண்றேன்…” என்று அவளின் இதழ்களைத் தடவி கொண்டே குறைபட்டுக் கொண்டான்.

“நீங்க கொடுக்கும் போது நான் தடுத்ததே இல்லையே முகில்?” என்று கண்சிமிட்டிக் கேட்டாள்.

“ஆனாலும் நீயே கொடுக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா சொல்லு?” என்று கேட்டான்.

“எனக்கா தோணும் போது கண்டிப்பா கொடுப்பேன் முகில். சரி அதை விடுங்க. என்னைக்குப் பெங்களூர் போகணும்?” என்று விசாரித்தாள்.

“இன்னும் இரண்டு நாளில் கிளம்பணும் உதிமா. அடுத்தச் சனிக்கிழமை தான் வருவேன். அதுவரை எப்படித் தனியா இருப்ப? அம்மாவை வரச் சொல்லட்டா? அத்தை வேற வேலைக்குப் போகணும். இல்லனா அத்தையை வரச் சொல்லியிருக்கலாம்…”

“அத்தை மாமாவை கவனிக்கணும் முகில். அவருக்கு வீட்டு சாப்பாடு இல்லைனா சரிவராது. அம்மாவும் இந்த வாரம் பசங்களுக்குப் பரீச்சை இருக்குன்னு சொன்னாங்க.

நான் தனியா இருந்துப்பேன் முகில். இங்கே ஒரு பயமும் இல்லையே? நல்ல சேஃப்டி இருக்கு. அப்புறம் என்ன? ஒரு வாரம் வேகமாக ஓடிப் போயிடும் முகில்…” என்றாள்.

“சேஃப்டி தான். ஆனாலும்…” என்று அவன் தயங்க…

“என்னைப் பற்றி மறந்து போயிருச்சா முகில்?” என்று கேலியாகக் கேட்டாள் உத்ரா.

“உன்னைப் பற்றி மறப்பேனா என்ன? நீ வீராங்கனையாகவே இருந்தாலும் என் பொண்டாட்டி சேஃப்டி எனக்கு முக்கியம் தான் மா…” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டிய படி சொன்னவன்,

“கவனமா இருக்கணும் உதிமா. ஈவ்னிங் சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டு மீதி வேலை பாரு. கதவை நல்லா லாக் செய்துக்கோ…” என்று அவன் தொடர்ந்து அறிவுரை சொல்ல,

“முகில் நீங்க ஊருக்கு கிளம்ப இன்னும் இரண்டு நாள் இருக்கு…” என்று கேலியாகச் சொன்னாள்.

“உனக்காகத் தானே சொல்றேன்…” என்றவன் அவளின் கேலியைக் கண்டு கொள்ளாமல் ஊருக்கு கிளம்பும் வரை அவ்வப்போது அறிவுரை கூறிக் கொண்டே இருந்தான்.

முகிலின் அக்கறையில் சலித்துக் கொள்ளாமல் அகமகிழ்ந்து போனாள் உத்ரா.

பெங்களூர் சென்ற பிறகும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுக்கு அழைத்துப் பேசினான். இரவு வெகுநேரம் பேசி விட்டே தூங்க செல்வான்.

ஒரு வாரம் வேகமாக ஓடியது. அன்று வெள்ளிக்கிழமை. மறுநாள் முகில் வருவதாக இருந்தது.

சனிக்கிழமை அவர்கள் பெற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும் நாள் என்பதால் அவன் இங்கே வந்து பின் அங்கே சென்று என்று அலைய வேண்டாம் என்ற எண்ணத்தில் வெள்ளி மாலையில் நேராகத் தான் அன்னையின் வீட்டிற்குச் சென்று விடுவதாகவும், அவனையும் சனிக்கிழமை நேராக அங்கே வந்துவிடும் படியும் சொல்லியிருந்தாள் உத்ரா.

முகிலுக்கும் அது வசதியாகத் தோன்ற சரியென்று சொல்லியிருந்தான்.

அன்று அலுவலகத்தில் இருந்து ஆறு மணிக்கு மேல் கிளம்பிய உத்ரா இரவு ஒன்பது மணி ஆகியும் அன்னையின் வீட்டிற்கு வந்து சேரவில்லை.

சனிக்கிழமை வருவதாகச் சொல்லியிருந்த முகில், வெள்ளி மதியமே ட்ரைனிங் முடிந்ததால் விமானத்தில் கிளம்பி விட்டான்.

உத்ராவிற்குச் சொல்லாமல் சென்றால் அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று நினைத்தவன் அவளுக்குத் தான் வரும் செய்தியைச் சொல்லியிருக்கவில்லை.

இரவு எட்டு மணிக்கு எல்லாம் மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் வரவிற்காக ஆவலுடன் காத்திருந்தான்.

ஆனால் நேரம் தான் சென்று கொண்டே இருந்ததே தவிர உத்ரா வரவே இல்லை.

நேரம் செல்ல செல்ல அவளைக் காணாமல் தவித்துப் போனான் முகில்வண்ணன்.