கலைந்த ஓவியமே – 2

பாடி ஷேமிங் விடயத்தில் வெளியில் இருப்பதை விட வீட்டிற்குள் இருக்கும் ‘கல்பிரேட்களே’ இங்கு அதிகம். உங்களின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது பிற உறவினர்கள் தான் அதிகம் பாடி ஷேமிங் செய்கிறார்கள் அவர்களை அறியாமலேயே…

*****தட் தட் கதவு தட்டும் சத்தத்தில் முகத்தை அழுந்த துடைத்தவன் டேபிலில் இருந்த கண் கண்ணாடியை (கூலிங் கிளாஸ் அல்ல…) எடுத்து மாட்டிக் கொண்டு கதவினைத் திறந்தான்… அவனின் அன்னை  சிவகாமி தான் நின்று கொண்டிருந்தார். குரலை செருமிக் கொண்டே “சொல்லுங்க ம்மா…” என்றான்

“என்னாச்சு தம்பி, முகம் சோர்ந்து போயி இருக்கு…”என அவனின் கேசத்தை கைகளால் வருடியபடி கேட்டார்.

“ஒன்னுமில்லை ம்மா,கொஞ்சம் தலைவலி தூங்கி எழுந்தா சரியாகிடும்…” எனக் கூறி மெல்ல சிரிக்க முயன்றான்.

“சரி டீ வைச்சு தரவா தம்பி…” என மென்மையாக கேட்டார்

“வேண்டாம் மா, கொஞ்சம் நேரம் மாடியில இருக்கேன்…” என்றவன்  அவரின் பதிலைக் கூட கேட்காது மாடிப்படியை நோக்கி நடந்தான்… அவன் செல்வதையே இயலாமையுடன் பார்த்த சிவகாமி வெடுவென சமையல் அறையை நோக்கி நடந்தார்… சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த தன் மகளின் முதுகில் ஒன்று வைத்தவர்

“அவன் வீட்டுக்கு வர நேரம் பாத்து அந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னதை பத்தி எதுவும் பேசாதன்னு  சொல்லிட்டு தானே போனேன், என்ன பேசி தொலைஞ்ச, நான் இருக்கும் போதே அவனை ஏதாவது சொல்லிட்டு தான் இருப்ப, நான் வேற வீட்டுல இல்ல, சொல்லவா வேணும், இஷ்டத்துக்கு பேசி இருப்ப, ஒழுங்கா அவனை என்ன சொன்னன்னு சொல்லு இல்லை, தோசை கரண்டியிலயே இழுத்து விட்ருவேன்…”என  மகளின் குணம் அறிந்தவராக சற்று கோபமாகவே கேட்டார்.

“அவன்கிட்ட எனக்கு என்ன பேச்சு, எனக்கு வேற வேலை இல்லை, நார்மலா ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிட்டு இருந்தேன். அவங்க உங்க அண்ணனுக்கு நிச்சியம் எப்பன்னு கேட்டாங்க, நின்னுருச்சுன்னு சொல்லிட்டு இருந்தேன் அதை கேட்டு இருப்பான் போல…” அத்தனை அலட்சியமாக கூறினாள் நவினின் தங்கை நிவேதா.. அவளை பற்றி அறியாதவரா சிவகாமி நிச்சியம் மனம் புண்படும் படி பேசியிருப்பாள் என நினைத்தவர் அவளை முறைத்து பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தார். அவரின் முறைப்பை சட்டே செய்யாமல் தன் வேலையை கவனித்தாள் நிவேதா.நம் கதையின் மற்றொரு நாயகி, நிவேதா சற்று மாநிறம், நவின் சிவகாமியை போல உறித்து வைத்த வெள்ளை கோழியை போல் இருப்பான்..,

சிறு வயதிலிருந்தே இந்த நிற வேறுபாடு அவனிடம் பழக சிறு தயக்கத்தை கொடுத்தது, நாடாளவில் அது  பொறாமையாக மாறி இப்போது அவனின் மேல் வெறுப்பாக மாறியிருந்தது… அதனாலேயே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை வார்த்தையால் ரணமாக்கி விட்டு தான் வேறு வேலையே செய்வாள். இதில் அவளை சொல்லி குற்றமில்லை எல்லாம் அந்த நாலு பேரால் வருவது…

உறவினர்  வீட்டிற்கு வந்தாமோ ஓசியில் டீயை குடித்துவிட்டு போனாமா என்றில்லாமல்

“ஏங்க அண்ணி, பெரியவனுக்கு கண்ணு கொஞ்சம் மாறு கண்ணா இருந்தாலும் பாக்க அழகா, லட்சணமா இருக்கான், சின்னவ அப்படியே அண்ணன் மாதிரி மாநிறம், முகம் கூட மருந்து மாதிரி இருக்கு, வயசுக்கு வந்தாகீது மூஞ்சி லட்சணமா இருக்குமோ என்னமோ…” என கூறி நிவேதாவின் கன்னத்தை பிடித்து கிள்ளி விட்டு செல்வார்கள்.

இப்படி வீட்டுக்குவருபவர்கள் எல்லாம் பிஞ்சு மனதில் நிற வேறுபாட்டை அழகாய்  பதிய வைத்து அவளை அவனிடமிருந்து அவர்கள் அறியாமலேயே பிரித்து வைத்தனர்… 

அதே நாலு பேரால் நவின்  வருத்தப்படும் நாட்களும் உண்டு..”பையனுக்கு மாறு கண்ணாக இல்லைன்னா இன்னும் நல்லா இருந்து இருப்பான், கண்ணு தான் இப்படி அமைஞ்சு போச்சு,..” வருத்தப்படுகிறேன் என்ற பெயரில் பாடிஷேமிங் செய்துவிட்டு செல்வார்கள்…

ஒரே வாக்கியம் தான் ஆனால் இருவரின் மனதிலும் வெவ்வேறு கோணங்களில் ஆழமாக வேரூன்றி இருந்தது… சற்று இளகிய மனம் கொண்ட நவின் தன்னைத்தானே கீழாக நினைத்து கொண்டான் என்றால் நிவேதாவோ அதற்கு நேர் மாறாக அவனை விட தான் எந்த விதத்தில் குறைந்து விட்டோம் (நிறத்தை தவிர),  என எண்ணி எண்ணியே அவனின் மேல் கோபத்தை வளர்க்க ஆரம்பித்து விட்டாள். இப்போதும் இருவருமே வளர்ந்து விட்டனர் இப்போதும் கேலி பேசும் உலகம் பேசி கொண்டு தான் இருக்கிறது ஆனால் அதை நவின் சிறு சிரிப்போடு கடந்து விடுவான்…  ஆனால் நிவேதா…??? தன்னை பற்றி மட்டுமல்ல தன் அண்ணனை பற்றி கேலி பேசினாலும்  அவர்களை தெறித்து ஒடும் அளவிற்கு பேசிவிட்டு தான் வேறு வேலையே செய்வாள்…  (அப்படி தெறித்து ஓடுபவர்களை இனி வரும் நாட்களில் நிச்சியம் காண்போம்.)

பிள்ளைகள் இருவருமே இரு வேறு திசைகளில் இருக்க,இருவரையும் இணைக்கும் பாலமாக இன்றுவரை சிவகாமி தான் இருந்து வருகிறார்.. சிவகாமிக்கும், அருணாசலத்திற்கும் பிறந்த முதல் மகவு தான் நவின் பிரசாத், அவனுக்கு அடுத்து ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு நிவேதா பிறந்தாள். நவின் கல்லூரி கடைசி வருட படிப்பில் இருக்கும் போதே அருணாசலம் மாரடைப்பால் காலமானார்… அருணாசலம் மனியாரருக்கு (VAO) கீழ் உதவியாளராக  பணி புரிந்ததால் அவர் இறந்த பிறகும் வீட்டு செலவுக்கு அவரின் பெயரில் பணம் வந்து கொண்டிருந்தது… அதனை வைத்து குடும்ப செலவையும் பிள்ளைகளின் படிப்பையும் பார்த்து கொள்வது  சிறிது கடினமாகவே இருந்தது  சிவகாமிக்கு. ஆனால்  அதுவும் நவின் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை தான் நீடித்தது… வீட்டின் செலவுக்கு அருணாசலத்தின் பணம் வந்தாலும் மற்ற செலவுகள், நிவேதாவின் படிப்பென இன்றுவரை நவின் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்…

*******

வேலை கிடைத்த சந்தோஷத்தில் வீட்டிற்குள் நுழைந்தவளின் காதில் “எங்க போயிட்டு வர…” என்ற குரல் கேட்க  அப்படியே நின்றாள்.”உன்னை தான் கேட்கறேன் எங்க போயிட்டு வர…” என்ற கர்ஜனை குரலில் மனம் பயம் கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “காலையிலேயே இன்டர்வயூக்கு போறேன்னு பூங்கொடி கிட்ட சொல்லிட்டு தானே போனேன் அண்ணா…” குரலே வரவில்லை அவளுக்கு.”உன் ஆசைக்காக தான் இத்தனை வருசமாக நீ வேலைக்கு போறேன்னு சொல்லும் போது சரின்னு விட்டேன். இப்ப கல்யாண பேச்சு போயிட்டு இருக்கும் போது நீ வேலை தேடி போக வேணும்னு என்ன அவசியம் இருக்கு சொல்லு. ஒருவேளை சாப்பாடு போட முடியாத அளவுக்கு உன் அண்ணன் வக்கு இல்லாதவனா இருக்கேன்னு யோசிக்கிறாயா, இல்லை அவன் படிக்கலன்னு யோசிக்கிறயா…” என சிங்கமாய் கர்ஜித்தான் மகிமாவின் உடன் பிறந்தவன் சரவணமுத்து. நம் கதையின் மற்றொரு நாயகன்

“ஐயோ அப்படியெல்லாம் இல்லை அண்ணா…” என பதறினாள்.

“அப்பறம் எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க., திடீர்னு வேலைக்கு போக யாரு சொன்னா…”என தன் முத்து பற்களை கடித்தபடி கேட்டான்.

“நான் தான் வேலைக்கு போக சொன்னேன் மாமா…” என்றபடி வந்தாள் அவர்களின் அத்தை மகள் பூங்கொடி.

“ஏன்,..” என வந்தவளிடம்  சீறும் பாம்பாய் சீறி நின்றான்

“இல்லை மாமா, அந்த பையன் வேண்டாம்னு சொன்னதுல இருந்து புள்ளைக்கு மூஞ்சியே இல்லை, அதான் அவங்க நினைப்பு வராம இருக்கறது பழையபடி வேலைக்கு போன்னு சொன்னேன். அப்பன் அம்மா இல்லாத புள்ளை உங்க கிட்ட மனசு திறந்து எல்லாமே பேச முடியாம, உள்ளுக்குள்ளே உடைஞ்சு போயிட்டா, அதான் வேலைக்கு போக சொன்னேன்…” என்றாள் பூங்கொடிஅவள் கூறுவது உண்மையா என்றபடி மகியை பார்த்தான். அவளோ குனிந்த தலை நிமிராமல் நின்றாள்.

“கொடி சொல்றது உண்மையா பாப்பா…” என தணிந்து ஒலித்தது அவனின் குரல். இத்தனை நேரம் சீறும் பாம்பை போல் நின்றவன் அவள் வந்து பேசியதும் அப்படியே மாறி விட்டானே என ஆயாசமாய் இருந்தது மகிக்கு, படிப்பு முடிந்ததும் வேலை வேலை என இருந்திருக்க கூடாதோ என தாமதமாக தோன்றியது மகிக்கு… இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆமென தலையாட்டினாள்.

“பாப்பா, நான் வேணும்னா அந்த பையன் வீட்டுல மறுபடியும் பேசி பாக்கட்டுமா…” என மென்மையாக கேட்டான் சரவணன்.

“ஐயோ காரியமே கெட்டுச்சு,..” என நினைத்த பூங்கொடியோ “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா, அவன் இருக்கறதுக்கும் நம்ம புள்ளை இருக்கறதுக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது, இப்படியே விட்ருங்க, சனியன் தொலைஞ்சுதுண்ணு நினைச்சுப்போம்…” என்றதும் மகி, நேரடியாகவே பூங்கொடியை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

****************(Long intro, but important intro, adjust pannikonga)

ஈரோடு மயிலம்பாடி, இயற்கையின் மொத்த அழகும் குத்தகைக்கு வாங்கி இருக்கும் ஊர் என கூறலாம். அவ்வளவு இயற்கை அழகு நிறைந்த ஊரில் பிறந்தவர்கள் தான் நம் மகியும், சரவணமுத்துவும். சிறு வயதிலயே விபத்தில் தாய், தந்தையை இழந்து தாய் மாமனின் கவனிப்பில் வளர்ந்தவர்கள் தான் இருவரும். (அவர்களின் மாமன் பாசத்திற்கு பார்த்து கொண்டார் என்றால் அவர்களின் அத்தை பணத்திற்காக மட்டும் தான் பார்த்து கொண்டார்.. ஆம் மயிலம்பாடியில் உள்ள பாதி விவசாய நிலங்கள் இருவரின் பெயரில் மட்டும் தான் இருந்தது…)மகியின் தாய், தந்தை இறக்கும் போது சரணவனுக்கு பதினைந்து வயது என்பதால் படிப்பை பாதிலயே நிறுத்தி விட்டு, தந்தை விட்டு சென்ற விவசாயத்தை கையில் எடுத்தான். ஆனால் அவனை விட எழு வயதிற்கு சிறியவள் மகியை அவளை ஆர்க்கிடெக்சர் படிக்க வைத்தது மட்டுமல்லாமல் அவள் விருப்பத்திற்கேற்ப பணிக்கும் அனுப்பினான்… சரவணனின் மாமன்,அத்தை பத்தி சொல்ல மறந்துட்டேன் பாருங்க,.. சரவணனின் மாமன் மூர்த்தி, அவரது மனைவி வேணி இவர்களுக்கு இரண்டு மகவுகள் அதில் மூத்தவன் கிருஷ்ணன் வெளிநாட்டில் பணி புரிகிறான். இளையவள் பூங்கொடி பெயருக்கென ஒரு டிகிரியை முடித்துவிட்டு வீட்டில் தான் இருக்கிறாள்…

சரவணின் அத்தை வேணியின் எண்ணமெல்லாம் ஒன்று தான் இருவரின் பெயரில் இருக்கும் சொத்துகள் முழுவதும் தன் பிள்ளைகளே அனுபவிக்க வேண்டும் என்பது. ஆனால் அதில் ஒரு கூடை மண்ணை அள்ளிக் கொட்டினான் சரவணன்… ஆம் மகியின் படிப்பிற்கு ஏற்ற வகையில் நவினை தேடிப் பிடித்தான். சிவகாமி ப்ரோக்கரிடம் நவின் கிளாஸ் அணிந்திருந்த புகைப்படத்தை கொடுத்திருந்ததால் அவனின் கண் வேறுபாடு சரவணனுக்கு தெரியாது போக உடனே மகிக்கு புகைப்படத்தை அனுப்பினான்… ஆனால் அவளோ அந்த புகைப்படத்தை பார்க்காமலயே

“உனக்கு பையனை பிடிச்சு இருந்தா எனக்கு ஓகே தான் அண்ணா…” என்றுவிட்டாள்.

“சரி மா, பையன் வீட்டை பத்தி விசாரிச்சுட்டேன் இருந்தாலும் அவங்க நம்பர் தர, எதுவா இருந்தாலும் நீயே பேசிடு…” என கூறியவன் மீண்டும் இனி பணிக்கு செல்ல வேண்டாம் திருமணம் முடியும் மட்டும் தன்னுடனே இரு என ஆசையாய் கேட்க மறுக்க தோன்றவில்லை அவளுக்கு.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மூன்று வருடங்கள் சென்னையில் வேலை செய்ய சரியென்று கூறியதே பெரியது என நினைத்தவள் (emergency)எமர்ஜென்ஸி ரீசைனிங் எழுதி கொடுத்துவிட்டு வந்து விட்டாள்…

சென்னையில் இருந்து ஈரோடிற்கு வரும் வழியில் தான் அண்ணன் கூறிய மாப்பிள்ளை மகிக்கு அழைத்து இருந்தான்…

“ஹலோ, நான் ந..வி…ன் பேசறேன் ,உங்க வீட்டுல பேச சொல்லி நம்பர் கொடுத்தாங்க…” அத்தனை தயக்கம் அவனின் குரலில் அந்த தயக்கமே கூறியது அவன் யாரென..

“ஹான், சொல்லுங்க சா…” சார் என கூற வந்ததை அப்படியே விழுங்கி கொண்டாள்.

“இல்லை,…” என்றவன் ஒரு பெருமூச்சுடன் “நிஜமாவே என்னை உங்களுக்கு பிடிச்சு இருக்கா…” என இப்போதும் தயக்கத்தோடு தான் கேட்டான்..

இங்கு மகிக்கோ ஏதோ இனம் புரியா உணர்வு உள்ளுக்குள் தோன்றி மறைந்தது, ஒரு ஆணின் குரலில் இத்தனை வசியம் இருக்கிறதா வியந்து போனாள்.. அவன் பேச பேச இதயம் மத்தளம் வாசித்தாலும் பதில் கூறினாள்.. அவனை பார்க்கவில்லை என்றாலும் அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அந்த திருமணத்திற்கு சம்மதம் எனக் கூற வைத்தது. பாவம் அவள் அப்போது அறியவில்லை அந்த குரலிற்கு சொந்த கரானை அடுத்த வாரமே மனம் புண்படும் படி பேசுவோமென…

சென்னையிலிருந்து வந்தவளை இரண்டு நாட்கள் எந்த தொந்தரவும் செய்ய விடாது சரவணன் பார்த்து கொண்டதனால் பூங்கொடிக்கும், வேணிக்கும் அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது போனது. அவர்கள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அதற்கான சந்தர்ப்பம் அடுத்த நாள் காலையே பூங்கொடியும் வேணியும் கிடைத்தது. ஆம் அன்று சரவணன் அந்தியூர் மாட்டு சந்தைக்கு செல்ல வேண்டும் என்பதால் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டான். மீண்டும் வீடு திரும்ப எப்டியும் மதியமாகிவிடும் என நினைத்த பூங்கொடியோ தன் தாயின் சொற்படி மகியின் அறையை நோக்கி சென்றாள்.. லேப்டாப்பில் கவனமாக இருந்தவளை அழைத்த பூங்கொடியோ சற்று திமிராகவே அவளும், சரவணனும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், உனக்கு திருமணம் முடிந்த கையோடு அவனுக்கும், இவளுக்கும் திருமணம் எனக் கூறி மகிக்கு அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமல்லாமல்

“நீ என் அண்ணன் கிருஷ்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் தான் நான் உன் அண்ணனை கல்யாணம் பண்ணிப்பேன்… நீ மாட்டேன்னு சொன்னா எனக்கும் வேற வழி தெரியல, எனக்கு உன் அண்ணன் வேண்டாம்.. யோசிச்சு சொல்லு, கண்டிப்பா உன் அண்ணன் உனக்காக என்னை வேண்டாம்னு சொல்லிடுவான். ஆனா பாரு சின்ன வயசுல இருந்தே அம்மா, அப்பாவை இழந்து, படிப்பையும் இழந்து, இப்ப என்னையும் இழந்துட்டு அவன் நிக்கணுமான்னு யோசிச்சுக்கோ..” என மற்றொரு குண்டையும் போட்டு விட்டு மகியின் பதிலை எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினாள்.

அந்த நிமிடம் சத்தியமாக பூங்கொடியை நம்பவில்லை . அவளை நம்ப வேண்டாமென மகியின் மனம் அடித்து சொல்ல குழம்பி போனவளாய் நின்றாள். பாதி தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்த பூங்கொடியோ சொடக்கிட்டு மகியை அழைத்தாள். குழப்பம் நிறைந்த மனதோடு நிமிர்ந்து எதிரில் இருந்தவளை பார்த்தாள் மகி. அவளோ சற்றும் குறையாத திமிரில்

“அண்ட் ஒன் மோர் திங்க், நீ வேலையை விட்டுட்டு ஓசி சோறு சாப்பட வந்துட்டோமுன்னு குதிக்காத, என் புருசன் ராவும் பகலுமா உழைச்சு கொட்டிட்டு இருக்கான்… நீ வந்து இன்னும் அவனுக்கு தலைவலியை கொடுக்காத,…” என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

சரவணனுக்கு இவர்களின் குணம் தெரியுமோ தெரியாதோ ஆனால் மகிக்கு இவர்களின் குணம் நன்றாகவே புரியும்.. சிறு வயதிலிருந்தே பார்த்து கொண்டு தானே இருக்கிறாள். பெண்கள் இருவருக்கும் உடம்பு முழுக்க விஷம் தான்… தன் அண்ணனை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என நினைத்தவள் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.. ஆனால் அன்று மதியமே சரவணனும், பூங்கொடியும் வீட்டு முற்றத்தில் அணைத்தபடி நின்றிருந்ததை நேரடியாகவே பார்த்தாள்.

அதற்கு மேல் இவளும் என்ன செய்வாள் பூங்கொடி கூறியது போல சிறு வயதிலிருந்தே தன் அண்ணனின் தியாகமும்,உழைப்பும் அவள் கண் முன்னே நிழற்படம் போல் தெரிய, கடைசியில் அண்ணனின் காதலுக்காக தன் மனதில் துளிர் விட்ட உணர்வை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள். உடனே பூங்கொடியை அழைத்தும் அவள் கூறியதற்கும் சரியென கூறிவிட்டாள். உடனே மாப்பிள்ளை வீட்டாருக்கு வேணியே அழைத்து கூறிவிட்டார் மகி மாட்டேன் என கூறிய மாலையே நவின் மீண்டும் அழைத்து இருந்தான்.

அவனின் குரல் காதில் ரீங்காரம் போல் கேட்டு கொண்டே இருந்தது. பித்து பிடித்தவள் போல் நின்றவள் சில நிமிடம் அவனிடம் பேசவே இல்லை, அவன் அடுத்து பேசியதும் தான் நினைவு வந்தவளாக, வேண்டுமென்றே அவனின் மனதை காயப்படுத்தி பேசியவள் அதற்கு அவன் பதில் வரும் முன்பே

“உங்க வீட்டுல ஆள் உயர கண்ணாடி இருந்தா முதல்ல போயி பாருங்க…” என முகத்தில் அடுத்தது போல் பேசிவிட்டு வைத்து விட்டாள்…

அவள் நினைத்தது எல்லாம் ஓர் ஆண் மகனை இப்படி திமிராக பேசினால் நிச்சியம் இந்த பெண் வேண்டாம் என கூறி வி்டுவான் என்று தான். அவள் நினைத்தது போல் தான் அவனும் வேண்டாமென கூறிவிட்டான் என தகவல் வந்தது…

அதற்கு மேல் அவனை பற்றியும் அந்த குரலின் ஈர்ப்பை பற்றியும் யோசிக்காது இருக்கவே சரவணனின் பேச்சையும் மீறி இன்டர்வியூக்கு சென்று வேலையும் வாங்கிவிட்டு வந்தது…

(அதற்கு மேல் நடந்தது தான் நமக்கு தெரியுமே..)

அவளே,அவனை பற்றி நினைக்காது இருந்தாலும் தற்போது பூங்கொடி அவனை பற்றி பேசி அவனின் ஞாபகத்தை மீண்டும் இவளுள் விதைத்து விட்டாள். (இவ்வளவு நடந்தும் இன்று வரை அவளுக்கு அவனின் புகைப்படத்தை பார்க்க வேண்டுமென தோன்றவில்லை, பார்க்கவும் இல்லை..)*********