நிறம் மாறும் வானம் – 5

நிறம் 5


என் கைசேர்ந்த புதியவளே?
நீ உன் மனதுக்குள்
ஒளித்திருப்பது என்ன?

கண்ணாடிகளால் மூடப்பட்ட அறையில் கார்த்திகா சிஸ்டரின் குரல் கீரிச்சிட்டது.


“என்னாச்சு சிஸ்டர் ஏன் இப்படி கத்தறீங்க?” மதுவும் இர்சாத்தும் ஓரே குரலில் கேட்டனர்.


“சார் நீங்களே வந்து பாருங்க. அந்த பொண்ணு?..” வார்த்தைகளை தக்கித் தடுமாறி பேசினார்.


உடனே கேதரீன் இருந்த மதுவும் இர்சாத்தும் அறைக்கு விரைந்தனர். முதலில் உள்நுழைந்த மது அவளைப் பார்க்க மயக்கத்தில் தான் இருந்தாள். பல்ஸ் பார்க்க அருகில் செல்ல அவன் கால்களை ஏதோ தடுக்கியது. கொஞ்சம் தடுமாறியவன் கீழே குனிந்து அப்பொருளைப் பார்த்தான். அவள் படுக்கவைக்கப்பட்டிருந்த ஸ்ரெட்சர் அருகில் துப்பாக்கி ஒன்று கிடந்தது. துப்பாக்கியைக் கையில் எடுத்தவன் யோசனையாகப் பார்த்தான். கத்தி பிடித்து பழகிய கைகள் துப்பாக்கியை முதல் முறையாகப் பிடித்ததால் நடுங்கியது.


மதுவின் பின்னே உள்ளே வந்த இர்சாத் அவன் தோளைத் தொட்டான்.


“மச்சி என்னடா?”


இர்சாத்தை நோக்கி மதுபாலன் திரும்பினான். மதுவின் கைகளில் இருந்த துப்பாக்கியைப் பார்த்த இர்சாத்தும் அதிர்ச்சி அடைந்து நின்றுவிட்டான். இவர்கள் பின் உள்ளே வந்த கார்த்திகா சிஸ்டர் பதட்டத்தில் கைகளைப் பிசைந்தபடி நின்றார்.
மதுவின் முகம் எந்தவித முகபாவனையும் காட்டவில்லை. கார்த்திகாவை நோக்கினான்.


“இந்த பொண்ணு யாரு சார்? துப்பாக்கி வச்சுருக்கு?”


“சிஸ்டர் பயப்படாதீங்க. எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான். இதப்பத்தி நீங்க யாருகிட்டேயும் சொல்ல கூடாது. இந்த ரூமைத்தாண்டி விஷயம் வெளியே போகக் கூடாது. இவங்க உயிருக்கு ஆபத்து இருக்கு.”


யோசித்த கார்த்திகா சிஸ்டர் சரி எனத் தலையசைத்தாள். இருந்தாலும் கொஞ்சம் குழப்பம் தெரிந்தது. அதைக் கவனித்த மது, “எங்க மேல நம்பிக்கை இருக்குல சிஸ்டர்?”


மது இவ்வாறு கேட்டதும் உடனே முகம் மாறிய கார்த்திகா “இருக்கு சார்.” என பதில் கொடுத்தாள்.


குறுநகை புரிந்த மதுபாலன் “சரி ஸ்கேன் எடுக்கனும். டூ யுவர் வொர்க்.” அவருக்கு கட்டளை இடும் குரலில் கூறிவிட்டு
இர்சாத்தை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.


தன்னை மது இழுத்ததில் தெளிந்த இர்சாத் “டே ஃகன்னுடா? இது எப்படி இந்த பொண்ணுகிட்ட வந்திருக்கும், ஓரே குழப்பமா இருக்குடா?”


“ இந்த பொண்ணு ஒரு கிரிமினல் இல்ல போலிஸ். இரண்டுல எதாவதா இருக்கலாம்.” மது இயல்பாக பதில் கூறினான்.


“கிரிமினல்? எப்படிடா இவ்வளவு சாதாரணமா உன்னால பேச முடியுது.”
சிரித்த மது “அது காப்பாத்தருக்கு முன்னாடி யோசிச்சருக்கனும். இப்ப யோசிச்சு எதுவும் ஆகப்போறது இல்லை. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் தத்தருமமே கட்டளைக் கல்.”


“வெறுப்பேத்தாதடா..டிராஜடில திருக்குறளா? நீ இருக்கியே.? ஆனா அந்த பொண்ணு முகத்த பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலடா?”


“கிரிமினல் எல்லா முகத்துல கிரிமினல்னு எழுதி ஒட்டிருக்க மாட்டாங்கடா.”


“ரைட். அல்லா எங்கள இப்படி நல்லா கோர்த்துவிட்ட நீங்கதான் எங்களை காப்பாத்தனும்”. கடவுளை வேண்டிய இர்சாத் , “ஃகன்ன என்ன பன்னறது?”


“அதுக்கு ஒரு வழி யோசிப்போம்.”


அச்சமயம் கார்த்திகா சிஸ்டர் அப்பெண்ணை உடை மாற்றி அழைத்து வந்தார். மதுவின் அருகில் வந்தவர் கேதரீன் உடைகள் அடங்கிய சிறு பையை நீட்டினார். மதுவும் வாங்கிக் கொண்டான்.


“சார் இந்த பொண்ணு முதுகுல நீளமா கத்தில குத்தின மாதிரி தளும்பு இருக்கு. இன்னும் சில தளும்பு கைல. புல்லட் மாதிரி இருக்கு.”

…நிறம் மாறும்…