பிழையில்லா கவிதை நீ – 13

அத்தியாயம் ‌- 13

“அதோ அந்தச் சிக்னலில் நிற்கிறான். சீக்கிரம் போங்க ஜெகா. சிக்னல் விழப் போகுது…” என்று பின்னால் இருந்த படி ஜெகவீரனைத் துரிதப்படுத்தினாள் ஜனார்த்தனி.

அவள் சொல்லும் முன்பே அவனைக் கண்களிலிருந்து தப்ப விடாமல் விரட்டிக் கொண்டிருந்த ஜெகன், பச்சை விளக்குப் போடும் முன்பே அவனைப் பிடித்து விட முனைந்தான்.

அவனின் முயற்சியில் சிறிதும் குறைவில்லை தான். ஆனால் சென்னையின் பிரதான சாலையில் செல்லும் மற்ற வாகனங்களும் அவனின் முயற்சிக்கு கைகொடுக்குமா என்ன?

ஜெகனுக்கு மிரட்டல்காரனைப் பிடிக்கும் அவசரம்!

மக்களுக்கு என்ன அவசரமோ?

ஞாயிற்றுக்கிழமை மாலை முடிந்து இரவு பொழுதைத் தொட்டிருந்த வேளை அது!

ஞாயிறு சிலருக்கு ஓய்வில் கழிய, சிலருக்கு அன்றைக்குத் தான் குடும்பத்தோடு வெளியே சென்று தங்கள் பொழுதைக் கழிக்கும் நாள்!

கார்களும், அரசாங்க பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் பறந்து சென்று கொண்டிருந்த சாலையில் முன்னால் சென்று கொண்டிருக்கும் மிரட்டல்காரனைக் கண்ணில் இருந்து தப்ப விடாமல் காத்துக் கொண்டு பின் தொடர்ந்து செல்வதே சவாலாக இருந்தது.

அந்தச் சவாலையும், சாதுர்யமாகச் செயல்படுத்திக் கொண்டிருந்தான் ஜெகவீரன்.

ஜெகன் தன்னை நெருங்கி வந்துவிட்டதை உணர்ந்து மிரட்டல்காரன் சிவப்பு விளக்கையும் பொருட்படுத்தாமல் பச்சை விழும் முன் விருட்டென்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.

அதைக் கண்டு “போறான்… போறான் ஜெகா. பிடிங்க…” என்று ஜனா கத்த, அவள் கத்திய வேகத்தில் தனக்கு முன்னால் இடைஞ்சல் படுத்தியது போல் நின்ற காரை விட்டு விலகிப் பக்கவாட்டில் விருட்டென்று வண்டியைத் திருப்ப, அதே நேரத்தில் அவன் பின்னால் இருந்து, முன்னால் ஒரு குழந்தையும், பின்னால் ஒரு குழந்தையையும், மனைவியையும் ஏற்றிக் கொண்டு ஒரு குடும்பஸ்தன் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது தன் வண்டியை லேசாக உரசிக் கடைசி நேரத்தில் வண்டியை வளைத்துத் திருப்பி ஒரு பெரிய விபத்து ஏற்படாமல் கணப்பொழுதில் காத்திருந்தான் ஜெகன்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு ஜெகன் வண்ண உடையில் இருந்ததால் அவன் காவல்காரன் என்று அறியாமல் அந்தக் குடும்பஸ்தன் ஒரு சண்டைக்குத் தயாராக, ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தைத் தராமல் விருட்டென்று தன் வண்டியைக் கிளப்பி இருந்தான் ஜெகவீரன்.

வண்டியைக் கிளப்பும் முன் அந்த வண்டியில் இருந்தவர்களுக்கு ஏதாவது சேதாரமா என்று ஒரு நொடி ஆராய்ந்தன அவனது கண்கள். யாருக்கும் எதுவும் இல்லை என்று உணர்ந்த நொடி வண்டியைக் கிளப்பி இருந்தான்.

அதே நேரத்தில் பச்சையும் விழுந்திருக்க, வண்டியைப் பறக்கவிட்டான்.

அந்தச் சிறிது நேர களேபரத்தில் மிரட்டல்காரனுக்கும், ஜெகனுக்கும் இடையே இருந்த இடைவெளி அதிகரித்திருந்தது.

“ஷப்பா! ஜஸ்ட் மிஸ்ட். யாருக்கும் ஒன்னும் ஆகலை…” என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஜனா, சாலையில் மீண்டும் பார்வையைத் துழாவ விட்டு “அச்சோ! மிஸ் பண்ணிட்டோம் போல ஜெகா. அவனைக் காணோமே…” என்று பதறினாள்.

“வாயை மூடிட்டு வா ஜனா!” என்று ஜெகன் பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.

“அட! இது தான் அடுப்புல வச்ச கடுப்பு போலீஸோ?” என்று நக்கலாகக் கேட்டாள் ஜனார்த்தனி.

“நீ பார்க்கிற வேலைக்கு இவ்வளவு பதட்டம் ஏன் ஜனா? இப்போ நீ தனியா போயிருந்தால் இப்படித்தான் இருப்பியா?” என்று கடுப்புடன் கேட்டான்.

“ச்சே… ச்சே… தனியா போனா நான் டென்ஷனே ஆக மாட்டேன். நீங்க கூட வருவது தான் இப்போ எனக்கு டென்ஷன்…”

அவள் சொன்ன விதத்தில் ‘ஒருவேளை தன் மேல் உள்ள அக்கறையோ?’ என்று நினைத்துக் கண்ணாடி வழியாக அவளின் முகத்தைப் பார்க்க, அவளோ உதட்டைக் கிண்டலாக இழுத்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.

‘நக்கல் தானோ?’ என்று நினைத்தவன் அவளின் கண்களைப் பார்க்க, அதில் அவள் மறைக்க மறந்த அக்கறை தன்னைப் பளிச்சென்று காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டு அந்த நேரத்திலும் புன்சிரிப்பை தவழவிட்டன அவனின் உதடுகள்.

இருசக்கர வாகனத்தை நேராகச் செலுத்திக் கொண்டிருந்தவன் அடுத்து வந்த சாலை வளைவில் சட்டென்று வண்டியை வலது பக்க சாலையில் திருப்பினான்.

“இந்தப் பக்கம் ஏன் போறீங்க ஜெகா? அவனைத் தான் மிஸ் பண்ணிட்டோமே?” என்று மீண்டும் வாயைத் திறந்தாள் ஜனா.

“அந்தப் பேக்கரி கடை கிட்ட பார்!” என்று ஜெகன் சொல்ல, ஜனார்த்தனியின் பார்வை தூரத்தில் தெரிந்த பேக்கரி கடை பெயர் பலகையை நோக்கிப் பாய்ந்து விட்டு, அந்தச் சாலையை ஆராய்ந்தது.

பேக்கரி கடையைத் தாண்டி இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தான் மிரட்டல்காரன்.

அவனைக் கண்களில் வாங்கிய நொடியில் “வாவ்!” என்று சந்தோசத்தில் கூச்சலிட்டாள் ஜனார்த்தனி.

விரட்டல் எலி, பூனை ஓட்டம் போல் தொடர்ந்தது.

பிரதான சாலையில் தன் வாகன ஓட்டத்தை முடித்துக் கொண்டு வளைத்துத் திரும்பி, சிறிய சாலையில் வண்டியைத் திருப்பியிருந்தான் மிரட்டல்காரன்.

ஜெகனும் அந்தச் சாலையில் வண்டியைத் திருப்பினான்.

வீடுகள் வரிசைக்கட்டி நின்று கொண்டிருந்த சாலை அது!

ஒவ்வொரு தெருவிலும் வளைந்து வளைந்து சென்று அந்த ஏரியாவையே சுற்றிக் காட்டுபவன் போல் போய்க் கொண்டிருந்தான் அவன்.

“இவன் என்ன நமக்கு இந்த ஏரியாவை சுத்திக் காட்டிட்டு இருக்கானா ஜெகா?” தன் சந்தேகத்தை வாய் விட்டே கேட்டாள் ஜனார்த்தனி.

“அவனுக்கு இந்த ஏரியா புதுசு போல. எந்தப் பக்கம் போறதுன்னு தெரியாம பதட்டத்தில் சுத்திச் சுத்தி வந்துட்டு இருக்கான். நாம இன்னும் ஸ்பீடா போனா அவனை மடக்கிப் பிடிச்சிடலாம். கெட்டியா பிடிச்சிக்கோ ஜனா…” என்ற ஜெகன் அடுத்த நொடி தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.

முடுக்கி விட்ட குதிரை போல் அந்த இருசக்கர வாகனம் சீறிப் பாய்ந்தது.

மிரட்டல்காரனின் குழப்பமும், ஜெகனின் வேகமும் அவனுக்குக் கை கொடுக்க, அடுத்தச் சில நிமிடங்களில் அந்த வண்டியை வளைத்துப் பிடித்திருந்தான் ஜெகவீரன்.

அவனின் வண்டியின் மீது லேசாக மோதி அவனை நிலை தடுமாற வைத்த ஜெகன், “ஜனா இறங்கி அவன் வண்டி சாவியை எடு!” என்று உத்தரவிட்டான்.

அவனின் உத்தரவின் வார்த்தை முடியும் முன் அதைச் செயல்படுத்தியிருந்தாள் ஜனார்த்தனி.

அதற்குள் மிரட்டல்காரன் இறங்கி ஓட முயற்சி செய்ய, “டேய்! ஓடினா சுட்டுருவேன்…” என்று தன் சட்டைக்குள் கையை விட்டான் ஜெகன்.

அதில் மிரண்டு அவன் ஓடாமல் நிற்க, அந்த நொடியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெகன், தன் வண்டியில் இருந்து இறங்கித் தாவிச் சென்று அவனின் சட்டையைப் பிடித்தான்.

ஜெகன் துப்பாக்கியை அப்போது எடுத்து வந்திருக்கவில்லை. அவனைத் தப்பியோட விடாமல் நிறுத்தவே துப்பாக்கியைச் சட்டைக்குள் இருந்து எடுப்பது போல் பாவ்லா காட்டியிருந்தான்

அவன் துப்பாக்கியை எடுக்காததைப் பார்த்துத் தைரியம் வந்து திமிறி தப்பிக்க முயல, “இனி நீ தப்பிக்க முடியாது ராஜா!” என்று சொல்லிக் கொண்டே அவனின் வயிற்றில் தன் கையால் பதம் பார்த்தான் ஜெகவீரன்.

அந்த ஒற்றை அடிக்கே, “அம்மா…” என்று அலறிய படி அவன் சுருண்டு உட்கார போக, அவனின் அந்தச் செயலை தடுத்த ஜெகன் அவனின் தலைக்கவசத்தை இன்னொரு கையால் கழற்றி அவனின் முகத்தைப் பார்த்தவன் அடுத்த நொடி தன் முகத்தில் அதிர்வை காட்டினான்.

“சுனில்?” என்று கேள்வியுடன் அவனை ஜெகன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுனில்! பப்பில் ஒரு பெண்ணிற்காக இன்னொருவனுடன் சண்டைப் போட்டுக் கமிஷ்னர் வரவில்லையா என்று குதித்தவன்.

“டேய்! நீயா?” என்று பாய்ந்து வந்து சுனிலின் சட்டையைப் பிடித்தாள் ஜனார்த்தனி.

“இவனோட என்ன பிரச்சனை ஜனா? இவன் தான் உன்னைப் போனில் மிரட்டினானா?” என்று சந்தேகத்துடன் ஜெகன் கேட்க,

“இல்லை… நான் யாரையும் மிரட்டலை…” என்று பதட்டத்துடன் வேகமாகச் சொன்னான் சுனில்.

“நீ மறுக்குற வேகமே உன்னைக் காட்டிக் கொடுக்குதுடா முட்டாள்…” என்ற ஜனார்த்தனி ‘பளார்!’ என்று சுனிலை அறைந்தாள்.

“ஏய்! என்னையவே அறைவியா நீ?” என்று போலீஸ் கை பிடியில் இருக்கிறோம் என்பதை மறந்து துள்ளிக் கொண்டு ஜனாவை அடிக்கப் பாய்ந்தான்.

அவனின் கையைச் சட்டென்று பிடித்து முதுகிற்குப் பின்னால் கொண்டு சென்ற ஜெகன், “நீ தப்பு பண்ணாம ஜனா அடிக்க மாட்டாள். என்ன தப்பு செய்த நீ?” என்று சுனிலின் கையை அழுத்தி முறுக்கி கொண்டே கேட்டான்.

“என் காதலை பிரித்து விட்டு, நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காமல் பேசி உங்கள் காதலை வளர்க்கிறீங்களா?” என்று கை ஒடிந்து போனது போல் வலித்தாலும் திமிறிக் கொண்டு கேட்டான் சுனில்.

“காதலை பிரிப்பதா? இவன் என்ன சொல்றான் ஜனா?” புரியாமல் கேட்டான் ஜெகவீரன்.

இவர்கள் சாலையின் ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கச் சாலையில் போவோரும், வருவோரும் அவர்களை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். சிலர் தயங்கி நின்று அங்கே வர காத்திருந்தனர்.

அவர்களைக் கண்ட ஜனார்த்தனி, ” இவனை முதலில் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போய்டுவோம் ஜெகா. அங்கே வச்சு நான் எல்லா விவரமும் சொல்றேன்…” என்றாள்.

அவள் சொன்னதும் ஜெகனுக்குச் சரியாகப் பட, உடனே காவல் நிலையத்திற்கு அழைத்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், காவல் நிலையத்தில் ஒரு இருக்கையில் சுனில் கோபத்துடன் அமர்ந்திருக்க, அவனின் எதிரே ஜெகன் அமர்ந்திருந்தான். சற்றுத் தள்ளி ஒரு இருக்கையைப் போட்டு ஜனா அமர்ந்திருந்தாள்.

“சொல்லு சுனில், எதுக்காக ஜனாவுக்குப் போன் போட்டு மிரட்டின? அதுவும் என்னை ஏதாவது செய்துருவேன்னு சொல்லி மிரட்டி இருக்க! அப்படி என்னை என்ன செய்றதா உத்தேசம்?” என்று மிக மிக அமைதியாகக் கேட்டான் ஜெகவீரன்.

சுனிலிடம் கேள்விக் கேட்டாலும், அவனின் பார்வை ஜனாவின் கண்களைத் தீர்க்கமாக நோக்கின.

‘உன்னை முன்னிறுத்தி தான் மிரட்டினான் என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்பது போல் பதில் பார்வை பார்த்தாள் ஜனார்த்தனி.

‘உன் உரையாடலை கேட்டிருந்தால் அதன் சாராம்சத்தைச் சிறு பிள்ளை கூடப் புரிந்து கொண்டிருக்கும்’ என்பது போல் பார்வையால் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெகவீரன்.

அவனின் பார்வையின் தீர்க்கம் ஜனாவை உள்ளுக்குள் தடுமாற வைப்பது போல் இருந்தது.

‘எப்படிப் பார்க்கிறான் பார்!’ என்று நினைத்துக் கொண்டே தன் விழிகளை உருட்டிக் காட்டினாள் ஜனார்த்தனி.

‘உன் உருட்டல் என்னை என்ன செய்யும்?’ என்று அலட்சியப் பாவனையைக் காட்டினான் ஜெகவீரன்.

தன்னிடம் கேள்விக் கேட்டு விட்டு இருவரும் கண்களால் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்துச் சுனிலுக்கு எரிந்தது.

“நான் என்ன செய்துருவேன்னு கேட்டிங்களே? செய்வேன்! எதுவும் செய்வேன்!” என்று கோபத்துடன் சொன்னான் சுனில்.

அவனின் வார்த்தையில் அவன் புறம் நிதானமாகத் திரும்பிப் பார்த்த ஜெகன், “ஹ்ம்ம்… அப்புறம்?” என்றான் சுவாரசியமாக.

“நான் என்ன கதையா சொல்றேன்?” கடுப்புடன் கேட்டான் சுனில்.

“அட! சாருக்கு ரொம்பக் கோபம் வருதே?” என்று போலியாக ஆச்சரியம் காட்டிய ஜெகன், “நீ உட்கார்ந்து இருக்கிறது போலீஸ் ஸ்டேஷன் சுனில்…” என்றான் அழுத்தமாக.

“போலீஸ் ஸ்டேஷனா இருந்தால் என்ன? நான் அதுக்கு ஒன்னும் பயப்பட மாட்டேன். உங்களால் என்னை ஒன்னும் செய்ய முடியாது…” என்றான் தெனாவட்டாக.

“ஒன்னும் பண்ண முடியாதா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் ஜெகவீரன்.

“ஆமா, உங்களால் என்னை ஒன்னும் பண்ண முடியாது. என்னோட அப்பாகிட்ட இருக்குற பணம் உங்களை எதுவும் செய்ய விடாது…” என்று திமிரும் தெனாவட்டுமாகச் சொன்னவனைப் பார்த்து உதட்டை அலட்சியமாகச் சுளித்தான் ஜெகன்.

“ஜனா, இவர் பெரிய இடம். நாம பார்த்துப் பதமா நடந்துக்கணும். அது எப்படி நடந்துக்கணும்னு அப்புறம் முடிவு பண்ணுவோம். இப்போ அய்யா என்ன தப்பு பண்ணினார்? எதுக்கு அவனைத் தேடிட்டு இருந்த? எதுக்கு உன்னை மிரட்டிப் போன் போட்டான்? எல்லா விவரமும் சொல்! சுனில் அய்யாவோட வீர தீர சாகசத்தைப் பற்றித் தெரிஞ்சுக்குவோம்…” என்று ஜனாவிடம் பொறுமையாகக் கேட்டான் ஜெகவீரன்.

“அன்னைக்கு வினயாவோட அப்பாவை ஹாஸ்பிட்டலில் வச்சுப் பார்த்தேன்னு சொன்னேன்ல ஜெகா? அன்னைக்கு நான் ஹாஸ்பிட்டல் போனதுக்குக் காரணமே இந்தச் சுனில் அய்யா தான்!” என்று ஜெகனை போலவே ஆரம்பித்து விவரம் சொல்லத் தொடங்கினாள்.

“ஏன்? யாரை இந்த அய்யா ஹாஸ்பிட்டல் அனுப்பி வச்சார்?” என்று கேட்டு ஜெகன் மேலும் அவளைப் பேச தூண்டினான்.

“என்னோட ஃப்ரெண்டு யமுனானு ஒருத்தி இருக்காள் ஜெகா. அவள் தங்கை யஷ்வினி தான் அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்தாள். அவளை அட்மிட் ஆக வச்சது இந்தச் சுனில் தான்…” என்றாள் ஜனார்த்தனி.

“என்னாச்சு அந்தப் பொண்ணுக்கு?” என்று ஜெகன் கேட்க,

“யஷ்வினியும் இந்தச் சுனில் படிச்சுட்டு இருக்கிற காலேஜில் தான் படிச்சுட்டு இருக்கிறாள் ஜெகா. இவனை விட ஜூனியர். இவனுக்கு அவள் மேல் லவ்வாம். அதை இவனே பெருமையா சொல்லிட்டுக் காலேஜ் ஃபுல்லா அவளை என் ஆளுன்னு சொல்லியிருக்கான். ஆனா அவள் இவனைக் காதலிக்கலை.

இவன் காலேஜ் ஃபுல்லா பொய்ச் சொல்லிட்டுத் திரியவும், அவள் பயந்து போய் இப்படி எல்லாம் சொல்லாதீங்கன்னு சொன்னாளாம். ஆனா இவன் நான் அப்படித்தான் சொல்வேன். என்னைக் காதலிச்சு தான் ஆகணும்னு மிரட்டியிருக்கான்.

யஷ்வினி பயந்து போய் விஷயத்தை அவள் அக்காகிட்ட சொல்லியிருக்காள். ஆனா இந்த விஷயத்தில் யமுனாவுக்கும் என்ன செய்றதுன்னு தெரியலை. அவங்க அப்பா, அம்மா இரண்டு பேருமே வேலைக்குப் போறவங்க. அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சா என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியாமல் அக்காவும், தங்கையும் பயந்திருக்காங்க.

பொண்ணுங்க பயந்து ஒதுங்கிப் போனால் அந்தப் பயத்தையே சாதகமா பயன்படுத்திக்கிறது தானே சில ஆண்களின் புத்தி? அதைத் தான் இந்தச் சுனிலும் செய்திருக்கான்…” என்று கோபத்துடன் சுனிலை முறைத்துக் கொண்டே சொன்னாள் ஜனார்த்தனி.

“என்ன பண்ணினான் இவன்?” ஏதோ பெரிதாகச் செய்திருக்கிறான் என்பதை உணர்ந்து பல்லைக் கடித்த படி விவரம் கேட்டான் ஜெகவீரன்.

“நெட்டில் இருந்து ஒரு ஆணும், பொண்ணும் கொஞ்சம் நெருக்கமா இருக்குற போட்டோவை எடுத்து அதில் மார்பிங் வேலை செய்து, யஷ்வினிக்கே தெரியாமல் எடுத்த அவளோட போட்டோவை அந்தப் பொண்ணு முகத்திலும், ஆண் முகத்தில் இவன் முகத்தையும் ஒட்டி, நீ என்னைக் காதலிக்கலைனா இந்தப் போட்டோவை காலேஜ் ஃபுல்லா காட்டுவேன்னு பயமுறுத்தி இருக்கான்…” என்று சொல்லி முடித்த நொடி, சுனில் கன்னம் வீங்கிப் போய் அமர்ந்திருந்தான்.

ஜெகனின் கை பலமாகச் சுனிலின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

அடி வாங்கிய பின்னும் ஜெகனை முறைத்துக் கொண்டிருந்தான் சுனில்.

“சில்லி தனமான வேலை பண்ணிட்டு என்னடா முறைப்பு வேண்டி கிடக்கு?” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் அவனை அடிக்கக் கையை ஓங்கினான் ஜெகவீரன்.

“வேண்டாம் இன்ஸ்பெக்டர்! இன்னும் என் மேல கை வச்சா அப்புறம் நீங்க தான் அனுபவிப்பீங்க!” என்று மிரட்டலாகச் சொன்னான் சுனில்.

“என்னடா மிரட்டுறீயா? படிக்கிறது காலேஜ்! ஆனா பேச்சும் செயலும் பக்கா ரவுடி வேலையா இருக்கு. உன்னை எல்லாம் ஜட்டியோட லாக்கப்ல உட்கார வைக்காம, சேர் போட்டு உட்கார வச்சது என் தப்பு தான்…” என்று கடுமையாகச் சொன்ன ஜெகன், எட்டி சுனில் அமர்ந்திருந்த நாற்காலியை உதைத்தான்.

அவன் உதைத்த வேகத்தில் நாற்காலியோடு மல்லாக்கில் விழுந்தான் சுனில்.

விழுந்தவன் எழ முடியாமல் காலை உதறிக் கொண்டிருக்க, “கான்ஸ்டபிள்…” என்று அழைத்துச் சுனிலை தூக்கி விடச் சொன்னான் ஜெகன்.

கான்ஸ்டபிள் வந்து சுனிலை தூக்கி மீண்டும் இருக்கையில் அமர வைக்கப் போக, “நாற்காலி வேண்டாம். எடுத்துட்டுப் போங்க…” என்று உத்தரவிட்டான்.

நாற்காலி இல்லாமல் சுனில் நிற்க, “டேய்! கீழே உட்கார்!” என்றான்.

“வேண்டாம் இன்ஸ்பெக்டர்! ரொம்பப் பண்றீங்க…” என்று அப்போதும் அடங்காமல் சுனில் துள்ள,

“தப்பு பண்ணிட்டு நீயே ரொம்பப் பண்ணும் போது, நான் பண்ண மாட்டேனாடா?” என்று நக்கலாகக் கேட்ட ஜெகன், “இப்ப நீ கீழே உட்காரணும். இல்லைனா ஜட்டியோட லாக்கப்பில் உட்காரணும். உனக்கு எப்படி வசதி?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

உடையைத் துறந்து சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதை விட, உடைகளோடு நாற்காலியைத் துறப்பது மேல் என்று நினைத்தவன் போல், தரையில் அமரப் போனான் சுனில்.

“மண்டிப் போட்டு உட்கார்!” என்று அடுத்த உத்தரவு ஜெகவீரனிடமிருந்து பறந்து வந்தது.

தன் முறைப்பை விடாமல் மண்டியிட்டு அமர்ந்தான்.

ஜெகனின் கோபத்தைக் கண்கள் விரிய பார்த்துக் கொண்டு வாயடைத்துப் போயிருந்தாள் ஜனார்த்தனி.

அவளின் புறம் திரும்பியவன், “மேலே சொல் ஜனா!” என்றான்.

“ஹ்க்கும்…” என்று செருமிக் கொண்டவள், “இவன் போட்டோ காட்டி மிரட்டவும் யமுனா விஷயத்தை என்கிட்ட கொண்டு வந்தாள். என்னால எதுவும் உதவி செய்ய முடியுமான்னு கேட்டாள். ஒரு பொண்ணை யாரோ ஒரு மூணாவது மனுஷன் மிரட்டுறான்னா, அந்தப் பொண்ணுக்கு முதலில் தேவை அவளோட பேரண்ட்ஸ் சப்போர்ட் தான். அதனால் நானே விஷயத்தை யமுனாவோட அப்பா, அம்மாகிட்ட கொண்டு போனேன்.

அவங்க பொண்ணோட பேருக்குக் களங்கம் வருவதை நினைச்சுப் பயந்தாங்க. என் பொண்ணுக்குப் பாதிப்பு இல்லாம ஏதாவது செய்ய முடியுமான்னு என்கிட்ட கேட்டாங்க. நான் வெளியில் இவனைப் பத்தியும், இவன் குடும்பத்தைப் பத்தியும் விசாரிச்சேன். இவனோட அப்பா பிஸ்னஸ்மேன். தொழில் வட்டத்தில் அவருக்கு நல்ல பேரு இருக்குனு கேள்விப்பட்டு அவர்கிட்ட விஷயத்தைக் கொண்டு போனேன். ஆனா அவர் தொழில் வட்டத்தில் தான் புலி. மகன் விஷயத்தில் பூஜ்யம்னு தெரிந்தது…” என்றாள்.

“என்ன சொன்னார் இவனோட அப்பா?” என்று கேட்டான் ஜெகன்.

“ஆம்பள பசங்க, அதுவும் பணக்கார ஆம்பள பசங்க அப்படித்தான் இருப்பாங்களாம். பேசாம அந்தப் பொண்ணுகிட்ட போய் என் மகனை கொஞ்ச நாளைக்கு லவ் பண்ண சொல்லுமானு என்கிட்ட சர்வசாதாரணமா சொன்னார்…” என்று முக இறுக்கத்துடன் சொன்னாள் ஜனார்த்தனி.

அவள் சொன்னதைக் கேட்ட ஜெகவீரனின் முகமும் இறுகிப் போனது.