பனியில் உறைந்த சூரியனே – 9

அத்தியாயம் – 9

அகிலன் பேசியதை எல்லாம் கேட்ட தயா அவன் தான் வீட்டில் இருப்பவர்களை ஏமாற்ற கடத்தல் நாடகம் போடுகின்றான் என்று நினைத்து அவனின் மீது கோபம் கொண்டான்.

ஆனால் அவன் உண்மையாகவே கடத்தி தான் வைக்கப் பட்டிருக்கின்றான் என்று ஷர்வா சொல்லவும், நம்ப முடியாத திகைப்பில் ஆழ்ந்தான்.

“என்ன சொல்ற ஷர்வா? நிஜமாவா? ஆனா அகிலன் வேற பேசினானே?” என அதிர்வு மாறாமல் கேட்டான்.

“ஹம்ம்… யெஸ்…! அதுவும் உண்மை தான். பட்…! அதுக்குப் பிறகு நடந்து கொண்டிருப்பது அவனுக்கே தெரியலை. அகிலன் பார்வையில் நண்பர்கள் கூடச் சேர்ந்து நாடகம் போடுறதா நினைச்சுட்டு இருக்கான். ஆனா அந்தப் பசங்க அகிலனை அவங்க கஸ்டடியில் தான் வச்சுருக்காங்க…” என்றான்.

“ஐயோ…! ஷர்வா… என்னடா இப்படிச் சொல்ற? வா… உடனே போய் அகிலனைக் காப்பாத்தி கூட்டிட்டு வருவோம்…” எனப் பதறினான் தயா.

“நோ தயா…! இப்ப எதுவும் நான் செய்றதா இல்லை…”

“வாட்…!” என்று தயா இன்னும் அதிர…

“யெஸ்…” என்ற ஷர்வா தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பப் போனான்.

“ஹேய் ஷர்வா…! என்னடா பண்ற? மாமா உன்னைத் தலையிட வேண்டாம்னு சொன்னதால எதுவும் இப்படிச் செய்றியா?” என்று கேட்ட தயாவை கூர்மையாகப் பார்த்து,

“அப்படிச் செய்வேன்னு நீ நினைக்கிறியா?” எனத் திருப்பிக் கேட்டான்.

“நீ அப்படிச் செய்றவன் இல்லையே… ஆனா நீ ஏன் இப்ப இப்படி நடந்துக்கிறனு புரியலையே? அதான் குழப்பமா இருக்கு…” என்றான்.

“காரணம் என்னனு நீ நேரில் பார்த்தே தெரிஞ்சுக்கோ. இப்போ நீயும் கிளம்பு…! ஆனா உன் காரில் இல்லை. என் பைக்ல. உன் காரை இங்கேயே ஓரமா நிறுத்திட்டு வா…” என்று ஷர்வா சொல்லவும், அவன் செய்வது ஒன்றும் புரியவில்லை என்றாலும், அவன் சொன்னபடி செய்தான்.

சிறிது நேரத்தில் ஷர்வஜித்தும், தயாகரனும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

முதலில் தாங்கள் எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறோம் எனப் புரியாமல் முழித்த தயா வண்டி செங்கல்பட்டுச் சாலையில் செல்ல திரும்பியதும், ஷர்வாவின் தோளில் கைவைத்து அழைத்தான்.

“ஏன்டா ஷர்வா? அந்தப் பசங்க நம்ம கைக்கு எட்டுற தூரத்தில் ஒரு வீட்டில் தானே இருந்தாங்க? அங்கயே சுத்தி வளைச்சு ஈஸியா பிடிக்காம இப்போ எதுக்குச் செங்கல்பட்டு வரை வந்து நேரத்தை வேஸ்ட் பண்ணனும்?” என்று கேட்டான்.

காதில் மாட்டியிருந்த புளுடூத்தின் வழியாக ஏதோ தகவலைக் கேட்டுக் கொண்டே வந்த ஷர்வா, தயாவின் பேச்சில் தன் கவனத்தைத் திருப்பியவன் “உனக்கு நேரம் முக்கியமா? இல்ல அகிலன் லைஃப் முக்கியமா?” என்று கேட்டான்.

“அடப்பாவி…! என்ன கேள்விடா கேட்குற? அந்தப்பய பிராடு தனம் பண்ணியிருந்தாலும், என் வருங்காலப் பொண்டாட்டியோட தம்பிடா! அப்படியெல்லாம் அவன் எப்படியும் போகட்டும்னு விட முடியாது.

நல்லவேளை நீ இந்தக் கேள்வியை என் பூரிக்குட்டி முன்னாடி கேட்காம விட்டாயே? அதுவரைக்கும் சந்தோஷம்…” என்று படபடப்புடன் சொல்வது போல இருந்தாலும் அவன் குரலில் சிறிது கேலியும் இருக்க, ஷர்வாவின் உதட்டோரமும் லேசாகச் சுளித்தது.

“அடேய்…! பயந்தவனே…! பூர்வா புள்ள ஒரு பிள்ளைப்பூச்சிடா. அந்தப் பிள்ளையைப் போய் டெரர் ரேஞ்சுக்குச் சொல்ற?” என ஷர்வாவும் கேலியில் இறங்க,

“யாரு? அவளா? நீ வேற ஏன்டா? அவ வெளி ஆளுங்ககிட்டத் தான் அப்புராணி போல இருப்பா. நான் அவகிட்ட தனியா மாட்டினா என்னை அப்பு அப்புன்னு அப்பிருவா…” என்று தயா பயந்தவன் போலச் சொன்னான்.

இப்போது சற்று சத்தமாகவே சிரித்தான் ஷர்வஜித்.

நண்பர்களுக்குள் கேலி பேசிக் கொண்டதில் அந்த இறுக்கமான சூழ்நிலைச் சிறிது இலகுவானது.

கேலிப் பேசிக் கொண்டு வந்தாலும், ஷர்வாவின் உணர்வுகள் சுற்றுப்புறத்தை உயிர்ப்புடன் கண்காணித்தது.

ஆம்! அவர்கள் வர வேண்டிய இடம் வந்திருந்தது. அந்தச் சாலையில் வரிசையாகச் சில புதுப்புதுக் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருந்தது. அந்தச் சாலை ஓரங்கள் எல்லாம் ஒதுக்குப் புறமாக உருவாகி கொண்டிருக்கும் கட்டிடங்கள் என்பதால் அந்த இரவு பொழுதான ஒன்பது மணி அளவிலேயே அவ்விடங்கள் வெறிச்சோடி இருந்தன.

“பார்த்தியா தயா? எப்படி இடத்தைப் பசங்க செலக்ட் பண்ணிருக்காங்கன்னு? தேர்ந்த குற்றவாளிகள் போலக் கவனமா இருந்து இருக்கானுங்க…” என ஷர்வா சொல்லவும்,

“கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்ற எனக்கே இந்த நேரத்தில் இந்த இடத்தைப் பார்த்தா அமானுஷ்யத்தைப் பார்க்குறது போல இருக்குடா ஷர்வா. ஆனா இந்த அகிலா பையனை பாருடா. அப்படி ஆளுங்ககிட்ட போய் நட்பு வச்சு என்னென்ன வேலை பார்த்து வச்சுருக்கான்னு. அப்படி என்ன இந்த வயசுலேயே அவனுக்குப் பணத்தேவை வந்துச்சோ போ…” என்று புலம்பினான் தயாகரன்.

“சரி… சரி… புலம்பாதே வா…! கவி கூப்பிடுறான்…” என்று காதில் இருந்த புளுடூத்தைக் காட்டினான்.

“அந்தக் கவியை நீ இங்க தான் வர சொல்லியிருந்தீயா?” எனத் தயா கேட்க…

“ஆமா… அகிலன் வர்ற வழியெல்லாம் ஃபாலோ பண்ணிட்டு வந்தான். எனக்கும் தகவல் அனுப்பிட்டே இருந்தான்…” என்றான்.

“ஹம்ம்… நீ தான் கர்ணனுக்குக் கவசகுண்டலம் போல, உன் புளுடூத்தை காதில் வச்சுக்கிட்டே சுத்துவியே…” என்று தயா சொல்லவும்,

“என்ன செய்றது தயா? போடுற வேஷத்துக்கு ஏத்தாப்புல நம்மை மாத்திக்க வேண்டி இருக்கே…” என்று சொன்ன ஷர்வஜித்தின் அதரங்கள் வறட்சியான சிரிப்பை வெளியிட்டது.

ஷர்வஜித்தின் காதில் அநேக நேரம் புளுடூத் இருந்து கொண்டே இருக்கும். அவன் வேலையில் அவனின் போன் அதிகம் உபயோகப்படுவதால், அதை எப்போதும் காதிலேயே வைத்திருப்பான்.

அதை எப்பொழுதாவது தயா கேலி செய்வது உண்டு. அதைத் தான் இன்றும் சொன்னான்.

வண்டியை அங்கிருந்த ஒரு சுவரின் ஓரமாக நிறுத்தி விட்டு கவியுகன் சொல்லச் சொல்ல அந்த இருப்பிடம் நோக்கி நகர்ந்தார்கள்.

கட்டிடங்களுக்குப் பின்னால் ஒரு புதர் போல மரங்களும், செடிகளுமாக இருந்த பகுதிக்கு வந்ததும், கவி இருவரையும் எதிர்கொண்டான்.

“என்ன கவி… பசங்க எங்கே இருக்காங்க?” என ஷர்வா கேட்க…

“இன்னும் கொஞ்சம் தள்ளி இன்னொரு கட்டிட சுவருக்குப் பின்னாடி இருக்காங்க ஷர்வா. அகிலன் கையைப் பின்னாடி கட்டி கடத்தல் செட்டப் போட்டுட்டு இருக்காங்க…” என்றான் கவியுகன்.

“ஹ்ம்ம்…! உன்னை யாரும் பார்க்கலையே?”

“இல்லை ஷர்வா. நான் கவனமா தான் ஃபாலோ பண்ணினேன். யாரும் பார்க்கலை. அடுத்து நம்ம பிளான் என்ன ஷர்வா?”

“இப்போதைக்கு ஒரு பிளானும் இல்லை கவி. அந்தப் பசங்க எதுவரை போறாங்கன்னு பார்க்கலாம். காந்தன் அங்கிள் வர இன்னும் டைம் இருக்குல?”

“இன்னும் அரைமணி நேரம் இருக்கு…” என்று கவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் கிசுகிசுவென ஏதோ பேச்சுச் சத்தம் வர சட்டென மூவரும் அமைதியானார்கள்.

யார் பேசுவது என்று கவனித்துப் கேட்க, அகிலன் பெயர் அவர்களின் பேச்சில் அடிப்படவும் இன்னும் கூர்மையுடன் கவனிக்க ஆரம்பித்தனர்.

“ஏன்டா பாண்டி இன்னைக்கு நம்ம பிளான் சக்ஸஸ் ஃபுல்லா நடந்துரும் தானே?”

“உனக்கு ஏன்டா இவ்வளவு டவுட்டு? அதெல்லாம் அப்புக் கரிக்ட்டா பிளான் போட்டுருக்கான். எல்லாம் அச்சு பிசக்காம நடந்துரும்…”

“ஹ்ம்ம்… சரிடா…! நான் கூட எங்க பிளான் சொதப்பிருமோன்னு நினைச்சேன். ஆனாலும் டா இந்த அகிலா பைய தன்னாலேயே நம்ம கைல மாட்டியிருக்கான். இந்த மாதிரி பணக்கார பயலுக இன்னும் இரண்டு பேரு நம்ம கைல சிக்கினா போதும். நாமளும் கோடீஸ்வரங்க ஆகிறலாம்.

“நடந்தா நல்லா தான் இருக்கும்டா. ஆனா இந்த அகிலன் போல ஆடு தானே வந்து தலையைக் கொடுக்கணுமே? அதுவும் இந்த ஆடு தானா பலி கொடுக்கத் தலையை நீட்டுது! அது போலவே எல்லா ஆடும் இருக்குமானு தெரியலை. பலி கொடுத்தா தான் பலன் கிடைக்கும்கிற மாதிரி, இன்னைக்கு அகிலனை பலிகொடுத்து இருபது லட்சம் சம்பாதிக்கப் போறோம்…” என்று பாண்டி சொன்னதும்,

“பாவம் டா அகிலன்…” என உச்சுக் கொட்டினான் அவனின் நண்பன்.

“அடேய்…! பணம் கைக்கு வந்ததும், அப்புக்கு அப்புறம் அகிலனை இரண்டாவது குத்து நீ தான் குத்தணும். நீ இப்படி இரக்கப்பட்டு எதுவும் சொதப்பி வச்சுறாதே…” என அதட்டினான் பாண்டி.

“சேச்சே…! அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்டா. காரியத்தைக் கச்சிதமா முடிச்சுருவேன். பணம் கையில் கிடைச்சதும் அகிலனை அவங்க அப்பாகிட்ட அனுப்புற நேரத்துக்குள்ள வேகமா நம்ம வேலையை முடிச்சுட்டு தப்பிச்சு போகணும். இதானே நம்ம பிளான்?”

“ஆமா அதை எதுக்குத் திருப்பிக் கேட்குற?”

“நம்ம பிளான் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குனு சொல்றேன்டா…”

“சரி… சரி…! அப்படியே மறக்காம இரு. வா நேரமாச்சு… சீக்கிரம் போவோம்…” என்று பாண்டி சொல்ல… இருவரும் இருட்டுக்குள் ஒதுங்கினதற்கான காரணத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

அவர்கள் செல்லவும் இருவரின் பேச்சையும் கேட்டு அதிர்ந்து பேசப் போன தயாவின் வாயை மூடியிருந்த தன் கையைக் கவி எடுக்கவும், நண்பனின் தோளை அவ்வளவு நேரம் அழுத்தி பிடித்திருந்த ஷர்வாவும் தன் கையைத் தளர்த்தினான்.

“என்ன சார் இப்படிப் பேச போய்ட்டீங்க? உங்க சத்தம் மட்டும் அவனுங்களுக்குக் கேட்டுருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்று ஆதங்கமாகக் கேட்ட கவிக்குப் பதில் கூடச் சொல்ல முடியாமல் உறைந்து போய் நின்றிருந்தான் தயா.

நண்பனின் நிலை புரிய தயாவின் தோளில் கை போட்டு அழுத்தி அவன் கவனத்தை ஷர்வா கலைக்க, நண்பனை மிரட்சியுடன் பார்த்தவன், “இப்போ என் காதில் விழுந்ததெல்லாம் உண்மையா ஷர்வா? அகிலனை… அகிலனை… குத்த…?” என்று மேலும் பேச முடியாமல் தயாவிற்கு வார்த்தைகள் தடுமாறியது.

அவனை இன்னும் அழுத்தி பிடித்தவன் “ரிலாக்ஸ் தயா…! இதுதான் அவங்க திட்டமா இருக்கும்னு எனக்கு ஒரு யூகம் இருந்தது. இப்போ அதுதான்னு கன்பார்ம் ஆகியிருக்கு. அங்கே ரூமிலேயே அந்தப் பசங்க கையில் அகிலனை தவிர எல்லார்கிட்டயும் மறைமுகமாகக் கத்தி இருந்தது.

அதோட அகிலனை அந்தப் பசங்க பார்த்த பார்வையும் சரி இல்லை. அதை வச்சு தான் சொன்னேன் அகிலன் அவங்க கஸ்டடியில் தான் இருக்காங்கனு. இப்படி இங்கே நடக்கலாம்னு தெரிஞ்சேதான் நானும், கவியும் வந்திருக்கோம்…” என்று ஷர்வா சொல்லவும்,

“அங்கேயே அவனைக் காப்பாத்திருக்கலாமே ஷர்வா? இப்போ கடைசி நேரத்தில் எதுவும் ஆச்சுனா என்ன பண்றது?” என்று தயா கேட்கவும், சில நொடிகள் மௌனமாக இருந்த ஷர்வா “இதுக்குப் பதில் அகிலனை பத்திரமா உன்கிட்ட ஒப்படைச்சுட்டு சொல்றேன் தயா. இப்போ நமக்கு நேரம் கம்மியா தான் இருக்கு…” என்றவன் கவியுகனின் புறம் திரும்பி, “கவி நீ அங்கே போ. நான் தயாவை கூட்டிட்டுப் பின்னாடி வர்றேன்…” என்றான்

அவன் சென்றதும், “தயா எனக்கே தெரியும். நான் பெரிய ரிஸ்க் எடுக்குறேன்னு. என் கவனம் கொஞ்சம் பிசக்கினாலும் அது அகிலன் உயிருக்கு ஆபத்தா போய் முடியும்னு தெரிஞ்சே தான் ரிஸ்க் எடுக்குறேன். நிச்சயமா அகிலனை உன்கிட்ட பத்திரமா ஒப்படைப்பேன்.என் மேல நம்பிக்கை வச்சு நான் சொல்றதை செய்…” என்றவன் அவனிடம் சில விஷயங்களைச் சொல்லி விட்டு,

“இதைச் செய்யும் போது பதட்டம் மட்டும் பட்டுறாதே. எல்லாம் நல்ல படியா முடியும். வா போகலாம்…” என்று தயாவை பேசி சரி செய்து அழைத்துச் சென்றான்.

அரைமணி நேரம் கடந்திருந்தது. ஒரு பெரிய கட்டிடத்தின் பின்பக்கத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அகிலன் கை கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருக்க அவனைச் சுற்றிலும், தன் நண்பர்கள் என நம்பியிருக்கும் நால்வரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவர்கள் தப்பிச் செல்வதற்கு ஏதுவாகக் கட்டிடத்தின் பக்கவாட்டில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.

அங்கே இருந்து சிறிது தூரத்தில் அவர்களுக்குச் சிறிதும் சந்தேகம் வராத வகையில் அந்தக் கட்டிடத்திற்குப் பின்னால் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் அகிலனின் நண்பர்களைச் சுற்றி வளைப்பது போல ஷர்வா, கவி, தயா மூவரும் மூன்று திசையிலும் பிரிந்து நின்றிருந்தார்கள்.

எப்போது அவர்களைச் சுற்றி வளைக்க வேண்டும் என்று ஷர்வா குறிப்புக் கொடுத்திருக்க, அதைச் செய்யத் தயாவும், கவியும் தயாராக நின்றிருந்தனர்.

சில நொடிகளில் அப்புவின் தொலைபேசி ஒலிக்க ஆரம்பிக்க, போனை எடுக்கும் முன் தன் நண்பர்களுக்குச் சங்கேத குறிப்பு கொடுத்து விட்டுப் போனை ஆன் செய்து “என்ன பணம் கொண்டு வந்துட்டீங்களா?”

….

“ஹ்ம்ம்… நல்லது! அப்படியே நீங்க இருக்கிற இடத்தில் இருந்து செங்கல் அடுக்கி இருக்குல? அங்கே வந்து நில்லுங்க. என் ஆள் வந்து பணத்தை வாங்கிப்பான். பணம் கைக்கு வந்ததும் உங்க பையன் உங்ககிட்ட வந்துருவான்…”

….

“அதெல்லாம் முடியாது. ஏன் உங்க பையனை முன்னாடி அனுப்பிட்டு பணத்தையும் வாங்காம நாங்க ஏமாறவா? நீங்க எவ்வளவு பெரிய ஆளா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா இப்ப உங்க பையன் உருப்படியா வேணும்னா நான் சொன்னதை மட்டும் செய்ங்க…” என்று அதட்டலாகச் சொன்ன அப்புவின் முகம் பயங்கரமாகத் தெரிந்தது. அதைப் பார்த்து அவனின் எதிரே இருந்த அகிலனோ வியப்பாகப் பார்த்தான்.

இதுவரை அவனின் இந்த முகத்தை அவன் கண்டதே இல்லை. இப்போதும் கூடச் ‘சூப்பரா நடிக்கிறானே’ என்று தான் அவனின் சிந்தனை ஓடியது. அது தான் அவனின் உண்மையான முகம் என்று தெரியாமல் அவனை மனதிற்குள் மெச்சி கொண்டான்.

அப்பு பேசி முடித்ததும் பாண்டியை பார்த்து “நான் ஏற்கெனவே உன்கிட்ட சொன்ன மாதிரி பணத்தை வாங்கிட்டு வந்துரு…” எனச் சொல்லவும் பாண்டியும் இன்னொரு நண்பனும் கிளம்பி செல்ல…

“சரி அப்பு… நான் போய்ட்டுக் காலையில் உங்களைப் பார்க்க வர்ற வரைக்கும் நீங்க பணத்தோட பத்திரமா இருப்பீங்கல?” எனக் கேட்டான் அகிலன்.

“நாங்க எல்லாம் பத்திரமா தான் இருப்போம்…” என்று அப்பு அழுத்தமாகச் சொல்ல… அகிலனின் முகம் பிரகாசம் அடைந்தது.

பாண்டியை முன்னே அனுப்பிக் கொஞ்சம் இடைவெளி விட்டு இவர்களும் பேசிக் கொண்டே பின்னே நடந்தார்கள். அகிலனை தவிர நால்வரும் துணியால் முகத்தை மறைத்திருந்தனர்.

அகிலன் மறைவான இடத்தை விட்டு நகர்ந்ததும் தங்கள் நாடகம் தெரியாமல் இருக்க முகத்தை அழுவது போல வைத்துக் கொண்டான்.

அப்புவும் அவனைத் தரதரவென இழுத்துச் செல்வது போல நடந்து கொண்டான். அகிலன் நின்றிருந்த இடத்தில் இருந்து சிறிது தூர இடைவெளியில் செங்கல் அடுக்கு இருக்க, அதன் மேல் வைத்திருந்த பணத்தைப் பாண்டி கையில் எடுத்துக் கொண்டு தயாராக இருந்த அவர்களின் இருசக்கர வாகனத்தை நோக்கி செல்ல…

கைகள் கட்டப்பட்ட நிலையில் மகனை கண்டு விட்டு காந்தன் “டேய் அகிலா…!” என்று பதற்றத்துடன் அழைத்துக் கொண்டே அருகில் வர பார்க்க…

“ம்ம்… அசைய கூடாது…!” என்று அவரை அப்புவின் அருகில் இருந்தவன் கத்தியைக் காட்டி மிரட்ட, தந்தையைக் கண்டு போலி கண்ணீருடன் அகிலன் “அப்பா…” என்று அழைக்க…

அப்பு என்பவன் பாண்டியிடம் ஒரு கண்ணையும், தன் அருகில் இருந்தவனிடம் ஒரு கண்ணையும் காட்டியவன், தந்தையை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்த அகிலனின் பின்னால் இருந்து கத்தியை அவன் முதுகில் பாச்ச கண் இமைக்கும் நேரம் பாய்ந்து விட்டான்.

அதைக் கண்டு “அகிலா…!” என்று காந்தன் கத்த, அவருடன் சேர்ந்து இன்னொரு குரலும் ஒலித்தது.

“அகிலா…!” என்று கத்திய சத்தம் கேட்டு திடுக்கிட்டு முழித்த அகிலன் பட்டெனப் பின்னால் திரும்பி பார்த்தான். இன்னொரு குரல் அவனின் பின்னால் இருந்தல்லவா வந்தது.

குரலை கேட்டு அவன் திரும்பும் முன் அவனை யாரோ தள்ளி விட, சிறிது தூரம் தள்ளி போய் விழுந்தவன் என்ன நடந்தது எனப் புரியாமல் திரும்பி பார்த்தவன், தன் பின்னால் கண்ட காட்சியை நம்ப முடியாமல் திகைத்து விழித்து அதிர்ந்து எழுந்தவன் அப்படியே மடங்கி அமர்ந்தான்.

அகிலனை குத்த அப்பு ஓங்கிய கை ஷர்வாவின் பிடியில் இருந்தது. அப்புவை தடுக்க ஓடிவரும் போதே அவன் நண்பனின் காலையும் ஷர்வா தட்டி விட்டிருந்ததால் அவன் அங்கே தலை குப்புற விழுந்து கிடந்தான்.

கவி தன் சைலன்சர் பொறுத்தப்பட்ட துப்பாக்கியால் அங்கே இருந்த இரண்டு வண்டிகளின் சக்கரத்தையும் சுட்டுக் காற்றைப் போக வைத்துக் கொண்டே ஓடி வந்ததினால் பாண்டியும், அவனின் நண்பனும் தப்பித்துப் போக முடியாமல் நிற்க, அவர்களைச் செயல் பட விடாமல் தன் துப்பாக்கி முனையில் நிறுத்தியிருந்தான் கவியுகன்.

அகிலனை நோக்கி ஓடி வந்திருந்த தயா அவனை அப்புவிடம் இருந்து காக்கும் பொருட்டு அவனைத் தள்ளி விட்டிருந்தான்.

ஷர்வா, கவி, தயா மூவரும் ஒரே நேரத்தில் செயல் பட்டதில் கண் இமைக்கும் நிமிடத்தில் இத்தனையும் நடந்திருந்தது.

அந்தப் பக்கம் இருந்து காந்தனும் ஓடி வந்திருக்க, மடங்கி அமர்ந்திருந்த அகிலனை எழுப்பிய தயா அவரின் பக்கம் நகர்த்திக் கொண்டு போய் “மாமா சீக்கிரம் அகிலனை கூப்பிட்டு கிளம்புங்க…!” என்றவன், பாண்டியின் கையில் இருந்து கவி வாங்கி இருந்த பணப் பெட்டியையும் அவரின் கையில் கொடுத்தான்.

பணத்தையும் வாங்கிக் கொண்டு மகனை கொல்லப் போனதிலேயே அதிர்ந்திருந்த காந்தன் இங்கிருந்து மகனை பத்திரமாக அழைத்துக் கொண்டு போனால் போதும் என்ற எண்ணத்துடன் “வாடா…!” என்று மகனை கையைப் பிடித்து அழைத்தார்.

ஆனால் அவனோ அப்புவையும் அவன் கையில் இருந்த கத்தியையும் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் கத்தி தன்னை நோக்கி நீண்டு இருந்த விதத்திலேயே பிரமை பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தான்.

அவன் நிலை புரிந்து தயா அவனை அங்கிருந்து தள்ளிக் கொண்டு போனான்.

இங்கே தாங்கள் மாட்டிக் கொண்டதில் நால்வரும் அதிர்ந்து போனதில் மேற்கொண்டு செயல் பட முடியாமல் உறைந்து சில நொடிகள் நின்றிருந்தார்கள். பின்பு தன் கையை இரும்பு பிடியாய்ப் பிடித்திருந்த ஷர்வாவின் கையில் இருந்து தன் கையை விடுவிக்கப் போராடினான் அப்பு.

அந்த நேரத்தில் கீழே விழுந்த இன்னொரு நண்பனும் அருகில் ஓடி வர, தன்னிடம் போராடின அப்புவின் கையில் இருந்த கத்தியை பறித்த ஷர்வா, அவனை முகத்தில் ஒரு குத்துக் குத்தினான். அதில் அவன் நிலை குலைந்திருக்கும் போது அடிக்க ஓடி வந்தவனின் கையைப் பிடித்து அவனின் தோள் பட்டையில் தன் கையால் ஒரு வெட்டு வெட்டினான்.

விழுந்த பலமான அடியில் அவன் சுருண்டு விழ, அப்புவையும் அடுத்து ஒரு பலமான தாக்குதல் தாக்கினான். இருவரும் விழவும், துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருந்த பாண்டியின் பக்கம் வந்தான்.

தன் இரண்டு நண்பர்களும் ஒரே அடியில் சுருண்டு போனதிலேயே அரண்டு போயிருந்த பாண்டியும், அவனின் நண்பனும் அடி வாங்காமலேயே பயந்து “ஐயோ…! அடிச்சிறாதீங்க…” என்று கத்திக் கொண்டே தரையில் அமர்ந்தனர்.

“இவ்வளவு பயப்படுறவன் தப்பே பண்ணிருக்கக் கூடாதுடா…” என்று சொல்லிக் கொண்டே கோபத்துடன் இருவரையும் ஒரு அடி போட்டான்.

முதல் முறையாகச் செய்யத் துணிந்த குற்றத்திலேயே வசமாக மாட்டிக் கொண்டு போலீஸ் அடி வாங்கிய நால்வரும் வலி தாங்காமல் சுருண்டு கிடந்த போது அகிலனையும், காந்தனையும் அனுப்பி விட்டு அங்கே வந்தான் தயா.

நால்வரையும் பார்த்துக் கொண்டே வந்தவனை “தயா நீ கிளம்பி என் வண்டியில் காந்தன் அங்கிள் வீட்டுக்கு போய்ரு! அகிலன் வீட்டில் போய் எதுவும் உளறிராம பார்த்துக்கோ! அகிலனும் சம்பந்தப் பட்டிருக்கான்னு அவங்க யாருக்கும் தெரிய வேண்டாம். நான் கவி கார்ல இவங்க நாலு பேரையும் அள்ளிப் போட்டு போறேன். போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தா எல்லாம் சரி ஆகிரும்…” என்ற ஷர்வா, தயாவை அனுப்பி வைத்து விட்டு, மறைவாக நிறுத்தியிருந்த கவியின் காரை எடுத்து வர செய்து நால்வரையும் வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு தன்னிடத்திற்கு அழைத்துச் சென்றான்.