பிழையில்லா கவிதை நீ – 21

அத்தியாயம் – 21

கஸ்தூரி ஆழ்ந்த மயக்கத்தில் கட்டிலில் படுத்திருக்க, ஜனார்த்தனி, சேதுராமன், பரத் மூவரும் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.

மூவருமே ஒவ்வொரு விதமான மனநிலையில் கஸ்தூரியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

மனைவி சொன்னதை நம்ப முடியாத அதிர்ச்சியில் கலங்கிப் போய் அமர்ந்திருந்தார் சேதுராமன்.

தன் காதலி இப்போது உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர்க் கன்னம் நனைக்கச் சோகமே உருவாக அமர்ந்திருந்தான் பரத்.

கஸ்தூரி சொன்னதைக் கேட்டு முதலில் அதீதமாக அதிர்ந்து போனாலும், சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டு அவர் சொன்னதை ஆராய்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் ஜனார்த்தனி.

சேதுராமன், பரத் போல் ஜனார்த்தனி உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவுக்கும் வரவில்லை.

அவளின் மூளை துப்பறிவாளனியாகச் சிந்திக்க ஆரம்பித்தது.

அவளுக்குச் சில கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியது இருந்தது. விடையைச் சொல்ல வேண்டியவர் கஸ்தூரி தான் என்பதால் அவர் கண் விழிக்கக் காத்திருந்தாள்.

கஸ்தூரி சற்று நேரத்தில் கண்விழிக்கச் சேதுராமன் விரைவாக மனைவியின் அருகில் ஓடினார்.

“கஸ்தூரி நீ சொன்னது உண்மையா? இல்லை மயக்கத்தில் உளறுகிறாயா?” என்று பதறிப் போய்க் கேட்டார்.

“அங்கிள், பதறாதீங்க! இப்போது தான் பொறுமை ரொம்ப அவசியம். ஆன்ட்டியிடமிருந்து முழு விவரமும் வர வைக்கணும். அவங்க திரும்ப மயக்கம் போட்டால் காரியமே கெட்டுப் போகும்…” என்று சேதுராமனை அமைதிப்படுத்தினாள் ஜனார்த்தனி.

“ஆனா வினயா?” என்று மகளைப் பற்றிய கவலையில் அவர் திணற,

“அங்கிள், ப்ளீஸ்!” என்று அவரிடம் சொன்னவள், “பரத், அப்படியே இடிந்து போய் இருக்காம அங்கிளை கவனிங்க. வினயாவுக்கு என்னாச்சுனு நாம முழுசா தெரிஞ்சுக்கணும்…” என்று பரத்திடம் அவரின் பொறுப்பை ஒப்படைத்தாள்.

பரத் எழுந்து வந்து சேதுராமனின் கையை ஆதரவாகப் பிடிக்க, அவர் அவனின் கையை இறுக பற்றிக் கொண்டார்.

கஸ்தூரியின் அருகில் நெருங்கிய ஜனார்த்தனி, “ஆன்ட்டி, இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டவள், கட்டிலில் அமர்ந்து அவரின் கையை மென்மையாக பற்றித் தடவிக் கொடுத்தாள்.

அவர் ஒன்னும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தார்.

“என்னை யாருன்னு தெரியுதா ஆன்ட்டி?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க, யோசனையுடன் அவளைப் பார்த்தாரே தவிர அவள் யார் என்று அவருக்குப் பிடிபடவில்லை என்று அவளுக்குப் புரிந்தது.

அதனால் தானே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“நான் உங்க பொண்ணு வினயாவோட ஃபிரண்டு ஆன்ட்டி. இப்ப வினயா எங்கே ஆன்ட்டி? அவளுக்கு என்னாச்சுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” என்று கேட்டவளுக்கு அவர் மௌனமே பதிலாகத் தந்தார்.

“வினயா இப்போ உயிரோட இல்லைன்னு சொன்னீங்க. அது உண்மையா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.

மௌனம்!

“அவளை நீங்க கொன்று விட்டதாகச் சொன்னீங்க. அதுவும் உண்மையா?”

மௌனம்!

“அவளை ஏன் கொன்னீங்க? அவள் என்ன தப்புச் செய்தாள்?”

மௌனம்!

“இப்ப அவளை ஒருத்தன் கடத்தி வைத்திருக்கிறேன்னு சொல்றான். அவளை விடணும்னா இருபது லட்சம் கொடுக்கணும்னு போன் போட்டு மிரட்டுறான். அவன் சொல்றது உண்மையா? இல்லை நீங்க சொல்றது உண்மையா?”

அவர் பதில் சொல்லவில்லை என்றாலும் அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் கஸ்தூரியிடம் சிறு மாற்றம் வந்து போனது.

அதனால் நிறுத்தாமல் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் வரிசையாகக் கேட்டுக் கொண்டே போனாள் ஜனார்த்தனி.

“ஓகே, அப்போ பதில் சொல்ல மாட்டீங்க? சரி, என்னிடம் பதில் சொல்ல வேண்டாம். இப்போ போலீஸ் வரும். போலீஸ் வந்து நான் கேட்ட கேள்வி எல்லாம் அவங்க கேட்பாங்க. அப்போ உங்க பதிலைச் சொல்லுங்க…” என்று சொன்னவள் பிடித்திருந்த அவரின் கையை விட்டுவிட்டுப் படுக்கையில் இருந்து எழுந்தாள்.

ஆனால் இப்போது அவளை எழ விடாமல் அவளின் கையைப் பற்றிக் கொண்டார் கஸ்தூரி.

அவள் அவரைத் தீர்க்கமாகப் பார்க்க, “போ… போலீஸ்… வே… வேணாம்…” என்று உதடுகள் நடுங்கச் சொன்னார்.

“சரி, போலீஸ் வேணாம். ஆனா போலீஸ் வரக் கூடாதுனா நான் கேட்குற கேள்விக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லியாகணுமே…” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள்.

“சொ… சொல்றேன்…” என்றார் தடுமாற்றத்துடன்.

“ம்ம், சொல்லுங்க ஆன்ட்டி. வினயாவை என்ன செய்தீங்க? அன்னைக்கு என்ன நடந்தது?” என்று பொறுமையாகக் கேட்டாள்.

“அ…அன்னைக்கு…” என்று திக்கியபடியே சொல்ல ஆரம்பித்தார் கஸ்தூரி.

அன்று சொந்தத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டுக் கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்தனர் கஸ்தூரியும், வினயாவும்.

நுழைந்த வேகத்தில் தன் கை பையைக் கோபத்துடன் சோஃபாவில் விட்டெறிந்தாள் வினயா.

“உன் மனசுல நீ என்னடி நினைச்சுட்டு இருக்க? இப்ப எதுக்கு அந்தப் பேக்கை அப்படி எறியுற?” என்று அவளை விடக் கோபமாகக் கேட்டார் கஸ்தூரி.

“உங்க மனசுல நீங்க என்னம்மா நினைச்சுட்டு இருக்கீங்க? முதலில் அதைச் சொல்லுங்க. அப்புறம் என் மனசுல என்ன இருக்கு… யார்ர்ர் இருக்கான்னு நான் சொல்றேன்…” என்று ஆத்திரமாகக் கேட்டாள் வினயா.

“நீ சொன்னியே யார்ர்ர்ர் இருக்கான்னு சொல்றேன்னு அவன் நினைப்புக் கூட உன் மனசுல வரக் கூடாதுன்னு தான் நான் நினைச்சுட்டு இருக்கேன்…” என்று கஸ்தூரி சொல்ல,

“என்ன சொன்னீங்க, என் நினைப்பில் இருக்கக் கூடாதா? என் நினைப்பில் மட்டும் இல்ல, என் நிஜமா, என் நிழலா, என் உயிரா, என் எல்லாமுமா என் பரத் மட்டும் தான் இருப்பான். அதை மாத்தணும்னு நினைச்சா அப்புறம் நடக்குறதே வேற…” என்று ஆத்திரமாகக் கத்தினாள் வினயா.

கோபம்! கோபம்! கண்மண் தெரியாத கோபம் வந்தது அவளுக்கு.

‘என்ன நினைப்பு இருந்தால் எனக்கே தெரியாம மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணி, அவனை எனக்குத் தெரியாம பொண்ணு பார்க்கச் செய்திருப்பாங்க?’ என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டாள்.

அதுவும் அவளின் பரத்தை நிராகரித்து விட்டுப் பணத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து வேறு வசதியான மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவள் அந்த ஆத்திரத்தில் இருக்க, அவளை விடப் பல மடங்கு ஆத்திரத்தில் இருந்தார் கஸ்தூரி.

எந்த வசதி வாய்ப்பும் இல்லாத சாதாரண ஒரு வேலையில் இருக்கும் பரத்தை மகள் காதலிக்கிறாள் என்பதையே ஏற்றுக் கொள்ள முடியாமல் தான், அவசர அவசரமாகக் கணவனுக்கும் சொல்லாமல் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தார்.

கணவனை எப்படியும் சமாளித்துத் தன் விருப்பத்திற்குச் சம்மதிக்க வைத்து விடலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

அதனால் தான் கணவனிடம் போனில் மகள் அவளின் காதல் விஷயம் சொல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தியிருந்தார்.

கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து அனைத்தும் பேசி முடித்து விட்டால் கணவனும் தன் வழிக்கு வருவார். அவருடன் சேர்ந்து மகளையும் தங்கள் வழிக்கு வர வைத்து விடலாம் என்பது அவரின் மனக் கணக்காக இருந்தது.

ஆனால் மகள் தான் பார்த்த மாப்பிள்ளையிடமே சென்று அவள் ஒருவனைக் காதலிப்பதாகச் சொல்லித் தன் அத்தனை கணக்கையும் தவிடுபொடியாக்கி விட்டாளே என்ற கோபம் அவருக்கு மலையளவு இருந்தது.

“இங்கே பாருடி… என்ன நடந்தாலும் சரி அந்த அன்னக்காவடி பயலை என் மருமகனா ஏத்துக்க மாட்டேன். அவனை எப்படியாவது கட்டிக்கலாம்னு கனவு கண்டால் அது வெறும் கனவா மட்டுமே போகுமே தவிர நனவாக ஒருநாளும் விட மாட்டேன்…” என்றார்.

“அப்படியெல்லாம் என் பரத்தை என்னால் விட முடியாது. கனவோ, நனவோ எதுவா இருந்தாலும் அவன் கூட மட்டும் தான் வாழ்வேன்…” என்றாள் வினயா.

கஸ்தூரி மகளின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கோபமாகக் கத்த, காதலனைக் கரம் பிடித்தே தீருவேன் என்று பதிலுக்குக் கத்தினாள் வினயா.

இருவரும் மாறி மாறித் தாங்கள் சொல்வது தான் சரி. இப்படித் தான் நடக்க வேண்டும் என்று இருவருமே முடிவு செய்து விட்டுத் தங்கள் எண்ணத்தை நிலைநாட்ட முயன்றனர்.

எந்த விஷயத்திற்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு.

ஒருவர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் நமக்கு என்ன பார்வை இருக்கிறதோ அந்தப் பக்கம் மட்டுமே பார்த்துப் புரிந்து கொண்டு, சொன்னவர்களின் பார்வையைக் குறை சொல்லி அதற்கான தீர்ப்பையும் வழங்கிக் கொள்வார்கள்.

இன்ன விஷயம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டுப் பேசுபவர்கள் யாரும் அடுத்தவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருப்பதில்லை.

தனக்கு எது சரியாகப் படுகிறதோ அதைத் தான் செய்வார்கள், பேசுவார்கள்.

இப்போதும் கஸ்தூரி, வினயா இருவருக்கும் இடையே அது தான் நிலவியது.

வசதியில் தங்கள் பக்கத்தில் கூட வர முடியாத பரத் மாப்பிள்ளையாக வேண்டாம் என்பதில் கஸ்தூரி உறுதியாக இருந்தார்.

வசதியில்லாமை எல்லாம் ஒன்றுமே இல்லை. தான் காதலித்தவன் எந்த நிலையில் இருந்தாலும் அவனையே கை பிடிக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தாள் வினயா.

இருவருக்குமே அவரவர் எண்ணம் பெரிதாக இருந்தது.

அவரவர் நியாயம் அவரவருக்குச் சரியாகப் படத் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்து வாதாடினார்கள்.

அவரவரின் நியாயம் மட்டும் பார்ப்பவர்களுக்கு அடுத்தவர்களின் நியாயம் புலப்படுவதில்லை‌‌.

மகளின் விருப்பத்திற்குச் செவிச் சாய்க்கலாம் என்று கஸ்தூரியும் யோசிக்கவில்லை.

அன்னைக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயற்சி செய்யலாம் என்று வினயாவும் யோசிக்கவில்லை.

யோசிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யும் அனைத்தும் வெற்றிக் கனியைச் சுவைப்பது இல்லை என்று இருவருக்குமே புரியாமல் போனது.

அதன் பலன் இருவருக்கும் இடையே அன்னை, மகள் உறவை மீறிச் சண்டை வலுத்தது.

“இங்க பார் வினயா, நீ என்ன தான் அவன் தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சாலும் அவனை உனக்குக் கட்டிவைக்க வேண்டியவங்க உன்னைப் பெத்த நாங்க தான். கண்டிப்பா நான் அவனை உனக்குக் கல்யாணம் முடித்து வைக்க மாட்டேன்.

உங்க அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்னு உனக்கே தெரியும். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் அவரை விட இன்னும் அதிகம் சம்பாதிக்கிறவனா உன்னை இன்னும் வசதியா வாழ வைக்கிறவனா இருக்கும்னு நான் ஆசைப்படுறேன். உனக்காக, நீ இன்னும் வசதியா வாழணும்னு சொல்றேனே தவிர எனக்காகச் சொல்லலைடி. அதை முதலில் புரிஞ்சுக்கோ…” என்றார் கஸ்தூரி.

“நீங்களும் ஒன்னை நல்லாப் புரிஞ்சுக்கோங்கமா. வசதியா வாழ்றோமா, வசதியில்லாம வாழ்றோமா என்பது முக்கியம் இல்லை. யார் கூட எவ்வளவு சந்தோஷமா வாழ்றோம் என்பது தான் முக்கியம்.

என்னை நல்லபடியா வாழவைக்கும் அளவுக்குப் பரத்தால் சம்பாதிக்க முடியும். அதே நேரம் என்னை அதிகச் சந்தோஷத்துடன் வாழ வைக்க என் பரத்தால் மட்டும் தான் முடியும்.

பரத் கூட வாழ்ந்தால் மட்டும் தான் நான் சந்தோஷமா இருப்பேன். உங்க பொண்ணு வசதியோட வாழணும்னு நினைக்காம சந்தோஷமா வாழணும்னு நினைச்சா இப்படி எல்லாம் பேச மாட்டீங்க…” என்றாள் வினயா.

“காசு பணம் இருந்தாலே சந்தோஷம் தன்னைப்போல நம்மைத் தேடி வரும்டி. அதுவே காசு இல்லைன்னு வச்சுக்கோ, ஒரு பைய நம்மை மதிக்க மாட்டான்.

சொந்தபந்தங்களே காசு இருந்தால் ஒட்டிக்கோ, காசு இல்லனா வெட்டிக்கோன்னு இருக்குற உலகம் இது.

உலகத்துக்குத் தகுந்த மாதிரி தான் நாமும் இருக்கணுமே தவிர, காதல் கத்திரிக்காய்னு பினாத்தி அன்னாடங்காச்சியா வாழக்கூடாது…” என்றார் கஸ்தூரி.

இப்படியே இருவருக்கும் இடையே பேச்சு வலுத்தது.

“அம்மா… நீங்க என்ன சொன்னாலும் சரி. நான் பரத்தைத் தான் கட்டிக்குவேன்… கட்டிக்குவேன்…” திரும்பத் திரும்பக் காசு, பணத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து அன்னை பேசுகிறாரே என்ற ஆத்திரத்தில் கத்தினாள் வினயா.

“என் பொண்ணு நீயே இவ்வளவு பிடிவாதமா இருக்கும் போது உன் அம்மா டீ நான். உன்னை விட எனக்குப் பிடிவாதம் அதிகம் இருக்கும். இன்னைக்கு வந்த மாப்பிள்ளையை நீ விரட்டி விட்டால் என்னால் ஒன்னும் செய்ய முடியாதுன்னு நினைச்சியா?

இன்னைக்குப் பார்த்ததை விட இன்னும் வசதியான மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்துவேன். அவனுக்கே உன்னைக் கல்யாணமும் முடிச்சு வைப்பேன்…” என்று சவாலாகச் சொன்னார் கஸ்தூரி.

‘தான் தன் மனதை இவ்வளவு எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ள மறுத்து வேறு மாப்பிள்ளை பார்ப்பேன் என்கிறாரே’ என்ற கோபம் வினயாவிற்கு வந்தது.

அவரை ஆழ்ந்து பார்த்தவள், “உங்க பொண்ணா நான் இந்த வீட்டில் இருக்குற வரை தானே எனக்கு உங்களால் வேற மாப்பிள்ளை பார்க்க முடியும்?” என்று கேட்டவள் தன் கைபேசியை எடுத்துப் பரத்திற்கு அழைத்தாள்.

பரத்திடம் தான் வீட்டை விட்டு வருவதாகவும், இனி அவனுடனே இருக்கப் போவதாகவும் சொன்னாள்.

அந்தப் பக்கமிருந்து பேசிய பரத் பொறுமையாக இருக்கச் சொல்ல, ‘அப்போ நான் தனியா எங்கேயாவது போய் விடுவேன்’ என்றாள்.

அதில் பயந்து அவளைத் தன்னிடமே பரத் வரச் சொல்லி விட, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனிடம் பேசிவிட்டு வைத்தாள்.

மகள் அப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று எதிர்பார்க்காத அதிர்வில் சிலையாக நின்றிருந்த அன்னையைக் கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் சென்றாள்.

சில துணிகளை அள்ளி, ஒரு சூட்கேசை எடுத்து வந்து அதில் வைத்து மூடி, அறையை விட்டு வெளியே வந்து சோஃபாவில் கிடந்த தன் கை பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கதவை நோக்கி நடந்தாள் வினயா.

மகள் இந்த நேரத்தில் அதுவும் அந்தப் பரத்திடம் செல்ல முடிவெடுப்பாள் என்று சிறிதும் நினைத்துப் பார்த்திராத கஸ்தூரி அவள் கிளம்புவதைக் கண்டு அதிர்ச்சியுடன் அவ்வளவு நேரம் நின்றிருந்தவர், அவள் கதவை நோக்கிச் செல்லவும், சிலைக்கு உயிர் வந்தது போல் சிலிர்த்துக் கொண்டு மகளை நோக்கி ஓடினார்.

“அடியேய்! என்னடி பண்ற?” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்தார்.

“என் கையை விடுங்கமா. நீங்க எனக்கு அம்மாவா யோசிப்பீங்கனு பார்த்தேன். ஆனால் பணத்தாசைப் பிடித்த கஸ்தூரியாகத் தான் யோசிக்கிறீங்க. இனி ஒரு நிமிஷம் கூட நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.

நான் இங்கே இருந்தால் தானே விதவிதமாகப் பணக்கார மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்துவீங்க? நான் என் பரத்கிட்டே போறேன். இங்கே நல்லாப் பார்த்துக்கோங்க.

என் பணத்தில் வாங்கிய கம்மல் தவிர எல்லாத்தையும் பீரோவில் கழட்டி வச்சுட்டேன். அப்புறம் எதையும் எடுத்துட்டுப் போய்ட்டேன். அதை வச்சுத்தான் வாழ்ந்தேன்னு நீங்க சொல்லி விடக் கூடாது பாருங்க. அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமா வாழ்ந்து காட்டுறேன்…” என்றாள்.

தன் கையை அன்னையில் பிடியில் இருந்து வெடுக்கென்று உருவியவள் கதவின் தாழ்ப்பாளின் மீது கையை வைத்தாள்.

ஆனால் அவள் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத கஸ்தூரி தாழை திறக்க விடாமல் அவளின் கையைப் பிடித்து விருட்டென்று இழுத்து அதே வேகத்தில் அவளில் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.

அன்னை அடித்ததில் அவரை முறைத்த வினயா “நீங்க என்னை அடிச்சாலும் சரி, உதைச்சாலும் சரி, என் பரத்கிட்ட நான் போயே தீருவேன்…” ஆத்திரமாகச் சொன்னவள் அவரைத் தாண்டிக் கதவின் பக்கம் சென்றாள்.

எங்கே மகள் வீட்டை விட்டுச் சென்று விடுவாளோ என்ற ஆத்திரத்தில், கோபம் உச்சத்தில் ஏறக் கதவை மறைத்து நின்ற கஸ்தூரி, வெளியே செல்ல விடாமல் அவளைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளினார்.

அவர் ஆவேசமாகத் தள்ளிய வேகத்தில் அங்கிருந்த மேஜையில் சென்று மோதிய வினயா நெற்றியில் ரத்தம் வழிய அடுத்த நொடி மயங்கிச் சரிந்தாள்.

அவள் விழுந்த இடத்தில் நெற்றியில் இருந்து வழிந்த ரத்தம் சிறு குட்டையாகத் தேங்க ஆரம்பித்தது.

அந்த மேஜையின் மீது பலமாக மோதிக் கொண்டாள் என்று பறைசாற்றியது வழிந்து கொண்டிருந்த ரத்தம்.

ரத்தத்தைப் பார்த்துக் கஸ்தூரி பதறி மகளின் அருகில் ஓடி, “வினயா, வினயா எழுந்திருடி. சாரிடி, அம்மா கோபத்தில் தள்ளி விட்டுட்டேன். அம்மாவை மன்னிச்சுடுடி. எழுந்திரு…” என்று சொல்லிக் கொண்டே மகளை எழுப்பினார்.

எழுப்பினார்… எழுப்பினார்… எழுப்பிக்கொண்டே இருந்தார்.

ஆனால் வினயா எழுந்து கொள்ளவே இல்லை.