சுயம்-வரம் 6

அத்தியாயம்-6

அடிதாங்கும் அளவின்றி அழல் அன்ன வெம்மையாற்

கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்

துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும்

                               உரைத்தனரே.

                     -பாலைக்கலி 11 (6-9)

 தலைவன் சென்ற பாலை நிலம் தாங்க முடியாத அளவுக்கு வெம்மை கொண்ட காடு. அந்தக் காட்டில் யானைக்கன்று ஆர்வ மிகுதியால் மிகக் குறைவாக இருக்கும் நீரைக் கலக்கிவிடும். அளவற்ற தாகம் கொண்ட ஆண்யானை அதற்கு கலங்காமல் முதலில் பெண்யானைக்கும், தன் கன்றுக்கும் நீர் ஊட்டிவிட்டு பின்னர் எஞ்சியவற்றை தான் அருந்தும்.

 நிச்சயதார்த்தம் முடிந்தால் பெண்களை பொதுவாக வெளியில் அனுப்பது இல்லை. ஆனால் அது இன்றைய கால கட்டத்தில் முற்றிலும் சாத்தியமில்லை. உமா தன் வேலையை முற்றிலும் விட  கால அவகாசம் இன்னும் முடியவில்லை. அதனால் இன்னும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். தோழிகள் அனைவரும் கலகலப்பாக இருக்க காயத்ரி மட்டும் ஏதோ யோசனையில் இருந்தாள்.

வேலையில் எதாவது பிரச்சினை என்றால் காயத்ரி சில நேரங்களில் அமைதியாக இருப்பது  வழக்கம். அதனால் தோழிகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் சரண்யாவுக்கு காயத்ரியின் அமைதி ஏதோ சரியாகப் படவில்லை. தனியாக வாட்ஸப்பில் கேட்டுவிட்டாள்.

காயத்ரி மழுப்பலாகப் பதில் அளித்து சமாளித்து விட்டாள். இதற்கிடையில் திருமணத்திற்கு ஒரு மாதம் இருந்தது. திருமணத்தை விரைவாக முடிக்க மாப்பிள்ளை வீட்டார் நினைக்க ஆனால் சரியான மூகூர்த்த நாட்கள் இல்லை. அதனால் திருமணம் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. திருமண வேலைகள் அனைத்தும் மும்முரமாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

தோழிகள் நால்வரும் வித்தியாசமாக திருமணத்திற்கு உமாவிற்குத் தெரியாமல் பரிசு கொடுக்க திட்டமிட்டிருந்தனர். மாப்பிள்ளையின் விருப்பத்தை அறிந்து கொள்ள சரண்யா மாப்பிள்ளையின் கைப்பேசி எண்ணை வாங்கி இருந்தாள்.

இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க அன்று இரவு வேலை முடிந்து திரும்பி வரும் போது ஜெயச் சந்திரனும் பேருந்தில் வந்திருந்தான்.

இன்று அவர்களுடைய பேருந்து நிறுத்தத்தில் வேறு யாரும் இல்லை என்பதால் அவர்கள் இருவரும் மட்டும் மெதுவாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

“என்ன பச்சைக் கிளி பஸ்ஸில் மட்டும் உன் பிரண்ட்ஸோட சிரிச்சுப் பேசிட்டு வர. இங்க இறங்குன உடனே அமைதியாகிடற?”

என்று கேட்டான்.

“இல்லையே நான் எப்பவும் போலதான் இருக்கேன்.”

இயல்பான குரலில் பதில் கொடுத்தாள் சரண்யா.

“சரி அதை விடு. நீ பச்சைக் கிளினு கூப்பிடாத. என்னோட கேங்குக்குத் தெரிஞ்சால் ஒரு மாசம் வேற கண்டெண்ட் இல்லை. இத வெச்சே ஓட்டுவாங்கடா.”

சந்திரனின் முகத்தில் அரையிருட்டில் ஒரு புன்னகை மலர்ந்தது. மனம் பழையதை நினைத்து அசை போட்டது.

“அது முடியாது பச்சைக் கிளி. வாய்ப்பில்லை பச்சைக் கிளி. எனக்கு இப்படி கூப்பிடத்தான் பிடிச்சுருக்கு பச்சைக் கிளி. அது மட்டுமில்லாமல் நீ நான் ஊருக்கு வந்த நாளில் அதே மாதிரி பச்சை டிரஸ் போட்டிருந்த பச்சைக் கிளி. நிச்சயமாக நான் மட்டும் பச்சைக் கிளி…”

சந்திரன் வேண்டுமென்றே பச்சைக் கிளி என்று பேசிட சரண்யா அவன் தலையில் எட்டிக் கொட்டியவள், “போதும் டா.. எத்தனை பச்சைக் கிளி. முடியலைடா. பெங்களூர் போய் உனக்கு வாய் அதிகமாயிருச்சு.” என்றாள்.

தலையைத் தடவிக் கொண்ட சந்திரன், “ஏய் பச்சைக் கிளி வளர்ர பையனை தலையில் கொட்டுற. உனக்கு அறிவில்லை. இதனால் நான் வளராம போயிட்டா என்னவாறது?”

வலது கையின் உள்ளங்கையை எடுத்து நெற்றியில் அடித்துக் கொண்டாள் சரண்யா.

“ஏண்டா.. உன்னோட ஹைட்ட பார்த்தியா? பஸ் கூரையில் நீ நின்னா முட்டுது. இதுக்கு மேல வளர்ந்தால் பனை மரத்து கூட காம்படிசன் போடுவ. முன்னை எல்லாம் புடலங்காய் மாறி இருப்ப. இப்ப லைட்டா வெயிட் போட்டுட்ட. இதில் இன்னும் நீ வளர வேணுமாம்.”

சலித்தப்படி சரண்யா கூறினாள். சந்திரனும் இதைக் கேட்டுச் சிரித்தான்.

“ஆஹா..பார்ரா.. அதெல்லாம் கத்திரிக்காய் கமெண்ட் அடிக்குது. அதைத்தான் என்னால் தாங்க முடியலை. சரண்யா மற்றப் பெண்களைக் காட்டிலும் உயரம் என்றாலும் சந்திரனுக்கு தோள் வரை மட்டுமே இருந்தாள்.

இவன் இனி தன்னை வம்பிழுக்காமல் வீட்டுக்குப் போக மாட்டான் என்பது புரிந்து விட்டது.

“இன்னிக்கு நல்ல பார்மில்தாண்டா இருக்க. நீ நடத்து.”

“யெஸ் பச்சைக் கிளி. உன்னை ஓட்டாமல் போனால் நைட் தூக்கம் வராது.”

“ஓ.. அப்படியா? அப்ப இத்தனை வருசம் எப்படி தூங்குனீங்களாம் சார்?”

என்று சரண்யாவும் விடாமல் பதில் பேசினாள்.

“அந்த ஊரு வேற பச்சைக் கிளி. இந்த ஊரு வேற. அங்க எண்டர்டெயின்மெண்ட்டுக்கு நிறைய இருக்கு.” என்றான் சந்திரன்.

தன் ஒரு கையை எடுத்து வாயைப் பொத்திய சரண்யா மற்றொரு கையால் அவன் புஜத்தில் அடித்தாள்.

“என்னடா.. எத்தனை கேர்ள்பிரண்ட்ஸ் வச்சிருந்த? அசால்ட்டா சொல்ற? இரு மாமாகிட்ட போட்டு விடறேன்.”

“போடி போய் சொல்லு. எனக்கு என்ன பயமா?”

“ம்ம்ம்ம்ம்.. சரி ஏன் இப்ப லீவ் எடுத்துட்டு இங்க வந்த? வொர்க் பெண்டிங்க் ஆகுமே?”

என்ற காரணத்தைக் கேட்டதும் தெரு விளக்கின் ஒளியில் சந்திரனின் முகம் இருண்டது.

வரம் தரும்..