கலைந்த ஓவியமே 13

ஒருவரின் மீது காதலோ ஈர்ப்போ வந்துவிட்டாள் அவர்களின் குறைகள் காதலிப்பவர்களுக்கு தெரிவதில்லை என்பதில் எத்தனை உண்மை இதோ நம் மகியின் மனநிலையும் அதை தானே கூறுகிறது.

அவன் அழகிய ஓவியம் போல் இருக்க வேண்டும் என்று அவள் நினைத்து இருந்தால் காதல் என்ற மலர் அவளுள் பூத்திருக்காது…

நம் அன்றாட வாழ்வில் இது போன்ற அழகிய காதலர்களை பார்த்து கொண்டு தான் இருப்போம். என்ன?? அது நம் கவனத்தில் பதியுமா என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது…

#

சிறு வயதிலிருந்தே தாய், தந்தை இல்லாமல் அண்ணன் வளர்ப்பில் வளர்ந்தவள், அண்ணன் தனக்காக படிப்பை கூட நிறுத்தி விட்டு வேலைக்கு செல்கிறான் என்ற எண்ணமே அவளின் மனதில் காதல் என்ற விதையை வளர்க்க விட்டதில்ல… அது மகி பணியில் அமர்ந்த பிறகும் தொடர்ந்து என்பது தான் உண்மை..

சொல்லபோனால் நவின் பேசும் வரை காதல் கத்திரிக்கா, வெண்டக்கா இதிலெல்லாம் அவளின் தலை என்ன மூக்கைக் கூட நீட்டியது இல்லை என்பதே உண்மை.

அலுவலகத்தில் நவினைப் பார்க்கும் நேரமெல்லாம் அவனின் கண்களின் குறையை மட்டும் ஆராய்ச்சி செய்தபடி இருந்தவளுக்கு இப்போது அவனின் கண்களின் வேறுபாடுகளை பற்றி துளியும் ஆராய்ச்சி செய்யவில்லை.

மனம் முழுவதும் தன்னை குரலால் வசியம் செய்து, தன்னுள் காதல் விருட்சமாக வளர்ந்து நிற்பவனாக மட்டும் தான் நவின் தெரிந்தான். என்ன காதலா…?? ஆம் காதலே தான். எப்ப இருந்து இந்த காதல் முளைத்தது அதை எப்போது நீ உணர்ந்தாள் என்று கேட்டால் இதோ இரண்டு நிமிடங்களுக்கு முன்பு தான் என்பதை போல் அவளின் பதில் வரும்…

முதன்முதலில் அவனிடம் பேசிய போதே ஏதோ ஓர் உணர்வு அவளுள் எழுவதை தடுக்க முடியவில்லை, அது அவன் குரலில் இருந்த வசீகரமோ??இல்லை அவனின் தயக்கமும் வெட்கமும் கலந்த போச்சோ?? என இப்போது கேட்டாலும் அவளுக்கு தெரியுமா என்பது கேள்விக்குறியே?? ஆனால் ஏதோ ஓர் ஈர்ப்பு அவளை முற்றிலும் அவன் புறம் இழுத்தது… அதை என்னவென்று ஆராய்ச்சி செய்யும் முன்பே பூங்கொடி கூறிய பொய்யால் குழியில் விழுந்த விதையை போலனது அந்த உணர்வு. தன் அண்ணனின் காதலுக்காக தானே தன்னுள் எழுந்த உணர்வை குழி தோண்டி புதைத்தாள். அப்படி புதைத்த அந்த உணர்வு தான் இப்போது இவனைக் கண்டதும் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது…

நவினை பார்த்துக் கொண்டே முன்னால் சென்றவள் அங்கிருந்து கோவில் படியில் இடித்துக் கொள்ள “இஸ்…” என்ற முனகலுடன் கிழே அமர்ந்துக் கொண்டாள்.

செல்லும் வழி முழுவதும் தன்னையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவளை அவனின் விழிகளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தது. அவள் சட்டென கிழே அமர்ந்ததும்

“அம்மா நீங்க போங்க நான் வந்துடறேன்…” என்றவன் சிவகாமி பதில் சொல்லும் முன்பே மகியை நோக்கி நடந்தான்… மகியிடம் பேச தான் செல்கிறான் என உணர்ந்து கொண்ட சிவகாமியோ சிறு சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தார்.

அவசரமாக அவளிடம் சென்றவன் “எ…என்ன… என்னாச்சு ம..மகி…” துடிக்கும் இதயத்தை அடக்கினாலும் நாவு வறண்டு வார்த்தைகள் அனைத்தும் போர் தொடுத்தது… அவனின் திணறல் இவளுக்கு நகைப்பை கொடுக்க பக்கென்று சிரித்து விட்டாள்.

பெரு விரலில் இருந்த காயத்தின் வலியால் கண்களை சூழ்ந்துக் கொண்ட நீருடன் சிரித்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகையித்தாள். “ஐயோ ரொம்ப வலிக்குதா…” என்றவன் அவளின் கண்களை தன் கையால் அழுந்த துடைத்து விட்டு கொண்டே அவளின் கால்களை பார்த்தான்.

பெருவிரலின் மேல் தோல் கிழிந்து லேசாக இரத்தம் கசிந்து கொண்டிருந்தது… “லைட்டான அடி தான், கொஞ்ச நேரம் எரிச்சலா இருக்கும் அப்பறம் சரியாகிடும்…” எனக் கூற அவனை மூக்கு விடைக்கப் பார்த்தவள்…

“இதுக்கு முன்னாடி லவ் பண்ணிருக்கீங்களா,..” என தலைக்கும் வாலுக்கும் சம்மதம் இல்லாமல் கேட்டாள். ஏன் கேட்கிறாள் என கேட்க தோன்றினாலும்

“ம்ம்ப்ச், நோப்…” என இதழ்களை பிதுக்கி இல்லையென கூறிட “ஏதாவது ட்ரை பண்ணி இருக்கீங்களா.. மீன்ஸ் லவ் பண்ண ட்ரை பண்ணி இருக்கீங்களா…” எனக் கேட்டாள், அதற்கும் முன்பே போலவே உதட்டை பிதுக்கி இல்லையென தலையாட்டினான்.. ‘எப்படி மாட்டும், இப்படி பழமா இருந்தா,..’ என நினைத்தவள் படியில் கைவைத்து எழுந்து நின்றாள். எழுந்து கொள்ளவாவது கைக் கொடுப்பான் என நினைக்க அவனோ அவளுடன் இணைந்து எழுந்து நின்றானே தவிர அவளுக்கு கைக் கொடுத்து உதவவில்லை…

” சரியான மாங்க, முத்தின வெண்டைக்கா, இவனையெல்லாம் வைச்சுட்டு..” என முனகிக் கொண்டே எழுந்துக் கொண்டவள் “கிளம்பறேன் பாய்…” என முன்னால் நடந்தாள்…

“எத்தனை எத்தனை முகமடி உனக்கு,
மொத்தமாய் காட்டிவிடு…
கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக்காட்டி
என் இதயத் துடிப்பை ஏகத்திற்கும் துடிக்க செய்யாதே,..”
மனம் கூப்பாடு போட்டு கத்த,
போகும் அவளையே கண்களில் சிரிப்போடு பார்த்தவன் “ஒரு நிமிசம் நானும் வரேன்…” என கத்த

சற்றே திரும்பி “எது வரைக்கும் கோவில் வாசல் வரைக்குமா இல்லை…” என இழுக்க

“இல்லை கோவில் கார் பார்க்கிங் வரைக்கும் தான்… கார்ல தண்ணி இருக்கு எடுக்க போகணும், நீயும் அங்க தான் போகணுமுன்னா வா போகலாம்…” என்றவன் அவளை நோக்கி நடந்தான்..

“சைக், ஈஸா, பகவானே, குருநாதானே, தயவு செஞ்சு இவருக்கு ஒரு புத்தியை கொடுங்க…” வானத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டு வேண்டிக் கொள்ள

“நீ இந்தளவுக்கு பேசுவியா…” ஆச்சரியம் மாறாமல் கேட்டான்.

‘கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டமோ, அடக்கி வாசி டி மகி…’ என நினைத்தவள் அசடு வழிய அவனை பார்த்து சிரித்தாள்.

அவன் அப்படி கேட்ட பிறகு ஒரு வார்த்தை பேசவில்லையே… வழக்கம் போலவே மெளனம் எனும் மொழியை முகத்தில் ஏந்திக் கொண்டாள்.

கோவில் வாசலை தாண்டி இருவரும் அந்த எழுவதடி ரோட்டில் நடக்க சட்டென அவளின் கையை பற்ற விழி விரிய அவனை பார்த்தாள்…

“வண்டி நிறையா வருது மா, அது கூட கவனிக்காம என்ன யோசனை…” என கண்டிக்கும் குரலில் கேட்டான்.

“இல்லை சாரி, நான் கவனிக்கல,..” என்றவள் அவனின் கைகளில் இருந்து தன் கைகளை எடுக்க முயல, அவனின் கையின் பிடியில் இறுக்கம் கூடியது…

அவன் கையிறுக்கத்தை பார்த்தவள் அவனை அண்ணார்ந்து பார்க்க அவனோ இதழ்களில் சிரிப்பை அடக்கி கொண்டு முன்னால் நடந்தான்…

சிவப்பான கையால என்னை பிடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா… என மனம் ஒரு புறம் பாடல் வாசிக்க அதனை அடக்கிக் கொண்டே அவனுடன் இணைந்து நடந்தாள்.

***

“ஹ்ம்ம் பார்த்தேன், செமயா மேன்லியா இருந்தான்,நல்லா நெய் குழந்த மாதிரி சைனிங் ஃபேஸ், பாப்பா கலருக்கும் அவருக்கும் பொருத்தமா இருக்கும்..” என்றான் கிருஷ்ணன்…

அவன் அப்படி கூறியதும் நறுநறுவென பற்களை கடித்தபடி கிருஷ்ணனை முறைந்தான் சரவணன்.

“என்னடா முறைக்கற…” என அவனின் முறைப்பில் புருவங்கள் சுருங்க கேட்டான்… “முறைக்காம என்ன பண்ணுவாங்க, அந்த பையனோட கண்ணு மாறு கண்ணா இருக்கு…” என்றான் கடுப்பாக.

“சரி அதுக்கு…” கிருஷ்ணனின் குரலில் சிறிதே கடுமை குடியேறி இருந்தது.

“என்ன அதுக்கா, எப்படி டா பொண்ணு கொடுக்க முடியும். நம்ம பிள்ளை அழகா இருக்கா டா அந்த பையனுக்கும் பாப்பாக்கும் சுத்தமா நல்லா இருக்காது டா அவசரப்பட்டனோன்னு …” என சரவணன் சொல்ல சொல்லவே

“ஏன் பையனோட போட்டோவை பாக்கும் போதே இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலயா…” என குரலில் அனல் பறக்க கேட்டாள் நிவேதா.

அவளை நிதானமாக திரும்பி பார்த்தவன் “அதான் போட்டோவை ஏமாத்தி காமிச்சு இருக்கீங்களே. இப்ப நேருல பாக்கும் போது தான் தெரியுது கண்ணு நொள்ளை கண்ணுன்னு…” அத்தனை ஏளனமா கூறினான்.

“இங்க பாரு நொள்ளை கண்ணு, அது இதுன்னு சொன்னா மூஞ்சி பேந்துரும் சொல்லிட்டேன்…” என அடிப்பது போல் முன்னால் நெருங்கி செல்ல, அவனும் கோபமாக முன்னால் சென்றான்.

விட்டால் இருவரும் முடியை பிடித்துக் கொண்டு அடித்துக் கொள்வார்கள் என நினைத்த கிருஷ்ணாவோ அவசரமாக “ஏங்க கொஞ்சம் அமைதியா இருங்க.., ஏன் டா நீயும்..” என நிதேவாவிடம் ஆரம்பித்து சரவணனிடம் முடித்தான்.

கிருஷ்ணன் இடைப்புகவும் சரவணன் சற்றே அமைதியாய் நின்றான்..

ஆனால் நிவேதா கேட்பாளா??? சரவணன் அமைதியானதும் இவள் படபடவென பொறிய ஆரம்பித்தாள்.

“தள்ளுங்க அண்ணா நீங்க, மேல கை வைச்சுடுவனா இவன்., அதையும் தான் ப்பாக்கறே…” என எகிற

“என்னமா நீயும்…” என கிருஷ்ணா ஏதோ சொல்ல வர

“பின்ன என்ன அண்ணா, முதல்ல பொண்ணுக்கு பையனை பிடிக்கல எங்களுக்கு இந்த சம்மந்தம் வேண்டானு சொன்னது இவங்க தான்,.. போனவங்க அப்படியே போக வேண்டியது தானே மறுபடியும் எதுக்கு வரணும் எங்க பொண்ணுக்கு பையனை பிடிச்சு இருக்குன்னு ஏன் சொல்லணும்…இது கூட பரவாயில்லை அண்ணா, எவ்வளவு பெரிய பழியை தூக்கி எங்களை மேல போட்டாங்க தெரியுமா, நாங்க என்னவோ வரதட்சணைக் கேட்ட மாதிரியும் இவங்க அதுக்காக என் அண்ணனை வேண்டாமுன்னு சொன்ன மாதிரியும் பேசினாரு நம்ம தலைவர், பேசனதோட இல்லாம வரதட்சணை என்ன வரதட்சணை, நீங்க என்ன எதிர்ப் பார்த்தாலும் கொடுக்கிறேன். எங்ககிட்ட நாலு மாடு, நாலு கோழி இருக்குன்னு பெருமையா பீத்திகிட்டான். அன்னைக்கு எனக்கு என் தங்கச்சி தான் முக்கியம் அவ ஆசை தான் முக்கியமுன்னு பழைய பட ஹீரோ மாதிரி டயலாக் பேசிட்டு, இப்ப பையன் கண்ணு சரியில்ல காது சரியில்லைன்னு சொல்றான், இப்ப அவன் தங்கச்சியோட ஆசையும் மனசும் எங்க போச்சாம்…” என எண்ணியில் பொரிந்த கடுகாய் பொரிந்தாள்.

“அதான் சொல்றேன்ல டி, எனக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா உங்க வீட்டுக்கு வந்துக் கேட்டு இருக்கவே மாட்டேன்… எந்த வீட்டுல டி ஏத்துபாங்க இப்படி இருக்கற பையனுக்கு பொண்ணு கொடுக்க, சொல்றல்ல வீடு தேடி வந்து பேசினான் பேசினான்னு, அப்படி வீடு தேடி வந்து பேசியும் ஒரு வார்த்தை எங்க பையனுக்கு இப்படி இருக்குன்னு சொன்னீங்களா நீங்க…” என பற்களை கடித்தபடிக் கேட்டான்.

“ஏன் பொண்ணுக் கொடுக்கப் போறவன் நாலு இடத்தில விசாரிக்காமயா கொடுக்க போற, விசாரிச்சுட்டு தானே வீட்டுக்கே வந்து இருப்ப, அப்படியே விசாரிக்கலன்னாலும் தரகர் சொல்லி இருப்பாரு தானே.., நாங்க உனக்கு தெரிஞ்சு இருக்குமுன்னு தான் சொல்லாம இருந்தோம்…” என இவளும் விடாது பேசினாள்.

முதன்முறையாக வீட்டில் பெரியவர்கள் இல்லையென கவலைக் கொண்டான்…

இவள் கூறுவது போல் விசாரித்து இருக்கலாமோ,வேணி அத்தையும் விசாரித்து தான் வேண்டாமென கூறி இருப்பாரோ ‘ இல்லையே அவர் மாப்பிள்ளை வீட்டார் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்று தானே கூறினார் மாப்பிள்ளை சரியில்ல அவன் கண் மாருகண்ணாக இருக்கிறது என கூறவில்லையே… அவர் விசாரித்து இருந்தால் கண்டிப்பாக நவினின் குறையை ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பார், அவரும் அப்படி செய்யவில்லை நானும் அப்படி செய்யவில்லை இப்போது என்ன செய்வது??! கண்ணை கட்டி காட்டில் விட்டது போலனது அவனின் நிலை, பெருமூச்சுடன் எதிரில் இருந்தவளிடம் “இப்ப என்ன தான் டி சொல்ல வர, நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்ல வரயா…” எனக் கேட்டான்…

“ஐயோ உங்களை போயி தப்பு பண்ணிட்டீங்கன்னு சொல்லுவேனா, இனி எங்க கண்ணு முன்னாடி வந்துடாதீங்கன்னு சொல்லிட்டு போக தான் வந்தேன். கோவில்ல உன் மூஞ்சியே நீ என்ன நினைக்கறன்னு புட்டுப் புட்டு வைச்சிருச்சு, சந்தேகமா தான் உன் பின்னாடி கார் பார்க்கிங் வரைக்கும் வந்தேன். ஆனா சந்தேகப் பட்டது உண்மையாகிருச்சு, குறையை மட்டுமே பாத்த அந்த குறை மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்… நீ என் அண்ணனை பார்த்த பார்வையே சொல்லுது இனி நீ அவனை மறுபடியும் பாத்தா அவனோட குறையை மட்டும் தான் பார்ப்ப… அது காலத்துக்கும் செட்டே ஆகாது. உன் வீட்டுலயும் உன் தங்கச்சிக்கிட்டயும் என்ன காரணம் சொல்லுவியோ எனக்கு தெரியாது ஆனா என் அம்மாக்கிட்ட உண்மையான ரிசன் சொல்லிடு, அப்ப தான் என் அம்மாவும் இந்த வரனை எதிர் பார்த்திட்டு இருக்க மாட்டாங்க…” என்றவள் நில்லாமல் அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள்…

சிறிது தூரம் சென்றவள் மீண்டும் திரும்பி வந்து “என் அண்ணன் கிட்ட உன் தொங்கச்சி போன் நம்பர் இருக்கு, அவன் நினைச்சு இருந்தா அப்பவே உன்னை போல உரிமையா பொண்டாட்டி பொண்டாட்டின்னு பேசி இருக்க முடியும். ஆனால் அவன் அப்படி பண்ணல, ஏன்னா அது தான் அவன் குணம்… பெருசா என் அண்ணனை குறை சொல்ல வந்துட்டான். என் அண்ணனுக்கு வெளிய மட்டும் தான் குறை, ஆனா உனக்கு மனசு முழுக்க அழுக்கா இருக்கு, உன்னை மாதிரி வெளிய கெத்தா இருக்கறவாங்க நிறையா நிறையா இருக்காங்க.,அந்த மாதிரி சொக்க தங்கத்தையா பாத்து பாத்து உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி கொடு…” என மூச்சு விடாது பேசியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.