கண்கள் தேடுது தஞ்சம் – 3

அத்தியாயம் – 3
இருட்டும் வேளையில் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த பவளநங்கையை “நில்லுடி அங்கே…!” என்ற அதிகார குரல் தான் வரவேற்றது.

ஆனால் அந்தக் குரலை சற்றும் சட்டை செய்யாமல் வீட்டிற்குள் சென்று, அங்கே இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து இன்னொரு நாற்காலியில் இருந்த முறுக்கை வாயில் போட்டு மென்று கொண்டே, “எம்மா…! இந்த முறுக்கை இன்னும் கொஞ்சம் மொறுமொறுன்னு சுட்டுருக்கக் கூடாது? கடிக்கக் கஷ்டமா இருக்கு பாரு…” என்று சொல்லிவிட்டு கடுக்கென்று முறுக்கை ஒரு கடி கடித்தாள்.

மகள் வீட்டிற்குள் வந்து அமர்ந்ததைக் கூடக் கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சி நாடகத்தில் மருமகளை மாமியார் ‘வீட்டிற்குள் வராதே…!’ என்று அரட்டியதை சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.

நங்கை கேட்டது காதில் விழுந்தாலும் அசராமல் தொலைக்காட்சியை வெறித்தவர், அதில் விளம்பரம் போடவும் மகளின் புறம் பார்வையைத் திருப்பி அவளை மேலும், கீழும் ஒரு பார்வை பார்த்தார்.

“எம்மா… என்ன என்னை அப்படிப் பார்க்கிற? முறுக்கு இன்னும் நல்லா சுட்டுருக்கலாம்லனு கேட்டேன்ல? பதிலைச் சொல்லு…!” என்றாள் அவர் பார்வையில் கொஞ்சமும் மசியாமல்.

முகத்தைத் தோளில் ஒரு இடி இடித்து “மகாராணி வயல் வலம் போய்ட்டு வந்துட்டிங்களோ? என்னமோ அங்க போய் வெட்டி முறிக்கப் போறது போலத் தினத்துக்கும், அங்க போய்ச் சுத்துறதுக்கு, வீட்டுல இருந்து முறுக்கு சுத்த வேண்டியது தானே? அதைச் செய்ய இங்க வழியைக் காணோம். என்னை மட்டும் இன்னும் நல்லா செய்யச் சொல்றா. ஊர் சுத்துற கழுதைக்கு இது போதும்” என்றார்.

அவர் சொல்லி முடித்ததும் “அய்யோ…! அம்மா…!” என்று கொஞ்சம் சத்தமாகக் கத்தினாள் நங்கை.

அவளின் கத்தலை கண்டு கொள்ளாமல் “இப்ப என்ன சொல்ல வந்தியோ, அதை மட்டும் சொல்லு? சும்மா கத்தாதே…!” என்று அதட்டலாகச் சொன்னார்.

“ஆமா… நீ எதுக்கும் அசர மாட்டியே…!” என்று நொடித்து விட்டு “ஒரு பி.எஸ்.சி. பட்டதாரிய போய் முறுக்கு சுத்த சொல்றியே? இது நியாயமா…? தர்மமா…? அடுக்குமா…?” என்று வார்த்தைகளை அடுக்கியவள் தொடர்ந்து “நான் முறுக்கு சுட்டு வயசான காலத்தில உன் பல்லு எல்லாம் உடைஞ்சு போய்ருச்சுனா என்ன பண்றது? உன் பல்லு போனா போய்ட்டு போகுது. ஒரு வயசு பொண்ணான என் பல்லு போய்ருச்சுனா என்ன பண்றது? என்னைக் கட்டிக்கப் போறவன் பாவம்ல…” என்று மூச்சு விடாமல் சோக ராகம் பாடினாள்.

“சரிதான்டி…! நீ பெரிய்ய்ய்ய பட்டதாரிதான்… அவனவன் கம்ப்யூட்டரு படிப்பு படிச்சுட்டு அமெரிக்காலப் போய் வேலை செய்றவனே அவனே சமைச்சுச் சாப்பிடுறான். இவ பட்டாணில ஒரு பட்டம் வாங்கிட்டு பேசுற பேச்சை பாரு…” என்று ஈஸ்வரி பதிலடி கொடுத்தார்.

“எம்மோவ்…! அது பட்டாணி இல்லை. பாட்டனி…! தாவரவியல்…! அதைப் போய்ப் பட்டாணினு சொல்ற?” என்று அலறினாள்.

“தெரியும்… தெரியும்…! இது கூடத் தெரியாம இருப்பேனா என்ன? நானும் எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேனாக்கும். பட்டாணியும் ஒரு தாவரம் தான? நான் சரியா தான் சொல்லியிருக்கேன்” என்று பெருமையாகச் சொன்னார்.

“நல்லா சமாளிக்கிறமா நீ. இருந்தாலும் நீ இவ்வளவு விவரமா இருக்கக் கூடாதுமா…” என்று சலிப்பாகச் சொன்னாள்.

“ஆமாடி…! நான் இந்தளவுனாலும் விவரமா இல்லைனா நீயும், உன் அப்பாவும் என் தலையில் மிளகா அரைச்சுற மாட்டிங்க?” என்று ஈஸ்வரி சொல்ல…

தொடர்ந்து தான் பேசினால் தன் அம்மா இன்னும் நன்றாகவே பதிலடி கொடுப்பார் என்பதால் “உன்கிட்ட பேசி, பேசி எனக்குப் பசிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்நேரம் அடை செஞ்சு வச்சுருப்பியே? நான் போய் அதைச் சாப்டுட்டு கதை புக் படிக்கப் போறேன். அப்பா வேற வர்ற நேரம் ஆகிருச்சு. அவர் வர்றதுக்குள்ள நான் இங்க இருந்து கிளம்புறேன்” என்று விட்டு அங்கிருந்து நைசாக நழுவ போனாள்.

“ஆமா…! நீ வாங்கின பட்டத்துக்கு இதைத் தான் படிக்க முடியும். காலேஜுக்குப் போனப்ப கூட நீ இப்படிப் படிச்சுப் பார்த்தது இல்லை. கதை புக்கை நல்லா தான் படிக்கிற போ…! இதுக்கு எதுக்குத் தான் அந்தப் பி.எஸ்.சி பட்டமோ? பேசாம பன்னெண்டாவதோட உன்னை எல்லாம் நிறுத்தி இருக்கணும்” என்று ஈஸ்வரி சலித்தப்படி சொன்னார்.

சாப்பிட போகப் போனவள் “எம்மா…! இப்பெல்லாம் பெத்தவங்க ஒரு டிகிரியாவது படிச்சாதான் பிள்ளைகளை ஸ்கூலயே சேர்க்க முடியுமாம். அதுக்காகத்தான் படிச்சேனாக்கும். இல்லனா என் பிள்ள என்னை முட்டாளுன்னு சொல்லிருச்சுனா என்ன பண்ண? நான் எல்லாம் முன்னெச்சரிக்கையா யோசிச்சிருக்கேனாக்கும்” என்று பெருமையாகச் சொன்னாள்.

“ஆமாமா… உன் முன்னெச்சரிக்கை பார்த்துப் புல்லரிச்சு போயிருச்சுப் போ…!” என்று வெளியில் அவளைக் கேலி செய்தவரின் மனதில் மகள் ‘வருகாலக் கணவன், பிள்ளை’ என்று சொல்லும் போதெல்லாம் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தியதை வெளியே காட்டாமல் மறைத்த படி “உங்க அப்பா வந்தா நான் நாடகம் பார்க்க முடியாது. நான் நாடகம் பார்க்க போறேன். நீ உன் வயித்தை நிரப்பிட்டு போய் உன் கதையைப் படி!” என்று விட்டுத் தன்னைக் குத்திய முள்ளை மறக்க தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தார்.


மறுநாள் காலையில் திருச்சி ரயில் நிலையம் வந்திறங்கிய தன் அக்கா கனிமொழியை அழைக்க சென்றான் பைந்தமிழரசன். கனிமொழி ரயிலை விட்டு இறங்கி தன் தம்பியை பார்த்ததுமே வழக்கமாகக் கேட்கும் “எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?” என்ற கேள்வியுடன் தான் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“யக்கா… இப்ப தான் வந்து இறங்கியிருக்க. கொஞ்சம் பொறுமையா மூச்சு விட்டுக்கோ. வந்ததும் வர்றாததுமா உன் இந்த டயலாகை ஆரம்பிக்காதே! கிளம்பு மொத…! உன்னை வீட்டில் விட்டுட்டு நான் லோடு அனுப்ப போகணும்” என்று மேலும் பேச்சை வளர்க்க விடாமல் அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு தன் அன்றாட வேலையைப் பார்க்க சென்றான்.

ஆனாலும் அந்தப் பேச்சை அப்படியே விட மனமில்லாத கனிமொழி அன்று மாலை வேலை முடிந்து எப்போது தன் தம்பி வீட்டுக்கு வருவான் என்று வாசலை அடிக்கடி எட்டிப் பார்த்த படி இருந்தவளை சமயலறையில் இருந்த அம்சவேணி “ஏன்டி கனி…! நீ இப்படிக் காவ காத்தாலும் உன் தம்பி வந்து அப்படியே உனக்குப் பதில் சொல்லிருவானாக்கும்? நீ வந்து உட்காரு! அவன் வரட்டும்!” என்று சொல்லிய பிறகு வாசலுக்கு நேராக ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தாள்.

அன்று தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு வழக்கமாக வரும் நேரத்தை விடச் சிறிது தாமதமாக வந்த பைந்தமிழரசனை முறைத்துக் கொண்டே வரவேற்ற கனியை பார்த்து மாயப் புன்னகை ஒன்றை புரிந்த படி எதிர் கொண்டான். “அப்புறம் அக்கா சொல்லு? மாமா எப்படி இருக்கார்? உன் மாமியார், மாமனார் எல்லாம் சௌக்கியமா?” என்று விசாரித்தான்.

“ஆமாடா…! காலைல வந்தவகிட்ட நைட் வந்து நலம் விசாரிக்கிறயாக்கும்?” என்று கனி கோபப்பட்டாள்.

“எங்கக்கா நீ விசாரிக்க விட்ட? வந்ததும் வராததுமா நீ தான் தேவை இல்லாம பேசி என்னைப் பேச விடாம செய்த” என்று அவன் நீ தான் காரணம் என்று சொல்ல… அவள் முறைத்தாள்.

“சும்மா முறைக்காம சொல்லுக்கா?”

“ம்ம்…! இருக்காங்க… இருக்காங்க… எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க…” என்று பதில் சொன்னாள்.

அக்காவிற்கும், தம்பிக்கும் நாலு வருடம் இடைவெளி இருந்தாலும் வளரும் போதே ஒருமையிலேயே பேசி பழகியதால் அது இன்னமும் மாறாமல் இருந்தது.

“அப்புறம் அக்கா சொல்லு? என்கிட்ட என்னவோ பேசணும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கப் போல? என்ன பேசணும்?” என்று கேட்டபடி அவளின் எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் கைகளை நீட்டி நெட்டி முறிந்தான்.

அவன் அப்படிக் கேட்டதும் முறைத்து பார்த்த கனிமொழி அவன் தன்னைக் காக்க வைத்தது ஞாபகம் வரவும் “இன்னைக்கு ரொம்பச் சீக்கரம் வீட்டுக்கு வந்துட்ட? என்ன அதிசயம்…?” என்று வியந்தது போல் கோபமாகக் கேட்டவளை பார்த்து, தன் புன்னகையைக் கூட்டி “ஆமா அக்கா பாரேன். இன்னைக்கு வேலை பத்து மணிக்கு தான் முடியும். ஆனா உனக்காகவே உன் தம்பி ஒரு மணி நேரம் முன்னயே வந்துட்டேன் பாரு! எப்படி…?” என்று கேட்டு தன் சட்டையின் கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

“ஓ…! அப்படியா தம்பி…! பாரேன்… நீ சொன்னதை அக்கா நம்பிட்டேன்!” என்று வியந்தது போலக் காட்டிவிட்டு “சரி அப்பா எங்க?” எனக் கேட்டாள்.

“அப்பாவை அந்தக் கணேசன் மாமா ஏதோ பேசணும்னு பிடிச்சுக்கிட்டார். அவர் தான் பேசினா விட மாட்டாரே. அதான் நான் மட்டும் முன்னாடி வந்திட்டேன். அப்பா வந்ததும் தான் நான் சாப்பிடணும். எப்படியும் நீ என்கிட்ட பேசணும்னு காத்து இருப்ப உன்னைக் காக்க வைக்கக் கூடாதேனு வந்தேன்” என்று அப்பாவைப் பற்றி விவரம் சொல்லிவிட்டு அவன் முன்பே வந்ததைக் கொஞ்சம் பெருமையாகவே சொன்னான்.

“ஓஹோ…! அக்கா மேல தம்பிக்கு அப்புட்டுப் பாசம்?” என்று நக்கலாகக் கேட்டவள், “மகனே… எட்டு மணிக்கு எல்லாம் உன் வேலை முடிஞ்சிருக்கும்னு எனக்குத் தெரியும். சும்மா சமாளிக்காதே…!”

“சரிதான் நம்பலைனா போ…! நான் என்ன சொன்னாலும் இனி நீ நம்பப் போறது இல்லை” நீ நம்பவில்லை என்றால் எனக்கு ஒன்றும் இல்லை என்பது போல அசால்ட்டாகப் பதில் கொடுத்தான்.

அவர்கள் இருவர் பேசுவதையும் வேடிக்கை பார்த்தப் படி இருந்த அம்சவேணி “நல்ல அக்கா…! நல்ல தம்பி…! அடியே கனி… விஷயத்துக்கு வா! இவனை விட்டா இப்படியே பேசி உன்னைத் திசை திருப்பி விட்டுருவான். அப்புறம் நீ ஊருக்கு கிளம்புறவரை உன் கையில் சிக்க மாட்டான்” என்று மகளுக்கு எடுத்துக் கொடுத்தார்.

தன் அம்மாவை பார்த்தும் அதே புன்னகையைச் சிந்தியவன் “இருந்தாலும் நீ இம்புட்டு அறிவா இருக்கக் கூடாதுமா! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ தானே அக்காவை முடுக்கி விட்டு இங்க வர வச்சிருக்க? இதுல என்னவோ ஒன்னும் தெரியாதது போல நேத்துக் கண்ணீர் வேற. நீ சொல்லித்தானே வந்துருக்கா. அப்புறம் அவ என்கிட்ட பேசாம கிளம்பிருவாளா என்ன?” என்று இருவரையும் சரியாகக் கணித்துச் சொன்னான்.

அவன் சரியாகச் சொன்னதில் அம்சவேணியும், கனிமொழியும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டாலும், அதைக் கண்டு கொள்ளவில்லை.

அவர்கள் பார்வை மாற்றத்தை கவனித்தாலும் “ம்ம்… கேளுக்கா…? நீ என்ன கேட்கணுமோ எல்லாம் கேளு?” என்று தன் விளையாட்டுப் பேச்சை விட்டுவிட்டுத் தீவிரமாகக் கேட்டான்.

“நான் வேற என்ன கேட்க போறேன்? உன்கிட்ட பல தடவை கேட்ட கேள்விதான் இப்பயும் கேட்க போறேன். சொல்லு…! எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற? எப்பயும் போல மழுப்பாம உறுதியா ஒரு பதிலைச் சொல்லு!”

“இப்போதைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லைக்கா…”

“டேய்…! உனக்கு இப்பயே இருப்பத்தெட்டு வயசு ஆச்சு! இப்ப கல்யாணம் பண்ணிக்காம எப்ப பண்ணிக்கப் போற?”

“எனக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்கத் தோணுதோ அப்போ பண்ணிக்கிறேன். வயசு ஆனா என்ன? லேட்டா பண்ணிக்கிட்டா ஆகாதா?” என்று அவன் சொல்லவும்,

“என்னம்மா இவன் இப்படிச் சொல்றான்?” என அதிர்ந்து போய்க் கனி தன் அம்மாவிடம் கேட்க…

“என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்ல? அவன் அப்படித்தான் நான் கேட்குறப்ப எல்லாம் சொல்லிக்கிட்டுத் திரியுறான். அதான் உன்னை வர சொன்னேன். காலத்துல விதை விதைச்சு அறுவடை செய்றது போலக் காலத்துலேயே கல்யாணம் பண்ணனும்னு சொல்றது உன் தம்பிக்கு புரிய மாட்டீங்குது” என்று மகனின் பேச்சில் வருத்தத்துடன் சொன்னார் அம்சவேணி.

“அம்மா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை. இப்ப வேணாம்னு தான் சொல்றேன். என்னமோ நான் சாமியாரா போகப் போறேன்னு சொன்னது போல எதுக்கு அலுத்துக்கிறீங்க?”

“எதுக்கு இப்ப கல்யாணம் வேணாம்? அதுக்காவது காரணம் சொல்லு?” என்று கனிமொழி கேட்க…

“ஹ்ம்ம்… உனக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும். அப்புறமா கல்யாணத்தைப் பத்தி யோசிப்போம்” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் “பச்ச்…! நீ வேற ஏண்டா…? எனக்கு எப்ப குழந்தை பிறக்குறது? உனக்கு எப்ப கல்யாணம் பண்றது?” என்று கனிமொழி வேதனையும், சலிப்பும் கலந்து கேட்டாள்.

“இப்ப எதுக்கு இப்படிச் சலிப்பா சொல்ற? அதெல்லாம் சீக்கிரம் பிறக்கும். கவலைப்படாதே…!” என்று ஆறுதல் படுத்தினான்.

“ஆமா… எங்க கல்யாணமாகி ஐஞ்சு வருஷம் ஆகப் போகுது. இன்னும் ஒன்னும் காணோம். டாக்டர் எல்லாம் நல்லா இருக்கு. கண்டிப்பா உங்களுக்குக் குழந்தை பிறக்கும்னு சொல்றாங்க. ஆனா குழந்தை கவலையிலேயே நானும் அழுது உங்க மாமாவையும் கவலைப் பட வச்சுடுறேன். அதுதான் உங்க மாமா சொன்னாரு. உன் தம்பிக்குக் கல்யாணம் ஏற்பாடு பண்ணுங்க.

கல்யாண வேலையில உன் மனசு கொஞ்சம் வேற சிந்தனைக்குப் போகும்னு சொன்னார். அதோட அம்மாவும் போன்ல புலம்பவும் கிளம்பி வந்துட்டேன். ஆனா… நீ என்னனா குழந்தை பிறந்த பிறகு உன் கல்யாணத்தைப் பத்தி பார்ப்போம்னு சொல்ற. அப்புறமா கூட யோசிக்கத்தான் செய்வியா? முடிக்க மாட்டியா?” என்று கேட்டாள்.

அவளின் குழந்தை கவலையில் மனம் வருந்தியவன், அவளின் கடைசிக் கேள்வியில் “சொல்றேன் க்கா..! இப்போதைக்கு இந்தப் பேச்சை விடு!” என்று சிறிது கோபமாகவே சொன்னான்.

“இப்ப எதுக்குக் கோபப்படுற? பொண்ணு ரெடியா இருக்கு. கல்யாணம் தான் ஏற்பாடு பண்ணனும். அது செய்ய உனக்குக் கசக்குதா?” என்று அவளும் கோபமாகக் கேட்டாள்.

“பொண்ணா…? எந்தப் பொண்ணைச் சொல்ற?” என்று முகத்தைச் சுளித்த படி கேட்டான்.

“நான் வேற யாரை சொல்வேன்? எல்லாம் என் நாத்தனார் தான்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் வேகமாக நாற்காலியை விட்டு எழுந்தவன்,

“நடக்குற காரியத்தைப் பேசு. தேவை இல்லாம உளறாதே!” என்று கோபத்துடன் கத்தினான்.

“ஏன்…? ஏன் நடக்காது…? அது எல்லாம் நடக்கும். நீ சரின்னு மட்டும் சொல்லு! நான் நடத்திக் காட்டுறேன்” என்று அவளும் பதிலுக்குக் கத்தினாள்.

அமைதியாகத் தங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அம்சவேணியின் பக்கம் திரும்பிய அரசு, “அம்மா… உன் பொண்ணுகிட்ட சொல்லி வை! தேவையில்லாம பேச வேண்டாம்னு…” என்றான்.

“அதை என் முகத்தைப் பார்த்தே சொல்லுடா! இப்ப எதுக்கு அம்மாகிட்ட எகுருற?” என்று கனி சத்தம் போட்டாள்.

சிறிது நேரம் இருவரும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.

“சரி…! என் நாத்தனார் வேணாம்னா வேற பொண்ணாவது பார்ப்போமா…?” என்று இப்பொழுது கொஞ்சம் அமைதியாகக் கனி கேட்டாள்.

ஆனால் அவளின் அந்தக் கேள்வியில் இன்னும் வெகுண்ட அரசு “எனக்கு எவளும் வேணாம் போ…!” என்றவன் தன் அறைக்குள் வேகமாகச் சென்று கதவடைத்துக் கொண்டான்.