மனம் கொய்த மாயவனே – 25

அத்தியாயம் – 25

அந்தப் பெண் உள்ளே நுழைந்து வெற்றி கதவை மூடும் வரையில் மட்டுமே அதிர்ச்சியுடன் இருந்தாள் அல்லிராணி.

அடுத்த நொடி தலையைச் சிலிர்த்துக் கொண்டு உதறியவள் விரைந்து சென்று வெற்றியின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.

அல்லி தட்டிய சில நொடிகளுக்குப் பிறகு கதவைத் திறந்தான் வெற்றி.

“ஏய் ஆள் முழுங்கி, என்ன இந்த நேரத்தில்…” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனைத் தாண்டிக் கோபமாக உள்ளே நுழைந்தவள் வீட்டிற்குள் இவளை எதிர்பாராமல் நின்றிருந்த பெண்ணையும், வெற்றியையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“நீ மாறிட்டன்னு நம்பினேனே வெற்றி?” சட்டென்று கோபம் போய் மரத்துப் போன குரலில் கேட்டாள்.

அவள் திடீரென வந்து நின்ற அதிர்ச்சி எல்லாம் சில நொடிகள் மட்டுமே. பின் சலனமே இல்லாமல் அவளைப் பார்த்தான்.

“ஏன் அந்த நம்பிக்கையில் இப்ப என்ன குறைஞ்சு போயிருச்சு?” என்று நிதானமாகத் திருப்பிக் கேட்டான் வெற்றி.

“கண்ணு முன்னாடி பார்த்த பிறகும் இப்படிக் கேட்க உனக்கு வெட்கமா இல்லை?” என்று அவனைப் பார்த்துக் கேட்டவள், அந்தப் பெண்ணை நோக்கி மேலிருந்து கீழ் வரை கை நீட்டிச் சுட்டிக் காட்டினாள்.

“அதான் கண்ணு முன்னாடி பார்த்துட்டியே. போ… போய்த் தூங்கு…” என்று சர்வசாதாரணமாகச் சொன்னவனை வெறித்தாள்.

“இனி நீ எனக்கு மட்டும் தான்னு சொன்னியே வெற்றி?” தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டானே என்ற ஆதங்கத்துடன் கேட்டாள்.

“சொன்னா சொன்னபடியே செய்யணும்னு சட்டமா இருக்கு?” அலட்சியமாகத் திருப்பிக் கேட்டான்.

‘எப்படி அலட்சியமாகப் பேசுகிறான்? இவனைப் போய் நம்பினேனே’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.

“இங்கே வந்து இந்த நேரத்தில் இப்படிப் பார்த்துக்கிட்டு நிற்காம முதலில் இடத்தைக் காலி பண்ணு…” என்றான் விரட்டுவது போல்.

“நீ ஒரு பொம்பளை பொறுக்கின்னு தெரிஞ்சும் நான் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தினேன்ல அப்போ நீ இப்படித்தான் என்னை விரட்டுவ…” என்று அவன் சொன்னதைத் தாங்கமுடியாமல் ஆத்திரமாகக் கத்தினாள்.

“ஆமாடி, நான் பொம்பளை பொறுக்கி தான். நான் இப்படித்தான் இருப்பேன். என்னைக் கேள்வி கேட்க உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. உன் வேலையைப் பார்த்துட்டு முதலில் இங்கிருந்து போ…” என்று அவளிடம் கத்தியவன், அந்தப் பெண்ணின் புறம் திரும்பி, “நீ கிளம்பு…” என்றான்.

அந்தப் பெண் ஒரு நொடி தயங்கி அல்லியைப் பார்க்க, “அங்க என்ன பார்வை? கிளம்பு…” என்று அதட்டினான்.

விறுவிறுவென்று நடந்த அந்தப் பெண் அல்லியைத் தாண்டும் போது அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் ஏதோ முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.

அந்தப் பெண்ணை வெளியே போகச் சொன்ன வெற்றி, இன்னும் அங்கே நின்று கொண்டிருந்த அல்லியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவன் போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பியிருந்ததால் அந்தப் பெண் அவளிடம் ஏதோ சொல்லிச் சென்றதைக் கவனியாமல் போனான்.

வெற்றியிடம் சண்டையிட தயாராக நின்றிருந்த அல்லி, அந்தப் பெண் சொல்லிச் சென்றதைக் கேட்டதும் பேச மறந்து அப்படியே நின்று போனாள்.

“இன்னும் என்ன இங்கே நின்னுட்டு இருக்க? இடத்தைக் காலி பண்ணு…” என்று எரிச்சலுடன் அதட்டினான் வெற்றி.

அவன் அதட்டலில் அல்லி அவனைப் புரியா பாவனையில் பார்க்க ஆரம்பித்தாள் .

அவளின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் வேகமாக வந்து அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்று வெளியே விட்டவன், அதை விட அதிவேகமாக வீட்டுக் கதவை அவளின் முகத்தில் அடிப்பது போல அடித்துச் சாற்றினான்.

ஆனால் அதைக் கூட உணராது அந்தப் பெண் சொல்லியதையே நினைத்துக் குழப்பத்துடன் நின்றிருந்தாள் அல்லிராணி.

தன்னைக் காதலித்துவிட்டு இனி நீ மட்டும் தான் எனக்கு என்று சொல்லிவிட்டு இப்போது மீண்டும் வேறு பெண்ணை வீட்டிற்குள் அழைத்து வந்திருக்கிறான் என்றால் தன் காதலுக்கு என்ன அர்த்தம்? என்று அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று அவள் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் சொன்ன வார்த்தைகள் அல்லியை அலைக்களித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் அப்பெண் சொன்னதை மனதில் ஓட விட்டாள்.

“நீ நினைக்கிற மாதிரி வெற்றி சாதாரண ஆள் இல்லை. அவன்கிட்ட இருந்து தள்ளியே இரு!” என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாள் அவள்.

இதற்கு என்ன அர்த்தம்? என்ன அர்த்தம்? என்று மீண்டும் மீண்டும் அல்லியின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது.

எதைச் சுட்டிக்காட்ட அவள் அப்படிச் சொல்லிச் சென்றாள்? முதலில் யாரென்றே தெரியாத அவள் பேச்சை எப்படி நம்புவது? என என்ன யோசிப்பது? என்ன நினைப்பது என்று கூடப் புரியாமல் குழம்பிப் போனாள்.

பேசாமல் வெற்றியிடமே கேட்டு விடலாமா? என்று நினைத்தவள் வேகமாகத் திரும்பினாள்.

அப்போது தான் அவளுக்குச் சுற்றுப்புறமே உறைத்தது.

வெற்றியின் வீட்டு வாசலில் நின்றிருப்பது கூட அவளுக்கு அப்போது தான் தெரிந்தது.

‘எப்போது வெளியே வந்தாள் என்று அவளுக்கு நினைவே இல்லையே’ என்று நினைத்து வீட்டுக் கதவை மலைத்துப் பார்த்தவள், அடுத்த நொடி படபடவென்று கதவைத் தட்டினாள்.

“இன்னும் நீ இங்கிருந்து போகலையா? இப்போ நீ இடத்தைக் காலி பண்ணலைனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்று ஆத்திரமாகக் கத்தினான் வெற்றி.

அவனின் கோபத்தில் கதவைத் தட்டிக் கொண்டிருந்தவளின் கைகள் அப்படியே நின்றன.

“ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து கூத்தடிக்க நினைச்சதுக்குப் கோபப்பட வேண்டியது நான். இவன் என்னமோ உத்தம யோக்கியன் போலக் கத்துறான்…” என்று இவளும் பதிலுக்குக் கத்தினாள்.

“ஆமாடி, நான் அப்படித்தான் கூத்தடிப்பேன். உனக்குப் பிடிக்காதுங்கிறதுக்காக என்னை நான் மாத்திக்க முடியாது…” என்று வெற்றியில் குரல் சூடாக வந்தது.

அவன் சொன்னதில் ஆத்திரம் தலைக்கேற மீண்டும் கத்தப்போனாள்.

ஆனால் அதற்குள் “அடியே, அறிவுகெட்டவளே! இந்த நேரத்தில் இங்க நின்னு என்னடி கத்திக்கிட்டுக் கிடக்க? நடுசாமம் வந்து இப்படிக் கதவைத் தட்டிக்கிட்டு நிக்கிறயே உனக்கு வெக்கமா இல்ல? மானத்தை வாங்காம வீட்டுக்கு வாடி!” என்று கோபத்துடன் மகளை அழைத்தார் சரோஜா.

தூங்கிக் கொண்டிருந்தவருக்குத் திடீரென மகளின் குரல் கேட்க சட்டென்று எழுந்து வந்திருந்தார். வந்தவருக்கு மகளின் கை கதவில் இருப்பதைப் பார்த்துக் கோபத்துடன் அருகில் வந்தார்.

தூக்கத்திலிருந்து பதட்டமாக எழுந்து வந்ததால் மகள் கத்திய வார்த்தைகள் அவரைச் சென்று சேராமல் போனது.

“நான் வெற்றிக்கிட்ட பேசணும்மா…” என்றாள்.

“பகலெல்லாம் பேசாத பேச்சா நைட் பேசப் போற? பேசுறாளாம் பேச்சு நட்ட நடு ராத்திரியில். இப்ப வீட்டுக்கு வரலை வெளக்கமாத்தாலேயே இரண்டு போடு போட போறேன்…” என்றவர் மகளின் கைப்பற்றி அழைத்துச் சென்றார்.

“உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கணும். விட்டா புள்ளயைப் பெத்துக்கிட்டுத் தான் கல்யாணம் முடிப்போம்னு சொல்லுவீங்க போல…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டே மகளை அழைத்துச் சென்றார்.

“ஆமா, புள்ள ஒன்னு தான் இப்ப குறைச்சல். அவன் வேற எவ கூடவாவது முதலில் புள்ள பெத்துக்காம இருக்கணும்…” என்று பதிலுக்கு அன்னைக்குக் கேட்காத வண்ணம் வாய்க்குள்ளேயே முனங்கினாள்.

வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவை அடைத்துச் சாற்றியவர் கதவை மறைப்பது போல் படுத்துக் கொண்டார்.

“இனி உன்னைக் காவகாத்துக்கிட்டே இருக்கணும் போல. போடி, போய்ப் படுத்து தூங்கு…” என்று இன்னும் நின்று கொண்டிருந்த மகளை அதட்டினார்.

“எம்மா, நீயா ஏதாவது கற்பனை பண்ணிட்டு பேசாதே. நான் வெற்றிக்கிட்ட பேசத்தான் போனேன். நான் ஒன்னும் அப்படி அலையிறவ இல்லை…” என்று அன்னையைப் பார்த்துக் கோபமாகக் கத்தியவள் அவளின் பாயில் சென்று படுத்துக் கொண்டாள்.

“ஆமா, பேசுறதுக்கு வேற நேரமே இல்லை பாரு. வாயை மூடிட்டு தூங்குடி…” என்று அதட்டி விட்டுத் தான் தூங்க ஆரம்பித்தார்.

அன்னை உறங்க, மகளோ உறக்கம் தொலைத்துக் கண்களை விரித்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

இப்போது மீண்டும் அந்தப் பெண்ணின் பேச்சு அவளுக்குள் ரீங்காரமிட ஆரம்பித்தது.

‘அவ ஏன் அப்படிச் சொல்லிட்டுப் போனா? வெற்றி சாதாரண ஆள் இல்லைனா அப்ப என்ன ஆள்?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவளுக்கு ஆரம்பத்திலிருந்து நடந்தது எல்லாம் மனதிற்குள் வந்து போனது.

பக்கத்துத் தெருவில் அந்த வீட்டிற்குள் சென்று மறைந்தது, வியாபாரம் பார்க்க என்று கிளம்பிப் போனவன் அங்கே போகாமல் இருந்தது, திடீரென அடிப்பட்டு வந்தது என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தாள். அதையும் விட அன்று சாலையில் அவளைப் பார்த்ததும் காரை சட்டென்று எடுத்துக் கிளம்பியதும் ஞாபகத்தில் வந்தது.

அப்போது அதற்கு வெற்றி சொன்ன காரணம் அதுவாக இருக்காதோ? என்று சிந்தித்தாள்.

ஏன் அவனுடன் எப்போதும் சுற்றும் முருகனும் அந்தப் பெண் சொன்னதைத் தானே சொன்னான்.

“வெற்றியை விட்டு நீ விலகி இருப்பது தான் உனக்கு நல்லதுமா” என்று அவன் தானே முதலில் சொன்னான்.

ஆனால் அப்போதெல்லாம் காதல் மயக்கத்தில் இருந்தவளுக்கு அவன் சொன்னதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவே தோன்றவில்லை.

அதையும் விட அவளுக்கே கூட ஒரு நாள் தோன்றியதே. வெற்றியின் செயல்கள் மர்மமாக இருப்பது போல… என்று நினைத்துக் கொண்டாள்.

‘அன்று தான் அவ்வாறு நினைத்தது சரிதானோ?’ என்று யோசித்துக் கொண்டே வந்தவளுக்குப் பளிச்சென்று மனக்கண்ணில் ஒன்று வந்தது.

சற்று நேரத்திற்கு முன் கதவைத் திறந்த வெற்றியின் சட்டைப் பையில் ஏதோ ஒரு சின்ன அட்டைப்பெட்டி வெளியே வரை நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

அந்தப் பெண்ணுக்கு கதவைத் திறந்து விட்டப்போது சட்டையில் எதுவும் இருந்ததா என்று யோசித்துப் பார்த்தாள்.

சில நொடிகள் சிந்தனைக்குப் பின் முதலில் அவனின் சட்டையில் ஒன்றும் இல்லாதது போல் தான் ஞாபக அடுக்கில் தோன்றியது.

‘அப்போ அந்தப் பொண்ணு தான் அந்த அட்டைப்பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்திருப்பாளோ?’ என்று நினைத்துக்கொண்டாள்.

‘அது என்ன அட்டைப்பெட்டியா இருக்கும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

“நாளைக்குக் காலைல முதலில் அதைப் போய்ப் பார்த்துடணும். வெற்றி அப்படி யாருன்னு தெரிஞ்சுக்கணும்…” என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே விடியும் நேரத்திற்காகக் காத்திருந்தாள் அல்லிராணி.

பொழுதும் விடிந்தது. எழுந்து அன்னையுடன் வீட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளின் எண்ணமெல்லாம் வெற்றியின் வீட்டிற்கு எப்படிப் போவது என்பதிலேயே இருந்தது.

அவள் நினைத்தால் இப்போது கூட அவனின் வீட்டிற்குச் செல்ல முடியும். ஆனால் ஏனோ அவனின் முகத்தைப் பார்க்க இப்போது விருப்பமில்லை அவளுக்கு.

அதனால் காத்திருந்தாள்.

அவளின் அன்னை வேலைக்குக் கிளம்ப, அல்லி கிளம்பாமல் நின்றாள்.

“என்னடி?” என்று சரோஜா கேட்க,

“அம்மா, நீ முன்னாடி போ. நான் கொஞ்ச நேரத்தில் வர்றேன்…” என்றாள்.

சரோஜா மகளைச் சந்தேகமாகப் பார்க்க, “அம்ம்ம்மா, நான் உன் பொண்ணுமா…” என்றாள் அழுத்தமாக.

“நான் உனக்குப் பயப்படலைடி. உன் வயசுக்குப் பயப்படுறேன்…” என்று அவளை விட அழுத்தமாகச் சொன்னவர், “சரி, சரி சீக்கிரமா வந்து சேரு…” என்று சொல்லிவிட்டு முன்னால் கிளம்பினார்.

ஏற்கனவே வெற்றியின் வீட்டை நோக்கி ஒரு கவனத்தை வைத்திருந்தவள் இப்போது அவன் கிளம்பிச் செல்லும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

‘அவன் கிளம்பிப் போகும்போது அந்தப் அட்டைப்பெட்டியையும் எடுத்துட்டுப் போய்ட்டா என்ன செய்வ?’ என்று அவளின் மனசாட்சி இடிந்துரைத்தது.

‘அவன் துணிமணி பெட்டி அங்க தானே இருக்கும். அதுக்குள்ள அவன் ஏதாவது அவனைப் பத்தி விவரம் தெரியுற மாதிரி வச்சுருக்கானான்னு தேடிப் பார்க்க வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

வெற்றியும் சற்றுநேரத்தில் கிளம்பிச் சென்றதும், அவனின் வீட்டை நோக்கிச் சென்றாள்.

ஏற்கனவே ஒரு முறை அவனின் வீட்டை சுத்தம் செய்வதாகச் சொல்லி ஒரு சாவியை அவள் வாங்கி வைத்திருந்தாள்.

அது கையில் இருக்க, அதை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றாள்.

அங்கே அவனின் பெட்டி பூட்டியிருந்தது. அவன் எப்போதும் பூட்டியே தான் வைத்திருப்பான் என்பதால் வீட்டிலிருந்து சில பழைய சாவிகளை எடுத்து வந்திருந்தாள்.

அதை வைத்துப் பெட்டியின் பூட்டை சிறிது நேரம் முயற்சி செய்ய, ஒரு சாவி பூட்டை திறக்க வைத்தது.

பெட்டியைத் திறந்தவள் தேட ஆரம்பித்தாள். அவன் அந்த அட்டைப்பெட்டியை எடுத்துச் சென்றிருப்பானோ என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி, அது உள்ளே தான் இருந்தது.

ஒரு சட்டையின் நடுவில் வைத்து மடித்துச் சுருட்டி உள்ளே வைத்திருந்தான்.

அதைக் கையிலெடுத்து ‘இது என்ன பெட்டியாக இருக்கும்?’ என்று ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லிராணி.