பித்தம் கொண்டேன் பேரெழிலே -4

கலைவாணிக்கு தன் கணவரின் அண்ணன் வைத்தியநாதனை காளமேகத்தோடு அவரின் திருமணத்தின் போதே பிடிக்காமல் போய்விட்டது.காரணம் இந்த பெண் வேண்டாம் என்று தம்பியிடம் அவர் கூறியதாக உறவுக்கார பெண்கள் பேசிக் கொண்டதை கலைவாணி கேட்க நேர்ந்துவிட தான் எந்த விதத்தில் காளமேகத்திற்கு பொருத்தமில்லாமல் போய்விட்டோம் என்று வைத்தியநாதன் மேல் சிறு சுணக்கம் ஏற்பட்டுவிட்டது.

அதை அதிகப்படுத்தும் படியாக அவளை கண்ட போதெல்லாம் உதாசீனம் செய்தார் வைத்தியநாதன்.சில நேரம் ஒருவரை பிடிக்க காரணம் தேவையில்லாதது போல வெறுக்கவும் காரணங்கள் இருப்பதில்லை.அதுபோல தான் வைத்தியநாதனுக்கு கலைவாணியை பிடிக்காமல் போனது.ஆனால் தம்பி மனைவி என்று சிறிது மரியாதை கொடுத்திருக்கலாம் அவர்.ஆனால் அவரின் விவேகமில்லாத நடத்தை கலைவாணிக்கும் அவருக்கும் வெறுப்பு என்னும் நெருப்பு பற்றி எரிய பாவம் காளமேகம் தான் அண்ணனுக்கும் மனைவிக்கும் நடுவில் திண்டாடிப் போனார்.

காலங்கள் செல்ல விவசாயம் வேண்டாம் என்று தன் பேரில் இருந்த நிலங்களை தம்பிக்கே விற்பதாகக் கூறிய வைத்தியநாதன் அதன் மதிப்பை விட பலமடங்கு பணம் கேட்க முடியாது என்று ஆட்சேபித்தார் கலைவாணி.ஆனால் அண்ணன் மேல் பாசம் கொண்ட காளமேகமோ அவர் கேட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு கொடுத்துவிட்டார்.அதற்கென்று கலைவாணியின் நகைகள் அடகு வைக்கவும் நேர்ந்தது.அதனால் முதலில் இருந்த கசப்பு தீரா பகையாக மாறிவிட்டது.

அதன்மேல் வைத்தியநாதன் கிராமத்திற்கு வரவில்லை.காளமேகம் தான் உயிரோடு இருக்கும் வரை அவ்வப்போது சென்னை சென்று அண்ணனை பார்த்து வந்துக் கொண்டிருந்தார்.அவர் மறைந்த பின் கங்காதரனும் கிரிதரனும் பெரியப்பா என்று சென்னை சென்றப் போதெல்லாம் அவர் வீடு சென்று நலம் விசாரித்து வருவர்.அன்னைக்கு பிடிக்காது என்று தெரிந்ததால் அவரிடம் அதை கூறுவதே இல்லை அவர்கள்.

பின் வைத்தியநாதனின் மகன் தினேஷின் திருமணத்திற்கு வேண்டா வெறுப்பாகத்தான் சென்றார் கலைவாணி.ஆனால் மாமனாரை மிஞ்சிய அனிதா சிறிய அத்தை என்றும் பாராமல் அலட்சியம் காட்ட உணவு கூட உண்ணாமல் பிடிவாதமாக மண்டபத்தை விட்டு கிளம்பி விட்டவர் அன்றிலிருந்து சென்னைக்கு செல்வதை அறவே நிறுத்திவிட்டார்.

அப்படியிருக்க தற்போது அவரின் கண்ணான மகன் அனிதாவின் தங்கையை விரும்புவதை அறிந்து எப்பாடுபட்டாவது ஒரு நல்ல பெண்ணைத் தேடி அவனுக்கு விரைவில் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவர் கிரிதரன் இரவு புறப்படும் வரை பல்லை கடித்துப் பொறுமை காத்தார்.ஏனெனில் இப்போதே அவனிடம் சண்டைப் பிடித்தால் கோபத்தில் மகன் அவளை திருமணமே செய்துக் கொண்டு வந்து நின்று விட்டால் என்ன செய்வது?அதனால் இரவு அவன் விடைப்பெற்றப் போது நல்லவிதமாகவே பேசி அனுப்பினார்.எப்படியும் பெரிய மகனிடம் பேசிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

பேருந்து நிலையத்திற்கு கிரிதரனை விட வந்தான் கங்காதரன்.பேருந்து வர சிறிது நேரமிருந்ததால் இருவரும் தங்கள் வயல் தோப்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.

“இன்னும் எப்படா வருவ?”என்று அண்ணன் கேட்க,

“திருவிழாவுக்கு தான் இன்னும் பத்து நாள் தானே இருக்கு வந்தா ஒருவாரம் இருப்பேன்”என்று கிரி கூற,

“ஏன்டா இப்படி லீவு போட்றியே உங்க ஆபிஸ்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”என்று தமையன் கவலையோடுக் கேட்க,

“முடிஞ்ச வரைக்கும் வேலையை முடிச்சிட்டு தான் லீவு போடுவேன்!அப்படி ஏதாச்சும் திட்டினா போடா நீயுமாச்சு உன் வேலையுமாச்சுன்னு ஊரோட வந்திடுவேன் கஞ்சி ஊத்த எங்கண்ணன் மதனி இருக்கும் போது எனக்கென்ன கவல”என்று அவன் கூற தம்பியின் பாசத்தில் நெக்குறுகிப் போனான் அவன்.

“அப்படியெல்லாம் அவசரப்பட்றாதடா வயல் வேலை பாக்குறவனுக்கு பொண்ணு கிடைக்கறது கஷ்டம் தெரிஞ்சுக்க!”என்று கேலி பேசி சிரிக்க,

“அண்ணே நான் திருவிழாவுக்கு வரும்போது உங்ககிட்ட ஒன்னு கேட்பேன்… அதுக்கு நீங்கதான் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணனும்”என்று பூடகமாகக் கூற,

“அது என்னடா இப்பவே சொல்லு அதுக்கு பத்து நாளு காத்திருக்கறது எதுக்கு?”

“ம்ஹூம் இப்ப வேணா நான் அப்புறமாவே சொல்லுறேன் ஆனாக்க நீங்க என்னை எந்த இடத்துலேயும் விட்டுக் கொடுக்க கூடாது”என்று கூற அவன் கூறியது புரிந்தும் புரியாமல் குழப்ப,

“அடேய் நீ என் தம்பிடா உன்னை போயி நா விட்டுக் கொடுப்பனா நீ என்ன பண்ணாலும் இந்த அண்ணன் உன் பக்கம் தான்டா நீ தைரியமா இரு “என்று கூற,

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணே!”என்று அவனை கட்டிக் கொண்டவன் பேருந்து வர அண்ணனுக்கு கையாட்டி விட்டு அதில் ஏறிக் கொள்ள சென்னையை நோக்கி விரைந்தது பேருந்து.

கங்காதரன் வீடு திரும்ப கதவைத் திறந்த பவித்ரா,

“மாமா அத்தே என்னமோ பேசனும்னு நீங்க வந்ததும் ரூமுக்கு வர சொன்னாங்க!”என்று கூற,

“எதுக்கு உனக்கு தெரியுமா?”என்று அவன் கேட்க,

“இல்ல தெரியல மதியத்துல இருந்தே ஒருமாதிரியா தான் இருக்காங்க முதல்ல கைகால கழுவிட்டு வந்து என்னன்னு கேளுங்க”என்று அவள் கூற முகம் கைகால் கழுவி வந்தவன் நேராக தன் தாயின் அறைக்கு சென்றான்.மகனை கண்டதும்,

“பஸ்ஸுக்கு ஏத்தி விட்டியா சீட்டு இருந்துச்சா?”என்று அவர் கேட்க,

“ம் நிறைய இடம் காலியாதேன் இருந்தது…அது சரி என்னமோ பேசனும் சொன்னீங்களாம் உடம்புக்கு ஒன்னுமில்லயே?”என்று கவலையோடுக் கேட்க,

“அதெல்லாம் நல்லாத்தேன் இருக்கு! உன்கிட்ட முக்கியமா ஒன்னு சொல்லனும்னு தான் கூப்புட்டேன்”என்று கூற,

“எதா இருந்தாலும் சொல்லுங்கம்மா எதுக்கு தயங்குறீங்க!”என்று அவன் கூற,

“கிரிக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாமுன்னு தோணுது! ப்ரோக்கருக்கு நாளைக்கே சொல்லிடு”என்று கூற,

“அவனுக்கு இவ்ளோ சீக்கிரம் எதுக்கும்மா?சின்ன பையன்! இன்னும் ரெண்டு வருசம் போவட்டுமே!”என்று கங்காதரன் கூற,

“அதெல்லாம் காலகாலத்துல நடந்தாதான் நல்லாயிருக்கும்!காலந்தாண்டி பண்ணா புள்ள பொறக்கறது கஷ்டமுன்னு சொல்றாங்களே! எதுக்கு வீணா நீ நாளைக்கே போயி பேசிட்டு வா ஆடி முடியவும் கல்யாணம் வெக்கனும் ஆமா!”என்று அவர் தீர்மானமாகக் கூறிவிட சரியென்று அவன் சென்றபின் தயங்கி நின்ற மருமகளை கண்டவர்,

“என்ன பவித்ரா நீ ஏதாச்சும் சொல்லனுமா?”என்று மாமியார் கேட்க,

“அத்தே!…அது..”என்று அவள் இழுக்க,

“எதுக்கு அதுன்னு இழுக்குறவ என்னன்னு உடைச்சு சொல்லு”என்று அழுத்திக் கூற,

“அது  தம்பிக்கு நம்ம மீராவ…”என்று அவள் முடிப்பதற்குள்,

“அதெல்லாம் சரி வராது!புள்ள நல்லதுதான் ஆனா அப்பன் இல்ல ஆத்தாளோ சீக்காளி!போதாததுக்கு தங்கச்சி வேற!நாள நல்லது கெட்டதுன்னு எல்லா நம்ம புள்ள தலைல தான் விழுகும் பின்னாடி நாமளே அவங்களுக்கு தகுந்தாபோல நல்ல பையனா பாக்கலாம் இந்த பேச்சை இத்தோட விட்ரு!”என்று தீர்மானமாகக் கூறிவிட மேலே பேசி அவர் மறுப்பை இன்னும் உறுதியாக்க வேண்டாம் என்று எண்ணிய பவித்ரா தலையசைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அனிதாவின் வீட்டில் எப்போதும் போல மொபைலில் முழுகியிருந்த தங்கையின் அருகே வந்த அனிதா நொங்கென்று அவள் தலையில் கொட்ட,

“ஆ…ஏய் அக்கா எதுக்கு இப்ப என் தலைல கொட்டுன?யூ டர்ட்டி மங்கி”என்று தலையை தேய்த்தபடி திட்ட,

“கொட்டாம கொஞ்சுவாங்களா உன்ன!நீயும் கிரியும் லவ் பண்ண ஆரம்பிச்சு எவ்ளோ வருஷம் ஆச்சு இன்னும் ஒரு அடி கூட முன்னேறல பார்க்கு பீச்சுன்னு வெறுமனே இப்படி சுத்திட்டு இருந்தா போதுமா!இதுக்குள்ள அதையும் இதையும் செஞ்சு கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம் அதைவிட்டு எப்ப பாரு இந்த கருமத்தை நோண்டிட்டு கிடக்குறா!இத பாரு சமி மரியாதையா இந்த தடவை கிரி வரவும் கல்யாணத்தை பத்தி பேசி ஒரு முடிவுக்கு வாங்க!இல்ல அவனை எவளாவது கொத்திட்டு போயிருவா நீ பேன்னு முழுசிட்டு நிக்க வேண்டியது தான்”என்று அவளை மிரட்ட,

“ஆமா போ அந்த வெளங்காதவன் எதுக்கும் மசிய மாட்றான்!எதாவது ரொமேன்டிக்கா இருக்கலாம்னா சும்மா இது நம்ம வழக்கம் இல்ல இதெல்லாம் தப்பு எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்னு காதுல ரத்தம் வர அளவு லெக்சர் அடிக்கறான்!இல்ல அம்மா அண்ணா மதனி மண்ணாங்கட்டின்னு சென்டிமென்ட் பேசி டார்ச்சர் பண்றான் எனக்கு இதெல்லாம் ஒன்னும் பிடிக்கல பேசாம அவனோட ப்ரேக் அப் பண்லாமான்னு யோசிக்கறேன்”என்று சமிகா கூற,

“அடிப்பாவி!கெடுத்துயே குடிய அதை மட்டும் பண்ணிறாதடி முட்டாளே! அப்புறம் நம்ம பிளான் பூரா வேஸ்டா போயிரும்!தங்க முட்டை போட்ற வாத்துடி அவன்!அவனை விட்டுட்டா எனக்கு வாச்ச கபோதி மாதிரி ஒருத்தன தான் நீ கட்டிக்கிட்டு மாரடிக்கனும்!அவன் இப்ப எதை சொன்னாலும் பொறுத்துக்க முதல்ல கல்யாணம் ஒன்னு நல்லபடியா நடக்கட்டும் அதுக்கப்புறம் அவன் பங்கு சொத்தை வாங்கி வித்தா இந்த சென்னைல நாம ஓஹோன்னு வாழலாம்! வெண்ணெய் திரண்டு வரும் போது தாழிய உடைச்சிடாம அவனை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கற வழிய பாரு!”என்று சொல்லி கொடுக்க,

“எனக்கு ஒரு வழியும் தெரில நீயே ஏதாச்சும் ஐடியா சொல்லுக்கா “என்று அவள் அலுத்துக் கொள்ள,

“ஆமா உன் மரமண்டைக்கு என்னதான் தோணும் ம்…சரி அவன் ஊரிலேந்து வரட்டும் பெரிய அணுகுண்டைப் போட்டு அவனே அலறிக்கிட்டு அவன் அம்மாக்கிட்ட உடனே கல்யாண ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்ல வெப்போம்”என்று வழி கண்டுப்பிடித்துவிட்ட ஆனந்தத்தில் கூற,

“ஐ அது என்னக்கா அணுகுண்டு ப்ளீஸ் எனக்கு சொல்லேன்”என்று சமிதா ஆர்வத்தோடுக் கேட்க,

“ம்ஹூம் இப்ப சொன்னா நீ வாய்தவறி உளறிடுவ அவன் வரட்டும் அப்புறம் சொல்றேன்”என்று விட்டு அந்த அருமை அக்காள் அகல மீண்டும் தன் மொபைலில் முழுகினாள் சமிகா.

அன்று மஞ்சுளா என்ற தோழி ஒருவள் அழைத்தாள் என்று டவுனில் இருந்த பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்றாள் சசிரேகா.அர்ச்சனை தட்டு வாங்கிக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.கோவில் உள்ளே பக்தர்கள் குறைவாகவே இருந்தனர்.சனிக்கிழமை மட்டும் தான் அங்கே அதிகம் கூட்டம் இருக்கும்.மற்ற நாட்களில் நாளுக்கு பத்து பேர் வந்தால் பெரிது.

தோழிகள் இருவரும் அதைப்பற்றி பேசியபடியே சன்னதிக்கு சென்றனர்.ஆஜானுபாகுவான கறுப்பு உருவத்தில் எண்ணெய் தடவி பளபளவென்று இருந்தார் ராமபக்த அனுமான்.மஞ்சுளா அர்ச்சனை தட்டை அர்ச்சகரிடம் கொடுக்க அவர் பெயர் நட்சத்திரம் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார்.கண்ணை மூடி தாய் தமக்கை நலனுக்காக இறைவனிடம் மனமாற வேண்டினாள் சசி.அவள் கண்ணைத் திறக்க அங்கே எதிர் வரிசையில் பக்தியோடு கைகூப்பி நின்ற அறிவழகனை கண்டதும் அன்று ஊசிக்கு அவன் படுத்திய பாட்டை நினைத்ததும் தாளாமாட்டாமல் சிரிப்பு பீரிட்டு எழ இருக்கும் இடத்தை கருதி உதட்டை கடித்து அடக்கினாள் அவள்.

அவள் மட்டும் பார்த்தாளே தவிர அவன் பெண்கள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே வெளியேறினாள் அவள்.அந்த கோயிலின் குளத்தில் மீனங்களுக்கு பொரி போட ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்க அதற்காக குளத்தை நோக்கி இருவரும் செல்ல மஞ்சுளாவின் போன் மணியடித்தது,

“சசி!நீ போய் பொரி போடு!அவரு போனு”என்று அவளின் வருங்கால கணவனின் அழைப்பு என்று அவள் வெட்கத்தோடுக் கூற,

“அட அட போன் காலுக்கே இவ்ளோ வெக்கமா சரி சரி போ உன் பங்கு பொரியும் நானே போட்டுவிட்றேன்”என்று கூறியவள் குளக்கரையின் சிறிய கதவு வழியாக நுழைந்தவள் படிகளில் இறங்கினாள்.அங்கே இருபுறமும் தடுப்பு வைத்து சிறிய இடமே இருந்தது.கடைசி படியில் நின்றவள் தண்ணீரில் கால் வைக்க ஆசையெழ மெல்ல இறங்கினாள்.படிகள் பாசிபடிந்து வழுவழுப்பாகவே இருந்தது.கையில் இருந்த பொரியை எடுத்து அவள் தண்ணீரில் போட மீன்கள் கூட்டம் அதை தின்பதற்கு விரைந்து வந்தன.அதில் இரண்டொரு மீன்கள் அவளின் கொலுசனிந்த கால்களை கடிக்க அதில் கூச்சம் தாளாமல் நெளிந்தவளின் கால்கள் வழுக்கிவிட அவள் குளத்தில் விழுமுன் இரண்டு வலிய கரங்கள் அவள் இடையை இறுக பற்றி அவளை விழ விடாமல் செய்ய பயத்தில் கண்களை மூடியிருந்தவள் மெல்ல கண்களை திறந்தாள்.

அங்கே அவளையே இமைக்காமல் பார்த்திருந்த அறிவழகனை கண்டவள் நெருக்கத்தில் தெரிந்த அவனின் கூர்விழிகளில் தொலைந்துப் போனாள்.இரண்டு நொடிகளா இல்லை இரண்டு யுகமா என்று எதிரில் இருந்த கண்களில் இருவரும் முழுகியிருக்க திடிரென,

“ஜெய் ஹனுமான்….”என்று ஸ்பீக்கரில் பாடல் ஒலிக்க,

“ஐயோ ஆஞ்சனேயா…!”என்று அலறிய அறிவழகன் அவன் பிடியை விட்டுவிட அதை எதிர்பார்க்காத சசிரேகா தடுமாறி குளத்தில் விழுந்துவிட்டாள்.நனைந்த உடையோடு நீர் மேல் வந்தவள்,

“அடப்பாவி!இப்படியா பொத்துனு போடுவ! நீச்சல் தெரியுங்கறதால போச்சு இல்லாட்டி என்ன ஆகியிருக்கும் அறிவே இல்லாத உனக்கெல்லாம் எவன்யா அறிவழகன்னு பேரு வெச்சது”என்று அவள் கத்த நனைந்த உடையில் மாலை வெயில் பட்டு பொற்றாமரையாக ஜொலித்தவளை ஒரு நொடி தன்னையறியாமல் ரசித்துவிட்டவன்,

“ஐய்யயோ இது டேன்ஜர் பார்ட்டி!அப்பா ஆஞ்சனேயா ஆசை வந்தால் ஆபத்தய்யா!”என்று கூவியவன் திரும்பி பாராமல் ஓடிவிட தலையில் அடித்துக் கொண்டவள் கஷ்டப்பட்டு நீரில் இருந்து வெளியே வந்து மூச்சு வாங்க படியில் அமர்ந்துக் கொண்டாள்.அப்போது அவளைத் தேடிவந்த மஞ்சுளா தோழியின் நிலைக் கண்டு,

“ஏய் சசி!என்னடி இப்படி நனைச்சுருக்க கால் தடுக்கி குளத்துல விழுந்திட்டியா?”என்று கேட்க,

“ஒரு கருங்குரங்கு தள்ளி விட்ருச்சு”என்று அவள் குளிரில் வெடவெடத்தபடிக் கூற,

“எதே கருங்குரங்கா?நம்ம பக்கம் கருங்குரங்கே இல்லயேடி”என்று அவள் புரியாமல் கேட்க,

“இந்த பக்கத்துக்கே இது ஒரு பீஸ்தான் இருக்கு…நீ சீக்கிரம் போய் ஒரு சுடிதார் வாங்கிட்டு வா!இப்படியே போனா என் மரியாதை மூணு காசாயிடும்”என்று கூற அவள் சென்று மாற்றுடை வாங்கி வர மறைவில் சென்று அணிந்து வந்தவள் மனதில் அறிவழகனை கண்டபடி அர்ச்சித்தபடி வீடு சென்று சேர்ந்தாள்.

அவள் வீட்டில் நுழைய அவளை ஆச்சரியமாகப் பார்த்த மீரா,

“அடியேய் போகும்போது சிவப்பு சுடிதாரு தானே போட்டுப் போன!இப்ப இந்த புது சுடிதார் எங்கேயிருந்துடி வந்துச்சு?”என்று கேட்க,

“அது..வந்துக்கா அது கோயில் குளத்துல கால் வழுக்கி விழுந்துட்டேன் அதான் அப்படியே வர முடியுமா?புது துணி வாங்கி போட்டுட்டு வந்தேன்”என்று திணறலாகக் கூறினாள்.

“ஓ அப்படியா சரிதான் பாத்து இருக்குறது இல்ல இப்படியா போய் விழுவ சரி சரி போய் தலைய துவட்டு சளி புடிச்சுக்கப் போவுது நா போய் சாப்பாடு எடுத்து வெக்குறேன் “என்று அவள் உள்ளே செல்ல இதுவரை தன் தமக்கையிடம் எதையும் மறைத்திராதவளுக்கு நடந்த அனைத்தையும் முழுதாகக் கூறாதது உறுத்தலாக இருக்க அவளையறியாமல் கண்கள் கலங்கிப் போனது.