பூவோ? புயலோ? காதல்! – 37 (Final)

அத்தியாயம் – 37

“வர்ணா…”

“கயலு…”

வரவேற்பறையில் இருந்து வந்த சத்தத்தில் அறைக்குள் இருந்த இரண்டு பெண்களும் சிரித்துக் கொண்டார்கள்.

“ஆமா, அதென்ன இரண்டு பேரும் கோபமா இருந்தா செல்ல பேரை தூக்கி கடாசிட்டு இப்படி அழுத்தமா நீட்டி முழங்கி கூப்டுறாங்க?” என்று கயற்கண்ணியைப் பார்த்துக் கேட்டாள் வேதவர்ணா.

“அவுக கோபமா இருக்காவுகளாம். அதை இப்படி நம்ம பேரை கூப்பிட்டு காட்டுறாகளாம்…” என்று சொன்ன கயற்கண்ணி,

“அவுக கோபத்தை நாம மதிச்சாத்தேன் அந்தக் கோபமே செல்லும். அது தெரியாம அவுக பேரை நீட்டி முழங்கி அழுத்தமா கூப்பிட்டதும் நாம அவுக கோபத்துக்குப் பயந்துருவோம்னு நினைப்பு. இன்னும் அவுகளுக்கு நம்மள பத்தி தெரியலை. தெரிய வச்சுடுவோமா?” என்று கிண்டலுடன் சொன்ன கயற்கண்ணி தன் கூட்டணியில் வேதவர்ணாவையும் இழுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினாள்.

“வச்சுருவோம்…” என்று வேகமாக அவளின் கூட்டணியில் இணைந்து கொண்ட வேதவர்ணா முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

கயற்கண்ணியின் முகமும் இப்போது இறுக்கத்தைச் சுமந்து கொண்டிருந்தது.

இருவரும் அறைக்கு வெளியே செல்ல, ரித்விக் ஒரு கையில் பழச்சாறு டம்ளரையும், இன்னொரு கையில் அவர்களின் ஒன்றரை வயது மகள் வர்ஷிகாவையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“இப்போ எதுக்கு என்னை வர்ணான்னு கூப்பிட்டீங்க ரித்வி?” என்று சிடுசிடுவென்று கேட்டாள் வேதவர்ணா.

மனைவியின் கோபமான முகத்தைப் பார்த்து, “இல்லடா வரு, உன்னை இந்தச் ஜூஸ் குடிக்கச் சொல்லி அப்பயே சொன்னேன். ஆனா நீ இன்னும் குடிக்காம வச்சுருந்தியா? அது தான் குடிக்கக் கூப்பிட்டேன்…” என்று தழைந்து பதில் சொன்னான் ரித்விக்.

“அதுக்கு எதுக்கு வர்ணான்னு கூப்பிடணும்?” என்று இன்னும் எரிச்சலுடன் கேட்டாள் வேதவர்ணா.

“அது வந்து வரு… நான் வர்ணான்னு கூப்பிட்டா நான் கோபமா இருக்கேன்னு பயந்து நீ ஜூஸை வேகமாகக் குடிச்சுருவன்னு நினைச்சு தான் அப்படிக் கூப்பிட்டேன் வரு…” என்றான் கெஞ்சலாக.

“எனக்குத் தெரியாம இப்படி ஒரு டெக்னிக் வேற வச்சுருக்கீங்களா? இத்தனை நாளா இது எனக்குத் தெரியாம போச்சே…” என்று சொல்லிக் கொண்டே கணவனின் காதை பிடித்துத் திருகினாள் வேதவர்ணா.

அதில் “ஆ…” என்று ரித்விக் போலியாக அலற,

“மா… ச்சு…” என்று வேகமாகக் கையை நீட்டி தன் அம்மாவின் கையைத் தட்டி விட்டாள் வர்ஷிகா.

“என் புருஷனை தொட்டா நீ என்னை அடிப்பியா டி வர்ஷு…” என்று மகளிடம் சண்டைக்குத் தயாரானாள்.

அவளின் மகளோ ‘ஆமா’ என்று வேகமாகத் தலையை ஆட்டி “பா…” என்று ரித்விக்கின் கழுத்தை சுற்றி கைப்போட்டுக் கொண்டு சொன்னாள்.

“ஆமாடா பேபி…” என்று ரித்விக்கும் மகளின் கூற்றை ஆமோதித்தான்.

அம்மா புருஷன் என்று சொல்லிவிட்டாளாம். மகள் இல்லை ‘என் பப்பா’ என்ற அர்த்தத்தில் அப்படிச் சொல்ல, மூக்கை சுருக்கி, நாக்கை நீட்டி மகளுக்கு வக்கனை காட்டினாள் வேதவர்ணா.

வர்ஷிகாவும் அன்னையைப் போலச் செய்ய நினைத்து நாக்கை வெளியே நீட்டி காட்ட, அவள் காட்டிய விதம் அழகாக இருக்க, தன் வக்கனையை நிறுத்தி மகளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து கொஞ்சினாள் வேதவர்ணா.

“என் பேபி பப்பாவுக்குத் தான் எப்பவும் சப்போர்ட் பண்ணுவாள்…” என்று ரித்விக்கும் மகளைக் கொஞ்சினான்.

பெற்றவர்கள் கொஞ்சியதும் வர்ஷிகா இருவரையும் சேர்த்து அணைக்கப் போக, “ஜூஸ் இருக்கு பேபி…” என்று விலகியவன்,

“இதை முதலில் குடி வரு…” என்று பழச்சாறு டம்ளரை மனைவியிடம் நீட்டினான்.

“ஒன் ஹவருக்கு முன்னாடி தான் கொடுத்தீங்க ரித்வி. அதுக்குள்ள இப்பயுமா?” என்று சலித்த படி பழச்சாற்றை வாங்கிப் பருகினாள் வேதவர்ணா.

“நீ ரொம்ப வீக்கா இருக்க வரு. அதுவும் பேபி வளர்ந்த பிறகு அவள் பின்னாடி ஓடவே உனக்கு அதிக எனர்ஜி வேணும். நீ நல்லா இருந்தால் தானே அவளுக்கு ஈக்குவலா நீ ஓட முடியும்…” என்றான் ரித்விக்.

“மேடம் இப்போ எல்லாம் ரொம்ப வால் ஆகிட்டாங்க. என்னை ரொம்பவும் தான் ஓட வைக்கிறா…” என்று மகளைச் செல்லமாக முறைத்துக் கொண்டே சொன்னாள் வேதவர்ணா.

பதிலுக்கு அந்தக் குட்டியும் அன்னையைப் பார்த்து முறைக்க, “இங்கே பாருங்களேன் முறைக்கிறதை…” என்று கணவனிடம் புகார் வாசித்தாள் வேதவர்ணா.

“நீ என்ன செய்றீயோ, அதையே அவள் திருப்பிச் செய்கிறாள். பெரியவங்களைப் பார்த்துத் தானே சின்னவங்க கத்துக்கிறாங்க. அப்படி இருக்கும் போது என்கிட்ட கம்ளைண்ட் பண்ணினால் நான் என்னம்மா செய்ய முடியும்?” என்று பாவமாகச் சொன்ன ரித்விக், மனைவியின் புகாரை உடனே தள்ளுபடி செய்தான்.

“ஆமா நீங்க எப்பவும் அவள் பக்கம் தான் பேசுவீங்க…” என்று அவள் கோபம் கொள்ள,

“நோ… நோ… நான் உங்க இரண்டு பேரு பக்கமும் பொதுவா தான் இருக்கேன்…” என்று சமாதானக் கொடியை பறக்க விட்டான் ரித்விக்.

“இல்ல நான் நம்ப மாட்டேன். நீங்க அவள் பக்கம் தான்…” என்று வேண்டும் என்றே பிடிவாதம் பிடித்தாள் வேதவர்ணா.

“உன்னை நம்ப வைக்க நான் என்ன பண்ணனும்?” மனைவியின் பிடிவாதம் எதற்கு என்று புரிந்து கொண்டவன் போலச் சிரித்துக் கொண்டே கேட்டான் ரித்விக்.

மகள் அறியாமல் உதட்டை குவித்துக் காட்டினாள் வேதவர்ணா.

“நாம இப்போ அவங்க வீட்டில் இருக்கோம் வரு…” என்று கிசுகிசுப்பாக மனைவியிடம் ரகசியம் பேசினான் ரித்விக்.

“நம்ம வீட்டுக்கு போகலாம்…” என்றாள் அவளும் கிசுகிசுப்பாக.

“இளஞ்சித்திரன் நாங்க கிளம்புறோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு வர்றோம்…” என்று அறைக்குள் இருந்தவர்களுக்குக் கேட்கும் வண்ணம் குரல் கொடுத்தான் ரித்விக்.

“ம்ம்…” என்று மட்டும் உள்ளே இருந்து குரல் வர, “அவங்களும் பிசியா இருக்காங்க போல இருக்கு…” என்று ரகசியமாகக் கண்ணடித்துச் சிரித்தாள் வேதவர்ணா.

“அப்போ வா… வா… நாமளே கதவை மூடிட்டு போயிருவோம்…” என்று தானும் சிரித்துக் கொண்டே சொன்ன ரித்விக் மனைவி, மகளுடன் எதிரே இருந்த தங்கள் வீட்டிற்குச் சென்றான்.

அவர்கள் வெளியே சென்றதை கூட உணராமல் அறைக்குள்ளே இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும் யுத்தத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த யுத்தம் அவர்களின் இதழ்களுக்குள் நடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் தன் உதட்டை வலுக்கட்டாயமாகக் கணவனிடம் இருந்து பிரித்துக் கொண்ட கயற்கண்ணி, “யோவ்! என்ன நீ நான் எப்ப ஓ கூடச் சண்டை போட வந்தாலும் ஏ வாயை அடைச்சுப் போடுற…” என்று கோபமாகக் கேட்க முயன்றவள் குரலோ அவளையும் அறியாமல் கொஞ்சிற்று.

“உண்மையைச் சொல்லு கண்ணு, நான் ஓ வாயை அடைக்கணும்னு தானே ஏ கிட்ட நீ கோபப்படுற?” என்று கள்ளச்சிரிப்புடன் கேட்டான் இளஞ்சித்திரன்.

தன்னைக் கண்டு கொண்டானே என்பது போல் விழித்த கயற்கண்ணி “ஆங்… அதெல்லாமில்லை…” என்று வேகமாகத் தலையை மறுப்பாக ஆட்டினாள்.

“ஏ கண்ணுவை பத்தி எனக்குத் தெரியாதா?” என்றவன் மனைவியை அணைத்துக் கொள்ள முயல, உங்கள் இரண்டு பேருக்கும் நடுவில் நானும் இருக்கிறேன் என்பது போல் அவனை நேராக அணைக்க விடாமல் அவளின் வயிற்றில் இருந்த குழந்தை அவர்களுக்கு ஞாபகப்படுத்தியது.

“உன்னைய சரியா கட்டிப்பிடிக்க விடாம ஏ தங்கம் என்னைய தடுக்குறான் கண்ணு…” என்று சொல்லி மனைவியின் வயிற்றைத் தன் இரண்டு கைகளாலும் தடவி விட்டான்.

தந்தை தன்னைத் தொட்டதை உணர்ந்ததைப் போல அவனின் கைகள் இருந்த புறமெல்லாம் வயிற்றிற்குள் துள்ளினான் அவர்களின் தங்கம்.

“நீ கையை வச்சாலே ஓவராத்தேன் துள்ளுவான்யா…” என்று தாய்மையின் நிறைவில் பிள்ளை உதைத்ததில் உண்டான சுகமான அவஸ்தையை அனுபவித்துக் கொண்டே ரசித்துச் சொன்னாள் கயற்கண்ணி.

“ம்ம்…” என்று இன்னும் குழந்தையை அவன் தடவி கொடுக்க,

“போதும், போதும் நான் ஓ கூடச் சண்டை போட வந்தேன். ஆனா நீ நான் இந்த ரூமுக்குள்ள கோபமா நுழைஞ்சதும் ஏ வாயை அடைச்சுப் போட்ட…” என்றவள், “எதுக்குய்யா என்னைய கயலுனு கூப்பிட்ட?” என்று மறந்து போன கோபத்தை இருப்பது போல் காட்டிக் கொண்டு கேட்டாள் கயற்கண்ணி.

“பின்ன என்ன கண்ணு. வயித்துல ஏழு மாச புள்ளய வச்சுருக்க. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி ஆகாரம் எடுக்க மாட்டேங்கிற. புள்ளக்கும், உனக்கும் தேவையான சத்து வேணும்ல. காலைல சாப்பிட்டது. இப்போ மணி பதினொன்னு ஆச்சு. ஆனா போட்டு ரெடியா இருக்குற ஜூஸை கூடக் குடிக்காம ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்க…” என்றான் இளஞ்சித்திரன்.

“நாளைக்கு வளைகாப்புக்கு கட்ட போற புடவையைப் பத்தி வேதாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்யா. அதான் மறந்துட்டேன்…” என்றவள் கணவனைச் சமாதானப்படுத்த அவனின் நாடியை பிடித்துக் கொஞ்சினாள்.

“சரி இப்பவாவது குடி…” என்று மனைவிக்குக் கட்டில் அருகே வைத்திருந்த பழச்சாற்றை எடுத்துக் கொடுத்தான்.

அவள் பருகி முடித்ததும், “அது சரி, எதுக்கு ரூமுக்குள்ள வரும் போது அவ்வளவு கோபமா வந்த?” என்று கேட்டான் இளஞ்சித்திரன்.

“இங்கன பாரேன் அதை மறந்தே போய்ட்டேன். நானும், வேதாவும் நீங்க ரெண்டு பேரும் கோபம் போலக் கூப்பிடவும், உங்களை விடக் கோபமாக இருக்குற மாதிரி காட்டிக்கிட்டு உங்க கோபத்தை ஒன்னுமில்லாம ஆக்கணும்னு வந்தோம். அங்கன என்னென்னா அந்த அண்ணே உடனே அது பொஞ்சாதி கூடச் சமாதானம் ஆகிருச்சு. நீ என்னென்னா ஏ வாயை அடைச்சு ஏ கோபத்தை இல்லாம செய்து போட்டுட்ட…” என்றாள் கயற்கண்ணி.

இப்போதெல்லாம் வேதவர்ணாவின் உரிமையான அதட்டலின் விளைவாகக் கயற்கண்ணி அவளை வேதா என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

“ஹா..ஹா… இன்னும் உங்களுக்கு ஆம்பளைங்களைப் பத்தி சரியா தெரியலை கண்ணு. பொஞ்சாதியைக் கோபப்படுத்திப் பார்க்கவும் தெரியும், கோபத்தைப் போக வைக்கும் வித்தையும் தெரியும். ரித்விக் உடனே வொய்ப் கிட்ட சரணடைஞ்சு அவங்க கோபத்தைக் குறைக்கிறார். நான் எனக்குத் தெரிஞ்ச வழியில் ஏ பொஞ்சாதி கோபத்தைக் குறைக்கிறேன்…” என்றவன் உதட்டை குவித்துக் காட்டி கள்ளச்சிரிப்புச் சிரித்தான்.

“அவரும் அப்புறம் அந்த வழியைத் தேன் செய்வாரு போல இருக்குய்யா. பேசிக்கிட்டே அப்படியே அவுக வீட்டுக்கு ஓடிட்டாகப் பாரு…” என்று கிண்டலாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள் கயற்கண்ணி.

“அப்போ வா… நம்மளும் விட்டதைத் தொடருவோம்…” என்று மீண்டும் மனைவியின் முகத்தில் வண்டாக மொய்க்க ஆரம்பித்தான் இளஞ்சித்திரன்.

இளஞ்சித்திரன் தன் ஊருக்கு போய் விட்டு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்திருந்தன.

வேங்கையன் மீது கொலை முயற்சி வழக்கு மட்டும் இருந்ததால் சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இளைய மகனின் மீது கடும் கோபம் இருந்தாலும் பெரிய மகனை வெளியே எடுக்கும் முயற்சியில் மட்டும் கவனத்தை வைத்தார்.

‘நீங்க மட்டும் வெளியே வந்துட்டீங்க. ஏ புருஷனை விட்டுப்புட்டீங்களே…’ என்று சாந்தாமணி வீட்டில் தொடர்ந்து நச்சரிக்க, அவரால் வீட்டில் நிம்மதியாக மூச்சு கூட விட முடியவில்லை.

அது மட்டும் இல்லாமல் எந்த வழியில் போனாலும் பெரிய மகனை வெளியே கொண்டு வர முடியாமல் முட்டுக் கட்டை விழ, பெரிய மகன் காலம் முழுவதும் ஜெயிலிலேயே இருந்து விடுவானோ என்ற பயத்தில் அவனை வெளியே எடுக்கும் வேலையில் முழு மூச்சாக இறங்கினார்.

ஆனால் அவர் பெரிய மகனை வெளியே எடுக்க முயற்சி செய்த போதெல்லாம் இளஞ்சித்திரன் அதை முறியடித்தான்.

பெற்ற மகனான இளஞ்சித்திரனே தங்கள் பக்கம் நின்றதால் இமயவரம்பனால் பாதிக்கப்பட்டுத் தங்கள் வீட்டுச் சொந்தங்களை இழந்த மக்கள் வலுவான சாட்சிகளாக நிற்க, வேங்கையன் பெரிய மகனை வெளியே எடுக்க முடியாமல் தோற்றுப் போனார்.

ஆனாலும் விடாமல் மகனை வெளியே கொண்டு வரும் முயற்சியை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நாட்கள் கடக்கக் கடக்கப் பெரியமகனை பற்றிய கவலை அவரைச் சூழ்ந்து கொள்ள, முன் இருந்த ஆட்டம் அனைத்தும் சிறிது குறைந்து மகனை வெளியே கொண்டு வர முடியவில்லையே என்ற வருத்தம் மெல்ல மெல்ல அவரைச் சூழ ஆரம்பித்தது.

ஊருக்குள் பெரிய மனிதன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சாதி பெருமை பேசிக் கொண்டு இருந்தவர் இப்போது மகன் இருந்தும் இல்லாத புத்திர சோகத்தில் தளர்ந்து தான் போனார்.

இளஞ்சித்திரன் பெங்களூரிலேயே மீண்டும் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். தான் அவர்களுக்கு எதிராக ஆதாரம் திரட்டும் முன் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிகையில் தான் வேறு வேலையைத் தேர்ந்தெடுத்தான். இப்போது எல்லாம் சரியாகி போனதில் மென்பொருள் நிறுவனமாகப் பார்த்து வேலையில் சேர்ந்து கொண்டான்.

அவர்கள் முதல் முறை வந்து தங்கிய வீட்டின் உரிமையாளர், தான் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகப் போவதாகச் சொல்லி அந்த வீட்டை விற்க போவதாகச் சொல்ல, அதைத் தானே லோன் போட்டு வாங்கிக் கொண்டான் இளஞ்சித்திரன்.

அங்கிருந்த பொருட்களை எல்லாம் அகற்றி விட்டு, தன் உழைப்பில் வாங்கிய பொருட்களாக வாங்கி அடுக்கினான்.

அதோடு ரித்விக், வேதவர்ணா குடும்பத்துடன் அதிக ஒட்டுதலுடன் இருந்தனர்.

விடுமுறை நாட்களில் இருவரின் வீட்டிலும் யாராவது ஒருவர் வீட்டில் இருந்து பொழுதை போக்குவதும் அவர்களுக்குள் வழக்கமாகியிருந்தது.

மீண்டும் கயற்கண்ணி கர்ப்பம் தரித்து ஏழாவது மாதகருவை சுமந்து கொண்டிருந்தாள். அவளுக்கு மறுநாள் வளைகாப்பு நடத்த இளஞ்சித்திரன் முடிவு செய்திருந்தான்.

அன்று இரவு ஊரில் இருந்து கயற்கண்ணியின் பெற்றோர் முதல்முறையாக மகள் வீட்டிற்கு வருவதாக இருந்தனர்.

இதற்கு முன் அவர்கள் வந்ததில்லை. ஆனால் அலைபேசியில் அவர்களின் உரையாடல் தினமும் நடந்து கொண்டிருந்தது.

வளைகாப்பு முடிந்த பிறகு கயற்கண்ணியின் அன்னை வேலம்மாள் மட்டும் மகளுக்குத் துணையாக அங்கேயே இருக்கப் பேசி முடிவு செய்து வைத்திருந்தனர்.

வேதவர்ணாவிற்கு வர்ஷிகா பிறந்த பிறகு மன அழுத்தம் இருந்தாலும் அதை மருத்துவரின் கவுன்சிலிங் மூலமும், கணவன், அன்னையின் உதவியுடனும் அதில் இருந்து மீண்டு வந்திருந்தாள்.

அவளின் மன அழுத்தத்தை அறிந்த பிறகு சித்ரா மகளுடனே ஆறு மாதங்கள் தங்கி இருந்து பேத்தியையும், மகளையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அதிலேயே வேதவர்ணாவின் பயம், அழுத்தம் எல்லாம் அவளை விட்டு ஓடிப் போகத் தாய்மை கால மன அழுத்தமும் அவளை விட்டு ஓடிப்போய் இருந்தது.

மகள் பள்ளி செல்லும் வயது வரும் வரை வீட்டில் இருக்க முடிவு செய்து வேலையைத் தற்காலிகமாக விட்டிருந்தாள் வேதவர்ணா. மகள் பள்ளிக்கு சென்ற பிறகு மீண்டும் வேலையில் சேர்ந்து கொள்வதாக இருந்தாள்.

சித்ரா உடன் இல்லாத நாட்களில் அவளுக்கு வீட்டு வேலையில் உதவி செய்ய ஒரு வேலையாளை அமர்த்தியிருந்தான் ரித்விக்.

சந்திரசேகர் அவ்வப்போது மட்டும் மகள் வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்.

கணவன் அவளையும், மகளையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள, பெற்றவர்களும் வந்து போக, அதன் பிறகும் வேதவர்ணாவிற்கு என்ன குறை இருக்கப் போகிறது?

அவள் இப்போது கணவன், மகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள்.

மறுநாள் கயற்கண்ணி வளைகாப்பிற்காக மனையில் அமர வைக்கப்பட்டாள்.

நான் தான் முதலில் மனைவிக்கு வளையல் அடுக்குவேன் என்று சொல்லி இளஞ்சித்திரன் தான் முதலில் அவளின் கன்னத்தில் சந்தனம் தடவி, நெற்றியில் குங்குமமிட்டு, வளையல் போட்டு ஆரம்பித்து வைத்தான்.

“இந்த முறை நீ அப்பா, அம்மா கைக்குப் பத்திரமா வந்து சேர்ந்துடு தங்கம்…” என்று மானசீகமாகத் தன் மகவுவிடம் பேசிவிட்டு நகர்ந்தான்.

அடுத்து கயற்கண்ணியின் பெற்றவர்கள் வளையல் அடுக்க, வேதவர்ணா, சித்ராவும் அடுக்கினர். சித்ராவும் வந்திருந்தார்.

வளைகாப்பு நல்லபடியாக முடிய, நிறைவாக ஜொலித்த மகளின் முகத்தைச் சந்தோஷத்துடன் பார்த்தார்கள் கந்தசாமியும், வேலம்மாளும்.

மனைவியின் முகத்தைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் இளஞ்சித்திரன்.


பிரசவம் முடிந்த களைப்பில் மருத்துவமனை படுக்கையில் கயற்கண்ணி படுத்திருக்க, “நம்ம தங்கம் நம்ம கிட்ட வந்துட்டான் கண்ணு…” என்று தன் மகனை கையில் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துக் கொண்டு மனம் நெகிழ கண்களில் நீர் கோர்க்க மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் இளஞ்சித்திரன்.

“ஆமாய்யா…” என்று தானும் கண்களில் தேங்கிய நீருடன் தலையை ஆட்டினாள் கயற்கண்ணி.

“இப்ப தேன் கண்ணு ஏ மனசு நிறைஞ்சு கிடக்கு…” மகிழ்ச்சியுடன் சொல்லி மனைவியின் நெற்றியில் காதலுடன் இதழ் பதித்தான்.

“நாம பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு வந்துருச்சுயா. நம்ம புள்ளயை நல்ல மனுஷனா வளர்க்கணும்யா…” என்று நெகிழ்வுடன் சொன்னாள் கயற்கண்ணி.

“கண்டிப்பா கண்ணு…” என்ற இளஞ்சித்திரன் மகனின் நெற்றியில் முத்தமிட்டு உச்சிமுகர்ந்தான்.

“பா… பா…” என்று சப்தம் கேட்டு வாசல் பக்கம் திரும்பி பார்த்தனர் இருவரும்.

“வாங்க வர்ஷி குட்டி… குட்டிப் பாப்பாவை பார்க்க வந்தீங்களா? இதோ குட்டிப் பாப்பாவை பார்க்கலாம். வாங்க…” என்று உள்ளே வந்த வர்ஷிகாவை அழைத்தான் இளஞ்சித்திரன்.

“பாப்பா உள்ளே இருக்குன்னு சொல்லவும் ஓடி வந்துட்டா இளஞ்சித்திரன்…” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் ரித்விக். அவனின் பின்னால் வேதவர்ணா வந்தாள்.

“பரவாயில்லை ரித்விக், வாங்க…” என்று வரவேற்றான் இளஞ்சித்திரன்.

“எப்படி இருக்கக் கயல்?” என்று வேதவர்ணா விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன் வேதா…” என்றாள் கயற்கண்ணி.

குழந்தையைப் பார்த்த படியே பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்த போது இளஞ்சித்திரனின் மகனையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷிகா, ஏதோ நினைத்துக் கொண்டது போல அன்னையின் அருகில் வேகமாக ஓடி வந்து, வேதவர்ணாவின் வயிற்றில் தன் குட்டிக் கைகளை வைத்துத் தடவி, “பா… பா…” என்றாள்.

முதலில் அவளின் செய்கையைப் புரியாமல் பார்த்த அனைவரும் புரிந்த போது சட்டென்று சிரித்து விட்டனர்.

கயற்கண்ணியின் பெரிதான வயிற்றை இத்தனை நாட்களும் பார்த்திருந்தவள், “அவங்க வயித்துல பாப்பா இருக்கு பேபி. அவங்க மேல விழுந்துறாதே…” என்று கயற்கண்ணியுடன் முன்பு அவள் விளையாட முயன்ற போது அன்னை சொன்னதைக் கேட்டிருந்தவளுக்கு என்ன தோன்றியதோ?

இன்று பாப்பா கையில் இருக்கவும், படுத்திருந்த கயற்கண்ணியின் வயிறு பெரிதாக இல்லாமல் இருக்கவும், அவள் மேலே படுத்திருந்ததால் அவளைத் தொட்டு பார்க்க முடியாமல் அவளின் அன்னையின் வயிற்றை வந்து தொட்டுப் பாப்பா காணோம் என்பது போலக் கேட்டாள்.

வேதவர்ணாவோ கூச்சத்துடன் நெளிய ஆரம்பித்தாள்.

“ஹா…ஹா… ரித்விக் உங்க பொண்ணு பாப்பா கேட்குறா… கொடுத்துருங்க…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொல்லி கண்ணைச் சிமிட்டி கிண்டலாகச் சிரித்தான் இளஞ்சித்திரன்.

“என்னது இன்னும் ஒண்ணா? இவளைப் பெத்து எடுக்கவே வரு பட்டபாடும், என்னைப் படுத்தின பாடும் போதும் பா இளஞ்சித்திரா…” என்று சத்தமாக அலறினான் ரித்விக்.

கணவனின் அலறலை கேட்டு வேதவர்ணா அவனை முறைக்க, இளஞ்சித்திரனும், கயற்கண்ணியும் அவர்களின் ஊடலைப் பார்த்து சிரித்தனர்.

எல்லாரும் சிரிப்பதை பார்த்து வர்ஷிகாவும் சிரிக்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த இளஞ்சித்திரன், கயற்கண்ணியின் மகனும் உறக்கத்திலேயே சிரித்தான்.

காதலில் ஊடலும் உண்டு! கூடலும் உண்டு!

பூவும் உண்டு! புயலும் உண்டு!

புயலை பூவாக மாற்றும் வல்லமையும் காதலுக்கு உண்டு!

சுபம்