பூவோ? புயலோ? காதல்! – 32

அத்தியாயம் – 32

மனைவியின் தோளின் மீது கையைப் போட்டு மெதுவாக நடக்க முயன்றான் இளஞ்சித்திரன்.

தோளில் இருந்த காயம் சிறிது ஆறியிருக்க, வயிற்றில் இன்னும் காயம் பலமாகத் தான் இருந்தது.

“எதுக்குய்யா இப்பயே கஷ்டப்பட்டு நடக்கணும்னு அடம் பிடிக்கிற? இன்னும் கொஞ்ச நாளு போகட்டுமே…” என்று கணவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தாலும் எடுத்து சொல்லியும் பார்த்தாள் கயற்கண்ணி.

“இல்ல கண்ணு. நிறையச் சோலி கிடக்கு. அதை முடிக்கணும்னா நான் மொதல நடக்கணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னான் இளஞ்சித்திரன்.

பத்து நாட்கள் கடந்திருந்தன. கயற்கண்ணி அடுத்த இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்க, இளஞ்சித்திரன் இன்னும் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

அவளும் கணவன் இருந்த அறையிலேயே இருந்து கொண்டாள்.

ரித்விக் குடும்பத்தினரின் உதவி அவர்களுக்கு இன்றியமையாததாக இருந்தது. வேதவர்ணாவால் அதிகம் அலைய முடியவில்லை என்றாலும், அவளின் அன்னையுடன் வந்து அவ்வப்போது பார்த்து விட்டு சென்றாள்.

ரித்விக் காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை என்று வந்து பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தான். மனைவியின் பிரசவ நாள் நெருங்கி வருவதால் விடுப்பு எடுக்க வேண்டியது இருப்பதால் அதற்குள் முடித்துக் கொடுக்க வேண்டிய வேலை நிறைய இருக்க, அந்த வேலை நடுவிலும் இளஞ்சித்திரனுக்குத் தேவையான உதவி இருந்தால் ஒரு நாளும் அவன் செய்யத் தயங்கியது இல்லை.

தங்களுக்கு உதவி செய்தார்கள் பதிலுக்குச் செய்கிறோம் என்பதையும் தாண்டி இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு பிடிப்பு, மனம் கோணாமல் மற்றவருக்கு உதவி செய்ய வைத்தது.

“வர, வர நீ சரியே இல்லைய்யா… ஏதோ மர்மமா செய்ற, எதையோ யோசிக்கிட்டே இருக்க, சும்மா யார்கிட்டயோ போன்ல பேசிக்கிட்டே இருக்க… என்ன தான்யா செய்யப் போற? விவகாரமா எதுவும் செய்து நீ எதுலயும் மாட்டிக்காதய்யா. உனக்கு ஒன்னுனா இனியும் நான் தாங்க மாட்டேன்…” என்று கலக்கத்துடன் சொன்னாள் கயற்கண்ணி.

மனைவியின் தோளில் இருந்த கையை வைத்து அவளை அழுத்தி பிடித்தவன், “இப்படி வந்து உட்காரு கண்ணு…” என்று படுக்கையில் அமர்ந்து அவளையும் அமர சொன்னான்.

“நான் முன்னாடியே சொன்ன மாதிரி இனி நமக்கு எந்தப் பாதிப்பும் வராதது போலத் தேன் எதுவும் செய்வேன் கண்ணு. அதனால எனக்கு எதுவும் ஆகிடுமோனு கவலைப்படாம இரு…” என்றான் ஆறுதலாக.

“சரிதான்யா… ஆனாலும் எனக்கு மட்டும் எதுவும் ஆகாம காப்பாத்துறேன்னு எடக்கு மடக்கா எதுவும் செய்து வச்ச, இனி பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். உனக்கு முன்னாடி குத்திக்கிட்டு நானே போய்ச் சேர்ந்துடுவேன், பார்த்துக்கோ…” என்றாள் ஆவேசமாக.

அன்றில் இருந்து அவளுக்குள் இருந்து உறுத்திக் கொண்டு இருப்பது இன்று கோபமாக வெளியே வந்திருந்தது. தன்னை மட்டும் காப்பாற்றி விட முடிவெடுத்து இப்படிக் காயப்பட்டுக் கிடக்கிறானே என்ற ஆதங்கம் அவளின் கோபத்தில் வெளிப்பட்டது.

“ஏதாவது உளறாதே கண்ணு…” என்று விரல் கொண்டு அவளின் வாயை மூடினான் இளஞ்சித்திரன்.

“ப்ச்ச்… போயா…” என்று அவனின் விரலை கோபத்துடன் எடுத்துவிட்டாள்.

“என்ன கண்ணு நீ?” என்று இளஞ்சித்திரன் மனைவியைச் சமாதானம் செய்ய முயல,

“நீ குத்து வாங்கி ரத்த வெள்ளத்துல துடிச்சதை பார்த்து இன்னும் ஏ கொல நடுங்குதுயா. பெரிய தியாகி மாதிரி என்னைய காப்பாத்துனு நான் ஓ கிட்ட கேட்டேனா?” என்றாள் இன்னும் ஆவேசம் கூடியவளாக.

அவளின் தலையைப் பிடித்துத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன், “கோபப்படாதே கண்ணு. அந்த நேரம் உன்னைய காப்பாத்த என்ன செய்யணுமோ அதைச் செய்தேன். இப்படி ஆகும்னு நானே கூட எதிர்பார்க்கலை கண்ணு…” என்று மேலும் சமாதானம் செய்ய முயன்றான்.

“எதிர்பார்க்கலையா? என்னய்யா சொல்ற?” அவனின் மார்பில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்துக் கேட்டாள்.

“ஆமா கண்ணு. ஏ அண்ணே அன்னைக்கு வந்து நிற்பான்னு நான் எதிர்பார்க்கலை கண்ணு. தெரிஞ்சிருந்தா அன்னைக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்காமயே பார்த்திருந்திருப்பேன். நம்ம புள்ளயும் நம்மளை விட்டு போயிருக்காது…” என்றான் குழந்தையை நினைத்த வேதனையுடன்.

குழந்தையை நினைத்தவுடன் அவளின் முகமும் கசங்கி போனது.

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டவள் “என்னய்யா ஓ அண்ணே என்னைக்கு வருவாருன்னு நீ ஏதோ எதிர்பார்த்த மாதிரி பேசுற?” என்று கேட்டாள்.

“ஆமா கண்ணு. அவன் வர்ற அன்னைக்கு என்னென்ன செய்யணும்னு கூட யோசிச்சு வச்சுருந்தேன். ஆனா நான் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை. திடீர்னு அவன் இங்கன வந்து நின்னதைக் கேள்விப்பட்டதும் அடுத்து என்ன செய்றதுனு கூட யோசிக்க முடியலை. அதுதேன் அன்னைக்குப் பதட்டத்துல மொதல உன்னைய காப்பாத்தினா போதும்னு தேன் தோணுச்சு…” என்றான் இளஞ்சித்திரன்.

“என்னய்யா என்னென்னமோ சொல்ற?” என்று அவன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாத குழப்பத்துடன் கேட்டாள்.

“இளா அண்ணே சொல்றது சரிதானுங்க மதினி. வரம்பண்ணே பெங்களூருக்கு அப்படித் திடீர்னு வந்து நிக்கும்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. கடைசி நேரத்துல தேன் என்னால இளா அண்ணனுக்குச் சேதி சொல்ல முடிஞ்சது…” என்று சொல்லிக் கொண்டே அங்கே வந்தான் ஒரு இளைஞன்.

அவனைக் கண்டதும் வேகமாகக் கணவனின் அருகில் இருந்து எழுந்து தள்ளி நின்று கொண்டு வந்தவனைப் பயந்த பார்வையுடன் பார்த்தாள் கயற்கண்ணி.

“என்னைய அப்படிப் பார்க்காதீங்க மதினி…” என்று வேகமாகச் சொன்னான் அவன்.

“அவனைப் பார்த்து பயப்படாதே கண்ணு. அவன் நம்ம பைய தேன்…” என்றான் இளஞ்சித்திரன்.

“இவரு… இவரு ஓ சின்னய்யா மவன் தானேய்யா…” என்று இன்னும் பயம் மாறாமல் கேட்டாள் கயற்கண்ணி.

“ஆமா கண்ணு…” என்று மனைவியிடம் சொன்னவன், “என்னடா திடுதிப்புன்னு கிளம்பி வந்துட்ட? இங்கன வரப் போறதா நீ சொல்லவே இல்லையே?” என்று வந்தவனிடம் கேட்டான் இளஞ்சித்திரன்.

“நான் அன்னைக்கே வர்றேன்னு தேன் சொன்னேன். நீ தேன் என்னைய வர விடாம வேற சோலி கொடுத்துட்ட. நீ கொடுத்த சோலியை முடிச்சுட்டேன். இப்பயும் எப்படி வராம இருக்க முடியும்? என்ன அண்ணே இது வயித்துல இம்புட்டு பெரிய கட்டு? இன்னும் கொஞ்சமும் சரியாகலை போலயே…” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“இப்போ பரவாயில்லைடா. கொஞ்சம் நடக்க முடியுது. இன்னும் பத்து நாளுல சரியாப்போகும். அது கிடக்கட்டும்… நான் சொன்ன சோலியை நிஜமாவே முடிச்சுட்டியா?” என்று பரபரப்பாகக் கேட்டான் இளஞ்சித்திரன்.

“அதெல்லாம் நல்லாவே முடிஞ்சது அண்ணே. அதைப் பத்தின விவரம் அப்புறமா பேசுவோம். இப்போ நீ மதினி கிட்ட பேசிட்டு இருந்த விசயத்தை முடி. மதினியைப் பாரு, நானும் உன்னைய எதுவும் செய்து போடுவேனோனு பயந்து போய்ப் பார்த்துட்டு இருக்காவுக…” என்றான் அவன்.

“இவன் ஏ ஒன்னு விட்ட சித்தப்பா பைய சுதாகரு கண்ணு. நீ கூட ஊருல பார்த்திருப்பியே…” என்று மனைவியிடம் கேட்க,

“தெரியும்யா, ஆனா இவுக அய்யாவும் ஓ அய்யா மாதிரி தானே இருப்பாரு. எல்லா விசயத்திலும்…” என்றாள்.

“ஏ அய்யா மாதிரி நான் இல்லையே கண்ணு… அதே போலத் தேன் இந்தப் பயலும். இவனும் என்னைய போல இருக்கணும்னு நினைக்கிறவன். எல்லாச் சாதியும் இவனுக்கு ஒன்னு தேன். அவுக அய்யா செய்றது கூடப் பிடிக்காது தேன். ஆனா அவரை எதுத்தா இன்னும் தேன் அவரு துள்ளுவாரே தவிரக் கொஞ்சமும் மாற மாட்டார். அவுகளை மாத்த முடியாது. நாம மட்டுமாவது எல்லாரையும் ஒரே மனுஷ சாதியா மட்டும் பார்ப்போம்னு நினைக்கிற பைய. இவனைக் கண்டு நீ பயப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை…” என்றான்.

கணவனின் விளக்கத்தில் சிறிது நிம்மதியாக உணர்ந்தாள் கயற்கண்ணி. சுதாகரை பார்த்து இதழ் பிரியாமல் வரவேற்பாக லேசாகச் சிரித்தாள்.

“இவன் மட்டுமில்ல, இன்னொரு பயலும் இருக்கான். அவன் எனக்கு மாமன் மவன். பேரு சங்கர். அவனும் எங்களைப் போலச் சாதியை பெரிசா நினைக்காத பையதேன். நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் இருந்தே இவனுங்க எனக்குத் கூட்டாளிங்க தேன். என்ன இவன் என்னைய விட ஒரு வயசு கம்மி. அதுனால என்னைய அண்ணேன்னு கூப்பிடுவான். ஆனா நாங்க மூணு பேரும் நல்ல ப்ரண்ட்ஸ்.

நாம ஊரை விட்டு கிளம்பினப் பிறகு இவனுங்க இரண்டு பேருக்கும் மட்டும் நம்ம விசயத்தைச் சொன்னேன். அன்னையில இருந்து ஏ அய்யனும், அண்ணனும் நம்மள கண்டுபிடிக்க என்ன செய்தாலும் இவனுங்க மூலம் எனக்கு நியூஸ் வந்திடும். சமீபத்தில் நாம பெங்களூரில் இருக்கோம்னு நம்ம ஊரு பைய ஒருத்தன் பார்த்து எங்க வீட்டுக்கு தகவல் அனுப்பிட்டான். அன்னையில் இருந்து ரொம்பக் கவனமாவே இருந்தேன்…” என்று இளஞ்சித்திரன் சொல்ல,

“அப்போ முன்னாடியே உனக்குத் தெரியும்னா அவுக கண்ணுல படாம நாம வேற எங்கயாவது போயிருக்கலாம்லயா?” என்று கேட்டாள் கயற்கண்ணி.

“அங்கயும் நம்மள தேடி வர மாட்டாங்கனு என்ன நிச்சயம் கண்ணு? எத்தனை ஊருக்கு, எவ்வளவு நாளு ஓடுவ? அவுகளுக்குப் பயந்து ஓடணும்னா நாம வாழ்நாளு முழுவதும் ஓடணும் கண்ணு. நாம ஓடவும் கூடாது. அதே நேரம் அவுகளை அடக்கியும் வைக்கணும்னு நினைச்சேன்…” என்று சொல்லி ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

“என்னய்யா பண்ணின?” என்று மெதுவாக விசாரித்தாள் கயற்கண்ணி.

“ஏ அய்யனுக்கு என்னைய விட ஏ அண்ணன் மேல புத்திர பாசம் ரொம்பவே அதிகம் தேன் கண்ணு. அவரைப் போலவே யோசிச்சு அவர் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டி அவரை மாதிரி எல்லாமே செய்வான்…” என்று எல்லாமேயில் ஒரு அழுத்தத்தைக் கொடுத்தான்.

“அப்படிப்பட்ட மகன் அவர் கூட இல்லாம ஜெயிலுக்குப் போனா என்ன ஆகும் கண்ணு?” என்று மனைவிடம் ஒரு கேள்வியை வைத்தான்.

“பெத்தவரு எப்படிய்யா தாங்குவார்?” என்று திருப்பிக் கேட்டாள்.

“ஆமா… நிச்சயமா தாங்க மாட்டார். அதனால தேன் அவனை ஜெயிலுக்கு அனுப்பிருவேன்னு சொல்லி மிரட்டி நம்ம வழியில் இருந்து அவுகளை விலக வைக்க நினைச்சேன். ஆனா அதுக்கு நான் தேடின ஆதாரம் கிடைக்கக் கொஞ்சம் லேட் ஆகிருச்சு…” என்றான்.

“என்ன ஆதாரம்?” என்று கேட்டாள்.

“அவுகளை மிரட்ட முதலில் நான் தேர்ந்தெடுத்தது, நம்ம இரண்டு பேருக்கும் என்ன ஆனாலும் அதுக்குக் காரணம் என் அண்ணனும், அய்யனும் தான்னு நான் மதுர கமிஷ்னர் ஆஃபிஸ்ல ஒரு கம்ளைண்ட் கொடுக்கணும். இன்னொன்னு, இதுக்கு முன்னாடி அண்ணன் சாதி சண்டையில் ஒரு இரண்டு பேரை அடிச்சே கொன்னுட்டான். அது இப்போ சமீபத்தில் நடந்தது. அதுக்கு அவன் தேன் குற்றவாளின்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்க ஆதாரம் தேடினேன். ஆனா அது நான் நினைச்ச நேரம் கிடைக்காம தாமதம் ஆகிருச்சு. ஆதாரம் சாதாரணமா இருந்தா அதை உடைக்க அவுகளால முடியும். அதனால வலுவா வெளியே வர முடியாத மாதிரி செய்ய நினைச்சேன். அந்த ஆதாரத்தைத் தேன் துருப்புச் சீட்டா பயன்படுத்த நினைச்சேன். ஆனா ஆதாரம் அவ்வளவு சீக்கிரம் கிடைக்கலை. அதுக்குதேன் சங்கரும், சுதாகரும் அலைஞ்சுட்டு இருந்தானுங்க. அதுக்குள்ளே இப்படி ஆகிருச்சு…” என்றான் இளஞ்சித்திரன்.

“இது மட்டுமா? வரம்பன் அண்ணனை ஊரை விட்டு கிளம்ப விடக்கூடாதுன்னு, அவுக கம்பங்காட்டை எரிச்சுப்புடுவோம். யாரு எரிச்சதுன்னு தேடியே நாளு ஓடும். அதுக்குள்ள ஆதாரத்தை வலுவா எடுத்துருவோம்னு நானும், சங்கரும் நினைச்சோம். ஆனா இளா அண்ணே தேன் எங்க பேச்சை கேட்கலை. வெறும் வைக்கப்போரை மட்டும் எரி! வயலில் கை வைக்காதேனு எங்க கையைக் கட்டிப் போட்டுருச்சு. வைக்கப் போருக்கே வரம்ப அண்ணே துள்ளி குதிச்சு யாருன்னு கண்டு பிடிக்கப் போறேன்னு ஊருக்கு கிளம்பாம இருந்துச்சு. ஆனா இவுக அய்யா முதலில் உங்க சோலியை முடிச்சுட்டு வர சொல்லி முடுக்கி விட்டார். அப்புறம் மில்லுல சாக்கு மூட்டைக்கு எல்லாம் தீ வைச்சு வர விடாம செய்தோம்…” என்றான் சுதாகர்.

“அய்யோ! தானிய மூட்டையவா?” என்று பதறிப் போய்க் கேட்டாள் கயற்கண்ணி.

“இருந்தாலும் நீங்களும் அண்ணனும் இம்புட்டு நல்லவங்களா இருந்திருக்க வேண்டாம் மதினி…” என்று அலுத்துக் கொண்டான் சுதாகர்.

‘என்ன?’ என்பது போல் அவனைப் புரியாமல் பார்த்தாள்.

“பின்ன என்னங்க மதினி… அவுக உங்க உசுரையே எடுக்கத் தயங்க மாட்டேங்கிறாங்க. நீங்க என்னென்னா அவுகளோட தானிய மூட்டைக்கே பதறுறீக. உங்களைப் போலத் தேன் இந்த அண்ணனும் பதறுச்சு. அதனால வெறும் சாக்கு கட்டுக்குத் தேன் தீ வைக்க விட்டுச்சு. தானிய மூட்டை எரிஞ்சிருந்தா வரம்ப அண்ணே ஊரைவிட்டு கொஞ்சமும் நகர்ந்து இருக்காது. இன்னும் ஏதாவது செய்து வரம்ப அண்ணனை அங்கேயே பிடிச்சு வைக்க நினைச்சோம்.

ஆனா நானும், சங்கரும் வேற ஒரு சோலியில் மாட்டிக்கிட்டோம். அதுவும் வேற ஊருல சோலி. திரும்ப நாங்க ஊருக்கு வந்த பொறவு தேன் வரம்ப அண்ணே இந்த ஊருக்கு கிளம்பி வந்துருச்சுனே தெரியும். அந்தத் தகவலை அப்போ தேன் இளா அண்ணே கிட்ட சொன்னேன். ஆனா நான் சொன்ன கொஞ்ச நேரத்திலேயே வரம்ப அண்ணே கண்ணுல நீங்க பட்டு இப்போ ஆஸ்பத்திரியில் வந்து இருக்கீக. அன்னைக்கே பெருசா ஏதாவது செய்வோம்னு சொன்னதை இந்த அண்ணே கேட்டுருக்கணும். ஆனா எங்க பேச்சை எங்கே இந்த அண்ணே கேட்டுச்சு…” என்று இளஞ்சித்திரனை குற்றம் சாட்டினான் சுதாகர்.

“என்ன இருந்தாலும் ஏ அண்ணன், அய்யான்னு நினைச்சேன்டா. அவுகளுக்கு ஒரு இழப்பை என்னால் எப்படிக் கொடுக்க முடியும்னு நினைச்சேன். அதுவுமில்லாம அவுக பண்ற தப்புக்கு எதுக்குப் பல பேரு உழைப்புல உருவான தானியங்களை அழிக்கணும்? அவுக தேன் என்னைய மகனா, தம்பியா நினைக்கலை. ஆனா நான் ஏ அண்ணனா, அய்யாவா நினைச்சுப்புட்டேன். அவுக செஞ்ச பல அக்கிரமத்துக்குப் பிறகும் அவுக மேல கொஞ்சம் பாசம் வச்சவனா இருந்து போட்டேன்..” என்று வருத்தத்துடன் சொன்னான் இளஞ்சித்திரன்.

“நீ மட்டும் நினைச்சா போதுமா? இந்த நிலையிலும் அவுக மேல பாசம் வச்சுருக்குற உன்னைய எல்லாம் என்ன செய்றது அண்ணே?” என்று கோபத்துடன் கேட்டான் சுதாகர்.

“இன்னமும் அவுக மேல பாசம் இருக்குன்னு யாருடா சொன்னா?” என்று கோபமாகத் திருப்பிக் கேட்டான் இளஞ்சித்திரன்.

“நாந்தேன் சொல்றேன். அதுனால தானே இங்கன நீ ஓ அண்ணே மேல கம்ளைண்ட் கொடுக்காம விட்டிருக்க…” என்று குற்றம் சொன்னான்.

“இல்லடா…” என்றவன், ரித்விக்கிடம் சொன்ன பதிலை சுதாகரிடம் சொன்னான்.

ஆனால் அவனை நம்பாமல் பார்த்தான் சுதாகர்.

“பத்து நாளுக்கு முன்னாடி வரைக்கும் நான் அவுக வீட்டு புள்ளயா யோசிச்சேன்டா. ஆனா இப்போ ஏ பிள்ளைக்கு அப்பனா யோசிக்கிறேன். என்னைய எதுவும் செய்ய அவுகளுக்கு உரிமை இருக்கு. ஏன்னா அவுக வளர்த்த உடம்பு தேன் நான். ஆனா ஏ பிள்ளையையும், பொஞ்சாதியையும் கொல்ல அவுக யாருடா?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

“எவ்வளவோ சாந்தமாக இருக்குற ஒரு மிருகம் கூடத் தன்னோட குட்டிக்கு ஒன்னுனா ஆக்ரோஷமா பாயும்டா. மிருகமே அப்படி இருக்கும் போது நான் மனுஷன்டா. ஏ பிள்ளையை அழிச்சு எனக்குப் புத்திர சோகத்தைக் காட்டினவனுங்களை நான் சும்மா விட்டுருவேன்னு நினைக்கிறாயா? நானும் பாயத்தான்டா போறேன்.

“புத்திர சோகம்னா என்னன்னு ஏ அய்யனுக்குக் காட்ட போறேன். புள்ளை இல்லாம போனா மட்டும் தேன் புத்திர சோகம் இல்ல. கண்ணு முன்னாடி புள்ள இருக்கும் போதே அவன் அனுபவிக்கிற தண்டனையைப் பார்த்து சித்ரவதை அனுபவிச்சுத் துடிக்கிறதும் புத்திர சோகந்தேன். அந்தத் துடிப்பை ஏ அய்யனுக்கு நான் கொடுக்கப் போறேன். எந்த மகனை வைத்து இத்தனை நாளா ஆட்டமா ஆடிக்கிட்டு சாதி பேரை சொல்லி அடுத்த உயிர்களைக் காவு வாங்கினாரோ அந்த மகனுக்கு ஆப்பு அடிக்கப் போறேன்.

ஏ புள்ளையைக் கருவிலேயே அழிச்சுட்டாங்கடா. இதோ இங்கன ஏ புள்ளைய காப்பாத்த முடியாத அப்பனா போய்ட்டேன்னு அணு அணுவா துடிச்சு வலிக்குதுடா…” என்று தன் நெஞ்சை தட்டிக் காட்டினான்.

“ஏன் அப்பா என்னைய கொல்ல விட்டன்னு ஏ புள்ள என்னைய பார்த்துக் கேள்வி கேட்குதுடா. அதுக்குப் பதில் சொல்ல தெரியாமல் ஏ மனசோட போராடிக்கிட்டு இருக்கேன். ஓ அய்யனும், அண்ணனும் அடுத்த வீட்டு உயிரை எல்லாம் துட்சமா நினைச்சு சாகடிச்சப்ப பார்த்துட்டு சும்மா கையைக் கட்டிக்கிட்டு இருந்தியே, அந்தப் பாவம் தேன் நான் உனக்குப் புள்ளயா பொறக்காம போய்ட்டேன்னு ஏ புள்ள ஏ காதுல சொல்ற மாதிரியே கேட்குதுடா.

இன்னும் எத்தனை நாளைக்குத் தேன் சுயநலவாதியா இருக்கப் போறப்பான்னு ஏ புள்ள கேட்குற மாதிரி இருக்குடா. போதும்..‌. நான் சுயநலவாதியா இருந்ததும் போதும். நாங்க ஓடி ஒளிஞ்சதும் போதும். இதுவரை மறைஞ்சு மறைஞ்சு அவுகளுக்கு நான் ஆட்டம் காட்ட நினைச்சதும் போதும். இந்த இளஞ்சித்திரன் பதுங்கி மட்டும் இல்லை, பாயவும் செய்வான்னு காட்ட போறேன்…” என்று சபதம் எடுப்பது போல் ஆவேசமாகச் சொன்னான் இளஞ்சித்திரன்.