பனியில் உறைந்த சூரியனே – 5

அத்தியாயம் – 5

ஒரு வருடத்திற்கு முன் முதுகலை படிப்பில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த நேரம் தான் விதர்ஷணா, ஷர்வஜித்தை முதல் முறையாகச் சந்தித்தாள்.

அவள் எந்தப் படிப்பை படித்தாலும், கல்வி நிறுவனத்தைக் கவனிக்கும் பொறுப்பு தான் அவளுக்குக் கொடுக்கப்படும் என்று கருணாகரன் சொல்லி விட்டதால், அவளுக்குப் பிடித்த படிப்பான ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்துக்கொண்டு இருக்கிறாள்.

இளக்கலை படிப்பையும் தங்கள் கல்லூரியிலேயே முடித்தவள், முதுகலை படிப்பையும் அங்கேயே ஆரம்பித்திருந்தாள். கல்லூரி ஆரம்பித்து இரண்டு மாதம் சென்றிருந்த நிலையில் அன்று மதிய உணவு வேளையில் உணவகத்தில் தன் நண்பர்கள் குழுவினருடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள் விதர்ஷணா.

அதில் பாதி நண்பர்கள் அவளுடன் இளங்கலை படித்தவர்கள் தான். தன் கல்லூரி என்ற எந்தத் தலைக்கனமும் இல்லாமல், விதர்ஷணா பாகுபாடின்றி அனைவருடனும் பழகுவதால் அவளுக்கு நண்பர்கள் குழு அதிகமாகவே இருந்தது.

அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போதே, “ஸ்ஸ்… ஹப்பா…! என்ன ஒரு ஆளுடா! டக்கரா இருக்கான்…” என்று சிலிர்ப்பாகச் சொல்லியபடியே வந்து அமர்ந்தாள் விதர்ஷணாவின் ஒரு தோழியான ரஞ்சனா.

தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த தோழிகள் அனைவரும் திரும்பி ரஞ்சனாவை பார்க்க “யாரை சொல்ற ரஞ்சி? இப்படிச் சிலிர்த்துகிட்டு சொல்ற?” என்று இன்னொரு தோழி விசாரிக்க,

“நம்ம காலேஜுக்குள்ள புதுசா ஒரு ஹேண்ட்சம் வந்துருக்கான்டி! அவன் லுக்கும், ஸ்டைலும் ஆளையே தூக்குது போ! என்னமா இருக்கான் தெரியுமா? அவனைப் பார்த்த மயக்கத்திலேயே நடந்து வர்றேன்…” என்று இன்னும் மயக்கத்தில் இருப்பவள் போலப் பேசினாள்.

“ஏய்… என்னடி இது? இப்படிக் குடிச்சவ போல உளர்ற? எவன்டி அவன் உன்னையே இப்படி மயக்கியது?” என்று கேட்டாள் விதர்ஷணா.

“உங்க அப்பாவை தான் பார்க்க போய்ருக்கான்” என்று ஒருமையில் சொல்லியவள் சட்டெனப் பேச்சை நிறுத்தி “நோ… நோ…! பார்க்க போயிருக்கார். இதான் சரியா இருக்கும்…” என்று பன்மைக்கு மாறினாள்.

“என்னடி காரு, பஸ்ஸுன்னு உளறிக்கிட்டு இருக்க? எங்க அப்பாவை பார்க்க வந்தவனையா ஜொள்ளு விட்டுட்டு இருக்க? யாராவது பெரிய ஆளா இருக்கப் போகுது…” என்று விதர்ஷணா சொல்ல…

“பெரியவர் இல்லைடி. இளமையா, பிரஸ்ஸா, அப்படியே ஜிம்ல இருந்து வந்தவன் போலக் கட்டுமஸ்தா…” என்று ரஞ்சனா அடிக்கிக் கொண்டே போக…

“ஹேய்… ஹேய்…! போதும் நிறுத்து! விட்டா இன்னைக்குப் புல்லா வர்ணிப்ப போல?” என்று விதர்ஷணா தோழியின் வர்ணனை பொறுக்க முடியாமல் நிறுத்த சொன்னாள்.

“இன்னைக்கு மட்டும் இல்ல. நாளைக்கும் வர்ணிக்கச் சொன்னா கூட வர்ணிப்பேன்…” என ரஞ்சனா சொல்லவும்,

“அப்படி அவன்கிட்ட என்னடி இருக்கு? நாமளும் போய்ப் பார்த்துருவோமா?” என்று இன்னொரு தோழி கேட்க…

“என்னடி நீங்களும் இவ கூடச் சேர்ந்துகிட்டு இப்படி?” என்று சலித்தாள் விதர்ஷணா.

“சும்மா வாடி! சும்மா பார்க்குறதுக்குக் காசா, பணமா? இவ ஜொள்ளு விடுற அளவுக்கு அந்த ஆள்கிட்ட என்ன தான் இருக்குனு பார்த்துருவோமே…” என்று சொன்ன தோழிகள் நடக்க ஆரம்பிக்க, விதர்ஷணாவும் மெல்ல எழுந்து சென்றாள்.

அந்தக் கல்லூரியின் சேர்மன் அறையில் விதர்ஷணாவின் தந்தை கருணாகரன் இருந்ததினால் அந்த அறைக்கு நேராக இருந்த மரத்தடியில் போய்த் தோழிகள் அனைவரும் நின்றிருந்தனர்.

பத்து நிமிடங்கள் கடந்த பிறகு சேர்மன் அறையில் இருந்து வெளியே வந்தவனைப் பார்த்துத் தோழிகள் அனைவரும் வாயை பிளந்து “நீ சொன்னது உண்மைதான்டி ரஞ்சி…” என்று சொல்ல…

விதர்ஷணா மட்டும் அமைதியாக இருக்க “நீ என்னடி சொல்ற?” என்று தோழியைப் போட்டு உலுக்கினாள் ரஞ்சனா.

ஆனால் அவளோ கம்பீர நடை போட்டு, கட்டுமஸ்தான உடற்கட்டுடன், தன் சட்டை பையில் இருந்த குளிர் கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக மாட்டிய படி நடந்து வந்து கொண்டிருந்த ஷர்வஜித்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்…!” என்று இன்னொரு தோழியும் விதர்ஷணாவை உலுக்க, அவளோ இன்னும் தெளியாது மயக்கத்தில் இருப்பவள் போல இருந்தாள். ஆனால் அவள் வாய் மட்டும் “என் ஆளுடி…!” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தது.

அவள் சொன்னது அருகில் இருந்த எல்லாத் தோழிகளின் காதிலும் விழ “என்னது?” அதிர்ந்து கோரசாகக் கத்தினார்கள்.

அவர்களின் கத்தலில் உணர்வு பெற்று விதர்ஷணா பயந்து விதிர்த்துப் போனவள் “ஏண்டி கத்துறீங்க எருமைகளா?” என்று சத்தம் போட்டாள்.

“பின்ன… நீ சொன்னதுக்குக் கத்தாம கொஞ்சுவாங்களா?” என்று ரஞ்சனா கேட்க, “அதானே?” என்று மற்ற தோழிகளும் கோரஸ் பாடினார்கள்.

“ஏன்? அப்படி என்ன சொன்னேன் நான்?” என்று மென்று விழுங்கி சொன்னவளுக்குத் தான் என்ன சொன்னோம் என்று ஞாபகத்தில் வர உள்ளுக்குள் அதிர்ந்து போனாள்.

“என்ன சொன்னீயா? அங்க இருக்கும் போது வர மாட்டேன்… வர மாட்டேன்னு சொல்லிட்டு, இப்போ அந்த ஆளை பார்த்ததும் என் ஆளுன்னு சொல்ற! உன் ஆளா அது?” என்று அனைத்து தோழிகளும் கேலியில் இறங்க ஆரம்பித்தனர்.

அப்படித் தான் சொன்னோம் என்று உள்ளுக்குள் அதிர்ந்து கொண்டிருந்தாலும், வெளியே “ஹேய்…! நான் அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லலை. என்ன ஆளுடினு நானும் ரசிச்சேன் அவ்வளவு தான்…!” தோளை குலுக்கி அசால்ட்டாக இருப்பது போலச் சொன்னவள் “வாங்க கிளாஸ்க்கு போவோம். டைம் ஆகிருச்சு…” என்று அவர்களை மேலும் யோசிக்க விடாமல் இழுத்துச் சென்றாள்.

வகுப்பறையில் போய் அமர்ந்ததும் ‘எப்படி அப்படி நான் நினைச்சேன்? அவன் அழகா இருக்கான் தான். அதுக்காக ஏன் அப்படிச் சொன்னேன்? ஏன் இந்தக் காலேஜ்லயே கூட அழகான பசங்க இருக்கத் தான் செய்றாங்க. ஆனா அவங்களை யாரையும் அப்படி நான் சொன்னதில்லையே?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள் மெல்ல அருகில் திரும்பி பார்த்தாள்.

அவளின் அருகில் அமர்ந்திருந்த ரஞ்சனா தன் கன்னத்தில் கையை வைத்து விதர்ஷணாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தோழியின் பார்வை புரியாது “என்ன ரஞ்சி. ஏன் இப்படிப் பார்க்கிற?” என்று விதர்ஷணா கேட்க….

“அவங்களை எல்லாம் ஏமாத்தியது போல என்னை ஏமாத்த முடியாது தர்ஷி…” என்று மற்ற தோழிகளைக் கண்காட்டியவள் “உன் பக்கத்தில் இருந்த எனக்கு நல்லா கேட்டுச்சு. நீ என் ஆளுடினு தான் சொன்ன. என்னடி இதெல்லாம்? பார்த்ததும் சம்திங் சம்திங்கா?” என்று தோழியைக் கேலி செய்ய ஆரம்பித்தாள்.

‘சம்திங்கா? ச்சே… ச்சே! அப்படியெல்லாம் இல்லை’ என்று மீண்டும் தன்னுள் பேசிக் கொண்ட விதர்ஷணா “அப்படி எல்லாம் எதுவும் இல்லை ரஞ்சி. ஏன் நீயும் கூட அப்படி வர்ணிச்சு புகழ்ந்த. அப்ப உனக்கும் சம்திங்னு நான் நினைச்சுக்கிட்டுமா” என்று கேட்டாள்.

“சரி தான் போடி…! நான் வர்ணிச்சது சும்மா ஒரு அழகை ரசிக்கிற ரசனை. அதுக்கு மேல எல்லாம் ஒன்னும் இல்லை. இது எல்லாம் ஒரு ஜாலிக்காகப் பார்க்கிற ரசனை. ஆனா எனக்குனு ஒருத்தன் வருவான். அவன் கூட மட்டும் தான் என் சம்திங்…” என்று சொன்ன ரஞ்சனாவை மேலும் கனவுலகிற்குப் போக விடாமல் பேராசிரியர் உள்ளே நுழைந்திருந்தார்.

அதோடு தோழிகள் அவனைப் பற்றி மறந்து விட்டனர் விதர்ஷணாவை தவிர.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் அன்று கல்லூரி அலுவலகத்தில் ஒரு வேலையாகச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தாள் விதர்ஷணா.

அது காலை பதினொரு மணி என்பதால் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அவளின் வகுப்பு பேராசிரியர் அவளுக்குக் கொடுத்த வேலை என்பதால் தான் அந்நேரம் தனியாக வெளியே வந்திருந்தாள்.

அப்படிச் செல்லும் போது சேர்மனின் அறையைத் தாண்டி தான் செல்ல வேண்டும் என்பதால் அந்த அறையின் அருகில் அவள் வந்து கொண்டிருக்கும் போது “என் வேலையை நான் சரியா செய்து தான் ஆகணும் சார்…” என்ற அழுத்தமான குரல் கேட்க, அப்படியே நின்று விட்டாள்.

அந்தக் குரல் அவளை நிற்க சொல்லி தூண்டியது. “இதுக்கு மேல பேச்சுக்கு இடமில்லை சார். நான் வர்றேன்…” என்ற குரலை தொடர்ந்து வேக நடை போட்டு வெளியே வந்தவனைப் பார்த்தும், அப்படியே மலைத்து நின்றாள்.

தன் கால் சட்டையின் பையினுள் கையை விட்டுக் கொண்டு அறையின் ஓரம் அவள் நிற்பதை பொருட்படுத்தாமல் அவன் சென்று கொண்டிருக்க, ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல, அவனின் பின் அவளும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

தன்னைத் தொடரும் காலடியை உணர்ந்து, சட்டென நின்றவன் திரும்பி ‘யார் நீ?’ என்பது போலக் கேள்வியாகப் பார்த்தான்.

ஆனால் அதைக் கூட உணராது அருகில் தெரிந்த ஷர்வஜித்தின் முகத்தை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை புரியாது அவளின் முகத்திற்கு நேரே சொடுக்கு போட்டு “யார் நீ? நீ ஏன் என் பின்னாடியே வர்ற?” என்று கேட்டவனின் குரலில் அதிகார தொனி ஒலித்தது.

அவனின் அதிகாரத்தில் அதிர்ந்து தெளிந்தவள், தான் எதற்கு வந்தோம் என்று கூட விதர்ஷணாவிற்குத் தெரியாமல் போக, திருதிருவென முழித்தாள். பின்பு ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக, “நான் விதர்ஷணா. சேர்மன் பொண்ணு…” என்றாள்.

“சோ வாட்?” என்று அலட்சியமாக அவன் கேட்க, அதைக் கண்டு கொள்ளாமல் ஏதோ உந்துதலில் “உங்க பேர் என்ன?” எனக் கேட்டவளை உறுத்து விழித்தான்.

அந்த விழிகளின் தீட்சண்யம் அவளை உள்ளூர நடுங்க வைத்தது. ஆனாலும் ஏனோ அவளுக்கு இப்போது அவனின் பெயர் தெரிந்தே ஆக வேண்டும் என்று தோன்ற, அவனின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

அவளின் அந்த நிலையைப் பார்த்தவன் கண்கள் இடுங்க “அது தெரிஞ்சி உனக்கு ஒன்னும் ஆகப் போறது இல்லை. உன் வேலையைப் பார்த்துட்டு போ…!” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் திரும்பி வேகநடை போட்டு சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு தான் கனவுலகில் இருந்து வந்தவள் போல உடலை சிலிர்த்து கொண்டவள் ‘இப்ப என்னத்துக்கு இப்படி அவன்கிட்ட பேச வந்தேன்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டவள் சேர்மன் அறையை நோக்கி நடந்தாள்.

அவளுக்கு அவன் பெயர் தெரிந்தே ஆக வேண்டும் என்று தோன்ற, தந்தையிடம் கேட்கலாம் என்று நினைத்து அறையில் காலடி எடுத்து வைக்கும் முன் “அந்த ஷர்வஜித் இப்படிப் பேசிட்டுப் போறான் ராகவன். நீங்க என்ன ஏதுன்னு கேட்க மாட்டேங்களா?” என்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார் கருணாகரன்.

‘ஓ! அவன் பேரு ஷர்வஜித்தா? சூப்பர் பேர்தான்’ என்று நினைத்தபடி நின்றவளை, “இந்த நேரம் நீ இங்கே என்ன பண்ற?” என்று அதட்டலுடன் கேட்டார் கருணாகரன்.

“உங்களைப் பார்க்க தான்பா…” என்று சொன்னவள் அப்போது தான் அவரின் முன் தான் வந்து நின்றதை நன்றாக உணர்ந்தாள்.

“அப்பா எல்லாம் வீட்டுல. கிளாஸ் டைம்ல இல்லை. போ உன் கிளாஸ்க்கு…” என்று அதட்ட, கல்லூரி நேரத்தில் இப்படி வருவதே தந்தைக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் இங்கே வந்த முட்டாள் தனத்தை நொந்து கொண்டே தன் வகுப்பறைக்குச் சென்றாள்.

ஆனாலும் விடாது மேலும் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் மாலையில் வீட்டிற்குச் சென்றதும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த தந்தையிடம் சென்று “அப்பா இன்னைக்கு உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்தாரே… அவர் யாருப்பா?” என்று கேட்டாள்.

வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக இவ்வாறு கேள்வி கேட்ட மகளை விநோதமாகப் பார்த்த கருணாகரன் “என்னைப் பார்க்க எத்தனையோ பேர் வர்றாங்க. நீ யாரை கேட்குற?” என்று பதிலுக்குக் கேட்டார்.

“அதான்பா காலையில் கூட உங்க ரூம்க்கு நான் வந்தப்ப திட்டுனீங்களே? அப்போ வந்துட்டுப் போனாரே? அவரைப் பத்தி தான் கேட்டேன்…”

மகள் அப்படிக் கேட்டதும் கூர்மையாக அவளைப் பார்த்தவர் “அவனைப் பத்தி தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” என்று கேட்டார்.

இதற்கு என்ன சொல்லுவாள்? ஏதோ ஆர்வத்தில் கேட்க வந்துவிட்டாள். இப்போது தான் தந்தையிடம் அப்படிக் கேட்டதே அதிகப்படி என்று தோன்ற “ஒன்னும் இல்லைப்பா. சும்மா தான்…!” என்று மென்று விழுங்கினாள்.

“தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்காதே! போ… போய்ப் படிக்கிற வேலையைப் பார்…” என்று மகளை அதட்டி உள்ளே அனுப்பி வைத்தார்.

மகள் உள்ளே சென்றதும் ‘அவனே பெரிய தலைவலியை தந்துட்டு இருக்கான். அவனைப் பத்தி போய் விசாரிக்க வந்துட்டா’ என்று பல்லை கடித்துப் புலம்பி கொண்டிருந்தார்.

எப்பொழுதும் தேவையில்லாமல் மகளைக் கடிந்து கொள்கிறவர் இல்லை கருணாகரன். செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுப்பவர், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பார்.

இப்போது மகள் கேட்ட கேள்வி அதிகப் படியாகத் தோன்ற கண்டித்து அனுப்பி விட்டார்.

தன் அறைக்குச் சென்ற விதர்ஷணா ‘மட்டி மட்டி! அப்பாகிட்ட போய் இப்படியா கேட்பேன்?’ என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

‘ஆமா அவனைப் பார்த்தாலும், அவனை நினைச்சாலும் அப்படியே மந்திரிச்சு விட்டது போலத் தான் நீ திரியுற’ என்று அவளின் மனசாட்சி கேலியில் இறங்கியது.

அவனைப் பார்த்ததில் இருந்து நான் சரியே இல்லை என்று தான் தோன்றியது. அவன் பெரிய ஜித்தனா இருப்பான் போல என்று நினைத்தவளுக்கு அப்போது தான் அந்தப் பேரை கவனித்தாள்.

ஆமா அவன் பேரு ஷர்வஜித் தானே? அதான் என் மனசுல ஜித்து வேலை செய்றான் ஜித்தன் என்று அன்றில் இருந்து அவனின் பெயரை மனதிற்குள் ஜித்தாவாக்கி கொண்டாள்.

அதற்குப் பிறகு அவள் ஷர்வாவைப் பார்த்தது அவள் வீட்டில் தான். மூன்று நாள் கழித்து அவள் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த போது அவளின் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவனை அங்கே பார்த்ததும் வியந்து அவனிடம் ஆர்வமாகப் பேச போனாள்.

வெளியே வந்து கொண்டிருந்தவன் தன் எதிரே வந்த விதர்ஷணா தன்னிடம் ஏதோ பேச வருவதைக் கவனித்தான்.

ஆனால் கூர்மையாக அவளை ஒரு பார்வை பார்த்தவன் மேலும் நிற்காமல் அவளைக் கண்டு கொள்ளாதது போல அவளைத் தாண்டி சென்று தன் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்று விட்டான்.

அவன் செய்கையில் முகத்தில் அடித்தது போல அதிர்ந்து விழித்து நின்று விட்டாள்.

பின்பு சென்ற அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைய, “கண்ணை எங்க வச்சுக்கிட்டு நடந்து வர்றமா?” என்று கோபமாகக் கேட்டார் கருணாகரன்.

திரும்பி பார்த்துக் கொண்டே வந்தவள் அவரின் மோதி நின்றிருந்தாள்.

“அது சும்மா பா…” என்று வெளியே கை காட்டிக் கொண்டே உளறி கொட்டினாள்.

“ஓ…! வந்துட்டு போன ஆளை கேட்குறியா? அது வேற ஒரு வேலையா வந்த ஆளு. நான் பேசி அனுப்பிட்டேன். நீ உள்ளே போ…!” என்றவர் தன் வேலையைப் பார்க்க சென்றார்.

அன்று தான் விதர்ஷணா அவனைக் கடைசியாகப் பார்த்தது. அதற்குப் பிறகு ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று தான் பார்த்திருக்கிறாள்.

தந்தை அவனை வேறு வேலை விஷயமாக வந்ததாகச் சொல்லவும், ஏதோ அலுவல் வேலை தான் என்று அவளே நினைத்து கொண்டாள்.

அதனால் தான் அவன் போலீஸ் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டாள்.

தன் மனதை பார்த்ததுமே பாதித்தவன் என்பதால் தான் இன்று தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியவன் என்று தெரிந்ததும் சற்றும் யோசிக்காமல் அணைத்திருந்தாள்.

கடந்த ஒரு வருடத்தில் அவனைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் அல்லாடி இருக்கின்றாள்.

அவ்வப்போது அவளின் நினைவில் அவன் வந்து போவான். ஆனால் அதற்கு மேல் அவனைத் தான் எப்படி யோசிக்கிறோம் என்று தெரியாமல் மனதின் மூலையில் போட்டு வைத்திருந்த நினைவுகள், இன்று கண்டதும், கிளர்ந்து எழுந்தன.

அதனுடன் இன்று தந்தையைப் பற்றிப் பேசும் போது அவன் இகழ்வாகச் சிரித்ததும் ஞாபகத்தில் வந்தது.

‘அப்பாவை பத்தி பேசியதும் ஏன் அப்படிச் சிரித்தான். அதுவும் அவன் ஒரு போலீஸ். அவனுக்கும் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று யோசித்துப் பார்த்தவளுக்கு ஒன்றும் பிடி படாமல் போக, இது என்ன விவகாரம்னு தெரியலையே என்று புலம்ப ஆரம்பித்தாள்.

அந்தக் குழப்பம் ஒரு புறம் இருந்தாலும், அந்த ஜித்தனின் நினைவும் அவளை விட்டு சிறிதும் அகல வில்லை.

ஷர்வாவை மனதில் ஏற்ற ஆரம்பித்தவளுக்கு இன்னும் ஒன்று தெரியவில்லை.

அது ஷர்வஜித்தை பற்றி நினைத்தாலே கருணாகரன் கொதித்தெழும் மனநிலையில் இருக்கிறார் என்று.

ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஷர்வஜித்தின் மேல் இன்னும் வெறுப்பாக இருக்கிறார் என்றும் மகளான விதர்ஷணா அறியவில்லை.