பாலையில் பனத்துளி – 11

அத்தியாயம் – 11

விருட் விருட்டென்று வேகமாக நடை போட்ட பிரதாபனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

அந்தச் சிறிய பூங்காவில் நடந்து கொண்டிருந்தவனின் நடை சீராக இருந்தாலும், அவனின் எதிரே அவனைப் போல நடைப்பயிற்சிக்கு‌ வந்து கடந்து சென்றவர்களையோ, ஓய்வுக்காக போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களின் சத்தமோ எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. 

அவனின் நினைவுகள் எல்லாம் அவனைச் சுற்றியிருந்த சுற்றுப்புறத்தில் இல்லாமல் எங்கோ இருந்தது. 

எங்கோ என்ன எங்கோ? எல்லாம் ரஞ்சனாவையும் அவளின் பிள்ளைகளைச் சுற்றிலும்தான் அவனின் எண்ணங்கள் உலா போயின.

அதிலும் ரஞ்சனாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது. 

அவன் என்னவோ தீண்டத்தகாதவன் போலவும், பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போகும் பொல்லாதவன் போலவும், கடந்த நான்கு நாள்களாக அவனின் கண்ணில் பிள்ளைகளைக் காண விடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தாள் ரஞ்சனா.

அது வெகுவாக அவனைக் காயப்படுத்தியிருந்தது.

அவளின் பிள்ளைகளைச் சொந்தம் கொண்டாடவோ, பிள்ளைகளைக் காரணம் சொல்லி ரஞ்சனாவை நெருங்கவோ அவன் கிஞ்சித்தும் நினைத்ததே இல்லை. 

அவனுக்குத் தேவை எல்லாம் அப்பிள்ளைகளை கண்டதும் அவன் மனத்தில் சில நொடிகள் மட்டுமே வந்து போகும் இளைப்பாறுதல் மட்டுமே. 

ஆனால், அதையும் கிடைக்க விடாமல் ரஞ்சனா தடுக்க தடுக்க, இன்னும் அப்பிள்ளைகளை நெருங்க வேண்டும் என்ற ஆசைதான் வந்ததே தவிர, விலகிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றவே இல்லை.

பிள்ளைக் காண‌ முடியாமல் தவியாய் தவித்துப் போனான். இயல்பாக எந்த வேலையையும் அவனால் செய்யவே முடியவில்லை. 

தனக்கு இத்தகைய மனவுளைச்சலை தந்தவள் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

அதே நினைவுடன் ஒரு மணிநேரம் நடந்த பிறகு கால் வலியெடுக்க ஆரம்பிக்க, அதன் பின்தான் சற்று நிதானத்துக்கு வந்து தளர்ந்து இருக்கையில் அமர்ந்தான்.

ஆனாலும், அவனின் மனம் இன்னும் சிந்தனையின் பிடியிலிருந்து வெளியே வந்திருக்கவில்லை. 

சில விஷயங்களை மனம் தீவிரமாக கணக்கு போட்டது. அதன் சாதக பாதகங்களை யோசித்தது. ஆனாலும், அவனால் உடனே ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

இடையில் ஏதோ ஒரு இடறல் மனத்தை நெருடியது. ஒரு முடிவிற்கும் வர முடியாமல் எழுந்து வீட்டிற்குச் சென்றான். 

அவன் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டடத்தை நெருங்கிய போது மின்தூக்கியின் அருகே சிறு கூட்டத்தைக் கண்டு, நெரித்த புருவங்களுடன் அருகில் சென்றான். 

“நான் போய் வாட்ச்மேனை ஆட்டோ பிடிச்சுட்டு வரச் சொல்றேன்…” என்று அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ராமநாதன் அவனைக் கடந்து செல்ல முயல, “என்னாச்சு? என்ன பிரச்சினை?” என்று அவரைப் பிடித்து விசாரித்தான். 

“ஹரிணி பொண்ணு படியில் விழுந்து அடிபட்டுருச்சு தம்பி. அதான் ஹாஸ்பிட்டல் போக ஆட்டோ பிடிக்க போறேன்…” என்று அவர் படபடப்பாக சொல்ல, 

“என்ன?” என்று அதிர்ந்து போனவன், அந்தக் கூட்டத்தை நோக்கி விரைந்தான். 

“ஹரிமா… கண்ணைத் திறந்து பாருடா…” என்று குழந்தையை மடியில் போட்டு ரஞ்சனா அழுது கொண்டிருக்க, ராமநாதனின் மனைவி கையில் இருந்த பரத்தோ என்னவோ ஏதோ என்று பயந்து அம்மாவை தூக்க சொல்லி கையை நீட்டி அழுது கொண்டிருந்தான். 

ஹரிணியின் தலையிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்க, மயக்கத்திலிருந்த பிள்ளையைப் பார்த்து கதறிக் கொண்டிருந்தாள்‌ ரஞ்சனா. 

அந்தக் குடியிருப்பில் இருந்த இரண்டு, மூன்று பேர் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். 

ஹரிணியின் நிலையைப் பார்த்து பதைபதைத்துப் போய் அருகில் ஓடிய பிரதாபன் ஒரு நொடி கூட யோசிக்கவே இல்லை. 

ரஞ்சனாவின் மடியில் கிடந்த ஹரிணியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டவன், கால்சட்டையில் இருந்த தனது கார் சாவியை எடுத்து ரஞ்சனாவிடம் கொடுத்து, “கதவை திறந்து விடுங்க ரஞ்சனா, சீக்கிரம்!” என்று அவளைத் துரிதப்படுத்தினான். 

பிள்ளையின் நிலை மட்டுமே நினைவில் இருக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளும் விரைந்து அவன் சொன்ன வேலையைச் செய்ய, ஹரிணியை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து அவளையும் ஏறச் சொன்னான். 

அழுது கொண்டிருந்த மகனையும் தூக்கிக் கொண்டு பின்னால் ஏறினாள்.

“தம்பி, நானும் வர்றேன்…” என்று ராமநாதனும் முன்னால் ஏறிக்கொள்ள, காரை மருத்துவமனையை நோக்கி விரட்டினான். 

இரவு எட்டு மணி ஆகியிருந்த நேரமது. வாகன நெரிசலை தாண்டி மருத்துவமனையை சென்று சேரவே பதினைந்து நிமிடங்களைக் கடந்திருந்தது. 

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததும் காரை நிறுத்திவிட்டு, பின்னால் சென்று ஹரிணியை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான். 

மற்றவர்களும் பின்னால் செல்ல, அவசரச்சிகிச்சை பிரிவில் ஹரிணியை அனுமதித்து சிகிச்சையை ஆரம்பித்தனர் மருத்துவர்கள். 

“பாப்பா படியிலிருந்து எப்படி விழுந்தாள்? என்னாச்சு?” என்று வெளியே நின்று அழுது கொண்டிருந்த ரஞ்சனாவிடம் கேட்டான் பிரதாபன். 

மகனை அணைத்தபடி நின்றிருந்தவள் அவன் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை. 

“பதில் சொல்லுங்க ரஞ்சனா. எப்பவும் தனியா அவள் படியில் உட்கார்ந்து இருப்பாள். இன்னைக்கும் அப்படி உட்கார்ந்து எதுவும் நடந்ததா என்ன?” என்று அவன் விடாமல் கேட்க, தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள் கண்ணில் இருந்தது குற்றவுணர்ச்சி மட்டுமே. 

அவளின் பார்வையை புரியாமல் பார்த்தான் பிரதாபன். 

“எப்படி என்ன நடந்ததுனே தெரியலை தம்பி. திடீர்னு பிள்ளை கத்துற சத்தம் கேட்டு வந்து பார்த்தால் பிள்ளை படியில் உருண்டு கிடக்கு. பிள்ளையை தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம்னு கீழே இறங்கி வந்தால், சரியா அந்த நேரத்துக்கு வந்து உதவி செய்தீங்க…” என்று ராமநாதன்தான் அவனுக்குப் பதில் சொன்னார். 

அதைக் காதில் வாங்கினாலும், ரஞ்சனாவின் அமைதி அவனுக்குச் சரியாகப்படவில்லை.

“ஹரிணி எப்படி விழுந்தாள்னு உங்களுக்குத் தெரியாதா? அந்த‌ நேரம் நீங்க எங்க இருந்தீங்க? இப்படி நடக்குற அளவுக்கு எப்படி விட்டீங்க?” என்று ரஞ்சனாவிடம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து விட்டான். 

“ப்ளீஸ் சார், நான் ஏற்கெனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். என்னை விட்டுருங்க…” என்று அவள் கதற, இதென்ன எதிர்வினை என்பது போல்தான் அவளைப் பார்த்தான். 

“குழந்தை விழுந்ததில் ரஞ்சனா பொண்ணு ரொம்பப் பயந்துடுச்சு போலிருக்கு தம்பி. அப்புறமா விசாரிப்போம்…” என்று ராமநாதன் சொல்ல, தலையைக் குலுக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான். 

இரத்தம் படிந்த முகத்துடன் ஹரிணியை பார்த்து, அவனின் மனம் கூட இன்னும் பதட்டத்தில் துடித்துக் கொண்டுதான் இருந்தது. 

தனக்கே‌ இப்படி இருக்கும் பொழுது, ஒரு தாயாக அவளுக்கு எப்படி இருக்கும் என்று புரிந்தாலும் பிள்ளைக்கு என்ன ஆனது என்று அறிந்து கொள்ள அவன் மனம் துடிக்க, அவளின் மௌன கண்ணீர் அவனைச் சலிக்க வைத்தது.

அம்மா அழுது கொண்டே இருப்பதை பார்த்து, அவள் கையில் இருந்த பரத்தும் அழுது கொண்டிருந்தான். 

அவனைச் சமாதானம் செய்யும் மனநிலையில் கூட ரஞ்சனா இல்லாததை கண்டு, பரத்தை வாங்க கையை நீட்டினான் பிரதாபன். 

பரத் அவனிடம் தாவ முயல, அப்போதுதான் சற்று உஷார் வந்தது போல், மகனை இறுக்கித் தன்னுடனே பிடித்துக் கொண்டாள். 

சுருசுருவென்று வந்தது பிரதாபனுக்கு. அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் இவளுக்கு? என்ற கோபம் வர, அழுத்தமாக அவளைப் பார்த்தவன், அவளின் அனுமதி பெறாமலே பரத்தை சட்டென்று தூக்கிக் கொண்டான். 

இனி உன் பிடிவாதம் உதவாது என்பது போல் இருந்தது அவனின் செய்கை. 

தான் உதவி செய்யும் போது மட்டும் தளர்ந்து விடும் அவளின் கொள்கை, நன்றாக இருக்கும் போது இறுக்கிப் பிடிப்பாளாக்கும்? என்ற கோபம் அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது. 

முக இறுக்கத்துடன் பரத்தை தூக்கிக் கொண்டு சற்று தள்ளி சென்று, குழந்தையைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தான். 

சிறிது நேரத்தில் பரத் அழுகையை நிறுத்தி விசும்பலுடன் பிரதாபன் தோளில் சாய்ந்திருப்பதை கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா. 

ஹரிணியை சோதித்து விட்டு மருத்துவர் அழைக்க, தள்ளி நின்றிருந்தவன் ரஞ்சனாவுடன் சேர்ந்தே உள்ளே சென்றான். 

“பாப்பா எப்படி இருக்காள் டாக்டர்?” பிரதாபன் விசாரிக்க, 

“நெற்றியில் லேசா வெட்டு காயம் ஆகியிருக்கு. தையல் போட்டிருக்கோம். கையில் எலும்பு முறிவு ஆகியிருக்கு. அதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணியிருக்கோம்…” என்றார் மருத்துவர். 

“எலும்பு முறிவா?” என்று ரஞ்சனா அதிர்ந்து போனாள். 

“பிள்ளை மயக்கமா இருந்தாளே டாக்டர்? அது எதுவும் பிரச்சினையா?” பிரதாபன் கேட்க, 

“குழந்தை விழுந்ததில் பயந்துட்டாள் போல. அதான் மயக்கம். வேற பயப்படும் படியா ஒன்னும் இல்லை.  இப்ப கண் விழிச்சிட்டாள். நாளைக்கு நீங்க வீட்டிற்கு அழைச்சுட்டு போகலாம்…” என்றார் மருத்துவர். 

“கை எப்ப சரியாகும் டாக்டர்?” ரஞ்சனா கவலையுடன் கேட்க, 

“ஒரு மாதம் ஆகும். குழந்தை இல்லையா… காயத்தோட வீரியம் தெரியாமல் அலட்சியமா விளையாடுவாங்க. சோ, கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க…” என்றார். 

அவரிடம் பேசிவிட்டு ஹரிணியை பார்க்கச் சென்றனர். 

ராமநாதனும் உடன் வந்தார். 

கட்டிலில் படுத்து ஹரிணி வலியில் அழுது கொண்டிருக்க, ஒரு செவிலி அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார். 

வலது பக்க நெற்றியில் கனமான ஒரு பேன்டேஜ் போட்டிருந்தனர். உள்ளே கசிந்த இரத்தம் பேன்டேஜ் மேலேயும் தெரிந்தது. 

இடது கையில் கட்டுப் போட்டு கழுத்தோடு ஒரு கயிறு கட்டித் தொங்கவிட்டிருந்தனர். 

பிள்ளையை அப்படிப் பார்த்ததும் அவனையும் அறியாமல் பிரதாபனின் கண்கள் கலங்குவது போல் இருக்க, ‘தனக்கா கண்கள் கலங்குகின்றன?’ தன்னையே நம்ப முடியாமல் திகைத்துப் போனான்‌. 

இந்த உணர்வு அவனுக்குப் புதிது. சட்டென்று தன்னைச் சமாளித்து கண்ணீர் வராமல் சுதாரித்துக் கொண்டான். 

ஆனால், ரஞ்சனா அவனைப் போல் அடக்கவில்லை. தேம்பல் கிளம்ப வெடித்து அழுதுவிட்டாள். அந்தச் சத்தத்தில் பிரதாபன் கையிலிருந்த பரத்தும் மிரண்டு போய் அழ, அம்மாவின் அழுகையைக் கண்டு தனக்கு ஏதோ ஆகிவிட்டதோ? என்று பயந்து போன ஹரிணியும் பெரிதாக அழ ஆரம்பித்தாள். 

“ரஞ்சனா… ரஞ்சனா… கண்ட்ரோல் யுவர் செல்ப்!” என்ற பிரதாபன் குரல் எல்லாம் அவளின் செவிகளை எட்டவே இல்லை. 

“ஏம்மா, என்னமா பண்றீங்க? நீங்களே இப்படி அழுதால் பிள்ளைங்க பயந்துடாதா?” என்று அங்கிருந்த செவிலி ஓங்கி குரல் கொடுத்து அதட்ட, அதில்தான் ரஞ்சனா தன்னை அடக்கிக் கொண்டாள். 

“பிள்ளைக்குத்தான் பயப்படும்படி எதுவும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார் தானே ரஞ்சிமா. நீ அழுது பிள்ளைகளையும் பயமுறுத்தாதேமா…” என்று ராமநாதனும் எடுத்துச் சொல்ல, தன் தவறு  புரிந்து கண்களை துடைத்துக் கொண்ட ரஞ்சனா, மகளின் அருகில் சென்றாள். 

“ஹரிமா, உனக்கு ஒன்னுமில்லைடா. நாம நாளைக்கு வீட்டுக்குப் போயிடலாம். அழக்கூடாது… சரியா?” என்று மகளின் கண்களைத் துடைத்து விட்டாள். 

உதட்டை பிதுக்கி தேம்பியபடி தன் அடிபட்ட கையையே பயத்துடன் பார்த்தாள் ஹரிணி. 

“பாப்பா கீழே விழுந்தாள்ல. அதான் கையில் அடிபட்டுருச்சு. சீக்கிரம் சரியாகிடும். பயப்படக்கூடாதுடா பாப்பா…” என்று அவளைக் கவனித்துக் கொண்டிருந்த பிரதாபன் லேசாக தொண்டையை செருமிக் கொண்டு சமாதானம் சொல்ல, 

“என் பேரு பாப்பா இல்லை அங்கிள்…” என்று தேம்பியபடியே சொல்ல, 

பிள்ளை சொன்ன அழகில் லயித்தவன் உதட்டில் சட்டென்று துளிர்த்தது புன்னகை. 

“எனக்கு நீ பாப்பா தான்டா பாப்பா…” என்றான் வேண்டுமென்றே. 

“அங்கிள்…” என்று சிணுங்கியவளுக்கு அப்போதுதான் அன்னை அவனிடம் பேசக்கூடாது என்று சொன்னது நினைவில் வந்தது போலும். உடனே அன்னையைப் பயத்துடன் பார்த்தாள். 

“அம்மா, நான் இல்லம்மா. அங்கிள்தான்மா…” என்று அவள் பயத்தில் உளற, பிரதாபனின் மலர்ந்திருந்த முகம் உடனே இறுகியது. 

ரஞ்சனாவிற்கு சங்கடமாகிப் போனது.

அவளே அவனிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவனைத் தங்கள் வாழ்க்கையுடன் விதியும், சூழ்நிலையும் நெருக்கி விடுவதும், அதை எதிர்கொள்ள தான் தடுமாறிப் போவதும், அவளுக்கு பெரும் அவஸ்தையைக் கொடுத்தது.

இப்பொழுது கூட பரத் அவன் கையில் இருந்தான். ஹரிணி அவனுடன் இயல்பாக உரையாடுகிறாள். அதற்கு தடை சொல்ல முடியாமல் அவன் செய்யும் உதவி ஒவ்வொரு தடவையும் அவளைக் கட்டி போடுவது இயலாமையைக் கொடுத்தது.

அங்கிருந்த சூழ்நிலையை மௌனமாக கிரகித்துக் கொண்டவாறு நின்றிருந்தார் ராமநாதன்‌. 

அவரின் வயதிற்கும், அனுபவத்திற்கும் சூழ்நிலையின் கனத்தையும், அவர்களின் மனநிலையையும் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 

அதனால் எதிலும் தலையிடாமல் வேடிக்கை பார்ப்பவராக நின்றிருந்தார். 

ஹரிணி இன்னும் பயத்துடன் அன்னையை பார்க்க, இப்பொழுது எதுவும் பேச முடியாமல் தடுமாறிப் போன ரஞ்சனாவை காப்பாற்றுவது போல் வெளியே சென்றிருந்த செவிலி மீண்டும் உள்ளே வந்தார்.

“குழந்தை சாப்பிட்டாளா? சாப்பிடலையா?” என்று ரஞ்சனாவிடம் அவர் விசாரிக்க, 

“இன்னும் இல்லை சிஸ்டர். அதற்குள்தான் விழுந்துட்டாள். இப்ப ஏதாவது சாப்பிட கொடுக்கலாமா?” என்று விசாரித்தாள்.

“ஏதாவது லைட்டா வாங்கி கொடுங்க. சாப்பிட்டு மாத்திரை போடணும்…” என்று சொல்லிவிட்டுச் சென்றார். 

“நான்‌ போய் இட்லி வாங்கிட்டு வர்றேன்…” என்று‌ ராமநாதன் கிளம்ப, 

“நீங்க இருங்க. நான் போறேன்…” என்று அவரை தடுத்து நிறுத்தினான் பிரதாபன்.

“பரத்தும் நீங்களும் சாப்பிட்டீங்களா இல்லையா?” என்று ரஞ்சனாவிடம் விசாரித்தான். 

அவள் மறுப்பாக தலையசைக்க, “சரி, நான் போய் உங்க எல்லாருக்கும் சேர்த்தே வாங்கிட்டு வரேன்…” என்று கிளம்ப, 

“சாரி, அவசரத்தில் நான் பர்ஸ் எதுவும் கொண்டு வரலை…” என்று தயங்கியபடி சொன்னாள் ரஞ்சனா. 

பிள்ளைக்கு அடிபட்ட அவசரத்தில் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவளுக்கு அப்பொழுது தோன்றவே இல்லை. பிரதாபன்தான் மருத்துவமனை செலவும் செய்திருந்தான். 

முன்பு போல வீட்டுக்கு சென்றதும் அவனின் பணத்தை கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், சாப்பாட்டு செலவும் அவனே பார்க்க வேண்டியதாக இருக்க, அவளுக்குப் பெரும் தயக்கமாக இருந்தது.  

அவனிடம் நெருங்க விடாமல் பிள்ளைகளைக் காபந்து செய்து விலகி ஓட துடித்தவள் தானே அவள். இப்பொழுது அவனிடமே கேட்க வேண்டிய நிலையை அறவே வெறுத்தாள். பணம் கூட எடுக்காமல் வந்த தன் முட்டாள்தனத்தை நினைத்து தன்னையே நொந்து கொண்டும் இருந்தாள்.

அவளின் கன்றி போன முகத்தை கூர்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லாமல் கிளம்ப, “நானும் உங்க கூட வர்றேன் தம்பி…” என்று ராமநாதனும் அவனுடன் தொற்றிக் கொண்டார். 

உணவகம் செல்லும் வழியில் ராமநாதன், “தம்பி, எனக்கு ஏதோ புரியுது. ஆனால், புரியாத மாதிரியும் இருக்கு. நான் நினைக்கிறது சரிதானான்னு தெரியலை…” என்று பிரதாபனிடம் சொல்ல, ஒற்றைப் புருவத்தை தூக்கி வியந்து அவரைப் பார்த்தவன், லேசாக புன்னகைத்தானே தவிர, அவருக்கு எந்த மறுமொழியும் கூறவில்லை. 

அவனின் அந்தப் புன்னகையே அந்த வயதான மனிதருக்கு பல கதைகள் கூறின. 

ஆனால், அதற்கு மேல் கேட்பது நாகரீகமாக இருக்காது என்று தன்னை அடக்கிக் கொண்டார். 

ராமநாதனுக்கு உணவகத்தில் உணவு வாங்கி கொடுத்து அங்கேயே சாப்பிட சொல்லிவிட்டு, வாங்கி இருந்த பார்சலை கொடுத்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு பிரதாபன் மட்டும் பரத்துடன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

வாங்கி இருந்த உணவை ரஞ்சனாவிடம் கொடுத்து ஹரிணிக்கு கொடுக்க சொல்ல, “பரத்தை கொடுங்க சார். அப்படியே அவனுக்கும் ஊட்டி விட்டுடுறேன்…” என்று கேட்டாள்.

“இல்லை ரஞ்சனா, நீங்க பாப்பாவுக்கு கொடுங்க. நானும் இன்னும் சாப்பிடலை. நான் போய் கேண்டினில் பரத்துக்கு கொடுத்துட்டு அப்படியே நானும் சாப்பிட்டு வர்றேன்…” என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் பரத்தை அவள் கையில் கொடுக்காமல், பிள்ளையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டான். 

இதோ இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் ஆரம்பித்து விட்டானே என்று தோன்றினாலும், ஒன்றும் செய்ய முடியாமல் போன ஆதங்கத்துடன் ஹரிணியைக் கவனிக்க‌ ஆரம்பித்தாள். 

சாப்பிட்டு முடித்து வந்த பிறகு ராமநாதன் வெகுநேரம் அவர்களுடன் இருந்தார். வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து பிரதாபனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு தூக்கம் சொக்குவதை கண்டவன், அவரை வீட்டிற்குச் கிளம்பச் சொன்னான். 

“இல்லை தம்பி, ரஞ்சனா பொண்ணுக்கு உதவி தேவைப்பட்டால்?” விட்டுச் செல்ல தயங்கினார். 

“நான் இங்கேதான் இருப்பேன். நான் பார்த்துக்கிறேன்…” என்று அவருக்குத் தைரியம் சொல்ல, அவரும் ரஞ்சனாவிடம் சொல்லிவிட்டு கிளம்புவதாகச் சொல்லி, உள்ளே சென்று அவளிடம் சொன்னார். 

“ரொம்ப நன்றி அங்கிள். நீங்க கூட இருந்ததால் கொஞ்சம் தைரியமா இருந்தது. தேங்க்ஸ் சார். நீங்களும் கிளம்புங்க. திரும்ப திரும்ப‌‌ உங்களுக்குக் கடன் படுறேன். உங்களோட உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன்…” என்று பிரதாபனிடமும் சொல்ல, அவளின் பேச்சை மௌனமாகக் கேட்டுக் கொண்டானே தவிர, தான் இங்கே இருக்கப் போகும் தகவலை தெரிவிக்கவே இல்லை. 

சொல்ல வந்த ராமநாதனையும் பார்வையிலேயே அடக்கினான்.

லேசாக சிரித்தபடியே கிளம்பிய மனிதரை ஒரு ஆட்டோ பிடித்து பத்திரமாக அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே வந்தான். 

பரத் ஏற்கெனவே சாப்பிட்டதும் தூங்கியிருந்தான். அவனை ரஞ்சனா அறையில் இருந்த இன்னொரு படுக்கையில் படுக்க வைத்திருந்தாள்.

சாப்பிட்டு மாத்திரை போட்ட பிறகும் வலி குறையாமல் போக, சிணுங்கி கொண்டே இருந்த ஹரிணியைத் தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் ரஞ்சனா.

அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். 

கதவு லேசாக திறந்திருந்தால் ஹரிணி ஏதோ சொல்லி புலம்புவதும், அதற்கு ரஞ்சனா கமறும் குரலில் சமாதானம் கூறுவதும் காதில் விழ, அவனின் காதுகள் விடைப்படைந்தன. 

“இனி அவங்க கிட்ட பேச மாட்டேன்மா. அடிக்காதே! வலிக்குது… வலிக்குது… நீ அடிச்ச. ஹரிணி ஓடினா. விழுந்துட்டா. வலிக்குது…” ஹரிணியின் அழுகையுடன் கூடிய புலம்பல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. 

“சாரிடா, சாரிடா ஹரிமா… அம்மாதான் தப்பு பண்ணிட்டேன். எல்லாம் எல்லாமே அம்மா தப்புதான். அவங்க மேல இருந்த கோபத்தை நான் உன் மேல் காட்டிட்டேன். உன்னை அடிச்சிருக்க கூடாது. தப்புப் பண்ணிட்டேன். அம்மாவால்தான் நீ விழுந்துட்ட. இனி அம்மா அடிக்க மாட்டேன். அம்மாவை மன்னிச்சுடு குட்டிம்மா. மன்னிச்சுடு…” என்று ரஞ்சனா அடைத்த தொண்டையுடன் பேசியதை கேட்டவனின் முகத்தில் கோபம் கொழுந்து விட்டு எரிய, விருட்டென்று எழுந்து உள்ளே சென்ற பிரதாபன், 

“அப்ப குழந்தை என்கிட்ட பேசியதுக்குத்தான் அடிச்சி இந்த நிலைக்கு அவளைத் தள்ளி விட்டீங்களா ரஞ்சனா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.