ஒரு மழை நாளில்

துளி 1

        உன்னுள் உறங்குகின்றன

        என் நினைவுகள்..

       நானோ என்னையே

        உன் நினைவுகளில்

       தொலைத்திருக்க..?

பறவைகள் தன் துணையைத் தேடி திரும்ப  கதிரவன் தன் கரங்களை சுருட்டிக் கொள்ளும் மாலை நேரம். காரில் அமர்ந்தபடியே உறங்கிவிட்டிருந்தாள் மதுரா. அவள்  23 வயதிலேயே மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று கலக்டராகப் பணிபுரிபவள்.முதலில் பணி ஏற்றது கர்நாடகாவில் உள்ள விஜயபுரா என்ற புஜப்பூர் மாவட்டம். இரண்டு வருடங்களுக்கு பின் பணிமாற்றம் பெற்று தன் சொந்த ஊரான தமிழ்நாட்டிலுள்ள திருப்பூருக்கு திரும்புகிறாள்.

மதுரா நடுத்தர விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவள். அம்மாயி அப்பச்சி வீட்டில் சித்திகளுடனும்   கொள்ளுபாட்டி தாத்தாவுடனும்  செல்லமாக வளர்க்கப்பட்டப் பெண். அதிலும்  அப்பாவுக்கு  அவள்  என்றால்  உயிர்.  இவளுக்கும்  உடன்பிறப்பு  ஒன்று  உள்ளது. மதுரா  ஆங்கிரிபேர்டுக்கு  அக்கா.  அரிச்சந்திரனுக்கு அக்கம்பக்கத்து வீடு. உயரத்தினால் குட்டிலேடி என்ற பெயரும் உண்டு.சேட்டையில் குட்டிசாத்தான். அழகை  விட  அறிவு  அதிகம். இப்படி அவளுக்கு பன்முகங்கள்  உண்டு.

மெல்ல  மெல்ல  இருள்  கவிழத்  தொடங்கியது.  மழை   வருவதற்கு  கட்டியம்  கூறுவதைப் போல் இடிச்சத்தம்  கேட்டது.  கார் டிரைவர்  சடன்பிரேக்  போட்டதில்  தூக்கம்  கலைந்து  விழித்தாள்.  அவள்  அம்மாய்  ஊரான  கரைப்புதூரை கார் நெருங்கி கொண்டிருந்தது.

அவள்  அம்மா  வழி  பாட்டி  ஊரான  கரைப்புதூரை  வந்தடைந்தாள்.  கரைப்புதூர்  அவளின்  கோட்டை.  இருவகை வகுப்பினர்  மட்டும்  வாழும்  ஊரில்  இவளை  அறியாதவர் யாரும்  கிடையாது.  வால் இல்லாதுதான் குறை , சேட்டைகளின் மன்னி(ராணி) ஆயிற்றே.

ஊரை அடைந்ததும்  தானாக  ஒரு  குதூகலம்  மனதில்  பரவியது.  தாய்  மண்  என்றால் தனிசுகம்   தான்.  வீட்டிற்கு  வந்தவுடன்  அவள்  அம்மாயி  அவளை உபசரிக்கத்  தொடங்கினாள் . நம்மபுள்ளை  பசி  தாங்காத பாப்பா.  நலம்  விசாரிப்புகள்,  பழைய  கதைகள்  என்று  இரவு கழிந்தது. என்னதான்  மகிழ்ச்சியாக இருந்தாலும் மனதினுள்ளே  எழும்  வலியை  அவளால்  தடுக்க  முடிவதில்லை.  நினைவுகளில்  மூழ்கி  உறங்கியே  போனாள். மீண்டும் அவள்  உறக்கம்  கெடப்போகிறது  என்று  அறியாமல்… வாழ்க்கையின்  சுவாரசியமே  எதிர்பாராத  திருப்பங்கள் தானே!!

திருப்பூரில் அவள் வாழ்வில் ஏற்படப் போகும் திருப்பம் தான் என்ன??