மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 6

அத்தியாயம் – 6

சில நாட்கள் கழித்து…

அன்று ஊரில் உள்ள பெரும்பாலான மற்றும் முக்கியமானவர்கள், மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள களத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

ஊரில் திருவிழா நடத்துவது குறித்து பேசவே இந்த சந்திப்பு.

வயதில் மூத்தோரிலிருந்து, நடுத்தர வயது ஆண்கள் பெண்கள், இளம் வயது வாலிபர்கள் என அனைத்து வயதினரும் இருந்தனர்.

எப்போது நோம்பி சாட்ட வேண்டும், எவ்வளவு வரி வசூலிக்க வேண்டும், திருவிழா நடைபெரும்போதான பாதுகாப்பு, அதன் பிறகான நிகழ்ச்சிகள் என பல விவாதங்கள் நடக்க ஓரளவு சுமூகமாகவே பேச்சு முடிந்தது.

மாணிக்கமும், சுந்தரமும் இருந்தனர். வழக்கம் போல அங்கும் அதிகாரம் தான் செய்து கொண்டிருந்தார் சுந்தரம்.

வெற்றி, கதிர், பிரபாகரன், தர்ம துரை, கண்ணன் மற்றும் பல திருமணமாகாத இளம் காளைகளும் இருந்தனர்.

அவர்கள் மீது கண்ணியர் பார்வை அருகே உள்ள கோவிலிலிருந்து வந்தவாரு இருந்தது.

சிலரின் பார்வைகள் உணரும் முன்னேயே விலகப்பட்டது. எப்போதும்போல!

வெற்றியைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அங்கொருத்தி.

மெரூன் நிற சட்டையும், வெள்ளை வெட்டியும் அணிந்து கொண்டிருந்தவன், அவள் கண்களுக்கு அத்தனை வசீகரமாகத் தெரிந்தான்.

ஆனால் கூட்டத்தில் அவள் அண்ணன் இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தாள். இல்லாவிட்டால் இப்படி மறைந்து கொண்டு மட்டுமே பார்க்காமல், ஒருமுறையேனும் அவன் கண்களில் படுமாறு நின்றிருப்பாள்.

எப்போதுமே அவனுடன் கண்ணாமூச்சி ஆடமாட்டாள்… சூழ்நிலையும் சுற்றமுமே அதை தீர்மானிக்கும்.

அதனாலே ‘எதற்கு வீண் வம்பு?’ என ஒளிந்து கொண்டிருந்தாள்.

கோவிலுக்கு சென்றுவிட்டு வருகிறேன் எனக்கூறி வந்தது.

அவளுக்கு ஜாதகத்தில் உள்ள தோஷத்தால்தான் திருமணம் தள்ளி போகிறது என நாள் தவறாமல் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும் என்ற தாயின் கட்டளை.

அதுவே… இது போன்ற சந்திப்பை கொடுக்கிறது.

ஊருக்குள் அதிகமாகவெல்லாம் சுற்ற மாட்டாள். கோவிலுக்கு வெற்றியும் தொடர்ந்து வரமாட்டான்.

வாரத்தில் ஒரு நாள் தவறாமல் வருவான். அது போக ஊருக்குள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இவள் தோழி வீடு செல்கிறேன் என பார்ப்பது. அவ்வளவே.

எனவே இன்று அவளவனின் தரிசனம் போனஸ்.

தர்மா பார்வை இங்கு வர பட்டென நன்றாக மறைந்து கொண்டாள்.

அருகில் நின்றிருந்த மல்லி அவள் பயத்தை உணர்ந்து கேலியாக பார்க்க, அசடு வழிய சிரித்தாள்.

“அன்னைக்கு என்னென்னவோ வசனம் பேசிட்டு… இப்போ நடுங்குற?”

“ஏய் நல்லா யோசி. நான் என்ன என் வீட்ல இத பத்தி சொல்லுவேன்னா வசனம் பேசுனேன்? அவர்கிட்ட சரியான டைமுக்கு பேசுவேன்னு தான் சொன்னேன்.” என சொன்னவள்,

பதிலுக்கு, “பார்வை… என இழுத்து என்ன கண்காணிக்கவா வருது?” கேலி குரலில் கேட்டுவிட்டு,

“நான் போறேன் உள்ள.” என கோவிலுக்குள் சென்றுவிட்டாள்.

அவள் கேலியில் சட்டென நாணம் வந்தது. மீண்டும் திரும்பி கூட்டத்தை பார்த்தாள். கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக கலைய… அவன் கண்களில் சிக்கவில்லை.

‘அதுக்குள்ள எங்க ஆளக் காணோம்?’ எனத் தேடியவள், ‘ப்ச்’ என சலித்தவாறு உள்ளே நடக்க,

அவள் கூந்தலை பிடித்து இழுத்தது வலிய கரம் ஒன்று.

தேன்மொழியை விட சற்றே நீளம் குறைந்த கூந்தல் அவளுக்கு.

தன்னவளின் மீது உரசிக் கொண்டிருக்கும் அதன் மீது கோபமோ?

“ஆஹ்…” என அலறியவள் கோபமாக திரும்பி யாரென பார்க்க, உண்மையில் அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை.

‘அங்க இருந்து எப்போ இங்க வந்தாங்க?’ என அதிர்ச்சியாக பார்த்தவள்,

“முடியை விடுங்க.” என விட்டானில்லை.

“வலிக்குது… விடுங்க ப்ளீஸ்.” வலியில் முகத்தை சுருக்க, சட்டென கையை எடுத்துக்கொண்டான்.

எப்போதும் போல தூரத்தில் அவனை ரசித்து பார்க்கும் மனநிலை போய்… திட்ட ஆரம்பித்தாள்.

“இப்படி முடிய புடிச்சு இழுக்கறத யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க?” தலையை நீவியவாரு அவளிடமிருந்து எரிச்சலாக கேள்வி வந்தது.

அதற்கு அவனோ, “என்னவோ நெனைக்கட்டும். எனக்கென்ன?” என்றான் அசட்டையாக.

அதில் கடுப்பானவள், “ம்ம்… உங்களுக்கு ஒண்ணுமில்ல. எனக்குத்தான் பிரச்சனை.” என்றாள்.

“ஏன் உனக்கு மட்டும் என்ன பிரச்சனை?”அவள் பதில் கூறாமல் முறைக்க,

“சரி அதவிடு. இங்க என்ன பண்ற?”அடுத்த கேள்விக்கு தாவினான்.

“கோவிலுக்கு வந்தேன்.”

“நெஜமா?”

“ஆமா.”

“பார்வை இவ்ளோ நேரம் அங்க இருந்துச்சு போல?” என நக்கலாக சொன்னவன்,

“என்னதான பாத்துட்டு இருந்த?”என எதிர்பார்ப்பாக கேட்டான்.

அதில் திணறியவள் வீம்பாக, “இல்லையே. ஏன்… நீங்க மட்டும் தான் இருந்தீங்களா? அங்க…” என ஆரம்பிக்க, அவன் முகம் கடினமாவதை பார்த்து முடிக்காமல் நிறுத்திக் கொண்டாள்.

அவன்… தர்மதுரை. தேன்மொழியின் உடன் பிறந்த சகோதரன்.

சுந்தரம் – கனகத்தின் மூத்த மகன்.

சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்தானோ… ஆனால் இப்போது நிறைய மாறியிருந்தான். அனைத்தும் அவன் எதிரே நின்றுகொண்டிருப்பவளிடம் நற்பெயரை வாங்கவே. பிரச்சனையென்னவென்றால் இன்றும் அதை வாங்கினான என்று தெரியவில்லை.

இன்னமுமே அவன் காதல் ஒரு நல்ல நிலைக்கு வந்த பாடில்லை. அதை மீறி எதும் நல்லதாக நடக்கும் சமயம், பிரச்சனை வந்து மீண்டும் மோசமாகத்தான் மாறுகிறது.

இருவர் பேச்சும் அன்பு மொழிகளுக்கு பதில், அவள் கரிச்சு கொட்டவும், அதற்கு அவன் எகிறவும் பின் சமாதானமாக பேசவும் என்றே செல்லும்.

‘வந்தான்… கெஞ்சினான்… சென்றான்.’ என்பது போல இது ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது.

அவளை கரெக்ட் செய்ய தலைகீழாக நின்று தக்காளி சோறு அல்ல, தம் பிரியாணியே உண்டு பார்த்து விட்டான்; இன்னும் அவன் காதல் சக்ஸஸ்ஸா என்றுதான் தெரியவில்லை.

கோபம்மெல்லாம் பேச்சு ஆரம்பிக்கும் போது வரும்; குறுக்கால் கூட அவ்வப்போது எட்டிப் பார்க்கும்; ஆனால் முடிவு பெரும்பாலும் கெஞ்சல்தான்.

‘என்னை புரிஞ்சிக்கோயேன்.’ என்பது போல…

அப்படியிருக்க, ‘என்னை விடுத்து வேறு யாரையோ பார்க்கிறேன் என என்னிடமே சொல்கிறாளே. எவ்வளவு கொழுப்பு இருக்கும் இவளுக்கு? என்ன பாக்கலனு கூட சொல்லிருக்கலாம்… திருப்பி திருப்பி வரதால நம்ம அன்பு புரில.’

அவள் பேச்சில் இப்போது உண்மையாவே அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘கொஞ்சமாச்சும் சூடு சொரணையோடு இருடா மானங்கெட்டவனே.’ என அவனையே மனதுக்குள் திட்டிக் கொண்டான்.

வாயைத் திறந்தால் திட்டு அவளுக்கு பயங்கரமாக விழும். அதைவிட வார்த்தையை விட்டு விட்டால் வம்பு என முயன்று அமைதியானவன் கண்களில் பட்டாள் அவன் தங்கை.

உடனே அவளருகே சென்று, “இன்னும் வீட்டுக்கு போகாம என்ன பண்ற?” கோபமாக கேட்க, அவள் தான் அவன் குரலில் இருந்த கோபத்தில் திடுக்கிட்டாள்.

“இப்போதான் ண்ணா வந்தேன்.” என்றவள் மல்லியை பார்க்க, அவளோ,

‘உண்மையிலேயே டென்ஷன் பண்ணிட்டோம் போல.’ என சோகமாக கையை பிசைந்து கொண்டிருந்தாள். அவள் பாவனையே ஏதோ சண்டை எனக்கூறியது.

‘உங்க சண்டைக்கு நான் ஊறுகாயா? தேன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

“வா போலாம். நான் வீட்ல விடுறேன்.” அவளை இழுத்துக்கொண்டு நகரவும், மல்லியிடம் கண்களால் சமாதானம் சொன்னவள் தலையசைத்தவாரு அவன் பின்னே சென்றுவிட்டாள்.

அந்த வண்டி வேறு உடனே ஸ்டார்ட் ஆகாமல் அவனிடம் பல உதையை வாங்கியது.

அதற்குமேல் நம்மை உடைத்தே விடுவான் போல என பயந்து ஸ்டார்ட் ஆக, அவளை திரும்பியும் நோக்காமல் புறப்பட்டுவிட்டான். இவளுக்கு என்னவோ போலானது.

எத்தனையோ முறை சண்டையில் திட்டும்போதும் உடனே மறந்துவிட்டு அவளை வம்பிழுத்துவிட்டு செல்வான்.

இன்று… பார்க்காமல் கூட சென்றுவிட்டான்.

கஷ்டமாகதான் இருக்கிறது அவனை ஒவ்வொரு முறை இதுபோல கஷ்டப்படுத்தும்போதும், ஆனாலும் அதை அத்தனை எளிதாக அவளுக்கு மாற்றிக்கொள்ள வரவில்லை.

அவனின் புதிய பரிமாணத்தில் விரைவில் மாறுவளா…?

காலம்தான் பதில் சொல்லும்.

தொடரும்…