சுயம்-வரம் 28

அத்தியாயம்-28

 “A Soulmate is someone who you carry with you forever. It’s the one person who knew you and accepted you and believed in you before anyone else did or when no one else would.”

          -Dawson’s Creek.

ஆத்மபந்தம் என்பது கடைசி வரை நம்முடன் வருவது. அந்த ஒரு நபருக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும். யார் ஏற்கவில்லை என்றாலும் உன்னை ஏற்றுக் கொண்டு உன் மேல் நம்பிக்கை முதலில் வைப்பவர்.

ராகினி காயத்ரியின் நிச்சய விழா முடிந்து களைப்புடன் வீடு திரும்பினாள். புடவை கட்டி இருந்தது அவள் வயிற்றை இருக்க ஆரம்பித்தது.

‘எப்படா இந்த புடவையை மாத்துவோம்?’ என்ற ரீதியில் வீட்டுக்குள் நுழைந்தாள்.

“அம்மா…”

என்று அழைத்தப்படியே உள்ளே நுழைந்தாள். அங்கு புதிதாக இருவர் அமர்ந்திருந்தனர். புதிய நபர்களைப் பார்த்தாலும் “வாங்க..” என்று அழைத்தாள்.

“வாம்மா.. நீதான் ராகினியா?”

“ஆமாங்க..”

“என்ன பன்னறமா?” கனிவுடன் எதிரில் இருந்தவர் கேட்டார். தான் செய்யும் பணியை எதிரில் இருப்பவரிடம் கூறினாள்.

“பரவால்லை.. நல்ல வேலை தாம்மா..”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய அப்பா வந்தார். அவருடைய கையில் ராகினியின் ஜாதகம் இருந்தது. அவளுடைய அம்மாவும் டீ எடுத்துக் கொண்டு வந்தார்.

டீயைக் குடித்து முடித்ததும் ராகினியின் அப்பா, “அப்ப ஒரே இடத்தில் ஜாதகம் பார்த்த பின்னாடி பேசிக்கலாங்க. இப்ப வேணும்னா.. நீங்க மறுபடியும் ஒரு தடவை பாருங்க..” என்று ராகினியின் ஜாதகத்தின் நகலை நீட்டினார். ராகினியும் இது வழக்கமாக நடப்பதுதானே என்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

“ராகினி.. உனக்கு நல்ல நேரம் வந்துருச்சுனு நினைக்கிறேன். இரண்டு வருஷம் முன்னாடியே இந்த சம்பந்தம் பார்த்தோம். அப்போ ஏதோ காரணத்தால் நடக்கலை. இப்ப மறுபடியும் தேடி வந்திருக்காங்க. அதிலும் மாப்பிள்ளை வீட்டில் உன்னைப் பத்தி விசாரிக்க ரொம்ப பிடிச்சு போச்சு. ரொம்ப நல்ல இடம்டி..”

என்று ஆர்வத்துடன் அன்னைக் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ராகினி. எதுவும் நடந்து முடியும் வரை அனாவசியமாக கற்பனைகளை ராகினி வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் புன்னகைத்தப்படி , “சரிமா.. நான் சாரி மாத்திட்டு வரேன்..” என்று தன் அறைக்குள் சென்றாள்.

***

“சரண்யா…” ஜெயச்சந்திரன் குரல் அவனுக்கே கேட்காதபடி மெதுவாக ஒலித்தது. மீண்டும் ஒரு முறை அழைத்தான்.

“சரண்யா…”

அவனை நிமிர்ந்து பார்த்தாள் சரண்யா. அவளது கண்களில் இருந்தது என்னவென்று தெரியவில்லை. அமைதியாக பார்வை அது. அவள் மனதிற்கு என்ன ஓடுகின்றது என்று கண்டறிய முடியாத பார்வை. அந்தப் பார்வை ஏற்கனவே பதட்டத்தில் இருந்த ஜெயச்சந்திரனை மேலும் குழப்பியது.

“சரண்யா… என்ன ஆச்சு?”

“என்ன ஆச்சா?.. நீ ஏன் பெங்களூரில் அவ்வளவு பெரிய வேலையை விட்டுட்டு இங்க வந்த? நானும் இதுக்கு முன்னாடி கேட்டப்ப நீ மழுப்பலா பதில் சொல்லி இருக்க? ஆனால் எனக்கு இன்னிக்கு ஆன்சர் தெரிஞ்சாகனும்.”

“இல்லை சரண்யா.. நான் வேலை பிடிக்காமல் தான் விட்டுட்டு வந்தேன்.. என்னோட கனவு ஒன்னு இருந்தது. அதை நனவாக்கவும் தான் இங்க வந்தேன்.” ஜெயச் சந்திரன் அப்போதும் அவன் இங்கு வந்த உண்மையான காரணத்தைக் கூறவில்லை.

அவனை அலட்சியமாகப் பார்த்த சரண்யா, “உனக்கு இன்னும் சரியாப் பொய் சொல்ல வரலை சந்திரா.. ஸ்பிட் இட் அவுட்..”  பெரும்பாலான ஆண்கள் பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் எதையோ கண்டுபிடித்துவிட்டு ஆதாரத்துடன் தான் கேள்வி கேட்பார்கள் என்று உணர்வதில்லை.

“இல்லை சரண்யா.. உண்மைதான். நான் என்னோட டீரிமுக்காகத்தான் இங்க வந்தேன்.”

“ஓ அப்படியா? சரி எதுக்கு இந்த கோர்ட் சம்மன் வந்திருக்கு?”

அதை எடுத்துப் படித்தான் சந்திரன்.

“ஜஸ்ட் ஒரு சின்ன கேஸ். அதுக்கு நான் விட்னஸ். அதனால் வந்திருக்கு.”


“சின்ன கேஸா? எனக்கு அப்படி தெரியலை. உனக்கு வந்திருக்கறது சுபோனியா.. போகலைனா என்ன நடக்கும்னு தெரியுமில்லை?”

“அது நார்மல் தான். ஒன்னும் பிரச்சினை இல்லை.”

“சரி என்ன கேசுனு சொல்லு?”

“ஒரு பெட்டி கேஸ். அவ்வளவுதான்..”

தன் கைப்பேசியை ஒரு கையில் வைத்துக் கொண்டு சந்திரன் அருகில் சென்ற சரண்யா அவனது சட்டையைப் பிடித்தாள்.

“ஏண்டா.. ஆளைக் கொல்றது உனக்கு பெட்டி கேஸா?”

வரம் தரும்..