கலைந்த ஓவியம்2 அத்தியாயம் ஒன்று

சில இடங்களை  பொறுத்தவரைக்கும் கைம்பெண்கள் பல சம்பிரதாயங்கள் செய்யவே மாட்டேன் என கூறிவிடுவார்கள் அவர்களை சமூகம் ஒதுக்கும் முன் அவர்களே ஒதுங்கி கொள்வார்கள். அதை தான் இப்போது சிவகாமியும் செய்து கொண்டிருந்தார். சிவகாமியின்  மூத்த மகன் நவினின்  நிச்சியம் இன்று, அவர் அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி அமர்ந்து கொண்டார், அவரின் மகன் நவினும்,  மருமகள் மகியும் பல முறை அழைத்தும் அவர் வரவில்லை.. அவர் தனியாக இருக்கிறார் என்று அவரின் மகள் நிவேதா அவருடன் அமர்ந்து கொண்டாள். இவர் இடத்தில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை மகியின் அத்தை வேணியும், தாய் மாமன் மூர்த்தியும் தான் செய்து கொண்டிருந்தனர்… அதைப் பார்த்து கொண்டிருந்த நிவேதாவிற்கு அத்தனை ஆதங்கமாக இருந்தது உடனே அதை தன் தாயிடம் கேட்கவும் செய்தாள்.

” பூ வைக்கறதுக்கு தான் முன்னாடி வந்து செய்ய மாட்டேன்னு  சொல்லிட்ட, இப்ப நிச்சிய பத்திரிக்கை வசிக்கும் போது கூட யாரோ மாதிரி தனியா உட்கார்ந்துட்டு இருக்க, ஏன் மா இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்க, இப்ப விதவை அது இதுன்னு யார் பாக்கறாங்க சொல்லு. இப்ப டெக்னாலஜி அண்ட் சொசைட்டி எல்லாம் நிறையா சேஞ்ச் ஆயிருச்சு. ஆனா நீ  இன்னும் நல்ல காரியத்துக்கு கூட முன்னாடி போக யோசிக்கற, இதுவே நீ செத்திருந்து அப்பா உயிரோட இருந்திருந்தா அப்பா தான் எல்லாமே முன்னாடி நின்னு பண்ணிருப்பாரு, நான் ஒரு தபுதாரன், கைம்மான்னு சொல்லிட்டு விலகி இருந்து இருக்க மாட்டாரு, ஆனா இந்த பொம்பளைங்க  தான் எல்லாத்துக்கும்  சகுனம் பார்த்து பார்த்து நாசமா போயிட்டு இருக்கோம்,…” என சலித்துக் கொண்ட தன் இளைய மகளை பார்த்து வழமை போலவே பற்களை கடித்தார் அவளின் அன்னை. 

இவர்களின் பேச்சுக்களுக்கிடையே நிச்சியதாம்பூல பத்திரிக்கையும் வாசிக்க ஆரம்பித்தார் ஐயர்..

நிகழும் ஶ்ரீ மங்களகரமான சுபகிருது வருடத்தில் ஆவணி மாதம் இருபத்தி மூன்றாம் தேதி புதன்கிழமை சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் நடைபெறும் நிச்சயமானது சேலம் மாவட்டம் குகையை சார்ந்த மகாலிங்கம்,பார்வதியின் பௌத்திரியும்  தணிகாசலம், அன்னபூரணியின் தௌத்திரியும், சந்திரன், நிலாவதியின் இளைய மகளான மகிமா என்கிற மகாலட்சிமிக்கும் அதற்கு மேல் ஐயர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் எங்கோ கேட்பது போல் தான் இருந்தது சிவகாமிக்கு…

அவரின் உடல் முழுவதும் வியர்வையால் நனையத் தொடங்கியது.அவரின் சுவாசக் காற்று சற்றே பின் வாங்க ஆரம்பித்தது, காற்றை சுவாசிக்க முடியாமல் வாய் வழியாக மூச்சை வாங்க நினைத்தவர் வாயை திறந்து அதன் வழியே காற்றை சுவாசிக்க முயல, அது முடியாது போகாவும், அருகில் அமர்ந்திருந்த தன் மகளின் தோளை பிடித்து இழுத்தார் சிவகாமி…

“என்னமா…” என்றப்படி திரும்பியவளின் கண்கள் இரண்டும் தன் தாய் இருந்த நிலையை கண்டதும் அப்படியே அதிர்ச்சியில் விரிந்தது…  அவரின் கண்கள் உள்ளுக்குள் சொருகி வெள்ளை முழி வெளியில்   தெரிய மூச்சிற்கு ஏங்கியப்படி அமர்ந்து இருந்தார்… நிச்சியம் நடக்கும் நேரம் என்பதாலும் இவர்கள் ஒதுங்கி அமர்ந்து இருந்தாலும் அனைவரின் பார்வையும் மணமக்களிடமும் ஐயர் வாசிப்பிலும் தான் இருந்தது.. இவர்களை எவரும் கண்டுகொள்ளவில்லை..

“ஐயோ அம்மா என்னாச்சு…” என கத்த , அவளின் கத்தலில் தான் அனைவரின் பார்வையும் இவர்களின் புறம் திரும்பியது. நிவேதாவின் கத்தலில் மணமகன் உட்பட மகியின் அண்ணண் சரவணனும் இவர்களை நோக்கி ஓடி வந்தான்… சிவகாமியின் நிலையை எண்ணி நிமிடமேனும் அனைவரும் கலங்கி நிற்க,  சரவணன் தான் முன் வந்து சிவகாமியை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.. சில நிமிடங்களில் சிவகாமி துளசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்… வெளியில் இருந்த அனைவருக்கும் பதட்டம் பதட்டம் மட்டுமே, அவரை பரிசோதித்த டாக்டர் வெளியில் வந்ததும் அவசரமாக அவரின் அருகில் சென்ற நவினும், நிவேதாவும் அவருக்கு என்னவென்று விசாரித்தனர்.

“மைனர் ஹார்ட் அட்டேக், சீவியர் இல்லை ஷீ இஷ் அல்ரைட்  பட் மறுபடியும் இப்படி வராம பாத்துக்கோங்க, ஹார்ட் அட்டேக் வர சான்ஸ் நிறையா இருக்கு…” என்றதும் நவினுக்கு தான் பகிர் என்றானது…

சிறு வயதிலேயே தந்தையை இழந்து வளர்ந்தவர்கள் இப்போது தாயிற்கும் ஐயோ அதை நினைக்க கூட முடியவில்லை நவினால், நவினுக்கு தான் பூமி பந்து தலைகீழாக சுற்றி கொண்டிருந்தது ஆனால் அவனின் தங்கைக்கு அப்படி இல்ல போல அவள் தைரியமாக தான் நின்றாள். மேலும் மருத்துவரிடம் ஏதோதோ விசாரித்து கொண்டிருந்தாள். இவன் பித்து பிடித்ததை போல் நின்று கொண்டிருக்க அவனின் அருகில் மகி வந்து நின்று கொண்டாள். மருத்துவரிடம் பேசிவிட்டு திரும்பியவள் நவினின் நிலையை கண்டதும் அவனை மேலிருந்து கீழாக பார்த்தப்படி “டேய் அதான் சொல்றாங்கல்ல பயப்பட ஒன்னும் இல்லைன்னு, அப்பறம் எதுக்கு இப்படி பித்து பிடிச்சவன் மாதிரி நின்னுட்டு இருக்க,..” என சற்றே அதட்டினாள்.

தங்கையின் பேச்சை வழமை போலவே கண்டு கொள்ளாமல் மருத்துவரிடம் மீண்டுமொரு முறை விசாரித்தான் நவின்.நவினுடன் மகியும் இணைந்து கொண்டாள். இவர்கள் மருத்துவரிடம் விசாரிப்பதில் பிசியாகி விட்டனர்.

இங்கு  மகியின் அத்தை வேணியோ “சரவணா…” என அவனை அழைத்தார். அவரை என்னவென்பது போல் பார்த்தான் சரவணன்.

“சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம் தம்பி, இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல, சகுனம் சரியில்லைன்னு சொல்லி நிச்சியத்தை நிறுத்திடுவோம், பையனும் அந்த அளவுக்கு அம்சமா இல்லை, கண்ணு சுத்தமா சரியில்ல, அப்பன் இல்லாத பையன் வேற கண்டிப்பா ஊதாரியா தான் வளர்ந்து இருப்பான். அவன் தான் அப்படி இருக்கான்னு பார்த்தா அவன் கூட பொறந்தவ ஆம்பளை கணக்கா சுத்திட்டு இருக்குது, இதுங்க பண்ற கௌரவத்துக்கு தான் சொந்தம் பந்தமுன்னு யாரும் வரல போல, பாரு தாம்பூலம் மாத்த கூட ஆள் இல்லாம நம்ம தான் முன்னாடி நின்னு எல்லாமே பண்றோம், எனக்கு என்னமோ சரியா தோணலை, புள்ளை வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்கு…” என வேணி பக்கம் பக்கமாய் பேச பேச சரவணனின் கோபம் எகிறி கொண்டே இருந்தது…

இவனும் தானே தாய், தந்தை இல்லாமல் வளர்ந்தவன். இவன் என்ன ஊதாரியாகவா சுற்றிக் கொண்டிருக்கிறான், சொல்லபோனால் நவினும் இவனை போல் தான் தந்தையில்லா வீட்டில் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று தங்கையை படிக்க வைத்திருக்கிறான். அவன் அறிந்த வரையில் நவினிடம் கெட்ட பழக்கம் என்பது துளியும் இல்லை, நன்றாக படித்து கை நிறைய சம்பாதிக்கிறான் என்றாலும் துளி கூட பகட்டாகவும் மிடுக்காவும் இருந்ததில்லை, நவினின் கண் தான் மாறு கண்ணாக இருக்கிறதே தவிர மற்றபடி அவனின் குணமும், நடந்து கொள்ளும் விதமும், அவனின்  பக்குவமும் சரவணமுத்துவிற்கு பிடித்து  இருந்தது. வேணி பேச பேச சரவணன் துளியும் அவருக்கு பதில் கூறவில்லை  ஆனால் அவனின் பார்வையில் ‘ இத்தோடு பேச்சை நிறுத்தி கொள்..’ என்ற செய்தி மட்டும் தெரிந்தது.

தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு சரவணன் தன் கோபத்தை அடக்கி நின்று கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக தெரியும் அது தூரத்தில் நின்று கொண்டிருந்த மூர்த்திக்கும் புரிந்தது. உடனே அவர்களை நோக்கி வந்தவர் “என்ன சரவணா அத்தை என்ன சொல்றா…” என மனைவியை பார்த்தப்படி சரவன்முத்துவிடம் விசாரித்தார்.

  “சொல்லுங்க அத்தை…” என்றான் அவரை தீர்க்கமாக பார்த்தபடி. அவர் பதிலே பேசவில்லை, இங்கு வரும் போதே மூர்த்தி மிரட்டி தான் அழைத்து வந்திருந்தார். இப்போது சரவணமுத்துவிடம் பேசியது தெரிந்தால் நிச்சியம் கோபம் வந்து அடித்தாலும் அடித்து விடுவார் என எண்ணியவர் கப்பென வாயை மூடிக் கொண்டார்..

“நீங்க பேசிட்டு இருங்க…” என கூறியவன் அங்கிருந்து விலகி நவின், மகியிடம் சென்று நின்று கொண்டான். சரவணனின் கோபம் கலந்த பார்வையை புரிந்து கொண்ட மூர்த்தியோ தான் மனைவியிடம் சற்றே நெருங்கி “என்ன சொல்லி வைச்ச…” என கடுமையான குரலில் கேட்டார்.

“அபசகுணமா நடந்து…” என வேணி ஆரம்பிக்கும் முன்பே மூர்த்தியின் முறைப்பில் அது அப்படியே நின்றது.

“ஏதாவது  சகுனம் பேசிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது பண்ணன்னு தெரிஞ்சிதுன்னு வையேன், உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன், நீ இங்கேயே இருன்னு உன்னை விட்டுட்டு  என் பசங்களுக்கு துணையா நானும் சிங்கப்பூர் போயிடுவேன்…” என மெல்லிய குரலில் மிரட்டினார். அதற்கு மேல் வேணி வாயே திறக்கவில்லை அவர் செய்தாலும் செய்வார் என நினைத்தபடி அமைதியாகி விட்டார்…

****மதியம் போல் கண் விழித்தார் சிவகாமி, அவர் கண் விழித்ததும் மற்றவர்கள் வெளியில் நின்று கொள்ள நிவேதாவும், நவினும் ஐ.சி. யூ க்குள் நுழைந்தனர்.ஐ.சி. யூ க்குள் சிவகாமி, நவின்,மகி என இவர்கள் மூவரும் மட்டுமே நின்று இருந்தனர்., அமைதியாக இருந்த அந்த அறையில் சிவகாமியின் மெல்லிய குரல் கேட்டது.

“பாப்பாக், கல், யான, பண்ணி, வை, பா… நா, இல்ல னா அவ துடிசு போ..யிடுவா..” என்றார் அவர் கூறுவது முதலில் புரியவில்லை என்றாலும் அதை  இரு முறைக்கு பல முறை கேட்ட பின்னே அது புரிந்தது…

அவர் கூறியதில்  அத்தனை கோபம் வந்தது அவளுக்கு ஐ. சி. யூ என்றும் நினைக்கவில்லை அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார் என்றும்  நினைக்கவே இல்லை

“அம்மா இப்படியெல்லாம் ப்ளேக் மைல் பண்ணா நான் சரின்னு சொல்லிடுவேன் நினைச்சியா நெவர்…” என்றவள் மீண்டும் ” அண்ட் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உனக்கு ஒன்னும் இல்லை, மைனர் பிராப்ளம் தான். சோ ரொம்ப சீன் போடாத, என்னோட கல்யாண செலவை மிச்சம் பண்ண பாக்கறயா, இதோ பாரு  நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் மட்டும் நினைக்காத நடக்கவே நடக்காது…” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு

“சொன்…னா கே..ளு..” என்றார் சிவகாமி மூச்சு வாங்க சிரமப்பட்டு.

“முடியாது மா, நீ சாக போறேங்கறதுக்காக எல்லாம் நீ சொல்ற பையனை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது… நீ என்னவோ ஹாயா செத்துடுவா, நான் தானே வாழ்க்கை முழுக்க அவன் கூட குப்பைக் கொட்டனும்,  விதின்னு வந்தா எல்லாரும் ஒரு நாள் சாக தான் போறாங்க, ஏன் உனக்கு முன்னாடி என் விதி முடியணு இருந்தா நானும் செத்து போயிடுவேன். சோ நீ என்ன சொன்னாலும் என்னால முடியாது…” என தீர்க்கமாகக் கூறினாள் நிவேதா.. அவர் மட்டும் நன்றாக இருந்திருந்தால் ‘இவளை எல்லாம் நான் தான் பெத்தெனா, நர்ஸ் குழந்தையை மாத்தி கித்தி கொடுத்துட்டாங்களோ…’ என  திட்டி இருப்பார். அவள் அப்படி கூறியதும் அவரின் பார்வை நவினை நோக்கியது…

அவனுக்கும் தெரியுமே நிவேதா கூறுவது போல் தன் தாய்க்கு ஒன்றுமில்லை என்று.. இருந்தும் அவரின் பயம் அவனுக்கு புரிந்தது  பெருமூச்சுடன் நிவியின் புறம் திரும்பியவன் “நிவி  படிக்க வைச்சு இத்தனை வருஷமா வளர்த்த அவங்களுக்கு தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு, கடைசி நிமிசம் கூட உன்னை ஒருத்தன் கையில பிடிச்சு தரன்னு நினைக்கிறாங்க… புரிதா புரியலயா…” ஒரு பெரிய அதட்டல் அவனிடம்… இதுநாள் வரையிலும் நவின் ஒரு வார்த்தை கூட அதட்டி பேசியதில்லை இப்போது அதட்டவும் அது நன்றாகவே வேலை செய்தது.

“உனக்கு நான் சொல்றது புரியல அண்ணா, எமோஷனல் பிளேக் மைல் பண்ணி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க.., இந்த நிமிசம் அவங்க ஆசைக்காக நான் கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான். கல்யாணம் பண்ணிட்டேன்னு போன போகுதுன்னு வாழனும் அது என்னால முடியாது,…” என்றாள் தீர்க்கமாக… அவள் பிடித்த பிடியில் நின்றாள் .

“சொன்னா கேளு…” சிவகாமி ஏதோ சொல்ல வரவும்”இங்க பாரு மா, நீ நல்லா இருக்க, உனக்கு ஒன்னும் இல்லை, சாதாரண மைனர் ஹார்ட் அட்டேக் தான், சோ சீக்கிரம் க்யூர் ஆயிடும். உனக்கு ஒன்னும் ஆகாது மா…” என அவள் கூற கூற ஜன்னலில் வழியே தன்னையே பார்த்தபடி நின்ற சரவணனை பார்த்தார் சிவகாமி.

அவரின் பார்வையை உணர்ந்தவன் மெல்ல உள்ளே நுழைந்தான். அவனை கை நீட்டி தன் அருகில் அழைத்தவர் அவர் கழுத்தில் இருந்த சங்கலியை கையில் எடுத்து அவன் கையில் கொடுத்தார். அவன் அவரை புரியாது பார்க்க நிவேதாவிற்கு நன்றாகவே புரிந்தது…

“என்ன நினைச்சுட்டு இப்படி பண்ணிட்டு இருக்க மா, நான் தான் சொல்றேனல உனக்கு ஒன்னுமில்லை நீ நல்லா இருக்கேன்னு. அப்படி என்ன பயம் உனக்கு, நீ செத்து போயிட்டா என்னை பாத்துக்க ஆளே இல்லாத மாதிரி  இவனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறயா, என்னால இந்த படிக்காத முட்டாளை கல்யாணம் பண்ணிக்க முடியாது, இவனும் இவன் மூஞ்சியும், மழை வந்தா தான் ஒரு வேளை சோறுன்னு இருக்கிறவனை நம்பி எப்படி நான் கழுத்தை நிட்டுவேன் நினைச்ச…” அத்தனை ஊதாசீன பேச்சு அவளிடம்…

முதன்முறையாக நவினுக்கே நிவேதாவின் பேச்சு கோபத்தை கொடுத்தது

என்றால் சம்பந்தப்பட்டவனுக்கு சொல்லவா வேண்டும். அவள் பேச பேச அவனின் முகம் இறுகி கொண்டே சென்றது. ஆனால் அதை துளியும் பேச்சிலோ, செய்கையிலோ வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிவகாமியை பார்த்தப்படி நின்றான் சரவணன். அவனின் பார்வைக்கு சிவகாமி பதில் பேசவில்லை ஆனால் சிவகாமியின் கண்ணீர் அவரின் கன்னங்களை நனைக்கும் முன்பே  சரவணனின் கையில் இருந்த  தங்க சங்கலி நிவேதாவின் கழுத்தில் தொங்கியது…