பூவோ? புயலோ? காதல்! – 7

அத்தியாயம் – 7

ஒரு சிறிய சாமி படத்தின் முன் மனம் உருகி வேண்டிய படி நின்று கொண்டிருந்தார்கள் இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும்.

சாமி படத்தின் முன் விரலி மஞ்சளுடன் பிணைத்திருந்த மங்கள நாண் வைக்கப்பட்டிருந்தது.

இறைவனைத் தங்களுக்குத் துணையாக இருக்க அழைத்து விட்டு மெல்ல தன் கண்களைத் திறந்த இளஞ்சித்திரன் தன் எதிரே இருந்த தன்னவளைப் பார்த்தான்.

அவளின் கண்கள் மூடியிருக்க, வாயோ மெல்ல முணுமுணுத்து வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தது. மெல்லிய கரையிட்ட பட்டுப்புடவையில் இருந்தாள். கழுத்தில் மெல்லிய செயின், காதில் அவள் எப்போதும் அணிந்திருக்கும் சின்ன ஜிமிக்கி, கையில் கண்ணாடி வளையல் என்று இருந்தவள் முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே “கண்ணும்மா…!” அவளின் பெயருக்கும் வலிக்குமோ என்பது போல் மென்மையாக அழைத்தான்.

“ஹ்ம்ம்…!” என மெல்ல தன் இமைகளை விரித்துத் தன்னவனைக் கண்டவள் விழிகள் கலங்கி கண்ணீரை வெளியிட தயாராக இருந்தன.

“இன்னும் ஓ பயம் போகலையா? நான் ஓ கூட இருக்கும் போது என்ன பயம்?”

“அது தானேய்யா ஏ பயமே? நீ ஏன்யா எங்கூட இருக்க? மனசுல நினைச்சவளையே கை பிடிக்கணும்னு என்ன இருக்கு? இந்தச் சிறுக்கி எப்படியும் போகட்டும்னு விட்டிருக்க வேண்டியது தான? இப்படி ஓ உசுரோட உன்னைய போராடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுப்புட்டேனே…!” என்று வேதனையுடன் சொன்னவளின் கண்களில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது.

அவளின் பேச்சில் அவ்வளவு நேரம் மென்மையைத் தாங்கியிருந்த தன் முகத்தில் கடுமையைக் கொண்டு வந்த இளஞ்சித்திரன், “இப்போ அழுகையை நிறுத்துறியா இல்லையா? உன்னைய நேசிக்கிற ஏ உசுருக்கு ஓ கூட இருந்தாதேன் இந்த உசுருக்கே மதிப்பு! உன்னைய பிரிஞ்சுதேன் இந்த உசுரு நிலைக்கணும்னா அப்படிப்பட்ட இந்த உசுரே வேணாம்னு சொல்லிப்புடுவேன். இந்த வாழ்க்கையும் ஒரு முறை தேன்… சாவும் ஒரு முறை தேன். அந்தச் சாவு ஓ கூட வாழ்ந்த பிறகு வந்தா நான் சந்தோசமாவே சாவே…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்,

“யோவ்…! வாயை மூடுய்யா…” என்று கத்தியிருந்தாள் கயற்கண்ணி.

“ஓ மனசில் என்னய்யா நினைச்சுட்டு இருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு சொல்லிப்புட்டுச் சாவு கீவுனு பேசிட்டு இருக்க… வாழணும்னு தானே உசுரை கையில பிடிச்சுக்கிட்டு ஓடி வந்தோம்? வாழ்ந்துதேன் பாப்போமே… அப்படி ஒருவேளை சாவு வந்தா நீ ஏ புருஷனாவும், நான் ஓ பொஞ்சாதியாவும் செத்துக்கலாம். என்னைய விட்டுத் தனியா செத்துக்கலாம்னு மட்டும் கனவு காணாதே. ஓ மூச்சு நிக்கிறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி ஏ மூச்சு நின்னுரும். சாவு வர்றப்ப வரட்டும். இப்ப சந்தோசமா வாழ்ந்து பார்ப்போம் வா… கட்டுய்யா தாலியை…” என்று மூச்சுக் கூட விடாமல் பொரிந்தாள்.

அவள் ஆவேசமாகப் பொரிய இளஞ்சித்திரனோ அமைதியாக அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் கண்களில் ரசனை பொங்கி வழிந்தது.

ஆவேசம் அடங்கியதும் அவனின் பார்வையைக் கண்டு, “என்னய்யா…?” என்று கேட்டவளின் குரலில் குழைவு வந்து அமர்ந்து கொண்டது.

அவன் பதில் சொல்லாமல் இமையைக் கூடச் சிமிட்டாமல் பார்த்தான்.

“என்னய்யா இப்படிப் பார்க்கிற? என்னைய முன்ன பின்ன பார்க்காத மாதிரி…” அவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் கேட்டாள்.

“முன்னால பார்த்த கண்ணிவெடியை ரொம்ப நாள் பின்னால பாக்குறேன்…” என்று சொன்னவனின் வார்த்தைகளில் இப்போது காதல் கரை புரண்டோடியது.

அவன் சொன்ன வார்த்தையை விடச் சொல்லிய விதத்தில் சொக்கிப் போனாள் கயற்கண்ணி.

கண்ணிவெடி அவளின் படபடப் பேச்சிற்கு அவன் வைத்த பெயர்.

அதையும் எப்போதும் அவளின் பேச்சை ரசித்துக் கொண்டே சொல்லுவான்.

கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்களின் விளைவாக அவளின் துடுக்கான பேச்சு குறைந்து அமைதியை தத்தெடுத்திருந்தாள்.

இன்று மீண்டும் மீண்டு வந்த அவளின் பேச்சில் அக்காதலனின் மனம் மயங்கித்தான் போனது.

“யோவ்! பார்த்தது போதும்… சாமியை கும்பிடு…” என்று அவனின் கவனத்தைத் திருப்ப சொல்லிவிட்டுக் கண்களை இறுக மூடி கடவுளை வணங்குவதாகப் பாவ்லா காட்டியவளை கண்டு வாய் விட்டுச் சிரித்தான் இளஞ்சித்திரன்.

அவனின் சிரிப்புச் சப்தம் கேட்டு அரையும் குறையுமாக மூடியிருந்த கண்களைப் பட்டென்று திறந்தாள் கயற்கண்ணி.

அவளின் விழிகள் விரிந்து விழுங்கியன தன் காதலனின் சிரிப்பை!

அவளின் பேச்சில் அவனின் மனம் மயங்கியது போல், அவனின் சிரிப்பில் அவளின் மனம் மயங்கி நின்றது.

“நீ இப்படி வாய் விட்டு சிரிச்சு எம்புட்டு நாளு ஆச்சுய்யா? இனி நம்ம வாழ்க்கைல எம்புட்டுக் கஷ்டம் வந்தாலும் இந்தச் சிரிப்பை மட்டும் விட்டுறாதய்யா… இந்தச் சிரிப்பை பார்த்தா ஏ பக்கத்துல வர்ற எந்தத் துன்பத்தையும் என்னைய விட்டு விலக்கி நிறுத்தி வைக்க என்னால முடியும்யா…” என்று அவனின் சிரிப்பை பார்த்துக் கொண்டே அழுத்தமாக உரைத்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டு மென்மையாகச் சிரித்தவன், “நானும் சிரிச்சு, உன்னையவும் வாழ்வு முச்சூடும் சிரிக்க வைப்பேன் கண்ணு…” என்று உறுதியுடன் சொன்னவன் சாமி படத்தின் முன் இருந்த மங்கள நாணை எடுத்தான்.

எதிரே இருந்தவளின் கண்ணோடு கண் நோக்கியவன், “கட்டட்டுமா கண்ணு?” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.

“கட்டுய்யா…” அவனின் கண்களைத் தயங்காமல் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

அவளின் சம்மதம் கிடைத்ததும் மெல்ல அவளை நெருங்கியவன் தன் கையில் இருந்த மங்கள நாணால் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் உயிரின் பாதியாக அவளை மாற்றிக் கொண்டான்.

அவன் கட்டிய தாலி கழுத்தில் ஏறியதும், கண்களை மூடி தன் மாங்கல்யம் நிலைக்கக் கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

அதன்பிறகு குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் வைத்து விட்டான்.

அங்கே மேளதாள சப்தம் இல்லாமல், உற்றார் உறவினர் இல்லாமல், நண்பர்களின் கேலி, கிண்டல் இல்லாமல், பெற்றவர்களின் நெகிழ்வான கண்கலங்கல்கள் இல்லாமல் அமைதியாக நடந்தேறியது இளஞ்சித்திரன், கயற்கண்ணியின் திருமணம்!

“இப்ப நாம ரெண்டு பேரும் புருஷன், பொஞ்சாதி கண்ணு…” என்று குரல் நெகிழ அவன் சொல்ல ‘ஆமாம்…’ என்று கண்களில் நீர் கசிய தலையசைத்தாள் அவனின் மனைவி.

“இங்கன ஏ பக்கத்தில் வந்து நில்லு கண்ணு‌. ரெண்டு பேரும் சேர்ந்து புருஷன் பொஞ்சாதியா சாமிகிட்ட வேண்டிக்குவோம்…” என்றான்.

“தங்களின் மண வாழ்வு நீடித்து நிலைக்க வேண்டும்” என்பதே இருவரின் வேண்டுதலாக இருந்தது.

கடவுளை கீழே விழுந்து வணங்கி எழுந்தவர்கள் அடுத்தும் சிறிது நேரம் பேச்சற்று ஒருவரின் கையை ஒருவர் பற்றிக் கொண்டு சாமி படத்தையே பார்த்த படி நின்றிருந்தார்கள்.

பேச்சில்லா மௌனம் அங்கே ஆட்சி செய்தது.

ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட இளஞ்சித்திரன் “அங்கன வா கண்ணு! ஓ கிட்ட சில விசயம் பேசணும்…” என்று மனைவியை அழைத்துச் சென்று அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்துவிட்டு அவளின் முன் யோசனையுடன் நடந்தான்.

“இந்தப் பிளாட் வீடு ஏ பிரண்டோட பிரண்ட் வீடு கண்ணு. மெட்ராசுல வேலை பாக்கும் போது அவரு பழக்கம். நம்ம லவ்வு விசயத்தில் இருக்குற சிக்கலை சொல்லவும் ஒத்தாசை பண்ணுறேன்னு முன்னால வந்து, அவருக்குத் தெரிஞ்ச பிரண்டுக்கிட்ட பேசி இந்த வீட்டை ஏற்பாடு பண்ணி கொடுத்தாரு.

இந்த வீட்டு ஓனர் இப்போ அமெரிக்கால இருக்கார். அவர் திரும்பி வர ஒரு வருசம் ஆகுமாம். அவர் இதுக்கு முன்ன இங்கன தான் தங்கி இருந்திருக்கார். இப்போ வெளிநாட்டுக்கு போகவும் வீட்டை பூட்டி போட்டுருக்கார். இதுக்கு இடைல நான் வீடு பத்தி விசாரிக்கவும், என் பிரண்டு அவர் பிரண்ட்கிட்ட இந்த வீடு சும்மா தானே கிடக்கு உதவி பண்ண முடியுமானு கேட்டுருக்கார். அவரும் நம்ம லவ்வுக்காகச் சரினு சொல்லி விட்டுட்டார்.

இங்க இருக்குற சோஃபா, கட்டில், மெத்தை, டிவி, வீட்டு சாமான் எல்லாம் ஓனர் வாங்கிப் போட்டது தேன். அதனால இப்போ தங்குற இடம் தேட வேண்டிய வேலை மிச்சம்.

அடுத்து இந்த வீட்டுக்கு வாடகையா பாதி வாடகை மட்டும் கொடுத்தா போதும்னு சொல்லி இருக்கார். அப்புறம் நம்ம சாப்பாட்டுச் செலவு, உடுப்பு, அன்றாடத் தேவைக்கான செலவுனு அம்புட்டையும் பாக்கணும்.

இந்தச் செலவை எல்லாம் சமாளிக்க எனக்கு வேலை கிடைக்கணும். பெரிய உத்தியோகத்துக்குப் படிச்சிருந்தாலும், வேலை சட்டுனு கிடைக்கும்னு சொல்ல முடியாது. அதுக்காக அந்த வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மாவும் இருக்க முடியாது.

நான் ஏற்கனவே வேலை பார்த்த பணம் கொஞ்சம் கையிருப்பு இருக்கு. அத வச்சு கொஞ்ச நாள ஓட்டிடலாம். அது கூடவே வேறு எதுனாலும் ஒரு வேலையும் பாக்கணும். இது தேன் கண்ணு நம்ம பொழப்புக்கு அடுத்து பார்க்க வேண்டியது…” என்று சொல்லி நிறுத்தி மனைவியின் முகம் பார்த்தான்.

“ம்ம்… புரியுதுய்யா. ஆனா வேற என்னய்யா வேலை பார்க்கப் போற?” என்று கேட்டாள்.

“ஹார்ட்வேர் கண்ணு…”

“ஹார்ட்வேரா? அப்படினா? நீ ஏதோ சாப்ட்வேரு வேலை பார்ப்பனு தான சொல்லிருக்க?”

“சாஃப்ட்வேர் கம்ப்யூட்டரில ப்ரோக்ராம் எழுதற வேலை கண்ணு… ஹார்ட்வேர் கம்ப்யூட்டர் ரிப்பேரானா சரி பண்ற வேலை கண்ணு…”

“உனக்குச் சரி பண்ணவும் தெரியுமாய்யா?” வியப்புடன் கேட்டாள்.

“தெரியும் கண்ணு… சென்னைல படிச்சப்ப சும்மா டைம் பாஸுக்குக் கத்துக்கிட்டேன். இந்த வேலையை நான் செய்ய நினைச்சதுக்கு முக்கியக் காரணம். ஏ அய்யனும், அண்ணனும் சீக்கிரம் நம்மள கண்டுபிடிக்கக் கூடாதுனு தேன் கண்ணு.

ஏ படிப்பை வச்சு அவுக முதலில் சாப்ட்வேர் கம்பெனில தேன் நான் இருப்பேன்னு என்னைய அங்க யார் மூலமாவது அந்த மாதிரி கம்பெனில தேன் தேட முயற்சி பண்ணுவாக. அதனால தேன் நான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு இந்த வேலை தெரியும்னு அய்யனுக்கும், அண்ணனுக்கும் தெரியாது. அதனால அந்த வழியில என்னைய தேட மாட்டாக.

இப்போ அந்த வேலை தேன் நமக்கு உதவப் போவுது கண்ணு. கம்ப்யூட்டரு வழியாவே அதுக்கு அப்ளே பண்ணிருக்கேன். இன்னும் இரண்டு நாளுல வரச் சொல்லிருக்காங்க. போய்ப் பாக்கணும். அப்படியே கொஞ்ச நாளு கழிச்சு சாஃப்ட்வேர் வேலைக்கும் இண்டர்வியூ எதுனா இருக்கானு பாக்கணும்…” என்றான்.

அவன் சொன்னதை எல்லாம் “ம்ம்…” என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டாள் கயற்கண்ணி.

“சரி கண்ணு… ஹார்ட்வேர் வேலை கண்டிப்பா கிடைச்சுடும்னு நம்பிக்கை இருக்கு. அதனால் இப்போதைக்கு வேலை பத்தி கவலை இல்லை. இனி நம்ம அன்றாடத் தேவையைத் தேன் பாக்கணும். இரண்டு நாளைக்கு நான் வீட்டில் தேன் இருப்பேன் கண்ணு. பக்கத்துல இருக்குற கடை கண்ணி எல்லாம் தெரிஞ்சுக்கலாம்.

உன்னையும் கூட்டிட்டுப் போய்க் காட்டுறேன் கண்ணு. தெரிஞ்சு வச்சுக்கோ, ஆத்திர அவசரத்துக்கு ஒத்தாசையா இருக்கும். ஆனா கொஞ்ச நாளைக்கு நீ வெளியே எங்கனயும் போக வேணாம் கண்ணு. நாம பாதுகாப்பான இடத்தில் தேன் இருக்கோம்னு இன்னும் உறுதி இல்ல. ஏ அய்யனும், அண்ணனும் கண்டிப்பா சும்மா இருக்க மட்டாவுக. எம்புட்டு பாடுப்பட்டாவது நம்மளை பிடிச்சுப்புடணும்னு பார்ப்பாங்க. அதனால நாம சூதானமாவே இருக்கணும் கண்ணு…” என்றவனைக் கண்ணில் பயத்துடன் பார்த்தாள் கயற்கண்ணி.

“அப்போ நீயும் வெளிய போவதய்யா…” என்றாள் வேகமாக.

“புரியாம பேசாத கண்ணு. நான் வெளிய போவாம நம்மளால ஒரு வேளை சோறு கூட உங்க(உண்ண) முடியாது.

நான் வெளிய போனாலும், எனக்கு ஆபத்து வந்துச்சுனா அதில் இருந்து தப்பிக்க என்னால் முடியும். ஆனா உனக்கு அது கஷ்டம் அதுக்குத் தேன் சொல்றேன்… சரி கண்ணு நாம கவனமா இருப்போம். அது தேன் விசயம். இப்போ அடுத்த வேலையைப் பார்ப்போம். இங்கே வா…!” என்று சோஃபாவில் அமர்ந்திருந்த மனைவியைக் கையசைத்து அழைத்தான்.

ஏதோ முக்கியமாகச் சொல்லப் போகின்றான் என்று நினைத்து “என்னய்யா…?” என்று அவள் அருகில் வர, அடுத்த நொடி அதிர்ந்து நின்றாள்.

இளஞ்சித்திரனின் கைகள் தன் புத்தம் புதிய மனைவியின் இடையைச் சுற்றிப் பிணைத்திருக்கக் கயற்கண்ணியின் தேகமோ தன் மணவாளன் மேல் முழுமையாகச் சாய்ந்திருந்தது.

உடல்களை உரச விட்ட படி கண்களையும் உரச விட்டான் இளஞ்சித்திரன்.

“என்… என்ன… என்னய்யா…?” என்று தாடுமாறிக் கொண்டு தன் கையணைப்பில் இருந்த மனைவியின் கண்களைச் சந்தித்தவன், “இப்போ நீ ஏ பொஞ்சாதி கண்ணு…” என்றான் கண்களில் பொங்கி வழிந்த காதலுடன்.

“ம்…ம்ம்… ஆ.. ஆமா… அது…அதுக்கென்ன…?” தன் இடையில் உணர்ந்த அழுத்தத்தில் அவளின் வார்த்தைகள் தந்தி அடித்தன.

மனைவியின் திணறலை ரசித்தவன், “நான் இப்போ ஓ புருஷன் கண்ணு…” என்று அழுத்தமாக உரைத்தவன் இதழோரம் குறும்பான புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

“ஆமா… அதுக்கென்ன…?” என்று அவள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, மனைவியின் நெற்றியில் செல்லமாக முட்டி அவளின் இடையில் இன்னும் அழுத்தம் கொடுத்து, தனக்கான உரிமையைக் காட்ட முயன்றவன், மெல்ல அவளின் இதழை நோக்கி குனிந்தான்.

அதில் கயல்விழியாளின் விழிகள் பெரிதாக விரிந்தன.

அவளின் விழிகளில் ஏற்கனவே வீழ்ந்து அமிழ்ந்திருந்தவன் இன்னும் அதில் வீழும் ஆசையுடன் தன் அச்சாரத்தை அழுத்தமாக மனைவியின் இதழில் பதித்தான் இளஞ்சித்திரன்.