காதல் சிநேகன் – 2

அத்தியாயம்- 02

அடுப்படியிலிருந்து அரக்க பரக்க வெளியே வந்த மனோகரி மகள் அருகே வந்து நின்றார். நைட்டியில் இருந்தவர் தோளில் போட்டிருந்த கைத்துணியில் கைகளைத் துடைத்தபடி,

“வாடி. எங்க இந்த வாரமும் நீ வருவியோ மாட்டியோன்னு நினைச்சி நெஞ்சுக்குள்ள பதக்குப் பதக்குன்னு அடிச்சிட்டிருந்தது. நல்லவேளை வந்திட்ட!”

“வர்றேன்னு ஃபோன் போட்டுட்டு எப்படி வராம இருப்பேன் மா? இந்த வாரம் வரலைன்னா அடுத்த வாரம் வந்துட்டுப் போவேன்ல. இதுக்கெதுக்குப் பதக்குப் பதக்குன்னு டென்சனாகணும் நீ?”

தெரிந்துகொண்டே தான் கேட்டாள்.

“அது… பெரியவன் சொல்லலையாடி? உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குடி. அந்தப் பையன். வீட்ல இருந்து நாளைக்கி உன்ன பார்க்க வர்றதா கேட்டாங்க.

நீயும் இன்னைக்கி வரப் போறதா சொல்லியிருந்தியா. அப்ப சரின்னு அவங்களை வரச் சொல்லிட்டோம். வர்றேன்னு சொல்லிட்டு வேலை வந்திருச்சி வர முடியலைன்னு போன் பண்ணிட்டா என்ன செய்ய நாங்க? அவங்கட்ட மாத்தி மாத்திப் பேசுனா நம்பள பத்தி என்ன நினைப்பாங்க?

தினேஷ் இந்த விசயத்த வர்ற வழியிலேயே உன்ட்ட சொல்லிருப்பான்னு நினைச்சேன். என்னடா நீ இவட்ட எதுவும் சொல்லலையா?”

தினேஷ் ஏற்கெனவே ஷாமினிக்குச் சொல்லிவிட்டேன் என்று சொல்வதா வேண்டாமா என ஒரு வினாடி தயங்கி நின்றான். அவனைப் பார்த்த ஷாமினி அதனை அவன் முழியிலேயே கண்டுகொண்டாள்.

“எல்லாம் தெரியும். காதுக்கு விசயம் வந்திருச்சி.” அசிரத்தையாகச் சொன்னாள். இந்த அம்மாவை என்ன செய்வது என்கிற இயலாமையில் அவள் மனம் சோர்வடைந்தது.

“கூட ரெண்டு மூணு நாளு லீவு போட்டிட்டு வந்தியாடி?”

“ஊகூம்… ஒரு நாள் தான் லீவு தான் கிடைச்சது. இதுக்கே டீம் லீட் அத்தனை கேள்வி கேக்குறான்.”

என்ன தான் மனது பூராவும் எரிச்சலும் கோபமும் இருந்தாலும், அதை வந்தவுடன் அம்மாவிடம் காட்டாமல் குரல் தணிந்தே தான் பேசினாள் ஷாமினி.

அவர் குணம் தெரியும் தானே அவளுக்கு? தான் நல்லதனமாகவே பேசினால் தான் உண்டு. ஏதோ கொஞ்சமாவது அம்மா இசைந்து கொடுக்கும் சாத்தியமிருக்கிறது. தன் விருப்பப்படி எப்படியாவது பேசி இந்தத் திருமணப் பேச்சை மறுக்கவோ ஒத்தி வைக்கவோ முடியும்.

மனோகரியோ அன்று ஒரு முடிவுடன் தானிருந்தார். ஷாமினியின் பணிவு தணிவு எல்லாம் பொருட்டில்லாமல் போனது.

“அவன் எதுக்குக் கேள்வி கேட்டிட்டிருக்கான்? இந்த வயசுல நிக்கிற பொண்ணுங்க லீவு கேக்குறாங்கன்னா எதுக்கா இருக்கும் புரிஞ்சுக்க மாட்டானா மடையன்?”

“ம்கூம்… அவ்வளவு பெரிய கம்பெனில வேலை செய்யிறவன் உங்களுக்கு மடையனா? டீம் லீடும் மேனேஜரும் இப்படி ஒவ்வொருத்தருக்கும் சலுகை பார்த்திட்டிருந்தா அவங்க வேலைய குறிச்ச நேரத்தில முடிக்க முடியுமாம்மா?

வேலைல இருக்கிற பொண்ணுங்க லீவு கேட்டா அதுக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு தான் அர்த்தம் பண்ணிக்கணுமா? அட போம்மா… நீ எந்தக் காலத்துல இருக்க இன்னும்?

ஊரு உலகம் எவ்வளவு அட்வான்ஸா போயிட்டிருக்கு. அவனவன் மொபைல் ஆப் வழியாவே பொண்ணு மாப்பிள்ளய தேடிக்கிறான். டேட்டிங் போறாங்களாம். வீடியோ கால்ல பார்த்தே ஒரு கல்யாணத்த பேசி முடிவு பண்ணிக்கிறாங்களாம். இல்ல லிவ்விங் டு…”

அம்மா சொன்னதைக் கேட்டுக் கடுப்பான பிரவேஷ் பேசிக்கொண்டே போக,

“பிரவேஷ்ஷ் வாய மூடு… தேவையில்லாம என்ன பேச்சிது அம்மாட்ட!” தினேஷ் இடையிட்டான்.

ஷாமினி தனக்காகப் பேசிக்கொண்டிருக்கும் தம்பியை வாஞ்சையாகப் பார்த்தாள். அவனுக்கு ஒரு சபாஷ் போட்டு அணைத்துக்கொள்ள தோன்றியது.

இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகம். அக்கா தம்பியென்று பொதுவாகக் காணக்கூடிய அன்பும் பாசமும் மட்டுமல்ல, அந்தச் சகோதரப் பாசத்தையும் தாண்டிய நல்ல நட்பும் இருவருக்குள் உண்டு.

“இல்லண்ணா அம்மா பொது அறிவுல அப்டேட் ஆகிக்காம நம்மள தான் நூறு கேள்வி கேக்குறாங்க. இதுக்கும் இவங்க படிச்சி வேலையும் பார்க்குறாங்க…”

“நீ வாங்கிக் கட்டாம வாய மூட மாட்ட.” தினேஷ் அவனைக் கிள்ளி வைக்க… “ஸ்ஸ் ஆஹ்!” பிரவேஷ் அலறினான்.

“டேய்! இப்ப நீங்க ரெண்டு பேருமே வாய மூடிட்டு அந்தப் பக்கம் போறீங்களா இல்லையா?

பெத்தவங்க கேள்வி கேட்டா பிள்ளைங்க பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கீங்க. இதுல அந்தக் காலமாயிருந்தா என்ன இந்தக்காலமா இருந்தாத்தான் என்ன?

நா அப்டேட் ஆகலையாம்… வாயிலயே போட்டேன்னா தெரியும். நாளைக்கி ஒரு பிரச்சனைன்னு வந்தா யாரு சாவுறது? நாந்தானே?”

மனோகரி கத்திக்கொண்டிருக்க… தினேஷ் வாயே திறக்கவில்லை. ரித்திக் ஷாமினியைக் கட்டிக்கொள்ள, ஷாமினியோ அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

“நல்லாவே அப்டேட் ஆகியிருக்கீங்கன்னு உங்க கோவத்துலயே தெரியுது!”

பிரவேஷ் அப்பொழுதும் முணு முணுப்பாகப் பேச… தினேஷ் அவனை முறைத்தான்.

“ஷாமினி… ஒரு நாள் லீவு தானாடி?” மனோகரி விட்டப் பேச்சைத் தொடர்ந்தார்.

“ம்ம்… வேலை ரொம்ப டைட்டா போகுதுமா. அடுத்த வாரக் கடைசில புது அசைன்மெண்ட் ஒன்னு சைனாக போகுதாம். எல்லோருமே டைம் பார்க்காம வேலை செய்யணும்னு சொல்லியிருக்காங்க.”

“நீ இனி வேலைக்கே போக வேணாம். பேப்பர் போட்டிடு! கல்யாணம் ஆகுற வரைக்கும் வீட்ல இரு.”

கையை அசைத்து மனோகரி உறுதியாகச் சொன்னார். அவர் முகத்திலேயே அவர் பிடிவாதம் தெரிந்தது. வார்த்தைகளில் அத்தனை உறுதி!

“வேலைய விடணுமா… என்னம்மா இது திடீர்னு சொல்றீங்க… இப்ப எனக்குக் கல்யாணம் செய்ய விருப்பமில்லைன்னா கேக்க மாட்றீங்க!”

ஷாமினிக்கு அப்படியொரு அதிர்ச்சி! இயலாமையுடன் அம்மாவைப் பார்த்துக் கேட்கச் செய்தாள்.

“சும்மா சும்மா இதென்னடி பேச்சு இப்ப கல்யாணம் வேணாம் இப்ப கல்யாணம் வேணாம்னு? அப்புறம் எப்ப பண்ணிக்கப் போற? இல்ல வேற எவங்கூடவாவது ஓடிப் போற ஐடியா எதுவும் மனசுல வச்சிருக்கியாடீ?”

தான் பெற்ற மகள் ஏன் எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று பொறுமையாகப் பேசாமல் மனோகரி கொடுஞ்சொற்களால் தாக்கினார்.

“அம்மாஆ!” மூன்று மக்களும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். ஷாமினி நெஞ்சில் கை வைத்தவள் அதிர்ந்து போய் நிற்க… அவள் விழிகள் கலங்க ஆரம்பித்தன.

“இப்படியா சுருக்கு சுருக்குன்னு பேசி வப்பீங்க?” தினேஷ் அம்மாவிடம் கடிந்தான்.

“இப்படிக் கண்ட மாதிரி அக்காவ பேசுனீங்க நடக்குறதே வேற! நா மனுசனாவே இருக்க மாட்டேன்!”

பிரவேஷ் ஆவேசமாக எகிறிக்கொண்டு வர, மனோகரி அவனை உறுத்து விழித்தார்.

“வாய மூடு பிரவேஷ்! இன்னும் முளைச்சி மூணு இலை விடலை. வாயைப் பாரு! நா இப்படித்தான் பேசுவேன். என்னைய என்ன பண்ணிடுவ நீ? பொடிப்பய… வெளக்கமாத்து அடி மறந்து போச்சி உங்க எல்லாத்துக்கும்!”

அவிழ்ந்தும் அவிழாமல் விரிந்தபடி விழுந்த கூந்தலைக் கொண்டையாக்கி முடிச்சிட்டவரின் முகம் ஜிவு ஜிவு என்று சிவந்து போயிருந்தது.

அவர் கண்களில் கனல் பறக்க நின்ற தோற்றம் ஷாமினியை உள்ளுக்குள் ஒடுங்க வைத்தது. தன் தோள் மீது சாய்ந்திருந்த மருமகனை இறுக்கப் பற்றிக்கொண்டாள்.

மூவருமே அம்மாவிடம் விளக்குமாற்றால் அடி வாங்கியிருக்கிறார்கள். சின்ன வயதில் என்றாலும் ஷாமினிக்கு இப்பொழுதும் முதுகு எரிந்தது.

தினேஷ் அங்கே கையாலாகாதவனாய் நின்றிருந்தான்.

‘நல்லவேளை மேகலா வீட்ல இல்ல.’ என அவன் மனத்தில் அந்நேரம் நினைத்தான்.

கணவன் அம்மாவிடம் பம்மி நிற்கும் இக்காட்சியை எந்த மனைவி இரசிப்பாள்? அக்கணவனுக்கும் அவள் முன் தலையிறக்கம் கொண்ட உணர்வு தானே?

“உங்களுக்குப் போயி பிள்ளைங்களா பொறந்ததுக்கு நாங்க அநாதையாவது இருந்திருக்கலாம்.”

அப்பொழுதும் பிரவேஷ் விடவில்லை. அம்மாவை எதிர்த்துப் பயமில்லாமல் நின்றான்.

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. வீட்ட விட்டுத் தாராளமா போ. போயி எந்த அநாதை விடுதில உனக்கு வரவேற்பு கொடுக்குறாங்கன்னு பார்த்துச் சேர்ந்துக்கோ.

நானும் இப்படிக் கத்த வேண்டி வராது. நீயும் எஞ்சத்தத கேக்க வேணாம்! என்னையே மிரட்ட வந்திட்டான்.”

பிரவேஷைப் பிடித்து ஒதுக்கிவிட்ட மனோகரி இத்தனை நடந்ததற்கு அலட்டிக்கொள்ளவே இல்லை. அப்படியே மகளிடம் திரும்பி பேசலானார்.

“மாப்பிள்ளை வெளிநாட்டு வேலைல இருக்கிறவராம் ஷாமினி. எப்படியும் நீயும் அவர் கூட வெளிநாடு போகத்தான் போற. அப்ப வேலைய விட்டுத்தான ஆவணும்?

அப்புறமா விட போற வேலைய இப்பவே விட்ரு. எங்க கூட இருந்த மாதிரியும் இருக்கும். கொஞ்சம் ருசியா சமையல் செய்யவும் கத்துக்கலாம்.”

ஆமாம், ஷாமினிக்கு அவ்வளவு ருசியாகச் சமைக்க வராது. சமையலில் ஆர்வமிருந்தால் தானே இந்த ருசி மசியெல்லாம் வரும்?

சும்மா கடனே என்று வீட்டு வேலை பார்ப்பாள். அம்மா வேலைக்குப் போயிருக்கும் நேரம் வயிற்றை நிரப்பிக்கொள்ள எதையாவது ஏனோ தானோவென்று சமைப்பாள்.

இதெல்லாம் கூட முன்பு அவள் அண்ணன் திருமணமாகும் வரையிலும் மட்டுமே. அதற்கு பின்னர் அண்ணி மேகலா வரவும், ஷாமினி சமைக்கச் செய்யவில்லை. சும்மா ஓர் எடுபிடியாக வேண்டும் எனும் போது நிற்பாள்.

அதுவும் பெங்களூருவுக்குப் போனதிலிருந்து சுத்தம். அவள் இங்கு ஊருக்கு வருவதே இரண்டு மூன்று நாள் தான். அவையும் விடுமுறை நாட்களாகவே இருக்கும்.

இங்கு வரும் போது சப்புக்கொட்டிச் சாப்பிட்டு, ரித்திக்குடன் விளையாடி, வயல் வரப்பைச் சுற்றிக்கொண்டு, அங்குள்ளவர்களுடன் வாயாடிவிட்டு, பிரவேஷுடன் லூட்டி என்று இருந்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்.

“மொதல்ல அவங்க நாளைக்கி வந்து பார்த்திட்டுப் போகட்டும். கல்யாணம் முடிவானதும் இந்த வேலை விசயத்தைப் பற்றிப் பேசலாம் மா. பாருங்க அவ இப்பவே டென்சனாறா.”

தினேஷ் தங்கையின் மனநிலையைக் கணித்தவனாகச் சொல்ல…

“மாப்பிள்ளை யாரு எவருன்னு அக்காக்குத் தெரியுமா? அவருக்குப் பிடிச்சா மட்டும் பத்தாது. அக்காவும் அவரைப் பார்த்துப் பேசி ஓகே சொன்னா தான கல்யாணம் நடக்கும்.”

பிரவேஷ் வேகமாகப் பேசச் செய்ய…

“சும்மா இருங்கடா. நீங்க வேற கூட கூடப் பேசிட்டு. மாப்பிள்ளைக்கு இவளைப் பிடிச்சா போதாதா? இந்தச் சம்மந்தம் எப்படின்னு நமக்குத் தெரியும்.

மாப்பிள்ளை வேலை, குணம் கூட நல்லாத்தானா இருக்குங்கிறாங்க. அப்புறம் உங்க அக்காவுக்கு இதுல பிடிக்காம போக என்ன இருக்கு?”

“ஏன்டி உனக்கு வேலை கிடைச்சதும் நா என்ன சொன்னேன்… ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ கண்டிப்பா நீ வீட்டுக்கு வரணும்னு சொல்லித்தானே உன்னை வேலையில சேர விட்டேன்?

இப்ப பார்த்தா நா சொன்னதையே மதிக்கிறதில்ல. உம் பாட்டுக்கு அங்க போயி உட்கார்ந்திட்டு, ஒவ்வொரு வாரமும் எதாவது ஒரு காரணத்த சொல்லிட்டு ஊருக்கு வராம நின்னுக்கிற. அப்படி என்ன கம்பெனியோ என்ன வேலையோ!”

மகளிடம் திரும்பி பாதியில் விட்டதை மீண்டும் மனோகரி ஆரம்பிக்க… அவளுக்குக் கடுப்பானது!

வேலையை விடச் சொன்னதுமே புறு புறுவென ஷாமினியின் கோபம் அவள் தலைக்கேறியிருந்தது.

‘இதென்ன இப்படிப் பேசுறாங்க… மாப்பிள்ளைக்கு மட்டும் என்னைப் பிடித்தால் போதுமா? வர்றவனை எனக்கு மனசுக்குப் பிடிச்சு நான் அவனை ஓகே பண்ண வேண்டாமா? பிரவேஷுக்குப் புரியுது. இவங்களுக்குப் புரியலையா?’ என்று நினைத்தவள்,

“இவ்வளவு நாளு கழிச்சி வந்திருக்காளே உங்க மக, எப்படிடி இருக்க… என்ன ஏது… உடம்பு கொஞ்சம் மெலிஞ்ச மாதிரி இருக்கு. நல்லாச் சாப்பிடுறியா இல்லையான்னு ஆசா பாசமா ரெண்டு வார்த்தை நல்லதனமா கேட்டா குறைஞ்சா போயிருவீங்க?

வந்ததும் வராததுமா இதென்ன ஆர்ப்பாட்டம்? கண்டிப்பா இருங்க. இருக்க வேண்டியது தான். தப்பில்ல. அதுக்காக இப்படியா? எத்தனை பேச்சுப் பேசுறீங்க!

சை! இதுக்குத்தான் நா இத்தனை நாளும் இங்க வரல. போதுமா? தள்ளுங்க… நான் பாத்ரூம் போகணும்!”

ஷாமினி தன் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் வார்த்தைகளாகக் கொட்டிவிட்டு உள்ளறைக்குள்ளே போய்விட்டாள்.

மேகலா,

“என்னடா இவ இப்படிக் கத்திட்டுப் போறா? பெத்தவ தான பிள்ளைங்கள கேள்வி கேட்டு, பத்திரம் சொல்லி வளர்க்கணும்?

ஊரு விட்டு ஊரு மட்டுமில்ல ஸ்டேட்டு விட்டு போயி நமக்கு பாஷ தெரியாத ஊர்ல இருக்கா. நாளைக்கி பின்ன இவளே நினைச்சிப் பார்க்காத அளவுக்கு ஒரு சம்பவம் நடந்து அதுல இவ தரிக் கெட்டுப் போயிட்டா நாம என்ன செய்ய முடியும்?“ என்று வார்த்தைக்கங்குகளை அள்ளிக்கொட்டினார்.

அவர் மேலும் என்ன பேசியிருப்பாரோ தினேஷும் பிரவேஷும் அவரைப் பேச விடவில்லை.

“என்னம்மா பேச்சு இது? இப்படித்தான் பெத்த மக கிட்ட பேசுவாங்களா?” தினேஷ் சற்றுக் குரல் உயர்த்தியே கண்டிக்கச் செய்தான்.

“நீங்க அக்காட்ட எப்பவுமே இப்படிக் கடு கடுன்னு தான் பேசுறீங்க. என்ன பிரச்சனை உங்களுக்கு? அக்கா எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா? நீங்க தான எங்க மூணு பேரையும் பெத்தீங்கம்மா?”

பிரவேஷ் வந்த கோபத்தில் அம்மாவைப் பிடித்து வாங்கிக்கொண்டிருந்தான். அவனுக்குப் பொறுக்கவே இல்லை. வேறு யாராவது இப்படிப் பேசியிருந்தாள் ஏறி மிதித்திருப்பான்.

ஆனால், அம்மாவிடம் வாயால் பேசத்தானே முடியும்? தான் மேலும் பேசி வைத்தால், அவர் இன்னுமே ஆவேசம் காட்டக்கூடும். அக்காவின் மனது படும் பாடும் புரிந்தது.

‘வர்றவன். நல்லவனா இருக்கணும். அவனைக் கட்டிக்கிட்டாலாவது அக்கா நிம்மதியா இருப்பாள்னா நடக்கட்டும்.’

பிரவேஷுக்கு இப்படிக் கூட ஓர் எண்ணம் வந்து போனது.

படுக்கையறைக்குள்ளே நுழைந்திருந்த ஷாமினிக்கு எல்லாமே நன்றாகக் காதில் விழுந்திருக்க…

அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் வெந்நீரை தூக்கிக் கடாசியதைப் போல் சுட்டது!

தான் அம்மா பேசியதைச் சரியாகத்தான் காதில் வாங்கினேனா என்று வினாடிக்குள் குழம்பிப் போனவள், சகோதரர்கள் போட்ட சத்தம் தான் கேட்டது உண்மை தான் என்று உணர்த்தியது.

அவள் உடலே அதிர்ந்தது!

மழுக்கெனக் கண்களில் கண்ணீர் சரங்கோர்க்க நடுக்கத்துடன் ரித்திக்கைக் கட்டிக்கொண்டே கட்டிலோரம் அமர்ந்தாள்.

‘என்ன தரிக் கெட்டுப் போயிடுவேன்?’

எப்படி இந்த வார்த்தைகளை அம்மாவால் சொல்ல முடிந்தது? அந்த நேரத்தில் அம்மா மீது அத்தனை வெறுப்பு வந்தது!

சிறு வயதில் இழந்துவிட்ட அப்பாவின் அருகாமைக்காக மனது ஏங்க ஆரம்பித்தது!

‘தங்கம் தங்கம்’ என அவர் பாசமாகத் தன்னைத் தூக்கித் தட்டாமாலை சுற்றிச் சமாதானமாகப் பேசும் அக்குரலையும் அவரது அணைப்பையும் இழந்தது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்?

கண்ணீர் உடைப்பெடுக்க, சத்தமில்லாமல் அழுதாள். அம்மாவைப் பற்றித் தெரிந்தது தானே என்று நினைத்துக் கூட ஷாமினியால் அதை உதறிவிட முடியவில்லை. மனதில் ஆழமான காயம் ஏற்பட்டு வலியைத் தந்தது.

“என்னடா ரெண்டு பேரும் அவளுக்கு வக்காளத்து? உங்க ரெண்டு பேரால தான் அவ இப்படி இருக்கா. அம்மான்னு மரியாதை தெரியுதா?” மனோகரி வாயடைக்காமல் தான் பேசிக்கொண்டிருந்தார்.

“வீட்ல ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல விசயம் பேசுறோம். எதுக்கும்மா தேவையில்லாம இப்படி வார்த்தைய விட்டுக்கிட்டு இருக்கீங்க? போங்க… போயி உங்க வேலைய பார்க்கக் கிளம்புங்க.”

தினேஷ் அம்மாவிடம் சாந்தமாகப் பேசினான். அவனால் அப்படித்தான் அம்மாவிடம் பேச முடியும். அப்படியே பழகிவிட்டது.

பிரவேஷும் கூட முன்பெல்லாம் அம்மாவை அதிகம் எதிர்த்துப் பேசியதில்லை. அவன் கல்லூரியில் சேர்ந்த பின்னர் தான் இப்படிப் பேசுகிறான். முக்கியமாக ஷாமினிக்கான விசயங்களில்.

“அவ கேட்டதில என்ன தப்பு? நாள் கழிச்சி வந்திருக்கா. வந்ததும் வராததுமா குற்றப் பத்திரிக்கை வாசிச்சா யாருக்குத்தான் கோவம் வராதும்மா? போங்க உங்கள உங்க குக்கர் கூப்பிடுது!”

கோபத்துடன் சொன்ன பிரவேஷின் முதுகில் ஒன்று வைத்தார் மனோகரி.

“வாய குறைடா பிரவேஷ். இல்லைன்னா உன்ன காலேஜ விட்டு நிப்பாட்டிருவேன்.”

தன் முதுகைப் பிடித்துச் சமையலறை வரைக்கும் தள்ளிக்கொண்டே வந்த இளையவனை மனோகரி மிரட்ட, அவன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஒரு பள்ளி ஆசிரியர் மகனின் படிப்புக்குத் தடையாக இருப்பாரா என்ன என்கிற திண்ணக்கம் பிரவேஷிற்கு!

ஆம், மனோகரி ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இன்று அவருக்கு அரை நாள் வேலை இருக்க… அடுப்படியில் பாதியில் விட்ட வேலையைத் தொடர வேண்டிய கட்டாயம்.

இவர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தாலாவது ஷாமினியிடம் வேலை வாங்கியிருக்கலாம். இப்பொழுது முனங்கிக்கொண்டே சமையலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

இவருக்கு வாய் தான் பெரிசு. மற்றபடி பிள்ளைகளின் வயிற்றுக்கு வஞ்சம் வைத்ததில்லை. நடந்த இத்தனை களேபரத்திலும் பேரனுக்குக் காரம் குறைவாகப் போட்டு ஒரு சட்னி வைக்க மனோகரி மறக்கவில்லை.

மனோகரி அரக்க பரக்க வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, அண்ணனும் தம்பியும் ஷாமினியைப் பார்க்கச் சென்றனர்.

அவளோ கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தாள். இவர்களின் எந்தப் பேச்சிற்கும் அவள் எந்தவொரு மறுமொழியும் கூறவில்லை.

ரித்திக் மட்டும் அத்தையுடன் இருக்க, ஷாமினி எதுவும் பேசுவாளா என்று சில நிமிடங்கள் அங்கே நின்று பார்த்த தினேஷ் பிரவேஷ் அந்த அறையைவிட்டு வெளியே வந்தனர்.

“எதுவாக இருந்தாலும் அக்காவைக் கேட்டுச் செய்ங்கண்ணா. அவ மனசைப் பொருத்து முடிவெடுங்க. இல்லை மொத்தமா நம்மட்ட இருந்து அவ ஒதுங்கிற போறா.”

பிரவேஷ் நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை எண்ணி சற்றுக் கவலையானான்.

“பெரிய மனுசா! எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க நிம்மதியா இருங்க. ஷாமினி முழு மனசா சம்மதிச்சா மட்டுமே இந்த நிச்சயத்த பண்ணுவோம். முதல்ல மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்து பார்க்கட்டும்.

ஷாமினி அவங்களைப் பார்த்து, மாப்பிள்ளைட்ட பேசினா இப்ப இருக்கிற கோபம் இல்லாமல் போகலாம். இல்லைனா…”

“இல்லைனா என்ன பண்ணிடுவீங்க? அவட்ட பேசி மனசை மாத்த முயற்சி செய்வீங்க. அதானே?”

வெடுக்கெனக் கேட்ட தம்பியின் தோள் மீது கை போட்டுக்கொண்டான் தினேஷ்.

“டேய் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் நடக்க வாய்ப்பில்லை. மாப்பிள்ளை சராசரி ஆளு கிடையாது. அவங்க குடும்பமே நல்ல மாதிரி. அந்தப் பெரியவரை நீ பார்த்தேன்னா இத்தனை கேள்வி கேட்க மாட்ட.”

“அவரை எனக்குத் தெரியும்.”

“அப்புறமென்னடா அலும்பு பண்ற?”

“என்னமோ நீங்க சொல்றீங்க… நம்பித்தானே ஆகணும்?”

“டேய்! நீயே அவளைக் குழப்பிடுவ போல. வாயை வச்சிட்டுச் சும்மாயிருக்க மாட்டியா? ஏற்கெனவே எனக்கு இங்க பதட்டதுல நெஞ்சு அடிச்சிக்குது.

நீ இன்னும் டென்சன ஏத்திவிடாத… பேசாம போ! உன் அக்காவே யோசிச்சி நல்ல முடிவா எடுப்பாள்.”

“நான் உன்னை டென்சன் பண்ண நினைக்கலண்ணா. உன் தங்கச்சிக்கி நீ நல்லது தான் பண்ணுவ. எனக்கும் அது புரியுது.

இருந்தாலும் சொல்லத் தோணுது. அக்கா விரும்பி சரின்னு சொன்னா மட்டும் தான் இப்ப கல்யாணம் செய்யணும். இல்லைன்னா அவள விட்டிரணும்.”

“இப்ப விட்டிட்டா பின்னாடி இந்த மாதிரி நல்லக் குடும்பம் அமையுமாடா? இவங்க நம்ம அப்பாவுக்கும் ரொம்ப வேண்டப்பட்டவங்க.”

“எல்லாம் சரிண்ணா. எனக்கும் புரியுது. ஆனா இது ஷாமினிக்கு வருங்கால வாழ்க்கை. அவளுக்குப் பிடிக்கலைன்னா நாம வற்புறுத்தக்கூடாதில்ல?”

தினேஷிற்குத் தன் தம்பியின் அன்பும் பொறுப்பும் ஆச்சரியம் தரவில்லை. அவன் இதனைச் சொல்லவில்லை என்றால் தான் யோசனை வந்திருக்கும்.

அதே நேரம் தன் இளவலுக்கு இருக்கும் தைரியமும் துணிவும் தனக்கு வராது என்பதில் ஒரு பெருமூச்சு எழுந்தது.

அண்ணன் தம்பி இருவரும் பேசியதை ஷாமினியும் உள் அறையிலிருந்து கேட்டிருந்தாள். அவர்களின் அன்பிலும் அக்கறையிலும் உள்ளம் ஒரு பக்கம் குழைந்து உருகிப் போனது!

அதே நேரத்தில் அம்மாவின் பேச்சு மனதை வலிக்கச் செய்தது. எப்போதும் எதையாவது பேசி மனதை நோகடிப்பார் தான். ஆனால், இன்று அவரின் சாடல் அதீதம்!

தானும் இவரை நோகடிக்க அவர் பயப்படுகிற மாதிரி பெரிதாக ஏதாவது செய்து வைத்தால் என்னவென்று கூட அந்நேரம் தோன்றியது.

அண்ணன் தம்பி மட்டுமில்லை அவள் அண்ணி கூட அவள் நலனில் அக்கறையாக இருக்கையில் தான் முட்டாள்தனம் செய்வதா?

குமுறலை அடக்கிக் கண்ணீரையும் துடைத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் இத்திருமண விசயத்தைப் பற்றிய முதல் கட்ட அதிர்ச்சியிலிருந்தும் வெளி வந்தாள்.

தான் இனி என்ன செய்ய வேண்டும்… எந்தப் பக்கம் போக வேண்டும்… இது என்ன உணர்வு என்பது குழப்பமாய்!

அண்ணன் தம்பி இருவரும் இன்னும் கூட ஷாமினியைப் பற்றிய பேச்சில் தானிருந்தனர்.

“சரிடா சரி. குட்டிம்மா யோசிக்கட்டும். நா வேற அவ வந்தும் வராம விசயத்தைச் சொல்லி அவளை டென்சன் பண்ணி வச்சிட்டேன். அவ வந்த உடனே சொல்லியிருக்கக்கூடாதோ!”

“விடுண்ணா நீ ஒன்னும் தப்புப் பண்ணல. நம்ம அம்மாவால தான் இவ்வளவு டென்ஷன் வீட்ல.”

“அம்மாவ பற்றித் தெரிஞ்சது தான. அவங்க குட்டிம்மாட்ட இந்த மாப்பிள்ளை விசயத்தைப் பேச ஆரம்பிச்சா ஏதாவது ஏட்டிக்குப் போட்டியா நடந்திட்டுன்னா? அதான் நானே முந்திட்டேன்.

ஆனாலும் என்ன பிரயோசனம்? அம்மா பேசி வச்சது இப்ப எல்லாத்தையும் கெடுத்தது போல ஆயிடிச்சி. இனி அவ என்ன முடிவெடுப்பான்னு தெரியல.”

தினேஷ் கவலையாக அமர்ந்திருக்க…

“அவளுக்குப் பிடிக்கலைன்னா எதுவும் நடக்க வாய்ப்பில்லை தான? நீங்க இதுல தெளிவா இருக்கீங்க இல்லண்ணா?”

திரும்பவும் இவருக்கு என்ன பிரச்சனை? அதையே பேசிட்டிருக்கார்! பிரவேஷ் கூர்மையாக அண்ணனைப் பார்த்துக் கேட்கச் செய்தான்.

தினேஷ் தோராயமாகத் தலையாட்டி வைத்தான். அவனால் அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாது.

பிரவேஷுக்கும் அவன் நிலைமை தெரியும். ஒற்றைப் பெற்றவராக அம்மாவின் நிலைமையும் புரிந்தாலும் அவரின் சில குணங்களை வெறுத்தான்.

இருவருக்கும் வேலைகள் இருக்க அப்படியே அமர்ந்திருக்க முடியாதில்லையா?

“விடியக்காலைல இருந்து இதுலயே நேரம் போயிட்டு! எனக்கு நிறைய வேலையிருக்குடா பிரவேஷ்.”

“என்னன்னன்னு சொல்லு. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒன்னா பார்க்கலாம். நா இப்ப எந்தப்பக்கம் போகணும்?”

“நீ ஒரு நடை நம்ம வயக்காட்டுப் பக்கம் எட்டிப் பார்த்திட்டு வாடா. அப்புறம் மத்தியானத்துக்கு மேல அம்மாவ போயி பாரு. கடைவீதிக்குப் போகணும்னாங்க.”

“அம்மா கூட நீங்க போங்க. என்னைக் கோர்த்துவிடாதீங்கண்ணா. வேற எதும்னாலும் சொல்லுங்க செய்யறேன்.”

“ஏன்டா நீ? சரி அப்ப வீட்ட சுத்தம் பண்ணி வையி. யாரையாவது ஒத்தாசைக்கி கூப்பிட்டுக்கடா.”

“ஓகே ஓகே என் பிரண்ட்ஸ கூப்டுக்கறேன். இப்ப ரித்திக்கையும் வயலுக்குக் கூட்டிட்டுப் போகவா?”

“அவன் வந்தா பாரு. ரொம்ப நாள் கழிச்சு ஷாமினி வந்திருக்காள்ல. அவளை ஒட்டிக்கிட்டே தான் இன்னைக்கு முழுசும் திரிவார் குட்டியப்பர்.”

பிரவேஷ் மட்டும் தான் வயக்காட்டுப் பக்கம் செல்லும்படி ஆனது.

தினேஷ், ஷாமினி மற்றும் பிரவேஷ் மூவரும் தந்தையின்றி வளர்ந்தவர்கள். முக்கியமாக பிரவேஷ் தன் அப்பாவைப் பார்த்தது கூட இல்லை. பிரவேஷ் பிறக்கும் முன் அவரின் இறப்பு நிகழ்ந்திருந்தது.

மனோகரியின் கணவர் இறக்கும் நேரம் அவர் நான்கைந்து மாதம் கர்ப்பம். இளவயதிலேயே கணவரை இழந்தது, தன்னந்தனி ஆளாய் மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியது என்று சுழன்றது அவரை இறுக்கியிருந்தது.

அவர்களுக்குச் சிறிது சொத்து இருந்தாலும் மாத வருமானம் ஒன்று இருந்தாலொழிய அன்றாட வாழ்க்கை சிக்கலாகிவிடும் எனும் நிலை. தன் வேலையை விட்டு விட்டு அவரால் முழு நேரமும் வீட்டிலிருக்க முடியவில்லை.

கணவர் இருந்த போதும் மனோகரி சிடு சிடுவென்று விழுவார் தான். சூழ்நிலையைப் பார்த்துப் பேச மாட்டார். கணவருக்குப் பின்னர் தனி ஆளாகச் சுழன்றது வேறு அவரின் சிடு சிடுப்பையும் கோப உருவத்தையும் அதிகரித்துவிட்டது.

அவருக்குக் கடமை என்று தோன்றுவதை விட்டுத் தராமல் இயந்திர கதியில் ஓடி ஓடிப் பார்ப்பார் தான். ஆனால், ஒரு நாள் கூட பெற்றப்பிள்ளைகளிடம் அன்பாகப் பேசியதில்லை.

அன்பு காட்டவோ அரவணைக்கவோ அவருக்கு வருவதில்லை. அவர்களின் மனமறிய முயன்றதில்லை. அவர்கள் அதை வெளிப்படுத்த செய்தாலும் காது கொடுத்துக் கேட்டால் தானே ஆகும்?

அவருடைய சொல்லே வீட்டில் அதிகம் ஒலிப்பது. தன் முடிவு தான் உறுதி என்பது போலத்தான் நடந்துகொள்வார்.

மனோகரியின் பாசம் ஒரு கடமையாகத்தான் தெரியும். மூவரும் அன்னையின் அரவணைப்பை விட, அவரின் கண்டிப்பிலும் ஏச்சுப் பேச்சிலும் அதிகம் இருந்ததினால் அவர்களுக்குள் நல்லிணக்கம் அதிகமாக நிலவி வருகிறது.

அண்ணனும் தம்பியும் உடன் பிறந்தவளின் மனமறிந்து மண வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றிருக்க, மனோகரி மகளை இந்த வரனுக்குத் தாட்டி விடுவதில் உறுதியாக நின்றார்.

ஷாமினி அன்று யாரிடமும் பேசவில்லை. பெயருக்கு வந்து ஏதோ கொரித்தாள். அதுவும் பிரவேஷ் தினேஷ் என்று மாறி மாறி வந்து அவளை வற்புறுத்த செய்ய, அவளும் சுவையறியாமல் விழுங்கி வைத்தாள்.

ரித்திக்கும் ஷாமினி அருகேயே இருந்தான். அவள் பாத்ரூம் சென்றால் அவனும் கூடவே சென்றான். சென்று மூடிய கதவின் இப்பக்கம் நின்றுகொண்டான்.

தன் மொபைல் ஹாட் ஸ்பாட் ஆன் செய்து வைத்துக்கொண்டு பகல் முழுக்க அலுவலக வேலையைப் பார்த்தாள் ஷாமினி. பின்னர் சிறிது நேரம் ரித்திக்குடன் போனது.

மேகலா ஊடே கூப்பிட செய்ய…

“ஆஃபீஸ் வேலை அண்ணி. அப்புறம் பேசுறேன். உங்க உடம்பு எப்படியிருக்கு? எல்லாம் ஓகே தான? ரித்து இந்தா அம்மா பேசுறாங்க…”

அண்ணியுடன் பேசும் மனநிலை இல்லை. அவள் பேச்சை வளர விடாமல் கத்தரித்துவிட்டாள்.

நாத்தனார் தன்னைப் பேசவிடாமல் தவிர்த்தது மேகலாவுக்கு எரிச்சலைக் கொடுத்தது. தினேஷைக் கூப்பிட்டுக் காய்ச்சி எடுத்தாள்.

“பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னதிலிருந்து முகத்த உம்முன்னு வச்சிட்டிருக்காடி. உன்ட்ட மட்டுமில்ல எங்க யார்ட்டயும் பேசலை. சரியா சாப்பிடக்கூட இல்ல.”

தினேஷ் அம்மாவின் வார்த்தைகளை வடிகட்டி மனைவியிடம் பேசினான்.

“அவ சரியா சாப்பிடலைன்னா ஒரு தட்ல சோத்த போட்டுப் பிசைஞ்சிட்டுப் போயி ஊட்டுங்க. இல்லைன்னா எல்லாத்தையும் நீங்களே கொட்டிக்கிறது தான! ஒரு சின்ன விசயம்… இதைக் கூட சரியா நடத்தத் துப்பில்ல!”

மேகலா கணவனைக் கடுப்படித்து நக்கல் பண்ணினாள்.

“ஏய் என்னடி வாய் ரொம்ப நீளுது? துப்பில்லன்னு எல்லாம் என்ன பேச்சிது… போன்ல பேசுறன்னு தைரியமா?”

தினேஷ் கோபமாகப் பேச…

“நான் எதாவது சொன்னா மட்டும் பாய்ஞ்சிட்டு வந்திருவீங்களே… உங்கம்மா பேசுனா வாயே திறந்துறாதீங்க! என்ன நடந்திச்சி இன்னைக்கி காலைல? ஷாமினி எதுக்கு உம்முன்னு இருக்கா? அழுதிட்டு இருந்தாள்னு ரித்திக் சொன்னான்.”

மேகலா கணவனைப் பிடி பிடியென பிடித்து விசயத்தைக் கரந்தாள்.

கடைசியில்,

“எப்படி இருக்கடி? என் மக என்ன சொல்றா? நாளைக்கி உன் தம்பிய கொண்டு வந்து விடச் சொல்லு. கார்ல வாங்க. அவனைப் பார்த்து மெதுவா ஓட்டிட்டு வரச் சொல்லு. நீயில்லாம எனக்கு இங்க மலைப்பா இருக்கு!”

தினேஷ் மனைவியிடம் தணிந்தே தான் பேசும்படியானது. பின்னர் இருவரும் சில நிமிடங்கள் குழைந்து உருகியென இணக்கமாகப் பேசிவிட்டே கைபேசியை அணைத்தனர்.

அமைதியான இரவில் அனைவரும் உறக்கத்தின் பிடியில் சிக்கியிருக்க ஷாமினி மட்டும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். சரி டிவியாவது பார்க்கலாம் என்று நினைத்து கூடத்திற்கு வந்தாள்.

“நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேய்
நானாக நானில்லை தாயே… “

ஷாமினி தொலைக்காட்சியை உயிர்ப்பிக்கவும் நேரங்காலம் தெரியாமல் இப்பாடல் வேறு ஒலிக்கச் செய்ய… அவளுக்கு அப்படியே அதை நொறுக்கித் தள்ளும் வேகம் வந்தது.

பெரும்பாடு பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டு வந்த வழியே திரும்பி படுக்கையில் விழுந்தாள்.

பெண்ணாகப் பிறந்துவிட்டாள் சுதந்திரமாக வாழ முடியாது! சொந்தமாக முடிவெடுக்கவும் விட மாட்டார்கள்!

என்ன உலகமோ… எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் பலர் இன்னும் முன்னேறவே இல்லை. விஸ்தீரமான மனப்போக்கு வரவே வராது போல்.

எத்தனை பெண்கள் படித்து வேலை பார்த்தாலும் கூட தங்கள் மனம் விரும்புவதைச் செய்ய முடியாமல் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏதேதோ எண்ண அலைகள் அவளிடம் வட்டமிட்டன.

ஷாமினிக்கு முகம் தெரியாத அந்த மாப்பிள்ளை பையன் மீது கோபமும் பொறாமையும் எழுந்தது.

நெடு நேரம் அவள் உறங்கவில்லை. மனத்தில் அழுத்தம் கூட… இருளை வெறித்துக்கொண்டிருந்தாள்.

ஷாமினி பொறாமைப்படும் அளவுக்கு அந்த மாப்பிள்ளை ஒன்றும் அந்நேரம் ஜாலியாக இல்லை. இவளுக்காவது இப்பொழுது திருமணம் வேண்டாம். அவனுக்கோ திருமணமே வேண்டாம்!

திருமணத்தில் விருப்பமில்லை என்று உறுதியாக இருப்பவனையும் விதி இழுத்து வந்திருந்தது.

நாளையிலிருந்து இவ்விருவரின் வாழ்க்கை மாறப் போகிறது தான். மக்கள் விரும்புவது ஒன்று. நடப்பது வேறொன்று.

நம் கையில் லிமிடெட் அக்சஸ் மற்றும் கபாசிட்டி தான் உள்ளது. மக்களுக்கு மேலே ஒரு சக்தி இருந்துகொண்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது உண்மை தானே?