நெஞ்சோடு வலம் வா தேவதையோ ….

அத்தியாயம் -10

கணவன் கோப முகம் ஸ்ரீயின் தளிர் மேனியை நடுங்க வைக்க அவளையுமறியாமல் ஓரடி பின்னால் எடுத்து வைத்தாள். மனைவி பயப்படுகிறாள் என்றதும் தன் மீதே கோபம் வந்தது அத்வைத்துக்கு. நீதா மேலுள்ள கோபத்தை ஏன் இவள் மேல் காட்டணும் என்று தன்னையே நொந்துகொண்டவனாக கைகளை இறுக்கி மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தினான். 

“என்ன கேட்டே, நீதாவுடன் ப்ரோக்ராம் என்றா? இன்று இல்லை நாம வெளியே போகலாம். நீ ஐந்து மணிக்கு ரெடியாகி வா…”என்றுவிட்டு இரண்டிரண்டு படிகளாக தாவியேறி தன் அறைக்கு செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஸ்ரீக்கு அவனின் கோபத்திற்கான காரணமும் புரியலை. அவளுடனான ப்ரோக்ராம் கேன்சல் ஆனதிற்க்கான காரணமும் புரியவில்லை. தன் அறைக்கு சென்று கட்டிலில் படுக்க அவளின் கைபேசியில் நோட்டிபிகேஷன் வரும் சத்தம் கேட்க அசுவாரஸ்யமாக எடுத்து பார்த்தாள். அவள் வேலைக்கு அப்பளை செய்த கம்பெனியிலிருந்து இன்டெர்வியூக்கு அழைப்பு வந்திருக்க ஸ்ரீயின் முகம் பூவாய் மலர்ந்தது. 

திங்களன்று இன்டெர்வியுக்கு வர முடியுமா என்று கேட்டிருக்க, அவர்களுக்கு முடியும் என்று மெயில் செய்துவிட்டு சந்தோஷத்தோடு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து டிவியை உயிர்ப்பித்தாள்.

டிவியில் மதிய நேரத்திற்கு படம் ஓடிக்கொண்டிருக்க, அதை பார்க்க பிடிக்காமல் சேனல் செயலாக தாவி ம்யூசிக் சேனலில் நிலைத்தது. அதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தவளின் மனம் அப்படியே யூ டர்ன் அடித்து கணவனின் இன்றைய செய்கையையும், பேச்சையும் ஆராய்ச்சி செய்தது. 

‘என்னாச்சு இவருக்கு முதலிரவில் அலட்சியமாக பேசிவிட்டு போனவர், மறுவீடு அன்று என்னை காணாமல் தவித்து போனார். பின் இந்த வீட்டுக்கு வந்ததும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. ஆனால் நேற்று நைட் என்னை காணாமல் என்னை தேடி தெரு தெருவா அலைந்திருக்கிறார். காலையில் எனக்காக டிஃபன் செய்து, நண்பர்களாக இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு என்னுடன் மார்க்கெட் வந்து சமைப்பதற்கு காய்கறி வாங்கி வந்ததுமில்லாமல் சமையலுக்கு உதவி செய்தார். இப்போ வெளியில் போகலாம் ரெடியாக இரு என்கிறார். 

இவர் மனதில் என்ன தான் இருக்கு. நீதாவை காதலித்தால் அதே பிடியில் இருக்க வேண்டியது தானே. என்னை ஏன் சமாதானப்படுத்த மெனக்கெடனும். ஒரு வேளை அவரால் என் வாழ்க்கை வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்வில் இதெல்லாம் செய்கிறாரா. விஷயம் அது தான் என்றால் நான் எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள கூடாது. நானும் அவரை ஏன் என் கையால் சாப்பிடணும் என்று அழைத்தேன். ஒரு வேளை முதல் நாள் அவரின் பதட்டம் என்னுள் நம்பிக்கையை வளர்த்துவிட்டதா. 

ம்ஹீம் இது இம்பாஸிபிள், ஆல்ரெடி நீதாவை பற்றி சொல்லிட்டாரே, அவள் நல்லவளோ கெட்டவளோ அவளை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று. அப்புறம் எங்கிருந்து எனக்குள் தேவையில்லாத நம்பிக்கை விதை விழுந்தது. விழுந்த வேகத்தில் அது வளர்ந்து கண்டிஷன் போடுகிற அளவுக்கு போயிருக்கு என்றால் என்னால் அத்வைதை விட்டு கொடுக்க முடியவில்லையா. 

கடவுளே இந்த அவஸ்தை இன்னும் எத்தனை நாளைக்கு. அத்தையை வர சொல்லி அங்கேயே போய்டலாமா. தனி குடித்தனம் வைத்தால் மகன் மருமகளிடம் பழகி மனம் மாறி மனைவியாக ஏற்றுக்கொள்வான் என்று நினைத்து செய்திருக்கிறார்கள். உங்கள் முயற்சி அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரென்று சொன்னால் புரிந்துகொள்ள மாட்டார்களா.

அப்படி தான் செய்யணும் என்று முடிவெடுத்தவள் நினைத்ததை உடனே செயல்படுத்த கைபேசியை எடுத்து மாமியாருக்கு அழைத்தாள். ரிங் போய்க்கொண்டே இருக்க, எதிர்பக்கம் யாரும் எடுக்கவில்லை. ரிங் சென்று கட்டாகிவிட மீண்டும் அழைத்தாள். இம்முறையும் நீண்ட நேரம் ரிங் சென்று கட்டாகியது.

“என்னாச்சு ஏன் அத்தை எடுக்கலை, எங்கேயாவது வெளியே சென்றிருக்கிறார்களா…”என்று யோசித்தபடி கட்டிலில் சாய்ந்து விழி மூடினாள். 

திடிரென்று அவளின் கைபேசி சத்தத்தில் உறக்கம் கலைந்து விழிகளை மலர்த்தியவள் கைபேசியை தேடி எடுத்து நம்பரை பார்க்காமலே காதில் வைத்து ஹலோ என்றாள் சோம்பலாக. 

“ஸ்ரீ நான் அத்தை, எப்படிம்மா இருக்கே, நாங்க ராமேஷ்வரம் வந்திருக்கோம். கோவிலின் உள்ளே இருந்ததால் போனை எடுக்கலை. சொல்லும்மா எப்படி இருக்கே, அத்வைத் எப்படி இருக்கான், உன்னை நல்லபடியா பார்த்துக்கிறானா …? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்ல ஸ்ரீக்கே மூச்சு வாங்கியது அவரின் பேச்சில். 

“ஹ்ம்ம் நல்லா இருக்கொம் அத்தை, நீங்களும், மாமாவும் எப்படி இருக்கீங்க? எப்போ அங்கிருந்து வருவீங்க…?

“இன்னும் நாலு நாள் ஆகும், என்னாச்சும்மா உன் குரலில் சுரத்தே இல்லையே. ஏன் உன் புருஷன் அப்படியே தான் இருக்கானா…? என்றார் கோபம் கலந்த குரலில். 

“விடுங்க அத்தை, நீங்க நிம்மதியா சுவாமி தரிசனம் முடிச்சிட்டு வாங்க. சென்னைக்கு வந்ததும் கால் பண்ணுங்க. உங்களிடம் பேசணும். இப்போதைக்கு மாமாவிடம் எதையும் பேசாதீங்க. சரிங்க அத்தை நான் வைச்சிடறேன்…”என்று தொடர்பை துண்டித்தவளுக்கு மனம் சோர்ந்து போனது. 

“இன்னும் நாலு நாள், அதன் பிறகு அத்தையிடம் பேசி இங்கிருந்து கிளம்பிடணும். வேலைக்கு அங்கிருந்து போக வேண்டியது தான்…”என்று எண்ணியவளாக எதேச்சையாக கடிகாரத்தை நோக்கினாள். 

மணி நாலரை ஆகியிருக்க, “அச்சோ அத்வைத் ரெடியாக இருக்க சொன்னாரே…”என்று கட்டிலை விட்டு அவசரமாக எழுந்த வினாடி அவனுடன் போய்த்தான் ஆகணுமா என்ற கேள்வி தேவையில்லாமல் உதித்தது. 

முடிவு எடுக்க முடியாமல் மீண்டும் தளர்ந்து கட்டிலில் அமர்ந்தாள். எவ்வளவு நேரம் சென்றதோ கதவு நாசூக்காக தட்டும் ஓசை கேட்டது. 

“ஸ்ரீ ரெடி ஆயிட்டியா…”என்ற கணவனின் குரலுக்கு சற்று தயங்கி கதவை திறந்தாள். 

அவள் ரெடியாகாமல் இருக்கவும்,”ஹேய் இன்னும் நீ ரெடி ஆகலையா…? கமான் குயிக் சீக்கிரம் ரெடியாகி வா…”என்று விட்டு திரும்பியவன் ஏதோ நினைத்துக்கொண்டவனாக மீண்டும் அவள் பக்கம் திரும்பினான். 

“காலையில் போட்ட கண்டிஷன்ஸ் ஞாபகம் இருக்கில்லே. நான் வெளியே அழைத்தால் என்னுடன் வரணுமென்று. சோ கெட் ரெடி. ஐல் கிவ் யூ டுவெண்ட்டி மினிட்ஸ்…” என்றான் புன்னகை மன்னனாக. 

ஸ்ரீ அவனை விசித்திரமாக நோக்க,”கோ …”என்றவன் ஹாலை நோக்கி செல்ல ஸ்ரீக்கு அவனை புரிந்துகொள்ள முடியாமல் தலையை குலுக்கிக்கொண்டு ரெஸ்ட்ரூம் சென்றாள் ரெப்பிரேஷ் செய்ய. 

கணவன் கொடுத்த நேரத்திற்குள் புடவையில் ரெடியாகி கைப்பையுடன் வெளியே வர, அத்வைதின் விழிகள் அவளை மேலிருந்து கீழாக நோக்கியது. 

அவனின் பார்வையின் அர்த்தம் புரியாமல்,”நான் விளக்கேற்றி விட்டு வர்றேன்…”என்று முணுமுணுத்துவிட்டு கைப்பையை வைத்துவிட்டு உள்பக்கம் செல்ல, அத்வைத் அவளின் கைபேசியை எடுத்து அவனின் நம்பரை பதியவைத்தான். 

அடுத்த சில நொடிகளில் விளக்கேற்றிவிட்டு நெற்றியில் சிறு கீற்றாக விபூதியை வைத்துக்கொண்டு வந்தவள் சிறு தயக்கத்துடன் விபூதியை கணவனின் கையில் கொடுத்தாள். 

“ஏன் எனக்கு வைச்சி விட மாட்டியா …”என ஸ்ரீ சற்று திணறி விபூதியை வைத்து விட்டாள். 

“லெட்ஸ் கோ…”என்றவன் கார் சாவியையும், வீட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு முன்னே நடக்க, ஸ்ரீ அவனை பின்தொடர்ந்தாள்.

இருவரும் வண்டியில் அமர்ந்ததும்,”சொல்லு எங்கே போகலாம்…”என ஸ்ரீ அவனை கேள்வியாக நோக்கினாள்.

சில நொடிகள் கழித்து,”உங்களிஷ்டம்…”என்றாள் அன்று போலவே. 

“கமான் ஸ்ரீ, நாம ப்ரெண்ட்ஸா இருக்க ஒப்பந்தம் போட்டிருக்கோம். அதனால் நீ அளந்து அளந்து பேசணும்ன்னு அவசியமில்லை. உன் ப்ரெண்ட் கூட எப்படி பேசுவியோ அதே போல என்னிடம் பிரீயா பேசலாமே…”

அவனை திரும்பி பார்த்து,”எனக்கு ஒன்லி கேர்ள் ப்ரெண்ட்ஸ் தான், பாய் ப்ரெண்ட்ஸ் யாரும் இல்லை. அதனால் அவங்களிடம் எப்படி பேசுவதென்று தெரியாது…”என்றாள் பட்டும் படாமல். 

அவளின் பதிலுக்கு இதழ் வரை வந்த சிரிப்பை மென்று,”ஓ அப்போ இனி கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிக்கலாம். சரி இப்போ நாம போனிக்ஸ் மால் போகலாம். லாஸ்ட் டைம் போய் எதையும் சரியா பார்க்காமல் வந்துட்டோம்…”என்றதுமே ஸ்ரீக்கு பதறியது. 

“ஹையோ அங்கேயா, வேண்டாம் வண்டியை நிறுத்துங்க. நான் இங்கேயே இறங்கிக்கிறேன். எனக்கு எங்கேயும் போக வேண்டாம். முதலில் வண்டியை நிறுத்துங்க…”என்று படபடத்தவாறே ஓடுகிற வண்டியை திறக்க முயற்சிக்க அத்வைத ஓரமாக வண்டியை நிறுத்தினான். 

“ஈஸி …ஈஸி…நீ ஏன் பதட்டப்படறேன்னு புரியுது. அன்று நான் கொஞ்சம் அசால்டாக இருந்துட்டேன். அதனால் உனக்கு பிரச்சினை ஆயிடிச்சு. இன்று அப்படி நடக்க வாய்ப்பே இல்லை…”என்று கூறியும் அவள் முகம் தெளியவில்லை. 

“ஓ அன்று போல் நீதா வருவாளென்று சங்கடப்படறியா. இல்லை இன்று வரமாட்டாள். அவள் ஊரிலேயே இல்லை. அதனால் நோ டென்ஷன். இப்போ போகலாமா …”என மெலிதாக தலையை உருட்ட புன்னகையுடன் வண்டியை எடுத்தான்.

வண்டி போனிக்ஸ் மாலில் சென்று இளைப்பாற, மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று ஸ்ரீ மறுக்க மறுக்க சாரீஸ், நகைகள் என்று வாங்கி கொடுத்தான். அன்று பார்க்க முடியாத படத்தை மனைவியோடு பார்த்து ரசித்து, இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டு வீட்டுக்கு வர ஸ்ரீக்கு கணவனோடு செலவழித்த நேரம் சந்தோஷமாக இருந்தாலும் இது நிரந்தரமில்லை என்ற ஆயாசம் அவளுள். 

கணவனோடு மாலில் சுற்றினாலும் அவளுள் திங்கள் கிழமை அட்டென்ட் பண்ண போகிற இன்டெர்வியூ பற்றியும், தன்னுடன் சாப்பிட வேண்டும் என்று போட்ட கண்டிஷன் தேவையில்லாததா, நானே தேவையில்லாமல் கமிட் பண்ணிட்டேனோ என்ற எண்ணங்கள் அவளை சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது.

வீடு வந்து சேர்ந்ததும் அத்வைத் வழக்கம் போல அறைக்கு செல்லாமல் ஹால் சோஃபாவில் அமர்ந்து டிவியை உயிர்ப்பிக்க ஸ்ரீ உள்ளே சென்று உடை மாற்றி ரெப்பிரேஷ் செய்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தாள். நாளை கணவனிடம் வேலையை பற்றியும், கண்டிஷனை வாபஸ் வாங்குவதை பற்றியும் பேசணும் என்று யோசித்தபடியே உறங்கி போனாள். 

அடுத்த நாள் சீக்கிரமே விழிப்பு தட்டியது. எழுந்து பால்கனிக்கு சென்று வீட்டின் முன் வளர்ந்திருந்த செடிகளையும், மரங்களையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிய இடம், சுற்றி தாராளமாக இடம் விட்டு நடுவில் வீட்டை கட்டியிருந்தார்கள். இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து கணவன் வெளியே ஜாகிங் செல்லாமல் வீட்டை சுற்றி ஓடுவதை கவனித்திருக்கிறாள். இன்றும் அத்வைத் வீட்டை சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தான். அவனையே சில நொடிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மனைவியை கவனித்தவன் புன்னகையுடன் கையாட்டி காலை வணக்கத்தை கூறினான். ஸ்ரீயும் புன்னகை முகத்தோடு தலையசைப்பில் ஏற்றுக்கொண்டு உள்ளே சென்று குளித்து விட்டு ரெடியாகி கீழே இறங்கி விளக்கேற்றி வத்தி ஏற்றி வைத்து கடவுளை வணங்கி விட்டு சமையலறைக்கு சென்றாள்.

 அடுப்பில் பாலை வைக்கும் பொழுது தனக்கு மட்டும் போடுவதா இல்லை கணவனுக்கும் சேர்த்து போடுவதா என்ற குழப்பம் எழ, அதை அத்வைத்தே தீர்த்து வைத்தான் எனக்கு ஒரு காஃபி கிடைக்குமா என்று கேட்டு. காஃபியை தயாரித்து கணவனுக்கு கொடுத்துவிட்டு தன் காஃபியுடன் அவளுக்கு பிடித்த இடமான தோட்டத்தில் குல்மொஹர் மரத்தினடியில் அமர்ந்தாள்.

மலர்ந்திருந்த ரோஜா பூக்களை ரசித்தபடி காஃபியை பருக, அவள் பக்கத்தில் அத்வைத் வந்தமர ஸ்ரீயின் புருவங்கள் ஆச்சர்யத்தில் உச்சி மேட்டிற்க்கே சென்றது.

அதே சமயம் இன்டெர்வியூ பற்றியும், கண்டிஷனை வாபஸ் வாங்குவதை பற்றியும் பேசிவிடலாமா, இது தான் சரியான சந்தர்ப்பம்.

“என்ன ஸ்ரீ நேற்றிலிருந்து நீ பேசிய வார்த்தைகளை ஒரு பக்கத்தில் அடக்கிடலாம் போலிருக்கு. எப்பொழுதும் ஏதோ தீவிர யோசனையிலேயே இருக்கே. ஏன் என்னிடம் ஏதும் சொல்லணுமா? இல்லை கேட்கணுமா…?

எடுத்த முடிவை எப்படி கணவனிடம் சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தவள், அவனே கேட்கவும் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டாள். 

“உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும்…”என்றவள் வேலைக்கான இன்டெர்வியூ பற்றி கூற அத்வைதின் முகம் மலர்ந்தது. 

“வாவ் கங்கிராட்ஸ் ஸ்ரீ, குட் மூவ் ஆன் ஆக முயற்சி எடுத்திருக்கே. நைஸ்…”என்று அவள் கையை பிடித்து குலுக்க ஸ்ரீயின் இதழ்களில் கைந்த புன்னகை நெளிந்தது.

“அப்புறம் இன்னொரு விஷயமும் சொல்லணும் …”என்றாள் தயக்கம் கலந்த சன்னக்குரலில். 

“ஹ்ம்ம்…”

“நேற்று நான் போட்ட கண்டிஷனில் நீங்க வீக்கெண்டில் என்னுடன் சாப்பிடணும்ன்னு சொன்ன கண்டிஷனை வாபஸ் வாங்கிக்கிறேன். சாரி ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிட்டேன்…”

“ஹேய் வெயிட் …வெயிட் … இப்போ என்ன நடந்துச்சுன்னு கண்டிஷனை வாபஸ் வாங்கறே. ஏதோ உன் கண்டிஷன் புண்ணியத்தில் நேற்று நல்ல சாப்பாடு கிடைச்சுதேன்ன சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கேன். இப்படி கவுத்துட்டியே. ஆனால் என் கண்டிஷனை வாபஸ் வாங்கமாட்டேன்ம்மா …”என ஸ்ரீயிடமிருந்து மெல்லிய புன்னகை வெளிப்பட்டது. 

“இல்லை …நான்…”என காலிங் பெல் சத்தம் கேட்க ஒரு நிமிஷம் என்று அத்வைத் வெளியே செல்ல ஸ்ரீயும் அவனுடன் சென்றாள். 

கேட்டிற்கு வெளியே ஒரு பெண்மணி நிற்க, அத்வைத் கேட்டை திறந்து விட்டு உள்ளே வர சொல்ல, ஸ்ரீ கணவனை கேள்வியாக நோக்கினாள். 

“இவங்க மல்லிகா. இனிமே வீட்டு வேலையெல்லாம் நீ செய்ய வேண்டாம். இவங்களே எல்லாவற்றையும் பார்த்துக்குவாங்க…”என்றவன், “நீங்க போய் டிஃபன் வேலையை கவனிங்க…”என்று வேலைக்காரியை அனுப்பி வைக்க ஸ்ரீக்கு கணவனின் நடவடிக்கையில் தலையே சுற்றியது.

“இப்போ எதற்கு தேவையில்லாமல் ஒரு வேலைக்காரி. தேவையில்லாமல் நாமே பிரச்சினையை பேரம் பேசி வாங்கற மாதிரி இருக்கு…”

“வாட் யூ மீன் …? 

“நம் வீட்டு நிலைமையை இந்தம்மா பார்த்துட்டு போய் ஊர் முழுக்க சொல்ல போறாங்க. இத்தனை நாள் யாருக்கும் தெரியாம இருந்தது. இப்போ …”என்றவள் அதற்கு மேல் பேசாமல் உள்ளே செல்ல அத்வைத் தனக்குள் புன்னகைத்துக்கொண்டான். 

வேலைக்காரி எல்லா வேலைகளையும் பார்த்துவிட்டதால் ஸ்ரீக்கு செய்ய வேலைகள் இல்லாமல் அறையிலே அடைந்து கிடந்தவள் அடுத்த நாள் இன்டெர்வியூ செல்ல தனது சர்டிபிகேட்ஸ் தன் வீட்டிலிருந்து எடுத்து வர ரெடியாகி வெளியே வர டிவி பார்த்துக்கொண்டிருந்தவன் கேள்வியாக நோக்கினான்.