பிழையில்லா கவிதை நீ – 3

அத்தியாயம் – 3

இரவு பத்து மணி.

அந்தக் காவல் நிலையம் வெகு அமைதியாக இருந்தது.

கைதி அறையில் நான்கு பேர் உள்ளே இருக்க, இரவு நேரத் தூக்கம் துறந்து காவல் வேலையில் கவனமாக இருந்தனர் காவலர்கள்.

அப்போது வெளியே காவல் வாகனம் நிற்கும் சப்தமும், அதைத் தொடர்ந்து அழுத்தமான காலடிச் சப்தமும் கேட்க, காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்.

அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்த ஜெகவீரன் அக்மார்க் காவல்காரன் அடையாளத்துடன் இருந்தான்.

கூடுதல் சதை இல்லாமல் கச்சிதமாக, விறைப்பாக இருந்த உடலைக் கம்பீரமாகத் தழுவி இருந்தது காவல்துறை சீருடை.

அவனின் தலைக் கேசம் காவலர்களுக்கே உரித்தான வெட்டுதலை வாங்கியிருந்தது. அதன் மேல் அணிந்திருந்த தொப்பி அவனின் உருவத்திற்குக் கூடுதல் கம்பீரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அடைத்து வைத்திருந்த கைதிகளை ஒரு பார்வை பார்த்து விட்டுத் தன் இருக்கையின் அருகே வந்ததும் தொப்பியைக் கழற்றி மேஜையின் மீது வைத்தவன் நாற்காலியில் அமர்ந்தான்.

அன்றைய இரவு நேரப் பணி அவனை ஆட்கொள்ள ஆரம்பித்ததின் விளைவாக உடலையும், உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டு, சில கோப்புக்களை எடுத்துத் தீவிரமாகப் பார்த்து வழக்குச் சம்பந்தமாக ஏதோ குறிப்பு எடுக்க ஆரம்பித்தான்.

அவன் வந்து அமர்ந்து, வேலையை ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள் சென்ற நிலையில், மேஜையின் மீதிருந்த தொலைப்பேசி அவனுக்கு வெளியே செல்லும் வேலையைக் கொடுக்க அழைத்தது.

அழைப்பை ஏற்று “ஹலோ, இன்ஸ்பெக்டர் ஜெகவீரன் ஸ்பீக்கிங்…” என்ற அடுத்த நிமிடம் விறைத்து நிமிர்ந்து, “எஸ் சார், ஓகே சார்! எந்த இடம் சார்? ஓகே சார், நான் போய்ப் பார்க்கிறேன்” என்று பதில் சொன்னவன், அழைப்பைத் துண்டித்து விட்டு, “கான்ஸ்டபிள்ஸ், என் கூட இரண்டு பேர் வாங்க!” என்று கூறி விட்டு, எழுந்து கழட்டி வைத்திருந்த தொப்பியை அணிந்து கொண்டு, வெளியே வேகநடையுடன் சென்றான்.

கான்ஸ்டபிள்கள் இருவரும் அவன் பின்னால் செல்ல, “கமிஷ்னர் தான் போன் பண்ணினார். பப்பில் ஏதோ தகராறாம், அதுல ஒருத்தனுக்கு அடியாம். அவன் கமிஷ்னருக்குத் தெரிந்தவனாம். என்னன்னு போய்ப் பார்க்கச் சொல்லியிருக்கார்” என்று உடன் வந்தவர்களுக்கு விவரம் சொன்னவன் முகம் கடுகடுவென்று இருந்தது.

“எதுவும் பிரச்சனைனா அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்குப் போன் பண்ணாம நேரா கமிஷ்னருக்குத் தான் விஷயத்தைக் கொண்டு போறானுங்க. அவரா எல்லாத்துக்கும் ஓடி வருவார்? இவனுங்க குடிச்சுட்டு ஆடுறதுக்கு எல்லாம் நாம காவல் காக்கப் போக வேண்டியதா இருக்கு…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டான்.

பத்து நிமிடப் பயணத்தில் வந்த அந்த இரவு நேர விடுதியின் வெளியே ஜெகஜோதியாக அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

வெளியே பார்க்க வெகு அமைதியாக இருக்க, உள்ளே வெகு ஆரவாரமாக இருந்தது.

அங்கே சிலர் கூட்டமாக நின்று சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, “இங்கே என்ன பிரச்சனை?” என்று அதட்டலாகக் கேட்டுக் கொண்டே கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றான்.

“கான்ஸ்டபிள்ஸ் நான் விசாரித்து முடிக்கும் வரை யாரும் இங்கிருந்து போகாம பார்த்துக்கோங்க” என்று அவர்களுக்கான வேலையைத் தந்து விட்டு நடுவில் சென்று நின்றான்.

கூட்டத்தின் நடுவே ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த இருவரையும் பார்வையால் அளந்தான்.

இருவருமே செழிப்பான தோற்றத்துடன் இருந்தனர். இருவருக்குமே இருபத்தி மூன்று வயதிற்குள் இருக்கலாம் என்று அனுமானிக்க முடிந்தது. தோற்றமே அவர்களின் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டியது‌.

‘கையை எடுங்க!’ என்பது போல் தன் கையை அசைத்துக் கட்டளையிட்டான்.

“என்ன பிரச்சனை உங்க இரண்டு பேருக்கும்?” என்று இருவரையும் ஆராய்ந்து கொண்டே நிதானமாகக் கேட்டான்.

ஒருவனின் உதடு கிழிந்து லேசாக உதட்டோரம் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இன்னொருவனின் நெற்றியிலிருந்து ரத்தம் வெளியேறிக் கழுத்து வரை வடிந்து கொண்டிருந்தது.

“கமிஷ்னர் அங்கிள் சொல்லலையா? அவர் ஏன் வரலை?” என்று எரிச்சலுடன் கேட்டான் உதடு கிழிந்தவன்.

தன்னிடம் கேள்விக் கேட்டவனை வெகு நிதானமாகப் பார்த்தவன், “முதலில் என்ன பிரச்சனைன்னு சொல். அதுக்குப் பிறகு இங்கே கமிஷ்னர் வரணுமா, வேண்டாமானு நான் சொல்றேன்” என்றான் அழுத்தமாக.

‘கமிஷ்னர் அங்கிள் வருவாருன்னு பார்த்தால், இன்ஸ்பெக்டரை அனுப்பி வச்சுருக்கார்’ என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவன், “இவன் என்னை அடிச்சுட்டான். இங்கே பாருங்க, என் உதட்டில் இருந்து ரத்தம் வருது” என்று மிக, மிக லேசாகக் கசிந்து கொண்டிருந்த ரத்தத்தைக் காட்டினான்.

‘இந்தச் சின்னக் காயத்துக்குத் தான் கமிஷ்னருக்குப் போன் போட்டுச் சொன்னானாக்கும்?’ என்ற எரிச்சல் உண்டாக, அவனை அற்பமாகப் பார்த்து விட்டு இன்னொருவனைக் காட்டி, “இவன் தலையை உடைச்சது யாரு?”என்று கேட்டான்.

“அவன் என் உதட்டைக் கிழிச்சான். நான் அவன் மண்டையை உடைச்சேன்” என்று அவனே பதில் சொன்னான்.

“முதலில் உன் பேரும், என்ன பிரச்சனை என்றும் இன்னும் விளக்கமா சொல்!” என்று ஜெகன் அதட்டிக் கேட்க,

“என்ன இன்ஸ்பெக்டர், உங்களை வர வைத்த என்னையவே அதட்டுவீங்களா?” என்று ஜெகனிடம் பாய்ந்தான் அவன்.

“நீ சொல்லிக் கமிஷ்னர் மூலமா வந்தேன் என்பதற்காக உன் இஷ்டத்துக்கு நான் ஆட முடியாது” என்று கடுமையாகச் சொன்னவன், “விவரம் சொல்!” என்றான் அதட்டலாக.

அவனின் அதட்டல் எகிறிக் கொண்டிருந்தவனைச் சிறிது அடங்க வைக்க, “என் பேர் சுனில். இவன் என் எனிமி. காலேஜ்ல எங்க இரண்டு பேருக்கும் எப்பவும் ஒத்துவராது. வழக்கமா நான் கூட்டிட்டு வர்ற என் கேர்ள் ஃப்ரண்டை இன்னைக்கு இவன் கூட்டிட்டு வந்துட்டான். எப்படி என் கேர்ள் ஃப்ரண்டை நீ கூட்டிட்டு வரலாம்னு கேட்டதுக்கு என்னை அடிச்சான். நானும் பதிலுக்கு அடிச்சேன்” என்றவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் வெறி வந்தது ஜெகவீரனுக்கு!

ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு இன்னொருவனின் புறம் திரும்பி, “உன் பேரென்ன?” என்று அதட்டலாகக் கேட்டான்.

“கரண்…”

“நீ என்ன பெரிய ரவுடியா? அவன் கேள்விக் கேட்டா நீ வாயால் பதில் சொல்லணும். அதை விட்டுக் கையை நீட்டுவியா?” என்று கரணை அதட்டினான்.

ஜெகன் தனக்குச் சாதகமாகக் கரணை அதட்டியதில் சிரித்தான் சுனில்.

ஆனால் அடுத்த நிமிடமே அவனின் சிரிப்பு மறையும் வண்ணம், அவனின் புறம் கோபமாகத் திரும்பிய ஜெகன், “கரண் அடிச்சதில் உனக்குச் சின்னக் காயம் தான். ஆனா அவனுக்கு மண்டையே உடைஞ்சிருக்கு. சட்டப்படி பார்த்தால் நான் இப்ப உன்னைத் தான் அரெஸ்ட் பண்ணனும். என்ன பண்ணட்டுமா?” என்று கேட்டான்.

“என்…என்ன… என்னையவே அரெஸ்ட் பண்ணுவீங்களா? நான் கமிஷ்னர் அங்கிள்கிட்ட பேசி இங்கே வரச் சொல்றேன் இருங்க. நீங்க என்ன என்னை அரெஸ்ட் பண்றது? அவர் வந்து உங்களைக் கேள்விக் கேட்பார்” என்று இள ரத்தமும், பணத் திமிருமாக எகிறினான்.

“உனக்கும், உன் சில்லித்தனமான சண்டைக்கும் நான் வந்ததே அதிகம். இதில் உனக்குக் கமிஷ்னர் வேற வரணுமா? உனக்குக் கமிஷ்னர் தான் ‌வரணும்னா தாராளமா வரச்சொல்! ஆனா இங்க இல்லை, போலீஸ் ஸ்டேஷனுக்கு. ஏன்னா நான் தான் கரணின் மண்டையை உடைச்ச காரணத்துக்காக உன்னை அரெஸ்ட் பண்ணப் போறேனே” என்றான் நக்கலாக.

“என்னையவா அரெஸ்ட் பண்ணுவீங்க? இருங்க, இவ்வளவு தெனாவட்டா பேசுற நீங்க கமிஷ்னர் வந்தால் தான் அடங்குவீங்க” என்று இன்னும் திமிராகப் பேசிய சுனில் தன் கைபேசியில் இருந்து கமிஷ்னருக்கு அழைக்கப் போக, அவனிடமிருந்து கைபேசியைச் சட்டென்று பறித்த ஜெகன், “இரு! நானே கமிஷ்னருக்குப் பேசுறேன்” என்று கூறி விட்டுத் தன் கைபேசியில் இருந்து சுனிலையும், கரணையும் புகைப்படம் எடுத்துச் சில நொடிகள் ஏதோ செய்தவன், பின்பு கமிஷ்னருக்குத் தானே சுனிலின் கைபேசியிலிருந்து அழைப்பு விடுத்தான்.

அந்தப் பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும், “சார், நான் இன்ஸ்பெக்டர் ஜெகவீரன் பேசுறேன். இப்போ உங்க ஃபோனுக்கு ஒரு போட்டோவும், மெசேஜூம் அனுப்பி இருக்கேன். அதைப் பார்த்துட்டு நான் என்ன செய்யட்டும்னு சொல்லுங்க சார்” என்றான்.

சில நொடிகள் இரண்டு பக்கமும் அமைதி நீடிக்க, பின்பு “உங்களுக்காகத் தான் சார் இவ்ளோ நேரம் பொறுமையாக இருக்கேன். இல்லன்னா என் நடவடிக்கையே வேறாக இருந்திருக்கும். நீங்களே சொல்லிருங்க சார், சுனில் ரொம்பத் துள்றான்” என்று சொன்னவன் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டான்.

“சுனில், போலீஸ்காரங்க எல்லாம் வெட்டியா உட்கார்ந்து வெட்டி வேலை பார்க்கிறவங்கனு நினைச்சியா? என்கிட்ட ஏதோ பெரிய சண்டை, ரத்தம் எல்லாம் வந்திருச்சுனு நீ சொன்னதால் தான் இன்ஸ்பெக்டரை அனுப்பி வச்சேன். ஆனா ஊசி குத்தின மாதிரியான இத்துனூண்டு காயத்துக்குத் தான் என்கிட்ட அவ்வளவு ஆர்ப்பாட்டமா பேசினாயா? அதுவும் ஒரு பெண்ணுக்குப் போட்டிப் போட்டுச் சண்டைப் போட்டதுக்கு நானே உன்னை இரண்டு அடி போட்டுருக்கணும். உன் அப்பனுக்காகச் சும்மா விடுறேன். இல்லனா அந்தப் பையனை அடிச்சதுக்காக உன்னை அரெஸ்ட் பண்ணி உள்ளே வச்சுருப்பேன்” என்று கமிஷ்னர் கடுமையாகச் சொல்ல, சுனிலின் முகம் வெளுத்துப் போனது.

“நீங்க கிளம்புங்க இன்ஸ்பெக்டர்!” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தார் கமிஷ்னர்.

போலீஸை வர வைத்துக் கெத்துக் காட்ட நினைத்தவன் வெத்துவேட்டாய் நின்றான். கரண் அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவனைச் சார்ந்த சிலரும் சுனிலைப் பார்த்துச் சிரித்தனர்.

‘மற்றவர்கள் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் படி செய்து விட்டானே’ என்று ஜெகனை முறைத்துப் பார்த்தான்.

ஆனால் பதிலுக்கு அவனைக் கடுமையாக முறைத்த ஜெகன், “விஷயம் முழுசா தெரிஞ்சா கமிஷ்னர் இப்படித்தான் சொல்வாருன்னு தெரிஞ்சு தான் உன்கிட்ட நிதானமா பேசினேன். இல்லனா சில்லித்தனமா பிகேவ் பண்ணியதுக்குப் பொடதிலேயே இரண்டு போட்டுப் போலீஸ் ஸ்டேஷன் இழுத்துட்டுப் போயிருப்பேன். இருக்குற கேஸ் பத்தாதுன்னு உன்னை வேற கொண்டு போய் ஸ்டேஷன்ல உட்கார வைத்து என்னால அழகு பார்க்க முடியாதுன்னு தான் விட்டுட்டுப் போறேன். இல்லைனா நடக்குறதே வேற…” என்று கடுமையாகச் சொன்னவன், கரண் புறம் திரும்பி “நீ ஹாஸ்பிட்டல் போ!” என்று அவனை அனுப்பி விட்டுத் தானும் அங்கிருந்து வெளியேறினான்.

அவமானமாக உணர்ந்ததில் மேலும் அங்கே நிற்க முடியாமல் மனம் முழுவதும் ஜெகவீரன் மீதான வஞ்சத்தைச் சுமந்து கொண்டு சுனிலும் வேகமாக வெளியேறிச் சென்றான்.

வெளியே வந்த ஜெகவீரன் கான்ஸ்டபிள்களை வாகனத்தில் ஏறச் சொல்லி விட்டுத் தான் மட்டும் ஏறாமல் வாகனத்தில் சாய்ந்த படி அங்கேயே நின்றான்.

ஐந்து நிமிடம் கடந்த பிறகும் அவன் ஏறாமல் இருக்க, அவன் ஏன் இன்னும் நிற்கிறான் என்று புரியாமல் “சார்…” என்று ஒரு கான்ஸ்டபிள் இழுத்தார்.

“கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க செந்தில், போகலாம்!” என்றான்.

‘தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்கள் தானே’ என்று எப்போதும் அலட்சியமாகப் பதில் சொல்ல மாட்டான் ஜெகவீரன்.

இப்போதும் அமைதியாகவே பதில் சொன்னவனிடம், “சரிங்க சார்” என்று சொல்லி விட்டு அமைதியானார் கான்ஸ்டபிள் செந்தில்.

மேலும் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்த பெண்ணைப் பார்த்து “ஹலோ மிஸ், இங்கே வாங்க!’ என்று அழைத்தான்.

மார்டன் உடையில் இருந்தாள் அந்த யுவதி. அவளைப் பப்பின் உள்ளே சென்ற போதே கவனித்திருந்தான் ஜெகவீரன்.

விரித்து விட்ட கூந்தலும், அதீத முக அலங்காரமும், சிவப்புச் சாயத்தில் முத்துக்குளித்த இதழ்களுமாக இருந்தாலும், முக அமைப்பு ஏற்கனவே பார்த்திருந்த இரண்டு பெண்களை ஞாபகப்படுத்த, தான் சுனிலை விசாரித்து முடிக்கும் முன் அவள் வெளியே சென்று விடக் கூடாது என்று தான் கான்ஸ்டபிள்களிடம் யாரும் வெளியே சென்று விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைக் கொடுத்திருந்தான்.

“என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க சார்?” என்று குழப்ப முகப்பாவத்துடன் கேட்டுக் கொண்டு வந்தவளைக் கூர்ந்து பார்த்தவன், “உங்க பேர் என்ன?” என்று கேட்டான்.

“எதுக்குச் சார்? என்னை எதுக்கு விசாரிக்கிறீங்க?”

“முதலில் நான் உங்ககிட்ட கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க. உங்க பேர் என்ன?”

“எதுக்கு சார் இப்படி மிரட்டுறீங்க? பேர் தானே தெரியணும்? என் பேர் ராகினி…” என்றாள்.

“ராகினி, ம்ம்ம்!” என்று அவளின் பெயரைச் சொல்லித் தாடையைத் தடவி கொண்டே யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

“உங்களுக்குக் கவினி, தர்ஷினின்னு யாரையாவது தெரியுமா?” என்று அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டான்.

“கவினி, தர்ஷினியா? ம்கூம்! அப்படி யாரையும் தெரியாதே. ஏன் சார் கேட்குறீங்க?” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்லை, சும்மா தான்!” என்றவன் அவளின் புருவத்திற்கு மேலும், நாடியிலும் தான் குறிப்பாகப் பார்த்தான்.

இவளுக்கு இரண்டு இடங்களிலும் தழும்பு இல்லை. மாசு மருவற்ற முகம் என்பது போல் முகம் இருந்தது.

அதற்கு மேல் அவளை ஆராய்ச்சிப் பண்ணாதவன் “நீங்க போங்க!” என்று அவளை அனுப்பினான்.

அவள் புரியாத பார்வையுடன் ஜெகனைப் பார்த்துத் தோளை அலட்சியமாகக் குலுக்கி விட்டு அங்கிருந்து சென்றாள்.

போகும் அவளையே புருவச் சுளிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஜெகவீரன், அதன் பிறகு தானும் அங்கிருந்து கிளம்பினான்.

மேலும் பத்து நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் அதே முக அமைப்புடைய பெண்ணைச் சந்தித்தான்.

அதுவும் அவனின் காவல் நிலையத்தில்!

ஜீன்ஸ் பேண்ட்டும், டீசர்ட்டும் போட்டு, ஷூ அணிந்து, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடனும், குறிப்பாகக் கவினிக்கு இருந்த நாடித் தழும்பையும், தர்ஷினிக்கு இருந்த நெற்றி தழும்பையும் அவள் ஒருத்தியே பெற்றவளாக, தன் முகத்தில் பட்டவர்த்தனமாகக் காட்டிக் கொண்டு அவனின் இருக்கைக்கு எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அவளுடன் ஒரு பெரியவரும் வந்திருந்தார்.

அவளைப் பார்த்ததும் எப்போதும் போல் பெயரைக் கேட்காமல், ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வியந்த பார்வை பார்த்தவன், “மிஸ்.ஜனார்த்தனி, எங்கே இந்தப் பக்கம்?” என்று அவளை நன்கு தெரிந்தவன் போல் சாவகாசமாக விசாரித்தான் ஜெகவீரன்.