மதுவின் மாறன் 25 & 26 (நிறைவு)

வீடு வந்த மாறன் வாணியுடன் தனது அறைக்குள் புக,

“என்னடா நனைஞ்சிட்டே வந்திருக்க!!  அவளை ஆஃபிஸ்ல இருந்தே கூட்டிட்டு வந்துட்டியா?” என அவனின் தாய் பின்னால் பேசியபடியே வந்ததை கவனியாதவன்,

“அம்மாஆஆ  எதுனாலும் சாய்ந்திரம் பேசலாம்” எனக் கூறி தங்களது அறையின் கதவை சாற்றினான்.

“இதுங்க இன்னும் சமாதானம் ஆகலையா?” என மனதில் எண்ணிக் கொண்ட அவனின் தாய், “இதுக்கு ஒரு பஞ்சாயத்து வச்சே ஆகனும் போலயே! இவர்கிட்ட சொல்லி மது அப்பாகிட்ட பேச சொல்ல வேண்டியது தான்” என்று நினைத்துக் கொண்டே தனது வேலையை கவனிக்க சென்றார்.

அறைக்குள் சென்ற மது குளியலறைக்குள் புகுந்து கொள்ள, குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தான் மாறன்.

அவனுக்கு தற்போது அவள் குழந்தை உண்டாகியிருப்பது கூட மறந்து போயிற்று.  இவள் திரும்பவும் தன்னை விட்டு போய்விட கூடாதே என்கின்ற எண்ணமே மேலோங்கி நிற்க, மனதில் பயம் குடி கொண்டது.

“அங்க அவ முக ரியாக்ஷன் வச்சி ஒன்னும் கண்டுபிடிக்க முடியலையே! கோபத்துல இருக்காளா?? திரும்பவும் பிறந்த வீட்டுக்கு போகனும் அடம்பிடிப்பாளா?? என்ன செய்வானு கணிக்க முடியலையே” மனதில் எண்ணங்கள் சுழல கால் தானாய் நில்லாது நடை பயின்றது.

அவள் குளியலறையிலிருந்து ரிப்ஃரஷ் ஆகி வெளி வந்து மெத்தையில் அமர்ந்ததும் அவளெதிரில் போய் அமர்ந்தான் மாறன்.

அவள் என்ன நினைக்கிறாள் என ஆராயும் பாவனை அவன் முகத்தில்.

மாறனின் முகத்தையே ஒரு நொடி பார்த்திருந்தவள், அவனின் சிந்தனை போகும் திசையறிந்து அவனை ஆசுவாசபடுத்த எண்ணி, எதிரில் எக்கி அவனிதழில் இதழ்யொற்றி எடுத்தாள்.

நிமிடத்திற்கும் குறைவான அவளது அதிரடி செயலில் அவன் அதிர்ந்து விழிக்க,

அவனருகில் சென்றவள், அவன் மடியில் அமர்ந்து கொண்டு, அவன் கழுத்தில் மாலையாய் கைகளை கோர்த்து, அவனது தோளில் சாய்ந்து, “லவ் யூ கண்ணப்பா” என்றாள்.

அவன் மீண்டும் அதே பே வென்ற முழியில் முழித்து இருக்க, கலகலவென வாய்விட்டு சிரித்தவள்,

“என்னப்பா! மயக்கம் போட்டு விழுந்ததுல தலைல எங்கேயும் அடிபட்டுடுச்சோனு நினைக்கிறீங்களா?” என்றாள்.

அவன் ஆமென்றும் இல்லையென்றும் இருபுறமாய் தலை அசைக்க,

அவனது கைகளை தூக்கி தனது இடையை சுற்றி போட்டு கொண்டவள், அவன் முகத்தை பார்த்தவாறு பேச தொடங்கினாள்.

“தீபாவ பார்த்ததுல நான் ரொம்ப தெளிவாகிட்டேன்ப்பா”

“அவங்க நம்ம பக்கத்துல வந்து வெற்றி தானேனு கேட்டு எப்படி இருக்கீங்க வெற்றினு கேட்டதும், நல்லா இருக்கேனு சொல்லிட்டு, இது தான் என் மனைவினு என் தோள் மேல கை போட்டு பூரிப்பாய் சிரிச்சிக்கிட்டே நீங்க  சொன்னவிதம் இருக்குல”

“அதுல அந்த கண்ணுல அப்படி ஒரு காதல பார்த்தேன். அவங்க துளி கூட என் அப்யரன்ஸ் வச்சி இந்த பொண்ணா உங்க மனைவினு நினைச்சிட கூடாதுனு, என் மனைவினு நீங்க சொன்ன அந்த ஒத்த வார்த்தைலயே, இவ என் உயிர், இவ மேல நான் அவ்ளோ மதிப்பு வச்சிருக்கேனு எதிர்ல உள்ளவங்களுக்கு புரிய வச்சிட்டீங்க”

“அதுலயே இவளை நீ குறைவா எதுவும் யோசிச்சாலும் அவ்ளோ தான்ங்கிற செய்தியும் இருந்துச்சு”

“ஒரு வார்த்தைல என் தோளை சுத்தி போட்டிருந்த உங்க கையோட அழுத்தத்துல,  உங்க உடல் மொழியில, எல்லாத்தையும் வெளிபடுத்திட்டீங்களேனு ஆச்சரியமா அப்ப உங்களை நான் பார்த்துட்டு இருந்தேன்”

“அதுவும் கூட அந்த பொண்ணுக்கு என்னமோ நான் காதலா உங்களை பார்த்துட்டு இருந்தேங்கிற போல தான் தெரிஞ்சிருக்கும்” என சிரித்துக் கொண்டே வாணி கூற,

மாறன் இங்கே மலைத்து போய் மதுவை பார்த்திருந்தான்.

“அன்னிக்கு நீங்க உங்க பாஸ்ட் சொல்லும் போது, அப்ப எனக்கு என்ன தோணுச்சோ அதை அப்படியே வெளிபடுத்திட்டேன்.  அது அந்த நேர உணர்வு.  நம்ம மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிறவங்க கிட்ட தான்,  நாம நாமளா இருப்போம்! மனசுல என்ன தோணினாலும் அதை அப்படியே வெளிபடுத்துவோம்.  அது தான் புருஷன் பொண்டாட்டிகுள்ள நிறைய சண்டை வர்ற காரணமும் கூட.  நிறையவே உரிமையும் காதலும் இருக்கனால வர்ற சண்டைகள் தான் அது”

“எனக்கு இப்ப உங்க பழைய காதல் எல்லாம் பெரிசா தெரியலை.  உங்களுக்கு என் மேல இருக்க காதலும் அக்கறையும் உண்மையா இல்லையாங்கிறத தெரிஞ்சிக்க தான் மனசு போராடுச்சு இந்த ஒரு வாரத்துல.
நான் இல்லாமல் உங்களாலயோ நீங்க இல்லாம என்னாலயோ இருக்க முடியாதுனு புரிஞ்சிடுச்சு.  அதை நான் இந்த ஒரு வாரத்துல ரொம்பவே தெரிஞ்சிக்கிட்டேன்.  இனி என்ன நடந்தாலும் உங்க கூடவே இருந்து சண்டை போடுவேனே தவிற உங்களை விட்டுட்டு போக மாட்டேன்” எனக் கூறி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“என் மதுக்குட்டி எனக்கு ஷாக்கிங் சப்ரைஸா கொடுக்குதே” என கூறிக்கொண்டே அவள் இடையை சுற்றி போட்டிருந்த கைகளை இறுக்கியவன் அவள் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தான்.

“லவ் யூடா மதுக்குட்டி” என அவள் நெற்றியில் முட்டி, அவள் அன்பில் அவளின் நேசத்தில் அவளுள் அவன் கிறங்கி போக,

“ஹ்ம்ம்ம்ம்  ஹ்ம்ம்ம் வயித்தை இறுக்காதீங்க… பாப்பா இருக்கு” அவன் கையை அவள் கிள்ளிவிட,

“அட ஆமாஆஆஆ அதை எப்படி மறந்தேன்” என நெற்றியில் அடித்துக் கொண்டவன்,

“முதல்ல உங்கப்பாக்கு சொல்லனும்.  இந்நேரம் உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு பறந்து வந்துட்டு இருப்பாரு” என அவன் கூற,

“நீங்க போய் முதல்ல துணியை மாத்தி தலையை துவட்டுங்க. நனைஞ்சிட்டே ஹாஸ்பிட்டல் வந்திருக்கீங்க.  சளி பிடிச்சிக்க போகுது. போங்க”  எனக் கூறி அவன் மடியிலிருந்து அவள் எழும்ப,

“அச்சோ இவ்ளோ நேரம் ஈரத்துலயா உன்னைய உட்கார வச்சிருந்தேன்” என அதற்கும் அவன் நெற்றியில் அடித்துக் கொள்ள போக,

அவன் கை பற்றி தடுத்தவள், “நீ ஒன்னும் உட்கார வைக்கல. நானா தான் வந்து உட்கார்ந்தேன்டா” எனக் கூற,

அவளின் இந்த ஒருமை அழைப்பும் அன்பின் விளிப்பும் ஏகாந்த மனநிலையில் வருவதல்லவா!

விழி சிமிட்டாது அவளை பார்த்தவன் தன் இரு கைகளை விரித்து நீட்ட,  கூட்டிற்குள் அடையும் கோழி குஞ்சாய் ஓடிச் சென்று அவனின் நெஞ்சாங்கூட்டில் அடைக்கலமானாள். ஆம் மாறன் அவளை அவன் நெஞ்சளவிற்கு தூக்கியிருந்தான்.

சின்ன சின்னதாய் அட்சாரம் அவன் இதயத்தில் அவள் வைக்க, “என் பொண்டாட்டி பரவச நிலைல இருக்கா போலயே” என அவள் உச்சியில் இதழ் பதித்து பரவசமாய் இவன் கூற,

“ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப!! உங்களை விட்டு இருக்க மனசில்ல.  இப்படியே உங்க கைகுள்ள இருக்கனும்னு ஆசை ஆசையா இருக்கு” என அவன் நெஞ்சில் தாடை பதித்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்து ஏக்கமாய் அவள் கூற,

இத்தனை நாள் பிரிவு எத்தனையாய் அவளை தனக்காய் ஏங்க செய்திருக்கிறது! அவளின் அன்பை எண்ணி மருகி போனான் அவனும்.

“இப்படியே என் கைக்குள்ளயே தான் நீ எப்பவும் இருப்படா! இனி என்னிக்கும் உன்னைய விட்டு இருக்கிறதா ஐடியா இல்லை”  தன் வாக்காய் உரைத்தான் அவன்.

சரியாய் அந்நேரம் அவர்கள் அறையின் கதவு தட்டப்பட, “நீங்க துணி மாத்திட்டு வாங்க.  நான் அப்பாக்கு ஃபோன் பண்ணி பேசுறேன்”  என அவனை குளியலறைக்குள் அனுப்பிவித்து விட்டு வந்து கதவை திறக்க, அங்கு நின்றிருந்தார் அவளின் அப்பா.

“மதும்மா எப்படி இருக்க? மாப்பிள்ளை என்னனம்மோ சொன்னாரே! உனக்கு ஒன்னுமில்லையே” என பதறி வந்த அவரின் வார்த்தை அன்பை உணர்த்தியதென்றால், தனது அணைப்பின் மூலம் அவள் நன்றாய் இருககிறாளா என ஸ்பரிசித்து உணர முயற்சித்த அவள் அன்னையின் நடுங்கிய கரம் அவரின் அன்பை பறைசாற்றியது.

அவர்களிடம் அவள் நடந்ததை கூறிக் கொண்டிருக்க,  அப்பொழுது தான் மாறனும் குளியலறையிலிருந்து கேட்ட அவளின் பேச்சு சத்தத்தில் அவளின் அலுவலகத்தில் நிகழ்ந்ததை அறிந்துக் கொண்டான்.

இவள் மயங்கி விழுந்ததும் திவ்யா அவளை அலுவலகத்தில் இருந்த மருத்துவ அறைக்கு அழைத்து செல்ல, லோ பி பி இருந்ததால் மருத்துவர் ட்ரிப்ஸ் ஏற்ற கூறிவிட்டதாய் கூறியவள் அப்பொழுதே தனக்கு மயக்கம் தெளிந்து விட்டதாகவும் ஆயினும் திவ்யாவும் மருத்துவரும் சேர்ந்து ஆம்புலன்ஸில் வெளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியவள், அங்கு போன பிறகு வந்த மருத்துவர் தன் நாடியை பார்த்து விபரங்கள் கேட்டு டெஸ்ட் எடுக்க கூறியதாய் அவள் சொல்லி கொண்டிருந்த நொடி மாறன் வெளி வந்தான்.

மாறனை பார்த்ததும், “என்ன மாப்பிள்ளை எங்களை இப்படி பதற விட்டுட்டீங்க! அவ அங்கிருந்த நாளெல்லாம் காலை நைட் இரண்டு நேரமும் நான் தான் அவளுக்கு ஊட்டிவிட்டு சாப்பிட வச்சேன் மாப்பிள்ளை. மதியம் இப்படி அவ சாப்பிடாம இருந்திருக்கானு தெரியாம போச்சே! சரி அவ இங்க வந்து இரண்டு நாளாச்சே நீங்க அவ சாப்பிட்டாளானு பார்த்தீங்களா” என அவர் அவள் பிபியால் மட்டும் தான் மயங்கினாள் என எண்ணி பேசிக் கொண்டே போக,

திருமணத்திற்கு கூட அத்தனையாய் பூரித்து வெட்கங் கொள்ளவில்லை வாணி.

ஆனால் தற்போது வயிறு நிறைந்த விஷயத்தை மனம் நிறைந்தவனிடம் மட்டுமே கூற முடிந்தது அவளால்.

மற்றோரிடம் கூறயிலாமல் தடுக்கும் அவ்வெட்கத்தினை எங்ஙனம் ஒளித்து வைத்து உரைப்பேன் என தன் பெற்றோரிடம் கூறயிலாது அவள் தலை தாழ்த்தி தயங்கி தயங்கி நிற்க,

அவளின் வெட்கத்தை, அவளின் இந்த அவஸ்தையை கள்ள புன்னையுடன் வெகுவாய் ரசித்து பார்த்திருந்தான் மாறன்.

“நீங்களே சொல்லுங்க”  என்பது போல் அவள் அவனை பார்த்திருக்க,

“முடியாது! நீயே சொல்லு” என்பது போல்  இவன் சிரித்திருக்க,

இவர்களின் பார்வையும் சிரிப்பும் அவளின் வெட்கமுமே  அவர்களுக்கு விஷயத்தை புரிவித்திருந்தது.

“மதும்மா! அப்பா தாத்தாவாக போறேனா? அதான் மயக்கம் போட்டு விழுந்தியா?”  என தன் மனம் உணர்ந்த செய்தி உண்மையாய் இருக்க வேண்டுமே என்ற வேண்டுதலோடு அவர் தன் மகளை கேட்க,

ஆமா என வெட்கமாய் தலை அசைத்தாள் அவள்.

அதன் பின் வீடே கொண்டாட்ட களமாய் மாறிப் போக இனிப்பு பரிமாற்றத்துடன் தித்திப்பாய் பகிர்ந்துணரப்பட்டது இவர்களின் காதலும்.

காதலான வாழ்வின் அடிநாதமாய் அவளின் நேசமும் அவனின் பாசமும். தொடர்கதையாய் ஓர் நெடுந்தூர பயணம் அவர்களுடன் அவர்களின் காதல் மட்டுமே!!


மதுவின் மாறன் முடிவுரை (எபிலாக்)

மூன்று மாதங்களுக்கு பிறகு…

மாலை பொழுதின் பிற்பகுதியில் லேசாய் இருள் கவியத் தொடங்கியிருந்த நேரம், மென்காற்றின் ஸ்பரிசத்தில் மாடியிலிருந்த அந்த இருக்கையில் அமர்ந்து வானத்தின் வர்ணஜாலங்களை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் வாணி.

நம் எண்ணங்கள் வானில் ஓவியங்களாய் பல சமயங்களில் காட்சி தருவதை போல் வாணிக்கு வானம் மேகத்துடன் சேர்ந்து அவள் மனதிற்கேற்றார் போல் காட்சியளிக்க,  அவ்வோவிய காட்சி நிறைமாத பெண்ணாய் அவள் கண்களுக்கு தோன்ற,  அவளின் எண்ணங்கள் இரு நாட்களுக்கு முன்பு மாறனுடனான தனது அளவளாவலை நினைவு கூர்ந்தது.

அந்த நாள் இரவில், மாறன் வாணியுடன் பேசிக் கொண்டே அவளின் பாதங்களில் அழுத்தம் கொடுத்து பிடித்து  மசாஜ் செய்துக் கொண்டிருக்க, வீங்கியிருந்த அவள் பாதத்தின் வலி பஞ்சாய் பறந்து போவதை உணர்ந்தாள் வாணி.

“நீ உண்டாகுறதுக்கு முன்னலாம் எப்பவாவது தானே மதும்மா உனக்கு கால் பாதம் வீங்கும். இப்பெல்லாம் அடிக்கடி வீங்கி போதே!! வயிறு வேற பெரிசாகிட்ட மாதிரி இருக்கு. அஞ்சு மாசத்துலயே இவ்ளோ பெரிசாகுமா??  உனக்கு சீக்கிரமா வயிறு பெரிசாகுதோனு தோணுது” எனக் கேட்டுக் கொண்டே அதற்குரிய காரணத்தை அவனின் மூளை ஆராய்ந்திட்டிருக்க,

“ஆமாமாமா… எந்நேரமும் இதை சாப்பிடு அதை சாப்பிடுனு எதாவது கொடுத்துட்டே இருந்தா வயிறு பெரிசாகாம அப்படியேவா இருக்கும். இது உங்க பாப்பானால வந்த வயிறில்லைப்பா!! நீங்க எனக்கு ஊட்டி ஊட்டி வளர்ந்திருக்க வயிறு இது” என நகைத்துக் கொண்டே கூறினாள்.

“எனக்கு ஏற்கனவே லைட்டா தொப்பை இருக்கும் தானே அதனால உங்களுக்கு பெரிசா தெரியுது போல”  என இம்முறை கொட்டாவி விட்டுக் கொண்டே அவள் கூற,

“தூக்கம் வருதா மதும்மா!! நீ தூங்கு!! அடுத்த தடவை டாக்டரை பார்க்கும் போது கேட்டுக்கலாம்” என அவன் கூறிய நொடி,

“என்னதுஉஉஉஉ… டாக்டராஆஆஆ” என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கவாரம்பித்தாள் வாணி.

“ஏன் சிரிக்கிற”  என்பது போல் அவன் பார்க்க,

“ஏற்கனவே போகும் போதெல்லாம் கேள்வியா கேட்டு நீங்க செஞ்சி வச்சிருக்க அலப்பறைல,  அந்த டாக்டரம்மா செக்கப் செய்யும் போது, “கேள்வியா கேட்டு கொல்றாங்கமா உங்க புருஷன். தயவு செஞ்சி இனி வரும் போது உங்க அம்மா இல்ல மாமியார்…  ஏன் மாமனாரை கூட கூட்டிட்டு வாங்க.. ஆனா உங்க ஹஸ்பண்டை கூட்டிட்டு வராதீங்கனு மூஞ்சை பாவமா வச்சிக்கிட்டு அலறுனாங்க பாருங்க”  அங்கேயே எனக்கு சிரிப்பு தாங்கலை” எனக் கூறி அவள் சிரிக்க,

“எப்படியோ நம்மளையும் பார்த்து ஒருத்தங்க பயப்படுறாங்கல”  என அதையும் அவன் கெத்தாய் கூற, அவள் உறங்கியிருந்தாள்.

தற்போது தன் வயிறு பெரியதாய் தெரிவதற்கான காரணம் அறிந்திருந்தவளின் முகம் தானாய் மென்மையுற, “என் வயிறு பெரிசாகுறதை கூட கவனிச்சிருக்கீங்களே வெற்றிப்பா… நான் கூட அதை கவனிக்கலையே!!” என்றெண்ணியவள்,

“டாக்டர் சொன்னது போலவே உங்களால இந்த தடவை என் கூட செக்கப்க்கு வர முடியாம போய்ட்டே!! ஹாஸ்ப்பிட்டல்ல கூட நீங்க இல்லாம ரொம்ப அன்ஈஸியா ஃபீல் ஆச்சு. உங்க கிட்ட பேச ஆவலா காத்துட்டு இருக்கேன். சீக்கிரம் வாங்க வெற்றிப்பா” என மனதோடு அவள் பேசிக் கொண்டிருக்க,

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

அவளின் கைபேசி இப்பாடலை அழைப்பொலியாய் இசைக்க,  தன் மனம் கவர்ந்தவன் தான் அழைக்கிறானென பாடலின் மூலம் அறிந்திருந்தவளின் முகம் செம்மையுற்றது.

அழைப்பையேற்று பேசியவள், “உங்களுக்கு நூறு ஆயுசுப்பா” என்றாள்.

“அடியேய் எப்ப ஃபோன் செஞ்சாலும் இதை தானே சொல்ற!  எப்ப தான் என்னை நீ நினைக்காம இருக்க?  உன்னைய விட்டுட்டு ஊருக்கு வந்துட்டாலே போதுமே பொழுதன்னைக்கும் என்னைய மிஸ் செஞ்சே கொல்றடி நீ” 

அவளின் அன்பு தொல்லையை இன்பமான அவஸ்தையாய் அனுபவித்தவன் கூற,
இங்கே ஈஈஈஈ என இளித்திருந்தாளிவள்.

“சரி சரி என்னைய ஓவரா புகழாதீங்க. எப்ப தான் இங்க வர்ற ஐடியா உங்களுக்கு? பெங்களுர்லயே இருந்திடலாம்னு நினைச்சிட்டீங்களா? இப்படிலாம் லேட் செஞ்சீங்கனா அடுத்த தடவைலாம் உங்களை அனுப்பி வைக்க மாட்டேன் சொல்லிட்டேன்”  கோபமாய் அவள் கூற,

“எனக்கு மட்டும் என்ன ஆசையா இங்க ஹோட்டல் சாப்பாடு சாப்டுட்டு தனியா யாருமில்லாத வீட்டுல தங்கிட்டு இருக்கனும்னு” என அவன் கூற,

“ஹோ அப்ப நீங்க சமைச்சு தர ஆளில்லை, வீட்டுல கூட யாருமில்லைனு தான் என்னைய தேடுறீங்களே தவிற என் மேல அன்பு வச்சி தேடுலை! என்னைய மிஸ் செஞ்சி தேடலை அப்படி தானே! போங்க அங்கேயே இருங்க! நீங்க ஒன்னும் இங்க வர தேவையில்லை. நானும் ஒன்னும் உங்களை நினைக்க மாட்டேன்” அவன் பேசுவதை சற்றும் காது கொடுத்து கேளாது அழைப்பை துண்டிருந்தாள்.

அங்கு அழைப்பு துண்டித்து போன கைபேசியே சிரிப்புடன் பார்த்திருந்தான் மாறன்.

“எப்ப தான் சின்னபிள்ளை மாதிரி என் கிட்ட இப்படி சண்டைய போடுறதை நிறுத்த போறாளோ” என்றெண்ணியவன் சிரித்துக் கொண்டே கைபேசியால் தன் நெற்றியில் தட்டிக்கொண்டான்.

புசு புசுவென மூச்சு விட்டுக்கொண்டு கோபத்துடன் அவனை மனதில் வசைப்பாடிக் கொண்டிருந்தாள் வாணி.

அவன் வரவிற்காக காத்திருந்ததெல்லாம் மறந்து போயிருந்தது அவளுக்கு இந்நொடி.

“எப்ப பார்த்தாலும் நான் தான் அவரையே நினைச்சிட்டு இருக்கேன்.  அவரு பாட்டுக்கு நம்மளை நினைச்சி கூட பார்க்காம வேலையை பார்த்திட்டு இருக்காரு.  நானே போய் போய் பேசுறனால தானே அப்படி பண்றாரு.  இனி நானே போய் பேச மாட்டேன்.  அவரே பண்ணட்டும்” என மனதிற்குள் என்னென்வோ எண்ணி அமர்ந்திருந்தவள் மனம் சில நிமிடங்களில் சற்றாய் மட்டுபட,

கையிலிருந்த கைபேசியை எடுத்து பார்த்தவள், “கோபமா பேசி வச்சாளே! திரும்ப ஃபோன் செஞ்சி சமாதானம் செய்யனும்னு கூட தோணலை பாரு” மீண்டும் மனம் முருங்கை மரமேற,

தனது கைபேசியிலிருந்த அவனின் புகைபடத்தை பார்த்து “நான் ஒன்னும் உங்களுக்கு ஃபோன் செய்ய மாட்டேன்” என முகத்தை உர்ரென வைத்து கொண்டாள்.

சில நிமிடங்கள் காற்றில் கரைய, “ஹய்யோ !! என் மனசு மட்டும் ஏன் எப்ப பார்ததாலும் அவரையே நினைச்சிட்டு கிறுக்கா சுத்துது தெரியலையே! அவரை நினைக்க கூடாதுனு நினைக்கும் போது தான் அவர் நினைப்பாவே இருக்குதே!” என தன்னை எண்ணியே நொந்துக் கொண்டவள்,

கைபேசியை கையிலெடுத்து அவனின் எண்ணை எடுத்து வைத்து அழைப்பதற்கான அந்த பச்சை பொத்தானை அழுத்தலாமா வேண்டாமா என பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

கை தானாய் அவ்வெண்ணை அழுத்திய மறுமணித்துளியில் அழைப்பை ஏற்றிருந்தான் அவன்.

“செல்லக்குட்டிஈஈஈஈ” எனக்  கூறி வாய்விட்டு சிரித்தவன் குரலில் உன்னை நானறிவேன் என்கின்ற பெருமிதம் இருந்தது.

அவனின் செல்லக்குட்டி விளிப்பிலேயே, இருந்த மிச்சம்மீது கோபமும் காற்றில் பறந்துப்போக,

“என் செல்ல கண்ணப்பா!” என்று கூறியிருந்தாள் இவள்.

“எப்பப்பா வருவீங்க? ஐ மிஸ் யூ சோ மச்.  இப்ப உடனே உங்களை பார்க்கனும் போல இருக்கே” என்றவள் கூறியதும்,

“ஓ பார்க்கலாமே! அப்படியே கொஞ்சம் ரைட் சைட் திரும்பி பாருங்க மேடம்” என்றவன் கூறிய நொடி,

சட்டென்று  அவள் திரும்பி பார்க்க, மாடி படியில் ஏறி வந்துக் கொண்டிருந்தான் அவன்.

“வெற்றிப்பா” என அவனை நோக்கி ஓடியிருந்தாள் அவள்.

“ஹே பாத்து பாத்து” எனக் கூறி அவளை நோக்கி வந்தவன்  கைகளில் அள்ளியிருந்தான் அவளை.

அவன் கன்னத்தில் அவள் இதழ் பதித்திருக்க, “ஹேப்பி வெட்டிங் அன்னிவெர்சரி மதுக்குட்டி” என்றானிவன்.

அவளை கீழே இறக்கி விட்டவன், கைப்பற்றி படிகட்டு வழியாய் அழைத்து சென்று தரை பகுதி வந்தததும், “சர்ப்ரைஸ்” எனக் கூறி அவள் கண்களைப் பொத்தி கொண்டான்.

அவனின் தாயும் தந்தையும், “என்னடா செய்ற”  என்றவனை கேட்ட போதும்,

“ஒன்னுமில்லை அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ்.  நான் ஒன்னும் செஞ்சிட மாட்டேன் உங்க மருமகளை” எனக் கூறிக் கொண்டே அவளின் கண்களை மறைத்துக் கொண்டே அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவள் கண்கள் திறந்ததும், “வாவ்” என அவளின் வாய் அனிச்சையாய் மொழிய,  பார்வையில் கண்டதை விழியில் விழுங்கிக் கொண்டிருந்தாள்.

மாறன் கை அவளிடையை சுற்றியிருக்க, மது ஒற்றை கையை அவன் மார்பில் வைத்து மறுகையை அவன் முதுகில் படர விட்டிருக்க, இருவரின் பார்வையும் மற்றவரை காதலாய் ஸ்பரிச்சித்திருக்கும் ஆளுயர சித்திரம் சுவரளவிற்கு பெரியதாய் அவர்களின் அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

“வாவ் செம்மயா இருக்குப்பா!! எப்ப எடுத்த ஃபோட்டோ இது? யாரு எடுத்தது?” என கேள்விகளை அவள் அடுக்கிக் கொண்டே போக,

“பிடிச்சிருக்கா?”

“ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ப”

“ஃபோட்டோவை விட எனக்காக இந்த சர்ப்ரைஸ் ரெடி செஞ்ச உங்களை ரொம்ப ரொம்பவே பிடிக்குது” என அவனை அணைத்துக் கொண்டாள்.

“எப்ப வந்தீங்க?” என்றவள் கேட்க,

“நீ சண்டை போட்டு ஃபோனை வச்சதும்” என அவன் சிரித்துக் கொண்டே கூற,

“நானும் சர்ப்ரைஸ் வச்சிருக்கேனே” என கண்கள் மின்ன கூறினாளவள்.

“என்னவாம்!! என் செல்லக்குட்டி எனக்காக வச்சிருக்க அந்த சர்ப்ரைஸ்” என அவள் கன்னம் கிள்ளி அவன் கேட்க,

உனக்கென ஒன்றும்
எனக்கென ஒன்றும்
பெற்றெடுக்க பேராசை
கொண்ட எனக்கு,
இரு பிரசவ வலி வேண்டமென
ஒன்றோடு போதுமென
நீ கூறக்கேட்டு
என் மனம் விசனப்பட்டதை
அறிந்த என் கடவுளும்
அளித்தானே வரமொன்று
ஒரே பிரசவத்தில்
இருவரென!!

அவனிடம்  அவளளித்த வாழ்த்தட்டையில் இச்செய்தியை கவிதையாய் அவள் பகிர்ந்திருக்க,

சூல் கொண்டிருக்கும் தன் மனைவியின் செய்தியைக் கேட்டு வியந்து நின்றான் மாறன்.

“ஓ மை கடவுளே!  வாட் எ ப்ளஸண்ட் நியூஸ்” என சந்தோஷத்தில் பூரித்து அவளை தன் உயரத்திற்கு தூக்கி நெற்றியில் முத்தமிட்டிருந்தான் அவனும்.

“அய்யோ டிவின்ஸ் பாப்பா!! இரண்டு குட்டி பாப்பா என் குட்டிம்மா வயித்துல. நினைக்கவே ஆசை ஆசையா வருதே!! இப்பவே பார்க்கனும்னு தோணுதே” சந்தோஷத்தில் அவன் பிதற்றிக் கொண்டிருக்க,

“நான் அனுப்பின வீடியோ பார்த்தீங்களா இல்லையா?” என்றாளவள்.

“நான் இங்கே எவ்ளோ சந்தோஷமா பேசிட்டிருக்கேன். இப்ப உனக்கு அது தான் முக்கியமா?” அவள் நெற்றியில் முட்டினான்.  அவளை இன்னும் கைகளில் தாங்கி கொண்டு தான் இருந்தான்.

“ஆமாமா  அது தான் முக்கியம்.  நான் உங்களுக்காக நம்ம ஃபோட்டோஸ்லாம் கலெக்ட் செஞ்சி சொந்தமா என் குரல்ல பாடி அந்த வீடியோ செஞ்சேன்” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கூற,

“எனக்காக இப்ப அந்த பாட்டை பாடேன்” என்றானவன்.

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா

அவள் குரலில் இனிமையல்லாத போதும் அவள் ராகத்தில் ஸ்ருதி சேராத போதும் அவள் உணர்வுகளில் கலந்திட்ட அவனின் காதலை உயிர்ப்பாய் பாடலில் புகுத்தி உணர்ந்து அவள் பாடிய விதத்தில் நெக்குருகி போனவன் இக்காதலான வாழ்வு என்றும் தொடர வேண்டும் இறைவா என மனதார பிரார்தித்துக் கொண்டான்.

சில மாதங்கள் கழித்து மாறனை வெகுவாய் கலங்க வைத்து, தவிக்க விட்டு, தன் பிள்ளைபேற்றின் வலியை அவனுக்களித்து பெரும் போராட்டத்திற்கு பிறகு மதுரன், வெற்றிச்செல்வி ஆகிய இரு மழலை செல்வங்களை இன்பமாய் ஈன்றெடுத்தாள் வாணி. தங்களது அடுத்த தலைமுறையை நன்முறையில் பேணி காத்து நன்னெறி பயிற்றுவித்து வளர்த்தனர் அவ்வீட்டின் பெரியோர்கள்.

என்றும் மதுவின் மாறனாய் இதே காதலுடன் வாழ்நாள் முழுமைக்கும் இருவரும் அவர்களின் பிள்ளைகளுடன் இன்புற்று வாழ வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.

— சுபமான தொடக்கம்—