பூவோ? புயலோ? காதல்! – 8

அத்தியாயம் – 8

“ம்ப்ச்…” என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டாள் வேதவர்ணா.

இப்படி எத்தனை முறை சலித்திருப்பாளோ அவளே அறியாள்.

அவளின் உடல்நிலையும், மனநிலையும் சலிப்பை உண்டு பண்ணி கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அவளின் அலைபேசி அழைக்க யாரென்று எடுத்துப் பார்த்தாள். அவளின் கணவன் தான் அழைத்திருந்தான்.

கணவனின் பெயரை கண்டதும் அவளின் சலிப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிய இதழோரம் தங்கிய புன்னகையுடன் அழைப்பை ஏற்றாள்.

“ரித்வி கண்ணா…”

“ஹேய் வரு… என்ன இன்னைக்கு ஆஃபிஸ்ல உட்கார்ந்து கொண்டு கொஞ்சலா கூப்பிடுற?” என்று அலைபேசியின் வாயிலாகக் கேட்ட மனைவியின் ஹஸ்கி வாய்ஸில் தடுமாறிய படி கேட்டான் ரித்விக்.

“ஹ்ம்ம்… என்னன்னு சொல்ல தெரியலை ரித்வி. ஆனா உங்களை இப்பவே பார்க்கணும் போல இருக்கு…”

“பார்க்கலாமே… கேண்டினுக்கு வா பார்க்கலாம்…”

“ம்கூம் ரித்வி… தனியா பார்க்கணும் போல இருக்கு…”

“வாட் ஹேப்பண்ட் வரு? உடம்புக்கு எதுவும் பண்ணுதா?” என்று கவலையாகக் கேட்டான்.

அவர்களின் உரையாடல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

ரித்விக் மனைவியின் தாய் மொழியான தமிழைக் கற்றுக் கொள்வது போல, வேதவர்ணா கணவனின் தாய் மொழியான ஹிந்தியை கற்றுக்கொள்ளும் முயற்சியில் இருந்தாள்.

“உடம்புக்கு… ம்ப்ச்… ம்ப்ச்… சொல்லத் தெரியலை ரித்வி…” என்றாள் மீண்டும் சலிப்பாக.

“ஓ! சரி இப்போ கேன்டின் வா பார்க்கலாம். நேரில் பேசினா சரியாகிடும்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

தாய்மை அடைந்த பிறகு கடந்து சென்ற நான்கு மாதங்களாக மனைவியிடம் தெரியும் மாற்றங்களை ரித்விக்கும் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றான்.

ஏதோ ஒரு பதட்டம், எரிச்சல், அழுகை, கோபம், சந்தோஷம் எனப் பல விதமான உணர்வுகளைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

எந்த நேரம் எந்த மாதிரியான உணர்வுகளைக் காட்டுவாள் என்பதை வரையறுக்க முடியாமல் தான் ரித்விக்கும் தவித்துக் கொண்டிருந்தான்.

அவன் தவித்தான் என்பதை விட அவனின் மனைவி அவனைத் தவிக்க வைத்தாள் என்பதே சரியாக இருக்கும்.

வரும் நாட்களில் இன்னும் அதிகம் அவனைத் தவிக்க வைக்க அவனின் மனைவி காத்திருக்கிறாள் என்பதை அறியாமல் அவளின் வருகைக்காக அலுவலக உணவகத்தில் காத்திருந்தான் ரித்விக்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த வேதவர்ணாவின் முகம் சோர்வையும் தாண்டி மலர்ச்சியைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

மனைவியின் மலர்ச்சி கணவனின் முகத்திலும் மலர்ச்சியைத் தருவித்தது.

“கம் வரு… உனக்குச் சாப்பிட என்ன வாங்கட்டும்?” அவள் அமர இருக்கையை வசதியாக எடுத்துப் போட்டுக் கொண்டே கேட்டான்.

“புளிக்குழம்பு…” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தவளை “வாட்?” என அதிர்ந்து பார்த்தான்.

“புளிக் குழம்பு…” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன மனைவியைப் பார்த்து திருதிருவென முழித்து வைத்தான் ரித்விக்.

“நேத்து நீ வச்சியே அந்தக் குழம்பா?”

“அது புளிக்குழம்பு மாதிரி. ஆனா அது புளிக்குழம்பு இல்லை. அதுக்குப் பேரு புளீ குழம்பு…” என்று சோகமாகச் சொன்ன மனைவியை இப்போது முன்பை விடக் குழம்பி போய்த்தான் பார்த்தான்.

“என்ன சொல்ற வரு? எனக்கு ஒன்னும் புரியலையே…”

“புளி அதிகமா போட்டுட்டேன். சோ! அது புளீ குழம்பா மாறிடுச்சு… எனக்கு இப்போ புளிக்குழம்பு ஊத்தி சாதம் சாப்பிடணும் போல இருக்கு…” என்றாள் ஆசையாக.

உடனே அந்த ஆசை நிறைவேறாது என்ற சோகமும் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.

மனைவியை விட அவளின் ஆசையை நிறைவேற்ற முடியாத வருத்தம் ரித்விக்கிற்கு அதிகமாக வந்து அமர்ந்து கொண்டது.

அங்கிருக்கும் உணவகத்தில் அவள் கேட்ட குழம்பு கண்டிப்பாகக் கிடைக்காது. கர்நாடக உணவு முறையில் அவர்களின் வழக்கப்படி சிறிது வெல்லம் சேர்க்கப்பட்டுச் செய்யப்படுவதால் காரக்குழம்பு கூட இனிப்புச் சுவையுடன் தான் இருக்கும்.

அதனாலேயே அவ்வகை உணவு வகைகளை மறந்தும் கூட‌ வாங்கி விட மாட்டாள் வேதவர்ணா.

அப்படிச் சுவை பார்ப்பவளுக்கு உணவகங்களில் எங்கிருந்து மனைவி கேட்கும் புளிக்குழம்பை தேடி கண்டுபிடித்து வாங்கித் தருவது?

“இன்னொரு முறை வீட்டில் நீ சொன்ன புளிக்குழம்பு ட்ரை பண்ணி பாரு வரு. இப்போ வேற ஏதாவது கேளு வாங்கித் தர்றேன்…” மனைவியின் வாடிய முகம் பார்த்து சமாதானத்துடன் கேட்டான்.

“ம்ப்ச்…! எத்தனை முறை ட்ரை பண்ணினாலும் அம்மா வைக்கிற மாதிரி புளிக்குழம்பு வரவே மாட்டீங்குது…” என்று எரிச்சலுடன் சொன்னாலும் கணவனின் முகமும் தன்னுடன் சேர்ந்து சுருங்குவதைப் பார்த்து முயன்று சகஜ நிலைக்குத் தன் மனதை மாற்றியவள் “ஓகே ஃபீல் பண்ணாதீங்க ரித்வி. இப்போ எனக்கு ஜூஸ் மட்டும் வாங்கிக் கொடுங்க. அப்புறமா வரும் போது வேற வாங்கிச் சாப்பிட்டுக்கிறேன்…” என்றாள்.

மனைவி கேட்ட பழச்சாற்றை உடனே வாங்கித் தந்தான் ரித்விக். ஆனால் அதைப் பருகியவளின் முகத்தில் தான் பழைய மலர்ச்சி திரும்புவேனா என்றது.

“இன்னைக்கு நீ ரொம்ப மூட் அவுட்டா தெரியுறாயே வரு… உடம்புக்கு வேற எதுவும் செய்தா?”

“உடம்புக்கு ஒன்னும் இல்லை ரித்வி. ஆனா மனசுதான் ஏதோ பரபரப்பாவே இருக்கு. எதையோ மிஸ் பண்ற பீலிங் மனசை விட்டு போகவே மாட்டிங்குது…” என்று சோர்வுடன் சொன்ன மனைவிக்கு என்ன சொல்வது என்று கூடத் தெரியாமல் ரித்விக் தான் விழி பிதுங்கி போனான்.

இது தான் என்று தெரிந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். ஆனால் அவளுக்கே என்னவென்று தெரியாததை அவன் எப்படிச் சரிப்படுத்த முடியும்?

ஒருவேளை அவளின் அன்னையைத் தான் தேடுகின்றாளோ என்று கேட்டால் அதையும் இல்லை என்று உறுதியாக மறுப்பாள்.

கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தும் ஒரு முறை கூட இன்னும் தன்னை வந்து பார்க்காத அன்னையின் மீதான மிகுதியான கோபம் அவளை வேகமாக மறுப்பைச் சொல்ல வைத்துக் கொண்டிருந்தது.

முதலில் ஒன்று விட்ட மச்சினனின் மகள் திருமணம் என்று காரணம் சொன்னவர், அடுத்து தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை இப்போது வரமுடியாது என்ற காரணத்தைச் சொல்ல, அதில் இருந்து அன்னையிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டாள் வேதா.

ஆனால் உள்ளுக்குள் தாய்மை அடைந்த பெண்ணுக்குரிய எதிர்பார்ப்பு வளர்ந்ததில் அவளின் மனம் அன்னையின் மடிக்கும், அவரின் சமையலுக்கும் ஏங்கி கொண்டிருந்தது என்பதே உண்மை.

அந்த உண்மையைக் கணவனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தும் இருந்தாள். அவளின் கணவன் தான் மனைவியின் வாட்டத்தைக் கண்டு அவளை விட இரு மடங்கு வாடுகின்றானே!

அதனால் தன் அன்னை ஆசையைத் தனக்குள்ளேயே புதைக்கவும் பழகி கொண்டு வருகிறாள்.

“வேற எதுவும் சாப்பிடலைனா போகலாமா வரு… கொஞ்ச நேரத்தில் ஒரு மீட்டிங் இருக்கு. இன்னைக்கு ஈவ்னிங் வேணும்னா சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்…” என்று ரித்விக் சொல்ல,

“ஓகே ரித்வி… போகலாம். எனக்கும் கோட்(code) அடிக்கணும்…” என்று கூறி விட்டு எழுந்தவள் “ரித்வி ஒரு நிமிஷம் இங்கே வாங்களேன்…” என்று கணவனை ரகசிய குரலில் அழைத்தவள், கை கழுவும் இடம் நோக்கி நகர்ந்தாள்.

“என்ன வரு?” அவளின் அந்த அழைப்பை புரியாமல் பார்த்தாலும் அவனின் கால்கள் தன்போக்கில் மனைவியின் பின் செல்ல ஆரம்பித்தன.

“என்ன வரு ஹேண்ட் வாஷ் பண்ண வந்தியா?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் சுற்றி முற்றி பார்த்துத் தங்களைத் தவிர யாரும் அந்தப் பக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவளை “வரு…” என்றழைத்து மேலும் ரித்விக் ஏதோ சொல்லும் முன் வேகமாக அவனை நெருங்கிய வேதா அடுத்த வார்த்தையை அவனின் உதடுகள் உதிர்க்க முடியாமல் தன் இதழால் தடுத்திருந்தாள்.

அதிவேகமான முத்தம்! அதுவும் அழுத்தமாகப் பதித்திருந்தாள் வேதவர்ணா.

மனைவியின் திடீர் முத்தத்தில் திக்குமுக்காடித்தான் போனான் ரித்விக். “வரு…” என்று வியப்பாக அழைத்தவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியவள் “மீட்டிங்கு நேரமாச்சு ரித்வி வாங்க…” என்று விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றாள்.

வெளியிடத்தில் திடீரெனக் கிடைத்த முத்தத்தில் சொக்கிப் போனவன் “ஹேய்…” என்றபடியே மனைவியின் பின்னால் வேகமாகச் சென்று அவளைப் பிடித்தான்.

“ஷ்ஷ்… ரித்வி ஆளுங்க பார்க்க போறாங்க… வீட்டுக்குப் போனதும் நைட் மிச்சத்தைப் பார்த்துக்கலாம்…” என்று ரகசியமாகச் சொல்லி கணவனுக்குக் கடிவாளம் போட முயன்றாள்.

“பேசாமல் இருந்தவனை உசுப்பேத்தி விட்டுட்டு…” என்று கிறக்கமாக அவன் மனைவியுடன் நடந்து கொண்டே முனங்க, “க்கும்… க்கும்…” எனக் கணவனை மேலே பேச விடாமல் செருமியவளுக்கு இதழோரம் ஒட்டிக்கொண்ட சிரிப்பு மட்டும் மறைய மறுத்தது.

இருவரும் ரகசியக் குரலில் பேசிக்கொண்டே மின்தூக்கியின் அருகில் வந்து மேலே செல்ல பட்டனை அழுத்தி விட்டு காத்திருந்தனர்.

மின்தூக்கி வந்து கதவு திறந்ததும் ரித்விக்கின் கண்கள் ஆர்வத்துடன் மின்னியது.

மின்தூக்கியில் வேறு ஒருவரும் இல்லாமல் இருக்க, உள்ளே நுழைந்ததும் மனைவியைப் பார்த்து குறும்பாகக் கண் சிமிட்டினான்.

அவளின் கண்களிலும் ஆர்வம் ஜொலித்தாலும் ‘வேண்டாம்’ என்பது போல் பொய்யாகத் தலையை அசைத்தாள்.

‘வேணும்’ என்பது போல் மனைவியைப் பார்த்தபடியே மின்தூக்கியின் கதவு மூடும் வரை கூடப் பொறுக்க முடியாமல் மனைவியின் அருகில் நெருங்கினான்.

அவன் நெருங்கிய அடுத்த நிமிடம் மூடிக் கொண்டிருந்த கதவு மீண்டும் திறக்க ஆரம்பிக்க, அதை உணர்ந்து வேகமாக மனைவியை விட்டு விலகி நின்று வாயிலைப் பார்த்தான்.

அங்கே இருவர் மின்தூக்கியை தடுத்து உள்ளே வந்து கொண்டிருக்க, சட்டென்று ரித்விக்கின் முகம் சுருங்கி போனது.

ஆனாலும் அதை மற்றவர்களின் முன் காட்ட விரும்பாது தன் முகப் பாவத்தை மாற்றிக் கொண்டான்.

அவன் மாற்றி விட்டாலும் அவனின் மனைவி கண்டு கொண்டாளே. கணவனின் முகம் போன போக்கை பார்த்து வந்த சிரிப்பை அப்படியே வாயிற்குள் பதுக்கிக் கொண்டாள்.

மனைவியின் அடக்கப்பட்ட சிரிப்பை பார்த்து ‘என்கிட்ட நீ மாட்டித்தானே ஆகணும்’ என்பது போலப் பார்த்து வைத்தான் ரித்விக்.

மின்தூக்கியின் உள்ளே வந்த நபர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டே வந்ததால் தம்பதியரின் காதல் விளையாட்டைக் கவனியாமல் போனார்கள்.

அதற்குள் வேதா இறங்க வேண்டிய தளமும் வந்திருக்க, கணவனுக்குக் கண்களால் காதல் தூது விட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள்.

மனைவி அனுப்பிய காதல் தூதை சரியாகப் பிடித்துக் கொண்ட ரித்விக்கின் முகத்தில் மலர்ச்சி வந்து அமர்ந்து கொண்டது.

அதில் உல்லாச உவகையுடன் தன் வேலையைப் பார்க்க சென்றான்.

இரவு நெருங்கிய வேளையில் ரித்விக் வேலையை முடித்துக் கொண்டு முதலில் வந்து காரில் காத்திருக்க, மேலும் அரைமணி நேரம் கழித்துத் தன் வேலையை முடித்துவிட்டு அங்கே வந்து சேர்ந்தாள் வேதவர்ணா.

அவளின் முகம் மட்டும் இல்லாமல், உடலும் அவளின் சோர்வை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருக்க, “என்ன வரு… ரொம்ப டயர்டா தெரியுற? ஈவ்னிங் ஜூஸ் குடிக்கச் சொன்னேனே… குடிச்சியா?” என்று வேகமாகக் கேட்டான் ரித்விக்.

“ம்ப்ச்…!” என்று சலிப்பாக உச்சுக் கொட்டியவள், “அதெல்லாம் அப்புறம் பேசலாம் ரித்வி. எனக்கு உடனே படுக்கணும் போல இருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு போகணும். முதலில் வண்டியை எடுங்க…” என்று எரிச்சலான குரலில் சொன்னவள், அவளின் எரிச்சலில் வாடிப் போன கணவனின் முகத்தைக் கூடக் காணாமல் காரின் இருக்கையில் தலையைச் சாய்த்துக் கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டாள் வேதவர்ணா.

அவள் வெடுக்கென்று சொல்லிய விதத்தில் ரித்விக்கின் மனம் வாடினாலும், அவளின் சோர்வை மட்டும் கருத்தில் கொண்டு வாடிய மனதை வாஞ்சையாக மாற்றியவன் உடனே காரை கிளப்பினான்.

கார் கிளம்பிய சிறிது நேரத்திலேயே நிற்க, “ச்சே… இந்த டிராபிக் வேற…” என்று எரிச்சலுடன் தலையை நிமிர்த்திய வேதா, அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதைக் கண்டு கணவனின் புறம் கேள்வியாகப் பார்த்தாள்.

“ஜஸ்ட் எ மினிட் வரு… இதோ வர்றேன்…” என்று வேகமாகக் கதவை திறந்தவனை “ரித்வி… இப்போ எங்கே போறீங்க? வண்டியை எடுங்க…” என்று கடுப்படித்தாள்.

கதவை திறந்து வெளியே சென்றவன் தலையை மட்டும் காருக்குள் நீட்டி “ஷ்ஷ்…!” எனத் தன் உதட்டில் விரலை வைத்து அதட்டியவன், “கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்திரு வர்ணா. வீட்டுக்கு தான் போகப் போறோம். இப்போ ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் பொறுமையா இரு…” என்று அழுத்தமாகச் சொல்லி மனைவியை அடக்கி விட்டு கதவை மூடி விட்டு அங்கிருந்த கடையை நோக்கிச் சென்றான்.

கடுகடுவெனப் பொரிந்து கொண்டிருந்த வேதாவின் வாய் கணவனின் அதட்டலில் கப்பென மூடிக் கொண்டது.

வெளியே சென்றவன் மீண்டும் வரும் போது அவனின் கைகளில் பழச்சாறும், சான்ட்விச்சும் இருந்தன.

“இந்தா வரு சாப்பிடு. ஈவ்னிங் நீ எதுவும் சாப்பிடாம இருக்குறது தான் சிடுசிடுனு உனக்குக் கோபத்தை வர வைக்குது. இதைச் சாப்பிட்டு முடிக்கும் முன் நாம வீட்டுக்கு போயிடலாம்…” என்றான் சாந்தமாக.

அவளோ அவனைத் திரும்பி கூடப் பார்க்காமல் வெளியே பார்வையைப் பதித்து வெறித்துக் கொண்டிருந்தாள்.

“டேக் இட் வரு…” என்று அவன் மீண்டும் இறங்கி வர, அவள் சிறிதும் அசந்தாள் இல்லை.

அதில் அவனுக்கும் கோபம் வர, “வர்ணா…” என அழுத்தி அழைத்தான்.

“வர்ணானு கூப்பிட்டா சாப்பிட முடியாது…” விடைத்துக் கொண்டு சொன்னாள்.

தான் வருணா என்றழைத்ததே அவளின் கோபத்திற்குக் காரணம் என்று அறிந்ததும், அதரங்களில் புன்னகை அரும்ப, “ஸாரி, என் செல்லா குட்டி… இந்தாங்க…” அவ்வளவு நேரம் ஹிந்தியில் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தவன் தமிழில் நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.

“அது செல்லா குட்டி இல்ல. செல்லக்குட்டி…!” கரும சிரத்தையாகத் திருத்தினாள் அவனின் மனைவி.

“சரிங்க செல்லா குட்டி… ஜூஸ் குடிங்க…” என்றவன் வாயில் குறில் வராமல் நெடிலே வந்தது.

அவன் சொன்ன விதத்தில் வாய் விட்டு சிரித்தவள் பழச்சாற்றை வாங்கிப் பருகிக் கொண்டே “என்னை வர்ணானு கோபமா கூப்பிட்டீங்கல? அதனால வீட்டுக்கு போற வரை இந்தச் செல்லக்குட்டியை சரியா சொல்லிப் பழகணும். அது தான் என்கிட்ட கோபப்பட்டதுக்கு உங்களுக்குத் தண்டனை…” என்றாள் கண்ணைச் சிமிட்டிய படி.

‘என்னை விட நீ தான் என்னிடம் அதிகம் கோபப்பட்டாய்’ என்று சொல்லிக் காட்டாமல் “நோ… நோ வரு… நான் வேணும்னா பட்டிக்குட்டி சொல்றேன்…” மனைவியின் மனம் இலகுத்தன்மைக்கு வருவதை ரசித்துக் கொண்டே மேலும் அவளை இலகுவாக்க குழந்தையாய் தமிழில் பேச சிணுங்கினான்.

“பட்டிக்குட்டியா?” என்று முகத்தைக் கோணலாகச் சுளித்தவள், “பட்டினா மலையாளத்தில் டாக்னு அர்த்தம். அதனால அப்படிச் சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல…” பழச்சாற்றை முழுவதும் பருகி முடித்ததும் தெம்புடனே கணவனைச் செல்லமாக மிரட்டினாள்.

“பட்டினா மலையாளத்தில் தானே டாக்னு மீனிங்‌. தமிழில் இல்லை தானே? நீதான் சொல்லியிருக்கியே தமிழ்நாட்டில் பட்டினு பேருள்ள ஊர் நிறைய இருக்குனு. அப்படினா பட்டினு சொன்னா தப்பான மீனிங் இல்ல தானே?” தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழை வைத்து மனைவியைச் சமாளிக்கப் பார்த்தான் ரித்விக்.

கணவனின் சாமர்த்தியமான பேச்சைக் கேட்டு வியந்த வேதா விழி விரித்து “நீங்க பிழைச்சுக்குவீங்க ரித்வி…” என்று பாராட்டியவள், தான் உண்ண ஆரம்பித்த சான்ட்விச்சை கணவனுக்கும் சிறிது ஊட்டி விட்டுக் கொண்டே “ஆனா நீங்க என்ன சொல்லிச் சமாளித்தாலும் நான் உங்களை விடுவதா இல்லை. இப்போ செல்லக்குட்டி கூடப் பட்டுக்குட்டியையும் சரியா உச்சரித்துக் காட்டணும். அப்பதான் நான் கூலாவேன்…” என்று சொன்னவள் எரிச்சல் அனைத்தும் மறைந்து ஏற்கனவே முழுமையாகக் கூலாகி இருந்தாள்.

“வர வர நீ ரொம்பத் தான் தண்டனை கொடுக்குற வரு…” என்று சலித்துக் கொண்டாலும் மனைவி கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டு காரை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டே செல்லக்குட்டியையும், பட்டிக்குட்டியையும் உச்சரித்துக் கொண்டே வந்தான்.

வீடு வந்து சேர்ந்த போது, செல்லா குட்டி செல்லக்குட்டியாகவும், பட்டிக்குட்டி பட்டுக்குட்டியாகவும் மாறியிருந்தது.

தான் சொன்னதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு தன் சொல் பிழையைத் திருத்திக் கொண்டவனைக் கண்களில் காதல் மின்ன பார்த்தாள் வேதவர்ணா.

மனைவியின் காதல் பார்வையில் சொக்கிப் போனவனுக்குக் காலையில் அவளிடமிருந்து கிடைத்த இதழ் முத்தம் ஞாபகத்தில் வர, தான் கொடுக்க முடியாமல் போனதை இப்போது கொடுக்க ஆசைக் கொண்டு, தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தி விட்டு மனைவியை நெருங்கினான்.

அவனின் எண்ணத்தைக் கண்டுகொண்டவள் கண நேரத்தில் கணவனை விட்டு விலகி அதே வேகத்தில் காரில் இருந்தும் இறங்கியவள் அவனைப் பார்த்து நாக்கை துருத்தி பழிப்பு காட்டியவள் அவன் தன்னைப் பிடிக்கும் முன் தங்கள் தளத்தை நோக்கி விரைந்து நடந்தாள்.

மனைவியை முத்தமிட குவிந்த உதடுகள் குவிந்த படி இருக்க, மனைவி தன்னைக் கண நேரத்தில் ஏய்த்துத் தப்பிச் சென்றதை உணர்ந்த பின் குவிந்த உதடுகளை ஏமாற்றமாகப் பிதுக்கினான்.

“இன்னைக்கு இரண்டு தடவை என்னை ஏமாற்றி விட்ட வருக்குட்டி. அதுக்கெல்லாம் சேர்த்து இன்னைக்கு நைட் வசூல் பண்ணிடுறேன்…” என்று தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டவன் தானும் மனைவியின் பின் சென்றான்.

மீண்டும் மனைவி அவனுக்கு ஏமாற்றத்தை தான் பரிசாகத் தரப் போகிறாள் என்பதை அப்போது அறியாமல் போனான் ரித்விக்.