பனியில் உறைந்த சூரியனே – 19

அத்தியாயம் – 19

“ஸ்கூல் பெயரை பேப்பரில் வர வைத்து விடுவதாக ஷர்வஜித் சொல்லிவிட்டு போகவும் பெரியப்பா ரொம்பப் பயந்து போனார். பேப்பரில் ஸ்கூல் பெயரைப் போட்டு தன் மானத்தை வாங்கப் போவதாக எண்ணி இரண்டு நாள் தனியாக மனதிற்குள் புலம்பியிருக்கிறார். மூன்றாவது நாளில் ஷர்வஜித் சொன்னது போலப் பேப்பரில் பெயர் வந்தது…”

“எப்படி அண்ணா வந்தது? அந்த டீச்சருக்கு என்ன மாதிரியான பனிஷ்மென்ட் கொடுத்தார்?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“நம்ம ஸ்கூல் பத்தி தப்பா எதுவும் வரல. ஆனால் நம்ம ஸ்கூல் பெயரை போட்டு, நம்ம ஸ்கூல் வாத்தியார் பலமான விபத்துக்குள்ளானார் என்ற செய்தி பேப்பரில் வந்தது…” என்றான் தேவா.

அதைக் கேட்டதும் விதர்ஷணா “இவ்வளவுதானா?” என்று சோர்ந்து போய்க் கேட்டாள். அவளுக்கு விஷயம் சப்பென்று போனதாக இருந்தது. இன்னும் ஏதோ பெரிதாக நடந்துதான் அப்பா கோபமாக இருக்கிறார் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, இந்த விஷயம் அவள் நினைத்தது போல் ரொம்பப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

“ஆமா தர்ஷினி…! அவ்வளவுதான் பேப்பரில் வந்தது. ஆனால் இரண்டு நாளும் எந்த மாதிரி நம்ம ஸ்கூல் பெயர் பேப்பரில் வருமோ? நம்ம கெளரவம் என்ன ஆகுமோ? ஸ்கூல் பெயரை நாறடித்து விடுவானோ என்ற நினைப்பு இரண்டு நாட்கள் பெரியப்பாவை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது. அந்த மன உளைச்சல் தான் இப்பொழுதும் பெரியப்பாவை சிறிது கூட அவரின் கோபத்தையும், ஆத்திரத்தையும் குறைக்காமல் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது…” என்றான் தேவா.

“ஆனாலும் நம்ம அப்பாவுக்கு ரொம்பத் தான் கோபம் வருதுண்ணா. இந்தக் கோபத்தை அந்த வாத்தியாருக்குப் பனிஷ்மென்ட் கொடுப்பதிலும் அப்பா காட்டியிருக்கலாம். அதைச் செய்யாமல் விட்டது எனக்குப் பிடிக்கலைண்ணா…” என்றாள்.

“புரியுது தர்ஷி. ஆனா அதற்காகப் பெரியப்பாவை குறை சொல்லாதே! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். பெரியப்பா இப்படித்தான்! அது அவரின் இயல்பு! ஷர்வஜித்துக்கு ஒரு விதமான இயல்பு இருக்கும்னா, பெரியப்பாவுக்கு இப்படி. அவ்வளவுதான்! அதை நீ பெரிதுபடுத்தாதே…!” என்று தேவா கண்டிப்புடனே சொன்னான்.

“சரிண்ணா, நான் அப்பாவை ஒன்னும் சொல்லலை, விடு…!” என்ற விதர்ஷணா “அந்த வாத்தியாருக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“அந்த ஆள் இப்போ நடக்க முடியாமல் இருக்காராம். நின்னு பாடம் நடத்த முடியாத அளவு போனதால், இப்போ ஒரு ஜெராக்ஸ் கடை வைத்து நடத்துவதாகப் பெரியப்பா சொன்னார். ஷர்வஜித் தான் விபத்துக்குக் காரணம். இனி ஒரு முறை பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்கக் கூடாதுன்னு சிவியரா தண்டிக்கணும்னு இப்படிச் செய்திருப்பதாகப் பெரியப்பாவின் எண்ணம். எனக்கும் அதுதான் சரியாக இருக்கும்னு தோணுது. ஏன்னா அன்னைக்கு உன்னைத் துரத்தி வந்தவங்களைப் பயங்கரமாக அடித்தார்னு அங்கிருந்த கான்ஸ்டபிள் சொன்னார். அப்படி இருக்கும் பொழுது ஸ்கூல் பிள்ளைகள் மேல் கையை வைத்தவன் நிலையை நீயே யோசித்துப் பார்…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு “என் ஜித்தா கிரேட்ல ண்ணா…!” என்று பெருமையாகக் கேட்டாள்.

“ஆமா, ஆமா…! கிரேட் தான்! நீ மறுபடியும் என்கிட்ட உன் ஜித்தா புராணம் ஆரம்பிச்சுறாதே! எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. நான் அதைப் பார்க்கணும். இப்போ போனை வை…!” என்றான்.

“ஆமா, உனக்கு என் ஜித்தா மேல பொறாமை. அதனால் தான் இப்படி ஓடுற…” என்று கேலியாகச் சொன்னாள்‌.

“எனக்கு வேற வேலை இல்லை பார். உன் ஜித்தா மேல பொறாமைப்படத் தான் எனக்கு நேரம் இருக்கு. காதல் வேகத்தில் உளராமல் அண்ணன் கிட்ட பேசுறகிறதும் நினைவிருக்கட்டும்…” என்று சிறிது கண்டிப்பாகவே சொல்லிவிட்டுப் போனை வைத்தான் தேவா.

“அண்ணன் கிட்ட ரொம்பத் தான் வாயாடி விட்டேனோ?” கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொண்ட விதர்ஷணா, பின்பு அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டுக் கொண்டு “நீ இன்னும் எத்தனை பேச வேண்டி இருக்குமோ? இது கொஞ்சம் தான். பரவாயில்லை விடு…!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

சில நாட்களாகத் தெரிந்துகொள்ளக் காத்திருந்த ஒரு விஷயத்தை இப்பொழுது தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் தந்தையின் கோபத்திற்கான காரணத்தை நன்றாக அறிந்து கொண்டவள், இனி எப்படியும் தன்னால் சமாளிக்க முடியும் என்று எண்ணிக் கொண்டாள்.

அதனால் அந்த விஷயத்தை அதோடு விட்டுவிட்டு அடுத்து இனி முக்கியமாக இருக்கும் விஷயத்திற்கு அவளின் மனம் தாவியது. அந்த முக்கியமான விஷயம்! இனி ஜித்தாவை எப்படி எங்கே காண்பது? என்பது தான். காலையில் பார்க்கப்போவதை தந்தை கண்டுபிடித்து விட்டார். மாலைப் பொழுதில் தான் இனி எங்காவது சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அந்த நொடியிலிருந்து அவனை எங்கே சந்திப்பது என்ற எண்ணம் மட்டுமே அவளை வட்டமிட ஆரம்பித்தது


விடி விளக்கு போல மெல்லிய ஒளி மட்டும் வந்துகொண்டிருந்த அந்த அறையில் தாங்கள் ஏன் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே ஒருவரை ஒருவர் கேள்வியுடன் நிழல் உருவமாகத் தெரிந்தவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள் அந்த நால்வரும்.

சில நிமிடங்களில் சுதாரித்த ஒருவன் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த ஆளிடம் வந்து “யாருய்யா நீ?” என்று கேட்டான்.

அவன் பதில் சொல்லாமல் அமைதியாக அந்த வெளிச்சத்திற்குப் பழக்க பட்டவன் என்பதால் அந்த நால்வரையும் நன்றாகப் பார்க்க “நம்மளை எதுக்குடா இங்கே அடைச்சு வெச்சிருக்காங்க? ஏதாவது உனக்குத் தெரியுமா? தெரிஞ்சா சொல்லு…!” என்று கேட்டான்.

இரண்டு நாட்களாக அங்கு அடைபட்டிருந்த ஜெகன் வெறுமையாகக் கேள்வி கேட்டவனைப் பார்த்து வைத்தான்‌. அவனின் அமைதியை பார்த்து “நீ என்ன செவுடா? பதில் சொல்லுடா…!” என்று அதட்டினான்.

அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் இருக்க, “என்கூட வந்து மாட்டிக்கிட்ட நீங்களெல்லாம் யார்? அதையாவது சொல்லுங்க! இந்த இடம் யாருது?” என்று தன்னுடன் இருந்த மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

“யார் இடம்னு எங்களுக்கும் தெரியாம தான உட்கார்ந்து இருக்கோம். எங்க கிட்ட கேள்வி கேட்டா எப்படித் தெரியும்?” என்றான் அந்த மூவரில் ஒருவன்.

“நாம எதுக்காக இங்கே அடைக்கப்பட்டு இருக்கோம்? நம்மை யார் இங்கே கொண்டு வந்தது? எதுவுமே தெரியல! என்னை எவனோ ஒருவன் என் மூக்கில் ஒரு துணியை வைத்து அழுத்தினான். அதுக்குப் பிறகு பார்த்தா இங்க இருக்கேன். நீங்க எல்லாம் எப்படி வந்தீங்க?” என்று கேட்டான்.

“நானும் அப்படித்தான். என் மூக்கிலும் ஏதோ துணியை வைத்து எவனோ அமுக்கினான். கண் விழித்துப் பார்த்தால் இங்கே இருக்கேன்…” என்றான்.

அவன் சொன்னதற்கு மற்றவர்களும் ஆமாம் சொல்ல, ஒவ்வொருவருக்கும் மனதில் பயம் கவ்விக்கொண்டது.

ஒருவன் அறையைச் சுற்றி நோட்டமிட்டான். மீண்டும் ஜெகனிடம் வந்தான்.

“நீயும் எங்க கூடத் தான் கடத்தப்பட்டியா?” என்று கேட்டான். அவன் இல்லை என்னும் விதமாகத் தலையை அசைக்க, “அப்போ எப்போ வந்தே?” என்று கேட்டான். தன் கையைத் தூக்கி இரண்டு விரல்களை மட்டும் காட்டினான். “இரண்டு நாளா?” என்று அதிர்ந்து கேட்டான் அவன். ‘ஆமாம்’ என்னும் விதமாகத் தலையசைத்த ஜெகன் அதன் பிறகு கண்ணை மூடி திரும்பப் படுத்துக் கொண்டான்.

ஒருவன் எழுந்து அறையின் கதவை மெல்லிய ஒளியில் மெதுவாகக் கண்டறிந்து அதன் பக்கம் சென்று விடாமல் கதவை தட்டினான். “யோவ்…! யார்யா அது? என்னைக் கடத்திட்டு வந்தது?” என்று கத்தினான்.

அவனின் கத்தலுக்கு ஒரு பதிலும் இல்லாமல் போகத் தளர்ந்து அமர்ந்தான். மணி துளிகள் மெல்ல கரைய அறையின் கதவு லேசாகத் திறக்கப்பட்டது. கூடவே இரண்டு காலடி ஓசைகள் கேட்டன.

உள்ளே வந்த இருவரையும் அவர்கள் அடையாளம் காண முயன்றார்கள். கதவை திறந்ததில் வெளிச்சம் திடீரென அதிகம் வரவும் கண் கூசியது. அதனால் கண்ணைக் கசக்கி விட்டுக்கொண்டு இருவரையும் பார்க்க முயன்றார்கள்.

அப்பொழுது “வேலவன் அண்ணா, ஒருத்தனை மட்டும் விட்டுவிட்டு மற்ற நான்கு பேரையும் நாம அங்கே கொண்டு போவோம். முதலில் ஜெகனை கூட்டிட்டு போங்க…!” என்றான்.

“சரி தம்பி…” என்ற வேலவன், ஜெகனின் அருகில் வந்து “டேய்…! எந்திரி‌…!” என அதட்டினார்.

அவன் மெல்ல எழுந்து அமர்ந்து “நான் வீட்டுக்குப் போகலாமா சார்?” என்று கேட்டான்.

“வீட்டுக்குத்தானே? போகலாம்! போகலாம்! எந்திரி முதலில்…!” என்று அதட்டினார்.

அவன் எழுந்து நிற்கவும் அவனின் கையோடு தன் கையை நன்றாக இறுக்கிப் பிணைத்துக் கொண்டு அங்கிருந்து அவனை அழைத்துச் சென்றார். அவர்கள் நடந்துகொண்டு இருக்கும்பொழுதே “யாருடா நீங்க? எதுக்குடா எங்களை இங்கே கொண்டுவந்து அடைச்சு வெச்சு இருக்கீங்க?” என்று நால்வரில் இருந்து ஒருவன் கத்தினான்.

“என்ன சார், சவுண்டு ஓவரா இருக்கு? என் கையில் என்ன இருக்குன்னு பார்த்துட்டு அப்புறமா கத்துங்க…!” என நிதானமாகச் சொன்னான் கவியுகன்.

உடனே அவனின் கையை நால்வரும் பார்க்க, அவனிடமிருந்த துப்பாக்கியை பார்த்து பயந்தே போயினர். கத்திக் கொண்டிருந்தவனின் குரல் மீண்டும் அவனுக்குள்ளேயே அடங்கிப் போனது.

ஜெகனை பக்கத்து அறையில் விட்டு வந்த வேலவனைப் பார்த்ததும் இப்பொழுது அடையாளம் கண்டு கொண்ட தெரசமா காப்பகத்தினைச் சேர்ந்தவன் “போலீஸ்…” என்று சத்தம் அதிகம் வராமல் மெல்லிய குரலில் முனங்கினான். அது அருகில் இருந்த மூவருக்கும் கேட்க, இன்னும் ஒடுங்கி போய் அமர்ந்தனர்.

அவனின் முனங்கல் வேலவனின் காதிலும் விழ, அவனை முறைத்துக் கொண்டே அருகில் இருந்தவனை “நீ எழுந்திருடா…!” என்று அவனை அழைத்தார்.

போலீஸ் என்று தெரிந்ததும் மறு பேச்சுப் பேசாமல் எழுந்து நின்றான். “ஒவ்வொருத்தரா அமைதியா அவர் கூடப் போகணும். ஏதாவது கிறுக்குத் தனம் செய்தா உங்க உயிர் உங்களுக்கு நிரந்தரம் இல்லை. இந்த வீட்டில் இன்னும் நாலு பேர் என்னைப் போலத் துப்பாக்கியை ரெடியா வச்சுக்கிட்டு நிக்கிறாங்க. நான் உங்க கண்ணுக்கு தெரியுறேன். அவங்க தெரிய மாட்டாங்க. ஒரு ஸ்டெப் எங்களுக்கு மாறா வச்சாலும் அவங்க தோட்டாக்கள் உங்களிடம் நலம் விசாரிக்க வரும்…” என்று கவி மிரட்டலாகச் சொல்ல, நால்வரின் முகத்திலும் உயிர் பயம் வந்தது.

உயிர் பயத்தில் ஒவ்வொருவரும் அமைதியாக வேலவனுடன் சென்றனர். கடைசியாகத் தெரசமா காப்பகத்தில் வேலை செய்யும் நாற்பது வயதான ராஜ் மட்டும் எஞ்சி இருக்க, “விசாரணையை ஆரம்பிச்சிட்டியா கவி?” என்று கேட்டபடி வேகமாக உள்ளே வந்தான் ஷர்வஜித்.

“வா ஷர்வா! இப்போ தான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். நீயே வந்துட்ட. ஆரம்பி! சார் கொஞ்சம் ஓவரா துள்ளுகிறார். அதையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…!” என்றான்.

“அப்படியா ராஜ்?” என்று கேட்டு நிதானமாக அவனின் புறம் திரும்பிய ஷர்வா “இந்நேரம் எதுக்கு நீ இங்க இருக்கன்னு உனக்குப் புரிஞ்சிருக்கணுமே? என்ன புரிஞ்சுக்கிட்ட?” எனத் தன் விசாரணையை ஆரம்பித்தான்.

“நான் ஒன்னும் புரிஞ்சுக்கலையே சார். என்னை எதுக்கு இப்படிப் பிடிச்சுட்டு வந்துருக்கீங்கனு தான் தெரியாம முழிக்கிறேன்…” என்றான்.

“ஓ…! அப்படியா? அப்போ நீ ஒரு தப்பும் பண்ணலை. தப்பு செய்யாத உன்னை இங்க கொண்டு வந்துட்டோம். அப்படித்தானே?” எனக் கேட்டான்.

“உண்மை அது தான் சார். நீங்க காப்பகம் வந்தப்போ என்ன கேட்டீங்களோ அது மட்டும் தான் எனக்குத் தெரியும். நீங்க சுய உணர்வோட கூட்டிட்டு வந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பேன். அதை விட்டு மயக்க மருந்து கொடுத்து என்னை இப்படி எங்கயோ அடைச்சு வைச்சுருக்கிறது ஏன்னு தான் புரியலை…” என்றான்.

அவனின் தெளிவான பேச்சும், நிதானமாக எதிர் கேள்வி கேட்பதும் ஷர்வஜித்தின் புருவத்தை உயர வைத்தது.

ஜெகனிடம் போல அவ்வளவு சீக்கிரம் இவனிடம் பதில் வாங்க முடியாது என்று நன்றாகவே புரிந்தது. அந்தப் புரிதல் ஷர்வாவிடம் ஒரு நிதானத்தைக் கொண்டு வர, “கவி, அந்தச் சேரை இங்க எடுத்துப் போட்டு நீயும் உட்கார். சார்க்கிட்ட நாம கேள்வி கேட்க முடியாது. சார் தான் நம்மகிட்ட கேள்வி கேட்பார். நீயும், நானும் சரியா பதில் சொல்லணும். உட்கார்…!” என்றான்.

இருக்கையை ஷர்வாவின் அருகே எடுத்துப் போட்டு அமர்ந்த கவி “துப்பாக்கி ரெடியா இருக்கா ஷர்வா? சோதிச்சு பார்க்க?” எனக் கேட்டான்.

“இல்ல கவி இன்னைக்குத் துப்பாக்கி தேவைப் படாதுன்னு நினைக்கிறேன். நான் இன்னைக்கு வாயால் மட்டும் பேசினா போதுணும்னு முடிவு பண்ணிட்டேன்…” என்றான்.

ஷர்வாவின் பதிலைக் கேட்டு அவனை ஆச்சரியமாகப் பார்த்தான் கவியுகன்.

அவனை மெதுவாகத் திரும்பிப் பார்த்த ஷர்வா சங்கேத மொழியில் ஏதோ சமிக்ஞை செய்தான்.

அதைக் கண்டு கொண்ட கவியுகன் அதன் பிறகு ஒன்றும் அறியாதவன் போல் அமைதியாகத் தன் கைபேசியை எடுத்து வைத்துக் கொண்டு விளையாடுவது போல், கைபேசியில் சப்தத்தைக் கூட்டி வைத்து விளையாட ஆரம்பித்தான்.

அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ளாத ஷர்வா “அப்புறம் சொல்லு ராஜ்! குழந்தை காணாம போனதிற்கும் உனக்கும் சம்பந்தமும் இல்லைனு சொல்ற அப்படித்தானே?”

“ஆமாம் சார். அதைத்தானே திரும்பத் திரும்ப நீங்க விசாரணை செய்யும்போது எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்…” என்றவனின் குரலில் லேசான சலிப்பும் வந்து போனது.

“ரொம்பச் சலிச்சுக்கிறியே ராஜ்? அப்போ நீ உண்மையைச் சொல்ல மாட்டனு உறுதியாகிருச்சு. உன்னை அடிக்காம உண்மையை வர வச்சுருவோம்னு பார்த்தேன். ஆனா நீ அடிச்சா தான் வழிக்கு வருவ போல?” என்றவன் கவியின் புறம் திரும்பி “இவனை எங்க அடிக்கலாம் கவி?” எனக் கேட்டான்.

அடி பற்றிப் பேசியதும் அவனிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்று பார்த்தான். அனைத்திற்கும் தயாராக இருக்கும் நிலை ராஜ் முகத்தில் தெரியவும் “கவி…” என்றான்.

“இதோ ஷர்வா. எல்லாம் தயாரா இருக்கு…” என்று கவியுகன் பதிலளித்தான்.

அவர்கள் பேசுவது புரியாமல் அடி வாங்க தயாராக இருந்த ராஜ், திடீரென அவனின் மனைவியின் குரல் அந்த அறையில் கேட்கவும், அதிர்ந்து அறையைச் சுற்றும், முற்றும் சுற்றி பார்த்தான்.

“இங்கே பார் ராஜ். உன் வொய்ப் இங்கதான் இருக்காங்க…” என்று கவியின் கையிலிருந்த கைபேசியைக் காட்டினான்.

கவி தன் கைபேசியை ராஜ் முன்பு நீட்டி காட்டினான். காணொளி இணைப்பின் மூலம் தெரிந்த மனைவியைப் பார்த்து விட்டு மீண்டும் ஷர்வஜித்தை பார்த்த ராஜ் “என்ன சார்? போயும், போயும் என்னை அடிக்க உங்களுக்கு இந்த வழி தான் கிடைத்ததா?” என்று இளக்காரமாகக் கேட்டான்.

அவனின் இளக்காரத்தைக் கண்டுகொள்ளாமல் “முதலில் உன் மனைவியிடம் பேசு! அப்புறமா என்னைக் கேலி செய்யலாம்…” என்று ஷர்வா சாதாரணமான குரலில் சொல்ல,

“யோவ்…! எங்கய்யா போய்த் தொலைஞ்ச? நம்ம புள்ளைய சாயந்தரத்திலிருந்து காணோம்யா. உன்னையும் காணோம். நான் எப்படி எங்க போய்த் தேடுறதுன்னு தெரியாம அல்லாடிகிட்டு இருந்தா நீ எங்ககிட்ட தான் இருக்கன்னு ஒரு ஆள் வந்து சொல்லி, உன்கிட்ட பேச சொல்லி மிரட்டுறார். நீ ஏதோ தப்பு செய்தியாமே? என்னய்யா தப்பு செய்த?

நம்ம பிள்ளையையும் இவங்க தான் கடத்திட்டாங்களானு இவங்ககிட்ட கேட்டா, நீ உன் புருஷன்கிட்டயே உன் பிள்ளையைப் பற்றிக் கேட்டுக்கோன்னு சொல்றாங்க. என்னய்யா பண்ணி தொலைஞ்ச? நம்ம பிள்ளை எங்கய்யா?” என அழுது கொண்டே கேட்ட மனைவிக்குப் பதில் சொல்ல கூட முடியாமல் ஷர்வாவை திகைப்புடன் பார்த்தான்.

“என்னை ஏன் பார்க்கிற ராஜ்? உன் பிள்ளை எங்கன்னு நீயே உன் மனைவிக்குப் பதில் சொல்…!” என்று நிறுத்தி நிதானமாகச் சொன்னவனை இப்பொழுது கண்ணில் பயத்துடன் பார்த்தான் ராஜ்.

அதற்குள் ராஜின் மனைவி அங்கே இன்னும் பேசிக் கொண்டிருக்கக் கைபேசியின் புறம் திரும்பியவன், “நம்ம பிள்ளை பத்திரமா வந்திருவான். நீ அழுகாம இரு…!” என்று அவன் சொல்லி முடித்ததும் தொலை தொடர்பு அந்தப் பக்கம் துண்டிக்கப் பட்டது.

கவி தன் கைபேசியைத் திருப்பி மீண்டும் விளையாடுவது போல அதில் கவனம் வைக்க, ஷர்வா எந்த உணர்ச்சியும் இல்லாமல் ராஜை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என் பிள்ளை என்ன சார் தப்புச் செய்தான்? அவனை ஏன் பிடிச்சீங்க?” என லேசாக நடுங்கிய குரலுடன் கேட்டான்.

“காப்பகத்து குழந்தைங்க என்ன தப்பு செய்தாங்க ராஜ்?” அமைதியாகத் திருப்பிக் கேட்டான் ஷர்வா.

“அவங்களும் என் பிள்ளையும் ஒன்னா சார்? அதுங்க ஏன்னு கேட்க ஆளில்லாத அநாதை பிள்ளைங்க. என் பிள்ளைக்கு அப்பன் நான் கேள்வி கேட்பேன் சார்?” என்று வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென “ஆ…! அம்மா…!” என்று கத்தியபடி மல்லாக்கில் சென்று விழுந்தான்.

“என்ன கவி? சார் வீராவேசமா பேசிகிட்டு இருந்தார். அதைப் போய் இப்படித் தடை பண்ணிட்ட? இன்னும் கொஞ்சம் வாங்கிட்டு அப்புறம் கொடுத்துருக்கலாமே?” என ஷர்வா கேட்க,

“நீ தான் இன்னைக்கு அடிக்க மாட்டேன்னு சொல்லிட்ட. என்னால் இவன் இப்படிப் பேசுறதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. அதான் ஒன்னு கொடுத்தேன். இன்னும் ஒன்னு கொடுத்துக்கணும் போல இருக்கு…” என்று கோபத்துடன் சொல்லிய கவியுகன் தன்னிடம் உதை வாங்கியதில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே உருண்டு கொண்டிருந்தவனை உக்கிரமாகப் பார்த்தான்.

அவனின் கோபத்தைப் பார்த்துப் புன்சிரிப்பு ஒன்றை சிந்திய ஷர்வா “உட்கார் கவி! இன்னைக்கு முழுவதும் நமக்கு நல்ல வேட்டை இருக்கு. வெளுத்து வாங்கிருவோம். ஏன் இப்பயே எனர்ஜியை வேஸ்ட் பண்ற? இப்போ பார்! ராஜ் டான் டான்னு பதில் சொல்லுவான்…” என்று கவியிடம் சொல்லியவன் “என்ன ராஜ் சொல்லுவ தானே?” என்று ராஜிடம் கேட்டான்.

அவன் இன்னும் படுத்துக்கொண்டிருக்க “என்னடா விட்டா அப்படியே படுத்து தூங்கலாம்னு ஐடியாவா? எழுந்து உட்கார்ந்து பதில் சொல்லுடா…!” என்று அதட்டினான் கவியுகன்.

“ஆமா ராஜ், சீக்கிரம் எழுந்துரு! எங்க கவி இன்னைக்கு உக்கிரமா இருக்கான். அப்புறம் சேதாரம் ரொம்ப ஆனா நான் பொறுப்பில்லை…” ஷர்வா சிறு சிரிப்புடன் சொல்ல,

“நீ என்னைக் கேலி பண்ண ஆரம்பிச்சிட்டியா?” என்ற கவி அமைதியாக மீண்டும் கைபேசியை நோண்ட ஆரம்பித்தான்.

அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே மெல்ல எழுந்து அமர்ந்த ராஜ் “என் பிள்ளையை விட்டுங்க சார்…” என்றவனின் குரலில் பிள்ளையைப் பற்றிய கவலையுடன் அடியின் வேதனையும் தெரிந்தது.

“என்ன ராஜ் நீ? உன் பிள்ளை மேல மட்டும் குறியா இருக்க? நீ யாருக்கும் தெரியாமல் கடத்திய தெரசமா காப்பக பிள்ளைகள் எங்க இருக்காங்கனு சொல்லு. உன் பிள்ளை உன் வீடு தேடி வருவான்…” என்றான்.

“எனக்குக் காப்பக பிள்ளைகளைப் பற்றி ஒன்னும் தெரியாது சார். நான் கடத்தலை…” என்று ராஜ் சொல்ல,

இருக்கையில் இருந்து எழுந்த ஷர்வா, ராஜையும் எழுந்து நிற்க சொல்லி கையைக் காட்டினான். அவன் எழுந்து நின்றதும், அவ்வளவு நேரம் கட்டுபடுத்திக் கொண்டிருந்த கோபத்தை எல்லாம் தன்னிடம் கொண்டு வந்து முழுவேகத்துடன் அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான். ராஜ் அலறிக் கத்தினான்.

அதைக் கவி மெல்ல தலையை நிமிர்த்திப் பார்த்து விட்டு “விரதத்தை முடிச்சுக்கிட்டியா ஷர்வா?” என வினவினான்.

“மயிலு இறகு போட மாட்டேன்னு அடம் பிடிக்குது கவி. அதான் பிடுங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ அடுத்ததை ஏற்பாடு பண்ணு…!” என அவனுக்குக் கட்டளையிட்டு விட்டு ராஜின் புறம் திரும்பி,

“ஒன்னும் தெரியாம உன்கிட்ட வந்து வெட்டி அரட்டை பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சியா? நீ தான் செய்தன்னு உறுதி படுத்திக்கிட்டு தான் உன்னைத் தூக்கியிருக்கோம். இப்போ அந்தப் பிள்ளைகள் எங்க இருக்காங்கனு சொல்லலைனா உன் பிள்ளை இனி உனக்கு இல்லை…” என்று மிரட்டினான்.

“என்ன சார் ரௌடி மாதிரி என் பிள்ளையை வச்சுப் பேரம் பேசுறீங்க? போலீஸ் மாதிரி நடந்துக்கோங்க சார்…” அப்பொழுதும் அடங்காமல ராஜ் திமிறினான்.

“நான் எப்படி நடந்துக்கணும்னு நீ எனக்குப் பாடம் நடத்தாதே! ஒரு பிள்ளை காணாம போனா அதோட வலி என்னனு உனக்குத் தெரியணும். அதுக்காக மட்டும் தான் இப்போ உன் பையன் எங்க கையில் இருக்கான். நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரலைனா அப்புறம் எப்பயும் உன் பிள்ளை உனக்குக் கிடைக்காமல் செய்துருவேன்…” என்று ஷர்வா சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற தீவிரத்துடன் சொன்னான்.

“இல்ல சார், எனக்குத் தெரியாது…” என்று மீண்டும் ராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு குத்து விட்டான். இந்த முறை வயிற்றில் விழுந்த குத்தில் அவன் மடங்கி அமர போக, அவனை அமரவிடாமல் சட்டையைப் பற்றி நிறுத்திய ஷர்வா “இனி உன் வாயில் இருந்து உண்மை மட்டும் தான் வரணும்…” என்றவன் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழுந்தது.

அடித்தும் அவன் வாயை திறக்காமல் இருக்க “கவி, அதைக் காட்டு! அப்போ தான் பதில் வரும் போல…” என ஷர்வா சொல்ல, கவி தன் கைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை ராஜின் முகத்திற்கு நேராக எடுத்துக் காட்டினான்.

அந்தப் புகைப்படத்தில் பத்து வயது சிறுவன் தூங்கி கொண்டிருப்பது போல ஒரு காரில் மயக்கத்துடன் படுத்திருந்தான். அதைக் கண்ட ராஜ் “ஐயோ…! என் பிள்ளை…” என்று அலற,

“நீ இப்படி உன் பிள்ளையை நினைச்சு அலற, அலற அந்தக் காப்பக பிள்ளைங்க இப்ப எங்க எப்படி அலறுறாங்களோனு நினைச்சு, நினைச்சு எனக்கு ஆத்திரம் அதிகம் வருது ராஜ். என்கிட்ட அடி வாங்கிச் சாகாம உண்மையைச் சொல்லு! குழந்தைகள் எங்கே? உன்னைக் கடத்த சொன்னது யார்?” எனக் கேட்டான்.

“நிஜமா குழந்தைகள் இப்போ எங்க இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார். பிள்ளையைக் கொடுக்கிறதோட என் வேலை முடிஞ்சது. அதுக்கு மேல ஒன்னும் தெரியாது…” என்றான்.

“பிள்ளையை யார்கிட்ட கொடுத்த?”

“வழக்கமா கொடுக்குற ஆள்கிட்ட தான் சார்…” என்று ராஜ் சொன்னதும்,

“வாட்…! என்ன சொன்ன? திருப்பிச் சொல்லு…!” என்று கேட்டான் ஷர்வா.

கவியும் அதிர்ந்து எழுந்து நின்றிருந்தான்.

ஜெகன் சொன்னதை வைத்து மற்றவர்களிடமும் தத்து கதை சொல்லி குழந்தைகள் வாங்க பட்டிருக்கலாம் என்ற எண்ணம் ஷர்வாவிற்கும், கவியுகனுக்கும் இருந்தது. ஆனால் வழக்கமான ஆள் என்ற ராஜின் வார்த்தை இருவரையும் திகைக்க வைத்தது.

“வழக்கமான ஆள்கிட்ட கொடுத்தியா? யார் அது? இந்த வழக்கம் எத்தனை நாளா நடக்குது?” என்று ஷர்வா தன் அதிர்வை புறம் தள்ளி விட்டு கேட்க,

“இரண்டு வருஷமா சார்…” என்றதுடன் ராஜ் சொன்ன ஆளின் பெயரை கேட்டு “என்னடா சொல்ற?” என்று முந்தைய அதிர்வை விடப் பலமடங்கு அதிர்வை உள்வாங்கியவனாகக் கேட்டான் ஷர்வஜித்.