மனம் கொய்த மாயவனே – 2

அத்தியாயம் – 2

“ஏய் கிறுக்கி… கிறுக்கி… எங்க இருக்க?” என்று காட்டுக் கத்தலாகக் கத்தியவன் குரலைக் கேட்டு அங்கே வந்தது அவன் அழைத்த கிறுக்கி அல்ல.

“இப்போ எதுக்குடா கண்ணை முழிச்சும், முழிக்காமயும் இந்தக் கத்துக் கத்திட்டு இருக்க?” என்று அதட்டலுடன் கேட்டுக் கொண்டே அங்கே வந்த பவானி மகன் இருந்த நிலையைப் பார்த்துப் பக்கென்று சிரித்து விட்டார்.

“சிரிக்காதீங்கமா… எரிச்சலா இருக்கு. எங்க அந்தக் கிறுக்கி?” என்று சிடுசிடுத்த மகனைப் பார்த்து அவருக்கு இன்னும் தான் சிரிப்புப் பொங்கியது.

ஆனால் மகன் இன்னும் குதிப்பான் என்பதை அறிந்தவர், சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, ‘எனக்குத் தெரியாது’ என்பது போல் கையை ஆட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

“தெரிஞ்சாலும் நீங்க தான் அந்தக் கிறுக்கியைக் காட்டிக் கொடுக்க மாட்டிங்களே…” என்று எரிச்சலுடன் போர்வையை உதறிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தவன், மீண்டும் தன் எதிரே இருந்த கண்ணாடியில் தன் நிலையைப் பார்த்து இன்னும் சூடாகிப் போனான்.

“இந்தக் கிறுக்கியை இன்னைக்கு ஒரு வழி ஆக்காம விடப் போறதில்லை…” என்று சூளுரைத்துக் கொண்டவன் தன் அறையை விட்டு வெளியே வந்து கண்களை நாலாப் புறமும் ஓட்டினான்.

“எங்கே போனா இந்த ஜீரோ சைஸ் கிறுக்கி?” கண்களில் சிக்காமல் சடுகுடு ஆடியவளை நினைத்துப் பல்லைக் கடித்துக் கொண்டான்.

அவனின் அறையிலிருந்து சற்றுத் தள்ளி அவளின் அறை இருக்க, அங்கே சென்று கதவில் கை வைத்ததும் அது திறந்து கொண்டது.

உள்ளே சென்றவன் அறையை நோட்டம் விட, அவளிருக்கும் அரவமே தெரியவில்லை.

“ஏய், எங்க போன என் மாமன் பெத்த மகளே?” என்று அழைத்தவனுக்கு அமைதியே பதிலாகக் கிடைத்தது.

அறை, குளியலறை என அனைத்திலும் தேடிப் பார்த்தவன், அவள் கிடைக்காமல் போகவும் விடுவிடுவென்று வெளியே வந்து மாடியில் இருந்தபடியே கீழே எட்டிப் பார்த்தான்.

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தரையைத் துடைத்துக் கொண்டிருக்க, “சுப்புக்கா, அந்தக் கிறுக்கி அங்கே வந்தாளா?” என்று கேட்டான்.

அவனின் குரலில் கீழிருந்து நிமிர்ந்து பார்த்தவர் “தெரியலைங்களே தம்பி… நான் இப்பதான் வேலைக்கு வந்தேன். பாப்பாவ நான் இன்னும் பார்க்கலையே…” என்று கையை விரித்தவர் அவன் நிலையைப் பார்த்து விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.

ஆனால் முதலாளி முன் சிரிக்கக் கூடாது என்று நினைத்துச் சட்டென்று தன் வாயை மூடிக் கொண்டவர் நமட்டுச் சிரிப்புடன் குனிந்து கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தார்.

அவரின் சிரிப்பைக் கண்டு அவனின் கோபம் உச்சத்திற்கு ஏறியது.

“பார்க்கிறவங்க எல்லாம் என்னைப் பார்த்துச் சிரிக்கும் படி செய்து விட்டாளே பாதகத்தி. எங்கே போய்த் தொலைந்தாள்னு வேற தெரியலையே…” என்று கடுகடுத்தவன் காலை உதைத்துக் கொண்டு கோபத்துடன் படிகளில் படபடவென்று இறங்கினான்.

அவனின் வேகத்தில் படிகள் எல்லாம் அதிர்ந்து அடி வாங்கியது.

“ஏய் கிறுக்கி… நீயா வந்துரு… நானே கண்டுபிடிச்சா பனிஷ்மெண்ட் பெருசா கொடுத்துருவேன்…” கீழே இருந்த இரண்டு அறைகள், சமையலறை, வராண்டா என்று அவனின் தேடல் தொடர, அவனைக் கண்டு கொள்ளாமல் சமையலில் மும்முரமாக இருந்தார் பவானி.

ஒரு நாளைக்கு ஒரு வழக்கு இருந்தால் விசாரிப்பார். நாள் முழுவதும் வழக்கிலேயே சென்றால் அவரும் தான் என்ன செய்வார்?

அவர்களின் வழக்கிற்கு வாய்தா கூட வாங்க முடியாமல், அனைத்தையும் தள்ளுபடி செய்யப் பழகியிருந்தார்.

வீட்டைச் சுற்றி இருந்த சிறு இடத்தைச் சுற்றி வந்த பிறகும் அவள் இல்லாமல் போக, வீட்டிற்குள் நுழைந்தவன், “எங்கம்மா அவ?” என்று தாயிடம் இரைந்தவன் அவர் பதில் சொல்லும் முன், “ஏய்! கிருதிலயா எங்க இருக்க?” என்று நடுக் கூடத்தில் நின்று கொண்டு கத்தினான்.

“ஓய் மாமோய்! நான் இங்க இருக்கேன்…” என்று உச்சஸ்தானியில் வந்த குரல் மாடியிலிருந்து ஒலிக்க, ‘இவள் மேலே தான் இருக்காளா?’ என்று நினைத்துக் கோபத்துடன் வேகமாகப் படியேற, “மாமா… மாமா… மக்கு மாமா…” என்று தாளத்துடன் பாடியவளின் குரல் அவன் அறையிலிருந்து வந்தது.

“செழியா… நீ என்கிட்ட வர்றீயா…” என்று ராகம் போட்டு இழுத்தவளின் குரல் கட்டிலுக்கு அடியில் இருந்து வர,

“அடியேய் கிறுக்கி, எவ்வளவு நேரமா கத்துறேன். இங்க தான் இருக்கேன்னு சொன்னியா நீ?” என்று கட்டிலுக்கு அடியில் குனிந்து கோபத்துடன் கேட்டான்.

ஒருக்களித்துப் படுத்து, ஒரு கையால் தலையைத் தாங்கிப் பள்ளிக்கொண்டவள் போல் படுத்திருந்தவள், “நீ என்ன என்னையவா தேடின? யாரோ கிறுக்கியைத் தானே தேடின. நீ கிருதிலயானு கூப்பிட்டதும் நல்ல பிள்ளையா நான் குரல் கொடுத்தேனா இல்லையா?” என்று கண்ணைச் சுருக்கி, அவனுக்குப் பழிப்புக் காட்டிக் கொண்டே கேட்டாள்.

“முதலில் வெளியே எழுந்து வா கிறுக்கி. இந்த வீட்டில் கிறுக்கினாலே அது நீ தானே…” என்றவனை, வெளியில் வந்தவள் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முறைத்துப் பார்த்தாள்.

“என்ன? என்ன முறைப்புங்கிறேன்? இப்போ நான் தான் உன்மேல படு கோபத்தில் இருக்கேன். ஏன் இப்படிச் செய்து வைச்ச?” என்று தன் தலையைக் காட்டிக் கோபத்துடன் கேட்டான்.

அவனின் தாடையைப் பிடித்து, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்து விட்டுப் பக்கென்று சிரித்தாள்.

“சூப்பர் மாமா. பெர்ஃபெக்ட்டா அடிச்சிருக்கேன்…” பெருமையாகச் சிரித்துக் கொண்டாள்.

தன் தாடையில் இருந்த அவளின் கையைக் கோபத்துடன் தட்டி விட்டவன், “செய்றதெல்லாம் செய்திட்டு உன் வேலையை நீயே பாராட்டிக்கிறியா?” என்று கத்தினான்.

“நம்ம வேலையை அடுத்தவங்க பாராட்டுவது ஒரு வகைனா…‌ நம்மை நாமே பாராட்டிக்கிறது இன்னொரு வகை மாமா. நாம பார்த்த வேலையில் நாமளே சந்தோசப்படலைனா அடுத்தவங்களுக்கு எப்படி அதில் சந்தோசம் வரும்?” என்று நீட்டி முழங்கி வியாக்கியானம் பேசியவளைக் கண்டு அவனின் எரிச்சல் அதிகமானது.

அவளின் காதைப் பிடித்துத் திருகியவன், “என் தலையை அலங்கோலம் ஆக்கி விட்டுட்டு நீட்டி முழங்கி உனக்கு நீயே பாராட்டு‌ பத்திரமா வாசிச்சுக்கிற? நீ செய்த வேலைக்கு எனக்கு எப்படிச் சந்தோசம் வரும்? எரிச்சல் தான் வருது…” என்றான்.

பேசிக்கொண்டே நன்றாக அவளின் காது வலிக்கும் படி திருகி விட “ஹேய் செழியா‌…‌டேய் மாமா விடு…” என்று‌ உச்ச ஸ்தானியில் கத்தியவள், “உனக்குச் சந்தோசம் வரலைனா என்ன? எனக்கு வருதே…” என்று அந்த நேரத்திலும் உற்சாகமாகவே சொன்னாள்.

“வரும்… வரும்… உனக்கு ஏன் வராது? இங்க அலங்கோலமா நிற்கிறது நான் தானே! இன்னைக்கு உன் காதை விட முடியாது. முதலில் என் தலையை இருந்த மாதிரியே ஆக்கி விடு. இல்லனா உன் செம்பட்டை முடியை உனக்கு இல்லாம பண்ணிருவேன்…” என்றான் மிரட்டலாக.

“இதோ இதுக்குத் தான்… இதுக்குத் தான் உன் தலையை இப்படிப் பண்ணி விட்டேன். எவ்வளவு அழகா நான் பியூட்டிபார்லர் போய்த் தலைக்குக் கலரிங் பண்ணிட்டு வந்தா அதைச் செம்பட்டை முடினு சொல்லிக் கேலியா பண்ற?” என்று முறைப்பாகச் சொன்னவள் கஷ்டப்பட்டுத் தன் காதை விடுவித்துக் கொண்டாள்.

“நீ பண்ணிட்டு வந்த கலரிங்கை அழகுனு நீ தான் சொல்லிக்கணும். பார்க்கவே சகிக்கலை. வாந்தி வர்ற மாதிரி இருக்கு. அதைக் குறை சொல்லிட்டேன்னு என் தலையை அலங்கோலமா ஆக்கி வச்சுருக்கியா?”

“என் தலையைக் குறை சொன்னா நான் அப்படித்தான் செய்வேன்…” என்றாள் திமிராக.

“என் தலையைச் சரி பண்ணலைனா அடுத்து நீ கலரிங் பண்ண உன் முடி இருக்காது…” என்று கடுப்பாகக் கத்தினான்.

தொடர்ந்து மாற்றி மாற்றி இருவரும் கத்திக் கொண்டிருந்தார்கள்.

“என் கலரிங்கை குறை சொல்லாதே செழியா…” என்று கத்திய கிருதிலயாவின் தலைமுடி உச்சந்தலையில் இருந்து கழுத்து வரையிலான முடி கருப்பாகவும், கழுத்தில் இருந்து இடைக்குச் சிறிது மேலே வரை ஒன்று போல் வெட்டப்பட்டிருந்த நுனி வரை தங்க நிறத்திலும் மின்னியது.

அவள் பெருமையாகச் சொல்லிக் கொண்ட தங்க நிறம், செழியனின் பாஷையில் செம்பட்டை என்று ஆனதால் அதற்குப் பழி தீர்க்க, தன் தலைமுடியைப் போல அவனுடையதையும் ஆக்க வேண்டும் என்ற முடிவில் உருவானது தான் அவர்களின் சண்டை.

ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்து நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனின் தலை முடியில் ஒரு பக்கம் முழுவதும் அவன் சொன்ன செம்பட்டை நிறத்தை அடித்து விட்டிருந்தாள்.

ஒரு பக்கம் கருப்பாகவும், ஒரு பக்கம் செம்பட்டையாகவும் இருந்த அவனின் தலைமுடி தான் அவனின் அன்னைக்கும், வேலை செய்யும் பெண்மணிக்கும் சிரிப்பை வரவைத்திருந்தது.

“இதோடயே நான் எப்படி வேலைக்குப் போக முடியும்? இன்னைக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு. சீக்கிரம் என் தலையைச் சரி பண்ணி விடு…” என்று இன்னும் கத்திக் கொண்டிருந்தான் செழியன்.

“எனக்குக் கலரிங் பண்ணத்தான் தெரியும். எடுத்து விடத் தெரியாது. மேலோட்டமா தான் சும்மா அடிச்சு விட்டுருக்கேன். நீ வேணும்னா பார்லர் போய் டை அடிச்சுக்கோ…” என்று அலட்சியமாக உரைத்து விட்டு, அவனின் கைகளில் இருந்து நழுவி வெளியே ஓடினாள்.

“ஏய் கிறுக்கி… இந்தத் தலையோட முதலில் நான் எப்படி வெளியே போறது?” என்று அவளின் பின்னால் சென்று கத்தினான்.

“முக்காடு போட்டுப் போ…” என்று திரும்பிக் கூடப் பார்க்காமல் பதிலுக்குக் கத்தியவள் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

“என்கிட்ட திரும்பச் சிக்காமயா போவ? அன்னைக்குப் பார்த்துக்கிறேன் உன்னை…” என்று மூடிய கதவைப் பார்த்துக் கத்திக் கொண்டே வெளியே செல்ல தயாரானான் செழியன்.

உன் கத்தல் என்னை ஒன்றும் செய்யாது என்பது போல் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே தன் குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் கிருதிலயா.

அவள் சொல்லிச் சென்றது போல் தலையில் பெரிய கைக்குட்டையைக் கட்டிக் கொண்டுதான் வெளியே சென்று தலையைச் சரி செய்து விட்டு வந்தான்.

சரவணன், பவானியின் ஒரே புதல்வன் தான் செழியன்.

சரவணன் சில வருடங்களுக்கு முன்பே இறைவனடி சேர்ந்திருந்தார்.

பவானியின் அண்ணன் மகள் தான் கிருதிலயா. அவளின் பெற்றவர்கள் இருவருமே ஒரு விபத்தில் இறந்திருக்க, அத்தையான பவானியின் அரவணைப்பில் அங்கே வந்து சேர்ந்தாள்.

பள்ளி பருவத்தில் இருந்தே அவளின் இருப்பிடம் அத்தையின் வீடானது.

தாய், தந்தையின் இழப்பில் இருந்து அவளை வெளியே கொண்டு வர, செழியன் வம்பிழுத்து அவளின் கவனத்தைத் திசைத் திருப்ப ஆரம்பித்தது தான், இன்று வரை அவர்கள் உரிமையுடன் சண்டையிட்டுக் கொள்வது வரை தொடர்ந்து கொண்டிருந்தது.

கிருதிலயா கணினி பிரிவில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருப்பவள்.

அவள் இருக்கும் இடம் எப்போதும் ஆரவாரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் தான் இருக்கும். அதிலும் செழியனைச் சீண்டி விட்டு விளையாடுவதில் அவளுக்கு அலாதி சுகம் உண்டு.

அவன் ஆரம்பித்து வைத்த சீண்டும் வேலையை, அவனையே கலங்கடிக்கும் அளவிற்குக் கச்சிதமாகத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவளின் முக்கியமான குணம் ஒன்று உண்டு!

அது…!

தான் விரும்புவதைச் செய்து பார்த்துவிடும் ஆர்வம். அதிலும் அவளின் ஆர்வம் புதிது புதிதாக, விதவிதமாக இருக்கும்.

இப்போது தலையில் பாதிபாதியாகப் பிரித்து வேறு வேறு சாயமாகப் பூசியிருப்பவள், சில நாட்களுக்குப் பிறகு தலை முழுவதுமே ஏதாவது சாயத்தைப் பூசிக் கொண்டு வருவாள்.

திடீரென அதிகமாக உணவு உண்டு குண்டாக மாறுபவள், சில மாதங்களில் அந்தச் சாப்பாட்டை அப்படியே குறைத்து, ஜீரோ சைஸிற்கு வந்து நிற்பாள்.

இப்போது ஜீரோ சைஸில் தான் இருந்தாள். அதனால் தான் ‘ஜீரோ சைஸ் கிறுக்கி’ என்று அவளுக்குப் பெயர் வைத்திருந்தான் செழியன்.

அவள் இப்படி ஒரு நிலையில் இல்லாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பதால் தான் அவளின் கிருதி என்ற பெயரைக் கிறுக்கியாகவும் மாற்றி வைத்திருந்தான்.

பெற்றவர்களை இழந்த பெண் என்று பவானியும் அவளை அதிகம் கண்டிக்காமல் தாங்க, அவருக்கும் சேர்த்துத் தன் கண்டிப்பைக் காட்டுவான் செழியன்.

தலையை வெளியே சென்று சரி செய்து விட்டு மீண்டும் செழியன் வீட்டிற்கு வந்த போது, அவனின் கண்டிப்பைக் காட்டும் சந்தர்ப்பத்தை உருவாக்கி வைத்திருந்தாள் கிருதிலயா.

வீட்டிற்குள் நுழையும் போது வீடே வெகு அமைதியாக இருந்தது.

‘என்னடா இது? இது நம்ம வீடு தானா? இன்னைக்குக் கிறுக்கி லீவ்னு சொன்னாளே. அவள் வீட்டில் இருக்கும் போது வீடு இவ்வளவு அமைதியா இருக்காதே…’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டே பார்வையை ஓட்ட, பவானி கன்னத்தில் கை வைத்து, வருத்தமான முகப்பாவத்துடன் சாப்பாட்டு மேஜையின் அருகில் அமர்ந்திருந்தார்.

“என்னமா, என்னாச்சு?” அவர் அமர்ந்திருந்த நிலை அவனைப் பதட்டமடைய வைத்திருந்தது.

மகனை நிமிர்ந்து பார்த்தவர், “இந்தக் கிருதி ஏன் வரவர இப்படி எல்லாம் பண்றாள் செழியா?” எனக் கேட்டவரிடம் அவ்வளவு கவலை இருந்தது.

“என்னம்மா? இன்னைக்கு என்ன பண்ணி வச்சுருக்காள்?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் கிருதிலயா.

உயரமான காலணி அணிந்து ஒரே சீராக, அழகி போட்டிகளில் நடப்பது போல் ஒய்யாரமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அதுவும் அவள் உடுத்தியிருந்த உடையைப் பார்த்துப் பட்டெனக் கண்களைத் திருப்பிக் கொண்டான் செழியன்.

“ஏய் கிருதி… என்ன கோலம் இது?” அவளின் புறம் பார்வையைத் திருப்ப முடியாமல் திரும்பிக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

பவானியோ மகனின் சங்கடத்தைத் தவிப்புடன் பார்த்தவர், “நீ இன்னும் இந்த ட்ரஸை மாத்தலையா கிருதி?” என்று எரிச்சலுடன் கேட்டார்.

அன்னையையும், மகனையும் எரிச்சல் அடைய வைத்த கிருதிலயா அணிந்திருந்த உடை அப்படித்தான் இருந்தது.

முக்கியமான இடங்களை மட்டும் மறைத்து, மற்ற உடல் பாகங்களை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருந்தது அவளின் உடை! ஓவர் கோட் போல், மெல்லியதான ஒரு சட்டையைப் போட்டு இருந்தாலும், அது இருப்பதும் ஒன்று தான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்பது போல் தான் இருந்தது.

மிகவும் கவர்ச்சியாக அந்த உடை அவளைக் காட்ட, அவளோ ஒய்யாரமாக நடந்து வந்து செழியனின் பின் நின்றவள், “நான் எப்படி இருக்கேன்னு பார்த்துச் சொல்லு மாமா?” ‍என்று தன் உடலை இப்படியும், அப்படியுமாகத் திருப்பிக் காட்டிய படி கேட்டாள்.

ஆனால் அவளின் புறம் சிறிதும் திரும்பாத செழியன் அவளின் கோரிக்கையைக் கேட்டு முகத்தைச் சுளித்தான்.

அவள் நடந்து கொள்வது அதிகபடியாக இருக்கப் பவானியின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

“கிருதி…” என்று கோபமாக அழைத்தவர், “உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்கக் கிருதி? அசிங்கமா ட்ரெஸ் பண்ணிட்டு வீட்டுக்குள்ள சுத்துறதும் இல்லாம ஒரு ஆம்பளை முன்னாடி நின்னுக்கிட்டு என்னைப் பார்… என் உடம்பை பார்னு காட்டிக்கிட்டு நிற்கிறது அசிங்கமா இருக்கு…” என்று திட்டினார்.

எப்போதும் அவளைத் திட்டாத அத்தை அவளைத் திட்டவும் கிருதிலயாவின் முகம் நொடியில் வாடிப் போனது.

ஆனாலும் அவளின் குறும்புத்தனம் தலை தூக்க, “நான் ஒன்னும் அசிங்கமா ட்ரெஸ் பண்ணலை அத்தை. மார்டனா தான் ட்ரெஸ் பண்ணிருக்கேன். அதோட ஆம்பளைக்கு முன்னாடி நிக்கலை. பின்னாடி தான் நிக்கிறேன். எங்க உங்க பிள்ளை தான் எனக்கு முதுகை தானே காட்டுறார். முகத்தை எங்கே காட்டுறார்?” என்று சலித்துக் கொண்டாள்.

“நீ தான் வெட்கமில்லாம காட்டுறனா அவனும் வெட்கம் கெட்டுப் போய்ப் பார்ப்பானா? அத்தை இதுவரை உன்னைக் கடுமையா எதுவும் சொன்னதில்லை. இப்போ சொல்ல வச்சுடாதே. போ… போய் வேற ட்ரெஸ் போடு!” என்று அதட்டினார்.

“என்ன அத்தை நீங்க?” என்று செல்லமாகச் சிணுங்கிப் பவானியைச் சமாதானம் செய்ய முயன்றாள் கிருதிலயா.

“அம்மா பேச்சைக் கேளு கிருதி. போய் ட்ரெஸ் மாத்து. இனி இந்த ட்ரெஸ்ல நாங்க உன்னைப் பார்க்க கூடாது…” என்று திரும்பி நின்ற படியே அவளைக் கடிந்து கொண்டான் செழியன்.

இருவரும் திட்டவும் முகம் சுருங்கிப் போக, இருவரையும் உஷ்ண மூச்சுடன் பார்த்தவள் கோபத்துடன் காலை உதைத்துக் கொண்டே மாடி ஏறிச் சென்றாள்.

“என்னடா இவள் இப்படியெல்லாம் செய்கிறாள்? அப்பா, அம்மா இல்லாத பொண்ணாச்சேனு அவள் விருப்பத்துக்கு விட்டுக் கொடுத்துப் போனால் இவள் என்னென்னா புதுசு புதுசா ஏதாவது பண்ணி என்னைப் பதற வச்சுக்கிட்டே இருக்காள்…” என்று கவலைப்பட்டார் பவானி.

“அவள் ஒரு ஆர்வக்கோளாறுமா. அவள் வயசு அப்படி… இன்னும் கொஞ்சம் வயசானால் மெச்சூர்டா யோசிப்பாள். நீங்க கவலைப்படாதீங்க…” என்று அன்னையைத் தேற்றிவிட்டு வேலைக்குக் கிளம்பிச் சென்றான் செழியன்.