தீராதது காதல் தீர்வானது – 11

அத்தியாயம் 11 :

இனியவளே, எனதுயிரே!
இருதயமே நின்று துடிக்குதடி
நீ வருவாயென்ற நப்பாசையில்…
உயிர்ப்பற்ற உயிரை தேக்கி வைத்து
உன் நினைவில் சுவாசம் கொண்டு
உன்னோடு இணையும் வாழ்வின்
கலைந்த கனவில் நான்!

திடீரென ஒலித்த மொபைலில் ஆரியனின் அழைப்பாக இருக்குமோ என ஆவலாக எடுத்துப் பார்த்தவள், அழைப்பது ரோகன் எனவும் உள்ளம் சிணுங்கித் தான் போனாள்.

கடந்து சென்ற இரு வாரங்களில் தன்னையே ஆரியனின் நினைவில் தொலைத்திருந்தவளுக்கு நண்பர்களின் நினைவு எப்படி இருந்திருக்கும்? இவன் ஏன் இந்நேரம் அழைக்கிறான் என்று யோசனை ஓடினாலும் அழைப்பை ஏற்றாள் டானியா.

“ரோகன், ஹே! எப்படி இருக்கே? என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கிறாய்?”

டானியா சொன்னது எதுவும் காதில் வாங்காதவனாக ரோகன் அவசரமாகப் பேசினான். ரோகனுக்குப் பொறுமை குறைவு என்று டானியாவிற்குத் தெரியுமே.

“நான் கேள்விப்பட்டது உண்மையா?”

இவன் என்ன கேள்விப்பட்டான் என்று எனக்கு எப்படித் தெரியுமாம்? இவன் எப்போதும் இப்படித்தான்.

“டானியா, சொல்லு நான் கேள்விப்பட்டது உண்மையா?”

“நீ கேள்விப்பட்டது என்ன என்று முதலில் சொல் ரோகன்.”

“உனக்கு வெடிங் ஃபிக்ஸ் ஆகியிருக்காமே?”

ஹாங்.. இவனுக்கு எப்படித் தெரிய வந்தது? நான் யாரிடமும் இன்னும் சொல்லவில்லையே? குழப்பத்தினூடே பதில் சொன்னாள்.

“ம்ம்.. ஆமாம் ரோகன்.”

டானியாவின் வாய்மொழியாகக் கேட்டதும், “என்னது? நிஜமாலுமா? நீ கல்யாணம் செய்துக்கப் போறியா?” என்றான் ரோகன். நம்ப முடியாமல் அதிர்ச்சியில் வெளி வந்தது அவன் குரல்.

“ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகிறாய் ரோகன்?”

“டானியா, என்னால் நம்ப முடியலை. நீ யாருடனும் டேட்டிங் போனாயா? எப்படி எனக்குத் தெரியாம போச்சு?”

இப்போது வருத்தத்துடன் ஒலித்தது ரோகனின் குரல்.

டானியா முழித்தாள். இவள் எங்கே டேட்டிங் அவுட்டிங் எனப் போனாள். நட்பு எனும் கோட்டுக்குள் தானே ஆண்களிடம் பழகி வந்திருக்கிறாள். அதனைத் தாண்டி யோசித்ததில்லையே. ரோகனின் சந்தேகம் சரி தானே?

‘ஆனால், ரோகனிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் இவ்விசயத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்? அதனால் வீண் குழப்பம் வரும். அவசரக் கல்யாண முடிவை நான் ஏன் எடுத்தேன்னு எனக்கே தெளிவில்லாமல் இருக்கு. என்னன்னு இவனுக்குச் சொல்ல…’

“நான் டேட்டிங் போகிறதெல்லாம் உன்னிடம் சொல்லணுமா ரோகன்?”

அவன் வருத்தத்தைப் போக்க கேலிக்குரலில் டானியா பேச, “ஏன் அப்படிக் கேட்கிறாய் டானியா. சொல்லியிருக்கலாம்ல. நாமெல்லாம் ஃப்ரண்ட்ஸ்ஸா பழகவில்லையா?” ஆதங்கத்துடன் கேட்டான்.

“சாரி ரோகன்! அப்படியெல்லாம் எனக்குப் பகிர்ந்து பழக்கமில்லைன்னு உனக்குத் தெரியாதா?”

“ம்ம்.. பட், என்னால் இன்னும் நம்ப முடியலை.”

“இனி நம்பிக்கோ. எனக்குக் கல்யாணம் முடிவாகியிருக்கு.”

எந்தளவு நண்பன் தன்னைத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று கொஞ்சம் உள்ளம் நெகிழ்ந்தாள் டானியா. நல்லவேளை ரோகன் எதிரில் நிற்கவில்லை என நினைத்துக் கொண்டாள்.

இப்படி டானியா தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, “ப்ளீஸ் டானியா, உண்மையைச் சொல். பிரகதியும் நீ யாரையும் லவ் பண்ணலைன்னு சொல்லியிருந்தாளே” என்றான் தவிப்பாக.

அவன் தவிப்பை டானியா உணரவில்லை. “ரோகன் பிலீவ் மீ” என்றாள் ஆறுதலாக.

“நாங்க நியூயார்க்கில் சந்தித்துக் கொள்வதில்லை. அதனால் பிரகதிக்குத் தெரிந்திருக்காது. நான் டாம்பாவிற்கு வரும் போது பார்த்துக் கொள்வோம்.”

“அப்போ நீ லவ் பண்ணுவது உண்மை. ஹ்ம்ம்.. உனக்கு ஆரியனை ரொம்பப் பிடிச்சிருக்கா டானியா?”

ஏமாற்றத்துடன் நலிந்து வந்த ரோகனின் குரலை கவனிக்கவில்லை டானியா. அவளின் எண்ணமெல்லாம் இவனுக்கு ஆரியனை எப்படித் தெரியும் என்பதில் வட்டமடித்தது.

“உனக்கெப்படி ஆரியனைத் தெரியும் ரோகன்?” வியப்புடன் கேட்டாள்.

“அஸ்வினின் அண்ணனை எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும் டானியா? உங்களுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்குன்னு அஸ்வின் இப்ப தான் சொன்னான்.”

அஸ்வின் ஆரியனின் தம்பியா? ஏன் அவன் தன்னிடம் சொல்லவில்லை? அனைவரையும் விட அஸ்வினுடனான நட்பை மிக நெருங்கிய நட்பாகக் கருதினேனே? டானியாவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆரியனைத் தனக்குத் தெரியும் என டானியா காட்டி இருந்தால் அஸ்வின் அவன் தன் அண்ணன் என்று சொல்லியிருப்பான் என்று ஏனோ அவளுக்குப் புரியாமல் போனது.

“என்னது!! அஸ்வின் ஆரி…” அவசரமாகத் தன் அதிர்ச்சியை மறைத்தவளாக, “ம்ம்..” என்பதுடன் நிறுத்திக் கொண்டாள்.

அந்நேரம் அஸ்வின் இன்னொரு லைனில் வந்தான். டானியா முதல் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்து கடுகடுவென மாறியிருந்தாள். அந்நேரம் அண்ணன் தம்பி இருவர் மீதும் ஆத்திரம் மிகுந்திருந்தது அவளுக்கு.

அதனால், அஸ்வினின் அழைப்பை சட்டை செய்யாமல் ரோகனின் அழைப்பிலேயே நின்றிருந்தாள்.

மறுபுறம் இருந்த ரோகனோ சொல்லொணா துயரின் பிடியில் சிக்கித் தவித்திருந்தான். மனம் வேதனையில் துடிக்க, அடுத்து என்ன என மூளைக்குக் கட்டளையிட முடியாமல் ஸ்தம்பித்த நிலை அவனது என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த ஒரு வருடமாகவே ரோகனுக்கு டானியாவின் மேல் ஓர் ஈர்ப்புணர்ச்சி. அதற்குக் காதல் எனப் பெயர் சூட்டுவதா எனப் புரியாமல் தவித்தவன் சில வாரங்களுக்கு முன் ஒரு முடிவிற்கு வந்திருந்தான். தனக்கு டானியாவின் மேல் காதல் எனத் தெள்ளத்தெளிவாய் உணர்ந்து கொண்டான்.

தன் தங்கை பிரகதியிடமும் பேச்சு வாக்கில் ஒரு பிட்டைப் போட்டு டானியா வேறு ரிலேசன்ஷிப்பில் இல்லைங்கிறதையும் அறிந்திருந்தான். அதனால் தான் விடுமுறையில் ஒரு வாரமாவது தங்கள் வீட்டிற்கு வந்து தங்குமாறு டானியாவைக் கேட்டுக் கொண்டான்.

அப்படி அவள் சிகாகோவிற்கு வரும்போது அவளிடம் தனிமையான நேரம் செலவளிக்கலாம். கொஞ்சம் பழகினால் அவளுக்கும் இவன் மேல் இன்ட்ரெஸ்ட் வரும். அப்படியே தன் காதலைச் சொல்லலாம் என நினைத்திருந்தான்.

ரோகனிற்குத் தற்போது படிப்பு முடிந்த நிலையில் அவன் நியூயார்க்கில் வேலையில் சேர நினைப்பதே தன் மனம் கவர்ந்துவிட்ட டானியாவிற்காகத் தான்.

மற்றபடி பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பவன், அவர்களருகில் சிகாகோவில் வேலை பார்ப்பதைத் தான் விரும்பினான். அவன் ஒன்றைக் கேட்டு இல்லை என மறுக்காமல் அவனின் ஆசைகளைப் பூர்த்திச் செய்யும் பெற்றோர் மேல் அவனுக்கும் மிகுந்த அன்பும் பாசமும் உண்டு.

என்றும் தான் நினைத்ததை ஆசைப்பட்டதைக் கிடைக்கப்பெற்ற ரோகன், இன்று போல் ஏமாற்றமும் துக்கமும் நிறைந்த நாளை இதுவரை சந்தித்ததில்லை.
சற்றுமுன் அஸ்வினிடம் பேசியதிலிருந்து ஆரம்பித்த படபடப்புக் கோபம், டானியாவிடம் பேசப் பேச எதிர்பார்ப்பு, ஏமாற்றம், துயரம், ஏக்கம், தவிப்பு, வலி என உரு கொண்டு தற்போது அவனை உறைவு நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

அவளின் காதல் ஒருவனிடம். அவன் ஆரியன். ஆரியனைப் பற்றி மட்டுமே சிந்தித்தும் நிந்தித்தும் அவளின் பொழுதுகள். இதை அறிந்ததும் ரோகன் நெஞ்சு பிளந்து வெடிப்பது போல் உணர்ந்தான்.

அவனின் காதலை டானியாவிடம் நேரிடையாக வெளியிடும் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டதை எண்ணி மருகினான். இந்நிலையில் அவனின் இதயக் காதல் மொட்டிலேயே கருகும் வாசம் அவனைத் துளித்துளியாக நினைவு மழுங்கச் செய்து கொண்டிருந்தது. இதை டானியாவோ, இல்லை, வேறு யாருமே அறியாது போவது தான் பரிதாபம். அஸ்வினும் ரோகனின் நிலையை முற்றும் அறிந்திருக்கவில்லை.

ரோகனின் இந்நிலைக்குக் காரணியான டானியா, இதைப் பற்றி ஏதுமறியாள். அவனின் காதலையும் அறியாள். அவன் இப்போது பேசும் பின்னணியைப் பற்றியும் அறியாள். என்றாவது ரோகனின் மனதை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிட்டுமா? அச்சந்தர்ப்பத்தை ஆரியனோ அஸ்வினோ அவளுக்குத் தருவார்களா? அப்படியொரு சந்தர்ப்பம் கிட்டினால் அந்நேரம் எப்படி உணரப் போகிறாள்?

இல்லை, ரோகனின் காதல் அவனின் காதல் பூவிற்குத் தெரியாமலேயே சமாதியில் புதையப் போகிறதோ? இருவரின் சில நொடிகள் அமைதிக்குப் பிறகு…

“இதற்காகத்தான் இந்த நேரத்தில் கால் செய்தாயா ரோகன்? அங்கிள் ஆன்ட்டி எப்படி இருக்காங்க?”

“ம்ம்…”

சுரத்தேயில்லாமல் வந்த ரோகனின் குரலைக் கேட்டதும் டானியா அவனின் சந்தேகம் இன்னும் தீரவில்லை என்றே நினைத்தாள்.

“சியர் அப் ரோகன்! நீ வொரி பண்ணாதே. ஐ’ம் வெரி மச் இன் லவ் வித் ஆரியன்.”

தோழன் காதலனாகிய கதையறியாமல் அவன் இதயத்திற்குள் அணுகுண்டை வீசி அதனை வெடித்துச் சிதறச் செய்து கொண்டிருந்தாள் டானியா. ரோகனின் விழிகள் சிவந்து இதயம் நின்று துடித்தது.

இதயத்தில் பெருகியது வலி..
விழியோரம் ஈயத் துளிகள்..
இதழோரம் மௌனித்த காதல் !

“இதுவரை கல்யாணப் பேச்செல்லாம் ஃபோன்ல தான் போயிட்டு இருக்கு. எங்க இரண்டு பேமிலியும் ரெண்டு நாள்ல நேர்ல மீட் பண்ணப் போறாங்க. வெடிங் இன்விடேஷன் எல்லாம் வந்ததும் நான் உங்க பேரண்ட்ஸிடம் பேசுறேன் ரோகன். சரியா.. இப்போ வைக்கட்டுமா?”

அவள் தன் அழைப்பை துண்டிக்கப் போகிறாள் என உணர்ந்ததும் ரோகன் துடித்தான். அவனுக்கு அந்நேரம் ஏனோ அவள் தன் வாழ்விலிருந்து இவனைத் துண்டிக்கப் போகிறாள் என்பதாக இருந்தது அத்துடிப்பு.

கடைசி முயற்சியாக, “டானியா, இன்னும் கல்யாணத்துக்கு இடையில் சில நாட்கள் இருக்கே. உனக்கு இந்த உன் அவசர முடிவில் ஏதேனும் மாற்றம் வந்தா கண்டிப்பா என்னைக் கூப்பிடு. சரியா? நான் காத்திருப்பேன். உனக்.. உன் ஃபோன் காலுக்காக…” எனச் சொல்ல,

‘இவன் ஏன் இவ்வளவு கவலையோட பேசுறான்? எப்போதிருந்து என் மீது பயபுள்ளைக்கு இந்த அக்கறையாம்? புல்லரிக்குது! நண்பேன்டா!’ எனக் காற்றில் ரோகனுக்கு ஹை-பை கொடுத்தாள்.

“தாங்க்ஸ் ரோகன்! என் மேல் கேர் எடுத்து ஃபோன் செய்ததுக்கு. வெடிங் ஈவென்ட்ஸ் பற்றி டீடெயில்ஸ் தெரிந்ததும் உனக்குச் சொல்றேன். டேக் கேர்! பை!”

ரோகன் கனத்துப் போன இதயத்தோடு விடைபெற்றான். டானியா அதற்குமேல் ரோகனைப் பற்றிச் சிந்திக்கவில்லை. விடாது ஒலித்த அஸ்வினின் அழைப்பும் அவளைச் சிந்திக்க விடவில்லை.
மொபைலின் துடிப்பை அடக்கிப் பார்த்தவள், அது விடாமல் ஒலித்துச் சண்டித்தனம் செய்யவும் பொறுமையிழந்தாள்.

“ஏன்டா விடாமல் கூப்பிடற? உன்னிடம் பேச இஷ்டமில்லாமத் தான் ஃபோன் கால்களைக் கட் பண்ணிட்டே இருக்கேன். அப்படியும் கூப்பிடற. இன்னும் வேற ஏதாவது பொய் சொல்லப் போறியா?”

“ஹஹாஹா.. டா வா.. இது எப்பத்திலிருந்து?”

“உம்ம்.. ஆரியன் உன் அண்ணன்னு தெரிஞ்சதிலிருந்து.”

“ஓஹோ, பந்தத்தில் பிறந்த ‘டா’ வா. ரொம்பச் சந்தோஷம் அண்ணியாரே!”

“அண்ணியா?”

“ஏன் இந்த ஜெர்க்… நீங்க எங்க அண்ணன் வைஃப்னா எனக்கு அண்ணி தானே?”

“மறுபடியும் நீங்கன்னு பன்மையில் பேசுற.. ம்ப்ச்.. இப்போ தான் எனக்குப் புரியுது. என்னைவிட வயசுல பெரியவனா இருந்தும் ஏன் நீ வா போன்னு கூப்பிடலைன்னு.”

“ஹஹா.. அது இடையில் தானே மாறிச்சு. நாம முதல்ல ஃப்ரண்ட்ஸானப்ப உங்களை வா போன்னு தானே கூப்பிட்டேன். அண்ணனுக்கு நீங்க இப்படி இப்படின்னு தெரிஞ்சதும் மரியாதை தர வேண்டாமா?”

“எப்படி எப்படின்னு தெரிஞ்சதுடா?” வேண்டும் என்றே டா போட்டு அதை அழுத்தி வேறு சொன்னாள்.

“அதாங்க.. கேர்ள் ஃப்ரண்டுன்னு.”

“அதான் அப்பவே தெரிஞ்சு போச்சுல்ல. என்னிடம் ஏன் சொல்லலை அவர் உன் அண்ணன்னு?” அஸ்வின் அவளின் பேச்சை ரசித்துக் கொண்டே பதில் கூறினான்.

“இதென்னங்க வம்பா போச்சு? உங்களுக்கு ஆரியனைத் தெரியும்னு எனக்கு எப்படித் தெரியும். நீங்க எப்பவாச்சும் அவனைப் பற்றி என்னிடம் பேசியிருக்கீங்களா? இல்லை, நீங்க அவனை லவ் பண்றதை தான் எனக்குச் சொன்னீங்களா? உங்க லவ்வ மறைச்சதுக்கு நான் தான் நியாயப்படி உங்களிடம் சண்டை போடணும்.”

“ம்ம் நீ சண்டையும் போடுவ. பொய்யும் சொல்லுவ.”

“ஹே திஸ் இஸ் டூ மச் யா! நான் என்ன பொய் சொல்லியிருக்கேன்?”

“டோண்ட் கிராஸ் குவஸ்ட்டின் மீ டா. ஐ டோண்ட் லைக் இட். தென், இந்த அண்ணி, ங்கன்னு சொல்றதையும் இப்பவே நிறுத்திக்கோ. புரிஞ்சுதா?”

“சரிங்க மேடம்.”

“என்னது! உதை விழும். பத்திரம்!”

இப்படி வார்த்தையாடும் டானியா அஸ்வினுக்குப் புதியவளாகத் தெரிந்தாள். அண்ணன் செய்த மேஜிக். உரிமையில் பேசுகிறாள்.. புன்னகைத்துக் கொண்டான் அஸ்வின்.