பிழையில்லா கவிதை நீ – 19

அத்தியாயம் ‌- 19

இரவு முழுவதும் பிரகாஷை கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன.

அந்தக் காரை யார் அநாதையாக விட்டுச் சென்றது? அந்த நம்பர் உண்மைதானா? என்று இரவோடு இரவாக விசாரித்து அறிந்து கொண்டதில் ஜெகன் நினைத்தது போல் அந்த நம்பர் போலி தான் என்ற தகவல் கிடைத்தது.

பிரகாஷ் இருசக்கர வாகனத்தை வண்டி பழுது பார்க்கும் கடையில் விட்டதாக அவனின் அன்னை சொன்னது உண்மையா என்பதை அறிய மெக்கானிக் செட்டில் சென்று விசாரிக்க, பிரகாஷ் அவனின் வண்டியை அங்கே விடவில்லை என்று சொன்னார்கள்.

மறுநாள் காலையில் பிரகாஷ் பற்றிய தகவலைச் சொல்லி விட்டு, மேலும் அவனைப் பற்றிச் சேதுராமனிடம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தான் ஜெகவீரன்.

அவன் மருத்துவமனை வளாகத்தில் காரில் வந்திறங்கிய அதே நேரம் தன் இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினாள் ஜனார்த்தனி.

அவளைக் கண்டதும், ‘சரியான சில்லி சிக்கன். இரண்டு நாளைக்கு வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் என்னவாம். காலங்காத்தாலேயே எப்படிக் கிளம்பி வந்திருக்காள் பார்’ என்று நினைத்து உள்ளுக்குள் நொடித்துக் கொண்டான் ஜெகவீரன்.

“ஹாய் ஜெகா…” நேற்று அடிப்பட்ட சுவடு தெரியாமல் உற்சாகமாக அவனைப் பார்த்துக் கையசைத்தாள் ஜனார்த்தனி.

“வா ஜனா. இப்போ பெயின் இருக்கா?” என்று காயத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டான்.

“பெயின் அதுபாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கு. அதை எல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னவளை முறைத்தான்.

“என்னா முறைப்பு?”

“உன்னை யாரு இவ்வளவு அவசரமா கிளம்பி வரச் சொன்னது? நானே உன் வீட்டுக்கு வந்து கேஸ் விவரம் சொல்லியிருப்பேன்ல…” என்றான்.

“ம்ப்ச்… போங்க ஜெகா. நேத்து ஒரு நாள் உங்க கூட வராம நிறைய நேரத்தை மிஸ் பண்ணிட்டேன்…” என்று அவள் சொன்னதும் ஜெகனின் கண்கள் பிரகாசமாக ஜொலித்தன.

“ஹலோ… ஹலோ… கற்பனைக் குதிரையை இழுத்துக் கட்டுங்க இன்ஸ்பெக்டர்ர்ர்ரே…” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

அவன் அவளை நம்பாமல் பார்க்க, “வினயா கேஸ் விஷயத்தில் நான் கூட இல்லையே என்ற வருத்தத்தில் தான் சொன்னேன். என் ஃபிரண்டுக்காகக் கேட்டுக்கிட்டேன்னு என் பாஸ் எனக்கு இப்போதைக்கு வேற கேஸ் எதுவும் கொடுக்காம இருக்கார். அதனால் நீங்க உடனே கண்டதையும் நினைச்சுக் கற்பனையில் மிதக்காதீங்க…” என்றாள் அலட்டலாக.

“ஓகோ!” என்று ஆச்சரியமாக விழிகளை உருட்டியவன், “நம்பிட்டேன் ஜனா, நம்பிட்டேன்… டேன்…” என்று இழுத்துச் சொன்ன விதத்திலேயே அவனின் நம்பிக்கை எந்த அளவு என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

ஆனாலும் புரியாதது போல் அவனைப் பார்த்தவள், பின் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு வினயா கேஸ் முடிஞ்சதும் ஒரு முடிவு கட்டுறேன்…” என்று அவளுக்கும் கேட்கும் படி முணுமுணுத்தான்.

அவனின் முணுமுணுப்பை கவனித்தும், கவனிக்காதது போல் காற்றில் விட்டாள் ஜனார்த்தனி.

இருவரும் பேசிக் கொண்டே கஸ்தூரி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வந்திருந்தனர்.

பரத்தும் அப்போது அங்கே தான் இருந்தான்.

ஜனாவின் கையில் கட்டைப் பார்த்துச் சம்பிரதாய விசாரிப்பிற்குப் பின், பிரகாஷ் பற்றிய உண்மையைச் சேதுராமனிடம் சொல்ல, அவரோ சிறிதும் அதிர்ச்சியில்லாமல் ஜெகன் சொன்னதைக் கேட்டுக் கொண்டார்.

சேதுராமனிடம் அதிர்ச்சியை ஜெகன் எதிர்பார்த்திருக்க, அவரோ அப்படி எந்த எதிர்வினையும் காட்டாததால் புருவம் சுருக்கி அவரைப் பார்த்தவனுக்கு விஷயம் பிடிபட்டது.

அவரின் அக்கா தனம் இந்நேரம் தம்பி சேதுராமனிடம் பேசி, மகனை நியாயப்படுத்த முயன்றிருக்க வேண்டும் என்று புரிந்தது.

இப்போது பிரகாஷை பற்றி அவரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பது போல அவரை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

“உங்க அக்கா போன் செய்தாங்களா மிஸ்டர் சேதுராமன்?” என்று கேட்டான்.

“ஆமாங்க சார். நீங்க பிரகாஷை சந்தேகப்படுவதாகச் சொல்லி அக்கா அழுதாள். என்னால பிரகாஷ் பற்றி அப்படி நினைச்சுப் பார்க்கவே முடியலை…” என்று கலக்கத்துடன் சொன்னார்.

“நீங்க நம்பித்தான் ஆகணும் சேதுராமன். ஏன்னா விடிய விடிய அவனைப் பற்றி விசாரிச்சுட்டு வந்துருக்கேன். எல்லா ருசுவும் அவன் தான் குற்றவாளின்னு முத்திரை குத்துது. இனி அவனைப் பிடிக்கிற வேலை மட்டும் தான் பாக்கி. அதுக்கான ஏற்பாடும் பண்ணிட்டுத்தான் வந்திருக்கேன்…” என்றான்.

“எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை சார்…” என்று தவிப்புடன் கைகளைப் பிசைந்தார்.

சேதுராமன், ஜெகனுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவரின் கவனம் அவனின் பேச்சில் இல்லை என்பதைச் சில நொடிகளில் கண்டுகொண்டான்.

அவரைக் கூர்மையுடன் அளவிட்டான். அவனின் பார்வை சந்தேகத்துடன் தன் மேல் படிகிறது என்பதைக் கூட உணராமல் ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தார் சேதுராமன்.

‘ஏன் அப்படி இருக்கிறார்?’ என்ற புரியாத குழப்பத்துடன் அவன் நின்றிருந்த போது, “ஷ்…ஷ்…” என்ற ஒலி மெல்ல அவன் காதில் விழ, சப்தம் வந்த பக்கம் தன் பார்வையைத் திருப்பினான்.

வாயிலில் காவலுக்கு இருந்த கான்ஸ்டபிள் தான் அவனிடம் ஏதோ பேச தவிப்பது போல் அவனைப் பார்த்து ஜாடை காட்டிக் கொண்டிருந்தார்.

அவரைக் கவனித்த ஜெகன், மெல்ல அங்கிருந்து நகர்ந்து கான்ஸ்டபிளைத் தனியாக அழைத்துச் சென்று பேசினான்.

“என்ன கான்ஸ்டபிள் என்கிட்ட என்ன சொல்லணும்? நான் சொன்ன மாதிரி மிசஸ் கஸ்தூரியிடம் எதுவும் வித்தியாசம் தெரிந்ததா?” என்று விசாரித்தான்.

“வித்தியாசம் அந்த அம்மாகிட்ட எதுவும் தெரியலை சார். அந்தச் சேதுராமன் தான் வித்தியாசமா நடந்துகிறார்…” என்று கான்ஸ்டபிள் சொன்னதைக் கேட்டு அவரைப் புரியாமல் பார்த்தான்.

“சேதுராமன் கிட்டயா? என்ன வித்தியாசம்?”

“நேத்து ராத்திரி ஒரு பதினோரு மணி இருக்கும் சார். உள்ளே படுத்திருந்த சேதுராமன் போனுக்கு ஒரு போன் வந்தது. நைட் அந்த அம்மாவை வாட்ச் பண்ணனும் என்பதால் கதவை லாக் பண்ணாம லேசாகச் சாற்றி மட்டும் தான் வைக்கச் சொல்லியிருந்தேன்.

அதனால் உள்ளே அவர் பேசியது லேசா கேட்டது. போனை ஆன் பண்ணி ஹலோனு சொன்னார். அந்தப் பக்கம் என்ன சொன்னாங்கனு தெரியலை. இவர் அமைதியா இருந்தார்.

பேச்சுச் சத்தம் எதுவும் கேட்கலை என்றதும், லேசாகக் கதவு இடுக்கு வழியா பார்த்தேன். அறைல இருந்த சின்ன வெளிச்சத்தில் அவர் பேயறைந்தது போல் முழிச்சுட்டு உட்கார்ந்து இருந்தது தெரிந்தது.

நான் கதவு வழியா பார்க்கிறேன்னு தெரிஞ்சதும், டக்குனு போனை ஆஃப் பண்ணிட்டு ஏதோ ராங்கால் என்று எனக்குக் கேட்பது போலச் சத்தமா சொன்னவர் திரும்பப் படுத்துக்கிட்டார்.

ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா படுத்திருந்தார். நானும் ஒருவேளை ராங்கால் தான் போலனு நினைச்சு என் இடத்தில் வந்து உட்கார்ந்து இருந்தேன். நான் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் மெல்ல எழுந்து வந்தவர், நான் என்ன செய்றேன்னு பார்த்தார்.

அவர் என்ன செய்யப் போறார்னு தெரிஞ்சுக்க, உட்கார்ந்துகிட்டே பின்னாடி சுவற்றில் சாய்ந்து தூங்குவது போல ஆக்ட் கொடுத்தேன். நான் தூங்கிட்டேன்னு நினைச்சுக் கதவை மெல்ல மூடி லாக் போட்டுட்டார்.

உடனே எழுந்து கதவில் காது வச்சுக் கேட்டேன். கான்ஸ்டபிள் என்னைப் பார்த்துட்டு இருந்தார். அதான் ஆஃப் பண்ணினேன்னு கிசுகிசுப்பான குரலில் சொல்லிக்கிட்டே நடந்து அந்தப் பக்கம் போய்ட்டார் போல.

அதுக்குப் பிறகு அவர் பேசினது எதுவும் கேட்கலை. அந்த ரூம் கதவில் மேலே உள்ளே இருக்குற பேஷண்டை பார்க்க ஒரு கண்ணாடி இருக்கே அது வழியா எட்டிப்பார்த்தேன். ஒரு மூலையில் நின்னு போனில் யார்கிட்டயோ பதட்டமா பேசிட்டு இருந்தார். அதுக்குப் பிறகு திரும்பப் பேசி முடிச்சிட்டு எனக்குச் சந்தேகம் வரக் கூடாதுனு கதவு லாக்கை எடுத்து விட்டுட்டார்.

அவர் என்ன செய்றார்னு கவனிச்சுட்டே இருந்தேன். ஆள் நைட் முழுவதும் பொட்டுத் தூக்கம் கூடத் தூங்கலை. உட்கார்ந்தார், நடந்தார். இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமா அல்லாடிட்டு இருந்தார் சார்…” என்று தான் இரவு கண்டது, கேட்டது எல்லாவற்றையும் அவனிடம் அப்படியே ஒப்பித்தார் கான்ஸ்டபிள்.

கான்ஸ்டபிள் சொன்ன தகவல் அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஜெகனின் நெற்றியில் சிந்தனை முடிச்சு விழுந்தது.

கான்ஸ்டபிளிடம் பேசிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்த போது, சேதுராமன் தன்னிடம் இருந்த பதட்டத்தை மறைக்க வெகுவாக முயன்று கொண்டிருந்ததைக் கவனித்தான் ஜெகவீரன்.

கான்ஸ்டபிள் அவனைத் தனியாக அழைத்துச் சென்று என்ன சொன்னாரோ? என்ற பரிதவிப்பு அவரை நிதானமாக இருக்க விடாமல் செய்வதற்கு அறிகுறியாக, ஓரக்கண்ணால் ஜெகனை நோட்டம் விட்டார்.

அதைக் கண்டும் காணாதவன் போல், அவரிடம் மேலும் எதுவும் கேட்காமல் “ஜனா, நான் கிளம்புறேன். பிரகாஷ் எங்க இருக்கான்னு தேடிக் கண்டுபிடிக்கணும்…” என்று ஜனாவிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியே கிளம்பத் தயாரானான்.

வாயிலை நோக்கி நடந்தவனின் வேகநடையை “சார், ஒரு நிமிஷம்…” என்று குரல் கொடுத்துத் தடை செய்தார் சேதுராமன்.

“என்ன சேதுராமன்?” அவரின் அழைப்பை எதிர்பார்த்தவன் போல் நிதானமாகத் திரும்பிக் கேட்டான்.

“நா… நான்… என் பொண்ணு கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்” என்று திணறலுடன் சொன்னார்.

“வாட்! என்ன அங்கிள் இது?” என்று அதிர்ந்து கேட்டாள் ஜனார்த்தனி.

ஜெகனோ ‘இதை எதிர்பார்த்தேன்’ என்பது போல் சேதுராமனைக் கூர்மையாகப் பார்த்தான்.

“அங்… மா… ஏன் கேஸை வாபஸ் வாங்கணும்?” என்று அடுத்துப் பதறிக் கேட்டவன் பரத். அவர் இன்னும் தன் காதலுக்கு இசைவாக எதுவும் பதில் சொல்லாததால், என்ன முறையை வைத்து அழைப்பது என்று குழம்பி முறை சொல்லாமலேயே கேட்டு முடித்தான்.

இருவரின் கேள்விக்கும் பதில் சொல்லாமல் சேதுராமன் மௌனம் சாதிக்க, “ஏன்?” என்று ஒற்றை வார்த்தையாகக் கேட்ட ஜெகனின் குரல் காவல்காரன் தோரணையில் கடுமையுடன் வெளியே வந்தது.

அந்தத் தோரணைக்குக் கட்டுப்பட்டுத் தன் வாயைத் திறந்தார்.

“ஏன்னு எதுக்கு சார் காரணம் சொல்லணும்? நான் தான் என் பொண்ணைக் காணோம்னு கம்ளைண்ட் பண்ணினேன். இப்போ நானே வாபஸ் வாங்குறேன்…” என்று சிறிது தயங்கிய படியே சொன்னார்.

“கேஸை வாபஸ் வாங்கணும்னா உங்க பொண்ணு கிடைச்சுருக்கணுமே சேதுராமன், கிடைச்சுட்டாங்களா?”

“ஹா… ஹான்… அது…” அவனின் கூர்மையான கேள்வியில் வார்த்தை வராமல் தடுமாறினார்.

‘நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்பது போல் விடாமல் பார்த்தான்.

“கிடை… கிடைச்சுட்டாள் சார்…” என்றார்.

“ஹேய்… வினயா கிடைச்சுட்டாளா? எங்கே அங்கிள்?” என்று வேகமாகக் குதித்துக் கொண்டு கேட்ட ஜனா, பின் சட்டென்று சுதாரித்தாள்.

கான்ஸ்டபிளிடம் பேசிவிட்டு வந்த பின் ஜெகனிடம் வந்த கடுமையான காவல்காரன் தோரணையும், சேதுராமனின் பதட்டமும் அவளை நிதானிக்க வைக்க, இருவரையும் சந்தேகத்துடன் பார்த்தாள்.

ஆனால் அவளைப் போல் அங்கிருந்த நிலைமையை உணராமல் காதலி கிடைத்துவிட்டாள் என்ற உற்சாகத்தில் பரத் சேதுராமனை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல், “ஓஹோ! அப்படியா? அப்போ என் கண்ணு முன்னாடி உங்க பொண்ணை நிறுத்திட்டு உங்க கேஸை வாபஸ் வாங்கிக்கோங்க சேதுராமன்…” என்று அழுத்தமாகச் சொன்னான் ஜெகன்.

அவன் பேச்சில் இருந்த வித்தியாசம் அப்போது தான் உறைக்கப் பரத்தை அவனின் சந்தோஷத்தில் இருந்து இறங்க வைத்தது.

ஜெகனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கித் தடுமாறி நின்றார் சேதுராமன்.

“ப்ளீஸ் சார், கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்…” காரணத்தைச் சொல்லாமல் ஒரே பல்லவியைப் பாடினார்.

“என்னை என்ன வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பயல்னு நினைச்சீங்களா சேதுராமன்? உங்க பொண்ணைக் கண்ணில் காட்டிட்டு வாபஸ் பத்தி பேசுங்க…” என்று அதட்டினான்.

மீண்டும் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டார் சேதுராமன்.

“சரி, இதுக்குப் பதில் சொல்லுங்க சேதுராமன். நைட் யார் உங்களுக்குப் போன் போட்டா? போன் போட்ட நபர் என்ன சொன்னான்?” என்று அடுத்தக் கேள்வியை வீச அவனை விக்கித்துப் பார்த்தார்.

“நீங்க இரண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க ஜெகா? என்ன போன்? யார் போட்டா? கொஞ்சம் புரியுற மாதிரி பேசுங்களேன்” என்று கேட்டாள் ஜனார்த்தனி.

“ஜனா, இந்தக் கேஸ் ஆரம்பித்ததிலிருந்து உன்கிட்ட ஒரு நல்ல விஷயத்தை நோட் பண்ணிருக்கேன். நீயா ஏதாவது ஆராய்ந்து கண்டுபிடித்துச் சில விஷயங்கள் சொன்னாலும், நான் அந்த இடத்தில் விசாரணையை ஆரம்பிச்சுட்டா, அந்த நேரம் தேவையில்லாமல் பேசி மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி நின்று கொள்வாய்.

அது உன்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பழக்கத்தை இனி நீ இந்தக் கேஸ் முடியும் வரை ஃபாலோ பண்ணினால் நல்லா இருக்கும். உனக்குச் சொல்ல வேண்டிய விஷயம்னா நானே சொல்வேன்…” என்றான்.

“ஹப்பா! வாயை மூடுனு ஒரு வார்த்தையில் சொல்றதை விட்டுட்டு எவ்வளவு நீளப் பேச்சு?” என்று அவனுக்கு லேசாக உதட்டைச் சுழித்துப் பழிப்புக் காட்டிவிட்டு, அவனின் முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

“சொல்லுங்க சேதுராமன், நைட் யார்கிட்ட போனில் பயந்து போய்ப் பேசினீங்க?”

“யா… யார்கிட்டயும் இல்லை சார்…” அவர் இழுக்க,

“நீங்க சொல்றதை எல்லாம் அப்படியே நம்பிட்டுப் போறதுக்குப் போலீஸ் எல்லாம் சொங்கிப் பயலுகன்னு நினைச்சீங்களா சேதுராமன்? நீங்க ‘அ’ என்று சொன்னால் நாங்க ‘ஃ’ வரைக்கும் யோசிப்போம். அதனால் நீங்களே என்ன நடந்ததுன்னு சொல்லிருங்க…” என்றான் ஜெகவீரன்.

“சார்…” என்று அதற்கு மேல் சேதுராமன் பேச முடியாமல் தடுமாற,

“நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க சேதுராமன். ஏற்கனவே உங்க பொண்ணு கேஸ் ரொம்ப லேட் ஆகிட்டு இருக்கு…” என்று அதட்டினான்.

“சொல்றேன் சார்… நேத்து நைட் ஒரு கால் வந்தது சார். உங்க பொண்ணு இப்போ என்கிட்ட தான் இருக்காள். அவள் பத்திரமா வேணும்னா இருபது லட்சம் பணம் தரணும்னு சொல்லி மிரட்டினான்…”

“ஓ! பேசியது யார் பிரகாஷா?”

“பிரகாஷ் இல்லை சார்…” என்று சேதுராமன் சொல்ல,

“வாட்!” என்று அதிர்ந்து கேட்டான் ஜெகவீரன்.

“பிரகாஷ் இல்லைனு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க சேதுராமன்?” அவர் சொன்னதை நம்பமுடியாமல் கேட்டான்.

“பிரகாஷ் குரல் எனக்கு நல்லாத் தெரியும் சார். என்னால உறுதியா சொல்ல முடியும் அது பிரகாஷ் இல்லைனு…” என்றார்.

“குரலை மாத்தி பேச இப்ப எல்லாம் எவ்வளவோ டெக்னிக் இருக்கு சேதுராமன். ஒரு ஆண் பெண் குரலாக மாற்றிப் பேச வைக்கும் வசதி கூட இப்போ சர்வசாதாரணமா இருக்கு…” என்று ஜெகன் சொல்ல, நொடியில் குழம்பிப் போனவராய் அவனைப் பார்த்தார் சேதுராமன்.

“ஆனா…” என்று குழப்பத்துடன் தடுமாறினார்.

“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க சேதுராமன்…”

“குரல் மாத்தி பேச வசதி இருக்கலாம் சார். ஆனால் அந்தக் குரல் பேசிய மாடுலேஷன், அதில் இருக்கும் குரூரம்? அதெல்லாம் பிரகாஷ் இல்லைன்னு தான் என்னை நினைக்க வைக்குது சார். அதனால் தான் நீங்க பிரகாஷ் தான் குற்றவாளின்னு என்கிட்ட சொன்னதை இன்னும் என்னால் நம்பமுடியலை…” என்றார்.

“ஓ!” என்று யோசனையாகச் சொன்ன ஜெகன், “சரி சேதுராமன், அவன் உங்ககிட்ட என்ன பேசினான்னு சொல்லுங்க…” என்று விவரம் கேட்டான்.

“அவன் இருபது லட்சம் கேட்கவும், என்கிட்ட கையில் இப்போ அவ்வளவு பணம் இல்லைன்னு சொன்னேன். ஆனா அவன் உன்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு.

அது எங்க இருக்குன்னு எல்லாமே எனக்குத் தெரியும். அதனால் உன் பொண்ணு உனக்கு நல்லபடியா வேணும்னா நான் சொல்ற நேரம், சொல்ற இடத்துக்குப் பணத்தை நீ கொண்டு வந்து கொடுக்கணும்னு சொன்னான். அப்புறம்…”

“ம்ம்… வேற இன்னும் என்ன சொன்னான்?”

“எங்க கொண்டு வந்து கொடுக்கணும்னு சொல்லத் திரும்பப் போன் பண்றேன். அதுக்குள்ள நீ கூட்டி வச்சுருக்கிற போலீஸ் கூட்டத்தை எல்லாம் அனுப்ப வேண்டியது உன் பொறுப்பு.

அப்படிப் போலீஸ் போகலைனா உன் பொண்ணு பொணத்தைப் பார்க்கத் தயார் ஆகிக்கோ, அதுவும் உடம்பில் ஒட்டுத் துணி…” என்று மேலும் சொல்ல முடியாமல் குரல் நடுங்க பேச்சை நிறுத்தினார்.

உடம்பும் நடுங்கி நிற்க முடியாமல் தடுமாறி, அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தார் அத்தகப்பன்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் தூக்கத்தில் இருந்து மெல்ல விழித்த கஸ்தூரி, பேச்சுக்கள் காதில் விழுந்ததும் அசையாமல் இருந்து அனைத்தையும் கேட்டவர் மகளின் நிலையைப் பற்றிக் கணவன் சொன்னதும் விலுக்கென்று விழிகளைத் திறந்தார்.