நிறம் மாறும் வானம் – 2

வானம் 2


இரவு நேரம் நிலவு மெதுவாக மேற்கே ஏறிக்கொண்டிருந்தது. டிஜிட்டல் கிளாக்கில் சிவப்பு நிற ஒளி ஒரு மணி பத்து நிமிடங்களை காட்டியது. மும்பையில் செல்வ செழிப்பில் மிதப்பவர்கள் வந்து செல்லும் இரவு நேர விடுதியிலிருந்து ஒருவன் வெளியே வந்தான்.

மது குடித்ததால் தள்ளாடிய படியே தனது காரின் அருகில் வந்தான்.


“ச்சே இன்னிக்கு இந்த டிரைவர் இல்லையே.” குழறலாக வார்த்தைகள் அவனிடம் இருந்து வெளிப்பட்டன.( ஹிந்தியில் பேசப்படுபவை தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன.)

தனது கார் கீயைக் பாக்கட்டினுள் தூலாவி எடுத்துக் கொண்டிருந்தான். அந்நேரம் அவனருகில் விலையுயர்ந்த ஆடை அணிந்த ஐந்தடி உயரம் கொண்ட ஒருவன் கையில் சிகரெட்டுடன் “பாய்..லைட்டர் இருக்கா?” எனக் கேட்டான்.


தன் அருகில் நின்றவனைத் பார்த்தவன் லைட்டரை எடுத்துக்கொடுத்தான்.
“தேங்க் யூ பாய்.” என்ற மற்றொருவன் ஒரு சிகரெட்டை எடுத்து லைட்டருடன் சேர்த்துக் முதலாமவனிடம் கொடுக்க மறுக்காமல் வாங்கிக் இவனும் பற்றவைத்தான். இருவரும் புகைக்கத் தொடங்கினர்.

முதலாமவன் நாசிகளின் வழியே உள்ளிழுத்து நுரையீரல் முழுவதும் நிரப்பினான். மூன்று முறை சுவாசித்ததும் மயங்கிச் சரியத் தொடங்கினான். உடனே இரண்டாமவன் அவனைத் தாங்கிப்பிடித்தான். கார் கீயை அவனிடமிருந்து எடுத்து கார்க் கதவை திறந்து பின்பக்கம் கடத்தினான். பின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பயணம் காரை இயக்கினான். மும்பையின் கரிய சாலைகளில் நழுவிச் சென்றது.

எவ்வளவு டெசிபலில் கத்தினாலும் வெளியே ஒலி கடந்து செல்லாத அறை. அறையின் உள்பக்கம் வெள்ளை வண்ணமாக இருந்தது. அவ்வறையில் முதலாமவனின் உடல் கடத்தப்பட்டிருந்தது. சிறிதுநேரத்தில் அவனுக்கு நினைவு வந்து கண்விழித்தான். எங்கும் வெள்ளையாக இருந்தது. இன்னும் போதை தெளியவில்லை. கண்களுக்கு எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. என்ன ஏது என்று புலப்படும் முன்னே மீண்டும் மயங்கினான்.


மெல்ல சூரியன் விழித்து தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கினான். கடத்தப்பட்டவனும் முழுதாக விழிப்பு தட்டியது. சுற்றிலும் விழிகளை சுழற்றி ஆராய்ந்தான். தலைவலி வேறு அவனை வாட்டியது. தலையைப் பிடித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தான். “நான் எங்கிருக்கேன்? இது எந்த இடம்?” குழப்பத்துடன் பேசினான்.


“ஃபேட் நூன் சூரஜ்.” ஆணுக்கும் சேராமல் பெண்ணுக்கும் சேராமல் ஒரு இயந்திரக்குரல் ஒலித்தது.


“நீ யாரு? உனக்கு என்ன வேணும்?” சூரஜ் கத்தினான்.


“ரொம்ப கத்தாத சூரஜ். உனக்கு உயிரோட இருக்கனும்னா நான் சொல்றத கேட்டுட்டு இருக்கனும். சும்மா சும்மா கத்தக்கூடாது.”


“உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்.”


இயந்திரக்குரல் சிரிப்பை பதிலாகக் கொடுத்தது. நேர அமைதிக்குப்பின் “சாப்பாடு வரும். சாப்பிட்டு அந்த அந்த டானிக் சாப்பிடு.”