நெஞ்சோடு வலம் வா தேவதையே …

அத்தியாயம் – 7

“நாங்க இந்த வீட்டில் இருக்க கூடாதா, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை…”

“நீங்க இரண்டு பேரும் ஒரு வருஷத்திற்கு தனி வீட்டில் இருங்கன்னு அர்த்தம். உங்களுக்காக வேளச்சேரி வீட்டை ரெடி செய்து வைச்சிருக்கோம். நீங்க இரண்டு பேரும் நாளையே அங்கே குடி போய்டுங்க…”என்று மகன் குறுக்கே பேச முயற்சித்ததையும் மீறி அரவிந்தன் சொல்லி முடிக்க அத்வைத்தின் முகம் சுருங்கியது. 

“என்னம்மா இது, இப்போ நாங்க தனியா போக வேண்டிய அவசியமென்ன. அதெல்லாம் தேவையில்லை…”என்று ஆட்சேபித்தான்.

“இல்லை அத்வைத், கொஞ்ச நாளைக்கு நீங்க தனியா இருப்பது தான் சரி. நீங்க ரெண்டு பேரும் உங்க துணிமணிகளை பேக் பண்ணிக்கங்க…”என்றவர் மேற்கொண்டு பேச எதுவுமே இல்லை என்கிற மாதிரி சாப்பிட அத்வைதின் விழிகள் மனைவி பக்கம் தாவியது. 

அவளோ வழக்கம் போல தனக்கு இதுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்று சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவனின் பற்கள் நறநறத்தது. 

சொன்னது போலவே அடுத்த நாள் தங்கள் சம்மந்தியுடன் இருவரையும் அழைத்துச் சென்று சின்னதாக கணபதி ஹோமம் செய்து குடி  வைத்துவிட்டு மதியம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள் பெரியவர்கள். எல்லோரும் சென்றதும் கணவன் மாடியிலிருந்த அறைக்குள் புகுந்துக்கொள்ள, ஹாலின் நடுவில் யாகம் நடத்த செங்கற்களால் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை எடுத்து சுத்தம் செய்து முடிக்க வியர்த்து விட்டிருந்தது. கீழே அமைந்துள்ள அறையில் முகத்தை கழுவி, முடியை சீர் செய்துக்கொண்டு சமையலறைக்குள் சென்று பிரிட்ஜை திறக்க, எல்லாமே வாங்கி அடுக்க பட்டிருந்தது. 

புன்னகையுடன் பாலை அடுப்பில் வைத்து காஃபியை தயாரித்துக்கொண்டு வெளியே வர, அத்வைத் வெளியில் செல்லும் உடையுடன் கீழே இறங்கி வந்தான். 

“காஃபி …”என்ற மனைவியின் குரலுக்கு நின்று ஒரு நிமிடம் நிதானித்து காஃபி கப்பை எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தான். 

அவனெதிரில் அமர்ந்தவள்,”எங்கே போறீங்க…”என சரேலென நிமிர்ந்தான். 

“லுக் ஸ்ரீ, அப்பாவும், அம்மாவும் என்ன காரணத்துக்காக இங்கே நம்மை குடி வைச்சாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் நான் முதலிரவில் என்ன சொன்னேனே அந்த வார்த்தை என்றைக்கும் மாறாது. நீதா தான் என் வருங்கால மனைவி. அன்று மாலில் என் மேல் உள்ள காதலில் தான் நீதா அப்படி நடந்துக்கிட்டாள். அதற்காக அவள் கெட்டவள் இல்லை. உலகத்துக்கும், உங்க வீட்டுக்கும், எங்க வீட்டுக்கும் வேண்டுமானாலும் நீயும் நானும் புருஷன் பெண்டாட்டியா இருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குள் நீ யாரோ நான் யாரோ. என் உரிமையில் நீ தலையிடாதே. அதே போல உன் உரிமையில் நான் தலையிட மாட்டேன்…” என்று எழ ஸ்ரீ விக்கித்து போய் அமர்ந்திருந்தாள். 

காஃபி கப்பை எடுத்துக்கொண்டு கிச்சனில் வைத்துவிட்டு வந்தவன், ஸ்ரீ சமைந்து போய் அமர்ந்திருக்கவும் குரலை கனைக்க அவளின் விழிகள் கணவனை நோக்கி நிமிர்ந்தது. 

“அப்புறம் எனக்காக நீ எதையும் செய்ய வேண்டாம், நான் அதை எதிர்பார்க்கலை. நீ இந்த வீட்டில் சுதந்திரமா வளைய வரலாம். உனக்கு என்ன வேண்டுமோ நீ சமைத்து சாப்பிடலாம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் என்னை தொல்லை செய்ய கூடாது…”என்று கறாராக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸை சொல்லிவிட்டு நகர, ஒரு நிமிஷம் என்று நிறுத்தினாள்.

திரும்பாமலே நின்றவனின் முன் சென்று,”இவ்வளவு கறாராக என்னிடம் பேசுகிறவர் அதை உங்க பெற்றவர்களிடமும் சொல்லி நம் திருமணத்தை நிறுத்தி இருக்கலாமே. எதற்கு இப்படியொரு திருமணத்தை செய்து என் வாழ்க்கையை நாசம் செய்தீங்க. நான் என்ன செய்தேன் உங்களுக்கு. அட்லீஸ்ட் என்னை திருமணத்திற்கு முன்பு இரண்டு மூன்று முறை ஏதோ சாஸ்திர ஸம்ப்ரதாயம் என்று சந்தித்தீர்களே, அன்றே சொல்லியிருந்தால் கூட நான் சுதாரித்து இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பேனே. இப்போ ஊருக்கு முன்பு நான் உங்களின் மனைவியாக நிற்கிறேன். 

 சரி உங்க சொல்படி நான் என் வீட்டுக்கு போனால் மட்டும் நான் உங்களின் மனைவி என்ற அந்தஸ்து இல்லைன்னு ஆயிடுமா. நீங்க வேற ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கலாம். ஆனால் எனக்கு வாழா வெட்டி பெயர், அப்படியே டிவோர்ஸ் வாங்கினாலும் டிவோர்ஸி என்ற பெயர் தானே. இதையெல்லாம் விட இன்னொரு திருமணம் செய்தாலும் இரண்டாம் திருமணம் தானே, அது முதல் திருமணம் இல்லையே. மொத்தத்தில் என் வாழ்க்கை பஸ் சக்கரத்தில் மாட்டின எலியாய் சிதைந்து சீரழிஞ்சி போச்சு. அதை பற்றி உங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை அப்படி தானே…”என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி நிறுத்த அத்வைத் மௌனமாக தன் கையிலிருந்த மொபைலை உருட்டிக்கொண்டிருந்தான். 

“சொல்லுங்க, என் வாழ்க்கைக்கு என்ன பதில்…? என்றவளின் கோபம் புரிந்தாலும் தன்னால் செய்ய கூடியது ஒன்றுமில்லையே என்ற எரிச்சல் எழுந்தது. 

சில நொடிகள் மௌனித்தவன்,”சாரி உன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அதற்காக உன் வாழ்க்கை ஏன் வீணாக போகணும். நீ எம்.எஸ்சி படிச்சிருக்கே. வேலைக்கு போகணும் என்று ஆசைப்பட்டால் நானே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யறேன். வேறு என்ன தேவையென்றாலும் செய்யறேன். அவ்வளவு தான். இதற்கு மேல் உன் முடிவு. ஓகே எனக்காக நீதா காத்திருப்பாள். நான் கிளம்பறேன்…”என்று வேகமாக வெளியேற ஸ்ரீ தொய்ந்து போய் அமர்ந்தாள். 

எவ்வளவு நேரம் சென்றதோ, அழுதழுது ஓய்ந்து போய் சோபாவிலேயே உறங்கிவிட்டிருந்தாள். இரவு அத்வைத் விசிலடித்தபடி தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்துக்கொண்டு வர ஹால் இருட்டாக இருந்தது. ஹாலிலிருந்த ஸ்விட்சை தட்ட பளிச்சென்று வெளிச்சத்தை உமிழ, அவன் விழிகளில் சோஃபாவில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி பட வேகமாக அவளை நெருங்கினான். 

கை கால்களை குறுக்கிக்கொண்டு கர்ப்பபையில் இருக்கும் குழந்தை போல படுத்திருக்க, அவள் கன்னங்களில் காய்ந்த கண்ணீரின் தடம் தெரியவும் அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. 

‘ச்சே பாவம் எனக்கும், நீதாவுக்கும் நடுவில் இவள் தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டுவிட்டாள் ‘ என்று பரிதாபம் எழுந்தது. அவள் ரூமில் படுக்க சொல்லி எழுப்பலாம் என்று கையை கொண்டு போனவன் என்ன நினைத்தானோ அந்த நினைப்பை கைவிட்டு ரூமிற்க்கு சென்று ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு வந்து அவள் மேல் போர்த்திவிட்டு  தன் அறைக்கு சென்றான்.

பறவைகளின் கலகத்வனியில் உறக்கம் கலைந்து எழுந்த ஸ்ரீக்கு தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை கண்டதும் ஆச்சர்யமாக இருந்தது யார் போர்த்தியிருப்பார்கள் என்று. தன்னை தவிர இந்த வீட்டில் இருப்பது கணவன் என்று புரிய, எரிச்சலுடன் போர்வையை உதறி மடித்து வைத்தாள். குளித்துவிட்டு சமயலறைக்கு காஃபியை தயாரிக்க எத்தனிக்க முதல் நாள் மதியம் கணவன் பேசியது மனதில் ஊர்வலம் வரவும் பசி என்ற உணர்வு மந்தித்து போக மீண்டும் தன்னறைக்கு திரும்பி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துக்கொண்டாள். திருமணமான அன்றிரவு கணவன் பேசியது அதிர்ச்சியாக இருந்தாலும் அடுத்த நாள் தான் காணாமல் போன பொழுது தன்னை தேடி அலைந்ததும், தனக்காக அக்கறைப்பட்டதும் அவளுள் சிறு நம்பிக்கையை விதைத்திருந்தது கணவன் மனம் மாறிவிடும் என்று. 

ஆனால் நேற்று அவன் கருத்தையே மீண்டும் வலியுறுத்தவும் அவளுள் துளிர்த்திருந்த சிறு நம்பிக்கை செடி ஆஸிட் ஊற்றியது போல கருகிவிட, வாழ்க்கையே சூனியமாக தோன்றியது. தன்னுடைய எதிர்காலம் இனி என்ன ஆகுமென்று யோசிக்க கூட பயமாக இருந்தது. தன் நிலையை விட பெற்றவர்களை நினைத்து தான் பயமாக இருந்தது. எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு பிறந்த வீட்டுக்கு செல்ல ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் அதன் பிறகு …? 

எந்த யோசனையுமின்றி கால்களை மடித்து அமர்ந்து அதில் தலையை சாய்த்து விழிகளை மூடிக்கொண்டாள். தன் திருமணத்திற்காக தாயும் தந்தையும் சந்தோஷத்தோடு ஓடி ஓடி வேலை செய்தது, தன் கழுத்தில் தாலி ஏறியதும் அவர்கள் அடைந்த சந்தோஷமும் நினைவு வர விழிகளிலிருந்து அவளையும் மீறி கண்ணீர் வழிந்தது.

மாடியிலிருந்து கிளம்பி கீழே வந்தவன் காஃபி தாயாரிக்க சமயலறைக்கு வர, அங்கே சாப்பாடு தயாரித்த மாதிரி அறிகுறியே இல்லாத மாதிரி இருக்க மனைவியை தேடி அவள் அறைக்கு வந்தான். கதவு மூடப்படாமல் வெறுமே மூடி வைத்திருக்கவும் கதவில் கையை வைத்ததும் அது உள்வாங்கிக்கொள்ள விழிகளால் அறையை அலசினான். 

சோஃபாவில் அமர்ந்திருந்த விதம் அவன் மனதை ஏதோ செய்ய, அவளை நெருங்கி மென்மையாக அவள் தோளை தொட்டு அழைத்தான்.  விலுக்கென்று நிமிர்ந்தவள் கணவனை கண்டதும் வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டாள். 

“ஏதாவது சாப்பிட்டாயா ஸ்ரீ…? கேள்வியில் அக்கறை தொனித்தது.

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனிக்க, சில நொடிகள் அவளின் பதிலுக்காக காத்திருந்தவன் பதில் வரவில்லை என்றானதும் அறையை விட்டு சமயலறைக்கு சென்றான். அடுத்த சில நிமிடங்களில் காஃபியும், அவசரமாக தயாரிக்க கூடிய நூடுல்ஸும் செய்து எடுத்துக்கொண்டு வந்து அவள் முன்னிருந்த டீபாயில் வைத்தான். 

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போறே ஸ்ரீ, நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டால் தான் அடுத்து செய்ய போவதை பற்றி முடிவெடுக்க முடியும். முதலில் சாப்பிடு. அப்புறம் பேசலாம்…” என்றான் மன்றாடலாக.

அப்பொழுதும் ஸ்ரீ அவனை நிமிர்ந்து பார்க்காமல் அதே போஸில் அமர்ந்திருக்க, அத்வைதின் பொறுமை காற்றில் பறந்தது. அவளருகில் அமர்ந்து வலுக்கட்டாயமாக நூடுல்ஸை போர்க் வைத்து ஊட்டிவிட கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. இந்த அன்பும், அக்கறையும் எனக்கு சொந்தமாக இருக்க கூடாதா என்ற ஏக்கம் எழ, சாப்பிட முடியாமல் தொண்டையை அடைத்தது. தட்டை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள் நான் சாப்பிடுகிறேன் என.

“ஹ்ம்ம் குட், மிச்சம் வைக்காமல் சாப்பிடு. இனி தேவையில்லாமல் பட்டினி கிடக்காதே …”என்று அறிவுறுத்திவிட்டு அறையை விட்டு வெளியேற அவளுக்கோ துக்கம் தொண்டையை அடைத்தது. 

சாப்பிட்டு  முடித்து தட்டை கொண்டு போய் சிங்கில் போட்டுவிட்டு ஹால் சோஃபாவில் அமர்ந்து டிவியை உயிர்ப்பித்தாள். சில நொடிகள் அதில் ஓடிய பாடல்களை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு இப்படி காதல் செய்ய கணவன் தனக்கில்லை என்று தோன்றியதும் மூச்சு முட்டுவது போலிருந்தது. சட்டென்று எழுந்து தோட்டத்து பக்கம் செல்ல சிலு சிலுவென்று காற்று இதமாக வீச குல்மொஹர் மரங்களிடையே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர மனதுக்கு சற்று இதமாக இருந்தது. 

வயிறும், மனமும் நிறைந்ததால் என்னவோ மனதில் சற்று தெளிவு உண்டாக மூளை அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது.

இனி இப்படியே அழுது கரைவதால் மட்டும் கணவன் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் மனதில் ஏற்கனவே ஒரு பெண் இருக்கும் பொழுது தாலியே கட்டினாலும் தனக்கு மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காது என்று ஆணி அடித்த மாதிரி புரிந்தது. அதற்காக பெற்றவர்களிடம் சொல்ல முடியாது. கோபப்பட்டு வீட்டை விட்டு சென்று பிரச்சினைகளை உண்டாக்குவதற்கு பதில் இங்கேயே இருந்து வேலைக்கு சென்றால் என்ன என்று தோன்றியது. 

வீட்டிலேயே இருந்தால் கண்டிப்பாக தேவையில்லாததை யோசித்து கழிவிரக்கத்தில் கரைந்து உடலும், மனதும் நிச்சயம் வீணாகிவிடும். நான் மூவ் ஆன் ஆக வேண்டுமென்றால் வேலைக்கு போவது ஒன்று தான் சரியான வழி என்று தோன்ற எழுந்து உள்ளே வந்து தன் போனை எடுத்துக்கொண்டு மீண்டும் குல்மொஹர் மரத்தினடியில் அமர்ந்து தன் படிப்பிற்க்குண்டான வேலை வாய்ப்பை தேட ஆரம்பித்தாள். 

ஒரு சில ஜாப் ஆபர் கண்ணில் பட அவற்றை குறித்து வைத்துக்கொண்டாள். தன்னுடைய லேப்டாப் எடுத்து வந்து விண்ணப்பிக்க மனதினுள் சிறு தெம்பு உண்டானது. வேலை நல்ல படியாக கிடைக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு உண்டானதுமே கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றியது.  தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு வேறு புடவையில் மாறி தன் கைப்பையுடன் வீட்டை பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கி ஆட்டோ பிடித்து மத்ய கைலாஷ் கோவிலுக்கு சென்றாள். 

ஆனந்த விநாயகருக்கு அர்ச்சனை செய்து வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துவிட்டு மற்ற கடவுள்களையும் தரிசித்துவிட்டு அங்கேயே ஓர் ஓரமாக அமர இவ்வளவு நாள் இல்லாத அமைதி மனதினுள் பரவியது. அங்கேயே அமர்ந்து கோவிலுக்கு வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. கோவிலை பூட்ட போகிறோம் அர்ச்சகரின் வார்த்தைகளுக்கு தன்னிலைக்கு வர மணிக்கட்டை திருப்பி நேரத்தை பார்க்க மணி எட்டாகி இருந்தது. 

அவசரமே இல்லாமல் எழுந்து மீண்டும் கோபுரத்தை நோக்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு வெளியே வர, சென்னை போக்குவரத்து ஜெ ஜெவென்றிருந்தது. ஆட்டோவை பிடிக்காமல் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். இதுவரை இப்படி அவள் நடந்ததே இல்லை. தந்தை அவளை தனியாக எங்கேயும் போக விட்டதில்லை. தாயும், தந்தையும் அவளை கைக்குள்ளே வைத்து வளர்த்திருந்ததால் அவள் தனியாக எங்கேயும் சென்றதில்லை. இது அவளுக்கு புது அனுபவமாக இருக்க இதழ்களில் மெல்லிய புன்னகை ஜனித்தது.

ஆபிஸ் முடிந்து நீதாவை சந்திக்க சென்றவன் அவளுக்கு பிரெண்டோட பர்த்டே பார்ட்டிக்கு சென்றிருக்கிறாள் என்று செய்தி கிட்ட எங்கேயும் செல்ல மனமில்லாமல் வீட்டுக்கு திரும்பியவனை பூட்டிய கேட் தான் வரவேற்றது. முதல் நாள் மாதிரி ஸ்ரீ உறங்கி விட்டாலும் மெயின் டோர் பூட்டி இருக்கும். கேட் உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்கும். ஆனால் கேட் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருக்க அத்வைத்க்கு ஆச்சர்யமாக இருந்தது. 

தன்னிடமிருந்த சாவியால் கேட்டை திறந்து காரை பார்க் செய்துவிட்டு வீட்டினுள் சென்று தன்னறைக்கு சென்று ரெப்பிரேஷ் செய்து கீழே வர ஸ்ரீ வந்திருக்கவில்லை. டிவியை உயிர்ப்பித்துவிட்டு கிச்சனுக்கு சென்று காஃபியோடு ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்து காஃபியை குடித்தபடி நெட்பிலிக்சில் ஆங்கில படமொன்றை தேர்ந்தெடுத்து அதில் மூழ்கினான். 

திடிரென்று ஏதோ தோன்ற அவனின் விழிகள் தன் பக்கத்தில் வைத்திருந்த கைபேசியில் பதிய மணி ஏழே முக்கால் என்றதும் அப்பொழுது தான் அவன் வந்தே ஒன்றரை மணி நேரம் ஓடியிருப்பது புரிந்தது. படத்தில் மூழ்கியிருந்ததால் நேரம் சென்றதே தெரியவில்லை. வெளியில் போன ஸ்ரீ வீடு திரும்பவில்லை என்றதும் அவனுக்கு சொரேர் என்றிருக்க அவசரமாக அவளின் எண்ணுக்கு அழைத்தான். 

ஸ்ரீ மாலில் கடத்தப்பட்ட அன்றே அவளின் நம்பரை வாங்கி சேமித்துவைத்துக்கொண்டான். 

அவளின் கைபேசி சத்தம் பக்கத்தில் எங்கேயோ கேட்க அவசரமாக எழுந்தான். சத்தம் வந்த திசையை நோக்கி சென்றவன் அது அறையை காட்ட வேகமாக உள்ளே செல்ல அவளின் கைபேசி கட்டிலின் மேல் இருக்கவும் அத்வைத் தளர்ந்து போனான். 

“ஹையோ போனை வைத்துவிட்டு எங்கே சென்றாள், ஒரு வேளை என் மேலிருக்கிற கோபத்தில் எங்கேயாவது போய்விட்டாளா, இல்லை ஏதாவது செய்துகொண்டு விட்டாளா. கடவுளே அப்பா, அம்மா கேட்டால் என்ன பதில் சொல்வது. ஸ்ரீ வீட்டில் என்னவென்று சொல்வது….” என்று வாய்விட்டே புலம்பியவன் அவசரமாக அவன் அறைக்கு சென்று பேண்ட் ஷர்ட்டில் மாறி கார் சாவியுடன் வெளியே வந்து வீட்டை பூட்டிக்கொண்டு காரை உசுப்பினான் பதட்டத்துடன்.