நெஞ்சோடு வலம் வா தேவதையே…

அத்தியாயம் -6

மகனின் கலக்கம் இரு பெற்றவர்களுக்கும் சிறு நம்பிக்கையை கொடுக்க அதன் விளைவாக அரவிந்தனுக்கு மகன் மேலிருந்த கோபம் சற்று மட்டுப்பட்டது.

“ஸ்ரீயை கடத்துவதை பார்த்த பதட்டத்தில் அவர்களிடமிருந்து அவளை காப்பாற்றவும், அடிபட்டிருந்தவளுக்கு சிகிச்சை கொடுக்கவும் தான் எங்களுக்கு தோன்றியது. அதனால் உனக்கு போன் செய்ய தோணலை. இனியாவது புத்தியோடு பொழைச்சிக்கோ. அடுத்தவன் புருஷனை பொது இடமென்று கூட பாராமல் கட்டியணைச்சி முத்தமிடற மேனர்ஸ் இல்லாத பெண் வேண்டுமா? தாலி கட்டியவனாக இருந்தாலும் அவன் வேறொரு பெண்ணோடு பேசும்பொழுது அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிற பெண்  வேண்டுமான்னு முடிவு பண்ணிக்கோ… “என்று அறிவுறுத்திவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க இருவரையும் நிறுத்தினான். 

“இப்போவே மணி ஒன்பது ஆயிடிச்சு. ஸ்ரீ வீட்டில் எல்லோரும் காத்திருப்பாங்களே. எப்படிப்பா இவளை இந்த நிலைமையில் அழைச்சிட்டு போறது…? 

“டோன்ட் ஒர்ரி, நான் ஏற்கனவே போன் செய்து சொல்லிட்டேன் சம்மந்திக்கிட்டே. நாளை காலையில் நீங்க போனால் போதும்…”என்ற தகவலை சொல்லிவிட்டு அரவிந்தன் கீழே செல்ல அத்வைதின் பார்வை தாயிடம் தாவியது. 

“டிரஸ் மாத்திக்கிட்டு சாப்பிட வாப்பா…”என்றவர் மேற்கொண்டு எதையும் பேசாமல் கீழிறங்க அத்வைத் மனைவியின் பக்கத்தில் அமர்ந்து சிப்பியாய் விழி மூடி உறங்கிக்கொண்டிருந்தவளை கன்னத்தில் கையை வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். 

திடிரென்று ஸ்ரீயின் உறக்கம் கலைந்து எழ, தலை விண் விண்ணென்று தெறித்தது. ஒரு நிமிடம் தான் எங்கேயிருக்கிறோம் என்று தெரியவில்லை. விழிகளை சுழற்ற பக்கத்தில் கணவன் படுத்திருக்க, அப்பொழுது தான் புரிந்தது அவனுடைய கட்டிலில் படுத்திருப்பது. பதறி வேகமாக எழுந்திருக்க முயற்சி செய்ய உடம்பின் ஒவ்வொரு பாகமும் அணு அணுவாய் வலித்தது. 

பல்லைக்கடித்து சிரமப்பட்டு கட்டிலிலிருந்து காலை கீழே வைத்து எழ, கணவனின் குரல் கேட்டது. 

படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து முகத்தை சோம்பலாக தேய்த்தபடி,”இப்போ பெயின் எப்படி இருக்கு ஸ்ரீ. அதற்குள் ஏன் எழுந்தே, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே…”

“ஐ ம் ஓகே, பரவாயில்லை …”என்றபடி ஒரு அடி எடுத்து வைக்க, தலை சுற்றியது. 

அவள் தடுமாறவும், பதறி எழுந்து அவளை பிடிக்க எத்தனிக்க, ஸ்ரீ சட்டென்று அவனிடமிருந்து விலகினாள். தலையை பிடித்தபடி மெதுவாக நடந்து அறையை விட்டு வெளியே செல்ல அத்வைதின் விழிகள் அவளையே பின்தொடர்ந்தது. எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ அவனின் கைபேசி சிணுங்கி அழைக்க ஒரு பெருமூச்சுடன் கைபேசியை எடுக்க, டிஸ்பிளேயில் நீதாவின் முகத்தை கண்டதும் எரிச்சலில் முகம் சுருங்கியது.

போனை எடுக்காமல் பக்கத்தில் தூக்கி போட்டுவிட்டு ரெப்பிரேஷ் செய்ய எழ, மீண்டும் போன் சிணுங்கியது. அதை கவனிக்காமல் செல்ல நினைத்தாலும் விடாமல் சிணுங்கியது. 

எரிச்சலோடு எடுத்து,”சொல்லு …”என்றான் வெடுக்கென.

“ஹேய் பேபி என்ன இது, காலையிலே உன் குரலை கேட்க ஆசையாக போன் செய்தால் ஒரு குட் மார்னிங் கூட சொல்லாமல் கோபமாக பேசறே? என்னாச்சு டார்லிங். இன்று எனக்கு டூட்டி இல்லை, எங்கேயாவது வெளியில் போகலாமா ப்ளீஸ் அத்து…”என்று கிறக்கத்துடன் கொஞ்ச அத்வைத்துக்கோ பற்றிக்கொண்டு வந்தது முதல் நாள் அவள் நடந்துக்கொண்டு விதத்தில். 

“சாரி எனக்கு வேலையிருக்கு, என்னால் எங்கேயும் வர முடியாது. போனை வை…”என்று இணைப்பை துண்டிக்க நினைக்க நீதாவின் குரல் கத்தி அவனை நிறுத்தியது. 

“என்ன அத்வைத் இது, உனக்கு என்ன ஆச்சு? நேற்று சினிமாவுக்கு போகலாம்ன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டே. இன்றும் அப்படியே சொல்றே? வெறுப்பா வேறு பேசறே…? ஏண்டா ஏதும் குழப்பத்தில் இருக்கியா…?

“எனக்கு ஒன்றும் ஆகலை, இப்போ தான் தெளிவா இருக்கேன். நேற்று என்ன ஆச்சுன்னு தெரியுமா? நீ செய்த அராஜகத்தில் ஸ்ரீயை இரண்டு பேர் கடத்திட்டு போக முயற்சி செய்திருக்காங்க. சரியான நேரத்தில் என் அம்மா, அப்பா மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும். போதும் நீதா, இத்தோடு உன் விளையாட்டை நிறுத்திக்கோ. பொது இடத்தில் எப்படி பிஹேவ் செய்யணும்ன்னு தெரியலை. உன்னை போன்ற பெண்ணிடம் ஒழுங்கா நடந்துக்க தெரியலை. நீயெல்லாம் எப்படி டாக்டரா ப்ராக்டிஸ் பண்றே, ஐ காண்ட் பிலீவ் இட் …? 

“ஓ இவ்வளவு நாளா இல்லாத சந்தேகம் சாருக்கு ஏன் இப்போ வருது…? புது பொண்டாட்டி வந்ததும் உருகி உருகி காதலிச்ச காதலி கசக்க ஆரம்பிச்சிட்டாளா….?

“ஷட் அப் நீதா, என்ன இது அநாகரிகமான பேச்சு. உனக்கு மேனர்ஸ் என்பதே கிடையாதா…? என்றான் கோபத்தோடு.

“அப்போ சாருக்கு அதிகமா மனேர்ஸ் இருக்கு போல. அதனால் தான் காதலிச்சவளை விட்டுட்டு இன்னொருத்திக்கு தாலி கட்டினீங்களோ. இதில் எனக்கு அது இல்லை, இது இல்லைன்னு பட்டியல் போடறாரு. உன் புது பொண்டாட்டி மோகம் உன்னை ஆட்டி படைக்குதோ. அதற்காக என்னை கழட்டிவிட தேவையில்லாமல் அக்யூஸ் பண்றே, அப்படி தானே. லுக் அப்படி மட்டும் நடந்தது, நான் ராட்சசியா மாறிடுவேன். என்றைக்கு இருந்தாலும் நீ என் கழுத்தில் தாலி கட்டியாகணும். வேற மாதிரி பிளான் செய்தால் நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். மைண்ட் இட்…”என்று கிட்டத்தட்ட மிரட்டிவிட்டு இணைப்பை துண்டிக்க அத்வைத் அவளின் பேச்சில் அரண்டு போனான். 

எல்லாம் சில நொடிகள் தான். சிட்டு குருவி ஈர சிறகை உதறுவது போல, இவள் என்ன என்னை மிரட்டுவது என்று நீதாவின் பேச்சை அலட்சியமாக உதறிவிட்டு,”ப்ச் சும்மா என்னை மிரட்டி பார்க்கிறாள், என்னை நேரில் பார்த்தால் நிச்சயம் ஐஸ்க்ரீமா உருகிடுவா…”என்று சிரித்தபடி பாத்ரூமினுள் நுழைந்தான். 

அடுத்த சில நொடிகளில் குளித்து ரெடியாகி கீழே வர தாயும், தந்தையும் தனக்காக காத்திருப்பது புரிய அவர்களை நெருங்கினான்.  அவனின் விழிகள் மனைவியை தேடி சுழன்றது. 

மகனின் பார்வை புரிந்தும், புரியாதவர் மாதிரி,”என்ன அத்வைத் தேடறே…? 

“ஸ்ரீ எங்கே, அவளை அழைச்சுக்கிட்டு அவள் வீட்டுக்கு போகணுமே. ரெடியாயிட்டாளா…”என்று விசாரிக்க, வத்ஸலாவின் பார்வை கணவரை நோக்கி பாய்ந்தது அவசரமாக அதே சமயம் மெச்சுதலாக. 

“உன் ரூம் எதிர் ரூமில் தான் இருக்காள், நீயே போய் அவளிடம் பேசு…”

வேறு ஒரு அறையிலா என்று கேள்வியாக நெற்றியை சுருக்கினாலும் மாடியேறி தாய் சொன்ன அறை முன் நின்று மெலிதாக கதவை தட்டி அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான். சோஃபாவில் அமர்ந்து விட்டத்தை பார்த்தபடி ஸ்ரீ யோசனையில் ஆழ்ந்திருக்க, உள்ளே வந்த கணவனை கண்டதும் அவசரமாக எழ முயற்சிக்க அவளை அமர சொல்லி அவளெதிரில் அமர்ந்தான். 

“ஹவ் டூ யு பீல் நவ் ஸ்ரீ …” என்ற கணவனின் அக்கறையான விசாரிப்பில் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.

இந்த அக்கறையும், அன்பும் என்றுமே எனக்கு சொந்தமானது இல்லை. இது எனக்கு அடிபட்டதால் வந்த அக்கறை. இந்த காயம் சரியானதும் இவரின் அக்கறையும் காற்றில் கரைந்த கற்பூரமாக காணாமல் போய்விடும். தாலி கட்டி கணவன் வீட்டில் இருந்தாலும் நான் என்றுமே வாழா வெட்டி தான் என்ற எண்ணம் எழுந்ததுமே கழிவிரக்கத்தில் விழிகளில் நீர் துளிர்க்க முயல அதை கணவன் முன் காட்ட பிடிக்கவில்லை.

கண்ணீரை மறைக்க தலையை குனிந்து விரல்களை ஆராய்ச்சி செய்தபடி,”ஹ்ம்ம் பைன்…” என்றாள் மிக சுருக்கமாக.

“சரி ரெடியாகு, உங்க வீட்டுக்கு போகலாம்…” என்றபடி எழ முயற்சிக்க ஸ்ரீயின் வேண்டாம் என்ற பதிலில் மீண்டும் அமர்ந்தான். 

“வேண்டாமா ஏன் ? உங்க அப்பா, அம்மா கேள்வி கேட்க மாட்டாங்களா…? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக ஸ்ரீ உள்ளுக்குள் இறுகி போனாள் தன் பெற்றோரை அத்தை, மாமா என்று அழைக்காமல் உன் அப்பா, அம்மா என்றதில்.

உடனேயே மனது சமாதானமும் செய்துக்கொண்டது தன்னையே மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லையாம், என்னை பெற்றவர்களை மட்டும் எப்படி மாமியார், மாமனாராக ஏற்றுக்கொள்வார் என்று. 

மனைவி அமைதியாக இருக்கவும்,”சொல்லு ஸ்ரீ உங்க வீட்டுக்கு ஏன் போக வேண்டாம். நீ உன் வீட்டில் பேசினாயா…? 

“ஹ்ம்ம், இந்த நிலையில் நான் வீட்டுக்கு போனால் அம்மாவும், அப்பாவும் பயந்திடுவாங்க. ஏகப்பட்ட கேள்விகள் எழும். அப்புறம் உங்களை தவறா நினைக்க கூடும். அதனால் தான் அங்கே போக வேண்டாம் என்றேன். நான் அப்பாவிடம் பேசிட்டேன். நீங்க மட்டும் போய் நம்ம லக்கேஜை கொண்டு வந்துடுங்க. போதும்…”என்று அவன் முகத்தை பார்க்காமலே கூறி முடிக்க அத்வைத்க்கு அவள் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தது. 

“ஓகே குட், சரி நான் போய் லக்கேஜை எடுத்திட்டு வந்துடறேன்…”என்று எழுந்தவன் ஏதோ தோன்ற மீண்டும் அமர்ந்தான். 

“ஆமாம் நேற்று யார் உன்னை கடத்தினார்கள், ஏன், எப்படி…? 

“யாரென்று தெரியலை, ஏன் எப்படி என்றால்? என்று கேள்வியை திருப்பினாள். 

“இல்லை அவ்வளவு ஜனநடமாட்டம் இருந்த இடத்தில் உன்னை எப்படி கடத்தியிருக்க முடியும்? அதான் எனக்கு புரியலை…”

அவனின் கேள்விக்கு விரக்தியாக புன்னகைத்து,”என் பக்கத்தில் இரண்டு பெண்கள் வந்து உட்கார்ந்தாங்க. அதில் ஒருத்தி திடிரென்று என் இடுப்பில் கத்தியை வைத்து குத்தி, கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் எங்களுடன் வெளியே வா, இல்லையென்றால் உன் புருஷன் இன்னொரு பெண்ணுடன்…”என்று ஒரு ப்ளோவில் சொல்லிக்கொண்டு வந்தவள் சட்டென்று நிறுத்த அத்வைத் அவளை புரியாமல் பார்த்தான்.

அவனை பார்த்து சொல்ல திராணியில்லாமல் வேகமாக எழுந்தவள் ஜன்னல் பக்கம் நகர்ந்து வெளியே பார்வையை செலுத்தியபடியே,”நீங்க உங்க காதலியை அணைத்தது, முத்தமிட்டதை போட்டோ எடுத்து வைத்திருந்தார்கள். அதை என் அப்பாவுக்கு அனுப்பிடுவேன் என்று மிரட்டினாள். அதனால் தான் அவங்களுடன் சென்றேன். ஆனால் ஏன் எதற்கு என்னை கடத்த முயற்சித்தார்கள் என்று புரியலை. கொஞ்சம் தூரம் தான் நடந்திருப்போம், எதிரில் மாமாவும், அத்தையும் வரவும் நான் சுதாரித்து அவர்களிடமிருந்து தப்ப முயற்சித்தேன்…”என்றவள் கணவன் பக்கம் திரும்பினாள்.

“மாமாவும் அவர்களை பிடிக்க முயன்றார். அதனால் அவர்களை திசை திருப்ப என்னை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி போய்ட்டாங்க. அவங்க தள்ளிய வேகத்தில் அங்கிருந்த கண்ணாடி கதவில் இடித்ததினால் வந்த காயம் தான் இது…”என்று சலனமே இல்லாமல் சொல்லி முடிக்க கணவனோ சமைந்து போயிருந்தான்.

‘இவ்வளவு கலாட்டா நடந்திருக்கு, ஆனால் எதையும் நான் கவனிக்காமல் நீதாவுடன் எப்படி பேசிக்கொண்டிருந்தேன். ஸ்ரீயை ஏன் கடத்த வேண்டும். அவர்களின் நோக்கமென்ன? நீதா என் காதலி என்று அவர்களுக்கு எப்படி தெரியும். நாங்கள் இருவரும் இருக்கிற போட்டோவை அவர்கள் எடுத்திருந்தாலும் அதையேன் ஸ்ரீயின் பெற்றோரிடம் காட்டுவேன் என்று சொல்லி மிரட்ட வேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம், யார் செய்த்திருப்பார்கள். இதென்ன குழப்பம்’ என்ற ரீதியில் யோசித்துக்கொண்டிருக்க விழிகளோ மனைவியை நோக்கி பாய்ந்தது. 

“இதெல்லாம் அம்மா, அப்பாவுக்கு தெரியுமா…? என்றான் சிறு கலவரத்துடன்.

“ஹ்ம்ம் …”என்று தலையை உருட்ட ஷிட் என்று எழுந்தான். 

சில நொடிகள் யோசனையுடன் அறையை நடையால் அளந்துவிட்டு,”ஓகே டேக் ரெஸ்ட்…”என்றவன் வேகமாக வெளியேற ஸ்ரீயோ ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சோஃபாவில் வந்தமர்ந்தாள்.

மகன் கீழே இறங்கி வரவும் அவனை நோக்கி வந்த தாயை நிமிர்ந்து பார்க்க தெம்பில்லாமல்,”ம்மா எனக்கு ஆபிஸ்க்கு நேரமாச்சு, ஸ்ரீ வீட்டுக்கு போயிட்டு, அப்படியே நான் ஆபிஸ்க்கு போறேன்…”என்றவன் அவர்களின் பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென்று வெளியே செல்ல வத்ஸலாவின் விழிகள் புரியாமல் கணவன் பக்கம் திரும்பியது. 

சில நொடிகள் இருவரும் மகனின் செயலுக்குண்டான அர்த்தம் புரியாமல் விழிக்க கார் கிளம்பி செல்லும் ஓசை கேட்டு இருவருமே குழப்பத்திலிருந்து தன்னிலைக்கு வந்தார்கள். வத்ஸலா மருமகளை தேடி மாடிக்கு செல்ல, அரவிந்தனுக்கு மனைவியை பின்தொடர்ந்தார். 

கதவு மெலிதாக தட்டும் ஓசையும், அதை தொடர்ந்து இரு பெரியவர்களும் உள்ளே நுழைய ஸ்ரீ மரியாதை நிமித்தம் எழ முயற்சிக்க, அவளை வேகமாக நெருங்கி அவளின் தோளை பிடித்தமர்த்தி அவளின் பக்கத்தில் அமர்ந்தார் மாமியார். மாமனார் அவளின் எதிரில் அமர அவளின் விழிகள் இருவரையும் கேள்வியாக நோக்கியது. 

“என்னம்மா நடந்தது, நீ ஏதாவது சொன்னாயா உன் புருஷனை…? 

ஒரு நொடி விழித்து,”நீங்க கேட்கிறது புரியலை…”என அவர் நடந்தவற்றை கூறி மீண்டும் அதே கேள்வியை கேட்டார்.

அவளும் கணவனின் பேச்சுக்கும், பார்வைக்கும் அர்த்தம் புரியாமல் விழித்துக்கொண்டுதானிருந்தாள். 

“இல்லை அத்தை, யார் கடத்தினது, எப்படியென்று கேட்டார். சொன்னேன், அப்புறம் அப்பா, அம்மாவுக்கு தெரியுமான்னு கேட்டார். ஆமாமென்றேன். உடனே ரூமை விட்டு வெளியே போய்ட்டார் …”என இரு பெரியவர்களும் நமுட்டு புன்னகையுடன் பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டார்கள். 

“சரிம்மா நீ ரெஸ்ட் எடு, அத்வைத், உங்க வீட்டுக்கு போய்ட்டு விஷயத்தை சொல்லிட்டு, லக்கேஜை எடுத்திட்டு வந்திடுவான்…”என்று இருவரும் கீழே செல்ல ஸ்ரீக்கு ஆயாசமாக இருந்தது இன்னும் எத்தனை நாளைக்கு பெற்றவர்களிடமிருந்து இதை மறைக்க போகிறோம் என. 

திடிரென்று யாரோ தன்னை தொட்டு உசுப்ப, திடுக்கிட்டு விழிகளை மலர்த்த தன் எதிரில் நின்றிருந்த கணவனை கண்டதும் அவசரமாக எழுந்து அமர்ந்தாள். மாமனார் மாமியார் பேசிவிட்டு சென்றதும் தாய் தந்தையை பற்றிய யோசனையில் அமர்ந்திருந்தவள் அப்படியே உறங்கிவிட்டிருந்தது புரிந்தது.

“சாப்பிட வா ஸ்ரீ…”என்ற கணவனை அயலான் மாதிரி நோக்கினாள். 

“நீ மாத்திரை போடணும்ன்னு அம்மா சொன்னாங்க. எழுந்து வா…” என்றான். 

கணவனின் திடீர் அக்கரையில் புதிதாக முளைத்த சிறு கிளர்ச்சி, அவன் அழைத்தது மாமியாரின் கைங்கர்யம் என்று புரிந்ததும் உணர்வுகள் சட்டென்று வடிந்தது. எதையும் பேசாமல் குளியலறைக்குள் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வர கணவன் வெளியே சென்றுவிட்டிருந்தான். ஏக்கத்துடன் எழுந்த பெருமூச்சை அடக்கி புடவையை திருத்திக்கொண்டு கீழே இறங்கினாள்.

மருமகளை கண்டதும் டைனிங் டேபிளில் கணவர் மகனுடன் பேசிக்கொண்டிருந்த மாமியார் எழுந்து சென்று அவளை அழைத்து வந்து மகனின்  பக்கத்தில் அமர்த்தி அவளுக்கு பரிமாற அவளுக்கே ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது. 

“நீங்களும் உட்காருங்க அத்தை…”என்ற மருமகளின் பேச்சிற்கு கணவரின் அருகில் அமர்ந்தார். 

“நானும், அம்மாவும் ஒரு முடிவு எடுத்திருக்கோம் அத்வைத், ஸ்ரீ …”என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“என்ன முடிவுப்பா…”என்று வார்த்தையால் வினவ, ஸ்ரீயோ விழிகளாலே வினவினாள். 

“நீங்க இருவரும் இந்த வீட்டில் இருக்க வேண்டாம்…”என்று முடிப்பதற்குள் அத்வைத் திக்கென்று அதிர்ந்து எழ, ஸ்ரீக்கோ ஏனோ எவ்வித உணர்வுகளும் எழவில்லை.