சாகரம் 19

நான் அருண் தாத்தா கிட்ட அம்முவ காதலிக்கிறேனு சொல்லிட்டேன்தாத்தா ஒன் செகண்ட் ஷாக் ஆனாலும் அப்புறம் ஒத்துக்கிட்டாங்கஆனா அம்மு கிட்டவும் ஒரு வார்த்தை கேக்கணும் தானே! நான் அவளைக் காதலிக்கிற மாதிரி அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கணும் பகவானே! அவ காலேஜ் டேய்ஸ்ல படிப்பைத் தவிர வேற எதைப் பத்தியும் யோசிச்சு பாத்தது இல்லனு மேகா அடிக்கடி சொல்லுவா.. இப்போவும் ஒர்க்ல அவளோட பெர்ஃபெக்சன் பத்தி அப்பா அடிக்கடி புகழ்றார்அப்போ அவ மனசுல படிப்பு, வேலைய தவிர வேற ஒன்னும் இல்லங்கிறது கன்பார்மா தெரிஞ்சிடுச்சுஆனாலும் அவளுக்கு என்னைப் பிடிக்கணுமே! அதான் மனசு கொஞ்சம் படபடனு அடிச்சிட்டே இருக்குது

                                                        –அமிர்தாவின் சாகரன்

எத்தனை வருடங்கள் வீணையை வாசிக்கச் சொல்லி ரகுநாதன் வேண்டியிருப்பார்! அப்போதெல்லாம் இம்மியளவு கூட அசையாத ஜானகி இன்று எப்படி அமிர்தா சொன்னதற்காக வாசித்தார் என்று ஆச்சரியத்துடன் மகனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சமுத்ராவும் அமிர்தாவும் ஹாலில் விஜயலெட்சுமியும் ஜானகியும் என்ன பேசுகிறார்கள் என எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க கோமதியும் வேதவதியும் அவர்கள் தலையில் செல்லமாகக் குட்டி அவர்களை இழுத்து வந்து திரிபுரசுந்தரியின் அருகில் நிறுத்தினர்.

ஜானகியையும் விஜயலெட்சுமியையும் தவிர்த்து மற்ற அனைவரும் தோட்டத்தில் தான் குழுமியிருந்தனர். அனைவருக்குமே மீண்டும் அவர்கள் இருவரும் ராசியாகி விட வேண்டுமென்ற எண்ணமே!

அமிர்தா வித்யாசாகரைப் பார்க்க அவனோ “நான் குடுத்த ஐடியா எப்பவுமே பக்காவா வேலை செய்யும்டி… பாத்தல்ல… அவங்க ரெண்டு பேரும் இப்போ பாசமலர் சிவாஜி சாவித்திரி மாதிரி கண்ணீர் பெருக்கெடுக்க அன்பைக் கொட்டிப் பேசிட்டிருப்பாங்க… அப்புறம் ஒன்னு சேர்ந்துடுவாங்க” என்று சொல்லவும் அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

அங்கே ஹாலில் இரு தோழியரும் கண்ணீர் மல்க நின்றிருந்தனர். விஜயலெட்சுமி ஜானகியின் கரத்தைப் பற்றிக் கொண்டவர் அதைக் கண்ணில் ஒற்றினார்.

“இந்தக் கையில எவ்ளோ திறமை இருக்கு ஜானு! இத்தனை நாள் இதெல்லாம் வெளிப்படாம புதைஞ்சு கிடந்ததுக்கு நான் காரணமா போயிட்டேன்!  நான் பாவி ஜானு… என்னால எங்கப்பா, என் குடும்பம், நீ எல்லாரும் எவ்ளோ அசிங்கப்பட்டிருக்கிங்கனு அன்னைக்கு கடை ஓபனிங் செரிமோனில அந்தம்மா பேசுனப்போ புரிஞ்சுகிட்டேன்… நான் சுயநலவாதிடி… அதோட நான் பண்ணுனது தப்புனு இத்தனை வருசமா எனக்குத் தோணவே இல்லயே… என் பொண்ணு என்னோட தப்பைச் சுட்டிக்காட்டாத வரைக்கும் அதை நான் சரினு தானே நினைச்சிட்டிருந்தேன்… என்னை மன்னிச்சிடு ஜானு”

அவரது கண்ணீர் ஜானகியின் கரத்தை நனைத்து மனதை உருக்கியது. சமீபகாலங்களில் அமிர்தவர்ஷினியின் செய்கைகள் அவரது மனதை அசைத்திருக்க இன்று தோழி கண்ணீர் விடுவது அவருக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

தனது வைராக்கியத்தை மறந்து வீணையை மீட்டியதில் உண்டான இசைவெள்ளத்தில் மனதில் தேங்கியிருந்த கோபங்களும், அசட்டுப்பிடிவாதங்களும், வேதனைகளும் அடித்துச் செல்லப்பட்டுவிட இப்போது ஜானகியின் உள்ளம் நிர்மலமாக இருந்தது.

இசை மனதை அமைதிப்படுத்துவதோடு மனதின் இரணங்களை ஆற்றும் வலிமையும் அதற்கு உண்டு. அந்த இசையே அவரது மனக்காயத்தை ஆற்றிவிட தோழியின் கண்ணீரைத் துடைக்க அவரது கரங்கள் நீண்டன.

மெதுவாய் விஜயலெட்சுமியின் கண்ணீரைத் துடைத்தவர் “அழாதடி விஜி… நானும் உன் மேல ரொம்ப அதிகமா கோவப்பட்டுட்டேன்… நீ செஞ்சது ஒரு வகைல தப்புனா அதை மனசுல வச்சுட்டு நான் அமிர்தாவை சின்ன வயசுல பேசக் கூடாத பேச்சுலாம் பேசுனேனே அதுவும் தப்பு தான்டி… சின்னக்குழந்தைக்கு நான் அப்ப என்ன அர்த்தத்துல பேசுனேன்னு கூட புரிஞ்சிருக்காது… நானும் ராட்சசியாட்டம் நடந்துகிட்டேன் விஜி… அதுக்கு அப்புறமும் அவளை இந்தக் குடும்பத்தோட உறுப்பினரா நடத்தவே இல்ல! அவளை அசைவம் சாப்பிடுறவனு சொல்லி ஒதுக்கி வைச்சேனே… நானும் பாவி தான் விஜி” என்று புலம்ப ஆரம்பித்தார்.

“நீயும் சாதகம் பண்ணுறத விட்டுட்டியாடி?” என்ற ஜானகியின் கேள்விக்கு ஆமென தலையாட்டினார் விஜயலெட்சுமி.

“நான் சாதகம் பண்ண உட்கார்றப்போ இந்த வீணையோட நீ இருக்குறது தான் நியாபகம் வரும்… அப்போ எப்பிடி என்னால நிம்மதியா சாதகம் பண்ண முடியும்?” என்று சொன்னார் விஜயலெட்சுமி.

“சரிடி… பழைய விசயத்தைலாம் ஒதுக்கி வச்சிடுவோம்… இன்னைக்கு நம்ம சம்பந்திகளா வேற ஆயிட்டோம்… இனிமேயும் சின்னக்குழந்தையாட்டம் சண்டை பிடிக்காம இருக்க முயற்சி பண்ணுவோம்… காலம் கடந்த ஞானம் தான்… இருந்தாலும் என்ன பண்ணுறது? உன்னோட பொண்ணு தான் அடி மேல அடி வச்சு என்னை அசைச்சுட்டா… அவ இப்ப பேசுனதை முன்னாடியே பேசி என்னை வழிக்குக் கொண்டு வந்திருந்தா நம்ம குழந்தைங்களோட கல்யாணத்துல மூஞ்சிய தூக்கிட்டு இருந்திருக்க மாட்டோமே”

ஜானகி விஜயலெட்சுமியை முகம் கழுவி விட்டு வரச் சொன்னார்.

அத்தோடு தோட்டத்தில் இருந்து எட்டிப் பார்த்தவர்களை நோக்கி விரைந்தவர் “எட்டிப் பாத்தது போதும்… எல்லாரும் உள்ள வர்றிங்களா? அத்தை, சின்னத்தை நீங்களும் வாங்க” என்று அனைவரையும் வீட்டினுள் அழைத்தார்.

அமிர்தாவும் சமுத்ராவும் உற்சாகத்துடன் உள்ளே சென்றனர். முகம் கழுவி விட்டு வந்த விஜயலெட்சுமியின் வதனத்தில் வாட்டம் ஏதுமின்றி மகிழ்ச்சி மட்டுமே மின்னியது.

இத்தனை நாட்கள் முறைத்துக் கொண்டிருந்த இரு தோழியரும் இன்று வேறுபாடுகளை மறந்து மீண்டும் பழையபடி நட்பாய் இணைந்ததில் இரு குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அன்றைய தினம் மதியவுணவை பார்வதிபவனத்தில் முடித்துக் கொண்ட விஜயலெட்சுமி தானும் உன்னிகிருஷ்ணனும் கொல்லத்துக்குச் செல்லும் தகவலைச் சொன்னவர் மகளிடம் கவனமாகத் தேர்வை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டு விடை பெற்றார்.

செல்லும் முன்னர் ஜானகியிடம் அவரிடம் பேச ஏகப்பட்ட விசயங்கள் இருப்பதாகச் சொன்னவர் அனைத்தையும் அவரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளதாகச் சொல்ல ஜானகியும் தன் மனதில் இத்தனை நாட்கள் புதைத்து வைத்திருந்த சந்தோசம் துக்கம் அனைத்தையும் அவரிடம் ஒப்பிப்பதற்காக காத்திருப்பதாகச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

மகள் சென்றதும் அருணாசலம் ஜானகியிடம் தன் மகளை மன்னித்து இன்று தன்னை நிம்மதியுற செய்து விட்டதாக ஜானகியிடம் கூறினார்.

“எனக்கும் இன்னைக்கு தான் மாமா மனசு ரொம்ப வருசத்துக்கு அப்புறமா நிம்மதியா இருக்கு… நானும் விஜியும் பழையபடி பேசினா இவ்ளோ நிம்மதியா இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இத்தனை நாளை வேஸ்ட் பண்ணிருக்கமாட்டேன்”

மருமகளிடம் “உன்னோட திங்சை பேக் பண்ணி முடிச்சிட்டனா இன்னைக்குச் சாயங்காலம் ரெடியா இரு… நம்ம கோயிலுக்குப் போகணும்… எக்சாம் எழுதுறதுக்கு முன்னாடி ஹால் டிக்கெட்டை வச்சு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுவோம்” என்று சொல்ல அவளும் தலையாட்டி வைத்தாள்.

அம்மாவும் மாமியாரும் ராசியான செய்தியை உடனே மேகவர்ஷினிக்கு அமிர்தா சொல்லிவிட்டாள்.

அடுத்து ஹரிஹரனுக்குச் சொல்ல அழைத்தவள் “நம்ம குடும்பத்துல இருந்த ஒரே ஒரு மனவருத்தமும் சுமூகமா தீர்ந்துடுச்சுடா ஹரி… இப்போ தான் ஹண்ட்ரெட் பர்செண்டேஜ் சந்தோசம் திரும்புன மாதிரி இருக்கு” என்று சொல்லி தனது மகிழ்ச்சியை மனம் கவர்ந்தவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

பின்னர் நேரம் வேகமாக நகர்ந்தது. மாலையில் மீனாட்சி திரிபுரசுந்தரியுடன் அவர்களின் தூரத்து உறவினரின் மகனது திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அருணாசலத்தையும் சதாசிவத்தையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

மதியம் சொன்னபடியே மருமகளை அழைத்துக் கொண்டு ஜானகி கோயிலுக்குச் செல்லத் தயாரானவர் மகளையும் தங்களுடன் வரும்படி கூறினார்.

“அமிர்தா ரெடியாயிட்டியா? உன்னோட ஹால்டிக்கெட்டையும் எடுத்துக்க” என்று கீழே இருந்தபடி கட்டளையிடவும் அமிர்தவர்ஷினி சுடிதாரின் துப்பட்டாவை ஒரு புறம் பின் செய்துவிட்டு மறுபுறம் விரித்து விட்டபடி கண்ணாடியில் தன்னைச் சரிபார்த்துக் கொண்டிருந்தவள் வேகமாக தனது உடமைகளை வைத்திருந்த பேக்கிலிருந்து ஹால் டிக்கெட்டை எடுத்துக்கொண்டாள்.

அவள் பரபரப்புடன் ஹேர்பின்னை செருகி அலைபாயும் கூந்தலை கட்டுக்குள் கொண்டு வருவதையும் நெற்றியின் மையத்தில் அரக்கு நிற பொட்டை ஒட்டிக் கொண்டு புருவங்களைக் கையாய் நீவி விடுவதையும் நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் வித்யாசாகர்.

அவனது சிரிப்பைக் கண்டு கொண்ட அமிர்தா “மனசுல புன்னகை மன்னன்னு நினைப்போ? நானே ஆன்ட்டி கூட ஃபர்ஸ்ட் டைம் கோயிலுக்குப் போற டென்சன்ல இருக்கேன்” என்று முணுமுணுக்க

“கோயிலுக்குத் தானே போற! என்னமோ போர்க்களத்துக்குப் போற மாதிரி பரபரப்பா ரெடியாகுற… சரி அத விடு… எனக்கு இந்த டீசர்ட் ஓகேவா? இல்ல சேஞ்ச் பண்ணணுமா?” என்று கேட்டு அவளைக் குழம்ப வைத்தான் அவன்.

“வீட்டுல இருக்குற மனுசனுக்கு இந்த டீசர்ட் ஓகே தான்.. எனி ஹவ் இனிமே கொஞ்சம் டார்க் கலர் டீசர்ட்டா வாங்குங்க… நீங்க போடுற ஒயிட், சாண்டல் கலர் டீசர்ட்ல அழுக்கு பட்டுச்சுனா போகவே மாட்டேங்கிறது”

“வாஷிங் மிஷின்ல தானடி போடுற? அதுக்கே இத்தனை ஆர்டரா? அடேங்கப்பா… இந்தக் கொஞ்சநாள் ஆபிஸ் போகாம வீட்டுல இருந்து என் துணிமணியை துவைச்சு போட்ட… இல்லனா வேலைக்காரம்மா தானே துவைக்கும்”

“யாரு துவைச்சா என்ன? நீங்க லைட் கலர் டீசர்ட் போட்டா கழட்டுறப்போ அது கரிப்பிடித்துணியாட்டம் அழுக்கு மண்டி இருக்கு… ஒருவேளை எனக்குத் தெரியாம சின்னவயசுல செய்யுற மாதிரி தோட்டத்து மண்ணுல உருளுவிங்களோ?”

“இந்த நக்கல் நையாண்டிக்கு குறைச்சலே கிடையாதுடி… நான் ரிலாக்சா ஆத்தங்கரை படிக்கட்டுல படுத்து ஆகாயத்தை ரசிச்சிட்டிருப்பேன்… அப்போ லைட்டா மண் ஒட்டிருக்கும்.. அத போய் இவ்ளோ பெரிய கம்ப்ளைண்டா சொல்லுற”

“ஐயா சாமி! நீங்க இயற்கைய ரசிக்கிறதுக்கு நான் இடுப்பு ஒடிய துணிய துவைக்கணுமா? இனிமே உங்க வார்ட்ரோப்ல நோ மோர் லைட் கலர் டீசர்ட்ஸ்… சொல்லிட்டேன்… அதை மீறி வாங்குனிங்கனா….”

அவள் மிரட்டிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் மாமியார் அழைக்க “உங்க மம்மி கூப்பிடுறாங்க… நான் போயிட்டு வர்றேன்… போயிட்டு வந்ததுக்கு அப்புறமா நம்ம ஆர்கியூமெண்டை கண்டினியூ பண்ணிக்கலாம்… டாட்டா” என்றபடி விரைந்தவளின் கரத்தைப் பிடித்து நிறுத்தியவன் அவளுடன் சேர்ந்து கீழே சென்றான்.

மருமகளைக் கண்டதும் “இன்னைக்கும் சுடிதாரா? நல்லதா காட்டன் சில்க்ல ஒன்னை கட்டிக்கக் கூடாதா?” என்று தனது மாமியார் பதவிக்கேற்ப பேச

“இல்ல ஆன்ட்டி… அவசரத்துக்கு ஷேரி கட்டிக்க தோணல” என்றாள் அமிர்தா அமைதியாக.

அவளது ‘ஆன்ட்டி’ இத்தனை நாட்களுக்கு பின்னர் ஜானகிக்கு வித்தியாசமாய் தோன்ற புருவத்தைச் சுழித்தபடியே “அது என்ன ஆன்ட்டினு யாரையோ கூப்பிடுற மாதிரி பேசுற? ஒழுங்கா அத்தைனு சொல்லு” என்று அதட்டியவர் அதற்கு அவள் தலையாட்டவும் மூவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

அதிசயத்திலும் அதிசயமாய் மாமியாரும் மருமகளும் சேர்ந்து செல்வதைக் கண்டு அதிசயித்த தெருவாசிகளிடம் தனது மருமகள் ஆடிட்டர் படிப்புக்கான தேர்வை எழுத திருநெல்வேலிக்குச் செல்லவிருப்பதால் தேர்வு நன்றாக எழுதவேண்டுமென வேண்டிக்கொள்ள கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு நடையைக் கட்டினார்.

சில நிமிட நடையில் நித்தியகல்யாணி அம்மன் கோயிலை அடைந்தனர் மூவரும். ஜானகி அர்ச்சனைத்தட்டில் ஹால் டிக்கெட்டை வைத்துவிட்டு அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தருமாறு அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டுக் கண் மூடி வேண்டிக்கொண்டார்.

சமுத்ராவும் அன்னையைப் போல கண் மூடி வேண்ட ஆரம்பிக்க அமிர்தாவும் வித்யாசாகரும் ஜானகியின் மாற்றத்தில் மகிழ்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டனர். கூடவே அம்பாளிடம் மனமுருகி நடந்த அனைத்துக்கும் நன்றி சொன்னவர்கள் தங்களது எதிர்காலத்துக்காகவும் வேண்டிக் கொண்டனர்.

அர்ச்சகர் அர்ச்சனை தட்டோடு ஹால்டிக்கெட்டையும் நீட்டியவர் விபூதி குங்குமத்தைக் கொடுத்துவிட்டு “அம்பாளோட ஆசியால உங்க மருமகள் நல்லபடியா பரிட்சை எழுதி முடிப்பா” என்று ஆசிர்வதிக்க ஜானகி புன்னகையுடன் அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டார்.

கோயிலை வலம் வந்துவிட்டு பிரகாரத்தில் அமர்ந்தவர்களின் மனம் அந்த ஆலயத்தின் அமைதியிலும் சுற்றியிருந்த இயற்கை காட்சிகளின் அழகிலும் இலயிக்க ஆரம்பித்தது.

தெரிந்தவர்கள் சிலர் வந்து மருமகளுடன் வந்திருந்த ஜானகியிடம் விசாரிக்க அவர் தனது மருமகளின் தேர்வைப் பற்றி பெருமையாகச் சொன்னவர்

“வித்திப்பாவோட ஆபிசுக்கு அடுத்த வாரிசு என் மருமகள் தான்… அவ பாஸ் ஆயிடுவானு எனக்கு தெரியும்… ஆனா இதுல நேஷனல் லெவல்ல ரேங்க் வாங்குனா பெரிய கம்பெனில ஒர்க் பண்ணலாமாம்… வித்திப்பா தான் சொன்னார்… அதுக்காக தான் அம்பாள் கிட்ட வேண்டிகிட்டேன்” என்று சொல்ல இளையவர்கள் மூவரும் வாயடைத்துப் போயினர்.

சமுத்ரா மட்டும் “டேய் அண்ணா! நம்ம அம்மா ஒன்னு யாரோ எவளோனு ஒதுக்கி வைக்குறாங்க… இல்லனா இப்பிடி ஒரேயடியா அன்பை கொட்டுறாங்க… ஏன்டா இப்பிடி?” என்று கேட்க

“அது தான் நம்ம அம்மாவோட நேச்சர்டி சம்மு… இனிமே அவங்க கண்ணுக்கு இந்த முட்டக்கண்ணி முழியழகி மட்டும் தான் தெரிவா” என்று சோகமாய் முகத்தை வைத்தபடி அமிர்தாவைக் கேலி செய்ய அவள் பல்லைக் கடித்துவிட்டு அவனது புஜத்தில் கிள்ளி வைத்தாள்.

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… ஒழுங்கா நான் எக்சாம் எழுதிட்டு வந்ததும் என்னை ஹனிமூன் கூட்டிட்டுப் போகலனா அமிர்தவர்ஷினியோட இன்னொரு முகத்தை பாப்பிங்க மிஸ்டர் வித்யாசாகர்” என்றதும்

“என்ன இப்பிடி பேசுற அம்மு? உனக்கு எங்க போகணும்னு மட்டும் சொல்லு…. மாமா கூட்டிட்டுப் போறேன்” என்று அமர்த்தலாக மொழிய

“நம்பாத அம்மு… நேத்து கூட ஷாப்ல இப்போ ஷேல்ஸ் அதிகமா இருக்கு…. இந்த டைம்ல நேரம் காலம் பாக்காம வேலை செய்யணும்னு தாத்தா கிட்ட இந்த அண்ணா சொல்லிட்டிருந்தான்” என்று அவனை மாட்டி வைத்து வேடிக்கை பார்த்தாள் வித்யாசாகரின் உடன்பிறப்பு.

அதைக் கேட்டு அமிர்தா முறைக்க அவளை அவன் சமாதானம் செய்ய சமுத்ரா மீண்டும் மீண்டும் போட்டுக் கொடுக்கவென மாலை பொழுதின் ஆலயதரிசனம் அழகாய் முடிந்தது.

வீட்டுக்கு வந்ததும் ஹால்டிக்கெட்டை பத்திரப்படுத்துமாறு அமிர்தாவிடம் சொன்ன ஜானகி நாளை மறுநாள் தேர்வுக்குரிய பாடங்களைப் படிக்கும்படி அவளை அனுப்பி வைத்துவிட்டார்.

அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த அவளது கணவனோ நேரே மாடி வராண்டாவுக்கு அழைத்துச் சென்று புத்தகங்களுடன் அமரச் சொன்னவன் படிக்குமாறு கட்டளையிட்டு விட்டு நகர்ந்தான்.

அவனது கரத்தைப் பிடித்து நிறுத்தியவள் எக்கி அவனது கன்னத்தில் முத்தமிட்டு “ஐ அம் சோ லக்கி டு ஹேவ் யூ அஸ் மை ஹஸ்பெண்ட் சாகர்” என்று சொல்லவும் அவனும் புன்சிரிப்புடன் அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு மௌனமாய் அகன்றான்.

அதன் பின்னர் அவள் பாடத்தில் கவனமாக வித்யாசாகர் ஹரிஹரனுடன் வழக்கமான சம்பாஷனைகளைப் போனில் பேச ஆரம்பித்தான். அன்றைய தினத்தில் இருவரின் மனமும் எல்லையற்ற ஆனந்தத்தில் திளைத்திருந்தது என்று சொன்னால் மிகையாகாது.