சுயம்-வரம் 7

தோழி:

சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே.

   தோழி என்பவள் தலைவியைச் சூழ விளங்கியும் பேச்சுத்துணையாகியும் சிறந்து மேவுபவள் என்பது பொருளாகும்.  –தொல்காப்பியம்.

காயத்ரி திருப்பூரில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே அமர்ந்திருந்தான் உமாவிற்குப் பார்த்த மாப்பிள்ளை. அவள் முகத்தில் பதட்டம் அப்பட்டமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது என்பது உண்மை. அதே சமயம் கோபமும் இருந்தது.

“இங்க பாருங்க. இந்தக் கல்யாணத்தை நீங்களா நிறுத்தறது நல்லது.”

“நான் எதுக்கு நிறுத்தனும்?”

“இங்க பாருங்க. எனக்கு எல்லார் கிட்டேயும் போய் உண்மையை சொல்ல ரொம்ப நேரம் ஆகாது. சோ…”

“ஏய் என்ன மிரட்டுறியா? உமா பிரண்ட்டுனு மரியாதை கொடுத்தா? ரொம்ப பேசிட்டு இருக்க. உன்னால் என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ.”

“நானும் உங்களுக்கு மரியாதை கொடுத்துட்டு இருக்கேன். அதான் இப்படி தனியா கூப்பிட்டு வச்சு பேசிட்டு இருக்கேன். நான் சொல்றதைக் கேட்கறது எல்லார்க்கும் நல்லது.”

“இவ்வளவு பேசறியே? நிச்சயம் முடிஞ்சு கல்யாணம் நின்னு போனால் உமாவுக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா? அவளோட குடும்பத்தோட மானமே போயிரும். நியாயமாப் பார்த்தால் நீ இந்தக் கல்யாணம் நடக்க சப்போர்ட் செய்யனும்.”

“ஆடு நனையுதேனு ஓநாய் கவலைப்பட்டுச்சாம். அவளைக் கல்யாணம் செஞ்சுக்க உனக்கு என்ன தகுதி இருக்குனு பேசிட்டு இருக்க. நான் சொல்லும் போதே நீ நிறுத்திக்கறது நல்லது.” அவர்களுக்கு எதிரில் ஹோட்டல் பணியாளர் காஃபி ஒன்றை வைத்தார்.

“எடுத்துக் குடி. நானே பே பன்னிட்டுப் போறேன்.”

தன் கைப்பையை நோக்கி பணத்தை எடுத்தவள் வைத்து விட்டு நகர்ந்தாள். ஹோட்டலை விட்டு வெளியேறுபவளை வெறித்தவன் தன் கைப்பேசியை எடுத்து அம்மாவுக்கு அழைத்தான்.

“அம்மா..”

“சொல்லுடா.. இந்த காயத்ரி சும்மா இருக்க மாட்டாள் போல தெரியுது. நான் அன்னிக்கே சொன்ன மாதிரி அவளுக்கு எல்லாம் தெரிஞ்சுருச்சு. கல்யாணத்தை நம்மளையே நிறுத்த சொல்லிட்டுப் போறா..”

“என்ன கல்யாணத்தை நிறுத்தறதா? டேய் நான் சொல்ற மாதிரி செய். எல்லாம் நல்லபடியா நடக்கும்.”

****

சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ அமைந்திருந்தது அந்த டார்ஸ் வீடு. மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்திருந்தான் ஜெயச்சந்திரன். நிலா விரைவில் பௌணர்மியைப் பிரசவிக்கப் போவதால் அவள் வயிறு நன்றாக வீங்கி இருந்தது. தலையணையில் மல்லார்ந்து படுத்து வானத்தையும் நிலவையும் பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்தென்று காட்டியது.

சரண்யா கேட்ட கேள்வி சந்திரனை இன்னும் கண்ணுறங்க வைக்க மறுக்கிறது. அவள் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லை. ஆனால் திரும்ப அங்கு போவதைப் பற்றி இன்னும் நினைக்கவில்லை என்பதே உண்மை.

சரண்யாவிடம் நிறைய வேறுபாடு தெரிந்தாலும் இன்னும் அடிப்படைக் குணம் மாறவில்லை. அவளுடன் பேசும் போது மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே சென்று விட்டது போல் தோன்றியது. பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள் ஆகிற்றே. சரண்யாவின் சேட்டைகள் மிகவும் பிரசித்தம். மற்றவர்களிடம் அப்படி நடந்து கொள்ள மாட்டாள். தன்னுடைய நண்பர்களிடம் மட்டும் அப்படி.

வெளியில் அமைதியான பெண் என்று அனைவராலும் கூறப்படுவாள். தனக்கு நெருங்கிய நபர்களிடம் மட்டும் அப்படித்தான் இருப்பாள். அவள் பள்ளிக் கூடம் படிக்கும் போது செய்த குறும்புகளை நினைக்கும் போது புன்னகை தானாக உருவானது.

இவ்வளவு ஏன் திவ்யா அப்போது சரண்யாவுக்கு நெருக்கம் இல்லை. அவளுக்கு மிக நெருங்கிய தோழிகள் இருந்தார்கள். இன்று சரண்யாவின் நெருங்கிய தோழிகள் வேறு. வாழ்க்கையில் சில நட்புகளும் எந்தத் திசையில் மாறும் என்று கண்டறிய முடியாது. நினைத்துக் கொண்டே உறங்கினான். அவனுக்கும் தெரியாது. அவனுடைய நட்பும் திசைமாறும் என்று.

அடுத்தநாள்.

காலை பேருந்தில் வழக்கத்தை விட கூட்டமாக இருந்தது. மற்ற நால்வரும் இயல்பாக இருக்க உமா மட்டும் கோபமாக ஏறினாள்.

பேருந்தில் ஏறி சீட் இருக்கும் இடத்தில் அமர்ந்தாள். நால்வரின் அருகே நெருங்கவில்லை. காயத்ரி அவளைப் பார்த்துக் கொண்டே வந்தாள். அதாவது அவள் முகபாவனைகளை வைத்து என்ன நினைக்கிறாள் என்று அறிய முயன்றாள். ஒரு வேளை திருமணம் நின்று போய் விட்டதால் இப்படி இருக்கிறாள் என்றும் தோன்றியது. சரி எப்படி என்றாலும் கீழே இறங்கிப் பேசிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டாள்.

நால்வரும் பேசிக் கொண்டே வந்தாலும் உமா அமைதியாக வந்தாள். காஃபி ஷாப்பில் அமர்ந்தனர். காயத்ரி நேரடியாகவே, “ஏன் உமா அமைதியாவே இருக்க?” என்றாள். சில விநாடிகள் அமைதியாக இருந்த உமாவின் முகம் கோபமாக மாறியது.

“நேத்து நீ அவரை மீட் பன்னியா?”

“யாரைடி சொல்ற?”

“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத காயத்ரி. உண்மையைச் சொல்லு.”

இருவரும் தீவிரமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்த மற்ற தோழிகளும் அமைதியாகினர்.

“என்னக்கா?” என்று சரண்யாவும் திவ்யாவும் ஒரே குரலில் கேட்டனர். ராகினியும், “ஏய் என்னடி என்ன பிரச்சினை உங்க இரண்டு பேருக்குள்ள?” குழப்பமாகக் கேட்டாள்.

“சொல்லு காயத்ரி இத்தனை பேர் கேட்கிறாங்க இல்லை? இப்பவாவது உண்மையைச் சொல்லு.”

நிமிர்ந்து அமர்ந்தாள் காயத்ரி. அவளுடைய முகத்தில் எந்தத் தவறும் செய்யாத முகபாவனை வந்தது.

“ஆமா பார்த்தேன். அதுக்கு என்ன?” என்று உமாவின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாள்.

வரம் தரும்…