நெஞ்சோடு வலம் வா தேவதையே …

அத்தியாயம் -5

பொது இடத்தில் நீதா அநாகரீமாக நடந்துக்கொள்ளவும் அத்வைத்துக்கு மானம் போனது. அதுவும் புது பொண்டாட்டி முன் நடந்தேறிய இந்த சம்பவம் அவனை கூனி குறுக வைத்தது. 

“உன் காதலி நான் அத்வைத், நீ என்னமோ அவள் தான் முக்கியம்ன்ற மாதிரி பேசறே. உன்னை பார்த்தே ஐந்து நாள் ஆகுது. போனில் இனிக்க இனிக்க பேசினே, புது பொண்டாட்டி வந்ததும் என்னை கழட்டி விட பார்க்கிறே …”என்று குரலை உயர்த்த அத்வைதோ சங்கடத்துடன் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று விழிகளை சுழற்றினான். 

“என்ன பார்க்கிறே, இவளை இங்கேயே காத்திருக்க சொல்லு. நமக்கு இடையே இவள் இருந்தால் நமக்கு தான் தொந்தரவு. இல்லை இவள் வந்து தான் ஆகணுமென்றால் இன்னொரு டிக்கெட் எடுத்து ஒரு மூலையில் உட்காரவைச்சிடலாம். சும்மா வளவளன்னு பேசிட்டு இருக்காதே, கம்…”என்று அவனின் கையை பிடித்திழுத்திக்கொண்டு செல்ல அத்வைதின் விழிகள் மனைவி பக்கம் பார்வை செல்ல, அவளோ அங்கே எதுவுமே நடக்கவில்லை என்பது போல அமர்ந்திருந்தாள். 

கிட்டத்தட்ட தன்னை தரதரவென்று அவன் புஜத்தில் கையை கோர்த்துக்கொண்டு இழுத்துச் செல்ல, அத்வைதின் பொறுமை காற்றில் பறந்தது. 

அவளிடமிருந்து தன்னை கஷ்டப்பட்டு விடுவித்துக்கொண்டு, “டோன்ட் க்ரியேட் ஸீன் இந்த பப்ளிக் பிளேஸ் நீதா. என்னாச்சு உனக்கு, ஏன் இத்தனை முரட்டுத்தனமா நடந்துக்கிறே…? என்றான் எரிச்சலுடன்.

“நானா சீன் கிரியேட் பண்றேன், நீ தான் உன் புது பொண்டாட்டியை அழைச்சிட்டு வந்து ஷோ காமிக்கிறே. இவளை ஊர் முழுவதும் உன் பொண்டாட்டின்னு காட்டினால், அப்போ நான் யாரு. அப்போ நாம காதலிச்சது எல்லாம் பொய்யா? ஒன்றுமே இல்லையா? என்னை கைகழுவ முயற்சிக்கிறியா …? என்றாள் ஆவேசத்துடன்.

“ஹையோ நீதா தயவு செய்து புரிஞ்சிக்கோ. நான் ஒன்றும் உன்னிடம் மறைச்சி வைச்சி கல்யாணம் செய்துக்கலை. அதே போல நான் சந்தோஷத்தோடு இந்த கல்யாணத்தை செய்துக்கலை. முதலிரவு அன்றே ஸ்ரீயிடம் தெளிவா சொல்லிட்டேன், நீ தான் என் ஒய்ப் என்று. அவளும் புரிஞ்சிக்கிட்டு என்னிடமிருந்து நாசூக்காக விலகி நிற்கிறாள். ஆனால் நீ…”என்றவனின் விழிகள் மனைவியின் பக்கம் கவலையோடு தாவியது. 

ஆனால் அங்கு ஸ்ரீயை காணாமல் அவள் அமர்ந்திருந்த இடம் காலியாக இருக்கவும் உள்ளம் திடுக்கிட வேகமாக பார்வையால் அந்த இடத்தை அலசினான். எங்கேயும் அவளை காணாததால் அங்கிருந்து பயத்துடன் நகர முயன்றவனை நீதா போகவிடாமல் கையை பிடித்து தடுக்க அத்வைத்க்கு கோபம் தலைக்கேறியது. 

“ஹேய் விடு என்னை, ஸ்ரீயை காணோம். எங்கே போனாளென்று தெரியலை. ஹையோ அவள் வீட்டுக்கும், என் வீட்டுக்கும் என்ன பதில் சொல்வேன்…”என்று பதறியவன் அவளின் கையை உதறிவிட்டு வேகமாக ஒவ்வொரு கடையாக தேடிக்கொண்டே செல்ல எங்கேயும் அவளை காணாததால் அடி வயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டது.

போன் செய்யலாம் என்றாலும் மனைவியின் நம்பர் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தவன் ஏதோ தோன்ற பார்க்கிங் செல்ல லிப்டை நோக்கி கிட்டத்தட்ட ஓடினான். லிப்ட் மிகவும் பிசியாக இருக்கவும் படிகளின் வழியே தடதடவென்று இறங்கி காரை நெருங்க, அங்கேயும் அவள் இல்லை. ஸ்ரீயை காணாததால் நேரம் செல்ல செல்ல பயம் கிடுகிடுவென்று தங்கத்தின் விலை போல எகிறியது. 

“அவள் போகுமிடம் எதுவென்று கூட தெரியாதே. கடவுளே அவளை எங்கேயென்று தேடுவேன். அவளின் பெற்றோருக்கு என்னவென்று பதில் சொல்வது, அதை விட அம்மாவிடமும், அப்பாவிடமும் என்ன சொல்லி சமாளிப்பது…” என்று வாய்விட்டே புலம்பியன் செருப்பு சத்தம் கேட்டு வேகமாக திரும்பினான்.

ஸ்ரீயோ என்ற நப்பாசையில் திரும்பியவன் வந்தவள் நீதா என்றதும் அவன் முகம் சொத்தென்று விழுந்தது.

“ப்ச் நீயா …? என்றான் சலிப்பும் ஏமாற்றுமாக.

“டேய் என்னடா நீயான்னு கேட்கிறே, அப்போ நான் முக்கியமில்லையா. அது சரி எங்கே உன் அருமை பொண்டாட்டி, உன்னை விட்டு போய்ட்டாளா. ஹ்ம்ம் அவளுக்கு புரியது நாம் காதலர்கள் நம் இடையில் வரக்கூடாதென்று. உன் மரமண்டைக்கு தான் புரியலை. சரி அவள் தான் வீட்டுக்கு போய்ட்டாளே, வாங்கின டிக்கெட் வீணாக போக கூடாது. நாம் போய் படம் பார்க்கலாம் …”என்று வம்படியாய் அழைக்க அத்வைத்தின் விழிகள் அவன் காதலியை முறைத்தது. 

“ஹேய் சினிமாவுக்கு தானே உன்னை கூப்பிட்டேன், நீ என்னமோ போருக்கு கூப்பிட்ட மாதிரி முறைக்கிறே. அதுவும் என்னுடன் சினிமா பார்க்க உனக்கு கசக்குதா…”என்று கண்ணடித்து கேலி செய்ய அது அவனுக்கு ரசிக்கவில்லை. 

“நீ படிச்சவ தானே, நான் என் பொண்டாட்டியை…ஓகே ஓகே அஃப்கோர்ஸ் நான் அவளை மனைவியாய் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் அவள் இப்போதைக்கு என் மனைவி. அவளை அழைத்துக்கொண்டு வந்து தொலைச்சிட்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிச்சிட்டிருக்கேன். என் நிலைமையோ, என் மனதையோ கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் உன்னை பற்றியும், உன் சந்தோஷத்தை பற்றியும் மட்டும் யோசிக்கிறே. உண்மையில் நீ டாக்டர் தானா …? என்றான் உச்சக்கட்ட எரிச்சலில். 

“இதிலென்ன சந்தேகம் நானா டாக்டர் தான். அது என் தொழில். நீ என் லவ்வர். என் லவ்வரிடம் படம் பார்க்கலாமா என்று கேட்டது ஒரு குத்தமா. இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா…”என்றாள் மேலும் அவனை சீண்ட, அவளின் பேச்சே அவனை மேலும் கடுப்பாக்கியது.

“லுக் இப்போதைக்கு உன்னிடம் மல்லுக்கட்ட எனக்கு நேரமில்லை. ஸ்ரீ எங்கேயென்று நான் தேட வேண்டும். கிளம்பறேன் …”என்றவன் நீதாவின் பேச்சை எதிர்பாராமல் வண்டியில் அமர்ந்து அதை உசுப்பி செலுத்த, நீதாவின் பற்கள் கோபத்தில் அறைப்பட்டது. 

 போனிக்ஸ் மாலை விட்டு வெளியே வந்து மெதுவாக வண்டியை உருட்டியபடி இரண்டு பக்கமும் மனைவியை தேடிக்கொண்டே செல்ல அவனின் கைபேசி தந்தையின் அழைப்பில் சிணுங்கியது. 

“ஹையோ இவரா, எதுக்கு இப்போ அழைக்கிறார். ஒரு வேளை ஸ்ரீ ஏதும் சொல்லியிருப்பாளோ…”என்று வாய்விட்டே புலம்ப, கைபேசியோ விடாமல் சிணுங்கிக்கொண்டே இருந்தது.

தயக்கத்துடன் கைபேசியை உயிர்ப்பித்து காதுக்கு கொடுத்து,”சொல்லுங்கப்பா …”என்றான் குரலை சாதாரணமாக வைத்து.

“இப்போ நீ எங்கே இருந்தாலும் சரி முதலில் வீட்டுக்கு வா…” என்றவர் அவன் பேச இடம் கொடாமல் போனை வைத்துவிட அத்வைத்துக்கு திக்கென்றிருந்தது. 

 ‘இப்போ எதுக்கு வீட்டுக்கு வர சொல்றார், ஒரு வேளை ஸ்ரீ வீட்டில் இருக்காளோ. ஆனால் அவளால் எப்படி வீட்டுக்கு செல்ல முடிந்தது. வீட்டு அட்ரஸ் தெரியாதே. ஒரு வேளை ஸ்ரீ தொலைந்து போனது தெரியாமல் என்னை வீட்டுக்கு வர சொல்றாரோ. ச்சே எல்லாம் இந்த நீதாவால் வந்தது…’ என்று அவளை அர்ச்சித்தபடி வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான். 

 வீட்டை அடைவதற்குள் ஸ்ரீ கிடைத்துவிட வேண்டுமே என்ற வேண்டுதலும், அவள் கிடைத்துவிட்டால் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று கடவுளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருந்தான். வண்டி சேனை கட்டிய குதிரையாய் அவன் வீட்டின் முன் நிற்க, வயிற்றில் பய பட்டாம்பூச்சி பறந்தது. 

வண்டியை விட்டிறங்கி வீட்டினுள் செல்ல, ஹால் சோஃபாவில் தாயும், தந்தையும் அமர்ந்திருந்த கோலமே அவனுள் கலக்கத்தை உண்டு பண்ணியது. வேகமாக அவன் விழிகள் ஸ்ரீ எங்கே என்று தேடி அலைய அவனின் தேடலை அரவிந்தனின் உறுமல் தடைபோட்டது.

“எங்கேயிருந்து வர்றே …? என்று எடுத்ததுமே விசாரணை டாப் கியரில் துவங்க, அவனின் விழிகள் தாயிடம் சரணடைந்தது சிறு பயத்துடன்.

பதில் சொல்லாமல் மனைவியை நோக்கவும்,”சொல்லு அத்வைத் இப்போ நீ எங்கேயிருந்து வர்றே …”என்கிறார் அதட்டலாக.

“ஏன் போனிக்ஸ் மாலிலிருந்து…? 

“யாருடன் போனே, நீ ஸ்ரீயுடன் மறுவீட்டுக்கு போனவன் தானே. ஸ்ரீயை விட்டு தனியா போனாயா…? என்றார்.

“இ …இல்லை…ஸ்ரீயை தான் அழைச்சிட்டு போனேன்…”என்று முடிப்பதற்குள் அடுத்த கேள்வி வந்து குதித்தது.

“எங்கே என் மருமக, நீ மட்டும் தனியா வந்து நிற்க்கிறே …? 

“அது…வந்து…இல்லை…”என்று பதில் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டிருந்தவன் அருகில் எப்பொழுது வந்தாரென்றே தெரியவில்லை. அவரின் காய் இடியென மகனின் கன்னத்தில் இறங்கியது. 

“ஹவ் டேர் யூ, தாலி கட்டிய மனைவியை வெளியே அழைத்து போவானாம், ஆனால் அவளை விட்டுட்டு கண்டவளோடு கையை கோர்த்துக்கிட்டு சினிமா பார்க்க போவானாம். ஆர் யு நாட் அஷேம்ட்…” என்று சீற அத்வைத்க்கு பதில் சொல்ல திராணியில்லை. 

ஆனால் ஸ்ரீ பத்திரமாக இருக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு புரிய, மனதில் பெரும் நிம்மதி பரவியது. 

“சாரிப்பா, ஸ்ரீ எங்கே? நீங்க தான் அவளை அழைச்சிட்டு வந்தீங்களா? எங்க அவள்…? என்று படபடக்க இம்முறை வத்ஸலா திருவாய் மலர்ந்தார். 

“உன் மனதில் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே அத்வைத். நீ இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் நடந்துக்கிறவன் இல்லையே. உன்னை நம்பி வந்தவளை அம்போன்னு விட்டுட்டு வேற எவ கூடவோ கையை பிடிச்சி கொஞ்சிக்கிட்டு இருக்கே. நீ செய்த வேலை என் மருமக மனதை எந்தளவு ரணமாக்கி இருக்கும்ன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சி பார்த்தாயா…? 

“ஹையோ அம்மா கொஞ்சம் நிறுத்துங்க. இவ்வளவு தூரம் சொல்றீங்க என்றால் ஸ்ரீ இதையெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்கிறாள் அப்படி தானே, சரி எங்கே அவள்…?  

“மண்ணாங்கட்டி, அவள் எங்கே சொன்னாள். நாங்க எங்க கண்ணால் பார்த்தோம் இந்த கண்ராவி காட்சியை. உன் மனைவியை இரண்டு பேர் கடத்திட்டு போறது கூட தெரியாமல் நீ சுவாரஸ்யமா பேசிக்கிட்டு இருக்கே. சபாஷ். உன்னை மகனா அடைய நாங்க ரொம்ப கொடுத்து வைச்சிருக்கோம்…”என்று மேலும் அவனை குத்தி கிழித்துக்கொண்டிருக்க அத்வைத்க்கு மனைவியை கடத்தினார்கள் என்றதுக்கு மேல் வேறேதும் மூளையில் பதியவில்லை. 

“ப்ளீஸ்ம்மா என்னை அப்புறம் திட்டுங்க, அடிங்க. இப்போ ஸ்ரீ எங்கே? சொல்லுங்க …”என்றவன் அவர்களின் பதிலை எதிர்பாராமல் தன் அறையை நோக்கி இரண்டு கால் பாய்ச்சலில் ஓட அரவிந்தனின் முகம் இறுகியிருந்தது. 

அவன் அறையை அடைந்து வேகமாக பார்வையை சுழல விட கட்டிலில் விழி மூடி படுத்திருந்த மனைவியை கண்டதும் உப்பென்று வாயை குவித்து ஊதி பதட்டத்தை தணித்தவனுக்கு அவள் நெற்றியில் போடப்பட்டிருந்த கட்டை கண்டதும் தன்னையுமறியாமல் பதறியது.

வேகமாக அவளை நெருங்கி அவளின் கட்டை தொட்டு பார்க்க, வலியில் ஸ்ரீயின் முகம் சுணங்க அவனின் நெஞ்சம் இளகியது.

“ஐ ம் சாரி ஸ்ரீ, நான் தவறு செய்திட்டேன். உன்னை விட்டு நீதாவோடு போயிருக்க கூடாது…” என்று அவனின் இதழ்கள் வேதனையோடு முணுமுணுத்தது. 

“இந்த புத்தி முதலிலேயே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…”என்ற தாயின் குத்தல் பேச்சிற்கு குற்ற உணர்வோடு திரும்பினான்.  

“இப்படியெல்லாம் நடக்குமென்று நான் நினைத்தே பார்க்கலை. ஸ்ரீயை காணவில்லை என்றதும் மால் முழுவதும் தேடிவிட்டு காரை எடுத்துக்கொண்டு தேடிக்கிட்டு வரும் பொழுது தான் நீங்க போன் செய்தீங்க. அதை முன்னாடியே என்னிடம் சொல்லியிருக்கலாமே. நான்  எந்தளவு பயந்துட்டேன் தெரியுமா…? என்று தாயை குற்றஞ்சாட்ட தந்தையோ அவனை காட்டமாக முறைத்தார்.

“நீங்க என்னை எந்தளவு வேண்டுமானாலும் கழுவி ஊற்றுங்க, நான் செய்தது தவறுன்னு ஒத்துக்கிறேன். ஆனால் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே. ஒரு நிமிஷம் என் உயிரே போய்டிச்சி. ஸ்ரீயோட அப்பா, அம்மாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு கலங்கி போய்ட்டேன்…” என்னும் பொழுதே அவனின் விழிகள் கலங்க, வத்ஸலாவின் விழிகள் ரகசியமாக கணவரிடம் பாய்ந்தது.