மனம் கொய்த மாயவனே – 36

அத்தியாயம் – 36

அந்தச் சோஃபாவின் நுனியில் அசகவுரியமாக அமர்ந்திருந்தாள் அல்லிராணி.

அவளின் முகத்தில் அதிர்ச்சியுடன், மலைப்பும் இருந்தது.

“இது நிஜமாவே வெற்றி வீடா?” என்று இன்னும் நம்ப முடியாமல் வீட்டைச் சுற்றிலும் கண்களை ஓட்டிக் கொண்டே மிரட்சியுடன் கேட்டாள்.

“ம்ம் ஆமா…” என்றாள் அவளின் எதிரே அமர்ந்திருந்த ரத்னா.

தன் எதிர் வீட்டில் இருந்த வெற்றியின் வீட்டிற்குள் எந்தத் தயக்கமும் இல்லாமல் சென்று அந்தச் சின்ன வீட்டின் சமையலறையில் அவனுக்குச் சமைத்துக் கூடக் கொடுத்திருக்கிறாள்.

ஆனால் அவனின் உரிமையான வீட்டிற்குள் ஏதோ முள்ளில் மேல் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தாள்.

அதை விட அவன் ஒரு சிபிஐ ஆபீசர் என்பதை நம்ப அவளின் மனம் மறுத்தது.

வெற்றி சாதாரணச் சில்லறை வியாபாரம் செய்கிறான் என்ற போது கூட அவனின் மீது தீராக்காதல் கொண்டிருந்தாள்.

ஆனால் இப்போதோ? அதற்கு மேல் அவளுக்கு நினைக்கவே பயமாக இருந்தது.

காவல்நிலைய வாயிலில் இருந்து அவளை வம்படியாக இங்கே அழைத்து வந்திருந்தாள் ரத்னா.

ரத்னாவிடம் சில விளக்கங்கள் கேட்டுப் பார்த்தாள் அல்லி.

“அவன் வரும் வரை உன்கிட்ட எதுவும் நான் வாயே திறக்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான். அவன் பேரையும், தொழிலையும் நான் சொன்னதுக்குக் காரணம் கூட உன்னைப் போலீஸ் ஸ்டேஷன் போகவிடாம இங்கே கூட்டிட்டு வரத்தான்…” என்றாள் ரத்னா.

அல்லிக்கு அங்கே அமர்ந்திருக்கவே பிடிக்கவில்லை. அவன் எதுக்குத் தன்னை இங்கே அழைத்து வரச் சொல்லியிருப்பான்? என்னிடம் என்ன பேசுவான்? என்று நினைத்தாள்.

அவன் முன்பு தன்னிடம் காதல் சொன்னது நினைவில் வர, ‘அப்போது உன் உதவி எனக்குத் தேவைப்பட்டதால் உன்னிடம் காதல் சொன்னேன். இப்போது அந்த உதவிக்குப் பதிலாகப் பணம் கொடுக்கிறேன்’ என்று எதுவும் சொல்லி விடுவானோ என்று பயந்தாள்.

அப்படி எதுவும் சொல்லிவிட்டான் என்றால் தான் உயிரோடு இருப்பது கூடச் செத்ததுக்குச் சமம் என்று தோன்ற சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள்.

“என்னாச்சு அல்லி?” என்று ரத்னா கேட்க,

“நான் கிளம்புறேன்…” என்றவள் அதற்கு மேல் அவளின் புறம் தன் முகத்தைக் கூடத் திருப்பாமல் வாசலை நோக்கி நடந்தாள்.

“அல்லி நில்லு…” என்று ரத்னா பின்னால் செல்ல,

அந்த நேரம் சரியாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் வெற்றிவேற்செழியன்.

அவனைக் கண்டதும் அப்படியே அசையாமல் நின்று போனாள் அல்லிராணி.

அல்லியைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவளை நோக்கி வந்தான்.

அவனின் தோற்றத்தைப் பார்த்த அல்லியின் கண்கள் அவனை அத்தனை நாள் பார்த்திருந்த காதல் பார்வையாக இல்லாமல் மிரட்சியுடன் பார்த்தன.

அவர்கள் இருவரின் பார்வையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள் ரத்னா.

முன்பு அவள் பார்த்தது போல் பழைய உடையாக இல்லாமல், இப்போது வெள்ளை நிற சட்டை, கறுப்பு நிற பேண்ட் என டிப்டாப்பாக உடையணிந்திருந்தான்.

உயர்ரகக் கைகடிகாரம், இடுப்பில் பளபளத்த பெல்ட் அணிந்து காலில் கண்ணாடியாகப் பளபளத்த காலணியும் போட்டுக் கம்பீரமாக நின்றிருந்தவனைக் கண்டதும் அல்லிக்கு வேறு யாரோ ஒருவனைக் காண்பது போல் இருந்தது.

“எங்கே கிளம்பிட்ட ஆள்முழுங்கி?” அவள் பார்வை புரிந்தாலும் கண்டுகொள்ளாமல் கேட்டான் அவளின் வெற்றி.

“நா… நான்…” என்று அல்லியின் வார்த்தைகள் தந்தியடித்தன.

“ஏய், என்னதிது? என் ஆள்முழுங்கியா பேச முடியாம தடுமாறுவது?” என்று கேட்டுக் கொண்டே இன்னும் அவளின் அருகில் வர,

“இல்ல… நீ…நீங்க…” என்று இன்னும் தயங்கினாள்.

“நீங்க-வா? என்ன ஆள்முழுங்கி யார்கிட்டயோ பேசுற மாதிரி இவ்வளவு தடுமாற்றம். ம்ம்…” என்றவன், அவளின் கன்னத்தில் ஒற்றை விரலால் மென்மையாக வருடினான்.

அவளின் வெற்றியின் ஸ்பரிசம்!

அல்லியின் கண்கள் இறுக மூடிக் கொண்டன. உதடுகள் மெலிதாகத் துடித்தன.

ஸ்பரிசம் அவனை அவளுக்கு உணர்த்த ஆரம்பித்த நொடியில் அவளின் மூக்கை துளைத்த அவனின் வாசம் அவனை அவளுக்கு அந்நியமாகக் காட்டியது.

உயர்ரக வாசனை திரவத்தின் நறுமணம்!

அவளின் வெற்றியின் உடலில் இயற்கையான அவனின் வாசத்தைத் தான் உணர்ந்திருக்கிறாளே தவிரச் செயற்கை வாசனையை அல்ல.

அந்த வாசனை அவனை அந்நியமாக உணர வைக்க, சட்டென்று அவனை விட்டு விலகி நின்றாள்.

விலகலை தன் பார்வையிலும் காட்டினாள் அல்லிராணி.

“நான் உன் வெற்றிடி ஆள்முழுங்கி…” அவளின் பார்வையிலும், செய்கையிலும் காட்டிய விலகலை தாங்க முடியாமல் சொன்னவனின் குரல் தவிப்புடன் வெளியே வந்தது.

“இல்ல… நீங்க என் வெற்றி இல்லை. நீங்க யாரோ ஒரு ஆபீசர்…” என்ற அல்லி அவனின் கைக்கு எட்டாத தூரம் தள்ளி நின்று கொண்டாள்.

“யாரோ ஒரு ஆபீசரா?” என்று கேட்டவன் தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

சிபிஐ அதிகாரி வெற்றிவேற்செழியனாக நின்று கொண்டிருந்தான்.

“இந்த ட்ரஸை பார்த்துச் சொல்றீயா? உடை மாறலாம். உள்ளம் மாறுமா ஆள்முழுங்கி?” என்று கேட்டான்.

அப்போதும் அவளின் பார்வையில் அந்நியத்தன்மை தெரிய, “இந்த உடையிலும் கூட நான் உன்னை ஆள்முழுங்கின்னு தான் கூப்பிடுறேன். அதுவே என்னை உனக்கு உணர்த்தலையா ஆள்முழுங்கி?” என்று காதல் தவிப்புடன் கேட்டான்.

அவனின் தவிப்புக் கூட அவளுக்கு அந்நியமாகத் தான் தெரிந்தது. அவளின் வெற்றி இப்படித் தவிப்புடன் பேச மாட்டான்.

“ஏய் என்னடி ஆள்முழுங்கி இப்படிப் பார்க்கிற? இந்த வெற்றியை விட்டுத் தள்ளி போய்டுவியா நீ? என்னை அப்படிப் பார்க்காதடி ஆள்முழுங்கி…” என்று அடாவடியாகப் பேசியிருப்பான்.

ஆனால் அவன் பேசும் முறை கூட அவனை வித்தியாசமாகக் காட்டியது.

அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது இருக்க, அவனின் சிந்தனை எல்லாம் அதை எப்படி அவளின் மனம் நோகாத வண்ணம் கோர்வையாகச் சொல்வது என்பதில் தான் இருந்தது.

ஆனாலும் தங்களுக்குள் நடந்த ஊடலுக்குப் பிறகு அவளை இவ்வளவு அருகில் பார்த்ததும் மாற்றதை பின்னுக்குத் தள்ளி அவளின் ஸ்பரிசத்தை உணர நினைத்தவன் அவள் அருகில் வர, இப்போது அவளின் விலகல் தான் முதன்மையாகத் தெரிந்தது.

அதன் தாக்கத்தில் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“நீங்க வெற்றியா இருக்கலாம். ஆனா நீங்க என் வெற்றி இல்லை. நீங்க எனக்கு அந்நியமா தெரியுறீங்க. நீங்க பெரிய ஆபீசர். ஆனா நான் சாதாரணச் சித்தாள். நமக்கிடையே ரொம்ப ரொம்ப வித்தியாசம் இருக்கு…” என்றாள் வேதனையுடன்.

‘நீங்க என்னை உண்மையா காதலிக்கிறீங்களா இல்லையான்னு எனக்குக் குழப்பமா இருக்கு’ என்று சொல்லத்தான், அவளின் நாவு துடித்தது.

ஆனால் தான் நேரடியாகக் கேட்டு எங்கே அவன் ‘ஆமாம் உன்னைக் காதலிக்கவில்லை’ என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் ஒரு புறம் இருந்தது.

அதை விட, அவனுக்கும் தனக்கும் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருப்பது வேறு அவளின் இதயத்தைக் குடைவது போல் இருந்தது.

அவள் இருந்த மனநிலையில், அவன் சொன்ன ‘ஆள்முழுங்கி, நான் உன் வெற்றி தான்’ என்ற வார்த்தைகள் அவளின் மனதில் முழுதாகச் சென்று இறங்கவில்லை.

அவளின் வார்த்தைகள் அவனைக் காயப்படுத்த, “ஏய், லூசு போல உளராதே டி…” என்று அதட்டினான்.

அவளின் குழப்பமான முகமும், தள்ளி நிறுத்தும் வார்த்தைகளும் சில நொடிகளில் செழியனை நிதானத்திற்குக் கொண்டு வந்தது.

கொஞ்சல், மிஞ்சல் எல்லாம் அப்புறம். முதலில் அவளிடம் தன்னைப் பற்றி அனைத்தையும் சொல்லி, அவளுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

தன்னைப் பற்றி முழுவிவரமும் தெரியாமல் அவள் குழப்பத்தில் இருக்கும் போது தான் எது செய்தாலும் அனைத்தும் தவறாகத் தான் தெரியும் என்று நினைத்தவன் அவளிடம் பேச முடிவெடுத்தான்.

“அல்லி, முதலில் நான் யார், என் அம்மா அப்பா யார், உங்க வீட்டுப் பக்கத்தில் எதுக்குக் குடி வந்தேன். எல்லாமே சொல்றேன்.

அதைக் கேட்டுட்டு நீயே முடிவு பண்ணு. அதுக்கு முன்னாடி அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதே. இங்கே வா! இப்படி உட்கார்…” என்று அவளைச் சோபாவில் அமர வைத்தான்.

“டேய் செழிப்பானவனே, நீ அவளுக்குத் தெளிவுபடுத்துறது எல்லாம் அப்புறம். முதலில் எனக்குப் பதில் சொல்லுடா…” என்று வீட்டிற்கு வெளியே இருந்து ஆனந்தின் கையைப் பிடித்து இழுத்த வண்ணம் கோபமாகக் கத்திக் கொண்டு உள்ளே வந்தாள் ரத்னா.

“ரத்னா என் கையை விடு. எனக்கு ஒன்னுமில்லை…” என்று தன் கையை அவளிடமிருந்து பிரித்துக் கொள்ள முயன்றான் ஆனந்த்.

“நீ இப்ப பேசாம இருக்கியா?” என்று ஆனந்தை அதட்டியவள், செழியனின் புறம் கோபமாகத் திரும்பினாள்.

“உனக்கு இப்ப என்ன தெரியணும் ரத்னா? நான் அல்லிக்கிட்ட பேசணும். சீக்கிரமா சொல்லு…” என்றான் செழியன்.

“ஏண்டா நீ மட்டும் பேருக்கு ஏத்த மாதிரி செழிப்பா வந்திட்டு, என் ஆனந்தமானவனை ஆனந்தமே இல்லாம இப்படித் தலையில் கட்டோட கொண்டு வந்து சேர்த்திருக்க?” என்று கேட்டாள்.

“அது அந்த வெற்றிமாறனை பிடிக்கப் போனப்ப அவனுக்கு இவன் மேல் சந்தேகம் வராமல் இருக்கக் காயம் பட்டதா காட்ட வேண்டியதா போயிருச்சு ரத்னா…” என்றான் செழியன்.

“அதுக்கு ஏதாவது பொய்யா கட்டு போட வைக்க வேண்டியது தானே. நிஜமாவே மண்டையை உடைப்பியா நீ?”

“ரத்னா என் மண்டையை உடைச்சது செழியன் இல்லை. நான் தான் என்னை நானே காயப்படுத்திக்கிட்டேன். அதனால் அவனைத் திட்டாம உன் வாயை மூடுறீயா?” என்று எரிச்சலாகச் சொன்னான் ஆனந்த்.

“அதை எதுக்குடா இவ்வளவு எரிச்சலா சொல்ற?”

“பின்ன இங்கே என்ன நடக்குதுனே எனக்கு ஒன்னும் புரியலை. நீயும், செழியனும் காதலிக்கிறீங்கன்னு நினைச்சா, இவன் என்னென்னா வெற்றியா குடிசையில் இருக்குறப்ப அல்லி கூடக் கொஞ்சிக்கிட்டுத் திரியுறான்.

என்னடா இப்படிப் பண்ற, அப்ப ரத்னாவுக்கு என்ன பதில்னு கேட்டா, ஏதேதோ மழுப்பி என்னை அதட்டத்தான் செய்தானே தவிர உன்னைப் பத்தியும் பேச மாட்டேன்னு சொல்லிட்டான். அல்லிக்கான விளக்கமும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டான்.

இப்ப என்னென்னா நீ அவனை அல்லி கூடத் தனியா பேச விட்டுட்டு, இப்போ வெளியே வந்து என் தலையில் கட்டைப் பார்த்துப் பதறி, என் கிட்ட ஓட்டுதலா காட்டுற. எது தான் உண்மை? எனக்குத் தலையைப் பிச்சுக்கலாம் போல இருக்கு…” என்று கடுப்பாகச் சொன்னான் ஆனந்த்.

அவனும் தான் என்ன செய்வான்?

செழியனும், ரத்னாவும் காதலர்கள் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, குடிசையில் அல்லியுடன் காதல் என்று அவன் சுற்றியதைப் பார்த்து ஏற்கனவே குழம்பிப் போயிருந்தான்.

இப்போது என்னவென்றால் அவர்களைத் தனியாகப் பேசவிட்டு வெளியே வந்த ரத்னா, அப்போது தான் வண்டியிலிருந்து தலையில் கட்டுடன் இறங்கி வந்த ஆனந்தை பார்த்துப் பதறி அவனின் அருகில் ஓடியவள்,

“ஆனந்தமானவனே, என்ன… என்னாச்சு? தலையில் என்ன கட்டு?” என்று கேட்டுக் கொண்டே அவனின் தலையில் கைவைத்து வருடிக் கொண்டே கவலையுடன் கேட்டாள்.

“ஒன்னுமில்லை ரத்னா, சின்னக் காயம் தான்…” என்று சொல்லிக் கொண்டே அவளை விட்டு விலகி நின்றான்.

ஆனால் அதற்கு விடாத ரத்னா, “சின்னக் காயமா? தலையைச் சுத்தி இவ்வளவு பெரிய கட்டுப்போட்டுருக்க, இது சின்னக் காயமா? ரத்தம் கூட இன்னும் கசியிற மாதிரியே இருக்கே…” என்றவள் அவனை ஒட்டிக் கொண்டு நின்று அவனின் தலையை ஆராய்ந்தாள்.

அவளின் அக்கறையை விட அவள் காட்டிய உரிமை அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

அவன் அவளை யோசனையுடன் பார்க்க, “எல்லாம் அந்தச் செழிப்பானவனைச் சொல்லணும். அந்த வெற்றிமாறன்கிட்ட உன்னை மாட்ட விட்டுத் தலையில் அடிவாங்க வைச்சானா என்ன?” என்று கோபமாகக் கேட்டவள், அவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செழியனிடம் நியாயம் கேட்க வந்துவிட்டாள்.

அவளின் நடவடிக்கையும் அவனுக்குப் புரியவில்லை. செழியனின் மனதில் என்ன இருக்கிறது என்றும் அவனுக்குத் தெரியவில்லை என்பதால் குழம்பிப் போயிருந்தான் ஆனந்த்.

“உன் நிலை புரியது ஆனந்த். அல்லி மனநிலையில் தான் நீயும் இருப்பன்னு எனக்குப் புரியுது. நீயும் உட்கார் ஆனந்த். நாம பேசினால் தான் எல்லாம் தெளிவாகும்…” என்று ஆனந்தை இன்னொரு சோஃபாவில் அமர வைத்தான்.

பின் ரத்னாவின் புறம் திரும்பி, “என்னங்க மேடம், இப்பவாவது நான் உண்மையைப் பேசலாம் இல்லையா? இல்லை, இன்னும் என் கையைக் கட்டிப் போட போறீயா?” என்று கேட்டான்.

“ஸாரி செழியா, என்னால் தான் நிறையக் குழப்பம் நடந்து போயிருச்சு. நீ மட்டும் இல்லை, நானும் ஆனந்த் கிட்ட தெளிவா பேசணும்…” என்றவள் ஆனந்தின் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

அங்கே நடப்பது எல்லாவற்றையும் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அல்லிராணி.

அவளின் அருகில் இடம் இருந்தும், அங்கே அமராமல் அவளின் முகம் பார்க்கும் வண்ணம் அவளின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான் வெற்றிவேற்செழியன்.

“அல்லி, முதலில் என் முழுப் பேரு சொல்லிடுறேன்…” என்று அவன் ஆரம்பிக்க,

“அதெல்லாம் நாங்களே சொல்லியாச்சு…” என்று இடையிட்டாள் ரத்னா.

“இன்னும் வேற என்ன சொல்லி வச்சுருக்க, என் வேலையைப் பத்தியா? அதான் இவள் மலை, மடுன்னு உளறினாளா?” என்று அல்லியைச் சுட்டிக்காட்டிக் கேட்டான்.

“ஆமா, உன் வேலை, உன் பேரு மட்டும் தான் சொல்லியிருக்கேன். மத்ததெல்லாம் நீயே சொல்லு…” என்றாள்.

“அதோட நிறுத்தினியே சந்தோஷம்…” என்று அவளிடம் சொன்னவன், அல்லியின் புறம் திரும்பித் தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

அவனின் அப்பா, அம்மா… அவனின் படிப்பு, ஆனந்த், ரத்னாவும் படிக்கும் போதிலிருந்து தன் நண்பர்கள் ஆனது, அப்பாவின் இழப்பு, அடுத்து மாமா அத்தையின் இழப்பு, கிருதிலயா தன் வீட்டிற்கு வந்தது.

தான் வேலையில் சேர்ந்தது, கிருதிலயாவின் நடவடிக்கையில் இருந்து அவள் தற்கொலை செய்தது வரை அனைத்தும் சொன்னான்.

கிருதிலயாவைப் பற்றிச் சொன்னதும் அவனின் கண்கள் அவளின் புகைப்படத்தைப் பார்க்க, அல்லியும் பார்த்தாள்.

‘சின்ன வயசு பொண்ணு. எவ்வளவு அழகா இருக்கா. இப்படி அநியாயமா செத்துப் போயிட்டாளே…’ என்று பரிதாபப்பட்டாள் அல்லிராணி.

“இதுக்கு நடுவில் நீயும், ரத்னாவும் லவ் பண்றதா சொன்னீங்களே. அது என்ன செழியா?” என்று கேட்டான் ஆனந்த்.

அவனின் கேள்வியில் விலுக்கென்று நிமிர்ந்து செழியனைப் பார்த்தாள் அல்லிராணி.

அவளின் பார்வையைப் பார்த்துக் கொண்டே நண்பனுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான் செழியன்.

“நீயே நல்லா யோசிச்சு பார் ஆனந்த், நானோ, ரத்னாவோ ஒருத்தரை ஒருத்தரை காதலிக்கிறதா எங்கேயும் சொல்லவே இல்லை…” என்றான் செழியன்.

“என்ன சொல்ற நீ? நானே என் காதால கேட்டேனே?”

“எப்போ?”

“ஆபிஸில் ஒரு நாள்…”

“நான் ரத்னாவை லவ் பண்றதா சொன்னேனா என்ன?” என்று கேட்டான்

அந்தக் கேள்வியில் சில நொடிகள் யோசித்த ஆனந்த்திற்கு அப்படிச் செழியன் சொல்லவே இல்லை என்று புரிந்தது.

முதலில் அன்றைய தின பேச்சை அவன் முழுதாகக் கேட்கவே இல்லை.

“ரத்னா என்னிடம் வழக்கத்துக்கு மாறாக ரொம்பவும் ஒட்டி உரசுவதைப் பார்த்து, உன் உரசலில் வித்தியாசம் தெரியுது. என்ன ரத்னா என்று கேட்டு நீ என்னை லவ் பண்றியான்னு நான் கேட்க, ஆமா நீ நினைக்கிறது சரிதான்னு அவள் சொன்னதைக் கேட்டு நான் முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான்…” என்று செழியன் சொல்ல,

“இதுவரை மட்டும் தான் நான் கேட்டேன்…” என்றான் ஆனந்த்.

“அது எனக்கும், ரத்னாவுக்கும் தெரியும்…” என்றான் செழியன்.

“தெரியுமா?”

“ஆமா, தெரியும். ஆனா நீ ஏன் அப்படிப் பாதிப் பேச்சுலயே போன? அதுக்குப் பதில் சொல்லு” என்றாள் ரத்னா.

அவளின் கேள்வியில் அவஸ்தையாக நெளிந்து கொண்டான் ஆனந்த்.

“பதில் சொல் ஆனந்த்… இப்ப கூட வாய் திறக்க மாட்டியா?” என்று அழுத்தமாகக் கேட்டான் செழியன்.

செழியனும், ரத்னாவும் காதலர்கள் இல்லை என்று தெரிந்ததும் தன் மனதை திறக்க போனான் ஆனந்த்.

ஆனால் அதற்குள் அவன் இன்னும் மௌனமாக இருப்பதைப் பார்த்து “அவன் சொல்ல மாட்டான் செழியா. இவன் சொல்லாம மறைச்சு அவனுக்குள்ளேயே மறுகி போய் இருந்ததால் தானே நான் நாடகம் போட்டேன். அந்தச் சிக்கலில் உன்னையும் மாட்டி விட்டேன்…” என்றாள் ரத்னா.

“நாடகம் போட்டியா?” என்று ஆனந்த் கேட்க,

“ஆமா உன்னால் தான்…” என்றாள்.

“நான் என்ன செய்தேன்?”

“நீ எதுவுமே செய்யலை. அதுதான் காரணம்…” என்று குற்றம் சாட்டினாள்.

“ரத்னா…” என்று அவன் அதிர்வாக அழைக்க,

“நான் முன்னாடி மாதிரி சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை ஆனந்த். நேராவே கேட்கிறேன். நீ என்னை லவ் பண்றியா இல்லையா?”

அவளின் கேள்வியில் ஆனந்த் லேசாகத் தயங்கினான். பின் தொண்டையைச் செருமி கொண்டு “பண்றேன்” என்றான்.

“அப்புறம் ஏன் உன் லவ்வை என்கிட்ட சொல்லலை?”

“அது…” என்று அவன் தயக்க,

“லவ் பண்றவன் என்னடா பண்ணிருக்கணும்? அதைத் தைரியமா என்கிட்ட வந்து சொல்லியிருக்கணும். ஆனா நீ என்ன பண்ணின?” என்று கேட்ட ரத்னா, பதிலையும் அவளே சொல்ல ஆரம்பித்தாள்.

“ஏன்னா உனக்குத் தாழ்வு மனப்பான்மை. உன் கருமையான நிறத்தைக் குறித்து, கரடுமுரடான தோற்றம் குறித்து, ஏன் உன் பெயரை குறித்துக் கூடத் தாழ்வு மனப்பான்மை. அதான் என்னைக் காதலிச்சவன் என்கிட்ட லவ் சொல்லாம விலகி விலகிப் போன…” என்றாள்.

அது தான் உண்மையும் கூட. அதிகக் கருமையான நிறம் கொண்டவன் ஆனந்த். அதோடு அவனின் தோற்றமும் பார்க்கவே வில்லன் போல் கரடுமுரடாகத் தான் இருக்கும்.

அதோடு அவனின் முருகானந்தம் என்ற பெயரும் கூட ரத்னாவிற்குத் தான் பொருத்தம் இல்லாதவன் என்ற எண்ணம் வர, அவளின் மீது ஏற்பட்ட காதலை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டான்.

அதோடு வெற்றிமாறனிடம் வேலைக்குச் செல்லவும் தன் தோற்றம் தான் சரியாக இருக்கும். அதனால் நீ வெளியில் இரு. நான் அவனிடம் போகிறேன் என்று செழியனிடம் சொல்லி விட்டுத் தானே சென்றவனும் கூட.

இப்போது சரியாக ரத்னா அதைச் சொல்லிக் காட்ட அவனின் முகம் கன்றியது.

“இதை உன்னைக் குத்திக் காட்ட சொல்லலை ஆனந்தமானவனே. என்னைப் போய் நீ காதல் சொன்னா நான் நிராகரித்து விடுவேன்னு நீ நினைச்சுட்டயேனு வருத்தத்தில் சொன்னேன்…” என்றாள்

“அப்படியில்லை ரத்னா. எனக்குத் தயக்கமா இருந்துச்சு…”

“உன் தயக்கம் தெரியும். அதை விட்டு வெளியில் வந்து நீயா காதலை சொல்லணும்னு தான் நான் நாடகம் போட தயாரானேன்.

அன்னைக்கு நீ நினைப்பது சரிதான்னு செழியன் கிட்ட சொல்லிட்டு நீ அந்தப் பக்கம் போகவும், நான் ஆனந்தை லவ் பண்றேன் செழியான்னு சொன்னேன்…” என்று சொன்னவள், ஆனந்தின் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

அதைக் கேட்டு ஆனந்தின் முகம் மட்டுமில்லாது அல்லியின் முகமும் ஜொலித்தது.