கலைந்த ஓவியமே 12

காதல் என்று வந்துவிட்டால் ஊனம் என்பது காதலிப்பவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை…

இளஞ்சிவப்பு நிறத்தில் தாவணியும், பச்சை நிற பட்டுபாவாடையும் அணிந்தபடி முகம் முழுக்க சிரிப்போடு வந்து கொண்டிருந்தாள் சரவணமுத்துவின் தங்கை மகாலட்சமி…  அவளுக்கு பின்னால் சரவணன் வர சிவகாமியின் கண்களில் சட்டென மின்னல் வெட்டியது.

“உன் சன்னதியில மறுபடியும் எங்களை சந்திக்க வைச்சு இருக்கன்னா இதுக்கு என்ன அர்த்தம்…” என சிவகாமி மெல்ல முனக “என்ன அர்த்தம் அவங்களும் கோவிலுக்கு வந்து இருக்காங்கன்னு அர்த்தம்…” என நிவேதா சற்றே சத்தமாக கூற, 

சட்டென மகியின் மேலிருந்த பார்வையை விலக்கிய நவினோ கண்மூடி இறவனை பிராத்தனை செய்தான்.

சிவகாமியின் முறைப்பை கண்டும் காணாதவள் போல் தன் அண்ணனை பார்த்து இதழ்களுக்குள் சிரித்தவள் அவனுடன் நின்று கொண்டாள்.

“அடேய் சின்னாக்குட்டி, ஏன் கத்தற,இது கோவில் நான் எங்க போயிட போறேன்…” என மெல்லிய குரலில் கிருஷ்ணா கண்டிக்க

“பின்ன, நானும் அண்ணாவும் காரை பார்க் பண்ணிட்டு வரதுக்குள்ள நீ கோவிலுக்குள்ள வந்துட்ட, அப்பறம் நீ தொலைஞ்சு போயிட்டா அண்ணாக்கு யாரு பதில் சொல்றது,..” என உதட்டை சுழித்து அழகு காமித்தவளின் கண்கள் சன்னிதியில் நின்றிருந்தவனின் மேல் விழுந்தது…

“ஆமா, கோவிலுக்கும் கார் பார்க்கிங்க்கும் எழு, எட்டு மைல் தூரம் சோ கிருஷ்ணா  தொலைஞ்சு போயிடுவேன்…”  என அவளை போலவே பேசி காட்ட அதை எங்கு அவள் கவனித்தாள். அவள் ஈசனின் சன்னிதியில் நின்றிருந்தவனை தானே கவனித்தாள். கிருஷ்ணா பேச பேசவே அங்கிருந்து நகர்ந்து கோவில் சன்னதியில் நின்றவனை நெருங்கினாள்…

அவள் நினைத்தது போலவே மேனேஜர் நவின் தான் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு எதிரில் நின்று கொண்டவள் அவன் கண் விழிக்கும் நிமிடத்திற்கு காத்திருந்தாள். கவனம் முழுவதும் நவின் மேல் இருந்ததால் சிவகாமி அவளை தாண்டி சென்றதையும் கவனிக்கவில்லை கிருஷ்ணா அவளின் அருகில் வந்து நின்றதையும் கவனிக்கவில்லை…

“கண்ணை மூடி சாமி கும்பிடாம என்ன வேடிக்கைப் சின்னாக்குட்டி…” கிருஷ்ணாவின் குரலில் அவனை பார்த்தவள்

“இவங்களுக்கு ஒரு ஹாய் சொல்லிடறேன் மாமா…” அவனிடம் ரகசியமாய் போல் கூறியது நிவேதாவின் காதிலும் விழுந்தது… அவள் அருகில் வந்ததை கூட அறியாத நவினோ கண்களை மூடி வேண்டியப்படி இருக்க, சட்டென அவனின்  மனக்கண்ணில் மகியின் பின்பம் தெரிந்தது… உள்ளுக்குள் அதிர்ந்தவனாய் தன் அல்லி விழிகளை மெல்ல திறந்தான்.

இவன் கண்களை திறப்பதற்காக காத்திருந்தவள் தான் என்றாலும் அவன் கண்களை திறந்ததும் என்ன பேசுவது என தெரியாது அவனைப் பார்த்து புன்னகையித்தாள்.அவளின் புன்னகையில் தாறுமாறாக இதயம் துடிக்க ஆரம்பிக்க அதை வெளிக்காட்டி கொள்ளாமல் எதிரில் இருந்தவளிடம்   சிறு தலையாசைப்பை பதிலாக கொடுத்துவிட்டு  கோவில் சன்னதியை சுற்றுவது போல் அங்கிருந்து நகர்ந்தான். இவளும்  தோள் குலுக்களுடன் கண்மூடிக் கொண்டாள். இதை அவர்களுக்கு அருகில் நின்ற கிருஷ்ணாவும், நிவேதாவும் பார்த்து கொண்டு தான் இருந்தனர்.

“என்ன யாரோ மாதிரி சாதாரணமா இருக்குங்க இரண்டும்…கொஞ்சம் கூட சந்தோஷமோ இல்லை அதிர்ச்சியோ  ஆகல என்னடா நடக்குது இங்க…” என்ற கேள்வி மனதை அரித்தாலும் நவினின் பின்னாலேயே சென்றாள் அவனின் தங்கை.இங்கு சரவணானுக்கோ சிவகாமியை பார்க்கவே சங்கடமாக இருந்தது… இங்கிருந்த  வேலையில் உண்மையாகவே சிவகாமி கூறியதை பற்றி வேணியிடமும், மகிடமும் கேட்கவே மறந்து விட்டான்..  

இப்போது திருமணத்தை பற்றி என்ன யோசித்து வைத்தீர்கள் என்று கேட்டால் என்ன பதில் கூறுவது என்பதைப் போல் பார்த்து கொண்டிருந்தான்… உண்மையாகவே வேலையில் தன் கவனத்தை சிதற விடுபவனல்ல சரவணன், நிவியை மறக்க வேலையில் கவனத்தை செலுத்தியவன் இலவச இணைப்பாக இவர்களையும் மறந்து தான் போனான்…  எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்பது போல் தயங்கி நின்றான் ஆனால் சிவகாமி அப்படியெல்லாம் நினைக்கவில்லை போலும்..

“நம்ம பாப்பாவா தம்பி…” கடவுளின் சன்னதில் கண்மூடி வணங்கிக் கொண்டிருந்தவளின் மேல் பார்வையை பதித்தப்படி கேட்டார்… “ஆமாங்க அம்மா,..” என பதில் கூறியவன் மகியை திரும்பி பார்த்தான்.

  “பேருக்கு தகுந்த மாதிரி மகாலட்சமியே தான்…” என்றார் சிவகாமி. அவர் அப்படி கூறியதும் முகம் முழுக்க சிரிப்போடு ஆமென தலையாட்டி “மன்னிக்கணும் ம்மா…” ஏதோ சொல்ல வர அதற்குள் “அண்ணா…” என்றபடி மகி வந்தாள். அவளுக்கு பின்னாலேயே கிருஷ்ணாவும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான்…

சரவணனின் அருகில் நின்ற மகியை பார்த்து புன்னகையித்தார் சிவகாமி., பதிலுக்கு சிரித்தவள் யாரு என்பதை போல் சரவணனின் முகத்தை பார்க்கவும் நவினும், நிவேதாவும் அங்கு வரவும் சரியாக இருந்தது… “வா தம்பி,..” என நவினை அருகில் அழைத்த சிவகாமியோ

“இவன் தான் என் பையன்  தம்பி., போட்டோல பாத்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..” என்றார் பொதுவாக. அவர் அப்படி கூறியதும்  படபடக்கும் இதயத்துடன் சிவகாமியின் அருகில் நின்றவனை பார்த்தாள்.  அவனும் இவளை பார்த்து கொண்டிருந்தான்.  சட்டென விழிகளில் கண்ணீர்  சூழ்ந்து கொண்ட கண்ணீருடன் முறைத்தாள். சிவகாமி கூறியதற்கு சரவணன்  பதிலே பேசவில்லை, அவனின் கவனம் முழுவதும் நவினை ஆராய்ச்சி செய்வதில் தான் இருந்தது…

சிவகாமி கூறியதற்கு அவனிடம் பதிலில்லை என்றதும் அருகில் நின்ற நிவேதாவிற்கு சுர்ரென்ற கோபம் வர “ஆல்ரெடி  போட்டோவில பார்த்து இருப்பாங்க தானே…அப்பறம் எதுக்கு இந்த வெட்டி அறிமுகம்…” என நிவேதா முணுமுணுக்க, சிவகாமி அவளை முறைத்தார்.

அவளோ அவரின் முறைப்பை கண்டுகொள்ளாமல் எதிரில் இருந்தவனை முறைத்து பார்த்தாள். அவன் இவளை கண்டுக் கொண்டால் தானே அவனின் கவனம் முழுவதும் நவினின் மேல் தான் இருந்தது… போட்டோவில் பார்த்ததை விட நேரில் இன்னுமின்னும் அழகாய் தெரிந்தான்… கண் கண்ணாடி அணிந்து இருந்தாலும் அது அவனுக்கு அழகாய் தான் இருந்தது… நெய் குழந்தை போல் கொழுகொழுவென இருந்தாலும் பார்க்க அழககாவே இருந்தான்..  பணத்தின் நிழலில் வளர்ந்தவன் போல் தான் தெரிந்தான். தன் தங்கைக்கும் இவனுக்கும் அத்தனை பொருத்தமாக இருக்கும் என நினைத்தாலும்  ஏதோ ஒன்று சரியில்லை என்பதை போல் தோன்றியது… அவனின் பார்வை  நவினை விட்டு அகலவில்லை.. சில நிமிடங்களுக்குள்  நவினின் கண்ணின் குறைபாடு நன்றாகவே தெரிந்தது…

‘அப்படி என்ன வயதாகி விட்டது என் தங்கைக்கு, பொறுமையாக மாப்பிள்ளை பார்த்தாள் கூட என் தங்கையை கட்டிக் கொள்ள வரிசை கட்டி நிற்பார்கள். போயும் போயும் இவனுக்கா என் தங்கையை திருமணம் செய்து கொடுப்பது… பொன்னில் செதுக்கிய சிற்பம் போல் இருக்கும் என் தங்கைக்கும் கலைந்த ஓவியம் போல் இருக்கும் இவனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது…’ என நினைத்து கொண்டிருந்தவனின் உடல் நன்றாகவே இறுகி கொள்ள அதனை உணர்ந்த கிருஷ்ணாவோ

“மச்சி,..” என்றழைத்தான். கிருஷ்ணனின் குரலில் சட்டென தன் நினைவிலிருந்து வெளிவந்தவன் “மன்னிச்சிடுங்கம்மா, இன்னும் எங்க வீட்டு பெரியவங்ககிட்ட எதுவும் பேசல, பேசிட்டு சொல்றேன்..” என்றவன் அவரின் பதிலை கூட கேட்காது விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தான்…

“அவன் ஏதோ அவசரமா போகணும்னு சொல்லிட்டு இருந்தான் மா, அதான் தப்பா எடுத்துக்காதீங்க…” என கிருஷ்ணா சொல்ல”தம்பியை பத்தி எனக்கு நல்லா தெரியும் தம்பி, நான் எதுவும் தப்பா எடுத்துக்கல…” என சிவகாமி சொல்ல அவரிடம் சிரிப்பை பதிலாக கொடுத்தவன் அவசரமாக சரவணனின் பின்னால் ஓடினான்… கிருஷ்ணனும், சரவணனும் முன்னால் செல்ல சிறு தயக்கத்துடன் அங்கயே நின்றாள் மகி… “இங்க வா சாமி..” என சிவகாமி மகியை அழைக்க மெல்ல அவரிடம் சென்றாள்.

“என் கண்ணே பட்ரும்…” என திருஷ்டி கழிக்க மெல்ல சிரித்தவள்

“போயிட்டு வரனுங்க ம்மா…” என கூறியவாறே முன்னால் நடந்தவள் சிறிது தூரம் சென்று மீண்டும் நவினை பார்த்தாள்.

இப்போதும் அவளின் கண்கள் அவனை உரிமையாக முறைத்து கொண்டு தான் சென்றது..  “எனக்கு என்னமோ இந்த புள்ளை உன்னை வேணுமுன்னே வேண்டாம்னு சொல்லி இருக்கும்னு தோணலை,…” என சிவகாமி சொல்ல நவின் கூட அதை தான் நினைத்தான்… ஏனென்றால் சற்று முன்பு அவள் முகத்தில் வந்து சென்ற அதிர்ச்சி,திகைப்பு, அதற்கு பின் கண்ணீருடன் மெல்லிய புன்னகை அதற்கு பின்னான அவளின் முறைப்பு என நினைத்தவனுக்கு 

“அம்மாடியோவ்வ்…” என்றிருந்தது.. ஏன் இப்போது நினைத்தால் கூட உள்ளுக்குள் சில்லென்ற ஓர் உணர்வு… அம்மாவும் மகனும் மகியை பற்றின சிந்தனையில் இருக்க, சரவணனும், கிருஷ்ணாவும் வெளியில் சென்றதுமே அவர்களுக்கு  ம்பின்னாலேயே சென்ற  நிவேதாவை கவனிக்க தவறிவட்டனர்… ****

“என்னடா ஆச்சு எதுக்கு உன் முகம் அப்படி மாறுச்சு…” என்ற கிருஷ்ணாவின் கேள்வியில்”அந்த பையனை பாத்தியா இல்லையா ..” என்றான் காரின் மேல் ஓங்கி குத்திக் கொண்டே, அவனின் கோபத்தை கண்டு கொள்ளாமல்”ஹ்ம்ம் பார்த்தேன், செமயா மேன்லியா இருந்தான்,நல்லா நெய் குழந்த மாதிரி சைனிங் ஃபேஸ்,..” என்றான் கிருஷ்ணன்… அவன் அப்படி கூறியதும் நறுநறுவென பற்களை கடித்தபடி கிருஷ்ணனை முறைந்தான் சரவணன்.