நேசித்த நினைவுகள் – 3

விஷ்ணுராஜிற்கும் இளமதிக்கும் திருமணமாகி ஒரு வாரமாகியிருந்த காலம் அது.

அன்று விஷ்ணு எங்கோ வெளி வேலையாக சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீட்டிற்கு வந்திருக்க, அவர்களது படுக்கையறையில் படுத்தவாறு நாவல் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள் இளமதி.

வரவேற்பறையில் தொலைகாட்சியில் தொடரை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் தாய் ஜானகி, “மதி, விஷ்ணு வந்துட்டான் பாரு. வந்து சோறு வச்சி கொடுமா” என அழைத்தார்.

‘என்னது சோறு வைக்கனுமா? நானும் அத்தையும் அவருக்குச் சாப்பாடு கொஞ்சம் மீதி வச்சிட்டு தானே சாப்பிட்டோம்! ஏன் இப்ப சோறு பொங்கனும்னு கூப்பிடுறாங்க?’ என மனதினுள் எண்ணியவாறே,

“இதோ வந்துட்டேன் அத்தை” என்று கூறியவாறு அங்கே சென்றாள்.

இளமதி அங்கு வந்ததும், “போமா! போய் அவனுக்குச் சோறு வச்சு பரிமாறு! புள்ளை வரப்பவே களைப்பா தெரிஞ்சான். நல்லா பசியோட வந்திருப்பான் போல” என்றார் ஜானகி.

‘ஓ இதுக்குத் தான் கூப்பிட்டாங்களா? ஏன் அவரே சாப்பாடு போட்டு சாப்பிட மாட்டாரா! டைனிங் டேபிள்ல தானே எல்லாமே வச்சிருக்கோம்’ என மனதோடு எண்ணிக் கொண்டவளாய், சமையலறை அருகே இருந்த உணவுண்ணும் மேஜைக்குச் சென்றாள்.

விஷ்ணுவுக்கும் இளமதிக்கும் நடந்த இந்தத் திருமணமானது, இரு குடும்பத்தாரும் பேசி நிச்சயித்துச் செய்த திருமணமாகும். திருமணத்திற்கு முன்பே இருவரும் கைபேசியில் நிறையப் பேசி கலந்துரையாடி காதலை கூறி என மனமொத்த நிலையில் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், மணமான பின்பு புகுந்த வீட்டிற்கு வந்த இளமதிக்கு இந்த வீட்டின் பழக்கவழக்கங்கள் பிடிப்படவில்லை.

பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு அதன் பின்பு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தது வரை அனைத்துமே அவள் வீட்டினில் இருந்து செல்வது போல அருகிலேயே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர் அவளின் பெற்றோர். இது வரைக்குமான தன் வாழ்நாட்களைத் தாய் தந்தையர் மற்றும் தங்கையுடன் அவர்கள் மட்டுமே உலகமெனத் தன் வீட்டினை தவிர வேறெங்கேயும் சென்று தங்கி கூடப் பார்த்திராது வாழ்ந்திருந்தவளுக்கு இந்த வீட்டின் நடைமுறைகளும் வழக்கங்களும் புதிதாய் தோன்றியது.

புதிய இடத்தில் தனது மாமியாரிடம் கூடத் தன்னுடைய கருத்துக்களை விருப்பங்களைப் பேசவும் தைரியம் இல்லாது போனது அவளுக்கு.

விஷ்ணு முகம் கழுவி விட்டு வந்து உணவு மேஜையில் அமர்ந்தான். அவனுக்குத் தட்டை வைத்து அதில் உணவினை பரிமாறி குழம்பை ஊற்றியவள், “ஏங்க, வெளில போய்ட்டு சாப்பிடுற நேரம் தவறி வந்தா நீங்களே போட்டு சாப்பிட மாட்டீங்களா? உங்கம்மா தான் வந்து பரிமாறுவாங்களா?” எனக் கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், “ஏன் எனக்குப் பரிமாறுறதுல என்ன பிரச்சனை உனக்கு?” உண்டவாறே கேட்க,

“இல்ல எங்க வீட்டுல அம்மா மதியம் தூங்கிடுவாங்க. அப்பா அவங்க கடை வேலை நேரத்தை பொறுத்து மதியம் சாப்பிட வருவாங்க. நாங்க ஸ்கூல் காலேஜ் போன டைம்ல கூட அப்பா அம்மாவை தூங்க சொல்லிட்டு, அவங்களே தான் போட்டு சாப்டுப்பாங்க. நானும் தங்கச்சியும் ஸ்கூல்ல இருந்து வந்ததும் நாங்களே செஞ்சி வச்சிருக்கிறதை போட்டு சாப்டுப்போம்” என்றாள்.

“ஓ உங்க வீட்டுப் பழக்கம்? அப்ப இது யார் வீடாம்?” புருவம் உயர்த்திச் சிரித்துக் கொண்டே கேலியாய் தான் கேட்டான்.

அவனின் கேள்வியில் திருதிருத்தவளாய், “அய்யோ அப்படி இல்ல! நான் அப்படிச் சொல்லலை!” என உடனே உரைத்தவள், “இதுவும் என் வீடு தான்! அது.. அது.. சட்டுனு வரலை” என்றாள்.

சின்னத்திரை தொடரில் கவனமாய் இருந்த ஜானகிக்கு இவளின் பேச்சுக் காதில் விழவில்லை என்றாலும், அவன் கேட்ட கேள்வி காதில் விழுந்திருந்தது.

அந்நேரம் இளமதியின் கைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேசியவாறு படுக்கையறையில் அமர்ந்திருந்தவளை, “எம்மா மதி, அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு கூட இருந்து பரிமாறாம அங்க என்னம்மா செய்ற! பாரு புள்ளை இரண்டாவது சோறு போட்டுக்காம பாதியிலேயே எழும்பிட்டான்” என்ற ஜானகியின் குரல் செவிப்பறையை எட்டிய நொடி,

‘அவருக்கு வேணும்னா போட்டு சாப்பிட போறாரு. நான் பக்கத்துல உட்கார்ந்தா தான் வயிறு நிறையச் சாப்பிடுவாரா என்ன?’ எண்ணி கொண்டவளாய்,

“அப்புறம் பேசுறேன்ப்பா” எனக் கைபேசியை வைத்து விட்டு, “இதோ வரேன் அத்தை” எனக் கூறியவறு சமையலறை நோக்கி சென்றாள்.

அங்கு விஷ்ணு உண்டு முடித்துத் தட்டிலேயே கை கழுவி உணவு மேஜையிலேயே வைத்து விட்டு எழுந்திருந்தான்.

திருமணமான நாளில் இருந்து முன் தினம் வரை அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பரிமாறி பேசியவாறே உண்டு விட்டு அனைவரின் உணவுத் தட்டையும் ஒன்றாய் போட்டுக் கழுவி எடுத்து வைத்ததில் தெரியாத ஒருவித ஒவ்வாமை அவனின் இந்தச் செயலில் உணர்ந்தாள்.

‘ஹ்ம்ம்ம் அம்மா, நம்ம வீட்டுல மட்டும் தான் சாப்பிட்ட தட்டை அவங்கவங்களே கழுவி வச்சிடனும்னு ரூல்ஸ்ஸா! மத்த வீட்டுலலாம் இது இருக்காதா! இதைச் சொல்லாம விட்டுட்டியே தாயே’ எனச் சுளித்த முகத்துடன் தாயோடு மனதினுள் பேசி கொண்டவளாய் அவனின் தட்டை கழுவி வைத்து விட்டு மீதமுள்ள பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைத்து விட்டு வந்தாள்.

அடுத்த வந்த வாரங்களில் விஷ்ணுவும் இளமதியும் அலுவலக வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும், வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜானகியே கவனித்துக் கொண்டார். அவ்வப்போது ஜானகிக்குச் சமையலறையில் உதவி செய்வாள் இளமதி. ஜானகிக்கும் அலுவல் வேலைக்குச் செய்யும் மருமகளைச் சமையல் வேலையில் ஈடுபடுத்த மனமில்லை. அலுவலகத்திலேயே வேலை செய்து களைப்பாகி வருபவளை மேலும் சமையல் வேலை செய்யச் சொல்லி வருத்த வேண்டாமென்று தான் அவரும் எண்ணினார்.

ஆக ஒரு மாத காலம் எவ்வித சண்டை சச்சரவுமின்றிக் காலங்கள் இதமாகச் சென்று கொண்டிருந்த சமயம், தாய் நெடுங்காலமாக ஆசைப்பட்ட ஆன்மீக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தான் விஷ்ணு.

இரண்டு வார பயணமாய்த் தமிழ்நாட்டிலுள்ள முக்கியக் கோவில்களுக்குச் செல்வதாய்த் திட்டமிடப்பட்டிருந்த ஒரு குழுவில் ஜானகியும் செல்வதாய் முடிவு செய்யப்பட்டது.

“ஹய்யா அத்தை ஊருக்கு போறாங்க! அத்தை ஊருக்கு போறாங்க! ஆபிஸ்ல இருந்து வந்ததும் நைட் கொஞ்சம் நேரம் கதை படிச்சு ரிலாக்ஸ் ஆகலாம். ‘எப்ப பார்த்தாலும் கதை புக் படிச்சிட்டு இருக்கியே’னு கேள்வி கேட்க ஆளிருக்காது. என் விருப்பம் போலக் காலையில எழுந்திருக்கலாம். அத்தை என்ன நினைப்பாங்களோனு யோசிக்க வேண்டியது இல்லை. இடையில வரும் சனி ஞாயிறுல நானும் அவருமா சேர்ந்து உட்கார்ந்து நல்ல லவ் மூவியா டிவில பார்க்கனும்” எனப் பலவிதமான திட்டங்களுடன் ஜானகியின் ஆன்மீக சுற்றுலா பயணத்தை எதிர்கொண்டு காத்திருந்தாள் இளமதி.

ஆனால் அவர் சென்ற பிறகு இரண்டு நாட்களில் வீட்டு வேலையையும் அலுவல் வேலையையும் ஒன்றாகச் செய்ய இயலாமல் விழி பிதுங்கி போனாள் இளமதி.

“ஏங்க காலைல சாப்பாடு வேணா நான் செய்றேன். மதிய சாப்பாட்டை ஆபிஸ்லயே சாப்பிட்டுக்கோங்க” என மூன்றாம் நாளே அயர்ந்து போய் உரைத்தாள்.

களைப்பாய் இரவு வீட்டுக்கு வந்ததும் காலையில் போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களைக் கண்டு கண்ணீரே வந்து விட்டது அவளுக்கு. அதைக் கண்டு விஷ்ணுராஜ் அவளுக்கு உதவ முன் வந்தான்.

“எனக்குச் சமைக்கத் தெரியாது மதி! நான் கிச்சன் பக்கம் வந்தாலே, ஆம்பிள பிள்ளைக்கு இங்க என்ன வேலை! போய்ப் படிக்கிற வேலையைப் பாருனு சொல்லிடுவாங்க. அதனால அம்மா வர வரைக்கும் பாத்திரம் தேய்க்கிறதை நான் செய்றேன். சமையல் வேலையை நீ செய் சரியா! காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்து ஒரே சாப்பாடா செஞ்சிடு. நைட்க்கு நான் வரும் போது ஹோட்டல்ல வாங்கிட்டு வந்துடுறேன் சரியா” என இதற்கான தீர்வை கூறி அவளைச் சமாதானம் செய்தான்.

சனி ஞாயிறான விடுமுறை நாளிலும் இருவரும் ஒன்றாய் இணைந்து சமையல் வேலையைப் பகிர்ந்து செய்து உண்டு களித்துப் படம் பார்த்து மகிழ்வாய் இருந்தனர்.

ஜானகி சுற்றுலா சென்ற நாளில் இருந்து இரவு தினமும் ஒரு பக்கமாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை வாடிக்கையாக்கி இருந்தாள் மதி.

இரண்டு வாரம் நிறைவடைந்த நிலையில் ஜானகி சுற்றுலா சென்ற பேருந்துலேயே அவரை வீட்டினருகே கொண்டு வந்து விடுவதாய் உரைத்திருக்க, அன்றிரவு உணவை மூவருக்குமாக இளமதி தயார் செய்து வைத்து விட்டுக் கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்கார்ந்து விட்டாள். விஷ்ணு அவள் சமையல் செய்து போட்டிருந்த பாத்திரங்களைக் கழுவி வைத்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அவர்கள் வீட்டின் அழைப்பொலி கேட்க,

“ஹே அத்தை வந்துட்டாங்க ராஜூப்பா!” எனக் கூறியவாறு கையில் புத்தகத்துடனேயே சிரித்த முகமாய் அவரை வரவேற்று கதவை திறந்தாள் மதி. ஆனால் அவரோ அவள் கையில் இருந்த புத்தகத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்தவாறு அவளை முறைத்தார்.

அவன் பாத்திரங்களைக் கழுவி விட்டு வந்து பார்க்க, தன் மகன் சமையலறையில் பாத்திரங்களைக் கழுவுவதை அங்கிருந்த ஜன்னல் வழியாய் பார்த்தவாறு வாசலை வந்தடைந்திருந்த ஜானகி கொதிநிலையில் இருந்தார்.

“ஒரே மாசத்துல பொண்டாட்டிக்குச் சேவகம் செய்ற அளவுக்கு மாறிட்டியாடா விஷ்ணு!” எனக் கோபமாய்க் கேட்டார் ஜானகி.

“என் பிள்ளையைப் பாத்திரம் கழுவ வச்சிட்டு நீ கதை புக் படிக்க உட்கார்ந்துட்டியோ?” என மதியையும் முறைத்தார்.

“அய்யோ அப்படி இல்ல அத்தை” என அவள் ஏதோ கூற வருகையில்,

கை காட்டி நிறுத்தியவர், “நான் வேணா உனக்குச் சேவகம் செய்றேன். ஆனா என் பிள்ளையைச் செய்ய வைக்காத! என்னால இதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது” எனச் சத்தமாகக் கூற,

“இதுல என்னம்மா இருக்கு?” என இடை புகுந்தான் விஷ்ணு.

“எல்லாம் நீ கொடுக்கிற இடம் தான் விஷ்ணு. பொண்டாட்டி செய்ய வேண்டிய வேலையைப் புருஷன் செஞ்சா அவனுக்கான மரியாதை தேய்ஞ்சு போய்டும். உனக்குப் பிறக்கிற பிள்ளைங்க உன்னை மதிக்க மாட்டாங்க. ஏன் காலப்போக்குல உன் பொண்டாட்டியே உன்னை மதிக்க மாட்டா!” என மதியை முறைத்தார் அவர்.


அந்த நாள் நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே மனக்கண்ணில் ஓட, ‘அய்யய்யோ’ என இளமதி தனது மனதினுள் அலர,

“என்னடா வேலை செய்றவங்க வரலையா! நீ பாத்திரம் தேய்ச்சிட்டு இருக்க” என வெகு சாதாரணமாகவே கேட்டார் ஜானகி.

அவரின் கேள்வியில் தான் தாய் வந்துள்ளதை கவனித்த விஷ்ணுவும், ஒரு நிமிடம் அதிர்ந்து பின் இயல்பாகி, “ஹான் அது இல்லமா! அவங்க வரலைமா! லீவ்னு மதி சொன்னா” கை கழுவியவாறே தடுமாற்றத்துடன் கூறியவன்,

“எப்பமா வந்தீங்க? என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?” என அவரைத் திசை திருப்பும் விதமாய்க் கேள்வி கேட்க,

என்ன தான் ஜானகி இன்முகத்துடன் இயல்பாய் விஷ்ணுவிடம் பேசி கொண்டிருந்தாலும் அவரை எதிர் கொள்ளும் தைரியமற்று, “அத்தை வாங்க அத்தை! பரத் எங்க அத்தை? கீழே இருக்கானா! வழக்கம் போல அவனோட பக்கத்து வீட்டு ஃப்ரண்ட்ஸ்ஸை பார்த்துட்டு கீழேயே இருந்துட்டானா? நான் போய் அவனைக் கூட்டிட்டு வரேன்” கேள்வியும் நானே பதிலும் நானே என அவளே பேசிவிட்டு விஷ்ணுவிடம் சமாளிக்குமாறு கண் ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் இளமதி.

அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் கீழே சென்ற இளமதி, “குட்டிப்பா” என்றவாறு அங்கிருந்த பூங்காவில் இருந்த ஊஞ்சலில் தனது பக்கத்து வீட்டு குட்டி தோழனுடன் விளையாடி கொண்டிருந்த தனது மூன்று வயது மகனான பரத்தை நோக்கி சென்றாள்.

“ம்மா.. ம்மா” என்று அவளை நோக்கி ஓடி வந்த மகனை அவள் வாரி அணைத்துக் கொள்ள, தாயின் கழுத்தை சுற்றி கைகளைக் கொண்டவனோ, அவளின் கன்னத்தை எச்சில் செய்து, “மிஸ்ஸூ… மிஸ்ஸூ” என்றான். மிஸ் யூ என்பதை அவனின் மழலை மொழியில் மிஸ்ஸு ஆக்கியிருந்தான். இளமதியை விட்டு ஜானகியிடம் அல்லது அவளது பிறந்த வீட்டாரிடம் அவனை அவள் விட்டு வரும் வேளையில் எல்லாம் இந்த மிஸ் யூவை அவள் அவன் மகனிடம் கூற அதை அவன் பிடித்து கொண்டான். 

“ஹா ஹா ஹா.. குட்டிப்பா என்னை மிஸ் செஞ்சீங்களா?” எனச் சிரித்தவாறு அவன் முகத்தை நிமிர்த்திக் கன்னத்தில் முத்தமிட்டவாறு கேட்க, அவள் அணிந்திருந்த சட்டையை இறுக்கமாய் கைகளில் பிடித்துக் கொண்டு அவள் முகம் நோக்கி ஆமாம் எனத் தலையசைத்தான்.

பின் அவளிடமிருந்து கீழே இறங்க, கைகளில் துள்ளியவன், “விடும்மா ஊஞ்சல் மா! தரு கூட ஆட போறேன். விடுமா” எனக் கீழிறங்கினான்.

“தருண் தம்பி கூட அப்புறமா வந்து விளையாடலாம். முதல்ல நீ வீட்டுக்கு வா” என அவனை அவள் வலுகட்டாயமாகத் தூக்கி கொண்டு வர, அவள் கைகளில் இருந்து உதட்டை பிதுக்கியவாறு அவன் இறங்க முனைய, இவள் விடாது தன்னுடன் அணைத்தவாறு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

இங்கு ஜானகியோ தனது மகனிடம், “என்னடா இன்னும் உன் பொண்டாட்டிக்கு சேவை செய்றதை நிறுத்தலையா நீ?” எனச் சிரித்தவாறே கேட்க,

“இது சேவை இல்லமா! உதவி! பாவம் அவளே எல்லா வேலையும் எப்படிச் செய்வா! நான் சின்னதா ஒன்னு செஞ்சா கூட, உதவி செய்யப் புருஷன் இருக்கார்னு முக்கால்வாசி வேலையைச் செஞ்சிடுவா! ஒருத்தருக்கொருத்தர் தேவையானதை செஞ்சி உதவிக்கிறதுக்குத் தானு மேரேஜ்ன்ற கமிட்மெண்ட்ல பார்ட்னர் ஆகி இருக்கோம்”

அன்று தனது அன்னையிடம் இவ்வாறு கூறாமல் விட்டதிற்குச் சேர்த்து வைத்து இன்று கூறியிருந்தான். கடந்த இரண்டு வருடங்களாய் தனது தாயிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதலை கண்டிருந்தவனுக்கு இன்று இதைத் தைரியமாகக் கூற முடிந்திருந்தது.

அவனை ஆழ்ந்து நோக்கிய ஜானகிக்கு, தனது மகனை எண்ணி பெருமையாக இருந்தது. ஆயினும் ஏதும் கூறாது அமைதியாக அமர்ந்து விட்டார்.

தனது வேலையைப் பார்த்துக் கொண்டே ஜானகிக்கும் பரத்திற்கும் தேவையானதை செய்து கொடுத்து கொண்டிருந்தாள் இளமதி.

அன்றிரவு விஷ்ணுவை மெத்தையாக்கி அவன் மீது கவிழ்ந்தவாறு பரத் உறங்கி கொண்டிருக்க, அவனருகே சாய்ந்து அமர்ந்த இளமதி, “ஏன்ங்க அத்தை எதுவும் சொன்னாங்களா?” எனக் கேட்டாள்.

“எதைப் பத்தி கேட்குற?” எனப் புரியாது அவன் கேட்க,

“ம்ப்ச் நீங்க பாத்திரம் தேய்ச்சீங்களே! அதைப் பத்தி ஏதாவது சொன்னாங்களா? நான் பரத்தை கூட்டிட்டு வரேன்னு கீழே போய்ட்டேனே! அந்த நேரத்துல எதுவும் சொன்னாங்களானு கேட்குறேன்” என்றாள்.

“ஓ அதுவா! அம்மா எதுவும் சொல்லலை மதி! அவங்ககிட்ட நிறையச் சேஞ்சஸ் இருக்கு மதி! அவங்க முன்ன மாதிரி இல்ல. அதனால நீயும் இன்னும் ஒதுங்கி போகாம அவங்ககிட்ட இயல்பா பழகு” என்றான்.

“அதென்னமோ நாலு வருஷமாகி இருந்தாலும் அன்னிக்கு அவங்க அப்படிப் பேசின பிறகு அவங்ககிட்ட என்னால நார்மலா பேச முடியலைங்க. என்னமோ ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர்ட்ட பேசுற மாதிரி தயங்கி தயங்கி யோசிச்சு யோசிச்சியே பேசுற மாதிரி இருக்கு. இப்ப அவங்க கிட்ட வந்திருக்க இந்தச் சேஞ்சஸ் அப்பவே வந்திருந்தா, நம்ம வாழ்க்கைல வந்த நிறைய சண்டைகளை தவிர்த்திருக்கலாம்!” என அவள் ஆழமாய் பெருமூச்சு விட,

“நமக்கும் அந்த சண்டைகள் தானே இப்ப இருக்கிற இந்த மெச்சூரிட்டியை கொடுத்திருக்கு! ஆனா அம்மா அப்பவே சில விஷயங்களை புரிஞ்சிக்கிட்டு நமக்கான ஸ்பேஸை கொடுத்தாங்க தான்.  நீ தான் அவங்களை தப்பாவே யோசிச்சு எல்லாத்துலயும் குறை சொல்லிட்டு இருந்த!” என்றவன் கூறவும்,

அவனை முறைத்தவளாய், “ஹப்பா என்ன நடந்தாலும் அம்மாவை விட்டு கொடுக்க மாட்டீங்களே!” என்றவள் அழுத்தமாய் கூறவும்,

“சரி சரி நாளைக்கு ஆபிஸ் வேலை நிறையா இருக்கே. சீக்கிரமா தூங்கலாம்” என கூறி கண்களை மூடியவன் உடனே உறங்கியும் போனான்.

அவனின் தோளில் தலை சாய்த்து அவன் மீதிருந்த மகனின் முதுகை வருடியவாறு படுத்த இளமதியின் நினைவுகள் அந்த நாளுக்குச் சென்றது.


‘பொண்டாட்டிக்குச் சேவகம் செய்றியாவா! என்ன மாதிரியான வார்த்தை இது’ என்று கோபமாக வந்தாலும், அவரை எதிர்த்து பேசும் தைரியமின்றிக் கண்களில் நீர் வழிய உறைந்து நின்று விட்டாள் இளமதி.

“என்னம்மா நீ! அவ அழுறா பாரு” எனத் தாயிடம் சொன்னவன்,

அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்று விட்டான்.

அவள் சில நிமிடங்கள் அவன் நெஞ்சினில் சாய்ந்து அழுது கரைய, “அம்மா ஏதோ கோபத்துல சொல்லிட்டாங்க விடு” என்று அவளைச் சமாதானம் செய்தான்.

ஜானகிக்கோ அவளின் கண்ணீரை கண்டதும் பெரும் குற்றயுணர்வாகி போனது. ஆண்கள் சமையல் வேலை செய்வது எல்லாம் பெரும் குற்றமாகப் பார்க்கப்பட்ட சூழலில் வளர்ந்தவராகையால் அவரால் இதை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அவரின் மகனை இது வரை எந்தவித வீட்டு வேலையும் செய்ய விடாது அவர் வளர்த்திருக்க, இப்படி ஒருத்தி வந்ததும் அவளுக்காக மகன் கீழிறங்கி வேலை செய்வது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அறையில் அழுது கரைந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மதி, ஜானகி மீதான கோபம் அனைத்தையும் விஷ்ணுவிடம் வார்த்தையால் வெடித்தாள்.

“நான் என்ன உங்களை எனக்குச் சேவகம் செய்ங்கனு சொன்னேனா? உங்க அம்மா சொல்லும் போது அவ அப்படிலாம் சொல்லலைமானு நீங்க சொல்ல வேண்டியது தானே! பொண்டாட்டிக்கு உதவுறது தப்பானு உங்கம்மாட்ட கேட்டிருக்கனும் நீங்க” என்றாள்.

“விடுடி! ஏதோ கோபத்துல வாய்க்கு வந்ததைச் சொல்லிட்டாங்க. இதுக்கே இப்படிப் பேசுறாங்க. இன்னும் உன்னைய சப்போர்ட் செஞ்சி பேசினா என்னவெல்லாம் சொல்லிருப்பாங்களோ” என்று அவனும் தன் பக்க விளக்கமளிக்க,

“சரியான கட்டுப்பட்டி குடும்பத்துல வந்து சிக்கிட்டேன்” என அவள் வாய்க்குள் முணங்க,

“என்னடி வாய் நீளுது! என்ன அப்படிக் கட்டுப்பட்டித்தனமா நடந்துச்சுனு இப்படிப் பேசுற?” என அவன் எகிற,

“ஆமா நம்ம முதலிரவு அன்னிக்கே உங்களை டா போட்டே பேச கூடாதுனு சொல்லிட்டீங்க. ஆனா நீங்க மட்டும் வார்த்தைக்கு வார்த்தை டீ போட்டு பேசுவீங்க நான் கேட்டுட்டு இருக்கனும். இதுவே கட்டுப்பட்டித்தனம் தான். இதுல பொண்ணு தான் பரிமாறனும், சமைச்சு போடனும், ஆம்பிளைங்க சமையல் வேலையே செய்யக் கூடாதுனு நினைக்கிறதுலாம் என்னவாம்” என அவள் கோபமிகுதியில் பேசிக் கொண்டே போக,

“ஏய்” என்ற அவனின் சத்தமான ஒரு அதட்டலில் அப்படியே நெஞ்சம் நடுங்க அமைதியாகி விட்டாள் இளமதி.

இது தான் இவர்கள் இருவருக்குள்ளும் நிகழ்ந்த முதல் ஊடல். இந்நிகழ்வை எண்ணியவாறே அவன் தோள் மீது சாய்ந்து தூங்கியிருந்தவள், சிறிது நேரம் கழித்து முழித்துப் பார்த்தாள்.

அவனுக்கு உடல் வலிக்குமென எண்ணியவளாய், அவன் மீது படுத்திருந்த மகனை தூக்கி இருவருக்குமிடையே படுக்க வைத்தாள். தாயின் மீது கால் போட்டவனாய் அவளது இடையைக் கட்டியவாறு அவளின் மகன் உறக்கத்தைத் தொடர, விஷ்ணுவின் மீது கைகளைப் போட்டவாறு படுத்திருந்தாள் இவள். 

மேஜையில் இருந்த விளக்கின் வழியாக அங்கிருந்த அந்த புத்தகத்தை கண்டவளின் மனமோ, ‘அன்னிக்கு போட்ட சண்டைக்கு பிறகு புக் படிக்கிறதே விட்டுருந்தேனே! நாலு வருஷம் கழிச்சு நம்மளை தேடி தானா ஒரு புக் வந்திருக்கு! படிக்கலாம்னு நினைக்கும் போது இப்படி அத்தை வந்து நிக்கிறாங்களே!  இனி இந்த புக்கை எப்ப படிச்சு! எப்ப முடிச்சு!” என அலுப்பாய் யோசித்து கொண்டிருந்தவள், கணவன் மற்றும் மகன் இருவரின் உறக்கமும் கலையாதவாறு சற்றாய் எக்கி மேஜையில் இருந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.

முதல் பக்கத்திலேயே அனுப்பியவரின் கடிதம் இருக்க, அதை படித்தவளோ, ‘ஒரு வேளை இதை என் பர்த்டேக்காக கிப்ட்டா யாராவது அனுப்பிருப்பாங்களோ? சரி அப்படி என்ன கதை இதுனு படிச்சு பார்ப்போம்’  எண்ணியவாறு வாசிக்க தொடங்கினாள்.

— தொடரும்