நெஞ்சோடு வலம் வா தேவதையே …

அத்தியாயம் – 4

“ஸாரி…”என்று சிறு தயக்கத்துடன் பேச ஆரம்பித்தவனை கையமர்த்தினாள்.

“அம்மா சாப்பிட அழைச்சாங்க, வாங்க…”என்றவள் தகவலை சொல்லிவிட்டேன் என்ற ரீதியில் வெளியே செல்ல அத்வைத்க்கே சிறு குற்ற உணர்வு உண்டானது.

கீழே சென்றவனை டைனிங் டேபிளில் அமர்த்தி ஓடுவன, பறப்பன, நீந்துவன, நடப்பன என்று அனைத்தையும் சமைத்து இலையில் பரப்பியிருக்க அத்வைதின் விழிகள் மலைப்பில் விரிந்தது. 

“ஹையோ என்ன இது, இவ்வளவு சமைச்சிருக்கீங்க…? என்றான் ஆச்சர்யத்துடன்.

“இது என்ன பிரமாதம் மாப்பிள்ளை. எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு இதை விட பெரிசா செய்யணும்ன்னு ஆசை. நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை. நிஹா நீயும் உட்காருடா…”என்றவர் சொன்னதோடு நில்லாமல் மகளை மாப்பிள்ளையின் பக்கத்தில் அமர்த்தினார் பார்த்திபன்.

நிஹாவும் போலியாய் புன்னகைத்து அவஸ்தையாய் பேருக்கு கொறித்துவிட்டு எழுந்தாள். மாப்பிள்ளைக்கு கை கழுவ தண்ணீர் கொடும்மா, டவல் கொடும்மா. ரசகுல்லாவை கொண்டு போய் கொடு. என்ன எங்களுடனே இருக்கிறே, போய் ரூமில் மாப்பிள்ளையோடு பேசிக்கொண்டிரு என்று அவளை இம்சை செய்ய அவளுக்கு ஓவென்று கத்தவேண்டும் போல ஆத்திரம் உண்டானது. 

அப்படி உணர்ச்சிவசப்பட்டு கத்தினால் அதன் பிறகு சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிற பெற்றோரின் நிலைமை என்னாகும். அவளால் யோசிக்க கூட முடியவில்லை. அதனால் பொறுமையாக எல்லாவற்றையும் சகித்து, வெட்கம் என்ற பெயரில் தலையை குனிந்து சமாளித்து வைத்தாள். 

“போ நிஹா, மாப்பிள்ளைக்கு இது புது வீடு, நீ தான் அவரிடம் பேசி சகஜமாக்கணும்…”என்ற தாயின் பேச்சை தட்ட முடியாமல் மாடியேறி தன் அறைக்கு சென்றாள். 

ஆனால் அவனோ கட்டிலில் படுத்தபடி யாருடனோ, ப்ச் யாருடனோ என்ன அவனின் காதலி நீதாவுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அதை காதில் வாங்க முடியாமல் லைப்ரரி அலமாரியிலிருந்து தனக்கு பிடித்த ஒரு புக்கை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள். 

பால்கனி க்ரில் முழுவதும் முல்லை செடிகளால் மூடியிருந்ததால் அவள் அங்கு அமர்ந்திருப்பது யாருக்கும் தெரியாது. இத்தனை வருடம் அவள் அப்படி அமர நேர்ந்ததில்லை. ஆனால் இன்று தன் வீட்டில் தன் அறையில் தனித்துவிட பட்ட மாதிரி தோன்ற கழிவிரக்கத்தில் கண்ணீர் துருத்திக்கொண்டு வந்தது. 

படிக்க என்று கொண்டு வந்த புத்தகத்தை பிரிக்க கூட தோன்றாமல் சுவற்றில் சாய்ந்து விழி மூடி அமர்ந்தாள். எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ யாரோ அவளை தொட அதிர்ந்து விழிகளை மலர்த்தினாள்.

தனக்கு தாலி கட்டியவனை கண்டதும் அவசரமாக விழிகளை துடைத்துக்கொண்டு எழ, அத்வைதின் விழிகள் அவளை ஊடுருவியது.

“சொல்லுங்க ஏதாவது வேண்டுமா …? என்றாள் கடமையே கண்ணாக. 

“இல்லை, வெளியில் போகலாம் கிளம்பு…” என்றவனை புரியாமல் நோக்கினாள். 

அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்து,”என்னால் உன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது தான். ஆனால் அது நம் வீட்டில் மட்டும். இங்கே உன் அப்பா, அம்மாவுக்கு அது தெரிய வேண்டாம். நீயும், நானும் இப்படி தனி தனியாக இருந்தால் அவங்களுக்கு சந்தேகம் வரும். அதனால் தான் வெளியில் போயிட்டு வரலாம் என்றேன். இங்கே இருக்கும் வரை அதாவது நாளை மாலை வரை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து தான் ஆகணும்…” 

அவளுக்கு வெளியில் செல்லும் மனநிலை இல்லை தான். ஆனால் கணவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க, மெலிதாக தலையை உருட்டிவிட்டு உள்ளே வந்தாள். அத்வைத் கார் சாவியை எடுத்துக்கொண்டு அவளை ரெடியாகி வர சொல்லிவிட்டு கீழே செல்ல, ஸ்ரீ ஒரு பெருமூச்சுடன் சின்ன குளியல் போட்டு வேறு ஒரு புது புடவையில் மாறி பெற்றவர்களுக்காக லேசான ஒப்பனை செய்துக்கொண்டு கீழே வந்தாள். 

மகளை கண்டதும் தாய் அவளுக்கு சூடான காஃபியை கொண்டு வந்து கொடுக்க, அவளின் பார்வை அத்வைத் எங்கேயென்று தேடியது. மகளின் தேடல் புரிந்து தனக்குள் சிரித்துக்கொண்டார் பத்மா. 

“மாப்பிள்ளை வண்டியில் காத்திருக்கார்…”என்ற தகவலை கூற மகளோ தாய்க்கு அந்த நேரத்திற்கு தேவையான வெட்க புன்னகையை கொடுத்துவிட்டு காஃபியை குடித்துவிட்டு கிளம்ப, அவளின் நீண்ட கூந்தலில் மல்லிகை சரத்தை சூட்டி மகளுக்கு ஆசையோடு விடைக்கொடுத்தார். 

ஓர் இயந்திரம் போல வண்டியில் அமர்ந்ததும் வண்டியை எடுத்தவன்,”எங்கே போகலாம் …? என்று கேட்டான்.

அவனை சலனமே இல்லாமல் நோக்கிவிட்டு,”உங்களிஷ்டம்…”என்று சுருக்கென சொல்லிவிட்டு விழிகளை காரின் வெளிப்பக்கம் திருப்பிக்கொள்ள அத்வைத் ஸ்டைலாக தோள்களை குலுக்கிக்கொண்டான். 

வண்டி ஓரிடத்தில் குலுங்கி நிற்க, அதுவரை எதுவுமே கருத்தில் படாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவள் தன்னிலைக்கு வந்து சுற்றும் முற்றும் பார்க்க அது ஒரு கோவில் என்று புரிந்தது. 

“அம்மா கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க…”என்று அவள் முகபாவனைக்கு பதில் கூற, ஸ்ரீ எதுவும் பேசவில்லை.

அமைதியாக இறங்கி, ஒரு அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று முருகன் சந்நிதியில் அர்ச்சகரிடம் தட்டை கொடுத்தாள். 

“பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்லுங்கோ…”என்றவருக்கு ஒரு நொடி திணறி கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அர்ச்சகரிடம் திரும்பினாள்.

சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்க…”என்றவள் கரம் கூப்பி விழிகளை மூடிக்கொண்டாலும் அவள் மனதில் வேண்டுவதற்க்கு எதுவுமே இல்லாதது போல தான் இருந்தது. 

“ப்ரஸாதத்தை வாங்கிக்கோங்கோ…”என்ற அர்ச்சகரின் குரலில் விழிகளை மலர்த்தி, அவர் காட்டிய தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

விபூதியை அவள் கையில் கொடுத்தவர், குங்குமத்தை அத்வைதின் கையில் கொடுத்து ஆத்துக்காரிக்கு வைச்சி விடுங்க என்றதும் ஸ்ரீ திக்கென்று நிமிர்ந்தாள், அத்வைதும்.

அவனின் தயக்கம் அவளுள் கோப சுனாமியை உண்டு பண்ண, அர்ச்சகர் தட்டிலிருந்து குங்குமம் எடுத்து தன் நெற்றியில் வைத்துக்கொண்டாள். அவரிடமிருந்து அர்ச்சனை கூடையை வாங்கிக்கொண்டு பிரகாரத்தை சுற்றி வர தொடங்க, அத்வைத் அவளை பின்தொடர்ந்தான். மூன்று சுற்று முடிந்ததும் ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து அமர, அத்வைத்தும் அமர அங்கு இருவருக்குமிடையே அமைதி நிலவியது.

ஸ்ரீயின் விழிகள் அங்கு வந்திருந்த திருமணமான இளம் ஜோடிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கணவனுடன் வந்த பெண்கள் சந்தோஷமாக சாமி கும்பிட்டு கணவனின் நெற்றியில் திருநீற்றை வைப்பதும், அவர்கள் மனைவிக்கு நெற்றியிலும், தாலியிலும் குங்குமத்தை வைப்பதும் அவளுள் ஏக்கத்தை உண்டு பண்ணியது.

இனி என் வாழ்க்கை இப்படியே தான் போகுமா? எத்தனை நாள் இந்த மௌன நாடகம். வெளிப்படையாகவே என்னை வீட்டை விட்டு போக சொல்லிவிட்டார். அப்புறமும் நான் எதற்கு அந்த வீட்டில் இருக்க வேண்டும். அப்பா, அம்மாவுக்கா? இல்லை மாமியார் மாமனாரின் அன்புக்காகவா. எப்படி இருந்தாலும் ஒரு நாள் இந்த விஷயம் பெற்றவர்களுக்கு தெரியத்தானே போகுது. அதை ஏன் இப்பொழுதே சொல்லிவிட கூடாது. எப்பொழுது சொன்னாலும் வலி என்றும் வலி தானே என்ற எண்ணம் எழுந்தது. 

ஏனோ வீட்டில் மதியம் எடுத்த முடிவை செயல்படுத்த மிகவும் திணறலாக தான் இருந்தது. 

“ஏன் அர்ச்சனைக்கு பெயரை சொல்லாமல் சுவாமிக்கு அர்ச்சனை செய்தே ஸ்ரீ …? 

கணவனின் திடீர் கேள்வியில் ஏதேதோ யோசனையில் உழன்றுக்கொண்டிருந்தவள் திடுக்கிட்டு அவன் பக்கம் பார்வையை திருப்பினாள்.

“ஹ்ம்ம் என்ன கேட்டீங்க …? திருப்பி கேட்டவளுக்கு அச்சு பிசகாமல் மறுபடியும் அதே கேள்வியை கேட்க விழிகளை மூடித்திருந்தாள். 

“சந்தோஷமாக வாழறவங்க மேலும் வாழ்க்கை சுபிட்சமாக இருக்க தன் பெயரில் அர்ச்சனை செய்துக்குவாங்க. ஆனால் நம் விஷயத்தில் அது சரி வராது…”என்றபடி எழ, அத்வைதும் எழுந்தான். 

முருகனுக்கு மீண்டும் ஒரு கும்பிடை போட்டுவிட்டு வெளிப்பக்கம் நடக்க அத்வைத்துக்கு என்னவோ மாதிரி இருந்தது. அவனுக்கு இதெல்லாம் புதிது. ஒரு பெண்ணால் நேசிக்கபடுகிறவனுக்கு இன்னொரு பெண்ணால் புறக்கணிக்கபடுவது அவனின் மனதை ஏதோ செய்தது. அதுவும் கோபமாகவோ, குரலை உயர்த்தியோ அவனை திட்டி இருந்திருந்தால் கூட அவனுக்கு அவளை அலட்சியம் செய்வது பெரிதாக தோன்றியிருக்காது. ஆனால் முதலிரவில் தான் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, எந்த கேள்வியும் எழுப்பாமல், கோவப்படாமல், அழுது ஊரை கூட்டாமல், பெற்றவர்களிடம் தன்னை காட்டி கொடுக்காமல் தனக்குள்ளே மருகி கொண்டிருக்கிறவளை பார்க்க பார்க்க அவனுக்கு புதுசாக இருந்தது. 

காரை திறந்ததும் மீண்டும் மௌனமாக ஏறி அமர, இம்முறை எங்கேயென்று அவன் கேள்வி எழுப்பவில்லை. காரை பீனிக்ஸ் மாலுக்கு விட்டான். ஸ்ரீக்கோ ஷாப்பிங் செல்ல மனதில்லை. ஆனால் அதை அவனிடம் சொல்லவும் இஷ்டமில்லை. அதனால் காரிலிருந்து மௌனமாக இறங்கி கணவனை பின்தொடர்ந்தாள். 

“படம் தொடங்க இன்னும் நேரமிருக்கு, ஷாப்பிங் போகலாமா…? என அதற்கும் தலை உருட்டலே பதிலாக வந்தது.

‘ஓ படம் பார்க்க அழைச்சிட்டு வந்தாரா என்ற கேள்வி மட்டும் உள்ளுக்குள் எழுந்தது. 

ஆரம்கேவி கடையினுள் நுழைய ஸ்ரீயின் மனது சுருங்கியது. ஆனால் அமைதி காத்தபடி அவனுடன் சென்றாள். அங்கிருந்த பட்டு புடவைகளை எடுத்து போட சொல்லி அவளுக்கு பிடித்த கலரை தேர்ந்தெடுக்க சொல்ல அவளோ நிர்தாட்சண்யமாக மறுத்தாள்.

“ஸாரி எனக்கு புடவை மேலே ஆர்வம் இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம்…” அவள் சொன்ன விதத்திலேயே அவளின் கோபம் நன்றாக புரிந்தது.

“நீ என் மேல் படு கோபத்தில் இருக்கேன்னு புரியுது. அதனால் என்னிடம் பேசவோ, நான் வாங்கி தருவதை வாங்கிக்கவோ உன் மனது இடம் கொடவில்லை அதானே. லுக் ஸ்ரீ இந்த நிமிஷம் நீயும் நானும் இந்த சமூகத்தின் பார்வையில் புருஷன் பெண்டாட்டி. என் மனதில் வேறொருத்தி இருக்கிறாள் தான். அதற்காக நான் வாங்கி தருவதை மறுக்கணும் என்பதில்லை. 

இப்போ நீ எதுவும் வாங்கிக்கவில்லை என்றால் உன் வீட்டிலும் உன்னை வித்யாசமாக பார்ப்பார்கள். என் வீட்டிலும் அம்மா கேள்வி கேட்பார்கள். அதனால் உனக்கு என்னவெல்லாம் வேண்டுமோ வாங்கிக்கோ. நான் எதுவும் உன்னை தவறாக நினைக்க போவதில்லை…” என அவளின் விழிகள் அவனை உக்கிரமாக நோக்கியது.

சட்டென்று அங்கிருந்து வெளியே செல்ல எத்தனிக்க சட்டென்று அவளின் கையை பிடித்து நிறுத்தினான். 

“சாரி …சாரி … நான் எதுவும் தவறாக பேசியிருந்தால் …”என்னும் பொழுதே அவனை ஒரு பெண்ணின் குரல் பெயர் சொல்லி அழைத்து ஈர்த்தது. 

இருவருமே குரல் வந்த திசையை நோக்க, அராபியன் குதிரை மாதிரி ஒருத்தி அத்வைதை நோக்கி ஓடி வர, அத்வைதின் முகமும் மலர்ந்தது அவளை கண்டு. அவனின் முகமலர்ச்சியே அவளுக்கு சொல்லியது கணவனின் காதலி நீதா என்று. உள்ளுக்குள் கோபம் பொங்க அவனின் கையிலிருந்த தன் கையை நாசூக்காக உருவிக்கொள்ள, அதற்குள் அவர்களை நெருங்கிவிட்டிருந்த நீதா அத்வைதை பொது இடம் என்று கூட பாராமல் அணைத்துக்கொண்டாள்.

பக்கத்தில் மனைவி நிற்பதை உணர்ந்து, நீதாவை தன்னிடமிருந்து விலக்க முற்பட, அவளோ அத்வைதின் மேல் பசையாக ஒட்டிக்கொண்டாள். 

அத்தோடு நில்லாமல் அவனின் கன்னத்தில் முத்தமிட, அதை பார்க்க சகிக்காமல் ஸ்ரீ அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட அத்வைத்க்கு குற்ற உணர்வு உண்டானது. 

வன்மையாக தன்னிடமிருந்து நீதாவை விலக்கி,”என்ன இது நீதா, கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல். பக்கத்தில் ஸ்ரீ இருப்பதை பார்க்கலையா? அவள் என்ன நினைச்சிருப்பாள்…”என்று படபடத்தான். 

பிரீயாக விட்டிருந்த கூந்தலை ஒரு விரலால் நாசூக்காக ஒதுக்கி, “ப்ச் அவள் பார்த்தால் எனக்கென்ன? அவளிடம் தான் நம்மை பற்றி சொல்லிட்டீங்களே, அப்புறமும் என்ன ? அது சரி இதென்ன புது ஜோடிங்க கையை கோர்த்துக்கொண்டு ஊரைசுற்றுவது போல நீங்களும் அவளை அழைச்சிட்டு வந்திருக்கீங்க. இது சரியில்லை அத்வைத்…”என்று கண்டித்தாள்.

“ஹேய் நீ வேற, விஷயம் தெரிந்து அம்மா என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கறாங்க. போதாதிற்க்கு இப்போ ஸ்ரீ வீட்டுக்கு மறுவீட்டுக்கு போயிருக்கிறோம். அவங்க பெண்ணை எங்கேயும் அழைச்சிட்டு போகாமல் இருந்தால் சந்தேகப்பட மாட்டாங்களா, அதான் சினிமாவுக்கு அழைச்சிட்டு வந்தேன். நீ டென்ஷானகாதே…”என்று அவளை சமாதானித்தான். 

“இருந்தாலும் இது தேவையில்லாத வேலை, இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். அம்மாவுக்காக, மாமனாருக்காக, தாலி கட்டிய மனைவிக்காகன்னு வெளியே அவளை வைச்சுக்கிட்டு சுற்றிக்கிட்டு இருந்தே, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். சரி ஏதோ சினிமாவுக்கு வந்தேன்னு சொன்னே, டிக்கெட் எடுத்துட்டியா …? 

 நீதாவின் பேச்சை எரிச்சலோடு கேட்டுக்கொண்டிருந்தவன், டிக்கெட் பற்றி கேட்கவும் இல்லை என்றான். 

“ஓகே இரு நானே எடுத்திட்டு வர்றேன் …”என்றவள் புயலாக வெளியேற, அத்வைதும் ஸ்ரீயை தேடி வெளியே வந்தான். 

அவளோ ஒரு மூலையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, வேகமாக அவளை நெருங்கினான். 

“சாரி ஸ்ரீ, கொஞ்சம் நேரமாயிடிச்சி. ஆமாம் நீ ஏன் வந்துட்டே. அவளை உனக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பேனே. அவள் தான் நான் சொன்ன நீதா. சரி வா படத்திற்கு போகலாம் …”என்று அவளின் கையை பிடிக்க அனிச்சையாக உதறினாள். 

“இல்லை எனக்கு படம் பார்க்கிற மூட் இல்லை. நீங்க பாருங்க, நான் இங்கேயே வைட் பண்றேன்…”என்றவள் சட்டென்று ஒரு புட் கோர்ட்டின் உள்ளே நுழைந்து அமர்ந்துக்கொள்ள அத்வைத் விக்கித்து போனான். 

ஸ்ரீயை விட்டுட்டு எப்படி சினிமா பார்ப்பது. இப்போதைக்கு சினிமா பார்ப்பது முக்கியமில்லை. மனைவியுடன் வீட்டிற்கு கிளம்பிவிடலாம். ஆனால் நீதா வர்றேன் என்று சொல்லியிருக்காளே. அவளை எப்படி சமாளிப்பது என்று குழம்பி நிற்க, ஸ்ரீயோ அங்கே ஒருத்தன் இல்லாதது போல தன் போனில் தலையை புதைத்துக்கொண்டாள். 

அத்வைத் பயந்தது போலவே நீதா அவனை நெருங்கி,”ஹேய் வா படம் ஆரம்பிக்க போகுது, நான் டிக்கெட் வாங்கிட்டேன் …”என்றவள் இரண்டு டிக்கெட்ஸை காட்ட அத்வைத் புருவங்களை நெறித்தான். 

“நாம மூன்று பேர் இருக்கோம் நீதா, நீ இரண்டு தான் வாங்கிட்டு வந்திருக்கே. ஸ்ரீயை விட்டுட்டு எப்படி போக முடியும் …? என்றான் சிறு கோபத்துடன். 

“ஹேய் நீ என்ன லூசா, இல்லை நான் லூசா? எனக்கு போட்டியா வந்திருக்கிறவளை அழைத்துக்கொண்டு படம் பார்க்க. நாம ரெண்டு பேர் தான் போறோம். வா போகலாம் …”என்று அவனின் கையை பிடித்திழுக்க சட்டென்று அவளின் கையை உதறினான். 

“திஸ் இஸ் டூ மச் நீதா, என்னை நம்பி ஒருத்தி வந்திருக்காள், அவளை அப்படியே விட்டுட்டு என்னை மட்டும் படம் பார்க்க அழைக்கிறே. உனக்கு அறிவில்லை. ஸ்ரீ மட்டும் தனியாக இருப்பாளா? சாரி என்னால் படத்திற்க்கு வர முடியாது. நீ மட்டும் போ. நான் ஸ்ரீயுடன் வீட்டுக்கு போறேன். கம் ஸ்ரீ வீட்டுக்கு போகலாம்…” என்று அவள் கையை பிடிக்க எத்தனித்த அத்வைதை பிடித்திழுத்தாள் நீதா ஆத்திரத்துடன்.