மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 20.2

அத்தியாயம் – 20.2

இருவருக்குள் சண்டையென்றே சென்ற நிலை ஒருநாள் மாறியது.

அன்று ஞாயிறாதலால் புவனா வீட்டிலிருக்க, வெளியே அழைக்கும் சத்தம் கேட்டு வந்தாள். 

பிரபா… சோர்வாக நடந்த பாட்டியை பிடித்தவாரு வீட்டை நோக்கி வந்தான்.

ஒரே ஊர் என்பதால் அவனை தெரியுமே.

ஓடிச்சென்று அவரை பிடித்துக் கொண்டவள், “என்னாச்சு ண்ணா பாட்டிக்கு?” எனக் கேட்டவளுக்கு உடனே கண்கள் கலங்கிவிட்டது.

கேட்டுக்கு வெளியே பைக்கிலிருந்த கதிரையும் கண்டாள். ஆனால் பாட்டி மீதுதான் அவள் முழு கவனமும்.

வெற்றி தெரிந்தவர் கல்யாணத்திற்கு வெளியே சென்றிருக்க, பயமும் பதட்டமுமாக இருந்தது.

அதை கவனித்த பிரபாவோ, “பயப்படாதமா ஒன்னுமில்ல. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டேன். சாப்பிடாம வயலுக்கு வந்துட்டாங்க போல. அதான் தலை சுத்திடுச்சு. ட்ரிப்ஸ் போட்டதும் சரியாகிடுச்சு.” சமாதானம் சொன்னவன், மாத்திரையை கொடுக்க, பல நன்றிகளை கூறியவள் வாங்கிக் கொண்டாள்.

அதன்பின் அவன் கிளம்ப, இப்போது பார்க்கும்போது கதிர் அங்கில்லை. முன்பே கிளம்பியிருந்தான்.

பாட்டியை அறைக்குள் கட்டிலில் படுக்க வைத்தவள் சாப்பிடவைத்து, மாத்திரைகளை கொடுக்க, அவரும் போட்டுவிட்டு கண்ணசந்துவிட்டார்.

வெற்றி வரும்வரை கலங்கியவாரு இருந்தவள் அவனிடம் அழுது தீர்க்க, அவன்தான் அவளை அமைதிப்படுத்தினான்.

இனி பாட்டியை அதிகம் வயலுக்கு விடாமல் ஓய்வாக பார்த்துக் கொள்ளவேண்டுமென நினைத்துக் கொண்டான்.

அடுத்த நாள், பிரபாவிடம் சந்தித்து நன்றி சொல்ல,அவனோ, “அட என்ன ண்ணா இதுக்குலாம் போயி பெரிய வார்த்தை சொல்றீங்க.” என சொல்லி, பாட்டி பற்றி விசாரிக்க, பதில் கூறியவன் அவன் தோளில் தட்டிவிட்டு சென்றுவிட்டான்.

இதெல்லாம் பைக்கில் வந்த கதிர் கண்களில் பட்டது.

கதிர் மனதில் வெற்றி மீது மதிப்பு உள்ளதென மீனாட்சியைத் தவிர அதுவரை பிரபா மட்டுமே அறிவான்.

வெற்றி நகர்ந்தபின் வந்த கதிருடன் பிரபா பைக்கில் ஏறிக்கொள்ள, அது ஏரிக்கரையோரம் உள்ள மரத்தடிக்கே சென்றது.

நண்பன் முகத்திலுள்ள வேதனையை அறிந்து அமைதியாக இருந்தான்.

சில நிமிட அமைதிக்குப் பின், “எப்படி இருக்காம் அந்த கிழவி?” கோபமாக கேட்டாலும் அதில் அக்கறையே இருந்தது.

“நல்லருக்காம்டா.” என வெற்றி சொன்னதை சொல்ல, கேட்டுக்கொண்டான்.

“மச்சான் நான் எதும் மோசம் பண்ணிட்டனாடா?” கதிரின் ஆற்றாமையான கேள்விக்கு, என்ன சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை.

“மயக்கம் வருதுனுதான வண்டியில கூப்பிட்டேன். பாத்தியாடா அது ஏறவே இல்ல.” குழந்தை போல புகார் சொன்னான்.

நடந்தது இதுதான். நேற்று வயலுக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பிய வள்ளியம்மைக்கு பசிக்களைப்பிலும் வெயிலிலும் கிறுகிறுவென வர, வண்டியில் வந்து கொண்டிருந்த கதிர், பிரபா பார்த்துவிட்டனர்.

கதிர் ஹாஸ்பிடல் போகலாமென அழைக்க, அவர் ‘உன்கூட வரமாட்டேன்.’ என மறுத்துவிட்டார்.

எத்தனையோ முறை தன்னை அவர் திட்டி துரத்தும் போதெல்லாம் கோபம் கொள்பவனுக்கு, இந்தமுறை அளவில்லா வருத்தம்தான் வந்தது.

அவன் முகமாற்றம் கண்டு அவருக்கே ஒருமாதிரியாகிப் போனது. ஆனாலும் வீம்பு பிடித்தார்.

நேரத்தை விரயமாக்க வேண்டாமென நினைத்த கதிர், பிரபாவை அழைத்து செல்ல சொல்ல, அவர் அவனுடன் ஏறிக்கொள்ளவும், ஒன்றும் பேசாமல்தான் பின்னே சென்றான்.

வீட்டில் விட்டுவிட்டு புவனா பாட்டியிடம் சேர்ந்த பின்னே கிளம்பினான்.

ஆனால் அவரின் செயல் இந்த முறை அவனை ரொம்பவே காயப்படுத்திவிட்டது.

“விடுடா… அவங்களுக்கு யாருக்கு மேலோ இருக்க கோபம். உன் மேல காட்றாங்க.” என,

 

“அது புரியாம இல்லடா. ஆனாலும் இப்படியா? மனசுக்கு நிஜமா கஷ்டமா போச்சு.” உண்மையான வருத்தத்தோடு குரல் வந்தது.

“நான் அவர் பையன்தான். அவரில்ல. ஏன் பாட்டிக்கும், புவனாக்கும் அது புரியமாட்டது?” சொன்னவன் நிறுத்தாமல்,

“ஒருவேள நான் மட்டும் அங்க இருந்திருந்தா… கிழவி எங்கூட வந்துருக்காது. அப்படி என்னடா நம்மள விட வீம்பு முக்கியம் வேண்டிக்கிடக்கு?” புலம்பி கொண்டே சென்ற நண்பனை,

“டேய் டேய் நிறுத்து… அங்க தனியா இருந்திருந்தீனா, அவங்க வரலனு சொன்னதும் விட்டுட்டு வர ஆளா நீ? கட்டி தூக்கிட்டு வந்துருக்க மாட்ட ஹாஸ்பிடல்க்கு.” என கேலி பண்ண,

அது நன்றாக வேலை செய்தது. சோகத்தை விடுத்து மென்மையாக புன்னகைத்தான்.

அதன்பின் பாட்டியிடம் பேசவில்லை. முன்பெல்லாம் அவர் முகத்திருப்பலுக்கு அவன் வேண்டுமென்றே எதோ சொல்லும்போதுதான் அவர் திட்டுவார், ஆனால் அவனே தவிர்த்துவிட்டு செல்ல அவரால் என்ன செய்ய இயலும்.

பேரன் கண்டுக்காத பாவனை அவருக்கு பிடிக்கவில்லை. அதற்கும் சேர்த்து உள்ளுக்குள் திட்டினார்.

கொஞ்ச நாளிலேயே அவர் தன்னை பார்ப்பது புரிந்து, ‘நாம பேத்திய லுக்கு விட்டா கிழவி நம்மள பாக்குது.’  உள்ளே வாரினாலும், இப்போது இருவரிடமுமே பேசுவதாக இல்லை அவன்.

ஆனால் ஒருநாள் புவனாவே அவனிடம் பேச வந்தாள்.

அலட்சியமும் கோபமும் மட்டுமே தன்னைக் கண்டு வெளியிடும் அவள் கண்களில், இப்போது வேறு என்னவோ இருக்கிறதென கதிருக்கு புரிந்தது. ஏனென்றுதான் புரியவில்லை.

ஏனெனில், அன்று அவன் பேசும்போது மரத்தின் பின்தான் இருந்தாள்.

அவன் மனம் இப்படியெல்லாம் யோசிக்குமென அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதைவிட அவன் கலங்கிய குரல் ஏனோ அவளுக்கு பிடிக்கவில்லை.

அவன் கடுப்பேத்தி, வம்பு செய்து, சிரித்து என இப்படியெல்லாம் கண்டிருக்கிறாள்.

ஆனால் வருந்தி…. அப்போதே பார்த்தாள்.

சொந்தமென்று வேண்டாம் ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட பாட்டியை அவன் பைக்கில் அழைத்து செல்லாமல், பிரபா அவரை கூட்டி வந்தது, அவன் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றது, அவளுக்கு இனம்புரிய கோபத்தைக் கொடுத்தது.

அவனுடன் சண்டையிட்டு, ‘நீயும் உன் தந்தை போல நிரம்ப சுயநலவாதி.’ என்றெல்லாம் பாயிண்ட் பேச அவள் ஆவேசமாக வர, இங்கோ இவன் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

அவன் மீது ஆரம்பத்திலும் கோபம் வருமே ஒழிய, வெறுப்பு வந்ததில்லையே!

இப்போது அந்த கோபமும் மறைவது போல இருந்தது.

அவன் சொன்னது காதில் கேட்டுக் கொண்டே இருக்க, அவனிடம் இனி கொஞ்சம் இயல்பாக இருக்கவேண்டுமென முடிவெடுத்தாள்.

அதன்பொருட்டே அவன் முன் வந்து நிற்க, அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தவன்,

“என்ன?” எனக் கேட்டான்.

அவள் பையினுள் எதையோ தேட, புரியாமல் அவளை பார்த்திருந்தான்.

ஒரு சாக்லேட் பெட்டியை எடுத்தவள் அவனிடம் நீட்டி,

“எனக்கு இன்னைக்கு பொறந்தநாள் சாக்லேட் எடுத்துக்கோங்க.” என்றாள் இயல்பாக.

அவன் ஒன்றை மட்டும் எடுக்க, “இன்னொன்னு சேர்த்து எடுங்க.” என ரெண்டாக எடுத்தான். ஆனாலும் எதும் பேசவில்லை.

அவளும் அமைதியாக இருக்க, ‘என்னடா நடக்குது?’ மனதில் கேட்டவாறே இரு சாக்லேட்டையும் சேர்த்தே சாப்பிட்டான்.

அவள் மீண்டும் ஒன்று அவனிடம் கொடுக்க, தினுசாக அவளை பார்த்தவன்,

“எதுக்கு இப்போ எனக்கு இதை கொடுத்துட்டே இருக்க? அதுல எதுவும் கலந்துருக்கியா என்ன?” சட்டென அவன் கலவரமாக கேட்க, அந்த பாவனையில் அவள் சிரித்துவிட்டாள்.

அதை ரசித்தாலும் கேள்வியாகவே அவளை பார்த்தான்.

“எதுக்கு இப்படி பாக்குறீங்க? என்னாச்சு?” என,

“நான்தான் இந்த கேள்விய கேட்கணும். என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி?” என்று பதில் கேள்வி கேட்டான்.

அவளுக்கு புரிந்தது அவனிடம் முறைக்காமல் சாதாரணமாக நடந்து கொள்வது பற்றி கேட்கிறானென.

என்ன சொல்வதென யோசித்தவள், “அது… என இழுத்து நாம ஏன் ப்ரண்ட்ஸ்ஸா இருக்கக் கூடாது?” எனக் கேட்டு, சிந்தனையில் அவன் புருவத்தை ஏற்ற வைத்தாள்.

“ஏன்?” ஒரே கேள்விதான் கேட்டான். அவளுக்கு உண்மையில் பதில் தெரியவில்லை. 

ஆனாலும், “ஏனோ…பிரண்ட்டா இருக்க தோணுச்சு.” சமாளிக்க, மீண்டும் சந்தேகமாகவே பார்த்தான்.

அதில் காண்டானவள், “ரொம்பதான் பண்றீங்க… ஒரு பர்த்டே கேர்ள் கேக்குறேன். எதையும் கண்டுக்காம எதோ மேல மழ பெஞ்சா போல…” என ஆரம்பிக்க,

“அடிங்கு…”  என அவள் தலையில் ஓங்கி கொட்டி பழமொழியை நிறுத்தினான்.

தலையை தேய்த்தவாரு அவனை முறைத்து பார்த்தவள் அதன்பின் என்ன சொல்ல?

“பிரண்ட்ஷிப் வேணாம்னா போங்க…” முறுக்கிக் கொண்டு நகரப் பார்க்க,

“நில்லு நில்லு…” அவளை அழைத்தவனுக்கு என்ன தோன்றியதோ, கிடைத்த வாய்ப்பை விடுவானேன் என நினைத்தவன்,

“சரி சரி ப்ரண்ட்ஸ்.” என புன்னகைக்க, அவளும் எல்லாத்தையும் விடுத்து நட்பாக புன்னகைத்தாள்.

அதன் பின்தான் அவள் ஏரிக்கரைக்கு விளையாட வந்தது. அவனுடன் பேசுவதெல்லாம்.

அவனுக்கு ‘புவனா’ விலிருந்து ‘புவி’ யானாள்.

கதிர் “என்னையும் ஸ்பெஷல்லா கூப்டு.” என மனதுக்குள் ‘அத்தான்’ என்ற அழைப்பை வைத்துக்கொண்டு சொல்ல, அவளுக்கு புரியவுமில்லை. அப்படி அழைக்கவுமில்லை.

இருவருக்கும் வாய் ஜாஸ்தி என்பதால் நன்றாக ஒத்துப்போகும்.

அந்த ஏரிக்கரை ஊருக்கு ஒத்துக்குப்புறமாக இருக்கும்.

சுற்றியும் கொஞ்சம் அடர்ந்து மரங்கள், செடிக்கொடிகள் எல்லாம் காணப்படுவதால் சட்டென வெளியே இருந்து பார்த்தாள் யார் இருக்கிறார்களென்று தெரியாது.

பொதுவாக குழந்தைகள் விளையாடுவார்கள். இளைஞர்கள் மற்றும் ரொம்ப வயதான யாரேனும் அங்கு இருப்பர்.

கதிரும் புவனாவும் மணிக்கணக்காக நேரத்தை பேசியபடியே போக்கினர் என்றெல்லாம் இல்லை.

யார் கண்ணிலும் கருத்திலும் படமால் பேசுவர்.

தூரமாக இருந்த படி அவள், பவி மற்றும் சில குழந்தைகளுடன் விளையாட அவன் பார்த்து கமெண்ட் செய்வான்.

கிரிக்கெட்டில் போங்கு செய்தால் கிண்டல், காண்ணாமூச்சி விளையாண்டால்… எங்கிருக்கிறாளென போட்டு கொடுப்பது இதுபோல…

அவளும் முறைத்துவிட்டு எதும் திட்டிவிட்டு அடுத்து விளையாட சென்றுவிடுவாள்.

அவள் பவியை இழுத்து வருவது போல, இவன் பிரபாவையும்  இழுத்து வர, அவனுக்கு கொஞ்சநாளிலேயே நண்பன் மனம் புரிந்தது.

‘நல்லது நடந்தால் சரி.’ என நினைத்தாலும்,

ரொம்ப நேரம் என்றேனும் அங்கேயே இருக்கும்போது,

“ஏன்டா… எள்ளுதான் எண்ணைக்கு காயுதுனா எலிப்புலக்கையும் ஏன் காயுனும்?” ஒருமுறை கேட்க,

“நீ எலிப்புலக்கையா? எனக்கு தெரியாதே. நவுந்து உக்காரு. அதான் ஒரே கப்பு.” என அவன் மேலே பேசியபடி செல்லவும்,

‘பழமொழி சொன்னது குத்தமாடா?’ என அதிர்ந்தவன்,

‘இதே போதும்’ என்பதுபோல பெரிய கும்பிடு போட்டுவிட்டு போனில் மூழ்க, ‘அந்த பயம் யாருகிட்ட?’ கதிர் வீராப்பாக நினைத்துக் கொண்டான்.

ஆனாலும் கதிரின் காதல், அதற்கு அவன் செய்வதையெல்லாம் பார்க்கும் பிரபாவிற்கு சிரிப்பாக வரும்.

ஒருமுறை அவளுக்கு அன்னையிடம் ஏதேதோ சொல்லி வீட்டிலேயே பொங்கல் செய்து எடுத்துவந்து கொடுக்க, அவளும் சப்புக்கொட்டி சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.

பெரிதாக சாதனை செய்தது போல எக்ஸ்பிரஸன் கொடுத்துக்கொண்டு தனதருகே உட்கார்ந்த நண்பனை ஒரு மார்க்கமாக பார்த்தவன்,

“என்னடா இது?” என கப்பைக் காட்டி கேட்க

“பொங்கல் கொண்டு வந்த கப்புடா.” எனவும் 

“அது தெரிது. அந்த பொண்ணுக்கு கொடுக்க வேற எதும் கிடைக்கலையா?”

“ஒரு டைரி மில்க் அப்படி இப்படி.” என…

“டேய் என்னத்தை பெரிய டைரி மில்க்? அவளுக்கு பொங்கல்தான் அத விட புடிக்கும்? அவளே கப் கழுவ தேவ இல்லன்ற அளவு சாப்டு போறா?” என சிரித்தவாறு சொல்ல,

புன்னகைத்தவன், “எல்லாம் சரி. உன் லவ்வ எப்போ சொல்லுவ?” எனவும்,

தயங்கியவன், “அவ டிகிரி முடிக்கட்டும்டா.” என்றான்.

அவனும் ‘சரி உன்னிஷ்டம்.’ என்றுவிட்டான்.

அதுதான் பின்னால் பிரச்சனையாகிப் போனதோ?

கதிரிடம் தோன்றும் உணர்வு புவனாவிற்கு பிடிபடவில்லை.

நட்பாக ஆரம்பித்த அவர்கள் உறவு காதல் நோக்கி செல்வதை அவள் அறியவில்லை.

அவனுடன் பேச ஆசைக்கொண்டாள். நட்பாக பழகினாள். ஆனால் காதலென்று நினைக்கவில்லை.

எப்போதேனும் அவன் பார்வையில் தோன்றும் குறுகுறுப்பையும், அவனை ரசித்து பார்க்கும் மனதையும் அவள் இனம் காணவில்லை.

காதலென அவளுக்கு புரியாமலிருக்க, டிகிரி கூட முடிக்காத பெண் என வெளிப்படையாக அவன் எண்ணத்தை சொல்லவில்லை.

ஆனாலும் இப்படியே நாட்கள் அழகாக நகர, 

ஒருமுறை பேசும்போது புவனா தேன்மொழி பற்றி புகார் சொல்லவும் அவன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கறீங்க?” அவள் சிணுங்க,

“புவி அவ சும்மா விளையாட்டுக்கு பண்ணிருப்பா. தேன் ரொம்ப நல்ல பொண்ணு.” செர்டிபிகேட் கொடுத்தான்.

காதலை உணராதா போதும் அவளுக்கு பொறாமை அருவியாக கொட்டியது.

அவனுக்கு மாமன் மகள் அல்லவா!

கோபமாக பார்த்தவள், “எனக்கு அவள புடிக்காது.” அப்படியெல்லாம் இல்லையென்றாலும் கடுப்பில் சொல்ல,

“புடிக்காட்டாலும் பரவாலாம் புடிக்க வச்சிக்க. உனக்கு ரொம்ப புடிச்ச ஒருத்தருக்கு அவள புடிக்குமே.” அவன் எதோ நினைப்பில் சொல்லிவிட, அதன்பின்னே என்ன சொன்னோமென புரிந்து நாக்கை கடித்தான்.

எத்தனை சமாளிக்க முயன்றும் முடியாமல் போக, ஒருநாள் திருவிழா சமயம் கண்ட காட்சியை சொன்னான்.

நம்பவே மாட்டேன் என்றவள் அடுத்த  நாளே, வெற்றி டிவியில் ஓடிய ஒரு பாடலை கேட்டு மெய்மறந்து உட்கார்ந்ததில் உண்மைதான் போலவென நடந்ததைக் கூற, அவனோ சிரித்தே விட்டான்.

ஒரு ஜோடி பேசாமலே காதல் செய்ய, இன்னொரு ஜோடி பேசினாலும் காதலை உணரவில்லை.

அந்த திருவிழாவில்தான் புவனாவை ரஞ்சன் அசிங்கமாக கமெண்ட் செய்ய, கதிர் அவனிடம் சண்டைக்குப் போனது.

அவர்களிருவரும் பேசுகிறார்களென ஊருக்குள் கொஞ்சமாக தெரிந்த சமயம், இந்த சம்பவத்தின் பின் தீயாக பரவ ஆரம்பித்தது.

அதன்பின் இருவரும் பேசும்போதுதான்,

புவனா, “ஏன் சண்டை போட்டீங்க?” என கோபம் கொள்ள,

“உன்ன கிண்டல் பண்ணாங்கனுதான.”

“அதுக்கு?”

“அதுக்குனா… என்ன சொல்ல? எனக்கு கோபம் வந்துடுச்சு… அதான்.”

“ஆனாலும் அப்டியா?” அவள் கேட்கவும்,

“அத்தோட விட்டன்னு சந்தோசப்படு.” கடுப்பாக சொன்னான்.

“இப்போ ஊருக்குள்ள எப்படி பேசுறாங்க. இதுலாம் தேவையா? உங்க கோபத்துல எதையும் யோசிக்காம எத்தனை பிரச்சனைய இழுத்து விட்ருக்கீங்க?” ஆத்திரமாக கேட்டாள்.

“இல்லாததையா பேசுறாங்க?” என்ற அவன் கேள்விக்கு,

“ஆமா.” என்றாள் எதையும் உணராது.

அதிர்ந்தவன், “என்ன பேசற புவி? உனக்கு என் மனசு புரியலையா? அது உண்மைதான். எனக்கு உன்ன புடிக்கும்.” பட்டென சொல்ல, இப்போது அவள் அதிர்ந்தாள்.

ஆனாலும் சில நொடி யோசித்தவள், “இது சரிவராது.” என,

“ஏன்?” அவனிடம் ஒரே கேள்வி அழுத்தமாக…

“ஏன்னா என் வீட்ல யாரும் ஒத்துக்க மாட்டாங்க.”

“என் வீட்லயும்தான் ஒத்துக்க மாட்டாங்க. அவங்கள விடு. நாம கல்யாணம் பண்ண அப்பறோம் ஒத்துக்குவாங்க.”

அவனுக்கு இப்போதே கல்யாணமென்ற எண்ணமெல்லாம் இல்லை. பேச்சுக்கு சொன்னான்.

அவளோ, “அப்படிலாம் உங்களுக்காக அவங்கள விடமாட்டேன். எனக்கு அவங்கதான் முக்கியம்.” என,

காதலே சொல்லாமல், காதலை அவள் உணர்வில்லையென புரிந்தாலும் மக்கு காதல் மனம்,

“அப்போ நான்?” எனக் கேட்டது.

“அவங்கள விட நீங்க எப்படி எனக்கு முக்கியம் ஆவீங்க? அதும்போல நான் எப்போ உங்கள லவ் பண்றேன்னு சொன்னேன்.” எதும் புரியாமல் ஏனிப்படி என்பதுபோல ஆதங்கமாக கேட்டாள்.

அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். அதன்பின் எதுவுமே பேசாமல் பைக்கை கிளப்பி சென்றுவிட்டான்.

வீட்டிலும் விஷயமறிந்து தேனுடன் கல்யாண பேச்சை எடுக்க, வெளியூருக்கே போய்விட்டான்.

நாட்கள் போக போகதான், தனிமையின் பொருட்டு புவனாவிற்கு தன் மனமே புரிந்தது.

தன்னையே நொந்து கொண்டவள், அவன் திரும்பி வரவும், தன் மனதிலிருப்பதைக் கூறவும் காத்திருந்தாள்.

தொடரும்…